தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைக் குறி வைத்து தனிப் பயிற்சிகள் தொடக்கம்

தமிழ்நாட்டை ‘காவி’ மண்ணாக்கிட பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தீவிரத் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். கட்சி மேலிடமும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வலைவீச பெருமளவு பணத்தை வாரி இறைக்கத் தயாராகி விட்டது. இது குறித்தும் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஓர் தொகுப்பு:

தமிழகத்தில் வலிமை பெற ஆர்.எஸ்.எஸ். தயாராகிறது

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி எனும் பகுதியில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரியில் வட தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 இளைஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. அதேபோல் தென் தமிழகத்திலும் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அமைப்புகளில் ஆர்வம் காட்டி செயல்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைத் திரட்டி, இந்தப் பயிற்சிகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தரமான உணவோடு 3 பேர் பயிற்சி அளிக்கிறார்கள். முதற்கட்டமாக ஆன்மீகம், யோகா, இந்து, இந்துத்துவம், தேசியம் என்று மென்மையாக மூளைச் சலவை நடக்கிறது. ‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய தேசத்தை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டெடுக்க நமக்கு நாமே தலைவர்களாகி களமிறங்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் நாம் அடிமைகள் அல்ல; நமக்கு யாரும் தலைவர்களும் இல்லை” என்று வகுப்புகளில் வலியுறுத்தப்படுவதோடு, ‘ஜாதியாகப் பிளவுபடாமல் இந்துக்களாக ஒன்று சேருவோம்’ என்றும் வகுப்புகளில் பேசப்படுகிறது.

அதாவது, இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை வீழ்த்தி, பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவ ஜாதிகளை மறந்து ஒன்றுபட அழைக்கிறார்கள். ஜாதிப் பிளவு வேண்டாம் என்று பேசப்படுகிறதே தவிர, ஜாதியே வேண்டாம் என்று பேசப்படுவது இல்லை. ஆர்.எஸ்.எஸ். வட தமிழகத் தலைவர் ஒருவர், மற்றும் கொச்சின் வன்னியராஜா, குரு சுப்பிரமணியம் ஆகியோர் முகாமை முன்னின்று ஏற்பாடு செய்துள்ள தோடு, அவர்கள் முகாமுக்கு  அவ்வப்போது வந்து தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்களாம். இரவுநேரங்களில் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் மாணவர்களைத் தனித்தனியாக சந்தித்துப் பேசி, அவர்கள் தேவைகள், எதிர்பார்ப்புகளை அறிந்து பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கிறார்கள். தேவையான அரசு உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி தந்து வருகிறார்களாம்.

பார்ப்பனர்கள் தயாராகிறார்கள்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள், ஆச்சாரிகள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி வருகிறார்கள். பார்ப்பன சங்கராச்சாரி, சாமியார்கள் ‘இந்து ஆச்சாரிய சபா’ என்ற அமைப்பை வடமாநிலங்களில் நடத்தி வருகிறார்கள். அதன் தமிழ்நாடு மாநில அமைப்பை ஜூன் 7ஆம் தேதி திருச்சியில் தொடங்கி இருக்கிறார்கள். சபாவின் தேசிய செயலாளராக இருக்கும் விஜயேந்திர புரி என்பவர் தனது தொடக்க உரையில் தமிழ்நாட்டில் இந்துக்களை ஒரே குடையில் அணி திரட்டுவதே முதன்மையான இலக்கு என்று கூறியுள்ளார். இந்து கலாச்சாரம் பாரம்பர்ய கல்வி, பசு பாதுகாப்பு, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வுஇயக்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பின்னர் தேசிய செயலாளர் விஜயேந்திர புரி மற்றும் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் சாரதா சாமிகள் என்பவரும் செய்தியாளர்களிடம் கூறினர். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் செயல் திட்டத்தில் இப்போது ‘இயற்கை விவசாயமும்’ இணைந்திருக் கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

ஆந்திர முதல்வரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

தமிழ்நாட்டில் பெரியார் தொடங்கி வைத்த வகுப்புகளுக்கு சமநீதி வழங்கும் சமூகநீதிக் கொள்கையை ஆந்திராவின் முதல்வராகியுள்ள ஒய்.எஸ். ஜெகன்மோகன் (ரெட்டி) பின்பற்றியிருக் கிறார். அவரது சமூகம், முன்னேறிய சமூகம். ஆனால், 5 துணை முதல்வர் பதவிகளை உருவாக்கி, அவற்றை சமூகரீதியாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். பமுலா புஷ்பா சிறிவேணி (பழங்குடி), டில்லி சுபாஷ் சந்திரபோஸ் (பிற்படுத்தப்பட்டோர்) அல்ல கலி கிருஷ்ணசிறினிவாஸ் (கப்பு சமூகம்), கே. நாராயண சாமி (பட்டியல் இனப் பிரிவு), அம்சத் பாஷா (முஸ்லிம்) ஆகியோர் துணை முதல்வர்கள். அனைவருக்கும் வருவாய்த் துறை, மருத்துவக் கல்வி, பழங்குடி நலன், வரிவிதிப்பு என்று முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி உள்துறை அமைச்சர் எனும் அதிகாரமிக்க பதவிக்கு சுச்சரிதா என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். துவக்கம் நன்றாகவே இருக்கிறது.

தமிழ்நாடு ‘பிராமண’ சங்கத்தில் ‘குடுமிபிடி’

‘பிராமணர்கள்’ தனியே சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கியவர் இராஜகோபாலாச்சாரி. அனைத்துக் கட்சி அமைப்புகள் அதிகார மய்யங்களில் ஊடுருவி, ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பது அவரது கருத்து. அண்மைக்காலமாக ‘பிராமணர்கள்’ சங்கம் அமைத்துக் கொண்டார்கள். நடந்து முடிந்த தேர்தலில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தார்கள். ‘பிராமணர்’ சங்கம் என்பது ஜாதி சங்கம்அல்ல; அது ‘வர்ணாஸ்ரம’ சங்கம். அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்ற பல்வேறு ‘பிராமண’ வர்ணப் பிரிவினர் இதில் உறுப்பினராக முடியும். இப்போது ‘அவாள்’ சங்கத்துக்குள்ளே மோதல் தொடங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 2ஆம் தேதி பழனியில் சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே மாநிலத் தலைவைராக செயல்பட்ட திருவொற்றியூர் நாராயணன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது இந்தக் குழு. தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் ரமேஷ்குமார் என்பவர் இதை  அறிவித்ததோடு பழனி ஹரிஹரமுத்து அய்யரை தலைவராக அறிவித்துள்ளார்.

அதேபோல் ஏற்கனவே செயலாளராக இருந்த சங்கரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நீக்கப்பட்டு, அப்பதவிகளுக்கு தன்னையும், கணேசன் என்பவரையும் அறிவித்திருக் கிறார். இந்த பொதுக் குழுவைக் கூட்டுவதே சட்ட விரோதம் என்று நாராயணன் அணி நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. நீக்கப்பட்ட சங்கரன் என்பவர் இது சட்ட விரோதமான பொதுக் குழு என்றும், அறிக்கை விடுத்துள்ளார். சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த சங்கரன் தன்னிச்சையாக இப்படி அறிக்கைகளை விடுவதாகவும், ‘பிராமண’ சங்க உறுப்பினர்களை அவமதிக்கும் வாசகங்கள் அவரது அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகவும், சங்கரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் ரமேஷ் குமார் என்பவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

‘சூத்திரர்’களை இழிவுபடுத்துவதில் ‘பிராமணர்கள்’ ஒற்றுமையாக இருந்தாலும், அமைப்பாகத் திரண்டு சங்கம் வைக்கும்போது தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள். ‘பிரம்மம்’ என்ற உயரிய நிலையை அடைந்தவனே ‘பிராமணன்’ என்று சொல்லிக் கொள்ளும் இந்த ‘பூதேவர்கள்’ பதவி அதிகாரத்துக்கு ‘குடுமிப்பிடி’ சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பன ‘தினமலர்’ நாளேடு இந்த செய்தியை ‘பழனி கூட்டத்தில் விதி மீறவில்லை’ என்ற தலைப்பிட்டு வாசகர் கண்களுக்கு தெரியாததுபோல ‘பூசி மெழுகி’ செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்ணுரிமையை செயல்படுத்திய ஒரிசா முதல்வர்

பா.ஜ.க.வின் மிரட்டல்களை முறியடித்து, ஒரிசாவில் அய்ந்தாவது முறையாக வென்றிருக்கிறார் நவீன் பட்நாய்க். அவரது வெற்றிக்குக் காரணம் பெண்களின் மகத்தான ஆதரவுதான். கடும்புயல் சேதத்தை அண்மையில் சந்தித்த மாநிலம் ஒரிசா. பெண்களுக்கான சுயஉதவிக் குழு ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘சக்தி மிஷன்’ என்று பெயரிட்ட நவீன், அந்த விழாவில் பங்கேற்கும்போதுதான் தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததை அதிகாரிகள் அவரிடம் சொன்னார்கள். அமைதியாக அந்த செய்தியைக் கேட்டு தலையசைத்த நவீன், நிகழ்வின் இறுதியிலேயே தேர்தல் அறிவிப்பு செய்தியை அறிவித்ததோடு நிற்கவில்லை. 33 சதவீத இடங்களை பெண்களுக்கு தனது கட்சி ஒதுக்கும் என்று அறிவித்தபோது, பெண்கள் முழக்கமிட்டு இருக்கையிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்தார்கள். இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் நவீன் சொன்னதைச் செய்பவர் என்று எழுதினார்கள். 21 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏழு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கினார். அவர்களில் பெரும் பாலோர் வசதியற்றவர்கள். அரசியல் பின்புலம் இல்லாதவர்கள். இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றிருப்பவர். ஒரிசாவின் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த சந்திராணி முர்மு, 25 வயதேயான பொறியியல் பட்டதாரி. பல பழங்குடி இளம் பெண்களை சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சரவையில் சேர்த்திருக்கிறார், நவீன் பட்நாய்க். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. ஓரளவு வெற்றிகளைக் குவித்தாலும் 147 சட்டமன்றத் தொகுதிகளில் 112 தொகுதிகளில் வென்றிருக்கிறது, அவரது பிஜூ ஜனதா தளம் கட்சி. பெண்ணுரிமைக்கான திட்டங்கள், தொடரட்டும்!

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்கிய ‘நீட்’ முடிவுகள்

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வை எழுதிய 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம். ஆனாலும் அகில இந்திய சராசரி தேர்வு விகிதமான 56.5 சதவீதத்தைவிட தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் குறைவு.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 17,630 மாணவர்களில் 2,567 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்னர். இந்தப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் 4.27 சதவீதம் மட்டுமே.

அரசு மற்றம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களில் 300லிருந்து 400 மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர். தமிழ் வழிப் பள்ளியில் பயின்றவர்கள் 5 பேர் மட்டும்.

இந்தியாவிலேயே 25 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மொத்தம் 3250 மருத்துவக் கல்லூரிக்கான இடங்களோடு மருத்துவ சேவையில் முன்னிலையில் நிற்கும் மாநிலம் நீட் தேர்வில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

Pin It