மகாராஷ்டிரா மாநிலத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தவுடன் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதித்தது. மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக ஒரு புகார் வந்தால் அதற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ள முடியும் என்ற அளவுக்கு உணவு உரிமைக்கே சவால் விட்டது அந்த சட்டம். மாடுகளை வெட்டக் கூடாது; வீட்டில் மாட்டிறைச் சியையும் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கூறியது. ஏதோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பா.ஜ.க. கருதியது. உண்மை என்னவென்றால் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி. மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துணவு.

சட்டமன்றத் தேர்தல்களில் தலித் மக்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் பா.ஜ.க., தலித் மக்களின் உணவு உரிமைக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு கலாச்சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கிறது. பார்ப்பனர்களே மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள்தான். புத்தர் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி உணவு முறையை நிறுத்தினார்கள் என்பதே வரலாறு.

இப்போது மும்பை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பு நீதிமன்றத்தின் தடுமாற்றத்தையே உணர்த்துகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவதையோ, வீட்டில் வைத்திருப்பதையோ குற்றமாகக் கருத முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம், அந்த மாநிலத்தில் மாடுகளை வெட்டுவதற்கு சட்டம் விதித்த தடை மட்டும் அப்படியே நீடிக்கும் என்று கூறிவிட்டது.

பிற மாநிலங்களிலிருந்து புட்டிகளில் அடைக்கப்படும் மாட்டிறைச்சியை மகாராஷ்டிராவில் சாப்பிடலாம்; அந்த இறைச்சியை வீடுகளில் வைத்திருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இஸ்லாமிய மதச் சட்டத்தின் ஆட்சி நடக்கும் அரபு நாடுகளில்கூட அவர்களின் மதத்துக்கு எதிரான பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை போடுவது இல்லை.

இப்போது மாராஷ்டிரா சட்டத்தை எதிர்த்து  உயர்நீதி மன்றத்திற்குப் போனவர்கள்கூட இஸ்லாமியர்கள் இல்லை. ‘இந்து’க்கள்தான். உலகத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் பெற்றிருந்த நாடு இந்தியா. இந்தத் தடைக்குப் பிறகு ஏற்றுமதி வர்த்தகம் சரிந்து போய்விட்டது. அப்படி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்த 6 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் ‘இந்துக்கள்’ நடத்துவதுதான் என்பது முக்கியமானது.

ஆனால், இந்த ‘இந்து’க்கள் நடத்திய நிறுவனங்களுக்கு ‘அல்கபீர் பிரைவேட் லிமிடெட்’, ‘அரேபியன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்’ என்று இஸ்லாமியர் நிறுவனத்தைப்போல் பெயர் சூட்டிக் கொண்டார்கள். இந்த இரண்டு நிறுவனங்களைத் தவிர ‘எம்.கே.ஆர். ஃபுரோசன் புட் என்டர்பிரைசஸ்’, ‘பி.எம்.எல். இந்தியன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நான்கு முன்னணி நிறுவனங்களுமே இஸ்லாமியர்களோ, தலித்துகளோ நடத்தியது அல்ல; ‘இந்து’க்கள் நடத்தியதுதான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கோடிகோடியாக நன்கொடை வழங்கியதும் இந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள்தான். உ.பி.யில் ஒரு கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய்யாகக் கிளப்பிய புரளியில் ஒரு இஸ்லாமிய முதியவர் அடித்தே கொல்லப்பட்டார். இதில் மக்களைத் தூண்டிவிட்டதிலும் முசாபர் நகரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பவருமான சங்கீத்சிங் என்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்பவர்தான் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

குஜராத்தில் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக்  இப்பாஸ் கலீஃபா என்ற இஸ்லாமியர் பசுவதை தடை சட்டத்தின் கீழ் 2014இல் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் 20 கிலோ மாட்டிறைச்சியை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார் என்பது. சூரத் நீதிமன்றம் இப்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

இதே குஜராத்தில் 2002ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி நடத்திய இனப்படுகொலையில் 67 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்த குற்றச்சாட்டுக்குள்ளான மாயா கோட்னானி உள்ளிட்ட பா.ஜ.க. முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு வெளியே ‘சுதந்திரமாக’ திரிகிறார்கள்.

ஆம்! ‘மனு சாஸ்திரம்’ இப்போதும் எப்படி நாட்டை தனது ஆட்சி அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

Pin It