modi on stageஇந்த வருடம் செப்டம்பர் மாதம் மோடி அரசு இந்தியாவின் 12000 ஆண்டுகால பண்பாட்டை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்ததும் அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதும் நமக்குத் தெரியும். ஒரு வேளை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிப்பது என்பது அவர்களின் திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் தவிர்த்திருக்கலாம்.

இந்த 12 பேரும் உண்மையில் இந்தியாவின் பண்பாட்டை எப்படி ஆய்வு செய்து எழுதுவார்கள் என்பது இன்றைய சூழ்நிலையை புரிந்தவர்களுக்கு எளிதில் விளங்கும்.

ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த இந்த குழுவில் இடம்பெற்ற 12 பேரில் ஒன்பது பேர் பண்டைய இந்தியாவின் வரலாற்றை வேத புராண நூல்களில் உள்ளவற்றுக்கு ஏற்ப சான்றுகளை கண்டறியுமாறு தாங்கள் பணிக்கப்பட்டதாக கூறினார்கள்.

இந்தக் குழுவில் புவியியலாளர், தொல்லியலாளர்கள், சமஸ்கிருத அறிஞர்கள் போன்றோர் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அனைவரும் சங்கிகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை

ஏற்கெனவே பிஜேபி ஆளும் கர்நாடக அரசு 1 முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாநிலப் பாடத்திட்ட புத்தகங்களில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியின் வரலாற்றை நீக்கியது.

அதே போல ராஜஸ்தான் மாநிலத்தை பாஜக ஆண்ட போது பள்ளி பாடப் புத்தகங்களில் இந்து தேசியவாத சித்தாந்தம், மற்றும் இந்து மத மன்னர்களின் போரட்டங்கள் மற்றும் தியாகங்களை முன்னிலைப்படுத்தி வரலாற்று பாடப் புத்தகங்கள் திரித்து வெளியிடப்பட்டது.

மேலும் நேரு பற்றிய பாடங்கள் 8ம் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டதோடு அம்பேத்காரை இந்து சமூக சீர்திருத்தவாதி என்று திரித்து புரட்டினார்கள் அத்தோடு ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் பற்றியும் சவார்க்கர் பற்றியும் பெருமையான குறிப்புகள் சேர்க்கப்பட்டன. சங்கிகளின் அழுத்தத்தால் டெல்லி பல்கலைக்கழக வரலாற்று பாடத்தில் இடம் பெற்றிருந்த “300 ராமாயணங்கள்” என்ற பாடத்தை நீக்கினார்.

சங்கிகளைப் பொறுத்தவரை இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் மைந்தர்கள். புராண இதிசாகங்களில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையானவை, இந்துமத சனாதன தர்மத்தை அழித்த மொகலாயர்களின் படையெடுப்பு இந்திய வரலாற்றின் இருண்ட காலம். சுதந்திர போரட்ட இயக்க வராலாறு என்பது மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டதால், இந்து தேசியவாத தலைவர்கள் சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மறைக்கப்படுகின்றது என்பதுதான் கூச்சலாக உள்ளது.

உண்மையில் சங்கிகளின் நோக்கம் வரலாற்றை, பண்பாட்டை ஆய்வு செய்வதல்ல. தங்களின் சித்தாந்த மேலாதிக்கத்திற்கு எதிரான வரலாற்றையும் பண்பாட்டையும் அழித்து அதை பார்ப்பனியம் என்ற ஒரே குட்டையில் மூழ்கடிப்பதுதான்.

 அவர்களின் கைகளில் ஏற்கெனவே பல லட்சம் ஆண்டுகளுக்கான வரலாறு உள்ளது. ராமன் பிறந்ததாக அவர்கள் சொல்லும் கணக்கையும், பாரதப் போர் நடந்ததாக அவர்கள் சொல்லும் காலத்தையும் நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் உண்மையில் மனிதன் என்ற இனமல்ல இந்த உலகில் எந்த ஒரு உயிரினமும் தோன்றிராத காலத்திலேயே ஒரு வீர இந்து தோன்றி அவன் சனாதன தர்மத்தோடு வாழ்ந்து கொண்டிருந்ததை காணமுடியும்.

ஆனால் தொல்லியல் மரபியல் சான்றுகள் அனைத்தும் இவர்களின் புரட்டு திட்டத்திற்கு எதிரான தரவுகளையே கொண்டிருக்கின்றன. குறிப்பாக சிந்து சமவெளி நாகரிகம் என்பது ஆரிய நாகரிகம் என்றும் ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும் கட்டமைக்க முற்படும் சங்கிகளுக்கு அங்கு கண்டறியப்பட்ட தொல்லியல் மற்றும் மரபியல் சான்றுகள் எதிராகவே உள்ளன.

காரணம் சிந்து சமவெளி நாகரிகம் என்பது நகர்ப்புற நாகரிகமாகும். ஆடு மாடு மேய்த்த வேதகால ஆரிய நாகரிகங்கள் நகர்ப்புறம் சார்ந்து ஒருபோதும் இருக்கவில்லை

சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த முத்திரைகளில் பல விலங்குகளின் அடையாளங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அதில் குதிரைகள் இடம்பெறவில்லை மேலும் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் பரவலாக புலி இடம் பெற்றிருக்கின்றது ஆனால் ரிக் வேதத்தில் புலி எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

தொல்லியல் சான்றுகளின்படி பழக்கப்படுத்தப்பட்டக் குதிரைகள் கி.மு 1900க்குப் பின்னர்தான் தோன்றுகின்றன. கி.மு 1900க்கும் கி.மு 1500க்கும் இடைப்பட்டக் காலம் பிந்தைய ஹரப்பா யுகத்தைச் சேர்ந்த காலகட்டமாகும். வட இந்தியாவில் இரும்பு கி.மு 1500க்கும் கி.மு 1400க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ரிக் வேதத்தின் காலகட்டம் கி.மு 2000க்கும் கி.மு 1400க்கும் இடைப்பட்டதாகும்.

முதன்முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்களின் வம்சாவளிகள், ஜாக்ரோஸ் பகுதியிலிருந்து வந்த வேளாண்குடிகள், ஆஸ்திரோ ஆசிய மொழி பேசியவர்கள், திபெத்திய பார்மிய மொழி பேசியவர்கள் போன்றோர் எப்படி இந்திய மண்ணில் தங்களின் இனத்தையும், பண்பாட்டையும் கலந்தார்களோ அதே போலத்தான் ஆரியர்களும் இந்தியாவில் குடியேறி தங்களின் இனத்தையும், பண்பாட்டையும் கலந்தார்கள்.

ஆனால் மற்ற எந்த இனக் குழுக்களும் தங்களின் பண்பாட்டை ஒட்டுமொத்த மக்கள் குழுவும் பின்பற்ற வேண்டும் என்று சதிவேலைகளில் இறங்கி தன்னைத் தவிர்த்த பிற மக்கள் குழுக்களை இழிவு செய்யும் கீழ்த்தரமான செயலை செய்யவில்லை.

ஆனால் ஆரிய பார்ப்பன கூட்டம் இன்றுவரையிலும் அந்தப் பணியை செய்துவருகின்றது. தனக்கான தனித்த பண்பாடு, மொழி போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் அதை உறுதிபடுத்திக் கொள்கின்றது.

அப்படித்தான் பார்ப்பனியம் இந்தியாவில் தன்னுடைய பண்பாட்டை மேலாதிக்க பண்பாடாக நிறுவிக் கொண்டது. எனவே கீழ்நிலை பண்பாடாக அது நினைத்ததை எல்லாம் அழித்தொழிக்கும் பணியை செய்தது. வெறும் 3 சதவீதம் உள்ள ஆரிய பார்ப்பனர்களின் பண்பாடே மீதமுள்ள 97 சதவீத மக்களின் பண்பாடு என திட்டமிட்டு பரப்பப்பட்டு அது நிலைநிறுத்தவும் பட்டிருக்கின்றது.

இந்திய வரலாற்றை ஆய்வு செய்த சில ஆங்கிலேயர்கள் இங்கிருந்த, அப்போது கல்வி அறிவு பெற்றிருந்த ஆரிய பார்ப்பனர்களின் நயவஞ்சக செயலால் அவர்களின் கீழ்த்தரமான சதித்திட்டத்திற்காக இயற்றப்பட சாதியத்தையும் பார்ப்பன மேலாண்மையையும் நியாயப்படுத்தும் கதையாடல்களை ஒட்டுமொத்த இந்திய மக்களுமான ஒன்றாக ஏற்று பையத்தியக்காரத்தனமாக வரலாற்றை எழுதினார்கள்.

97 சதவீத மக்களின் வரலாறு இருட்டடைப்பு செய்யப்பட்டது. இன்று பெரும்பாலான மக்கள் ஆரிய பார்ப்பனியத்தின் பண்பாட்டையே தன்னுடைய பண்பாடு என மனமுவந்து ஏற்கும் நிலைக்கு அவர்களை பார்ப்பனியம் பழக்கப்படுத்தி இருக்கின்றது.

இயல்பாகவே இத்தனைக் காலம் தப்பிப் பிழைத்திருந்த சில பண்பாடுகளைக் கூட பார்ப்பன மயப்படுத்தி சுகங்காணும் அடிமைகளாய் மாறியிருக்கின்றார்கள்.

ஆனால் “இறுதியாக கி.மு 2000க்குப் பிறகு இங்கு வந்து ஆரியர்கள் குடியேறுவதற்கு முன்பாகவே இந்தியாவின் மக்கள்தொகை உலகிலேயே பெரிய மக்கள் கூட்டத்தில் ஒன்றாக மாறிவிட்டிருந்தது என்பதும், வேளாண்மைப் புரட்சியையும் அதைத் தொடர்ந்து நகர்மய புரட்சியையும் நிகழ்த்தி அது அக்காலகட்டத்தின் மிகப் பெரிய நாகரிகம் ஒன்றையும் ஏற்கெனவே உருவாக்கியிருந்தது என்பதும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று கிட்டத்தட்ட எல்லா பிராந்தியங்களிலும் அது வேளாண்மையை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தது என்பதும் இன்று நாம் அறிந்துள்ள இந்தியாவிற்கான அஸ்திவாரம் ஹரப்பா நாகரிகத்தின் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது என்பதும்தான் உண்மை”. (நன்றி: ஆதி இந்தியர்கள் - டோனி ஜோசஃப்)

இந்தியாவிற்கு துருக்கியர்களும், ஆஃப்கானத்தவர்களும், அரபியர்களும், மொகலாயர்களும், பிரிட்டிஷ்காரர்களும் படையெடுத்து வந்திருக்கின்றார்கள். அவர்கள் புதிய சிந்தனைகளையும், தொழில்நுட்பங்களையும், கலைகளையும் இந்த மண்ணோடும் மக்களோடும் பகிர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். அது எல்லாம் கலந்து பிண்ணிப் பிணைந்து தான் இன்றைய இந்திய பண்பாடு பல வேறுபாட்டோடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதை அங்கீகரிப்பது என்பதுதான் ஜனநயகம் ஆகும்.

ஆனால் 3 சதவீத ஆரிய பார்ப்பன கும்பல் தங்களின் பண்பாடுதான் ஒட்டுமொத்த இந்திய பண்பாடு என கொக்கரிப்பதும் அதை நிறுவ கூலிகளை அமர்த்துவதும் மீதமுள்ள 97 சதவீத மக்களின் பண்பாட்டுக்கும் அவர்களின் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாகும்.

இப்போதும் ஆரியர்களை வந்தேறிகள், அவர்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள் கிடையாது அதனால் இந்தியாவைவிட்டு அவர்கள் வெளியேற வேண்டும் என அறிவியல் நோக்கில் எந்த ஒரு முற்போக்குவாதியும் சொல்வதில்லை.

மற்றவர்களின் தன்மானத்தையும் சுயமரியாதையும் இழிவு செய்து தன்னைத்தவிர பிற மக்களை சூத்திரர்கள், சண்டாளர்கள், பஞ்சமர்கள் என கீழ்த்தரமாக நடத்தத் துணியும் கேடுகெட்ட அயோக்கியத்தனத்தை நான்காயிரம் ஆண்டுகளாக ஒரு குழுவால் செய்ய முடிகின்றது என்றால் அதை இன்னமும் தீவிரமாக செய்ய முற்படுகின்றார்கள் என்றால் அந்த கேடுகெட்ட கும்பலின் மீது தன்மானமும் சுயமரியாதையும் உள்ள ஒரு சாமானிய மனிதனுக்கு இயல்பாகவே எழும் கோவம்தான் அவர்களுக்கு எதிரான அணிச்சேர்க்கைக்கு முக்கிய காரணம்.

12000 ஆண்டுகள் அல்ல, இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இந்திய பண்பாட்டை ஆய்வு செய்தாலும் அது சொல்லும் ஒரே செய்து இதுதான். ஒரே பண்பாடு, தூய பண்பாடு என எதுவுமே எப்போதுமே உலகில் இருந்தது இல்லை. இந்தியா மட்டுமல்ல உலகமே பல பண்பாடுகளின் ஒளியால்தான் மிளிர்ந்துக் கொண்டு இருக்கின்றது.

அது வாழ்தலுக்கான சுவாரசியத்தை கூட்டுகின்றது. ஆனால் பாசிஸ்ட்கள் எல்லாவற்றையும் தங்களைப் போலவே மாற்ற விரும்புகின்றார்கள். அவர்களின் மூளைக்குள் உருவாகும் வரலாறுகள் பெரும்பாலும் அழுகி நாற்றமெடுத்து அருவருப் பூட்டுவதாகவே உள்ளது.

- செ.கார்கி

Pin It