தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய 9 பேரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில், அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில், இணைச் செயலாளர்களாக நியமித்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்களுக்கு பங்களா, வாகன வசதியுடன், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் மாதத்துக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரைசம்பளமும் வழங்கப்பட உள்ளது. குடிமைப் பணித் தேர்வுகளில் (அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ், அய்ஆர்எஸ்) தேர்ச்சி பெற்றவர்களே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதி அடிப்படையில், மத்திய அரசின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் பதவிகளில் நியமிக்கப்படுவது வழக்கம். அனுபவத்தின் அடிப்படையில், லேடரல் எண்ட்ரி முறையிலும் இந்த நியமனங்கள் நடக்கும் என்றாலும், தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்.

வருமான வரித் துறை, கஸ்டம்ஸ், ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சலகம் மற்றும் வணிகம் உட்பட 37 அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களே தகுதி உயர்வு வழங்கப் பட்டு, அரசின் செயலாளர்களாக நியமிக்கப்படு வார்கள்.ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு, லேடரல் எண்ட்ரி முறையில், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம்(?) பெற்றவர்களையும், மத்திய அரசின் இணைச் செயலாளர்களாக நியமிக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அப்போதே இதற்கு எதிர்ப்பும் எழுந்தது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, அரசு உயரதிகாரிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாஜகவுக்கு வேண்டியவர்களை, அனுபவசாலிகள் - அறிவாளிகள் என்று கூறி, அவர்களைக் கொல்லைப் புற வழியாக, அரசின் உயர்பதவிகளில் உட்கார வைக்கும் திட்டமாகவே இதுதெரிகிறது என்றும் குற்றம் சாட்டினர். ஆனால், மோடி அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. நிதி ஆயோக் பரிந்துரை என்ற பெயரில், யுபிஎஸ்சி மூலம் தனியாரை நியமிப்பதற்கு அறிவிக்கைகளையும் வெளியிட்டது. 40 வயதுக்கும் மேற்பட்ட, குறைந்தது 15 ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, துறை சார்ந்த அனுபவம் பெற்றவர்கள், அய்ஏஎஸ் தகுதி நிலையிலான மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப் பிக்கலாம் என்று கூறியிருந்தது.

இந்நிலையில், மத்திய வேளாண் துறையில் ககோலி கோஷ், விமானப் போக்குவரத்துத் துறையில் அமர் துபே, வணிகத்துறையில் அருண் கோயல், பொருளாதார விவகாரத் துறையில் ராஜீவ் சக்சேனா, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் பாஜ்பாய், நிதிச் சேவைத் துறையில் சவுரவ் மிஸ்ரா, புதுப்பிக்கத் தக்க சக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜகதலே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை பிரிவில் சுமன் பிரசாத் சிங், கப்பல் போக்குவரத்து துறையில் பூஷன் குமார் ஆகியோரை அரசு இணைச் செயலாளர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் நியமிக்கப்பட்ட இந்த 9 இணைச் செயலாளர்களும் அடுத்த 3 ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை பதவியில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் பார்ப்பன உயர்ஜாதி யினர் என்பதோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்புடையவர்கள்.