eps amit shah opsதமிழன்: நமஸ்தே ஜி; கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று ஒரு சுவர்கூட விடாமல் எழுதி வைச்சீங்க; இப்ப கழகத்திடம் 20 சீட்டுக்கு சரணடைஞ்சுட்டீங்களே!

ஜி: புரியாம பேசாதே; நாங்க அப்படி சொன்னது தமிழ்நாட்டுக்கே இல்ல; நாடாளுமன்றத்துக்கு; நீங்க ஏமாந்து போய் தவறாகப் புரிஞ்சுகிட்டீங்க. சரி; அப்படியே ஏமாந்து கிடக்கட்டும்னு நாங்களும் விட்டுட்டோம்; அவ்வளவுதான்.

தமிழன்: தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை நாங்க தான் தீர்மானிப்போம்னு சொன்னீங்களே, ஜி...?

ஜி: ஆமாம்; சொன்னோம். அவரு தான் எடப்பாடி பழனிச்சாமி; புரியுதுல்ல.

தமிழன்: இந்த முடிவை எடுத்தது அந்தக் கட்சிக்காரங்க தானே. நீங்க இல்லையே; அதுவும் கடும் உள்கட்சி யுத்தத்துக்குப் பிறகு தானே அந்த முடிவுக்கு அவங்களே வந்தாங்க.

ஜி: என்ன புரியாம பேசறீங்க. அந்த ‘யுத்தத்தை’ அக்கட்சிக்குள்ளே நடத்தியது யாரு? நாங்க தானே! ஓ.பி.எஸ்.சை மோத விட்டோம்; பிறகு நாங்க தான் அவரை விலக வச்சோம்; மீண்டும் சேர்த்து வச்சோம்!

தமிழன்: எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிச்ச பிறகும் இன்னும் நாங்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று உங்க கட்சி முருகன் கூறினாரே, ஜி?

ஜி: அதற்கு அர்த்தம், கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட பிறகு ஏற்றுக் கொள்வோம்; அதற்கு முன்பு ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுதான். எதையுமே புரிஞ்சுக்க மாட்டீங்களா?

தமிழன்: இப்ப தெளிவாய் புரிகிறது ஜி. இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் அதிகமான ஊழல் நடக்குதுன்னு அமீத்ஷா பேசினாரே, இப்ப ஊழல் வழக்கில் முதல்வராக இருக்கும் போதே தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா கட்சியோட கூட்டணி வைச்சிருக்கீங்களே...

ஜி: அய்யோ... அய்யோ... (சிரிக்கிறார்) நாங்க ஊழலை எதிர்க்கிறோம்; உண்மைதான். ஆனால் ஊழல் செய்யும் கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டோம்னு எப்போதாவது சொல்லியிருக்கிறோமா? தமிழ்நாட்டு மக்களை இப்படித்தான் சிந்திக்க விடாம வச்சிருக்கீங்க...

தமிழன்: தெளிவான விளக்கம் தந்துட்டீங்க... கடைசியா ஒரே ஒரு சந்தேகம் ஜி...

ஜி: கேளுப்பா, நல்லா கேளு...

தமிழன்: நீங்க தான் அ.தி.மு.க.வை இரண்டா உடைச்சீங்க... பிறகு ஒன்றாக சேர்த்து வச்சீங்க... பிறகு ஓ.பி.எஸ். அணியை மீண்டும் உடைச்சு, உங்கள் கட்சியோடு கொண்டு போக திட்டமிட்டீங்க; இப்ப எல்லாத்தையும் அம்போன்னு விட்டுவிட்டு 20 சீட்டை வாங்கிக்கிட்டு சரணடைஞ் சுட்டீங்க; இது என்ன விளையாட்டு ஜி!

ஜி: இது தானப்பா எங்க தத்துவம். நாம் எல்லோரும் ‘இந்து’க்கள்; ஒன்றுபட வேண்டும் என்று ஒற்றுமை பேசுவோம்; பிறகு இந்துக்களிலே ஒவ்வொரு ஜாதியாகப் பிரிச்சு அந்த ஜாதிகளின் பெருமைகளைப் பேசி, எங்க கட்சிக்குள்ளே இருப்போம்; இப்ப ஜாதி பேசி பிரிப்போம்; இந்து ஒற்றுமை பேச மாட்டோம்; ஆனால் இஸ்லாமியர்களை எதிர்க்க இந்து ஒற்றுமையைப் பேசுவோம்; ஓட்டு வாங்க பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை பேசுவோம்; மோடியையே பிற்படுத்தப்பட்டோர் என்போம்; ஆனால், ‘பிராமண உயர்ஜாதி’ ஏழைகளுக்கு 10 சதவீதம் ஒதுக்கிடுத் தந்து ‘பிராமணர்’களோடு இணைவோம்; இங்கே பிற்படுத்தப்பட்டோரை ஒதுக்குவோம்; ஓட்டு கேட்கும்போது பிற்படுத்தப்பட்டோர் என்று பேசு வோம்; எங்களுக்கு தேவைப்பட்டால் பிரிப்போம்; பிறகு இணைப்போம்; சேர்ப்போம்; சேர்ப்பவர்களை பிரிப்போம்; பிறகு பிரிந்தவர்களை இணைப்போம்; அதுதான எங்கள் தத்துவமே! அதைத் தான் அரசியலுக்குள்ளும் செய்யுறோம்.

தமிழன்: இப்ப நல்லா புரியுது ஜி. தமிழன் ஏமாளியாக இருக்குற வரைக்கும் அவனது தொடையில் ‘பூணூல்’ (அதாவது கயிறு) திரிப்பீங்க என்பதும் சேர்த்துப் புரியுது! ‘பாரத் மாதாக்கி’ ஜே!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It