கூடங்குளம் அணு உலைகளில், எரி பொருளாகப் பயன்படும் யுரேனியம் பயன்பாட் டுக்குப் பிறகு புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கழிவுகளை சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட் டோனியம் கழிவு உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்துக் குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப் போகிறார்களாம். இந்த செயல் முறைக்கு ‘Away From Reactor’ (AFR) என்று பெயர்.

இந்த மையத்திலும் கழிவுகள் நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் படாது; இது ஒரு தற்காலிகமான அணுக்கழிவு மையம் என்கிறார்கள். ஆனால், அணுக்கழிவை ‘ஆழ்நிலைக் கருவூலம்’ (Deep Geological Repository - DGR )என்னும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் சரியானது. அப்படி நிரந்தரமாகச் சேமித்து வைக்க வேண்டும் எனில் பூமிக்கு அடியில் பல கி.மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் பாதுகாப்பு இருக்காது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்து விட்டால், விளைவுகள் கொடூர மானதாக இருக்கும். ‘உலகில் பல நாடுகளில் அணுக் கழிவுகளை அந்தந்த அணுஉலை வளாகத் துக்குள்தானே சேமிக்கிறார்கள்...’ என்று கூறலாம். ஆனால், அதற்கான விளைவுகளைத் தான் செர்னோபில், புகுஷிமா ஆகிய அணுஉலை விபத்துகளின் போது உலகம் தெரிந்துகொண்டது.

கூடங்குளம் அணுஉலை தொடர்பாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில், 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 15 நிபந்தனைகளைக் கூறி உலை செயல் பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனை, ‘அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை ஐந்து ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.

ஐந்து ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்துவிட்டது. ஆனால், அதற்கு முன்னதாக 2018 பிப்ரவரி மாதமே, ‘மேலும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய அணுமின் கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், ‘அணுக்கழிவு களை உலைக்கு வெளியே வைப்பதற் கான கட்டமைப்பை வடிமைப்பதில் உள்ள தொழில்நுட்பங்கள் முழுவது மாக கைவராத நிலையில், அதை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனால்தான் மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வேண்டும்’ என்று அணுமின் கழகம் கூறியிருந்தது. மேலும் அதே மனுவில், ‘இதைப் போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவிலேயே முதல்முறையாகக் கூடங்குளத்தில்தான் அமைக்கப்பட் டுள்ளதால், இது மிகவும் சவாலான பணியாகவே இருக்கும்’ என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ‘அணுக்கழிவுகளை உலைகளுக்கு உள்ளேயே சேகரித்து வைப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே AFR கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளிலிருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்க வேண்டும். அதனால், இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு AFR மற்றும் DGR வசதிகளை ஏற்படுத்தி முடிக்கும்வரை இரண்டு உலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கைக் கடந்த ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு, ‘கூடங்குளம் அணுஉலையில் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள என்னென்ன நடைமுறைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்று 2018 ஜூலை முதல் வாரத்துக்குள் அணுஉலை ஒழுங்குமுறை ஆணை யம் உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியது.

அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கூடங்குளம் அணு உலையில் உள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கு (Fuel Pool) அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்ட வில்லை; மேலும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால், AFR வசதியைக் கட்டி முடித்துவிடுவோம்’ எனவும் கூறியிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ‘2022-க்குள் AFR கட்டி முடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான், ‘கூடங்குளம் வளாகத்துக்குள்ளாகவே ‘AFR’ வசதியைக் கட்டுவதற்குப் பொது மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி, நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெறும்’ என்று மாசுக் கட்டுப் பாடு வாரியம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர் ராஜன் கூறுவதாவது:

“அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டுவரும் ‘ஆழ்நிலை கருவூலம்’ அமைப்பதற்கான இடமும் தொழில்நுட்பமும் இன்றுவரை இந்தியாவிடம் இல்லை. இப்படியான நிலையில், AFRபோன்ற தற்காலிக வசதியை நம்பித் தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப் பெரிய அச்சுறுத்த லுக்கு வழிவகுக்கும். கூடங் குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளைப் பாது காப்பாக வைக்கும் தொழில் நுட்பத்தை எந்த நாட்டிலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், சோதனை எலிகளாகத் தமிழ் மக்களை மாற்றும் விபரீதமான திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

நிரந்தரக் கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக் கும்வரை கூடங்குளத்தின் இரண்டு உலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும். மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டு வதையும் கைவிடவேண்டும். ஜப்பான் நாட்டில், கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் அதிகம்” என்று கூறினார்.

Pin It