"ஆண்டவரால் எல்லையற்ற அன்பு காட்டப்படும் மனிதர்களின் அளப்பரிய கண்ணியத்திற்கு முற்றிலும் மாறாக, அவர்கள் அனுபவித்த அளவற்ற துயரங்களையும் அவமானங்களையும் நினைத்துப் பார்க்கும்போது ஆழ்ந்த வேதனையை உணராமல் இருக்க முடியாது. இதற்காக, திருச்சபையின் பெயரால் (சார்பில்), நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன்."

பல நூற்றாண்டுகளாக அடிமை முறையை நியாயப்படுத்தியதில் வாடிகனின் பங்கிற்காகவும், அடிமை முறையைக் கண்டிக்கத் தவறியதற்காகவும், வாடிகன் மாநகரில், ஆப்பிரிக்க நாளான மே 25 ஆம் நாளில், வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கண்ட பகிரங்க மன்னிப்பைக் கோரியவர், உலகெங்குமுள்ள ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைமைப் பீடத்தின் அதிஉயர் தலைவரான திருத்தந்தை (போப் ஆண்டவர்) 14ஆம் லியோ.vatican plazaதிருத்தந்தையின் இந்த மன்னிப்புக் கோரல் சாதாரணமான ஒன்றல்ல; உலகளாவிய சமுதாய மற்றும் அரசியல் தளங்களில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், வாடிகனில் ஏற்கெனவே இருந்த திருத்தந்தைகளில் சிலர், அட்லாண்டிக் கடலைத் தாண்டி மேற்கொள்ளப்பட்ட அடிமை வர்த்தகத்தில் கிறித்துவர்களின் பங்களிப்பிற்காக, தனிப்பட்டவர்களின் தவறுகளுக்காக - மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர். ஆனால், "நம்பிக்கையற்றவர்களை" – ‘கிறித்துவர்கள் அல்லாதவர்களை – மாற்று மதத்தினரை’ அடக்கி ஆளவும், அடிமைப்படுத்தவும் ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை வழங்கியதில் கடந்த காலத் திருத்தந்தைகளின் பங்கை எந்தவொரு திருத்தந்தையும் இதுவரை பகிரங்கமாக ஒப்புக்கொண்டதும் இல்லை; அதற்காக மன்னிப்புக் கேட்டதும் இல்லை.

ஆனால், இப்போது முதல் முறையாக, அடிமை முறையை அங்கீகரித்து சட்டப்பூர்வமானதாக வைத்திருந்ததற்காக, வாடிகனே, அதன் அதிஉயர் தலைவரே மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வணிகத்தை மனித குலத்துக்கு எதிரான மிகக் கொடிய குற்றமென ஐக்கிய நாடுகள் அவை அறிவித்த சில மாதங்களில் இந்த மன்னிப்புக் கோரப்பட்டிருக்கிறது. இதை உலகில் காலங்காலமாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ள ஆப்பிரிக்க மற்றும் பூர்வகுடி மக்களின் சந்ததியினருக்குக் கிடைத்த தார்மிக வெற்றி அல்லது ஆறுதல் எனக் கொள்ளலாம்.

மகத்தான மனிதநேயம் (மாக்னிஃபிகா ஹியூமானிட்டாஸ் - Magnifica Humanitas) என்ற பெயரில் திருத்தந்தை 14 ஆம் லியோ வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் (Encyclical Letter) அறிவித்தலில், உலகமே செய்யறிவை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில் மனிதநேயத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டதுடன், எண்மப் (டிஜிட்டல்) புரட்சியானது, புதுப்புது வடிவங்களில், கடந்த காலமாகிவிட்ட, வழக்கொழிந்த அடிமை முறைக்கும் காலனித்துவத்திற்கும் மீண்டும் வழிவகுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அடிமைத்தனத்தைப் பேச வரும்போதுதான், அதனுடன் ஒப்பிட்டுப் பழைய அடிமை வர்த்தகத்துக்காகவும் மன்னிப்புக் கேட்டார் அவர்.

கடவுளின் குழந்தைகளாக அனைத்து மனிதர்களின் கண்ணியத்தையும் எப்போதும் நிலைநிறுத்தி வருவதாகக் கத்தோலிக்கத் திருச்சபை வாதிட்டு வந்தாலும், வரலாற்றில், 15-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியாக வாடிகனில் இருந்து பிறப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆணைகள் (Papal Bulls) அல்லது அறிவுறுத்தல்கள் எப்போதும், ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் நிலப் பகுதிகளைக் கைப்பற்றவும், அங்கிருந்த பூர்வகுடி மக்களை, ஆப்பிரிக்கர்களை, கிறித்துவர் அல்லாதவர்களை அடிமைப்படுத்தவும் போர்த்துகேய (மற்றும் ஐரோப்பிய) ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் அளித்து வந்திருக்கின்றன.

கி. பி. 1452-இல் வாடிகனிலிருந்த திருத்தந்தை 5 ஆம் நிக்கோலஸ் வெளியிட்ட ஆணையில் (டம் டைவெர்சஸ் - Dum Diversas), போர்த்துகேய மன்னருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் உலகில் எங்கே வேண்டுமானாலும், ‘நம்பிக்கையற்றவர்கள், கிறித்துவின் பெயருக்கு எதிரானவர்களின்’ நிலம் போன்ற அனைத்து உடைமைகளையும் ஆக்கிரமிக்கவும், கைப்பற்றவும், போரிடவும், அடக்கியாளவும் உரிமையை வழங்கியது.

இந்த ஆணையும், அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட மற்றோர் ஆணையும் (Romanus Pontifex), ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் காலனித்துவ கால நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தின. இந்த அனுமதிகள், 1456 இல் திருத்தந்தை 3 ஆம் கலிஸ்டஸாலும், 1481 இல் திருத்தந்தை 4 ஆம் சிக்ஸ்டஸாலும், 1514 இல் திருத்தந்தை 10 ஆம் லியோவாலும் உறுதிப்படுத்தப்பட்டன அல்லது புதுப்பிக்கப்பட்டன.

இதேபோல, அமெரிக்க கண்டத்திலுள்ள நிலங்களுக்கான உரிமைகளை ஸ்பானிய மன்னர்கள் பெற்றனர். 2023 ஆம் ஆண்டில், இந்தக் கோட்பாட்டை அதிகாரப்பூர்வமாக வாடிகன் நிராகரித்தாலும், அந்த ஆணைகளை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யவோ, இரத்து செய்வதாக அறிவிக்கவோ இல்லை (1537-இல் வெளியிடப்பட்ட பிந்தைய ஆணை (Sublimis Deus), பூர்விகக் குடிகளின் சுதந்திரத்தையோ அல்லது அவர்களின் சொத்துகளையோ பறிக்கக் கூடாது; அவர்களை அடிமைப்படுத்தக் கூடாது என்றும் உறுதிப்படுத்தியதாக வாடிகன் கூறுகிறது).

அடிமை முறையைப் பல நாடுகள் ஒழித்து, நீண்ட காலத்திற்குப் பிறகுதான், 1888 ஆம் ஆண்டில், வெளிப்படையாக அடிமை முறையைத் திருச்சபை கண்டித்தது; முதன்முதலாக அடிமை முறையைக் கண்டித்த திருத்தந்தையின் பெயரும் லியோதான் - திருத்தந்தை 13-ஆம் லியோ. இதையும்கூட தன்னுடைய அறிவித்தலில் நினைவூகூர்ந்திருக்கிறார் தற்போதைய திருத்தந்தை 14 ஆம் லியோ [அதுவரை பழங்காலத்திலும் இடைக்காலத்திலும் திருச்சபை நிறுவனங்களிலும் கிரேட் கிரிகோரி போன்ற திருத்தந்தைகள்கூட அடிமைகளைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது].

‘மகத்தான மனிதநேய’ சுற்றறிக்கையில் 15 ஆம் நூற்றாண்டுத் திருத்தந்தையின் ஆணைகளை ஒப்புக்கொண்ட லியோ, "ஆரம்பகால நவீன காலத்திலேயே, ஆட்சியாளர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அடிமைப்படுத்துதலின் வடிவங்களை ஒழுங்குபடுத்தவும் நியாயப்படுத்தவும் வாடிகன் பல முறை தலையிட்டிருக்கிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், 'நம்பிக்கையற்றவர்களை' அடிமைப்படுத்துவதும் இதில் அடங்கும் என்றும், கூடவே, இன்றைய சூழ்நிலைமையுடன் பொருத்திப் பார்த்துக் கடந்த கால முடிவுகளை மதிப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"இருந்தபோதிலும், அடிமை முறையின் கொடுமையைக் கண்டிப்பதில் இந்த சமுதாயமும் திருச்சபையும் காட்டிய தாமதத்தை நம்மால் மறுக்கவோ அல்லது குறைத்துமதிப்பிடவோ முடியாது."

"இது கிறித்துவ நினைவுத்தடத்தில் ஒரு காயமாக விளங்குகிறது. இதிலிருந்து நாம் ஒருபோதும் நம்மை விலக்கிக்கொண்டுவிட முடியாது."

"நமது விசுவாசத்திற்குத் தேவையான மனித விழுமியங்களை மதிக்கத் தவறியதற்காக எதிர்காலத்தில் நாம் மீண்டும் மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பினால், எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப புரட்சி – செய்யறிவு தொடர்பான அனைத்து வகையிலான நவீன அடிமைத்தனங்களையும் திருச்சபை உறுதியாகக் கண்டிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

தொழில்நுட்பத் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் செய்யறிவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் இந்த காலகட்டத்தில், நவீன அடிமைத்தனத்தைப் பற்றிப் பேச வந்த திருத்தந்தை லியோ, தற்போதைய சிக்கல்களைப் பற்றி நம்பகத்தன்மையுடன் அணுகுவதற்குத் தோதாக வரலாற்றின் அடிமைத்தனத்தில் திருச்சபையின் பங்களிப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார் எனலாம்.

செய்யறிவுக் காலத்தில் மனித மாண்பைக் காப்பது பற்றிப் பேசும் திருத்தந்தையின் இந்த வரலாற்று ஆவணம் 'Magnifica Humanitas' "மகத்தான மனிதநேயம்" என்ற இலத்தீன் சொற்கள், எந்தவோர் அதிநவீனமும் மனிதனின் உன்னதத்தை மாற்றிவிட முடியாது என்பதைச் சுட்டுவதாகக் கருதப்படுகிறது.

தவிர, விவிலியத்தில் அன்னை மரியாள் பாடிய 'மேக்னிஃபிகாட்' என்ற பாடலையும் நினைவுபடுத்துவதுடன், வரலாற்றின் இருண்ட காலங்களிலும் நம்பிக்கையை நெய்யும் "நம்பிக்கைக்கான நெசவாளர்களாக" (Weavers of Hope) மனிதர்கள் மாற வேண்டும் என்ற அழைப்பும் விடுக்கப்படுகிறது.

1891 ஆம் ஆண்டு மே 15 இல் திருத்தந்தை பதிமூன்றாம் லியோவும் தொழில்துறை புரட்சியின்போது தொழிலாளர்களின் உரிமைகளுக்கான 'ரெரும் நோவாரம்' (Rerum Novarum) என்ற புகழ்பெற்ற சமூக நீதி ஆவணத்தை வெளியிட்டார். அதே வழியில், அதே நாளில் இப்போது செய்யறிவுப் புரட்சிக்காக மகத்தான மனிதநேயம் என்ற ஆவணத்தில் தற்போதைய திருத்தந்தை 14 ஆம் லியோ கையெழுத்திட்டிருக்கிறார்.

மகத்தான மனிதநேயத்தில் செய்யறிவுத் தொழில்நுட்பத்தை மனிதநேயத்தோடு அணுகுவதற்கான வழிகளைச் சுட்டிக்காட்டுகிறார் திருத்தந்தை 14 ஆம் லியோ:

செயல்திறனைவிட மனித மாண்பே முக்கியம்

செயல்திறன் (Efficiency) மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பைத் தீர்மானிக்கும் அளவுகோலாக மாறும்போது, மனிதர்கள் தங்களை உறவுகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, மேலும் மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய (Optimized) ஒரு வெற்றுப் பொருளாகப் பார்க்கும் ஆபத்து ஏற்படுகிறது.

மனிதனைவிட வேகமாக செய்யறிவு வேலை செய்யலாம், ஆனால் மனிதனுக்கு இருக்கும் ஆன்மா, மனசாட்சி மற்றும் நன்மைகளையும் தீமைகளையும் ஆய்ந்தறியும் பக்குவம் வராது.

மனிதக் குறைபாடுகளும் அழகும்

செய்யறிவு உலகம் மனிதனைப் பிழையற்ற ஒரு 'சூப்பர் ஹியூமனாக' (Enhanced Human Being) மாற்ற முயல்கிறது. ஆனால், மனிதர்களின் பலவீனம், நோய், முதுமை, மற்றும் துயரங்கள் ஆகியவை எல்லாம் நீக்கப்பட வேண்டிய "குறைபாடுகள்" அல்ல; மாறாக, இவற்றுக்கு இடையேதான் மனிதநேயமும், ஒருவருக்கொருவர் உதவும் அன்பும் வளர்கிறது.

எண்ம உலகில் சமூக நீதி

செய்யறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகள்:

* ரோபோக்கள் மற்றும் செய்யறிவு காரணமாக எளிய மக்களின் வாழ்வாதாரமும் வேலைவாய்ப்புகளும் பறிபோகும் சூழல் ஏற்படும்.

* தவறான தகவல்கள் மற்றும் தனியுரிமை மீறல்கள் மூலம் மக்களின் சிந்தனையைத் திசை திருப்பும் ஆபத்து.

* தொழில்நுட்ப ஆதிக்கம் மூலம் ஏழை நாடுகளையும் எளிய மக்களைப் புதிய வடிவில் சுரண்டுவது.

தானியங்கி ஆயுதங்களுக்கு எதிர்ப்பு

போர்க்களங்களில் மனிதர்களின் தலையீடின்றி, தாமாகவே இலக்குகளைத் தாக்கி அழிக்கும் 'தானியங்கி ஆயுத முறைகள்' ஆபத்தானவை. உயிர் மற்றும் மரணம் பற்றி முடிவெடுப்பதில் தார்மிகப் பொறுப்பும், அறமும் அவசியம்; அதை ஒரு கணினியிடம் ஒப்படைக்கக் கூடாது.

விவிலியத்திலிருந்து வினா

இந்தச் சுற்றறிக்கையில் 14 ஆம் லியோ, இரு முக்கிய விவிலியப் பின்னணிகளைக் குறிப்பிடுகிறார்: மனிதன் இறைவனைவிடத் தானே பெரியவன் என்று தொழில்நுட்ப வலிமையால் தலைக்கனம் கொண்டு அழிந்ததைக் குறிக்கும் பாபெல் கோபுரம் மற்றும் அனைவரும் இணைந்து, பொறுப்புணர்வுடன் சமூகத்தைக் கட்டியெழுப்புவதைக் குறிக்கும் ஜெரூசலேம் மதில்களைக் கட்டுதல். இரண்டையும் சுட்டிக்காட்டி, நாம் பாபெல் கோபுரத்தைக் கட்டப் போகிறோமா அல்லது மனிதநேயம் மிக்க ஒரு புனித நகரத்தைக் கட்டப் போகிறோமா? என்ற கேள்வியை உலகின் முன் வைக்கிறார்.

அதிகாரத்தின் கலாசாரமா? அன்பின் நாகரிகமா?

தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கத்தோலிக்க திருச்சபை எதிர்க்கவில்லை; மாறாக, தொழில்நுட்பம் என்பது மனிதனுக்குச் சேவை செய்யும் ஒரு "கருவி" மட்டுமே தவிர, அதுவே மனிதனை ஆளும் "அதிகாரமாக" மாறிவிடக் கூடாது என்பதுதான் இந்த அழைப்பின் சுருக்கம். உலகளாவிய பேராசை மற்றும் அதிகார கலாசாரத்திற்கு (Culture of Power) மாற்றாக, நீதி, உரையாடல், மற்றும் பொறுப்புணர்வுள்ள "அன்பின் நாகரிகத்தை" (Civilization of Love) உருவாக்க விடுக்கப்பட்டிருப்பதே இந்த அழைப்பு.

காலனிய காலத்தில் மனிதர்களை அடிமைகளாக்கவும் விற்கவும் வாங்கவும் வெளிப்படையாகப் பல ஐரோப்பிய அரசுகளுக்கு அனுமதி வழங்கியதற்காகவும் ஆதரித்து நின்றதற்காகவும் வாடிகன் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வரலாற்றில் நீண்ட காலமாகவே, கருப்பின அமெரிக்க கத்தோலிக்கர்களும் ஆர்வலர்களும் அறிஞர்களும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

1985-ஆம் ஆண்டு கேமரூன் சென்றிருந்தபோது, புனித இரண்டாம் ஜான் பால், அடிமை வர்த்தகத்தில் பங்கேற்ற கிறித்துவர்களின் சார்பாக, தனிப்பட்டவர்களின் பாவங்களுக்காக, ஆப்பிரிக்கர்களிடம் மன்னிப்பு கேட்டார், ஆனால் திருத்தந்தைகளின் சார்பாக அல்ல. வாடிகன் அமைப்பின் பங்களிப்பு பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

1992 இல் மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய அடிமை வர்த்தக மையமாக இருந்த செனகலின் கோரி தீவுக்குச் சென்றிருந்தபோது, அவர் அடிமை முறையின் அநீதியைக் கண்டித்து, ஒரு நாகரிகத்தின் பேரழிவு என்று குறிப்பிட்டார்.

2015 இல் பொலிவியாவில் அமெரிக்க காலனியத்தின்போது, பூர்வகுடி மக்களுக்கு எதிராகத் திருச்சபையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

திருத்தந்தையின் தற்போதைய இந்த அறிவித்தலை, உண்மையை ஒப்புக்கொண்டு இவ்வாறு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உலகிலுள்ள ஏராளமான கத்தோலிக்கர்கள் பிரார்த்தனை செய்து காத்திருந்தனர் என்று குறிப்பிட்டு வரவேற்றிருக்கிறார் டேட்டன் பல்கலை. வரலாற்றாசிரியரும், அமெரிக்கக் கத்தோலிக்கக் கறுப்பினக் கன்னியாஸ்திரிகளின் வரலாறு பற்றிய நூலை எழுதியவருமான ஷானன் டிவில்லியம்ஸ்.

வெள்ளை இன மேலாதிக்கத்தின் வரலாற்றில் கத்தோலிக்க திருச்சபை ஒருபோதும் ‘ஒன்றுமறியா பார்வையாளராக’ இருந்ததில்லை என்ற வரலாற்றுப் பின்னணியில், கடல் கடந்த அடிமை வணிகம், மனிதர்களைத் தனிநபர் உடைமைகளாகக் கருதுவதில் திருச்சபையின் பெரும் பங்கு பற்றியும், அதன் நீட்சியாக இன்றும் உலகில் நிலவும் கருப்பினத்தவருக்கு எதிரான இனவெறி அமைப்புகளைப் பற்றியும் வாடிகன் நேர்மையாகப் பேச வேண்டும் என்று கருப்பின கத்தோலிக்கர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்றும் வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

சுற்றறிக்கை வெளியீட்டு நிகழ்வில் உலகின் முன்னணி செய்யறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic)-ன் இணை நிறுவனர் கிறிஸ் ஓலா பங்கேற்றதும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

வாடிகனின் பாரம்பரிய வழக்கப்படி, திருத்தந்தையின் சுற்றறிக்கைகளைக் கத்தோலிக்க கர்தினால்களும் இறையியலாளர்களும் மட்டுமே உலகிற்கு அறிமுகப்படுத்துவார்கள். ஆனால், இப்போது 33 வயதேயான, கடவுள் நம்பிக்கை இல்லாத, ஒரு சிலிக்கான் வேலி தொழில்நுட்ப விஞ்ஞானியைத் தனக்கு அருகில் அமரவைத்து இந்த ஆவணத்தைத் திருத்தந்தை வெளியிட்டிருக்கிறார்.

செய்யறிவை உருவாக்கும் முன்னணி ஆய்வகங்களுக்கும், உலகளாவிய தார்மிக அமைப்பான கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையே ஒரு கூட்டு உத்தியை உருவாக்க இந்தச் சந்திப்பு வழிவகுத்துள்ளது எனலாம். செய்யறிவுத் தொழில்நுட்பம் என்பது வெறும் கணினியியலாளர்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல; இது தத்துவம், மதம், மனிதநேயம் சார்ந்தது என்ற திருத்தந்தையின் கருத்தைக் கிறிஸ் ஓலாவின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய கிறிஸ் ஓலாவும்கூட, ஆந்த்ரோபிக் உள்ளிட்ட அனைத்து முன்னணி செய்யறிவு நிறுவனங்களும் கடுமையான வணிகப் போட்டி, புவிசார் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பெருமிதங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இயங்குவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, வணிக இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டவராகவே பேசினார்.

இலாப நோக்கமில்லாத, இந்த அழுத்தங்களுக்கு எல்லாம் உள்படாத திருச்சபை போன்ற அமைப்புகள் வெளியிலிருந்து எங்களைக் கூர்ந்து கவனித்து, நாங்கள் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் நேர்மையான விமர்சகராகச் செயல்பட வேண்டும். பண பலத்தால் வளைக்க முடியாத அறத்தின் - தார்மிகக் குரல்கள் இந்தத் துறைக்குத் தேவை.

தற்போது செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பொருளாதார பலன்கள் அனைத்தும் ஒருசில பணக்கார நாடுகளின் கைகளிலேயே குவிந்துள்ளன. இது உலகளாவிய சமமின்மையை அதிகரிக்கும் என்றும், எதிர்காலத்தில் கோடிக்கணக்கான எளிய மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என்றும் கவலை தெரிவித்த கிறிஸ் ஓலா, இந்த இலாப விநியோகப் பிரச்சினைக்குத் தொழில்நுட்ப உலகில் தீர்வு இல்லை என்றும், ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வரலாற்றுப் பின்னணி கொண்ட திருச்சபையால் மட்டுமே உலக நாடுகள் இவற்றில் கவனம் கொள்ளச் செய்ய முடியும் என்றும் கூறினார்.

ஒரு விஞ்ஞானியாகத் தான் செய்யறிவு மாதிரிகளின் உள் கட்டமைப்பை ஆராய்வதாகக் குறிப்பிட்ட ஓலா, அவற்றை உருவாக்குபவர்களுக்கே சில நேரங்களில் அது மர்மமாகவும், அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது. சுற்றறிக்கையில் திருத்தந்தை குறிப்பிட்டிருப்பது போல, செய்யறிவு என்பது மனித மூளையைப் போன்ற கட்டமைப்பில் மனித சொற்களைக் கொண்டு வளர்க்கப்படுகிறது. எனவே, அதன் போக்கை நல்வழிப்படுத்த ஆன்மிக மற்றும் தார்மிக வழிகாட்டுதல் அவசியம்.

ஆந்த்ரோபிக் நிறுவனம், தற்போது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தோடு செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் தார்மிகக் கட்டுப்பாடுகள் மற்றும் இராணுவப் பயன்பாடு குறித்துப் பெரிய சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய சூழலில், தானியங்கி ஆயுதங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திருத்தந்தையுடன் கிறிஸ் ஓலா கைகோத்திருப்பது செய்யறிவு பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது.

இதைத் தொழில்நுட்ப உலகமும் ஆன்மிக உலகமும் தனித்தனி பாதைகளில் செல்லாமல், மனிதகுலத்தின் எதிர்கால நன்மையைக் கருதி இணைந்து செல்ல வேண்டியதன் தேவையைக் குறிக்கிற ஒரு தொடக்கமெனலாம்.

இதுவரையிலான கத்தோலிக்க திருச்சபையின் முந்தைய அதிஉயர் தலைவர்களிடமிருந்து தற்போதைய திருத்தந்தை 14 ஆம் லியோ பல்வேறு வகையிலும் வேறுபடுகிறார்.

இதுவரை இருந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய அல்லது லத்தீன் அமெரிக்க மரபுகளைச் சேர்ந்தவர்களாகவும், ஆன்மிக, பாரம்பரியக் கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். ஆனால், இவரோ கத்தோலிக்க வரலாற்றில் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட, ஆப்பிரிக்க மற்றும் பூர்வகுடி வம்சாவளியை – கருப்பினத்தைச் சேர்ந்த முதல் திருத்தந்தை இவர்.

காலனித்துவம், அடிமை முறை மற்றும் இனவெறியின் வடுக்களைத் தன் குடும்பப் பின்னணி வழி நேரடியாக உணர்ந்தவர். இதன் காரணமாகவே, வாடிகனின் முந்தைய காலனித்துவகாலப் பிழைகளை மற்றவர்களைவிட இவரால் மிகவும் துணிச்சலாகவும் ஆழமாகவும் ஒப்புக்கொள்ள முடிந்தது.

முந்தைய போப்களான இரண்டாம் ஜான் பால் அல்லது போப் பிரான்சிஸ் ஆகியோர் திருச்சபையின் கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பெரும்பாலும் "திருச்சபையைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களின் பாவங்களுக்காகவே" மன்னிப்பு கோரினர்.

ஆனால், இவர் தனி நபர்களைக் குற்றம் சாட்டாமல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாடிகன் தலைமைப் பீடம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆணைகளே அடிமை முறைக்கு ஆன்மிக அங்கீகாரத்தை வழங்கின என்ற கசப்பான உண்மையை நேரடியாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நிறுவனத்தின் கட்டமைப்பில் இருந்த தவறை ஏற்றுக்கொண்டதே இவரது முதன்மையான வேறுபாடு.

பொதுவாக வறுமை, போர், காலநிலை மாற்றம் போன்ற பாரம்பரியச் சமூகப் பிரச்சினைகளில் மட்டுமே இதுவரையிலானவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால் இவர், தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்பச் சிந்திக்கிறார்; செயல்படுகிறார்.

இந்தச் செய்யறிவு யுகத்தில் தனது முதல் சுற்றறிக்கையில் முழுமையாகச் செய்யறிவு மற்றும் மனிதநேயம் பற்றியே எழுதியிருக்கிறார்.

வாடிகன் வரலாற்றில் முதன்முறையாக, கடவுள் நம்பிக்கை இல்லாத மற்றும் சிலிக்கான் வேலியின் முன்னணி செய்யறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic)-கின் இணை நிறுவனர் கிறிஸ் ஓலாவை வாடிகனுக்கு அழைத்து, தனக்கு இணையாக அமர வைத்து தனது கொள்கை விளக்க ஆவணத்தை வெளியிட்டதன் மூலம் ஆன்மிகத்தையும் அதிநவீன தொழில்நுட்ப அறிவியலையும் இணைத்திருக்கிறார்.

முந்தையவர்கள் கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களை ஆன்மிகக் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகினர். ஆனால், இவரோ கடந்த காலத்தைக் கழுவித் தூரப் போட்டுவிட்டு, வரலாற்றை நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் இணைக்கிறார்.

கடந்த கால அட்லாண்டிக் அடிமை வணிகத்திற்காக மன்னிப்புக் கேட்டபோதே, இன்றைய எண்ம உலகில் பெருநிறுவனங்கள் தரவுத் திருட்டு மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கம் மூலம் ஏழை நாடுகளைச் சுரண்டுவதை எண்ம அடிமைமுறை என்றும் எச்சரிக்கிறார்.

பொதுவாகச் சொன்னால், பாரம்பரிய வாடிகன் சடங்குகள் மற்றும் ஆடம்பரங்களை விடுத்து, எளிய மக்களின் திருத்தந்தையாக, கத்தோலிக்கர்கள் அல்லாத பிற மதத்தினரையும், ஏன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும்கூட மனிதநேயத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் உலகளாவிய தலைவராகச் செயல்பட முனைகிறார்.

நடந்து முடிந்தவற்றை, கடந்த காலத்தின் வரலாற்றை இனி யாராலும் மாற்றி எழுதிவிட முடியாது. ஆனால், வரலாற்றுத் தவறுகளை நேர்மையுடன், அதுவும் அதிஉயர் பொறுப்புகளில் இருப்போர் ஒப்புக்கொள்வதும் அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு சமுதாயச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதும் நாளைய உலக சமுதாயத்தை ஆன்ம சுத்தியுடன் மாற்றியமைப்பதில் பெரும் பங்காற்றும்.

அமெரிக்காவில் பிறந்த இவர், ஆப்பிரிக்க மற்றும் பூர்வகுடி மக்களின் காயங்களை, வலிகளை, வடுக்களை நன்கு உணர்ந்தவர். எனவேதான், கடந்த காலத் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

அதன் பின்னரே, அதன் தொடர்ச்சியாகவே விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய செய்யறிவுக் காலத்தில் நவீன அடிமைத்தனத்தைப் பற்றி எச்சரிக்கிறார். எதிர்வரும் காலத்தில் இவ்வாறாக மன்னிப்புக் கேட்கும் நிலை வந்துவிடக் கூடாது என்று விழிப்பூட்டுகிறார். அதுவும் செய்யறிவுத் துறையின் உயர்நிலையிலுள்ள ஒருவரையும் அழைத்து வைத்துக்கொண்டு, வாடிகனிலிருந்து திருத்தந்தை 14 ஆம் லியோ விடுத்திருப்பது உள்ளபடியே மகத்தான மனிதநேயத்துக்கான அழைப்புதான். காலம் வழி நடத்தட்டும்.

- எம்.பாண்டியராஜன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.