(மானுடம் இன்று அடைந்திருக்கும் சிந்தனை, தொழில்நுட்ப வளர்ச்சியானது ஆண்களால் மட்டும் சாதிக்கப்பட்டதல்ல. சரிபாதியான பெண்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு. அறிவுத்துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் ‘ஹைபேஷா’வின் வாழ்க்கை)
ஹைபேஷா - தத்துவ வானில் மின்னும் தாரகை
வரலாறு நெடுகிலும் வீராங்கனைகளாக, கவிஞர்களாக, கலை வித்தகர்களாக, சேவை செய்பவர்களாக, அழகிகளாக வாழ்ந்த பல பெண்களை நம்மால் காணமுடியும். ஆனால், பல்துறை அறிவோடு தத்துவம் என்னும் அறிவாயுதத்தோடு வாழ்ந்து வரலாற்றில் என்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் தாரகைகள் வெகு சிலரே.
அப்படியிருக்கையில், 'தான் வாழ்ந்த காலத்தில் தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தனது சமகால அறிஞர்கள் அனைவரையும்விட தலைசிறந்தவராக இருந்தார் ஹைபேஷா' என்ற 'பெண்' என்று 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் சாக்ரடீஸ் ஸ்கோலாஸ்டிகஸ் குறிப்பிடுவதைக் காணும்போது வியப்படையாமல் இருக்க முடியாது.
பண்டைய எகிப்து நாட்டின் புகழ்பெற்ற நகரமான அலெக்ஸாண்ட்ரியாவின் கிரேக்க தத்துவப் பள்ளியின் தலைவர்; தான் வாழ்ந்த காலத்தின் தலைசிறந்த கணித அறிஞர்; கிரேக்க பகுத்தறிவு பாரம்பரியத்தின் கடைசி வாரிசு; வானியல் அறிஞர்; பாய்ம பொருள்களின் (fluids) ஒப்பீட்டு அடர்த்தியை கண்டறியும் 'ஹைட்ரோமீட்டர்’ மற்றும் நட்சத்திரங்களின் நிலையை அறிய உதவும் ‘ஆஸ்ட்ரோலாப்’ ஆகிய கருவிகளை கண்டுபிடித்த விஞ்ஞானி; யூக்ளிட், டாலமி, டையோஃபாந்தஸ், அப்போலோனியஸ் ஆகிய கணித மேதைகளின் நூல்களை ஆராய்ந்து, சீர்த்திருத்தி விளக்க உரைகள் எழுதி உலகறிய செய்தவர்; பல தத்துவ, அறிவியல், கணித நூல்களை எழுதி தானே ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என பல சிறப்புகளுக்குரியவரான ஹைபேஷாக்கு இணையான பெண்கள் வரலாறில் எவருமிலர்.
'ஹைபேஷா (Hypatia)’ பிறந்த ஆண்டு துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் கி.பி.350க்கும் கி.பி.370க்கும் இடையில் என்பது உறுதி. தத்துவ அறிஞரான தனது தந்தை தியோனால் கல்வியூட்டப்பட்டு, பின்னர் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கல்விகற்று அலெக்ஸாண்டிரியா திரும்பினார் ஹைபேஷா. ‘மியூஸியம்’ என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் மற்றும் நூலகம் இணைந்த கல்விச்சாலையில் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர்களின் தத்துவத்தைக் கற்பித்தும் கணிதவியல் ஆராய்ச்சிகளை செய்தும் வந்தார் ஹைபேஷா. அவரது அறிவாற்றலைக் கேள்வியுற்று, அவரிடம் பயில்வதற்காக உலகெங்கிலிருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர் மாணவர்கள்.
புதுமைப் பெண்ணான ஹைபேஷா, அன்றைய பெண்கள் வழக்கமாக அணியும் ஆடையை அணிபவரல்ல. மாறாக அன்றைய அறிஞர்கள், ஆசிரியர்கள் அணியும் ஆடைகளையே அணிந்தார். ஆண் தேரோட்டித் துணையின்றி தன்னுடையத் தேரை தனியாக ஓட்டிக்கொண்டு நகரெங்கும் வலம் வருவார். மேலும் அன்றைய அலெக்ஸாண்டிரியா நகரின் அரசியல் செல்வாக்கு மிகுந்தவராக மக்களால் மதிக்கப்பட்டார்.
தத்துவ ஆய்வோடு கணிதவியலில் அவர் ஆற்றியப் பங்கு அளவிடற்கரியது. புரியாத வகையில் இருந்த யூக்ளிட் எழுதிய ‘எலிமெண்ட்ஸ்’, டாலமியின் ’அல்மாஜெஸ்ட்’ போன்ற பண்டைய கணித நூல்கள் பலவற்றை ஆராய்ந்து, எளிமைப்படுத்தி விரிவுரைகள் எழுதினார். ஐரோப்பிய வரலாறின் இருண்ட காலத்தில் மறைந்த ஹைபேஷாவின் கணித நூல்கள் 8ஆம் நூற்றாண்டில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி காலத்தில் ஹைபேஷா இறந்து எண்ணூறு ஆண்டுகளுக்குப்பின் லத்தீன் மொழியில் வெளியானது. இந்த நூல்களே பிற்காலத்தில் நியூட்டன், லீப்னிட்ஸ், டெக்கார்டே போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படியாக இருந்தன. ஹைபேஷா உலகைவிட்டு மறைந்து 15 நூற்றாண்டுகள் ஆனபின்னும் நவீன அறிவியலுக்கு பங்களித்துக் கொண்டிருக்கிறார்.
21ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் சம உரிமை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும்போது, மேலே சொல்லப்பட்ட அவ்வளவு சிறப்புகளுடன் 4ஆம் நூற்றண்டில் ஒரு பெண் வாழ்ந்தால் ஆணாதிக்க சமூகம் அவளை விட்டுவைத்திருக்குமா? அல்லது மதபீடங்கள் தான் சும்மா இருந்திருக்குமா?
வரலாறிலே கி.பி. நான்காம் நூற்றாண்டு என்பது கொந்தளிப்பு மிகுந்ததாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட ரோமானிய பேரரசில் மத குருக்களின் செல்வாக்கு அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்திருந்தது. பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டு மத நம்பிக்கையே எங்கும் பரப்பப்பட்டது, பெண்களின் நிலை தாழ்ந்தது. கிறிஸ்தவரல்லாத வேற்று மதத்தினரும் அறிஞர்களும் கொடுமைப்படுத்தப்பட்டனர்,அவர்களின் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. எதிர்ப்பவர்கள் வேட்டையாடப்பட்டனர்.
எனினும் அப்போது எகிப்தின் ஆளுநராக இருந்தவர் ஒரிஸ்டஸ் என்னும் கிறிஸ்தவரல்லாதவர், ஹைபேஷாவின் நண்பராக இருந்தார். கி.பி.412ல் பிஷப் ஸைரில் என்பவன் அலெக்ஸாண்டிரியாவின் தலைமை கிறிஸ்தவ மதகுருவாக நியமிக்கப்பட்டான். அறிவாராய்ச்சியும், தத்துவமும், மத சகிப்புத்தன்மையும் மிகுந்திருந்த அந்த நகரை மதவெறியில் மூழ்கடிக்க ஆரம்பித்தான் அவன். ஸைரிலின் சதியால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரிஸ்டஸ் கிறிஸ்தவ துறவிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அப்படியும் ஸைரில்லின் வெறி அடங்கவில்லை. ஹைபேஷா என்னும் பெண் அங்கு செல்வாக்கோடு வலம் வருவது மதவாதிகளுக்கு பிடிக்கவில்லை.
கி.பி.415ல் அலெக்ஸாண்டிரியா நகரில் தனது வழக்கமானப் பணிகளை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ஹைபேஷாவின் தேர் வழிமறிக்கப்பட்டது. பீட்டர் என்னும் மதகுருவின் தலைமையில் வந்த கிறிஸ்தவ மதவெறிக்கூட்டம் ஹைபேஷ்யாவை கீழே இழுத்துப் போட்டது. வீதிகளில் தரதரவென அவரை இழுத்துச் சென்றனர். சீசேரியம் என்னும் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் கொண்டுச்சென்று ஹைபேஷாவின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினர். ஹைபேஷா கதற கதற சிப்பிகளாலும் ஓடுகளாலும் அவரது உடலைக்கீறி சதையைப் பிய்த்தெறிந்தனர். குற்றுயிராக கிடந்த ஹைபேஷாவின் கைகால்கள் துண்டிக்கப்பட்டு சினாரன் என்னும் இடத்தில் வைத்து எரிக்கப்பட்டது.
மதவெறியின் கொலைவெறிக்கு பலியானார் ஹைபேஷா. அப்போது வைக்கப்பட்ட தீ ஹைபேஷாவின் உடலுக்கு மட்டுமல்ல அறிவுக்கும்தான். ஆம், ஹைபேஷாவின் மறைவுக்குப்பிறகு ஐரோப்பிய கண்டத்தைச் சூழ்ந்த இருள் விலகுவதற்கு மேலும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. ஈவு இரக்கமற்ற மதவெறியர்களால் ஹைபேஷாவின் உடலைத்தான் அழிக்க முடிந்தது. ஆனால், அவரின் புகழ் அறிவுலகம் உள்ளவரை வாழும்.
- பிரபு