தொடர்புடைய படைப்புகள்

தோழர் தியாகு பேட்டி (சென்ற இதழ் தொடர்ச்சி)

கண. குறிஞ்சி: சிறையில் இருந்த பொழுதே நீங்கள் மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்தீர்கள். அச்சமயத்தில் அக்கட்சியில் உங்களோடு பயணித்தவர்கள் குறித்துத் தெரிவிக்க முடியுமா?

தோழர். தியாகு: கல்லூரிப் படிப்பின் இறுதிக் காலத்தில் (1969) காங்கிரஸை விட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு முன் இரண்டு வாய்ப்புகளே இருந்தன:

thiyagu 322ஒன்று, சிபிஎம், அக்கட்சியைச் சேர்ந்த தோழர்கள் நடராஜன், ஸ்டாலின் போன்றவர்களுடன் நெருக்கமாக இருந்தேன். மற்றொன்று, சிபிஐ(எம்-எல்), அக்கட்சியோடு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் (இப்போதும் நான் என் ஆசானாக மதிக்கின்ற மருதமுத்து) அதன் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியச் சமூகப் பகுப்பாய்வு, இந்திய அரசின் வர்க்க இயல்பு (வர்க்கத் தன்மை), சோவியத்-சீன வேறுபாடுகள், மா சே-துங் சிந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்தும் அவர் சிபிஎம் தோழர்களோடு விவாதம் செய்வார். குடந்தை காந்தி பூங்காவில் அவர்களுக்குள் நடக்கும் விவாதங்களை நானும் இன்னும் சில ஆர்வங்கொண்ட நண்பர்களும் அருகிலமர்ந்து கவனித்து வருவோம். அவர் வழியாக நான் மா சே-துங் சிந்தனைகளோடு அறிமுகம் பெற்றேன். சிறிய சிவப்புப் புத்தகத்தை எப்போதும் புரட்டிக் கொண்டே இருப்போம். இலங்கையிலிருந்து தோழர் சண்முகதாசன் சீனம் சென்று தலைவரைப் பார்த்து விட்டு வந்து ‘மாவோ சிந்தனைகள்” சிறுநூலைத் தமிழில் வெளியிட்டுச் சென்றார்.

இராதா ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் அவருக்கும் என் கல்லூரிப் படிப்புக்கும் தொடர்பில்லை. அவர் எங்கள் கல்லூரிக்கு வரும் போது என் ஆங்கிலப் பாடமெல்லாம் முடிந்திருந்தது. முதன்மைப் பாடம் பூதியல் (இயற்பியல்) மட்டும்தான் எனக்கு எஞ்சியிருந்தது. அதில் எனக்கு ஆர்வம் துளியும் இல்லை. அதிலும் 1969 ஜூன் கல்லூரித் திறப்பிலிருந்து செப்டம்பர் தேர்வு வரை வருகைப் பதிவு மட்டும்தான். இளம் அறிவியல் நான்காம் ஆண்டு! என் நேரம் முழுவதும் இராதாவுடன் செலவிட்டேன். அவர் வீட்டிலேயே பெரும்பாலும் தங்கி விடுவேன். நாங்கள் சேர்ந்து படிப்போம். நவம்பர் புரட்சி நாள் போன்ற முதன்மையான நாட்களில் சுவரொட்டி, துண்டறிக்கை வெளியிடுவோம். மாவோ எழுதிய ஹூனான் அறிக்கையைப் படித்து ஆர்வமுற்றோம். அதனைத் தமிழாக்கம் செய்யத் தீர்மானித்தோம். நான் செய்த முதல் அரசியல் மொழியாக்கம் அதுவே. எனக்கு மொழிபெயர்ப்பு நன்றாக வருவதாய்ச் சொல்லி இராதா எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

எம்-எல் கட்சியிடம் எனக்கிருந்த கூடுதல் ஈர்ப்புக்குக் காரணம் உடனே ஆயுதப் போராட்டம் என்ற அரசியல் வழி. கோட்பாட்டு விவாதங்கள் ஒருபுறமிருக்க, வங்காளத்திலும், ஆந்திரத்தில், குறிப்பாகச் சிறிகாகுளத்திலும் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருப்பதாக நம்பினோம். ஆங்கிலத்தில் லிபரேஷன் தவிர கோவையிலிருந்து புதிய தலைமுறை வந்து கொண்டிருந்தது. நாங்களும் புதிய உலகம் என்ற திங்களேடு தொடங்குவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அசுரன் வழியாகக் கட்சித் தொடர்பு கிடைத்து தோழர் ஏ. எம். கோதண்டராமன் எங்களைப் பார்க்க வந்தார். என்னை உடனே இயக்கப் பணிக்குச் செல்லப் பணித்தார். அவர் சொன்னபடி நான் பெரும்பண்ணையூர் சேரிக்குப் போய் விட்டேன்.

அப்போதே ஒரு மார்க்சிஸ்டுக் கட்சித் தலைவரோடு எனக்கு அறிமுகம் இருந்தது. அவர் அப்போது தமிழ் மாநிலக் குழுவின் செயலாளராக இருந்த தோழர் ஏ. பாலசுப்ரமணியம், சுருக்கமாக ஏபி. தஞ்சையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த விரைவுப் பேருந்து கடலூரில் சிறிது நேரம் நின்ற போது தஞ்சை அ. இராமமூர்த்தி அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சென்னை சென்றடையும் வரை அவரோடு பேசிக் கொண்டே பயணம் செய்தேன். மாணவர் காங்கிரசில் இருந்து கொண்டு இந்தியப் புரட்சியின் பாதை பற்றிய ஐயப்பாடுகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரும் பொறுமையாக விடையிறுத்தார். உருசியாவில் கட்சி படை அமைத்தது. சீனத்தில் படைதான் கட்சி அமைத்தது. இரண்டுமே நமக்கு முழுக்கப் பொருந்தாது என்று விளக்கினார். [அவரோடு அந்த முதல் சந்திப்பில் நடந்த கருத்தியல் உரையாடலைப் பிற்காலத்தில் தீக்கதிர் ஏபி நினைவுமலரில் ‘சந்திப்புகள் நான்குதான்’ கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.]

அதன் பிறகு சிறை செல்லும் காலம் வரை எனக்கு ஏபியுடன் தொடர்பில்லை. மா-லெ இயக்கத்தில் பொதுவாகச் சிபிஎம் தலைவர்களையெல்லாம் மோசமாகக் காட்டுவார்கள். நானும் அதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தேன். 1969-70 இல் கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் பெரும்பண்ணையூர் சேரியில் நான் வாழ்ந்த போது ஐ. மாயாண்டி பாரதி பற்றி மட்டும் நல்லவிதமாகப் பேசுவார்கள். கூட்டத்துக்கு வந்தால் அப்படியே போய் விடாமல் ஒரு நாளாவது தங்கி அனைவரோடும் உண்டு உறவாடி குழந்தைகளுக்குக் கதை சொல்லி அவர்களோடு விளையாடிக் களித்து விட்டுச் செல்வாராம். தோழர் பாலு சொல்வார்.

அப்போதே தோழர் ஏஜிகே (கஸ்தூரி ரெங்கன்) பற்றி நல்ல செய்திகள் வந்து கொண்டிருந்தன. அவர் வழக்கமான சிபிஎம் அல்ல என்றும், அவரோடு தொடர்பு கொண்டு நம் இயக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் பேசிக் கொண்டார்கள். அந்தணப்பேட்டை முக்கொலை வழக்கில் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். அவரைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினர் கூத்தப்பார் போன்ற சில இடங்களில் சேரி மக்களை அடித்துத் துன்புறுத்தியதும், மக்கள் திருப்பியடித்ததுமான செய்திகள் வந்த போது நாங்கள் மகிழ்ந்து போனோம். அவர்களைக் கைது செய்து திருவாரூர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்த போது நாங்கள் இரவோடிரவாகக் கையால் எழுதிய வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டினோம்.

நாங்களும் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையின் மரண தண்டனைக் கூடத்தில் அடைக்கப்பட்ட போதுதான் ஏஜிகேயுடன் நேர் அறிமுகம் பெற்றோம். அவரைப் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப்பட்டிருந்ததால் எளிதில் நெருங்கி விட்டோம். அழித்தொழிப்பு என்ற ஒரே போராட்ட வடிவம் (annihilation only form) மீது எனக்கிருந்த நம்பிக்கையை அவர் எப்படிப் பொறுமையாக உடைத்தார் என்பதைச் சுவருக்குள் சித்திரங்களில் விளக்கியுள்ளேன். லெனின் தேர்வு நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏஜிகேயிடமிருந்துதான் பெற்றுக் கொண்டேன். அவர் தூக்குக் கைதிகள் உட்பட ஏனைய கைதிகளுக்கு நீதிமன்ற மேல்முறையீடுகள் உட்பட விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பார். அந்தக் கலையை அவரிடமிருந்து கற்றுக் கொண்டு நானும் செய்யலானேன்.

அந்த நேரம் தோழர் ஏஜிகே சிபிஎம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததாக அறிந்தோம். ஆனால் தோழர் அனந்த நம்பியார் அவ்வப்போது நேர்காணலுக்கு வந்து போவார் – தூக்குத் தண்டனை குறைப்பு முயற்சி தொடர்பான செய்திகளைச் சொல்லிச் செல்வார். தோழர் ஏபி அடிக்கடி அஞ்சலட்டை எழுதுவார். நாங்கள் சேர்ந்திருப்பதை அறிந்து நலம் வினவி எழுதுவார்.

1970 அக்டோபரில் தோழர் எல். அப்புவைத் தமிழ்நாடு காவல்துறை க்யூ பிரிவு பிடித்துப் போய் காணாமலடித்த செய்தி அறிந்து தோழர் ஏஜிகே பெரிதும் வருந்தினார். இந்தச் செய்தியை அம்பலமாக்க நாங்கள் கூட்டாகத் திட்டமிட்டோம். அடுத்து எங்கள் வழக்கு மீளுசாவலுக்காக (retrial) நாகை நீதிமன்றத்தில் எங்களைக் கூண்டில் நிறுத்த இருந்தனர். அந்தக் கூண்டில் நின்றபடி அப்புவைப் பற்றிப் பாடுவது, கண்டனக் கூட்டம் நடத்துவது என்றெல்லாம் திட்டமிட்டோம். சட்டப்படி அப்புவை நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஒரு தொடர் நாடகமாக நடத்தத் திட்டமிட்டுக் காட்சிகளை ஏஜிகே எழுதித்தர ஒப்புக்கொண்டார். (கட்டுரை, கதை, நாடகம், பாட்டு என்று எந்த வடிவத்திலும் எழுதும் அவரது ஆற்றல் கண்டு வியந்தோம்.)

எங்களில் தோழர் லெனின் நீதிபதியாகவும், குருமூர்த்தி வழக்குரைஞராகவும் நடிக்க வேண்டும். அடியேன் அப்பு! பிரதமர் பிரியதர்சினி, முதல்வர் முத்துவீரப்பண்டாரம், ஐஜி சுருள்... இந்தச் சாட்சிகள் சொல்லும் சாட்சியங்களின் மீது நீதிமன்றத்தில் நடக்கும் விவாதம்தான் நாடகம். இந்த வரிசையில் சிபிஎம் தலைவர் இராமமூர்த்தியையும் சாமமூர்த்தி என்ற பெயரில் சாட்சியாகக் குறித்து வைத்திருந்தேன். ஏஜிகே அதை மட்டும் எழுத மாட்டேன் என்று சொல்லி விட்டார். எனக்குத் தெரிந்த வரை நானே எழுதிக் கொண்டேன்.

பிற்காலத்தில் எம்-எல் தோழர்களிடையே கருத்தியல் வேறுபாடுகள் மூண்டு சிறைக்குள் உட்கட்சிப் போராட்டம் வெடித்த போது ஐயந்தெளிய ஏஜிகே பேருதவியாகத் திகழ்ந்தார். நான் எழுதிய கட்டுரைகளை அனுப்பினால் திருத்தங்கள் சொல்வார். நாங்கள் எம்-எல் கட்சித் திட்டம் மீது அறவே நம்பிக்கை இழப்பதற்கும், சிபிஎம் குறித்துப் பரிவான பார்வை கொள்வதற்கும் முதன்மைச் செயலூக்கியாகத் தோழர் ஏஜிகே அவர்களைத்தான் சொல்வேன். இது வெறும் கருத்து சார்ந்த உரையாடலாக இல்லாமல் சிறைப்படுத்தப்பட்டோர் இயக்கத்தில் செயல் சார்ந்த ஓர்மையாகவும் அமைந்ததையே எங்கள் உறவின் உயிர்த்துடிப்பாகக் கருதுகிறேன். சிறைக்குள் இயக்கம் கட்டுவது, இரகசியக் கையேடு நடத்துவது எல்லாம் அவரிடம் கற்றவையே!

சிறைப் போராட்டங்களின் விளைவாகத் தோழர் ஏஜிகே பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டு விட்டார். நாங்கள் – ஐந்து தோழர்கள் மட்டும் – இப்போது சோசலிச ஐக்கியக் கல்விக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு எங்கள் அரசியல் கல்வியைத் தொடர்ந்தோம். மற்றக் கைதிகளிடையே அரசியல்-கருத்தியல் கல்வி பரவச் செய்வதற்காகப் பாட்டாளித் தத்துவம் என்ற இரகசியக் கையேட்டை நடத்தத் தொடங்கினோம். சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கப் பணிகளைத் தொடர்வதற்காகத் தோழர் ஏஜிகே நடத்திய உரிமைக் குரலின் இடத்தில் தோழர் லெனினை ஆசிரியராகக் கொண்டு சுதந்திர தாகம் என்ற இரகசியக் கையேட்டையும் நடத்தினோம்.

எம்-எல் கட்சியின் போராட்ட உத்திகள் மட்டுமல்ல, அதன் அடிப்படைத் திட்டமே பிழையானது (“அடித்தளம் இல்லாமல் கட்டிய அழகு மாளிகை”) என்ற முடிவுக்கு வந்த பின் சிபிஎம் கட்சித் திட்டமே அடிப்படையில் சரியானது என்ற முடிவுக்கு வந்தோம். இந்த முடிவுக்கு வர நெருக்கடிநிலைக் காலம் என்ற பகைப்புலம் முக்கியப் பங்கு வகித்தது. நாடு ஒரு கட்சிச் சர்வாதிகாரம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகச் சிபிஎம் 1972 பேராயம் கூறியது எங்களைப் பெரிதும் ஈர்த்தது.

சிபிஎம்மில் சேரும் முடிவை நான் தோழர் ஏபிக்கு எழுதினேன். அவர் மகிழ்ந்து வரவேற்று எழுதியதோடு நேரிலும் பார்க்க வந்து விட்டார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டில் 1976 ஜனவரி கடைசியில் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை அவ்வளவாகக் கெடுபிடி இல்லை. அந்த நேரம் ஏபியும் அனந்த நம்பியாரும் நேர்காண வந்திருந்தனர். நானும் தோழர் லெனினும் சிறையில் தனியாக வைக்கப்பட்டிருந்த பழைய கண்டத்துக்கே அவர்களை அழைத்துவந்தனர். அப்போது மூலதனம் தமிழாக்கப் பணியைத் தொடங்கியிருந்தேன். நான் சொல்லச் சொல்ல லெனின் எழுதுவது வழக்கம். எழுதுவதற்கான வசதிகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும்படி ஏபி எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

1977 செப்டம்பரில் ஒரு சிறைப் போராட்டத்துக்குப் பின் என்னை மதுரைச் சிறைக்கு மாற்றினர். உடனே தோழர் ஏபி நேர்காண வந்து தோழர் சுந்தரையாவின் தெலங்கானா பற்றிய நூலைக் கொடுத்துச் சென்றார். என்னையும் தோழர் லெனினையும் தோழர் ஏஜிகே-யையும் தனித்தனியாக வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றிக் கொண்டிருந்தனர். எங்களோடு தோழர் ஏபியும் அவர் சார்பில் தோழர் அப்துல் வகாப் அவர்களும் தொடர்பு வைத்திருந்தனர். தேர்தல் போராட்டம் தொடர்பாகக் கோவைச் சிறைக்குள்ளிருந்து சமரன் ஆசிரியர் தோழர் ஏ. எம். கோதண்டராமன் அவர்களுக்கும், மாஸ்லைன் ஆசிரியருக்கும் நான் எழுதிய கடிதங்களைக் கட்சியின் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். அவற்றைத் தொகுத்து 'நக்சலைட்டுகளுக்கு ஒரு சிறைப் பறவையின் வேண்டுகோள்' என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீடாகக் கொண்டுவருவது என்று முடிவு செய்து, தோழர் ஏபி அதைச் சொல்வதற்காகச் சென்னைச் சிறையில் என்னை நேர்கண்டார். அப்போது தோழர் தமிழரசன் உள்ளிட்ட தோழர்களும் என்னோடு இருந்தனர். அவர்களைப் பற்றி அக்கறையோடு விசாரித்தறிந்தவர், அசாம் போராட்டம் பற்றி அனைவரின் பார்வையும் எப்படி என்றும் தெரிந்து கொள்ள விரும்பினார். தோழர் ஏபி 1981 செப்டம்பரில் மறைந்தார்.

ஏபி மறைவுக்குப் பிறகு எங்களுடன் சிபிஎம் சார்பில் தொடர்பில் இருந்தவர்கள் தோழர் உமாநாத், பாப்பா உமாநாத், டி. கே. ரங்கராஜன், கே. வரதராஜன் இன்னும் பலர். சிறைப் போராட்டங்களில் இயக்கம் எங்களுக்குத் துணை நின்றது.

தோழர் ஏபிக்குப் பிறகு அரசியல்-கருத்தியல் உரையாடல் நிகழ்த்தக் கூடியவராக வாய்த்தவர் தோழர் ஏ. நல்லசிவன் (ஏஎன்). ஈழச் சிக்கல், மொழிச் சிக்கல், தேசிய இனச் சிக்கல் ஒவ்வொன்றிலும் சிபிஎம் நிலைப்பாடுகளோடு நான் கடுமையாக முரண்பட்டு நின்ற போது, என்னோடு பொறுமையாக விவாதித்து, விருப்பு வெறுப்பின்றிக் கட்சிக்குள் ஜனநாயகம் காத்தவர் தோழர் ஏஎன். மாற்றுக் கருத்துடையவர்களைப் போட்டிக் குழுக்களாகக் கருதி ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அவர்களை ஒதுக்கித் தனிமைப்படுத்தும் போக்கை எந்நிலையிலும் நான் அவரிடம் கண்டதில்லை.

ஏபி, ஏஎன் போல் தமிழ்நாடு சிபிஎம் கட்சியில் இப்போது யாராவது இருக்கிறார்களா? யானறியேன். ஒருசில தோழர்கள் (தலைவர்கள்) இப்போதும் என்னுடன் நட்பாக இருக்கின்றார்கள். ஆனால் யாருடனும் அரசியல்-கருத்தியல் உரையாடல் என்பதில்லை. ஒருகையால் ஓசை எழுப்ப முடியாது அல்லவா?

ஈழம், இ.டபிள்யூ.எஸ். என்று ஒவ்வோர் உயிர்ச் சிக்கலிலும் சிபிஎம் எடுத்த நிலைப்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல என்பதே என் பார்வை.

தமிழ் ஈழச் சிக்கல் குறித்துக் கருத்து வேறுபாடு கொண்டு, மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து நீங்கள் வெளிவந்த பிறகு, உங்களது "திலீபன் மன்றம்" குறித்த செயல்பாடுகள் யாவை? அம்முயற்சி எப்படி முடிவுற்றது?

தமிழ் ஈழச் சிக்கல் தொடர்பான வேறுபாடு நான் சிறையில் இருந்த போதே தொடங்கி விட்டது. 1983 ஜூலைப் படுகொலையைக் கண்டித்து மதுரைச் சிறையில் தோழர்கள் சிங்கள ஜெயவர்த்தனா கொடும்பாவி எரித்தார்கள். திருச்சிராப்பள்ளியில் நாங்கள் அமைதி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்தினோம். இறுதியில் தமிழீழப் போராட்டம் குறித்து நான் பேசினேன். தோழர் லெனினும் நானும் தலைமை ஏற்றுத் தமிழ்நாடு தழுவிய சிறைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அதில் முதல் கோரிக்கை ஈழத்துக்கு உதவும் தமிழ்நாட்டின் உரிமை தொடர்பானது. இதைக் கட்சி அவ்வளவாக விரும்பவில்லை.

1985 கடைசியில் விடுதலையானோம். ஆவடி அம்பத்தூர் பகுதிக் குழுவில் உறுப்பினனாகப் பணியாற்றினேன். 1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்துக் கட்சிக்குள் மிகத் தீவிரமாகப் போராடினேன். சென்னையில் சந்துரு, அரி பரந்தாமன், விஜயகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர் கிளையும் போராடியது. கட்சியின் மாவட்ட மாநாட்டில் நானும் விஜயகுமாரும் கலந்து கொண்டு இந்திய அமைதிப் படைக்கு எதிராகப் பேசினோம். உமாநாத்தும் மீனாட்சிசுந்தரமும் எனக்கு விரிவாக மறுப்புச் சொன்னார்கள். நான் திமுக போல் பேசுவதாக அவர்கள் சொன்ன போது ”நீங்கள் சோ, சுப்பிரமணியசாமி போல் பேசுகின்றீர்கள்” என்று விடையிறுத்தேன்.

1988-89 இல் கட்சியில் பகுதிக் குழு உறுப்பினனாக இருக்க மறுத்து ஒரு கிளையில் எளிய உறுப்பினனாக மட்டும் இருந்தேன். ஆவடி அம்பத்தூர் பகுதியில் மட்டும் கூட்டங்கள் பேசுவேன். அம்பத்தூரில் பிஆர், விபிசி போன்ற தலைவர்கள் பேச வந்தால் என்னை முதலில் பேசச் சொல்லி விட்டுப் பிறகு பேசுவார்கள்.

தோழர் ரா. கிருஷ்ணையாவுடன் என்சிபிஎச் தலைமையகத்தில் அமர்ந்து மூலதனம் தமிழாக்கத்தைச் சீர் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். அத்துடன் வீரத் தெலங்கானா தமிழாக்கத்தை ராசகிளி அச்சகத்தில் அச்சேற்றி சாளரம் சார்பில் வெளியிடுவதிலும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தேன். தோழர் வைகறைவாணன் எடுத்த அந்த முயற்சியில் ஈரோஸ் சார்பில் தோழர் பாலகுமாரன் எங்களுக்கு உதவியாக இருந்தார். நானும் வைகறையும் விஜயவாடா சென்று சிபிஎம் அலுவலகத்திலிருந்து படங்கள் சேகரித்து வந்தோம்.

வீரத் தெலங்கானா வெளிவந்த பின் மதுரையில் அதற்கான அறிமுகக் கூட்டத்தில் பேசச் சென்றேன். அந்தக் கூட்டத்திற்கு இயக்கத் தோழர்கள் போகக் கூடாது என்று கடைசி நேரத்தில் தலைமையிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

சிபிஎம் கட்சியோடு அவசர முரண்பாடு ஈழச் சிக்கல் தொடர்பானது என்பதாலும், அப்போது இந்திய அமைதிப்படை ஈழ மக்கள் மீது போர் தொடுத்து நின்றதாலும், ஈழப் போராட்டத்தின் ஈகச் சின்னமாகக் கொண்டு திலீபன் பெயரில் மன்றம் அமைக்கத் தீர்மானித்தேன். 1990 செப்டம்பர் 15 ஆம் நாள் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் அறிமுகக் கூட்டம் நடத்தினோம். 'ஈழத் தமிழர் துயர் துடைக்க இயன்றதைச் செய்வோம் வாருங்கள்' என்பது செயல் முழக்கம். தமிழீழ விடுதலை வரலாற்றுத் தேவை! ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கை ஈழத் தமிழர் நலனுக்குப் பகை! தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! என்பவை மூன்று நிலைப்பாடுகள். தமிழ்நாட்டில் முதன்மையான ஈழ ஆதரவாளர்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் இரண்டு மணி நேரம் பேசினேன்.

உடனே நான் சிபிஎம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன். தீக்கதிரில் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டார்கள். செப்டம்பர் 26 ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு அரங்கில் திலீபன் மன்றம் தொடங்கப்பட்டது. திலீபன் மன்றம் தனித்தும் ஏனைய ஈழ ஆதரவு அமைப்புகளோடு சேர்ந்தும் பல நிகழ்ச்சிகள் முன்னெடுத்தது. குறிப்புப் பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான அன்னையர் முன்னணியுடன் சேர்ந்து யாழ் கோட்டை வெற்றி விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்திப் படங்களும் வெளியிட்டோம்.

திலீபன் மன்றத்தின் சார்பில் நான் முன்மொழிந்த அடிப்படையில்தான் திரு. பழ. நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. 1991 க்குப் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுக் காலம் கடுமையான நெருக்கடிக்கு நடுவில் வேலை செய்ய நேரிட்ட போது இந்த ஒருங்கிணைப்புக் குழுதான் தொடர்ந்து உறுதியாக வழிகாட்டி வந்தது.

ராஜீவ் கொலைக்குப் பிறகு வந்த திலீபன் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தக் காவல்துறை அனுமதி மறுத்த போது திலீபன் மன்றம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டோம். இந்த வழக்கை வழக்கறிஞர் தோழர் சந்துரு நடத்தி வெற்றி தேடித் தந்தார். நீதிபதி இராமலிங்கம் வழங்கிய கருத்துரிமைக்கு ஆதரவான தீர்ப்பை ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகமாக வெளியிட்டோம். இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் கூட்டத்துக்கு அனுமதி மறுக்க மாநகரக் காவல்துறை செய்த முயற்சியை முறியடித்தோம்.

மீண்டும் பகத்சிங் நாள் நடத்தக் காவல்துறை அனுமதி மறுத்த போது மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் வழக்காடி வெற்றி தேடித் தந்தார். ஆனால் காவல்துறை என்னைத் தவிர வேறு யாருக்கும் பேச அனுமதியில்லை என்று சொல்லி விட்டதால் நான் மட்டுமே அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகே ஒரு டயர் வண்டியை மேடையாக்கி நான்கு மணி நேரம் உரை நிகழ்த்தினேன்.

ஈழத்தமிழர் துயர் தணிக்க என்று திலீபன் மன்றம் வரம்பிட்டு நின்றாலும், ஏனைய தமிழ்த் தேசிய அமைப்புகளோடு பொதுச் சிக்கல்களில் இணைந்து நிற்பது தவிர்க்கவியலாததாயிற்று. அந்த வகையில் அடக்குமுறைச் சட்ட எதிர்ப்புக் கூட்டியக்கத்தில் பாமக, இந்திய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலைக் குயில்கள் போன்ற அமைப்புகளோடு சேர்ந்து நின்றோம். சென்னையில் பாமக முன்முயற்சியில் கூடிய தமிழக வாழ்வுரிமை மாநாட்டில் திலீபன் மன்றம் சார்பில் நான் கலந்து கொண்டு பேசினேன்.

சென்னைக்கு வெளியே கோவை, மதுரை, நெல்லை, திருத்துறைப்பூண்டி போன்ற வேறு சில ஊர்களிலும் மன்றக் கிளைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் நாம் வாழும் சமுதாயத்துக்கென்று திட்டம் இல்லாமல் ஈழத்துக்காக மட்டும் இயக்கம் நடத்துவது எளிதன்று எனக் கற்றுக் கொண்டோம். ஒருகட்டத்தில் பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி, திலீபன் மன்றம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து தமிழ்த்தேசத் தன்னுரிமை முன்னணி அமைத்தோம். தோழர் சுப. வீரபாண்டியன் தலைமையிலான விடுதலைக் குயில்கள் இந்த முன்னணியில் சேராமலே ஆதரவு தெரிவித்தது. சேரவில்லை என்பதற்குச் சொன்ன காரணம் மற்ற அமைப்புகளில் பார்ப்பனர் உறுப்பினராகத் தடையில்லை என்பதே. தமிழ்த்தேசத் தன்னுரிமை முன்னணி சார்பில் தஞ்சாவூரில் காவிரி உரிமைக்கான மறியல் போராட்டம் செய்தோம். அதனை திக தலைவர் மானமிகு கி. வீரமணி தொடங்கி வைத்தார். தமிழ்நாடெங்கும் பல ஊர்களில் தன்னுரிமை முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டங்களில் நெடுமாறன், மணியரசன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

1993-94 இல் வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் சந்தித்த நாள் முதல் அவருக்கும் எனக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. ஈழ ஆதரவு நிலைப்பாட்டுக்கும் இதில் முக்கியப் பங்கிருந்தது. திமுக தலைமை அவருக்குக் கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது. வைகோவின் தம்பி வை. ரவிச்சந்திரன் பத்மநாபா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்குச் சட்ட உதவி கிடைக்கச் செய்வதில் வைகோவுக்கு உதவியாக இருந்தேன். அதே போது திமுகவின் அதே அரசியலை அடியொற்றி நடப்பதன் மூலம் மறுமலர்ச்சி திமுக மற்றுமொரு திமுக ஆவதாகக் குறைகூறினேன்.

சுப. வீ. அவர்களுடன் இணைந்து தமிழ்தமிழர் இயக்கத்தை உருவாக்கிச் செயல்பட்டீர்கள். அந்த முயற்சியின் இறுதி விளைவு என்ன?

சுபவீ தலைமையிலான விடுதலைக் குயில்களுடன் திலீபன் மன்றத்துக்கு நல்ல நெருக்கம் இருந்தது. அடிப்படையான கொள்கை வேறுபாடு எதுவுமில்லை. ஒரே அமைப்பாக இணைந்து செயல்படலாம் என்ற எண்ணம் முகிழ்த்தது. வைகோ திமுகவிலிருந்து வெளியேறிய பின் சுபவீயுடன் இருந்த முக்கியத் தோழர்கள் அறிவுமதி, விஜயகுமார், விடுதலை, திருமாவேலன் உள்ளிட்ட தோழர்களும், நெய்வேலித் தோழர்களும் வைகோவுடன் சேர்ந்து விட விரும்பினார்கள். ஆனால் சுபவீக்கு அதில் உடன்பாடில்லை. “எனக்கு நல்ல திமுக இருந்தால் போதும், ஆனால் வைகோவின் கட்சியை நல்ல திமுகவாக என்னால் ஏற்க முடியவில்லை” என்றார். பார்ப்பனர்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளலாமா? என்பது ஒன்றுதான் அப்போதைக்கு அவருக்குப் பெரிய சிக்கலாகப் பட்டது. சுபவீயுடன் இருந்த தோழர்கள் பெரும்பாலும் நாங்கள் இணைந்து செயல்படுவதை விரும்பினார்கள். கோவை விஜயகுமார் உள்ளிட்ட ஒருசில தோழர்களுக்கு மட்டும் அவ்வளவாக விருப்பமில்லை. ஆனால் தேவேந்திரன் இணைப்பில் உறுதியாக இருந்தார். ஈரோட்டில் வேலிறையனும் தெளிவாக நின்றார். போத்தனூர் தோழர்களும் அவ்வாறே. இப்படித்தான் 1993 ஜனவரி முதல் நாள் தமிழ்தமிழர் இயக்கம் பிறந்தது. ஆனால் வைகோ பக்கம் செல்ல விரும்பிய முக்கியத் தோழர்கள் போய் விட்டார்கள். இனி குழு அப்படியே போர்வாள் குழு ஆயிற்று.

தொடர்ந்து சில ஆண்டுகள் தமிழ்தமிழர் இயக்கம் முனைப்புடன் இயங்கியது. இடைக்காலத்தில் ”தன்னுரிமையா? தேசிய விடுதலையா?” என்ற விவாதத்தை நான் தொடங்கி வைத்தேன். தமிழ்த் தேசம் இதழில் தொடர்ந்து எழுதினேன். சுபவீ ஆதரித்தோ எதிர்த்தோ எழுதவில்லை. எனக்குத் தொடர்ந்து தமிழர் கண்ணோட்டத்தில் மறுப்புக் கட்டுரைகள் எழுதியவர் ததேபொக தோழர் கி. வெங்கட்ராமன். இந்த விவாதத்தைத் தோழர்கள் ஆர்வத்துடன் படித்துக் கற்றார்கள். இந்த விவாதத்தில் முடிவெடுப்பதற்காக அம்பத்தூர் பொதுப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தினோம். ஒரு வாக்கு வேறுபாட்டில் தன்னுரிமை வென்று தேசிய விடுதலை தோற்றது. நான் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தேன். சுபவீ நந்தன் ஆசிரியர் பொறுப்புக்காக இயக்கத் தலைமையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். தமிழ்த் தேசத்தில் தொடர்ந்து விவாதக் கட்டுரைகள் எழுதுவேன் என்ற நிபந்தனையோடு நான் பொதுச் செயலாளர் பொறுப்பில் நீடிக்க ஒப்புக் கொண்டேன். மதுரைத் தோழர் வேலுச்சாமி தலைவராகவும் தோழர் தேவேந்திரன் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர்.

இதற்கிடையில் “தன்னுரிமையா? தேசிய விடுதலையா?” விவாதத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒன்றிணைப்பது என்ற முன்முயற்சியைத் ததேபொக மேற்கொண்டது. தமிழர் தேசிய இயக்கம் சார்பில் பழ. நெடுமாறன், ததேபொக சார்பில் மணியரசன், வெங்கட்ராமன், இராசேந்திர சோழன், தமிழ்தமிழர் இயக்கம் சார்பில் நான், சுபவீ, வேலிறையன், கருப்பையா அனைவரும் கோயம்பேட்டில் திரு சௌந்தர்ராசன் இடத்தில் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நெடுமாறன் தலைமையில் அனைவரும் ஒரே அமைப்பாக இணைவது சுபவீயின் முன்மொழிவு. மற்ற விவாதங்களில் அவருக்கு அக்கறை இல்லை. நெடுமாறன் ”யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கட்டும், ஆனால் வெளியிலிருக்கும் ஏராளமான அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி விட்டார். என்ன கொள்கை? என்ன குறிக்கோள்? என்ன தேர்தல் நிலைப்பாடு? என்ன வேலைத்திட்டம்? இந்த விவாதம் எங்களுக்கும் மணியரசன் மற்றத் தோழர்களுக்கும் நடுவில்தான்! தன்னுரிமைக் குறிக்கோளைக் கைவிட்டு, தமிழ்த் தேச இறைமை என்ற குறிக்கோளை வரித்துக் கொள்ள அவர்கள் உடன்பட்டார்கள். எங்களுக்குள் நடந்த இந்த விவாதம்தான் பிற்காலத்தில் தமிழ்த் தேசிய முன்னணி அமைப்பதற்கு உதவியது. முன்னணியின் கொள்கை அறிக்கையை நானும் வெங்கட்ராமனும்தான் வரைந்தோம்.

அப்போதைக்குக் கோயம்பேடு கூடுகை எந்த முடிவும் எடுக்காமல் கலைந்து விட்டது. அடுத்த சிறிது காலத்திற்குள் தமிழ்தமிழர் இயக்கத்தின் பொதுக் குழு திருச்சிராப்பள்ளியில் கூடி தன்னுரிமை (எதிர்) - தேசிய விடுதலைத் தீர்மானம் குறித்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தினோம். ஒரு வாக்கு வேறுபாட்டில் தேசிய விடுதலை வென்றது. அடுத்த சில நாளில் சுபவீ தமிழ்தமிழர் இயக்கத்திலிருந்து வெளியேறினார். விரைவில் நெடுமாறன் தலைமையிலான அமைப்பில் இணைந்தார். சிறிது காலம் கழித்து - அனைவருக்கும் தெரிந்ததே – திராவிட இயக்கத் தமிழர் பேரவை கண்டார், இன்றளவும் அதன் பொதுச் செயலாளராக விளங்கி வருகின்றார். திராவிடம், தமிழ்த்தேசியம் குறித்து எங்களுக்கிடையே நடைபெற்ற விவாதங்கள் அக்கறையுள்ள அனைவர் கவனத்தையும் ஈர்த்திருக்கும்.

எங்கள் அடுத்த பேராயம் பொள்ளாச்சியில் கூடிய போது தமிழ்தமிழர் இயக்கம் என்ற பெயரைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் என்று மாற்றிக் கொண்டோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழர் தன்மானப் பேரவை, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து தமிழ்த்தேசிய முன்னணி அமைத்தோம். அதன் அமைப்பு மாநாட்டை மதுரையில் முன்னின்று நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுச் செய்தேன். முன்னணி அமைப்பாளராகத் தோழர் மணியரசனும், அமைப்புக் குழு உறுப்பினர்களாகத் தோழர்கள் வெங்கட்ராமன், இராசோ, ஏஜிகே, காமராஜ், தியாகு, கருப்பையா, பொழிலன், பாவேந்தன் ஆகியோரும் செயல்பட்டோம்.

தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் காவிரிச் சிக்கல் மீது கல்லணை முதல் நெய்வேலி வரை நடைப் பயணமாகச் சென்று அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராடினோம். தமிழ்நாட்டில் மார்வாரி-குஜராத்தி சேட்டு சுரண்டல்-ஆதிக்கத்தை எதிர்த்துச் சற்றொப்ப 50 கூட்டங்கள் நடத்தினோம். முன்னணி தொடர்ந்து செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமைப்புகளுக்கிடையிலும் ஒவ்வோர் அமைப்புக்குள்ளும் தலையெடுத்த குறுங்குழுவியப் போக்குகள் ஒருபக்கமும், தாராளியப் போக்குகள் மறுபக்கமும் சேர்ந்து கொள்ள முன்னணி வாடி உதிர்ந்து விட்டது – நல்ல புத்திக் கொள்முதல்!

உங்களது நீண்ட அரசியல் பயணத்திற்குப் பிறகு இறுதியாகத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு வந்தடைந்துள்ளீர்கள். இன்றைக்கு அதன் பொருத்தப்பாடு என்ன? தமிழ்த்தேசியத்தின் மெய்யியல் அடிப்படை என்ன?

மா-லெ கட்சிக்குள் திருச்சி மத்திய சிறையில் நடந்த உள்கட்சிப் போராட்டத்தின் போதே நான் என்னையறியாமல் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். 1973 ஜூலை முதல் நாள் சீனப் பொதுமைக் கட்சியின் ஆண்டு விழாவைப் பழைய கண்டம் தூக்குக் கொட்டடியில் கொண்டாடினோம். அன்றுதான் நான் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தேன். புரட்சிப் பாதையில் இந்தியாவுக்குமான சீனாவுக்குமான ஒற்றுமை-வேற்றுமைகளைப் பட்டியலிட்ட போது, சீனத்தில் பெரும்பாலும் ஒரே மொழி பேசப்படுகிறது, இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது புரட்சிக்குத் தடையாக உள்ளது என்று வாதிட்டேன். சீனத்தில் போலவே இந்தியாவிலும் நீண்ட பயணம் நடக்கும் என்ற சாரு மஜும்தாரின் கருத்தை மறுத்தேன். ஆந்திரத்து சிறிகாகுளத்திலிருந்து வங்காளத்துப் பீர்பூம் வரை படை நடத்துவோம் என்று அவர் நம்புவது நிறைவேறாது, ஏனென்றால் ஆந்திர எல்லையில் உள்ள வரங்கலைத் தாண்டிச் செல்ல முடியாது, மொழி வேறுபாட்டைக் கடக்க முடியாது என்றேன்.

மொழி, புரட்சிக்குத் தடை என்ற கருத்தை ஆழ்ந்து அலசிய போது மொழிதான் தேசமாக மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைக் கருவியாகிறது என்ற புரிதலுக்கு மெல்ல வந்தடைந்தேன். பொதுமை அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சுமே இதற்கு வழிகாட்டுவதைத் தெரிந்து கொண்டேன். லெனின் எழுதிய “தேசங்களின் சுயநிர்ணய உரிமை (தன்-தீர்வுரிமை)” பற்றிய நூலைத் திரும்பத் திரும்ப வாசித்து, அதன் மீது மா-லெ, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்குள் நான் நடத்திய விவாதங்கள் எனக்குத் தெளிவைத் தந்தன.

'பெரியாரும் தமிழ்த் தேசியமும்' என்ற தலைப்பிலான என் உரையின் ஒரு பகுதியை மறுத்துத் தோழர் பெ. மணியரசன் எழுதிய நூலுக்கு மறுமொழியாக நான் எழுதிய ‘தேசியத்தின் உரையாடல்’ நூலில் இப்பொருள் குறித்து என் விளக்கத்தைத் தெளிவாக முன்வைத்துள்ளேன். பொதுவாகத் தேசியத்துக்கும், குறிப்பாகத் தமிழ்த் தேசியத்துக்கும் என் கோட்பாட்டுப் பங்களிப்பாக இந்நூலைக் கருதலாம்.

தமிழ்த் தேசியத்துக்கு மட்டுமல்ல, அனைத்து வகை முற்போக்குக் கருத்தியலுக்கும் மெய்யியல் அடிப்படை என்பது வரலாற்று இயங்கியல் உள்ளிட்ட பொருண்மிய இயங்கியல்தான். இந்த மெய்யியலை முரணற்றுச் சுடர்விடச் செய்வது மார்கசிய ஒளிவிளக்கமே. மாந்தக்குல முன்னேற்றத்துக்கு இயக்குவிசைகளான அனைத்துக் கோட்பாடுகளும் மொழிந்தோ மொழியாமலோ இயங்கியல் பழகுகின்றன. திருவள்ளுவர் முதல் பெரியார் வரை, புத்தர் முதல் அம்பேத்கர் வரை வரலாற்று வழியில் இயங்கியலையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

குமுகியத்துக்கான போராட்டம் குடியாட்சியக் கட்டத்தைக் கடந்து சென்றாக வேண்டும் – சுருக்கமாகவோ, விரிவாகவோ! [குமுகியம் = சோசலிசம், குடியாட்சியம் = ஜனநாயகம்.] ஒடுக்குண்ட மக்களின் தேசியம் என்பதும் குடியாட்சியத்தின் ஒரு வடிவம்தான். தேசிய விடுதலை என்பதும் சமூகநீதி என்பதும் குடியாட்சியத்தின் செயலாக்கங்களே. உடைத்துச் சொன்னால் தமிழ்நாடு விடுதலை பெறாமல் தமிழ்க் குடியாட்சியம் நிறைவு பெறாது. தமிழ்க் குடியாட்சியத்தின் நிறைவு என்பதன் மறுபக்கம்தான் சாதி ஒழிப்புக்கு அடிப்படையான சமூகநீதி. சீனப் புரட்சி ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி என்றால், தமிழ்நாட்டுப் புரட்சி என்பது தேசிய சமூகநீதிப் புரட்சியாகும். எனவேதான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூலவுத்தி முழக்கம்: தமிழர் விடுதலைப் போர் முழக்கம்! சமூகநீதித் தமிழ்த் தேசம்!

தமிழீழ விடுதலைப் புலிகள், சாதி குறித்தும், பெண் விடுதலை குறித்தும் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று ஒரு சிலர் பரப்புரை செய்து வருகின்றனர். இது குறித்து உங்கள் பார்வை?

தேசிய விடுதலைப் புரட்சி என்பது பகை நஞ்சை அழிக்கும் போதே நமக்குள்ளான நஞ்சையும் அழிக்கக் கூடியது. தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொண்ட 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் சோசலிசத் தமிழீழக் குடியரசு அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளைத் தமிழீழ மக்களின் முன் நிறுத்திற்று. எது எப்படியானாலும் ஆயுதப் போராட்ட வழியில் சிங்களப் பேரினவாத அரசிடமிருந்து விடுதலை பெறுவதே உடனடிக் குறிக்கோளாக இருந்தது. அன்றைய புறச் சூழல் நீண்ட அரசியல் போராட்டப் பட்டறிவுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

வரலாற்று நோக்கில் சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லரசியமும் அமெரிக்க வல்லரசியமும் ஆகிய ஒடுக்குமுறை அச்சு ஈழத் தமிழர்களை அடிமைப்படுத்தி வைக்கும் சூழ்ச்சியைச் செயலாக்கி வந்த நிலையில் விடுதலை அரசியலைக் கட்டி வளர்ப்பதில் பிரபாகரனின் தலைமை திறம்பட இயங்கியது. படைமுதல் கொள்கையில் மயங்காமல் அரசியலை ஆணை செலுத்த வைப்பதிலும், அடிப்படைப் போராட்ட ஆற்றலாகிய மக்கள் திரளைச் சார்ந்து நிற்பதிலும் புலிப் படையினர் உறுதி காத்தனர்.

இருப்பினும் ஒருசில படைமுதல் (இராணுவவாதப்) பிழைகள் நேரிடவே செய்தன என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சாதி மறுப்பிலும் பெண்ணுரிமையிலும் விடுதலைப் புலிகள் தெளிவாகவே நிலை எடுத்து நின்றார்கள். அது போர்க்களத்தின் தேவையாகவும் இருந்தது. இதில் தலைவர் பிரபாகரனின் முற்போக்கான சமூகப் பார்வைக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது என நம்புகிறேன். இதன் பொருள் விடுதலைப் போரின் போக்கில் பிரபாகரனின் தலைமை எடுத்த எந்த முடிவையும் குற்றாய்வு செய்யக் கூடாது என்பதில்லை.

பல பிழைகள் நேரிடத்தான் செய்தன. அவை குறித்துப் புறஞ்சார் ஆய்வு செய்வதை அவரே குற்றமாகக் கொள்ள மாட்டார்.

ஒவ்வொரு விடுதலைப் போருக்கும் மக்களின் பால் ஒரு பொறுப்புக் கூறல் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தன் வெற்றிகளைக் கொண்டு மட்டுமல்ல, தோல்விகளைக் கொண்டும் மக்களின் போராட்டப் பாதையைச் செப்பனிடும் வரலாற்றுப் பொறுப்பு ஒவ்வொரு விடுதலை இயக்கத்துக்கும் அதன் தலைமைக்கும் உண்டு. இந்த வகையில் தமிழினி அவர்கள் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நல்ல முயற்சி எனக் கருதுகிறேன். படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

முடிவாக, தமிழீழ விடுதலைப் புலிகள் சாதி குறித்தும், பெண் விடுதலை குறித்தும் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று ஒரு சிலர் செய்யும் பரப்புரை ஏற்கத்தக்கதன்று.

தேசியம் என்பதே கற்பிதம் எனும் பெனடிக்ட் ஆண்டர்சனின் கருத்தைச் சிலர் முன்நிறுத்துகின்றனர். அதற்கு உங்களது எதிர்வினை என்ன?

“கற்பித்துக் கொண்ட சமுதாயங்கள்” என்பது பெனடிக்ட் ஆண்டர்சன் எழுதிய நூல். அவர் தேசத்தை “கற்பித்துக் கொண்ட அரசியல் சமுதாயம்” என்று வர்ணித்தார். தொன்மைக் காலம் தொட்டு வந்த இயற்கை அடையாளங்களாக இல்லாமல், முதலாண்மை (முதலாளித்துவ) வளர்ச்சியாலும் பெருந்திரள் தொடர்பாடலின் வளர்ச்சியாலும் உந்தப்பட்டுச் சமூக வழியில் கட்டியமைக்கப்பட்ட புலப்பாடுகளே தேசங்கள் என்று அவர் வாதிட்டார்.

வரலாற்று வழியில் முதலாண்மை வளர்ச்சி, சந்தைத் தேவை இவற்றோடு இணைந்து தேசங்கள் மலர்வதைக் லெனினும் எடுத்துக் காட்டுகிறார். இந்தப் பார்வையில் சிக்கல் இல்லை. ஆனால் இந்த வளர்ச்சிப் போக்கில் மொழி, நிலம், பொருளியல் இணைவு ஆகியவற்றுக்குரிய பங்கினை மறுக்க முடியாது. தேசம் கற்பித்துக் கொள்ளப்பட்டதாகவே இருக்கட்டும், ஆனால் இந்த அகஞ்சார் கற்பித்தலுக்குப் புறஞ்சார் பகைப்புலம் இருக்க வேண்டுமல்லவா? மாந்தக் சமூகம் என்பது இயற்கையின் படைப்பாகவும், சமூகப் படைப்பாகவும் – இரண்டாகவும் – இருப்பது எப்படியோ அதே போலத்தான்.

மொழி இல்லாமல், மொழிவழித் தேசமும் தேசியமும் இல்லாமல் – இந்தக் கட்டத்தைக் கடக்காமல் – மாந்தக் குலம் வளர முடியுமா? முடியாது என்பதே வரலாறு கற்றுத்தரும் பாடம்.

எல்லா வகைக் கற்பிதங்களுக்கும் சமூக அடிப்படை இருந்தாக வேண்டும். தேசியம் கற்பிதமென்றால் அதற்கும் அவ்வாறான சமூக அடிப்படை இருந்தாக வேண்டும். வெறும் கற்பிதங்களைத் தவிர்த்து விட்டு வாழலாம். தேசியத்தை அப்படித்தவிர்த்து விட்டு வாழ முடியுமா? என்பதுதான் தீர்மானிக்கும் வினா. பொதுமைப் பன்னாட்டகத்தின் (கம்யூனிஸ்ட் அகிலத்தின்) கூட்டத்தில் மார்க்ஸ் செய்த எள்ளல்தான் நினைவுக்கு வருகிறது.

மார்க்ஸ் 1866 ஜூன் 20 ஆம் நாள் எங்கெல்சுக்கு எழுதிய மடலில் சொல்கிறார்: “நேற்று பன்னாட்டுப் பேரவையில் (அகிலம்) இப்போதைய போர் குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது.... ‘இளைய பிரான்சு’ பேராளர்கள் (தொழிலாளர் அல்லாதார்) எல்லாத் தேசிய இனங்களும், தேசங்களும் கூட ‘காலாவதியாகி விட்ட காழ்ப்புகளே’ என்று அறிவித்தார்கள்.... தேசிய இனங்களை இல்லாமற் செய்து விட்ட நம் நண்பர் லாஃபார்க்கும் மற்றவர்களும் நம்மிடம் ‘பிரெஞ்சு’ பேசினார்கள், அதாவது அவையில் பத்திலொரு பங்கினர்க்குப் புரியாத மொழியில் பேசினார்கள் என்று சொல்லி நான் என் உரையைத் தொடங்கிய போது ஆங்கிலேயர்கள் சிரித்து விட்டார்கள்....”

பெனடிக்ட் ஆண்டர்சனின் நூலை நான் இன்னும் படிக்கவில்லை. தேசியத்தை வெறும் கற்பிதம் என்று கற்பிக்கும் எவருக்கும் என் விடை பொருந்தும். அவரது நூலைப் படித்தால் இன்னும் சொல்லலாம்.

ஆர். எஸ். எஸ் வலியுறுத்தும் கலாச்சார தேசியம், ஒரு பாசிசமாக மாறியிருக்கிறது. அவ்வகையில் தமிழ்த்தேசியம் இதற்கு மாற்றாக இருக்க முடியுமா?

ஆர். எஸ். எஸ் இந்துத் தேசியம் அதனளவிலேயே பாசிசக் கோட்பாடுதான். பாசிசத்துக்கு எதிரானது குடியாட்சியம் (ஜனநாயகம்). தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கம் குடியாட்சியமே. தமிழ்நாட்டில் மூலவுத்தி வகையில் பாசிசத்தை முறியடிக்கும் வலிமை தமிழ்த் தேசியத்துக்கே உண்டு. ஆனால் தமிழ்த் தேசியத்தை வெறும் இனவாதமாகச் சுருக்குவோரும், சாதி காக்கும் குடித் தேசியமாகத் தாழ்த்துவோரும் தமிழ்த் தேசியத்தையே பாசிசமாகச் சீரழித்து விடும் இடர் உண்டு. எனவேதான் தமிழ்த் தேசியத்தை ஒடுக்குண்ட அனைவரையும் அரவணைக்கும் குடியாட்சியக் கொள்கையாக வளர்த்தெடுப்பதற்கு அழுத்தம் தர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இன்றைய புவிசார் அரசியலில் தேசிய விடுதலை இயக்கங்களை வல்லரசுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது ஒரு போக்காக உள்ளது. எடுத்துக்காட்டாக ஈரானுக்கு எதிராகப் போராடுமாறு அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், குர்திஷ் போராளிகளுக்கு அறிவுறுத்தியதை இத்துடன் இணைத்துக் காண முடியும். இது குறித்த உங்களது கண்ணோட்டம்?

ஜார்ஜ் புஷ் இதையே ஈராக்கில் செய்தார். தேசிய விடுதலை இயக்கங்களை வல்லரசுகள் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சி கடந்த காலத்திலும் இடம்பெற்றது. இதன் பொருள் ஒடுக்குண்ட தேசங்கள் விடுதலைக்குப் போராடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதன்று. முற்போக்கான ஒவ்வொரு தேசியமும் பன்னாட்டுத் தேசியத்தையும் (சர்வதேசியம்) போற்றி நிற்க வேண்டும். அரசுகளின் ஐநா போலவே கருத்தியல் நோக்கில் அரசுகளற்ற தேசங்களின் ஐநா ஒன்றும் தேவை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போல் அனைத்துலக அரசில்லாத் தேசங்களின் நாடுகடந்த அமைப்புகளை உருவாக்க இப்போதுள்ள இணைய வசதிகளைப் பயன்படுத்த முடியும். தொடர்ச்சியான உரையாடல் செய்யலாம்.

இன்றைய புவிசார் அரசியல் மெய்ம்மை என்பது ஒருதுருவ உலகக் கட்டுமானம் கலைந்து போய் பலதுருவ உலகமாக மாறிவருவதாகும். இஃது அரசில்லாத் தேசங்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுவதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான இப்போதைய உலக ஒழுங்கு புதிய தேசங்கள் முகிழ்ப்பதற்கு எதிராக இயங்குகிறது. அதையும் மீறித்தான் சற்றொப்ப 150 புதிய தேசங்கள் மலர்ந்துள்ளன. பழைய உலக ஒழுங்கு சாகப் படுக்கையில் இறுதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. புதிய உலக ஒழுங்கின் பிறப்பு வலிகளைக் கண்டு வருகிறோம்.

தேசிய இனப்பிரச்சனை குறித்த மார்க்ஸ் / லெனின் / ஸ்டாலின் / மாவோ ஆகியோரின் அணுகுமுறைகள் குறித்து விரிவாகத் தொகுத்துக் கூறவும்.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் பொதுமை அறிக்கையிலேயே (Communist Manifesto) பாட்டாளிக்கும் தேசத்துமான உறவை வரையறுத்துச் சொல்லி விட்டார்கள் – பாட்டாளி வகுப்பு தன்னையே ஒரு தேசமாக ஒழுங்கமைத்துக் கொள்கிறது! அதனால் தான் முத்தாய்ப்பாக “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” (Workers of all lands, unite!) என்று முழக்கம் தந்தார்கள். இந்தச் சாரத்தையே கெடுத்து “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்று திரித்து விட்டனர்.

லெனின் “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே, ஒடுக்குண்ட மக்களினங்களே ஒன்றுபடுங்கள்!” என்று முழக்கம் தந்தார். பாட்டாளி வகுப்பு எல்லா வகையிலும் ஒடுக்குண்ட மக்களினங்களோடு ஒன்றுபட்டு நிற்பதே விடுதலைக்கு வழி! என்று பொருள்.

தேசிய இனச் சிக்கலுக்கு ஸ்டாலின் பங்களிப்பு என்பது ஒரு வகையில் லெனின் ஆற்றிய பணியின் தொடர்ச்சியே! ஆனால் இரண்டாம் உலகப் போரில் பாசிச எதிர்ப்பு ஒற்றுமையைக் கட்டி, பாசிசப் பேரிடரை வீழ்த்தியதில் ஸ்டாலின் பங்களிப்பு தனி மதிப்புக்குரியது.

சீனத்தைப் பொறுத்த வரை அனைத்தும் தழுவிய ஒற்றுமை முன்னணியைக் கட்டி ஜப்பானிய வன்பறிப்பை முறியடித்ததும் செஞ்சீன விடுதலையின் வழி உலகளாவிய தேசிய விடுதலைத் தளத்தைக் கட்டியதும் மாவோவின் மகத்தான பங்களிப்பு எனலாம்.

இத்தனையும் இருப்பினும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஊழியில் தேசிய விடுதலைக்கான புதிய போராட்ட ஆற்றல்களை இனங்கண்டு முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவதில் மாவோவின் பங்களிப்பு நிறைவளிக்கும் படியானதன்று. 1957 இல் குமுகிய நாடுகளின் ஆளும் 12 பொதுமைக் கட்சிகள் வெளியிட்ட சாற்றுரையும், 1960 இல் 81 பொதுமை மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டறிக்கையும் உலகளாவிய பொதுமை இயக்கத்தின் தலைமைப் போட்டிக்கே சான்றாக நிற்கின்றன. வெவ்வேறு விதமாக விளக்கப்பெற்ற புத்தூழி (New Epoch) என்ற கருத்தாக்கத்தின் பேரில் உலகின் பல நாடுகளிலும் விரைவான வெற்றி மயக்கம் வளர்ந்து பெரும் சேதம் உண்டாவதற்கு சோவியத்துக் கட்சி போலவே சீனப் பொதுமைக் கட்சியும் மாவோ தலைமையும் ஓரளவு பொறுப்பேற்கத்தான் வேண்டும். சான்றாக எம்-எல் கட்சியின் நம்பிக்கைகள் குறித்துக் கேள்வி எழுந்த போதெல்லாம் ”மாவோ எங்கள் வழியைத்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்” என்று எங்களை நாங்களே தேற்றிக் கொள்வது வழக்கமாய் இருந்தது.

தமிழ்த்தேச இறையாண்மைக்காகப் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோரது பங்களிப்பினைப் பதிவிடவும்.

புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகிய தோழர்கள் முதலில் இந்தியப் புரட்சியையும், பிறகு தமிழகப் புரட்சியையும் தீவிரமாக நேசித்தவர்கள். புரட்சிக்காக அரும்பெரும் ஈகம் செய்தவர்கள். எப்படியாவது ஆயுதப் புரட்சி நடந்து ஒடுக்குமுறையிலிருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற துடிப்பு அவர்களுக்குள் தீயாய் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் இதற்குத் தேவையான சமூக அறிவியல் கல்வியின் தேவையைத் தொடக்கத்தில் அவர்கள் உணரவில்லை. உணரத் தொடங்கிய போது பிரிந்து விட்டார்கள். ஈழப் போராட்டம் அவர்களுக்குப் பெரிதும் ஊக்கமூட்டியது.

நான் இருவரோடும் நீண்ட பல காலம் சிறையில் சேர்ந்து இருந்தவன். எம்-எல் கட்சியைக் குறைகூறி உடைத்து விட்டேன் என்ற வருத்தம் என் மீது புலவருக்குச் சிறை வாழ்க்கை முழுவதிலும் இருந்தது. வெளியில் வந்த பிறகு, குறிப்பாக இறுதி ஆண்டுகளில்தான் என்னிடம் நெருக்கமாக இருந்தார். நாங்கள் தமிழ்த் தேசியக் கருத்திலும் செயலிலும் தோழமை கொண்டோம்.

தோழர் தமிழரசன் என்னுடன் அவ்வளவு பெரிதாக விவாதம் செய்ய மாட்டார். ஆனால் சிறைப் போராட்டங்களில் நாங்கள் நெருங்கி நின்றோம்.

இந்திய அளவிலான ஆயுதப் போராட்டம் என்ற கானல்நீர் வேட்டையிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலை என்ற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்தவர்கள் என்ற முறையில் அவர்கள் இருவரும் மதிக்கத்தக்கவர்கள். அதே போது கூட்டாகவோ தனித்தனியாகவோ அவர்களின் தெளிவான மூலவுத்தியைக் குறிக்கும்படியான உரைகள் பேச்சாகவோ எழுத்தாகவோ எதுவும் இல்லை. வீரநாயக வழிபாடு அல்லாத வரலாற்றுச் செய்திகளும் புறஞ்சார்ந்து தொகுக்கப்படவில்லை. இந்நிலையில் இதற்கு மேல் எவ்விதத் திறனாய்வும் செய்ய இயலாதவனாய் உள்ளேன்.

பெரியாருக்கு எதிராகப் பிரபாகரன் / வ.உ.சி / பாரதி ஆகியோரை எதிர் நிறுத்துவதன் பின்னணி என்ன?

பெரியாருக்குப் பிரபாகரன் தன்னை எதிர்நிறுத்திக் கொள்ளவே இல்லை. இருவரையும் சேர்த்துப் போற்றுகிற எவரும் முன்னெப்போதும் அவர்களை எதிர்நிறுத்தியதும் இல்லை. அவர்களுக்கிடையில் வேறுபாடுகள் இருந்தால் வியப்பொன்றும் இல்லை. காலமும் களமும் வேறுபடும் போது, கருத்தும் வேறுபடத்தான் செய்யும். அந்த வேறுபாடுகளை எடுத்துக்காட்டி ஒப்பாய்வு செய்ய யார் வேண்டுமானாலும் முற்படலாம், தவறில்லை. ஆனால் இங்கு நடப்பது எந்தவித ஏரணத்துக்கும் அடங்காத வசைமாரி என்பதால் எடுபடவே எடுபடாது. சலிப்பும் வலிப்பும் கண்டவர்களுக்கு எம்மிடம் மருந்தில்லை.

வ.உ.சி. மட்டுமல்ல, திரு.வி.க, மறைமலை அடிகளார், பாவாணர், பாவலரேறு போன்ற பெரியோரும் கூட பெரியாரின் கருத்துகளை முழுமையாக ஏற்றவர்கள் அல்லர். அதனாலென்ன? அவர்களெல்லாம் பெரியாரைப் புழுதியில் வீசி விடவில்லையே? அவருக்குரிய மதிப்பை அளிக்கத்தானே செய்தார்கள்? வரலாற்றுப் பெருமக்களின் கருத்துகளையும் அவற்றிடையிலான முரண்பாடுகளையும் அலசி ஆராயலாம், தவறில்லை. ஆனால் அதன் வடிவம் குரைத்தல் அன்று.

பாரதி இந்தியத் தேசியத்தின் பாவலர் மட்டுமல்ல, இந்துத் தேசியத்தின் பாவலரும் ஆவார். நல்ல பல முற்போக்கான சுடர்த்தெறிப்புகள் இருப்பினும் இறுதி நோக்கில் அவரது பாக்கள் இன்று பார்ப்பனியத்துக்கே - இந்துத் தேசியத்துக்கே - பயன்படக்கூடியவை. எனவே அவர் பற்றிய மயக்கத்துக்கு எதிராகத் தமிழ்மக்களை எச்சரிக்க வேண்டிய கடமை பெரியாருக்கு இருந்தது. அறிஞர் அண்ணா இந்த வகையிலும் பெரியாருடன் வேறுபட்டு நின்றார். 'மக்கள் பாவலர் பாரதி' என்ற ஆங்கிலக் கட்டுரையைப் பெரியார் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த போதே அண்ணா எழுதி வெளியிட்டார். பெரியாருக்கு எதிராக பாரதியை நிறுத்தினால் நிறுத்தட்டும், காத்திரமான விவாதம் நடக்கட்டும்.

அடிக்கட்டுமானம் / மேற்கட்டுமானம் எனும் மார்கசியப் பகுப்பாய்வில், சாதியையும் அடிக்கட்டுமானமாகக் கருதமுடியும் எனும் கண்ணோட்டம் குறித்த உங்களது மதிப்பீடு?

அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்பவை சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதற்கான அருநிலைப் பகுப்புகள் (abstract divisions), அவ்வளவுதான். எந்தவொரு சமூக அமைப்புக்கும் அடித்தளமாக இருப்பது அதன் பொருளாக்க முறைசார் பொருளியலே. அறிந்தோ அறியாமலோ அந்தப் பொருளியலைக் காத்து நிற்கும் கருத்தியல் கூறுகளையே மேற்கட்டுமானங்கள் என்கிறோம். சாதி இந்த இரு தளங்களிலும் இயங்குகிறது என்பதே உண்மை.

மார்க்சும் எங்கெல்சும் 1845-46 இல் எழுதிய ஜெர்மானியக் கருத்தியல் என்ற நூலில் முதன்முதலாக சாதி பற்றிக் குறிப்பிட்டார்கள். சாதிக்கு அடிப்படை உழைப்புப் பிரிவினை என்றார்கள். உழைப்புப் பிரிவினை என்பது பொருளியல் அடிக்கட்டுமானத்தில் நிலவுவது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நியூயார்க் டெய்லி ட்ரிப்யூனில் (1853-61) எழுதிய கட்டுரைகள், மார்க்ஸ்-எங்கெல்ஸ் மடல்கள் (1852-62), பொருளியல் கைச்சுவடிகள் (1857-59), அரசியற்பொருளியல் குற்றாய்வுக்கு ஒரு பங்களிப்பு (1859), மூலமுதல் - இயல் ஒன்று (1867) என்று பல தருணங்களில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் சாதி பற்றி எழுதிய குறிப்புகள் உள்ளன. இவை அனைத்திலும் அவர்கள் சாதிக்கு அடிப்படையாக உழைப்புப் பிரிவினையைக் குறிப்பிடுவதால் சாதிக்கு அடிக்கட்டுமானத்தில் இடமளிக்கப்படுகிறது.

1853 இல் மார்க்ஸ் எழுதிய இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் எதிர்கால விளைவுகள் என்ற கட்டுரை இவ்வகையில் மிகவும் முக்கியமானது. அதே போது சாதியப் பண்பாடு பற்றிய பேச்சைத் தனித்துக் குறிப்பிடத் தேவையில்லை. அவ்வளவு ஏன்? சாதியானது பொருளியல் வாழ்வில் ஒரு சமூக வகுப்பாகத் தொழிற்படுவது நாமமே எந்தக் கோட்பாட்டுக் கண்ணாடியும் அணியாமலே காணும்படியான உண்மை. அகமண முறையில் ஒரு காரணியாக இடம்பெறும் போது அதன் முதன்மையான பண்பாட்டு வகிபாகம் துலக்கமாகிறது.

கார்ல் மார்க்சின் "ஆசிய உற்பத்தி முறை" என்பது குறித்துப் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அணுகுமுறைகள் வந்துள்ளன? அது பற்றிய உங்களது திறனாய்வு என்ன?

மார்க்சும் எங்கெல்சும் இதுவரைக்குமான மாந்தக் குல வரலாற்றை அடுத்தடுத்த பொருளாக்க (உற்பத்தி) முறைகளாகப் பிரித்து – தொல் பொதுமை, அடிமையுடைமை, கிழாரியம் (பிரபுத்துவம்), முதலாண்மை, அடுத்து வரவேண்டிய புதுமப் பொதுமை, அதன் முதல் கட்டமாகிய குமுகியம் (சோசலிசம்) என்று – வரிசைப்படுத்தினார்கள் என்பது மார்கசியர்களின் எளிய புரிதல். இவை சமூக வளர்ச்சியைக் கணிப்பதற்கான அளவைகளே தவிர, இவை அல்லாத வேறு பொருளாக்க முறைகளே இல்லை என்று பொருள் கொள்ளக் கூடாது. தொல் பொதுமைக்கும் அடிமைக் சமூகத்துக்கும் இடையில் தந்தைவழிச் சமூகம் போன்ற நீண்ட கட்டங்கள் நிலவி வந்ததை எங்கெல்ஸ் சுட்டியுள்ளார்.

இவ்வகையில் மையப்படுத்திய கொடுங்கோல் ஆட்சி, பாரிய நீர்ப்பாசன ஒழுங்கு, நிலத்தில் தனியுடைமை இன்மை, தன்னிறைவுக் கிராமங்கள், மாறாமல் நீடிக்கும் உழைப்புப் பிரிவினை, சந்தைப் பொருளியலும் எனவே சரக்காக்கமும் பெரும்பாலும் இல்லாத நிலை, சமூக வளர்ச்சித் தேக்கம் போன்ற காரணிகள் இணைந்த ஆசியவழிப் பொருளாக்கம் என்ற கருத்தை மார்க்ஸ் முன்வைத்தார். நிலத்தில் தனியுடைமை என்பது குறிப்பாக முகலாயர் ஆட்சிக் காலத்திலேயே வந்து விட்டது என்ற அடிப்படையில் இர்ஃபான் ஹபீப் போன்ற புகழ்பெற்ற மார்கசியர்கள் ஆசியவழிப் பொருளாக்கம் என்ற கருத்துடன் முரண்பட்டார்கள்.

பிளெக்கானவும், லெனினும் உருசியப் பொருளாக்க முறையில் ஆசியவழிப் பொருளாக்கக் கூறுகளை இனங்கண்டனர். ஆனால் லெனின் மறைந்த பின் ஸ்டாலின் வழிகாட்டுதலில் பன்னாட்டுப் பொதுமை இயக்கம் ஆசியவழிப் பொருளாக்கம் என்ற பார்வையை உதறிவிட்டு, மார்க்சின் செவ்வியல் வரிசைக்குத் திரும்பி விட்டது. வகுப்புக் குறுக்கிய அணுகுமுறைக்கும் இது பொருத்தமாக அமைந்து விட்டது.

இன்று வகுப்பல்லாத கூறுகள் (சாதி உள்ளிட்டவை) பொருளியல் அடித்தளத்திலேயே நிலவுவதை விளங்கிக் கொள்ள ஆசியவழிப் பொருளாக்கப் பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. மாறாமல் நீடிக்கும் உழைப்புப் பிரிவினை என்பது சாதியை விளங்கிக் கொள்ள உதவும். இது வெறும் உழைப்புப் பிரிவினை மட்டுமல்ல, உழைப்பாளர் பிரிவினையும் ஆகும் என்றார் அம்பேத்கர். சமூக அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் இரண்டிலும் சாதி தொழிற்படுவதற்கு ஆசியப் பொருளாக்க முறை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது.

ஆசியவழிப் பொருளாக்கம் என்ற கருத்தை மறுதலிப்பது லெனின் அடிக்கடி வலியுறுத்திய புரட்சிக் குடியாட்சியத்தின் (revolutionary democracy) மதிப்பைக் குறைப்பதற்கு வழிசெய்கிறது. குறிப்பாக நம் சூழலில் பெரியார்-அம்பேத்கர் பற்றிய அலட்சியம் அல்லது பார்வைக் குறைக்கு இட்டுச் செல்கிறது.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு நாடி வட மாநிலங்களிலிருந்து வகைதொகையின்றி எண்ணற்றோர் வந்து குவிகின்றனர். இதன் பாரதூரமான விளைவுகள் எப்படி இருக்கும்? இதற்கான மாற்று என்ன?

தமிழகத்தின் தேசியத் தன்மையைப் பாதுகாப்பதில் அதன் மக்கள்தொகை இயைபுக்கு (demographic composition) ஒரு பங்குண்டு. இந்த மக்கள்தொகை இயைபு சிதைக்கப்படுமானால் தமிழ் மக்கள் தமிழ்நாட்டிலேயே ஏதிலிகள் ஆகும் நிலை ஏற்படும். தமிழ்த் தேசிய ஓர்மை காக்கத் தமிழ்நாட்டுக்குக் குடியுரிமை கோர வேண்டும். இந்தியாவில் இருக்கும் வரை இரட்டைக் குடியுரிமை கூட இருக்கலாம். வெளியார் வருகையை முறையாக ஒழுங்குபடுத்திக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டைத் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கே ஒதுக்கீடு செய்யும் ஏற்பாட்டைக் கோரலாம். காஷ்மீரம் தொடர்பான அரசமைப்புச் சட்ட உறுப்பு 35A, வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் சில சிறப்புச் சட்டப்பிரிவுகள் நம் கவனத்துக்குரியவை. தமிழ்த் தேசிய சமூகநீதிக் கோரிக்கைகளுக்கான இயக்கங்களில் குடியேறிகளையும் இணைத்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும். குறுகிய இனவாதம் தவிர்க்கப்பட்டு, பாசிச எதிர்ப்பில் குடியாட்சியக் கோரிக்கைகளை வகுக்கும் போது தேசிய இனக் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட வேண்டும்.

உங்களது எழுத்தில் மேலோங்கி நிற்கும் தூய தமிழ் நடையைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது எனப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது குறித்த உங்கள் விளக்கம்?

மற்றத் தூய்மைகளைப் போலத்தான் மொழித் தூய்மையும். புதிய அறிவியல் செய்திகளைச் சொல்லும் போது மொழித்தூய்மைதான் துல்லியமான இலக்கணங்கள் வகுக்க உதவும். தனித்தமிழ் இயக்கம் என்பது தனித்து அமிழ் இயக்கம் அன்று என்பார் பேராசிரியர் இளவரசு. ஒரு செய்தியை விளங்கச் செய்திட வேற்றுமொழிச் சொல் தேவைப்படும் வரை ஆள்வதில் தவறில்லை. அந்த அளவில் தவிர்க்கவியலாவிடத்து மொழிக் கலப்பு இருக்கலாம். காலப்போக்கில் அதையும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் என்றென்றும் கலப்படம் செய்வதுதான் எளிமைக்கு வழி என்று நினைப்போர்க்கு அறிவியல் அக்கறையும் இல்லை, மொழிக் கவலையும் இல்லை. ஒரு மொழியை நேசிக்காமல் அந்த மொழி பேசும் மக்களை எவ்வாறு நேசிக்கக் கூடும் என்று விளங்கவில்லை. தேவையற்ற அயல்மொழிக் கலப்பை வலியுறுத்துவோரின் தோலைக் கீறிப் பாருங்கள், தமிழ் பேசும் மக்கள் பால் அலட்சியமும் வடமொழி அல்லது ஆங்கிலம் பேசுவோர் பால் மயக்கமும் பொங்கி வழியக் காணலாம். சமஸ்கிருதமயமாக்கமும், ஆங்கிலமயமாக்கமும் மொழிசார் செயல்வழிகள் மட்டுமல்ல, சமூகம்சார் செயல்வழிகளும் ஆகும் என்பது நினைவிருக்கட்டும்.

நான் மொழிபெயர்ப்புத் துறையில் இயங்குவதால் நல்ல தமிழாக்கங்களைத் தேடுகிறேன், கிடைப்பனவற்றில் எனக்கு நிறைவில்லாத போது நானே சொல்லடிக்கிறேன். இதை மகிழ்ந்து செய்கிறேன். அபேதவாதமாகவும் சமதர்மமாகவும் நிகரமையாகவும் குழம்பித் தடுமாறிய சோசலிசத்தைக் 'குமுகியம்' என்று தமிழாக்கம் செய்தேன். அருளியாரிடம் இதற்கு விளக்கம் சொன்னேன். ஏற்றுக் கொண்டார். குடியாட்சியம், குமுகியம், பொதுமை போன்ற சொல்லாட்சிகளை என் வகுப்பில் கலந்து கொள்ளும் தோழர்கள் தயங்காமல் ஏற்று ஆள்கின்றனர்.

Anarchy, Anarchism நீண்ட காலம் குழம்பிக் கிடந்தன. தூக்குமேடை ஏறிய மேநாள் ஈகியரில் ஒருவர் எழுப்பிய இறுதி முழக்கம்: 'Long live anarchism!' 'அராஜகம்' என்று தமிழில் சொல்வதில் ஒலிக்கும் எதிர்மறைச் சாயல் அந்த இலட்சியத்தைச் சிதைத்து விடுகிறது. ஆளும் அரசு தேவையில்லை என்பது ஓர் உன்னதக் குறிக்கோள். அது சரியா தவறா என்று ஆராயலாம், ஆனால் அதற்கான தமிழ்ச் சொல்லே அதனைக் கீழ்மைப்படுத்தி விடக் கூடாது அல்லவா? நானும் முதலில் அரசிலிக் கொள்கை என்று சொல்லிக் கொண்டிருந்தேன். நிறைவில்லை. Monarchy – முடியாட்சி, Diarchy – இரட்டையாட்சி என்ற வழியில் Anarchy – அனாட்சி என்று சொல்லத் தொடங்கினேன். ஆட்சிக்கு எதிர்மறை அனாட்சி. Anarchism – அனாட்சியம். அரசறிவியல் தமிழில் வளரும் போது அனாட்சியம் ஆட்சி செய்யும் என நம்புகிறேன். மேநாள் ஈகி “அனாட்சியம் வெல்க!” என்று முழங்குவது அவரது பெருங்குறிக்கோளுக்கு நீதி செய்யும் அல்லவா?

மூலமுதலில் பலவும் புதிதாகச் சொல்லடித்துள்ளேன். தோழர் எஸ்விஆர் வரவேற்று எழுதியுள்ளார், பார்த்தீர்களா?

அறிவியலைக் கண்டு அஞ்சுவது சரிதான்! அதன் தொடர்ச்சியாக அறிவியல் தமிழைக் கண்டும் அஞ்ச வேண்டியது சரிதான்! பழகுங்கள், அச்சம் போய்விடும்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.