தலித்துகளுக்கு எதிரான வன்முறையும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் – சமூகத்தை நிரந்தரமாகப் பிரித்துவிட்டது. பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் பார்ப்பனியம் செழித்தோங்குகிறது. ஆட்சியில் இருப்பதாலேயே ‘ஆளும் வர்க்கம்' என்று வரையறுத்துவிட முடியாது. அந்த சிந்தனைதான் ஆள்கிறது. ஆட்சியில் இருக்கும் நபர் ஆளவில்லை. இந்திய வரலாறு முழுக்க இந்நிலைதான் நீடித்திருக்கிறது. 800 முதல் 1000 ஆண்டுகள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டிருந்தாலும், பார்ப்பனர்கள்தான் பிரதமர்களாகவும் உண்மையான ஆளும் வர்க்கமாகவும் இருந்திருக்கிறார்கள்.

- – வி.டி. ராஜ்சேகர், ஆசிரியர், ‘தலித் வாய்ஸ்'

ப. பிரேமானந்து – சீரிய பகுத்தறிவாளர்; பகுத்தறிவாளர் கூட்டமைப்பினை உருவாக்கி, அறியாமை இருள் நீக்கியவர். இவருடைய பள்ளிக் கல்வி ஏழாம் வகுப்பு வரை மட்டுமே. ஆனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் அமைத்துள்ளார். 40 நாடுகளுக்கு மேல் பயணம் செய்து மூடநம்பிக்கைக்கும், கடவுளுக்கும், மதத்திற்கும் எதிராகப் பரப்புரை மேற்கொண்டார். சாமியார்களின் அனைத்து வகை மோசடிகளையும் மக்களிடையே அம்பலப்படுத்தினார். அனைத்து வகைச் சுரண்டலுக்கும் அடித்தளமாக இருக்கும் அறியாமையை அகற்ற அயராமல் பாடுபட்டார்.

நவீன ஆன்மீக மோசடிகளான யோகா, தியானம் போன்றவற்றைப் பரப்பும் தற்கால ‘அறிவுச்சாமியார்'களை அடையாளம் காட்டினார். பாமர மக்களை ஏமாற்றும் விபூதி, தகடு முதல் படித்த(?) அறிவாளிகளை முட்டாள்களாக்கும் யோகா, தியானம் போன்றவற்றை அறிவியல் ரீதியாக அம்பலப்படுத்தினார். எளிய முறை உடற்பயிற்சியை ‘யோகா' என்ற பெயரில் விற்பதையும், போதைப் பொருள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு இணையான பாதிப்பைத் தரக்கூடிய தியானத்தை வீதிதோரும் கற்றுத் தருவதையும் கேலி செய்தார். தமது சக பகுத்தறிவு இயக்கத்தினர், தடையின்றிப் பிரச்சாரப் பணியினை தொய்வின்றி மேற்கோள்வதே – தனக்கான இரங்கல் என்பதே அவருடைய இறுதி வேண்டுகோள்.

ப. பிரேமானந்து 17.2.1930 – 4.10.2009

‘தெரிந்தே' சட்டத்தை மீறுவோம்!

“எங்கள் ஊரில் படையாச்சி, நாயக்கர், உடையார், தலித், புதிரை வண்ணார் என பல்வேறு சாதிக்காரர்கள் வசிக்கிறார்கள். நாங்கள் குடியிருக்கும் தெருவிலிருந்து நூறடி தூரத்தில் ரேஷன் கடை உள்ளது. எல்லா சாதிக்காரர்களும் அங்குதான் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும். சென்ற மாதம் (செப்டம்பர், 24) துவரம் பருப்பு வாங்க நான் ரேஷன் கடைக்குப் போக வேண்டியிருந்தது. கடை திறந்ததும் அனைவரும் ஓடி வந்து வரிசையில் அடித்துப் பிடித்து நின்றார்கள். அப்போது எங்கள் ஊரைச் சேர்ந்த விருதாம்பாள் என்பவரது மகள்கள் என்னைத் தள்ளிவிட்டு வரிசையில் நின்றனர். அப்போது அவர்கள் மேல் என் கை பட்டுவிட்டது. உடனே, தொடக்கூடாத பொருளைத் தொட்டது போல கைகளை உதறிய அவர்கள், என்னை இழிவாகப் பேசி என் முகத்திலும் தலையிலும் ஓங்கி அடித்தார்கள். தெரியாமல்தானே உங்கள் மீது என் கை பட்டது. இது குற்றமா? என்று நான் கேட்டது, அவர்களுக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. உன்னைத் தொட்டாலே தீட்டு; குளிக்கணும் என்று சொல்லி, என் தலைமுடியைப் பிடித்திழுத்து கீழே தள்ளினர். ‘என்னடி எங்களை எதிர்த்தா பேசுகிறாய்? உனக்கு அவ்வளவு திமிர் ஏறிவிட்டதா?' எனக் கேட்டு, செருப்புக் காலால் என் வயிற்றிலும் முதுகிலும் மார்பிலும் எட்டி உதைத்தனர்.

“இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட விருதாம்பாளின் கணவர் சீனிவாசன், ‘அவளைக் கெடுக்காமல் விடமாட்டேன்' (அப்ப மட்டும் தீட்டுப்படாது!) எனக் கூறியவாறு என்னை நோக்கி ஓடி வந்தார். அதே வேகத்தில் என் சேலையைப் பிடித்து இழுத்தார். நான் சேலையை இறுகப் பிடித்துக் கொண்டேன். அதில் சேலை கிழிந்தது. அடி மற்றும் அவமானத்தால் நான் அங்கேயே மயங்கி விழுந்தேன். ஏற்கனவே எங்கள் கிராம டீக்கடையில் எங்களுக்கு டீ தர மாட்டார் கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. எங்களில் பெரும்பாலானோரை சாதி இந்துக்கள் தோட்ட வேலைக்கு கூப்பிட மறுக்கிறார்கள். ஊரில் உள்ள மளிகைக் கடைகளிலும் பொருள் தருவதில்லை. எந்த நேரத்திலும் சீனிவாசன் குடும்பத்தினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழல் உள்ளது. பாதுகாப்புக் கோரி போலிசில் புகார் கொடுத்திருக்கிறேன்” – விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூர் என்ற கிராமத்தில் வசிக்கும் காசியம்மாளின் (வயது 23) வாக்குமூலம் இது (‘குமுதம் ரிப்போர்ட்டர்' 22.10.2009). ஒரு தலித்தின் கை சாதி இந்துக்களின் மீது தெரியாமல் பட்டுவிட்டால், அது ஜாதிக் குற்றம். தெரிந்தே பட்டால் அது சட்டப்படி குற்றம்! தலித்துகள் ‘தெரியாமல்' ஜாதியை மீறுவதற்குப் பதில் ‘தெரிந்தே' சட்டத்தை மீற வேண்டும். வேறு வழியில்லை.

“நாங்கள் சாத்தானை வணங்குவோம்”

விழுப்புரம் மாவட்டம் இறையூரில், தலித் கிறித்துவர்களை தேவாலயத்தின் புகழ்மிகு திருநாளான அன்னை ரோசரி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க விடாமல் வன்னியர் கிறித்துவர்கள் தடுத்ததால், தலித்துகள் இறையூர் கிராமத்தை விட்டு வெறியேறி, பக்கத்தில் உள்ள இளவரசங்கோட்டையில் 6.10.09 அன்று குடிபுகுந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, வன்னியர் வாழும் தெருக்களில் தலித் கிறித்துவர்கள் பிணத்தை கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்து வந்தனர். வன்னியர் கிறித்துவர்களுக்கென தனி சுடுகாடு இருக்கிறது. இதனால் எழுந்த கலவரத்தின்போது இரண்டு பேர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். அதற்குப் பிறகு அமைதிக் கூட்டம் நடைபெற்று, பொதுப்பாதையில் பிணத்தைக் கொண்டு செல்வது தொடர்பான பிரச்சனை மட்டும் தீர்க்கப்பட்டிருக்கிறது. வேறு எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. தேவாலயத்தில் உள்ள தலித்துகளுக்கான பிண ஊர்தியை வன்னியர் கிறித்துவர்கள் தொடக்கூட மாட்டார்களாம் (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 7.10.09) ‘தலித்துகள் கர்த்தரை வணங்குவதால், இனி நாங்கள் சாத்தானைதான் வணங்குவோம்' என்றுகூட, இனி வருங்காலங்களில் சாதி இந்துக்கள் சொல்லக்கூடும்.

காந்தியின் குரங்குகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வடுகப்பட்டி கிராமத்தில், ஜெயபாண்டி, துரைராஜ் மற்றும் சிவகுமார் ஆகிய மூன்று தலித் இளைஞர்கள் 16.10.09 அன்று சாதி இந்து தெருவில் பட்டாசு வெடித்தார்கள் என்பதால், சாதி வெறியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். தங்கள் தெருவில் நடப்பதே குற்றம் என்ற நிலையில், தலித்துகள் அந்தத் தெருவில் பட்டாசு வெடித்ததால், சாதி இந்துக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர் (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 20.10.09). தென்கரை காவல் நிலையத்தில் சாதி இந்துக்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பினும், காயம் அடைந்த மூன்று தலித்துகள் மீதும் சாதி இந்துக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டு மற்றும் 13 வயதுக்குட்பட்ட 12 தலித் குழந்தைகள் சாதி இந்து இளைஞர்களால் தாக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் (பெரும்பாலும் பெண் குழந்தைகள்) 30.10.2009 அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, வழிமறித்த சாதி இந்து இளைஞர்கள், இவர்களுடைய சாதியை சொல்லி திட்டி, அடித்திருக்கிறார்கள். அதில் ஒருவன், “நீங்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்கு போவதால்தானே, உடனே போலிஸ் ஸ்டேசனுக்கு புகார் கொடுக்க ஓடுகிறீர்கள். உங்களைப் பெத்தவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கணும்னுதான் உங்களை அடிக்கிறோம். இனிமேல் நீங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போகக் கூடாது” என்று கூறியிருக்கிறான் (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 2.11.2009)

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தின் பொதுப்பாதையில் தலித் மக்கள் முளைப்பாரி ஊர்வலம் செல்ல, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் அய்ந்து பேர் படுகாயமடைந்தனர். மோதலையொட்டி போலிசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவத்திற்காக தலித் மக்கள் 12 பேர் உட்பட 20 பேரை காவல் துறை கைது செய்தது. திருவிழாவிற்கு தலித் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டும் போலிசார் தீபாவளியை முன்வைத்து அங்கு செல்லவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் (‘தீக்கதிர்' 20.10.2009).

“உலக மக்கள் யாரும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது; அதற்கான தேவையே இல்லை என்று சொல்லும் ஒரே பண்பாடு இந்து பண்பாடுதான்” என்று இந்து பண்பாட்டின் காவலர்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதி, சென்னையில் 19.10.2009 அன்று நடைபெற்ற தனது பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசியிருக்கிறார் (‘தி இந்து' 20.10.2009). இந்து பண்பாடு இந்தளவுக்கு யோக்கியமானதென்றால், இந்துக்கள் ஏன் இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் தலித்துகள் மீது 27 வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள்? இதைப்பற்றியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடும் துறவிகள் பேசமாட்டார்கள். ‘சண்டை போடுவதற்கான தேவையே இல்லை' என்று அவர்கள் கூறுவதற்கு இன்னொரு முக்கியக் காரணம் – ஏற்றத்தாழ்வுகளால் ஆன இந்து சமூக அமைப்பை தலித்துகள் சீர்குலைத்து விடுவார்கள் என்ற அச்சம்தான். ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமன்படுத்தும் தலித்துகள் மீது தாக்குதல் தொடுப்பது, ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கானது என்பதால்தான் – தலித்துகளிடம் சண்டையிடும் ஜாதி இந்துக்களை கண்டிக்காமல் – யோக்கிய சிகாமணிகள் காந்தியின் குரங்குகளாய் இருக்கிறார்கள்.

ஆரியர் X திராவிடர் = தீண்டாமை

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தின் அங்கன்வாடியில், தலித் குழந்தைகள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. சாதி இந்து குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் உள்ள தட்டுகளில் உணவு பரிமாறப்படுகிறது; தலித் குழந்தைகள் வீட்டில் இருந்துதான் தட்டுகளை கொண்டு வரவேண்டும். தலித் குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் தனித்தனியாகத்தான் விளையாட வேண்டும். தலித் குழந்தைகள் செருப்பு அணிந்து செல்லவும் தடை உள்ளது. இரட்டைக் குவளை முறை, பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்ற தீண்டாமைப் பாகுபாடுகளும் இங்கு நிலவுகின்றன. இதனால் ஒரு கட்டத்தில் தலித் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதையே நிறுத்திவிட்டிருக்கிறார்கள் (‘குமுதம் ரிப்போர்ட்டர்', 1.11.2009). இளமைப் பருவத்தில் அம்பேத்கர் அனுபவித்த தீண்டாமையை இன்னும் அவருடைய சமூக மக்கள் அனுபவிக்கின்றனர்! தலித்துகள் மீதான தீண்டாமைக்கு பார்ப்பனர்களே காரணம் என்று சாதி இந்துக்களும்; இல்லை, சாதி இந்துக்கள்தான் காரணம் என்று பார்ப்பனர்களும் பழி சுமத்துகின்றனர். ஆக, ஆரியர் ஙீ திராவிடர் ஆடுகளத்தில் தலித்துகள் பகடைக் காய்கள். தலித்துகள் இந்துக்களாக இருக்கும் வரை, இந்த சதிராட்டத்தை முறியடிக்க முடியாமலேயே போய்விடும். எச்சரிக்கை!