முன்னுரை:

மனித சிந்தனை, உணர்ச்சி அனுபவங்களை வெளிப்படுத்தும் கற்பனைப் படைப்பே இலக்கியம். இதில் சிறார் இலக்கியம் என்பது மொழிநடையிலும் பொருளிலும் நூல் அமைப்பிலும் பெரியவர்கள் இலக்கியத்திலிருந்து வேறுபட்டது. மனித குலம் தோன்றியதிலிருந்து எண்ணிக்கையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குப் பல நூற்றாண்டுகளாகச் சம உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. ஆனால், எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு இன்று பல துறைகளில் தங்களின் திறமைகளின் மூலமாகத் தங்களை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ஏராளமான பெண்கள் சிறார் இலக்கியத்தில் தங்களுடைய தடத்தைப் பதித்து வருகிறார்கள். அவர்களின் படைப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். (விடுபடல் இருக்கலாம்)

உலகப் பெண்களின் பங்களிப்பு

உலக அளவில் குழந்தைகளுக்காக எழுதிய குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் பீட்டரிக்ஸ் பாட்டர், லூயிசா மே ஆல்காட் போன்றவர்கள் ஆரம்ப காலத்திலும், அதற்குப் பிறகு லூசி ஸ்பாராக் மிட்செல், ஆன் கரோல் மூர், ஜே.கே. ரௌலிங், வெர்லி கிளியரி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் தொடக்கக் காலத்தில் பெண்களின் பங்களிப்பு

தமிழில் சிறார் இலக்கியம் என்பது கவிமணி காலத்தில் இருந்து தொடங்கியது எனலாம். அந்தக் காலகட்டத்தில் சிறார்களுக்காக எம்.சி. ராஜாவோடு இணைந்து ரங்கநாயகி அம்மாள் எழுதியிருக்கிறார். அதன் பிறகு 1950களில் அழ. வள்ளியப்பா குழந்தைகளுக்கான கதை, பாடல்கள், கதைப் பாடல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு என்று தொடர்ந்து எழுதி வந்தார். குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் வழியாக ஏராளமான சிறார் எழுத்தாளர்களை உருவாக்கினார்.

அந்தக் காலகட்டத்தில் ஆர். பொன்னம்மாள், எஸ். விஜயலட்சுமி, மதிஒளி சரஸ்வதி, சந்தான லட்சுமி, அகிலா சிவராமன், எஸ். லீலா, சரஸ்வதி ராம்நாத், கே. ஜெயலட்சுமி, ஜோதிர்லதா கிரிஜா, அம்பை, சிவசங்கரி, விமலாரமணி மற்றும் ராஜம்மாள் தேவதாஸ் ஆகிய பெண்களும் சிறார் இலக்கியத்தில் பங்களித்துக் கொண்டிருந்தார்கள்.

குறிப்பாக ஆர். பொன்னம்மாள் கதைகள் மற்றும் பாடல்கள் என்று தொடர்ந்து ஏராளமான படைப்புகளைக் கொடுத்து வந்துள்ளார். அம்பை அவர்கள் தன்னுடைய 16 வயதில் (1960 ஆம் ஆண்டு) கண்ணன் இதழ் நடத்திய போட்டியில் 'நந்தி மலைச் சாரலிலே' என்ற சிறார் நூலுக்காக முதல் பரிசு பெற்றார். அதன் பிறகு இளையோருக்காக இவர் எழுதிய தன் வரலாறு 'நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்' குறுநாவலாக 2013ஆம் ஆண்டு வெளிவந்தது.

1950களில் வீரியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிறார் இலக்கியத்தில் இடையில் ஒரு தொய்வு ஏற்பட்டு, 2000க்குப் பிறகு நவீன சிறார் இலக்கியமாக மீண்டெழுந்தது. 2021ல் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

சமகாலத்தில் பெண்களின் பங்களிப்பு

தமிழ்நாட்டில் 1990களில் ஏராளமான பெண்கள் எழுத வந்தார்கள். பெண்ணியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதில் உள்ள கருத்துக்களை இலக்கியத்தில் கொண்டுவர எண்ணினார்கள். கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரை என்று எழுத ஆரம்பித்தார்கள். இந்தக் காலகட்டத்தில் பெண்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பு மிகவும் குறைவு.

2000ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைகளுக்கான இலக்கியம் குறித்த விவாதம், பார்வை மற்றும் அக்கறை என்பதும் பொதுச் சமூகத்தில் தொடங்கியது. மெல்ல மெல்ல உருவாகும்போது பெண்களும் சிறார் இலக்கியத்திற்குள் எழுத வரத் தொடங்கினர். அதுவும் குறிப்பாகக் கொரோனா காலத்தில் பெண்கள் சிறார் இலக்கியத்தில் இயங்குவது அதிகமானது. பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் கதை சொல்லிகளாகவும் எழுத்தாளர்களாகவும் பரிமளித்தார்கள்.

தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியைக் குழந்தைகளோடு செலவழிக்கும் பெண்கள், குழந்தைகளுக்காக எழுதிய படைப்புகள் குழந்தைகளின் மன ஓட்டத்தை அறிந்து எழுதப்பட்டதாக இருக்கின்றன. சூழலியல், பருவநிலை மாற்றம், ஐவகை நிலப்பரப்புகள், கல்வியின் அவசியம், பாலியல் சீண்டல், பாலின சமத்துவம், மூன்றாம் பாலினம், சமூகப் பிரச்சினை, சாதி ஏற்றத்தாழ்வு, உருவக்கேலி, நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை உடைத்தல், உளவியல், அறிவியல், மூடநம்பிக்கை பற்றிய விழிப்புணர்வு, வாழ்க்கை வரலாறு, மாயாஜாலம், வீரதீரச் செயல்கள், பகுத்தறிவு, நகைச்சுவை, உணவு, உடற்பயிற்சி, செல்போன் சார்ந்த விழிப்புணர்வு, சமத்துவம், சமூக நீதி, மனிதம், தன்னம்பிக்கை மற்றும் சாகசம் உள்ளிட்ட வகைகளில் கதைகளை எழுதியுள்ளார்கள். சமகாலப் பிரச்சனைகளை மையப்படுத்தியும் எழுதிவருகிறார்கள்.

பெரும்பான்மையான கதைகளில் பெண் கதாபாத்திரங்களை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து எழுதியிருப்பதோடு, பெண் கதாபாத்திரங்களுக்கும் 'ள்' விகுதியைப் பயன்படுத்தியிருப்பது பெண்களின் படைப்புகளில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

கதைகள், பாடல்கள், சிறார் திரைப்படங்கள், கதைப் பாடல்கள், நாடகம், வகுப்பறை அனுபவங்கள், வாழ்க்கை வரலாறு, கல்வி சார்ந்து, சித்திரக் கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள், மொழிபெயர்ப்பு, சமகாலப் பிரச்சனைகள், பதின்பருவப் பிரச்சனைகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் உள்ளிட்ட வகைமைகளில் தங்களுடைய படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர் பங்களிப்பு கொடுத்து வரும் படைப்பாளிகள்

  • தேவி நாச்சியப்பன்: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் இளையமகளான இவர், குழந்தை இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். கவிமணி குழந்தைகள் சங்கத்தையும் வள்ளியப்பா இலக்கிய வட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். 30 நூல்கள் எழுதியுள்ளார். பால சாகித்ய புரஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • சாலை செல்வம்: பெண்ணிய செயற்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளில் இயங்கி வருபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நூல்கள் எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • பிரியசகி: ஆசிரியர், மனநல ஆலோசகர், என்.எல்.பி. பயிற்றுநர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் மற்றும் பொம்மலாட்டக் கலைஞர். குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான உளவியல் சார்ந்த நூல்களை எழுதி வருகிறார். சிறப்புக் குழந்தைகள் மற்றும் பதின்பருவ வளர்ச்சி குறித்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • ஞா. கலையரசி: காரைக்காலைச் சேர்ந்த இவர் தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணி ஓய்வு பெற்றவர். சுட்டி உலகம் மற்றும் பூஞ்சிட்டு மின்னிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறார் இலக்கியத்தில் பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
  • பூங்கொடி பாலமுருகன்: பொறியாளரான இவர் கதை சொல்லி, எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். குழந்தைகள் பாதுகாப்பு, உளவியல், சமூகநீதி மற்றும் சூழலியல் சார்ந்த கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதுகிறார். 8 நூல்கள் எழுதியுள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • சரிதா ஜோ: ஈரோட்டைச் சேர்ந்த கதை சொல்லி, சிறார் எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். குழந்தைகளுக்கான சமூக விழிப்புணர்வு, சூழலியல், பகுத்தறிவு மற்றும் சமத்துவக் கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதுகிறார். 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • ஈரோடு சர்மிளா: பேராசிரியர், கதை சொல்லி, பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான இவர், சிறார் இலக்கியத்தில் சமூக விழிப்புணர்வு மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை முன்னிறுத்தி எழுதி வருகிறார். பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • தேவகி ராமலிங்கம்: எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். நிவேதிதா பதிப்பகத்தின் உரிமையாளராக இருந்து ஆண்டுதோறும் ஏராளமான சிறார் நூல்களை வெளியிட்டு வருகிறார். சிறார் இலக்கிய வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர். சிறந்த பதிப்பாளருக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • ஸ்ரீ ஜோதி விஜேந்திரன்: இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் தற்போது மென்திறன் பயிற்சியாளராக உள்ளார். குழந்தைகளுக்கான நகைச்சுவை, அறிவியல், சாகசம் மற்றும் வாழ்வியல் கதைகளை எழுதி வருகிறார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • புவனா சந்திரசேகரன்: மதுரையைச் சேர்ந்த இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பூஞ்சிட்டு குழந்தைகள் இதழின் ஆசிரியர்களில் ஒருவராக உள்ளார். சிறுகதை, நாவல் மற்றும் சிறார் இலக்கியத் துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இவர்களைத் தவிர கீழ்க்காணும் பலரும் தங்கள் காத்திரமான பங்களிப்பை நல்கி வருகின்றனர்:

பவள சங்கரி, ஜெயந்தி சங்கர், ஜீ. மீனாட்சி, லைலா தேவி, சோ. மோகனா, அமுதா செல்வி, ரமாதேவி ரத்தினசாமி, சாந்த சீலா, உதய லட்சுமி, ராஜலட்சுமி நாராயணசாமி, ராஜேஸ்வரி கோதண்டம், அஞ்சலி, நிவேதா லூயிஸ், அகிலாண்டபாரதி, ராஜலட்சுமி, கார்த்திகா கவின்குமார், ராஜிலா ரிஸ்வான், முத்துக்குமாரி, வித்யா செல்வம், லட்சுமி பாலகிருஷ்ணன், நான்சி கோமகன், வனிதாமணி, வித்யா இளங்கோ, கார்த்திகா முகுந்த், நசீமா ரசாக், ஜீவா ரகுநாத், ஞா. குமுதம், மேகலா சித்திரவேல், அன்னபூரணி தண்டபாணி, அன்புச் செல்வி சுப்புராஜ், இந்துமதி கணேஷ், தேவி பிரபா, விஜயலட்சுமி, அன்பு வாகினி, ஹேமப்பிரபா, நாராயணி சுப்பிரமணியன், தமிழ்மொழி இளங்கோ, அமுதா பொற்கொடி, ராணிகுணசீலி, சூர்யா, தீபா சிந்தன், கிருபானந்தினி, வாண்டு மாமி (தேவி மயில்), ராஜேஸ்வரி ஸ்ரீதர், நேஷா எல்லப்பன், மீனா நரேஷ், தாமரை செல்வி, கீதா மதிவாணன், டாக்டர் ஒசூர் மணிமேகலை, காரை. இரா. மேகலா, பிச்சிப்பூ (எ) சங்கீதா பிரபு, கமலா முரளி, டாக்டர் சிவகாமசுந்தரி, நாகமணி, நெல்லை அன்புடன் ஆனந்தி, திவ்யா பிரபு, விஜயலட்சுமி, துளசி, சண்முகவள்ளி, ஸ்ரீனிவாசன், மணி அர்ஜுனன், ஏ.எஸ். பத்மாவதி, கிருஷ்ணபிரியா நாராயணன், யாமினி, கோகிலா, மோனிஷா, அர்ஷா ராஜலட்சுமி ராமராஜ், வெண்பா, பாரதி திலகர், ஆபேரி, ஆலிஸ், சித்ரா ரங்கராஜன், எம்.கே. வனிதா, பானுலட்சுமி, பத்மாசினி மாதவன், ரம்யா, ஜெயா சிங்காரவேலு, ப்ரீத்தி வசந்த், ஜெயசுதா, தாரணி ஆகியோருடன் ஏராளமான பெண் குழந்தைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.

முடிவுரை

சிறார் இலக்கியம் என்ற வகைமை தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இன்று 80க்கும் மேற்பட்ட பெண்களும், 30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும் சிறார் இலக்கியத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தங்கள் படைப்புகளின் வழியாகச் சமகாலப் பிரச்சனைகள், பருவநிலை மாற்றம், உளவியல், சமத்துவம் போன்ற பல தளங்களில் ஆழமாகப் பதிவு செய்துவருகின்றனர். சுவாரசியம், கற்பனை, பேண்டசி ஆகியவற்றோடு எளிமையான மொழியிலும், முற்போக்கு மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளுடனும் படைப்புகளை வழங்கி வருகிறார்கள். யதார்த்தப் படைப்புகளும் அதீதப் புனைவுகளும் சம அளவில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

இது மகிழ்ச்சிக்குரிய வளர்ச்சியாக இருந்தாலும், இன்னும் பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் எழுத வர வேண்டிய தேவை உள்ளது. இந்தப் படைப்புகள் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுவாசகர்களிடமும் சென்றடைய வேண்டும். மேற்கண்ட படைப்பாளிகளின் பல நூல்கள் தமிழ்நாடு அரசின் வாசிப்பு இயக்கம் மற்றும் இளந்தளிர் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி நூலகங்களில் இடம்பெற்றுள்ளன. இவர்களின் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் 25க்கும் மேற்பட்ட முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளன.

இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. தற்காலக் குழந்தைகளின் உலகிற்கு ஏற்ற புதிய வடிவங்களிலும் புதிய சிந்தனைகளுடனும் படைப்புகள் உருவாக வேண்டும். உலகின் சரிபாதியாக இருக்கும் பெண்கள் தங்கள் பார்வையிலிருந்து உலகத்தைப் பதிவு செய்யும்போது சிறார் இலக்கியம் மேலும் முழுமை பெறும்.

- சரிதா.ஜோ

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.