black lives matterஅமெரிகாவில் மின்சோட்டா மாநிலத்தில் கடந்த 28.05.2020 அன்று கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டு அந்நகர போலிஸ் அதிகாரி ஒருவனால் கழுத்தில் முட்டிக்கால்களால் அழுத்திக் கொல்லப்பட்டார்.

அந்த கொடிய காட்சி உலகெங்கும் மின் ஊடகங்களால் உடனடியாக மக்களின் காட்சிக்கு வந்தது. அந்த கொலைக் காட்சியை பதிவு செய்து வெளியிட்டவரும் ஒரு வெள்ளையினப் பெண் தான். அக்காட்சி உலகெங்கும் வெகு மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிறவெறிக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள்.

ஜார்ஜ் ஃப்ளாய்டு செய்த தவறு என்ன தெரியுமா? அங்கிருந்த கடை ஒன்றில் பொருள் வாங்கி விட்டு. புதிய அமெரிக்க டாலரை கொடுத்தது தான். கடைக்காரனுக்கு சந்தேகம் பிறந்து விட்டது. கருப்பர் கொடுத்த டாலர் போலியாக இருக்குமோ என்று! இந்த சந்தேகமே ஃப்ளாய்டின் உயிரைக் குடித்து விட்டது. கடைக்காரன் போலிசை அழைத்தான். வந்தவன் போலிஸ் எமன். அவன் பெயர் டெரிக் சோவின்.

'ஷாப்பிங்'கை முடித்துக் கொண்டு தன் மகளுடன் காரில் புறப்படத் தயாராய் இருந்தார் ஃளாய்டு. அந்நேரம் அங்கு வந்து சேர்ந்த டெரிக் அவரை காரிலிருந்து பலவந்தமாக இறக்கி, பின்புறமாக விலங்கு மாட்டி, அவரின் கழுத்தில் தன் முட்டிக்கால்களை பலங்கொண்ட மட்டும் அழுத்திக் கொன்றான். காரில் இருந்து ஃப்ளாய்டை கீழே இழுக்கும் போது ஃப்ளாய்டின் சிறு பெண்குழந்தை ஒட்டுநர் சீட்டின் அருகில்தான் அமர்ந்து இருந்தார்.

அந்த கருங்குயிலை இந்த வெள்ளைப் பன்றிகள் துளி கூட மதிக்கவில்லை. குழந்தையின் கண் முன்னே தந்தையைக் கொன்றவர்கள் குழுவில் மேலும் மூவர் இருந்தனர் . ஃப்ளாய்டு கொல்லப்படும் போது கற்பாறை போல் விறைத்து நின்றவன் பெயர் தூங்தாவ், மற்றவர்கள் ஜெ.அலெக்சாண்டர், தாமஸ்லேன்.

ஃப்ளாய்டு ஒரு விளையாட்டு வீரர் ஆவார். தற்போது லாரி ஒட்டுநர், செக்யூரிட்டி கார்டு என சிறு வேலைகளை செய்து கொண்டிருந்தார். கொரானா காரணமாக வேலையை இழந்து விட்டிருந்தார்; தற்போது உயிரும் போய் விட்டது.

அமெரிக்க வரலாறே நிறவெறியில் பிறந்தது தானே! ஸ்பெயின் நாட்டு கடற் கொள்ளையன் கொலம்பஸ், அமெரிக்க கண்டத்தில் கால் வைத்த நாள் முதல் அக்கண்டத்தின் பழங்குடி மக்களை வேட்டையாடியதில் இருந்துதானே அமெரிக்காவின் வரலாறு துவங்குகிறது.

இன்று அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்கள் அனைவரும் 16 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களால் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டு அடிமையாக விற்கப்பட்டவர்களின் வாரிசுகள் தான்.

'அட்லாண்டிக் சிலேவ் டிரேட்' என்ற நிறுவனம் மூலம் அடிமைகள் கடத்தி வரப்பட்டு விற்கப்பட்டனர். இத்தொழிலில் அமெரிக்கா மட்டும் இன்றி, போர்த்துக்கல், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், டேனிஷ்காரர்களும் கூட ஈடுபட்டிருந்தனர். கருப்பு அடிமைகள் பெரும்பாலும் மத்திய, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், கரிபியன் நாடுகளில் இருந்தும் கடத்தி வரப்பட்டனர். இவர்கள் கப்பல்கள் மூலமாக அமெரிக்க கரைகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள், பண்ணைகளில் வைத்து வேலை வாங்கினார்கள். கடின உடல் உழைப்புகளையும் அடிமைகளைக் கொண்டே செய்தனர்.

இந்த அமெரிக்க வெள்ளையர்கள் அனைவரும் இங்கிலாந்து, ஐரீஷ், ஜெர்மனி, ஸ்பெயின், நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து சென்ற குடியேற்றக்காரர்களே.

அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861- 1865) ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராய் இருந்த காலத்தில் நடைபெற்றது. போரின் நோக்கம் உள்நாட்டு முரண்பாடு தான் என்றாலும், கருப்பின அடிமை வணிகத்தை ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான ஐக்கிய அரசு தடை செய்த காரணத்தால் அடிமை வணிகத்தை ஆதரித்த தெற்கு மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகிச் செல்ல முயன்றதே உள்நாட்டுப் போருக்குக் காரணமாகும். இறுதியில் தென் மாநிலங்கள் தோல்வியை அடைந்தன.!

ஆபிரகாம் லிங்கன் அடிமை வணிகத்தை சட்டப்படி தடை செய்தார். இதன் மூலம் கருப்பின மக்களின் விடுதலையை உறுதி செய்தார். மேலும் கருப்பின இளஞர்கள் அமெரிக்க இராணுவத்தில் சேர வாய்ப்புகளையும் வழங்கினார்.

இருந்த போதிலும் நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் கருப்பர்களை பாகுபாட்டுடன் தான் நடத்தி வந்தனர். மார்ட்டின் லூதர் கிங் 1955 முதல் நிறவெறியை எதிர்த்து கருப்பின மக்களைத் திரட்டி போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தார். அவருடைய பேச்சுக்கள் அமெரிக்க கருப்பர்களை மட்டுமல்லாமல், வெள்ளையர்களையும் கவர்ந்து வந்தது. மார்ட்டின் லூதர் கிங்கின் "I have a dream" என்ற 1964 ஆம் ஆண்டு உரை உலகப் பெற்றது. நீண்ட காலப் போராட்டங்களிடையே 1968 ஏப் 04 அன்று வெள்ளை நிறவெறியர்களால் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்.

மார்ட்டின் லூதரைப் போல, இஸ்லாமிய மக்களைத் திரட்டி அமெரிக்க நிறவெறிக்கு எதிராகப் போராடியவர் மால்கம் எக்ஸ். கருப்பின இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியவர் மால்க்கம் எக்ஸ். இவரும் கூட மார்ட்டின் லூதர் கிங் இன் "I have a dream" என்ற சிறப்பு மிகு உரையால் கவரப்பட்டவரே! மால்க்கம் எக்ஸ்சு வெள்ளை நிறவெறி பாஸிஸ்ட்டுகளால் 21.02.1965 அன்று பேரணி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உலக சனநாயக வேடம் போடும் அமெரிக்காவில் வெள்ளையின நிறவெறி வெளிப்படையானது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு அமெரிக்காவில் Neo-Nazi-களின் செயல்பாடு ஆகும். நீங்கள் நாஜி சீருடை அணிந்த வெள்ளை இன இளைஞர்களை அமெரிக்காவில் பொதுவெளியில் காண முடியும்.

ஐரோப்பிய காலனியம் உருவாக்கிய வரலாற்றுப் பிழையான அடிமை வணிகமே நிறவெறியாக நீடித்து வாழ்கிறது. 1992-இல் றோட்டினிக் கிங் என்ற ஒரு கருப்பின கட்டிடத் தொழிலாளியை ஒரு வெள்ளையின போலிஸ் சுட்டுக் கொன்றான். அமெரிக்க கருப்பின மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும் வெள்ளை நிறப்பாகுபாடு கொண்ட நீதிமன்றம் அந்த போலிஸ் அதிகாரியை விடுதலை செய்து விட்டது.

2014 இல் சிகரெட் விற்றார் என்ற குற்றச்சாட்டில், தற்போது ஃப்ளாய்டு கொல்லப்பட்டது போன்று கழுத்து நெறிக்கப்பட்டு 'எரிக் கார்னர்' என்ற இளைஞர் போலிசால் கொல்லப்பட்டார். இப்படிப் பொதுவெளியில் கருப்பின இளைஞர்கள் கொல்லப்படுவதற்குக் காரணம், கருப்பர்கள் கீழானவர்கள் என்ற எண்ணம் தான். வெள்ளையர்களின் மூளையில் படிந்து போய் விட்ட இந்தக் கறை இந்திய சாதியை ஒத்ததுதான்.

அமெரிக்கா - இந்திய நாடுகளில் முறையே இன - சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்கள் உண்டு. ஆனால் அது செயல்படுத்தப் படுவதில்லை.

அமெரிக்காவில் கருப்பர் அதிபராகி விட்டார். இந்தியாவில் தலித் குடியரசுத் தலைவராகி விட்டார். ஆனால் மாற்றம் ஒன்றுமே நிகழவில்லை.

அமெரிக்க சிறைகளில் வாடுவோர்களில் பாதிப்பேர் கருப்பர்களே. தண்டனைகள் வழங்கும் போதும் கருப்பர்களுக்கே அதிகப்படியான தண்டனைகள் வழங்கப் படுகின்றன.

ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்டதினால் அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்களும் பிற சனநாயக சக்திகளும் தெருவில் இறங்கி கலகம் செய்தனர். அவர்கள் ஃப்ளாய்டின் கடைசிச் சொல் "என்னால் மூச்சு விட முடியவில்லை!" என்ற எழுத்து தாங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பரித்தனர்.

வெள்ளையின மக்களின் மனச்சாட்சியை கேள்விகளால் துளைத்தனர். "வெள்ளையின மக்களின் மெளனமும் குற்றமே" என்று உரக்கக் கூவினர். கருப்பின மக்களின் உயிர் வாழும் சிக்கலை உலகத்தின் முகத்தில் அடித்துக் கூறினர்.

கோபம் கொண்ட போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் அடிமை வணிகம் செய்த தலைவர்களின் சிலைகளை அகற்றி, கீழே தள்ளினார்கள். இந்தப் போராட்டம் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்திலும் கூட அடிமை வணிகம் செய்த தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன.

ஹாலிவுட் திரைக்கலைஞர்களும், கனடா நாட்டு அதிபரும் ஃப்ளாய்டின் கொலையைக் கண்டித்தனர். வாசிங்டன் நகர மேயர் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் சாலையின் பெயரை "Black Lives Matter" எனப் பெயர் மாற்றம் செய்தார். இந்தப் போராட்டத்திற்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்த்திரேலியா ஆகிய நாடுகளின் வெள்ளையின மக்கள் பெரும் ஆதரவை நல்கினர்.

மின்சோட்டா நகர போலிஸ் தலைவர் தரையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். அமெரிக்கா - ஐரோப்பா புதிய நாஜிகளுக்கு இனி மேலும் நிறவெறியை சகிக்க மாட்டோம் என இப்போராட்டம் வழியாக கருப்பின மக்கள் உணர்த்தி விட்டனர்.

அமெரிக்கா - ஐரோப்பிய நிறவெறியை இந்திய சாதிய வெறியுடன் ஒப்பீடு செய்தால் இந்திய சாதிய வெறியே கொடுமையானது. எழுத்தாளர் அருந்ததிராய், வெள்ளைக்காரன் கருப்பர்கள் மீது காட்டும் நிறவெறியை விட இந்தியர்கள் கருப்பின மக்கள் மீது காட்டும் இனவெறி கடுமையானது என்பார்.

பல வாரங்களாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் டரம்ப் எந்த உறுதி மொழியையும் தராத காரணத்தால் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது.

பார்வையை நம் நாட்டுப் பக்கம் திருப்புவோம். கருப்பின மக்கள், வெள்ளையின மக்களை நோக்கி, "வெள்ளையின மெளனமும் குற்றமே" என்று அறைகூவல் விடுத்த போது, அங்கு சக வெள்ளையின போராட்டக்காரர்கள் கோபித்துக் கொண்டு போராட்டத்தில் இருந்து வெளியேறி விடவில்லை.

இந்திய / தமிழக சூழலில் தலித்துகளும், இஸ்லாமியர்களும், காவல் துறையினராலும், சாதி வெறியர்களாலும், தனிப்பட்ட குழுக்களாலும் அடிக்கடி கொல்லப்படுகின்றனர். இப்பிரச்னையை இஸ்லாமியரும், தலித்துகளும் தனிப்பட்ட முறையிலேயே எதிர்கொள்கின்றனர்.

இப்பிரச்னைகளை இங்குள்ள பெரும்பாலான கம்யூனிஸ்டுகள் கையில் எடுப்பதில்லை, அதோடு நிற்காமல் சாதியத்திற்கு எதிராகப் போராடுபவர்களை நோக்கி உழைக்கும் மக்களின் ஒற்றுமையை குலைப்பதாக குற்றச்சாட்டும் கூறுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் 'தலித்' அணி சேர்க்கை கூடாது, அது மற்றவரிடமிருந்து தலித்துகளைப் பிரித்து விடும் என்கிறார்கள். அந்த மற்றவர்கள் தலித்துக்களோடு எப்போதும் சேர்ந்து இருந்தது இல்லையே!? இக்கேள்விக்கு பதில் உண்டா ?

ஜார்ஜ் ப்ளாய்டு கொலையும் அமெரிக்க கருப்பின மக்களின் போராட்டமும் வெள்ளையின மக்களின் கண்களைத் திறந்தது போல, இந்திய பொது உடைமையர் கண்களையும் திறக்குமா? தலித்துகள் மீதான தீண்டாமை என்பது அடிமை முறையை விடவும் கொடியது என்ற அம்பேத்கரின் கருத்தை நம்
கம்யூனிஸ்டுகள் ஏற்கிறார்களா?

"வெள்ளையினத்தவரின் மெளனமும் குற்றமே" என்று போராட்டக் களத்தில் முழங்கியபோது, எந்த வெள்ளையின போராட்டக்காரரும் களத்தில் இருந்து ஓடிப் போய்விடவில்லை, மாறாக நல் மனங்கொண்டோர் சாலைகளில் மண்டியிட்டனர்.

ஆனால் இந்திய தலித் மக்கள் முன் சாதி இந்துக்கள் எப்போது ஆயிரமாண்டு தீண்டாமைக் கொடுமைக்கு மண்டியிடுவார்கள்?

அமெரிக்க கருப்பு அடிமைகளின் விடுதலைக்கு வித்திட்ட ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் ஆகியோரின் ஆதரவு நிலையை வரலாற்றில் எவ்வாறு பார்க்க வேண்டும்? அது சரியான வரலாற்றுப் பங்களிப்பு தானே??

அமெரிக்க - ஐரோப்பிய சனநாயக சக்திகள் நிறவெறிக்கு எதிராக அணி சேர்ந்து தெருவில் இறங்கிப் போராடியது போல, தலித்துகள், இஸ்லாமியர்கள் மீது மதவெறி / சாதிவெறி சக்திகள் தாக்குதல், கொலைகள் செய்யும்போது ஏன் இந்திய அரசியல் கட்சிகளையும், சனநாயக சக்திகளையும், சாதாரண இந்தியனின் மனச்சாட்சியையும் உலுக்குவதில்லை?

- கிருஷ்ணன் மருது

Pin It