சென்ற இதழ் தொடர்ச்சி...

frvadukkan 450நான்கு இயல்களைக்கொண்ட ஃபாதர் வடக்கனின் சுயசரிதையில் இரண்டாவது இயல், 1957இல் கேரளத்தில் அமைந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் அவரது பங்களிப்பைக் கூறிச் செல்கிறது. இப்போராட்டத்தில் அவர் பங்கேற்றமை குறித்த அவரது தன்னிலை விளக்கமாகவும் இது அமைந்துள்ளது.

மற்றொரு வகையில் அவரது குற்றவுணர்வின் வெளிப்பாடாகவும் இதைக் கருத இடமுள்ளது. கம்யூனிஸ அனுதாபியாகவும் கம்யூனிஸ இயக்கத்தின் தலைவர்கள் சிலருடன் நெருக்கமான உறவு கொண்டவராகவும் அவர் இருந்துள்ளார். தொழிற்சங்க உணர்வும் உரிமைக்காக குரல் எழுப்பும் குணமும் அவரது இளமைக்கால வாழ்க்கையில் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய பின்புலத்தில் வளர்ந்த இவர் எப்படி, உலகிலேயே முதல்முறையாகத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் தலைவர்களில் ஒருவராக மாறினார் என்பது வியப்பிற்குரியது மட்டுமல்ல, விவாதத்திற்கு உரிய ஒன்றுமாகும்.

இவரது இந்நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் தாம் சில செய்திகளைக் கூறவேண்டியிருப்பதாக இவ்வியலின் தொடக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.. அவர் கூறும் செய்திகளை, ‘நடைமுறை அனுபவம் சார்ந்தவை‘, ‘தத்துவநிலை சார்ந்தவை‘ என இரண்டாகப் பகுத்துக்கொள்ளலாம்.

நடைமுறை சார்ந்த ஒன்றாகத் தொழிற்சங்க அனுபவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். இவரது குருமாணவர் வாழ்க்கையின்போது சமூகப்பணி தொடர்பான பயிற்சியைப் பெறவேண்டியிருந்தது.

இதன் பொருட்டு கல்லேற்றும்கரா என்ற ஊரிலுள்ள கத்தோலிக்க ஆயர் இல்லத்தில் இப்பயிற்சி பெற வந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்.இவர்கள் தங்கியிருந்த காலத்தில் தொழிலாளர் பிரச்சினை ஒன்று இப்பகுதியில் உருவாகியிருந்தது.

முந்திரி ஆலைப் போராட்டம்

இப்பகுதியில் உள்ள ஆலூர், புல்லூர் என்ற இரு ஊர்களில் இயங்கிவந்த முந்திரி தொழிற்சாலைகளை அவற்றின் உரிமையாளர்களான கத்தோலிக்க முதலாளிகள் கதவடைப்புச் செய்துவிட்டனர். ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் பெரும்பகுதியினர் கத்தோலிக்கப் பெண்பிள்ளைகள். அவர்களது கோரிக்கைகள் எளிமையானவைதான். ஆனால் ஆலைகளின் உரிமையாளர்கள் தம் ஆதாயத்தில் சிறு அளவைக்கூடக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. தம் வேண்டுகோள்களை ஆலையின் தொழிலாளர்கள் முன்வைத்தபோது அவற்றின் உரிமையாளர்கள் ஆலைகளை மூட்டிவிட்டனர். இதனால் இங்கு பணியாற்றி வந்த 800 தொழிலாளர் குடும்பங்கள் பட்டினிக்காளாயின.

தொழிற்சாலைகளைத் திறக்காவிடில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பட்டினிப் போராட்டம் நடத்துவது என்று சமூகப்பணிக்காகப் பயிற்சி பெற வந்த குரு மாணவர்களும் அங்குப் பணியாற்றிய குருக்கள் சிலரும் முடிவெடுத்தனர். குருமாணவர் என்ற நிலையில் இவரால் அதில் பங்கெடுக்க இயலவில்லை. கத்தோலிக்கக் குரு ஒருவரும் கத்தோலிக்க ஆசிரியர் ஒருவரும் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவானது. இத்தொழிற்சாலையில் செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கம்யூனிஸ்ட் தலைமையின் கீழ் இருந்தன. ஆலை முதலாளிகளுக்கு ஆதரவான கருங்காலிகளாக இவர்களைக் கம்யூனிஸ்டுகள் கருதியதால் இவர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டனர்.

இதனால் ஒருபக்கம் ஆலை முதலாளிகளின் எதிர்ப்பையும் மற்றொருபக்கம் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் இவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

இவ்விரண்டு அமைப்புகளுக்குமிடையே நெருக்குண்ட நிலையில் நாத்திக கம்யூனிஸ்டுகளையும் சுயநலம்கொண்ட ஆலை முதலாளிகளையும் எதிர்ப்பதென்ற முடிவுக்கு இவர் வந்தார். இதனடிப்படையில் அணி ஒன்று உருவானது. தொழிலாளர் நல அமைச்சர் தலையீட்டினால் விசாரணை ஆணையத்திற்குள் இப்பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டதுடன் கதவடைப்பு காலத்துக்கான ஊதியம் வழங்கவும் கட்டளையிடப்பட்டது. இதனால் கோபமுற்ற ஆலை முதலாளிகள் பிரச்சினைக்கு இவர்தான் காரணம் என்றும் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்ட குருவையும் மற்றவர்களையும் இவர்தான் தூண்டிவிட்டார் என்றும் ஆயரிடம் முறையிட்டனர். மற்றொரு பக்கம் இவர்கள் மீது கம்யூனிஸ்டுகள் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இரிஞ்சிலக்குடா நகரிலுள்ள அய்யங்காவு திடலில் பொதுக்கூட்டம் நடத்தி இவ்விரு பிரிவினரையும் இவர் கடுமையாகச் சாடினார். இதன் தொடர்ச்சியாக திரிசூர் நகரிலும் ஒரு கூட்டம் நிகழ்ந்தது.

இவருடைய ஐந்தாண்டுகால குருமாணவர் பயிற்சிக்கல்லூரி வாழ்வில் கம்யூனிஸம், கம்யூனிஸ எதிர்ப்பு குறித்த நூல்களைப் படித்தறிந்திருந்தார். இதனால் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான விவாதங்களை முன்வைத்தார். திரிசூரிலுள்ள பணக்காரர்களும் மேட்டிமையோரும் இவரது உரையை விரும்பினார்கள். மற்றொரு பக்கம் திரிசூரில் செயல்பட்ட வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இவர் எடுத்த நிலைப்பாடானாது ஒரு தவறான மனிதனுக்கு ஆதரவளித்துவிட்டோமோ என்று அவர்களை எண்ணும்படிச் செய்துவிட்டது. இவரது இச்செயல்பாடு குறித்து ஆயரிடம் முறையிட்டனர்.

1951-52 காலத்தில் திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தில் இவரது கம்யூனிஸ எதிர்ப்பு உரைக்காக இவரை விரும்பி அழைத்தனர். அப்போதைய தேர்தல் அரசியல் சூழலில் முதலாளித்துவ எதிர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு கம்யூனிஸ எதிர்ப்புக்கே முக்கியத்துவம் தரப்பட்டது என்பதை இவர் ஒத்துக்கொள்கிறார்.

இவை தவிர தமது கம்யூனிஸ எதிர்ப்புக்கான நடைமுறை சார்ந்த காரணங்கள் எவற்றையும் இவர் குறிப்பிடவில்லை. அடுத்து தத்துவ அடிப்படையிலான சில காரணங்களை அவர் முன்வைத்துள்ளார். முடிந்த அளவுக்கு அவரது கூற்றாகவே அதைக் குறிப்பிடலாம்.

தத்துவார்த்த எதிர்ப்பு

கம்யூனிசம் மீதான தம் எதிர்ப்புக்கு மூன்று காரணங்களை. ஃபாதர் வடக்கன் முன்வைக்கிறார்:

முதலாவது காரணம் மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் முற்றிலும் சரியானதல்ல. இப்பொழுதும் கூட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.எதிர்ப்பு குறித்த விதி (Law of opposition), மறுத்தல் குறித்த விதி. (Law of Negation) மாறுதல் குறித்த விதி (Law of transformation) என்ற மூன்று விதிகளைத், தம் ஆய்வேட்டுக்கான ஆதாரங்களாக மார்க்ஸ் கொண்டிருந்தார். இவ்விதிகளின் துணையுடன் உயிரின் தோற்றம், அளவு மாறுபாடு (Quantitative Change) பண்புமாறுதல் (Qualitative transformation) என்பனவற்றை விளக்குகிறார். இயக்கவியல் கோட்பாடானது உயிரின் தோற்றம் பொருளின் இயக்கவியல் அடிப்படையில் நிகழ்வதாக விவாதிக்கிறது. அணு மற்றும் ஆற்றல் குறித்து விளக்கும் நவீன அறிவியல் வளர்ச்சியானது மார்க்ஸின் இக்கோட்பாட்டைப் புறந்தள்ளுகிறது.எதிர்மறையின் விதியும் கூட. வலுவான ஆதாரம் கொண்டதல்ல.

மாறுதல் குறித்த விதிமட்டுமே இன்றளவும் நல்ல ஆய்வுக்கருவியாகப் பயன்படுகிறது.பொருளானது தகுந்த அளவில் இணையும்போது பண்பு மாறுபாடு நிகழும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தண்ணீர் ஆவியாக மாறுகிறது.ஒரு குறிப்பிட்ட நிலையில் வெப்பம் குறையும்போது பனிக்கட்டியாகிறது. முதலில் அது தண்ணீராக இருந்து பின்னர் அது நீராவியாகவோ பனிக்கட்டியாகவோ ஆகிறது. இம் மாறுதலானது எந்த ஒரு புறச்சக்தியாலும் நிகழவில்லை. மார்க்ஸின் கருத்துப்படி மாறுதல் விதியின்படி இது நிகழ்கிறது.

டார்வின் கூறியதும் இதை ஒத்ததுதான்.உயிரின் தோற்றமும் மனிதனின் தோற்றமும் பரிணாமத்தின் அடிப்படையில் நிகழ்கின்றன. டார்வினின் கருத்துப்படி பொருள் உயிராக மாறுவதற்கு எந்த ஒரு புற ஆற்றலும், (வெளிக்காரணியும்) தேவையில்லை. / இப்பரிணாமக் கோட்பாட்டுடன் நான் தொண்ணூறு விழுக்காடு உடன்படுகிறேன். ஒரு குழந்தையானது சோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டால் அதை நான் நூறு விழுக்காடு ஏற்றுக்கொள்வேன்.அப்போதும் கூட என்னுடைய கடவுள் நம்பிக்கை தளர்ந்துவிடாது. பொருளுக்குள் உயிர் எவ்வாறு வந்தது என்பது இன்றும் புதிராகவே உள்ளது. உயிரின் தோற்றத்தை மார்க்சியம் நிருபித்தாலும் கூட நான் ஒரு இறைமறுப்பாளனாக மாறமாட்டேன். உண்மையான எதார்த்தமானது தானாகத் தோன்றி தானாக நிலைத்திருப்பதுதான். தோற்றமும் முடிவும் இல்லாததையே கடவுள் என்பேன்.

இதன் காரணமாகவே நான் மார்க்சிசத்தை எதிர்த்தேன். இக்காரணத்தாலேயே இப்போதும்கூட என்னால் முழுமையான மார்க்சியவாதியாக மாறமுடியவில்லை.

ஃபாதர் வடக்கனின் இக்கூற்றை, விரிவான மேற்கோளாகக் காட்டியமைக்குக் காரணம் தத்துவநிலையில் குறிப்பாக இறைமறுப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படுத்துவதற்குத்தான் (அவர் கத்தோலிக்க சமயக் குரு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.) ஆன்மீக நோக்கிலான இக்காரணங்கள் மார்க்சியத்தை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில் தடையாக இருந்ததைக் குறிப்பிட்டுவிட்டு மார்க்சின் ஏனைய முடிவுகளில் தமக்கு உடன்பாடு உள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மார்க்சின் பொருளியல் கோட்பாடு தம் மீது செல்வாக்கு செலுத்தியது என்பதை ஒத்துக்கொள்வதுடன் வர்க்கப் போராட்டத்திலும் தமக்கு நம்பிக்கை உண்டு என்கிறார். ஜனநாயக நடைமுறைகள் தோல்வியடையும்போது இரத்தம் சிந்தும் புரட்சியின் வாயிலாக இந்திய மக்கள் பொருளாதார விடுதலையை அடைவார்கள் என்கிறார். மார்க்சின் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்துடன் ஆன்மீகம் இணையும்போது தம் பன்னிரு மீனவச் சீடர்களுடனான கிறித்துவின் ராச்சியம் வரும் என்கிறார். மக்களாட்சி விழுமியங்களை நிலைநிறுத்தும் வழிமுறையாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, தாம் உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்டுகளின் தன்னிச்சைப் போக்கும் (autocratic) சோவியத் தாளத்திற்கேற்ப ஆடும் அமைப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கியதும் தமது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலைபாட்டிற்குக் காரணம் என்கிறார்.

எதிர்ப்பினைச் செயல்படுத்துதல்

இவ்வாறு கம்யூனிஸம் குறித்த முரணான பார்வைகளைக் கொண்டிருந்த வடக்கன் பாதிரியாருக்கு அவரது கம்யூனிஸ எதிர்ப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாக விமோசன சமிதி நடத்திய போராட்டங்கள் அமைந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி கேரளத்தில் உருவாவதற்கு ஓராண்டுகளுக்கு முன்னர்தான் 1956 மார்ச்சில் இவர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1957 ஏப்ரல் 5ந்தேதி கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியேற்றது.

சாமானிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட இவ்வரசு அம்மக்களின் நலனை முன்னிறுத்தி இரு முற்போக்கான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது. ஒன்று, நிலச்சீர்திருத்தச் சட்டம், மற்றொன்று கல்வித்துறை சீர்திருத்தச் சட்டம். இவ்விரு சட்டங்களும் முற்போக்கான தன்மை கொண்டவை. பரந்தஅளவிலான மக்கள் பிரிவினருக்கு நன்மை பயக்கும் இவ்விரு சட்டங்களையும் இருவேறு பிரிவினர் தம் சுய ஆதாயத்தை முன்னிறுத்தி கடுமையாக எதிர்த்தனர்.

நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் முக்கிய கூறாக நிலமற்ற ஏழைக்குடியானவர்களுக்குப் பயிர் செய்யவும் குடியிருக்கவும் நிலம் வழங்குதல் அமைந்திருந்தது. இவ்வாறு நிலம் வழங்க நிலஉச்சவரம்புச் சட்டத்தின் வாயிலாக நிலங்களைக் கையகப்படுத்த கேரள அரசு முடிவெடுத்திருந்தது. இம்முடிவின்படி பெருநிலஉடைமையாளர்கள் தம்மிடமிருந்த அதிகப்படியான உபரிநிலங்களை இழப்பது தவிர்க்கவியலாத ஒன்றாக அமைந்தது.

கல்விச்சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்ததில் ஜோசப் முண்டசேரி என்ற முன்னாள் கல்லூரிப் பேராசிரியருக்கு முக்கிய பங்கு இருந்தது. கத்தோலிக்கரான இவர் கத்தோலிக்கக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர். நல்ல இலக்கியவாதி. (மலையாள மொழியில் இவர் எழுதிய நாவலொன்று ‘பேராசிரியர்‘ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகியுள்ளது).

கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இவர்தான் கல்வியமைச்சராக இருந்தார். ஒர் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதன் அடிப்படையில் கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த அனுபவ அறிவு இவருக்கு இருந்தது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் நிலை மிகவும் அவலத்திற்குரியதாக இருந்தது. பணிநியமனத்திற்குக் கையூட்டு, பணிப் பாதுகாப்பின்மை, மாத ஊதியத்தில் முறைகேடாகப் பிடித்தம் செய்தல் (அ.மாதவையா எழுதிய ‘சத்யானந்தன்‘ நாவலில் இதனைப் பதிவு செய்துள்ளார்) என்பன முக்கியக் குறைபாடுகளாக இருந்தன.

1959வது ஆண்டு நிலவரப்படி ஆசிரியர் பணியில் நிலவிய கையூட்டு குறித்து ‘ஆசிரியர் பணி நியமனத்திற்காக கல்விக்கூட நிர்வாகத்திற்கு ஆயிரம் ரூபாய் கையூட்டாகக் கொடுக்கவேண்டும்‘ என்று ஃபாதர் வடக்கன் எழுதியுள்ளார். 1974வாக்கில் இது 5ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது என்கிறார்.

கல்விச்சீர்திருத்தச் சட்டமானது, வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பதிவேடுகளின் அடிப்படையில் பணி வழங்குவதைக் கட்டாயமாக்கியது. ஆசிரியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கியதுடன் பணிப்பாதுகாப்பையும் உறுதி செய்தது. கத்தோலிக்கத் திருச்சபையும் நாயர் சேவா சங்கமும் நடத்திவந்த கல்விநிறுவனங்களில் இக்குறைபாடுகள் மிகுந்திருந்தன. இவ்விரு அமைப்புகளுக்கும் நிதி வழங்கும் அமுதசுரபிகளாக அவை நடத்தி வந்த கல்வி நிறுவனங்கள் விளங்கின. 

ஏழைகளுக்கு நிலம் வழங்கும் நிலச்சீர்திருத்தச் சட்டம் தேவையான ஒன்றுதான் என்பது ஃபாதர் வடக்கனின் கருத்தாக இருந்துள்ளது. இச்சட்டத்தை அவர் ஆதரித்துள்ளார். மன்னத் பத்மநாபன் உள்ளிட்ட விமோசன சமிதியின் தலைவர்களிடம் அவர்கள் அமைக்க இருக்கும் புதிய அரசானது வேளாண்மை உறவுகள் தொடர்பான சட்டவரைவில் மாறுதல் எதையும் செய்யமாட்டோம் என்று உறுதி கூறினால்தான் விமோசன சமிதி இயக்கத்தை ஆதரிப்பேன் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். மன்னத் பத்மநாபனுடன் இணைந்து உரையாற்றிய விமோசன சமிதி பொதுக்கூட்டங்களிலும் தாம் இதைத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கல்விச் சீர்திருத்தச் சட்டவரைவின் சில விதிகளுடன் அவருக்கு உடன்பாடு இல்லை. ஆசிரியர் பணிநியமனத்தில் நிலவும் கையூட்டையும் முறையற்ற ஊதியப் பிடித்தத்தையும் தடுத்தல், பணிப்பாதுகாப்பு வழங்கல் தொடர்பான விதிகளை அவர் வரவேற்றபோதிலும் கல்வி முழுவதும் கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது ஆபத்தானது என்று கருதி அஞ்சியுள்ளார்.

தம்முடைய அச்சம் ஆதாரமற்றது என்பதைப் பின்னர் இவர் உணர்ந்துள்ளார். கம்யூனிசத்தின் சர்வாதிகார இயல்பு, அதன் போதனைகள் என்பன குறித்த தவறான பார்வை பத்திரிகை அறிக்கைகளின் அடிப்படையில் தம்மிடம் உருவானமையே இதற்குக் காரணம் என்று விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில் ஆசிரிய நியமனம், நேரடி ஊதியம் வழங்கல், பணிப்பாதுகாப்பு குறித்த விதிகளை ஆதரித்துள்ளார். இக்காலகட்டத்தில் அவர் எழுதிய கட்டுரைகளிலும் குறுநூல்களிலும் இதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளேன் என்றும் எழுதியுள்ளார். இருப்பினும் அதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதில் ஒருவிதமான குழப்பம் இவரிடம் இருந்துள்ளமை புலப்படுகிறது.

திரிசூர் கத்தோலிக்க ஆயரைச் சந்தித்து மறைமாவட்டம் (டயோசிஸ்) நிர்வகிக்கும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தின்போது கையூட்டு வாங்கமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூட்டத்தில் உறுதியளித்தால் இப்போராட்டத்தில் தாம் கலந்துகொள்வதாகக் கூறினார். ஆயர் இதனை ஏற்றுக்கொண்டார்! மறைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆயரின் இவ்வுறுதிமொழியை ஆசிரியர்களுக்கு இவர் அறிவித்தார்.

புனித தோமையார் கல்லூரியில் நடந்த ஆசிரியர் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆயரும் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார். தம்முடைய நிர்வாகத்திலுள்ள மறைமாவட்டப் பள்ளிகளில் நிகழும் ஆசிரியர் நியமனத்திற்கு, கையூட்டு வாங்கமாட்டேன் என்று தெளிவாகக் கூறினார். ஆயரின் இக்கூற்று அனைவரையும் ஈர்த்தது. கேரள அரசின் கல்விச்சட்ட வரைவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட இக்கூற்று ஊக்கமளித்தது. விமோசன சமிதி நடத்திய போராட்டத்தின் தலைவர்களில் ஒருவரான மன்னத் பத்மநாபனின் கட்டுப்பாட்டில் இருந்த நாயர் சேவா சங்கம் நடத்திவந்த பள்ளிகளில் கையூட்டுமுறை அதிகளவில் இருந்தது.

நாயர் நிலவுடைமையாளர்களும் கத்தோலிக்க நிலவுடைமையாளர்களும் நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் தம்மிடமிருந்த அதிகப்படியான நிலங்களை அரசு எடுத்துக்கொள்வதைத் தடுக்க விரும்பினர். கத்தோலிக்கத் திருச்சபை தன் நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் நிகழ்த்திவரும் ஊழல்களையும் முறைகேடுகளையும் தொடர விரும்பியது. ‘கத்தோலிக்கத் திருச்சபை தம் பள்ளிகளைக் காப்பாற்ற விரும்பினால் அது எங்கள் நிலங்களைப் பாதுகாக்கவேண்டும்‘ என்பது பெருநிலவுடைமையாளர்களின் கருத்தாக அமைந்தது என்று ஃபாதர் வடக்கன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கத்தோலிக்கர்-நாயர்களின் கூட்டணியாக விமோசன சமிதி உருப்பெற்றது.

‘அதி பிற்போக்காளர்களின் கூட்டாக‘ இதைத் தாம் கருதியதாக ஃபாதர் வடக்கன் குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்டுகள் - கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் என்று எதிர் எதிராக இரு அணிகள் உருவான நிலையில் இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையான அணி ஒன்றுக்கு இடமில்லாமல் போய்விட்டது. இப்போராட்டகால நிகழ்வுகள் சிலவற்றை கூறிச் செல்லும் ஃபாதர் வடக்கன் அதில் தம்முடைய பங்களிப்பையும் ‘தொழிலாளி’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை வெளிக்கொண்டு வந்ததையும் விவரித்துச் செல்கிறார். இறுதியாக இப்போராட்டத்தின் விளைவாக 1959 ஜுலை 31இல் குடியரசுத் தலைவரின் ஆணையின்படி கேரள அரசு கலைக்கப்பட்டது.

இதன்பின்னர் அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசு ஜெர்மனிக்கு வரும்படி பாதர் வடக்கனுக்கு அழைப்பு விடுத்தது. கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைப்பதில் தமது பங்களிப்புக்கான வெகுமதியே இவ்வழைப்பு என்று வெளிப்படையாக இவர் ஒப்புக்கொள்கிறார். அவர் மேற்கொண்ட அய்ரோப்பிய பயண அனுபவங்கள் குறித்தும் கிறித்தவர்களின் புண்ணிய தலங்களுக்குச் சென்றமை போப்பாண்டவரைச் சந்தித்தமை என்பனவற்றையும் பதிவு செய்துள்ளார்.

புதிய அரசும் நில வெளியேற்றமும்

கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சார்ந்த பட்டம் தாணுப்பிள்ளை முதல்வரானார்.

ஆடம்பரமான மேற்கத்திய வாழ்வை இவர் அனுபவித்துக்கொண்டிருந்தபோது மனிதநேயமற்ற சில செயல்கள் கேரளத்தில் நடந்துகொண்டிருந்தன. மழை பொழியும் ஜூலை மாதத்தில் உடும்பன்சோலை என்ற பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த இரண்டாயிரம் குடும்பங்களை, கடுமையான மழைக்காலம் என்றும் பாராது அமராவதி காட்டுப்பகுதிக்குள் காவல்துறையினரை ஏவி புதிய கேரள அரசு விரட்டியடித்தது.

இவ்வாறு விரட்டப்பட்டவர்களில் பலர் காட்டில் இறந்துபோயினர். இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். நிலவெளியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அய்ந்து சென்ட் அளவு நிலம் வழங்கக்கூட புதிய அரசு முன்வரவில்லை. தம்மைப் போன்றவர்கள் இரவும் பகலும் உழைத்து உருவாக்கிய ஓர் அரசு இத்தகைய செயலைச் செய்யும் என்பதை இவரால் நம்பமுடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.கே.கோபாலன் (இனி ஏகேஜி) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்கு சென்று அம்மக்களுக்கு ஆதரவாகப் பட்டினிப்போராட்டத்தை மேற்கொண்டார். ஓர் அரசியல் புயல் மலைப்பகுதியில் உருவாகிவிட்டது.

103 டிகிரி காய்ச்சலுடன் திரிசூர் வந்த இவர் ஓய்வெடுக்கவேண்டும் என்ற அறிவுரையைப் பொருட்படுத்தாமல் அமராவதிக்குச் சென்றார். இவர் சென்றபோது ஏகேஜியை கைது செய்து கோட்டயம் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அமராவதி மலைக்குன்றுகளில் செங்கொடி பறந்துகொண்டிருந்தது. இவர் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் காண்போரை ஈர்க்கும் வகையில் நிகழ்ந்துகொண்டிருந்தது.

முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருத்ந இளைஞன் ஒருவன் இவரை நோக்கி ஓடிவந்து தன் நெஞ்சில் அடித்தவாறு ‘நீங்கள் இங்கிருந்தால் இது நிகழ்ந்திருக்குமா ‘என்று உரக்கக் கூவினான். கம்யூனிஸ எதிர்ப்பு அணியில் அவன் செயல்பட்டவன் என்பதை இவர் அறிந்துகொண்டார். அதேபோழ்து ஊர்வலத்தில் சென்றவர்கள் இவரைச் சூழ்ந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் சிரியன் கிறித்தவர்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்தனர். ‘தந்தையே நீங்கள் எங்களைக் காப்பாற்றவேண்டும், காவல்துறையினர் ஏகேஜியை அழைத்துச் சென்றுவிட்டனர்.‘ என்று கதறினர். இது இவரது உள்ளத்தைத் தொட்டது. ‘அவர்களுடன் சேர்ந்து நானும் அழுதேன்‘ என்று குறிப்பிட்டுவிட்டு என்ன நிகழ்ந்தது என்பதை அவர்களிடம் கேட்டறிந்ததாக எழுதியுள்ளார்.

‘உங்களுக்காக நானும் இறப்பேன், ஏகேஜியும் நானும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும் கூட்டாக இணைந்து இந்த வெளியேற்றத்தை எதிர்ப்போம்’ என்று அவர்களுக்கு உறுதியளித்தார். 

நாற்பது குடும்பங்கள்கூட தங்குவதற்கு இடம் போதாத இரு கொட்டகைகளில் ஏறத்தாழ பத்தாயிரம் எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் குளிரில் நடுங்கியவாறே மரங்களின் கீழ் இருந்தனர். இவர் அங்கு சென்ற அன்று குறைந்தது முன்னூறு குழந்தைகளாவது நோய்வாய்ப்பட்டிருந்தனர். அக்குழந்தைகளில் பல சாவின் விளிம்பில் இருந்தன.

எந்த ஒரு அமைச்சரும் அந்த இடத்தைப் பார்வையிட வரவில்லை. ஒரு கத்தோலிக்கக் குருவோ துறவினியோ அங்குத் தென்படவில்லை. ஒன்று அல்லது இரண்டு இளங்குருக்கள் நிலவெளியேற்றத்தை எதிர்க்க முன்வந்தனர். அவர்களைக் கைது செய்துவிடுவதாக காவல்துறை அச்சுறுத்தியதும் அவர்கள் அமைதியாகத் திரும்பிச் சென்றுவிட்டனர்.

‘குருக்கள் அமராவதிக்குச் செல்லக்கூடாது. அரசை எதிர்க்கக்கூடாது. குருக்களுக்கு அரசியல் தேவையில்லை. கம்யூனிஸ்டுகள் இப்பிரச்சினையை எதிர்கொள்ளட்டும்‘ என்பதே கத்தோலிக்க ஆயர்களின் நிலைப்பாடாக இருந்தது என்ற உண்மையை இவர் போட்டுடைக்கிறார். (இதே ஆயர்கள் குருக்களையும் துறவினிகளையும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும்படி சில மாதங்களுக்கு முன்பு தூண்டிவிட்டனர். குருக்களுக்கு அரசியல் தேவையில்லை என்று அப்போது ஆயர்களுக்குத் தெரியவில்லை!)

நம்முடையை அமைச்சரவையையே நாம் எப்படி எதிர்ப்பது என்பது விமோசன சமிதி நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டோரின் கருத்தாக இருந்தது. நம்முடைய (காங்கிரஸ்) அமைச்சர் சாக்கோவின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது. எனவே காவல்துறையின் வரம்புமீறல் குறித்துப் பேசுவது என்பது கம்யூனிஸ்ட் பரப்புரையாகிவிடும். காங்கிரஸ் கட்சியினரின் கூற்றாக இது வெளிப்பட்டது. தம் கட்சியைச் சேர்ந்த பட்டம் தாணுப்பிள்ளை முதலமைச்சராக இருந்ததால் பிஎஸ்பி அமைதி காத்தது. இந்நிகழ்வுகள் குறித்து முஸ்லீம் லீக் அலட்டிக்கொள்ளவில்லை. இப்போக்குகளால் இவர் தளர்ந்துவிடவில்லை. கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராகப் பரவலாக அறியப்பட்ட வடக்கன் பாதிரியார் கம்யூனிஸ்ட் தலைவர் ஏகேஜியை அரவணைத்துக்கொண்டது கம்யூனிஸ்ட் அல்லாதாரிடம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்ப்புச் செயல்பாடுகள்

autobiography vadakkan 450அமராவதி மக்களின் அவலநிலை குறித்து உள்ளத்தைத் தொடும் வகையிலான அறிக்கை ஒன்றைத் தயாரித்து அதைப் பத்திரிகைகளுக்கு வழங்குவதற்காக இவர் திரிசூர் சென்றார். மனோரமா பத்திரிகை அலுவலகம் சென்று தம் அறிக்கையை கொடுத்ததுடன் அதன் உரிமையாளர் மேத்யூவிடம் தாம் கண்ட காட்சிகளை விவரித்துக் கூறினார்.

மனிதநேயம்கொண்ட மேத்யூ பத்திரிகையாசிரியர்களை அழைத்து இது தொடர்பாக அரசை விமர்சித்து தலையங்கம் எழுதும்படிக் கூறியதுடன் ஃபாதர் வடக்கனின் அறிக்கையை முழுமையாக வெளியிடுவதாகவும் உறுதியளித்தார். ஆனால் இவை இரண்டும் அச்சில் வரவில்லை. இதே கதிதான் இவர் உருவாக்கி வளர்த்த ‘தொழிலாளி’ பத்திரிகைக்கு எழுதி அன்ப்பிய கட்டுரைக்கும் நேர்ந்த்து. ஆயரின் ஆணைப்படி இது அச்சிடப்படவில்லை.

பெருநிலவுடைமையாளர்கள் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் ஆகியோரின் அரசியல் பின்புலமே இதற்குக் காரணம் என்பதை இவர் பின்னால் அறிய நேரிட்டது. இதன் தொடர்ச்சியாக இவர் விரிவாகக் கூறியுள்ள செய்திகள் கேரளத்தின் நிலப்பிரச்சினை தொடர்பாக ஆழமான அறிவு கொண்டவர் என்பதையும் நிலமற்ற ஏழைகளின் மீதான இவரது சார்புநிலையையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. (பக் 86-88).

கம்யூனிஸ்ட் அமைச்சரவை கலைக்கப்பட்டதும் மன்னத் பத்மநாபனும் தோட்ட முதலாளிகளாக விளங்கிய கிறிஸ்தவர்களும் வனத்துறை நிலங்களை ஆக்கிரமித்ததுடன் அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த ஏழைக்குடியானவர்களை வெளியேற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயர்களும் துறவற சபைகளும் விமோசன சமிதி போராட்டத்தின்போது அமெரிக்காவிடமிருந்து பணம் பெற்றதையும் பெருநிலக்கிழார்களுக்கும் மலைத்தோட்ட முதலாளிகளுக்கும் ஆதரவாக இருந்ததையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

நடைப்பயணம்

அமராவதியில் அல்லல் பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு உணவு, போர்வை ஆகியனவற்றை வழங்கும் பணியை மேற்கொண்டதுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பிற இயக்கம் சார்ந்தோர் அடங்கிய நடைப்பயணம் ஒன்றுக்கும் இவர் ஒழுங்கு செய்தார்.

கோட்டியூரில் இருந்து தொடங்கிய இப்பயணத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள் இடம்பெறவில்லை. 400 மைல் தொலைவில் உள்ள தலைநகர் திருவனந்தபுரம் நோக்கி நடைப்பயணமாகப் புறப்பட்ட இப்பயணம் 46 நாட்களில் அங்கு சென்றடைந்தது. செல்லும் வழியில் நாள்தோறும் பொதுக்கூட்டங்களும் ஆங்காங்கு நடந்தன.

அம்பலவயல் என்னும் ஊரிலும் நிலவெளியேற்றம் நிகழும் என்ற அச்சம் இருந்ததால் அங்கிருந்தும் ஓர் அணி புறப்பட்டது. இந்நடைப்பயணத்திற்கு ஆங்காங்கே வரவேற்புகளும் நிகழ்ந்தன. கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சி, தன் கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்வதற்குத் தடை விதித்தது. ஆனால் இதை மீறி ஆயிரக்கணக்கான காங்கிரசார் கலந்துகொண்டனர்.

பாலை எனும் நகரில் இவர் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால் பாலை ஆயர் தம் மறைமாவட்ட எல்லைக்குள் இவர் உரையாற்றத் தடை விதித்தார். திரிசூர் ஆயரும் இவர் உரையாற்ற அனுமதி மறுத்தார். ஆனால் ஊர்வலத்திற்கு வரவேற்பு நிகழ்ந்த இடங்களில் இவர் உரையாற்றினார்.

நடைப்பயணத்தின் இறுதியில் திருவனந்தபுரம் பழவங்காடி திடலில் நிறைவுக்கூட்டம் நடந்தது. இதில் இவரும், ஏகேஜி, வர்க்கீஸ், வெலிங்டன் ஆகியோரும் உரையாற்றினர். நிலவெளியேற்றத்திற்கு எதிரான பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதில் இந்நடைப்பயணம் முக்கியப் பங்காற்றியது. நிலவெளியேற்றம் தொடர்பான மனுவைப் பெற்றுக்கொள்வதற்குக்கூட முதலமைச்சர் மறுத்தார். பின்னர் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளைக்கு எதிரான கருப்புக்கொடிப் போராட்டம் நடந்தது. பலர் கைதாகி, காவல்துறையின் சித்திரவதைகளுக்கு ஆளாகினர். கேரளத் திருச்சபையையும் இவரையும் பாதுகாக்கும் முகமாக, சமூகம், சமூகப்பணி குறித்த கல்வி பயில இவரை வெளிநாடுகளுக்கு அனுப்பினர். இது ஒருவகையான நடைமுறைத் தந்திரம்தான். (இப்போதும்கூட பல மறைமாவட்டங்களில் இது தொடர்கிறது).

பட்டம் தாணுப்பிள்ளை ஆளுனராக்கப்பட்டார். அவரையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சங்கர் என்பவர் முதல்வராக்கப்பட்டார். இவருக்கு எதிராக சாக்கோ என்பவரின் தலைமையில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு குழு இயங்கியது. இக்காலத்தில் இவர் பங்கேற்று நடத்திய போராட்டங்கள் குறித்தும் அரசு வன்முறை குறித்தும் கனடா நாட்டுக்குச் சென்று உயர்கல்வி பெற்றமை குறித்தும் சில செய்திகளைக் கூறியுள்ளார்.

இதுவரை ஃபாதர் வடக்கனின் குருத்துவ வாழ்க்கை குறித்து எதையும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ளவில்லை. கம்யூனிஸ எதிர்ப்பணியில் அவர் செயல்பட்டமை குறித்தும் நிலவெளியேற்றத்திற்கு எதிராகக் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டமை குறித்தும் தெரிந்துகொண்ட அளவுக்கு ஒரு கத்தோலிக்கக் குருவாக அவரது பணி எவ்வாறு இருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. அவரது குருத்துவப் பணிதான் ஃபாதர் என்ற அடைமொழியை அவரது பெயருக்கு முன்னால் வழங்கியுள்ளது. எனவே அப்பணி குறித்து அறிந்துகொள்ளும்போதுதான் அவரைப்பற்றி முமையாக அறிந்துகொண்டவர்களாவோம்.

அடுத்த இதழில் பங்குக்குரு வடக்கனை நாம் சந்திப்போம்.

தொடரும்

Pin It