ஒருவரின் கருத்துக்களே அவரின் ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டக் கூடியவை. ஒருவரின் தளராத முயற்சி, செயல்திறன், பிறரது ஆதரவு போன்றன அவரது கருத்துக்களின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. சந்திரனை இலக்காகக் கொண்டால்தான், ஏதாவது ஒரு நட்சத்திரத்தையாவது நாம் வசப்படுத்த முடியும். இதை வஉசி அவர்களது வாழ்வும் கருத்துக்களும் நமக்கு உணர்த்துகின்றன.

பிரித்தானிய வல்லரசின் கீழ் அடிமைப் படுத்தப்பட்ட இந்தியாவை விடுதலை செய்வதற்குப் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் வ.உ.சி அவர்களின் முன்னெடுப்பு, தனித்துவமானது. முன் உதாரணம் அற்றது.

பிரிட்டனின் முதுகெலும்பை முறிக்கக் கூடிய ஒரு காரியத்தை வஉசி அவர்கள் மேற்கொண்டார். இத்தகையதோர் முயற்சியை இந்தியத் துணைக்கண்டத்தில் அவரது காலகட்டத்தில் யாரும் சிந்தித்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.

வெள்ளையரை எதிர்த்துக் கப்பல் ஓட்டுவது என்பது, தற்சார்புப் பொருளாதாரத்தையும், அரசியல் விடுதலையையும் இணைத்த முயற்சி ஆகும். இந்தப் புதுப் பரிசோதனையில் அவரது தனிப்பட்ட வாழ்வும், அரசியல் வாழ்வும் நாசமாகும் சூழல் வந்தபொழுதும், அவர் சிறிதும் பின்வாங்கவில்லை. அதுதான் ஒரு தலைவருக்கு அழகு.

"என்மனமும் என்னுடம்பும் என்சுகமும் என்னறமும்

என்மனையும் என்மகவும் என்பொருளும் என்மனமுங்

குன்றிடனும்யான் குன்றேன் கூற்றுவனே வந்திடனும்

வென்றிடுவேன் காலால் மிதித்து"

எனச் சங்காரமிட்டார் வஉசி அவர்கள்.

1908 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மூன்றாம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவிலும் இத்தகைய மன உறுதியையே அவர் வெளிப்படுத்துகிறார்.

"இனி என் பேரில் கலகக் குற்றம் சாட்டப்படும். ஆங்கிலேயர்கள் எச்சரிக்கின்றபடி விலகாவிட்டால் என்னையும் சுட்டு தள்ளிவிட இருக்கிறார்கள். யாரோ ஒரு பெரிய போலீஸ் அதிகாரி தம் படையோடு வந்து சுட்டுத்தள்ளும் பட்சத்தில் என்ன செய்யக்கூடும் என்று என்னையே கேட்டால், 35 கோடி ஜனத்தில் 3000 / 4000 பேர் சுடப்பட்டால்தான் என்ன? அப்பேற்பட்ட சாவு எங்களுக்கு விதிக்கப்பட்டதானால், நானும் சிவாவும் சுடப்படத் தயார்தான். மனிதன் இறக்கவே பிறக்கிறான். இன்ன விதமாய் இறக்கிறோம் என்பதைக் கவனிக்கவில்லை. நாங்கள் இறப்பதற்கு அஞ்சவில்லை" எனும் அவரது பிரகடனம் அவரது உருக்குப் போன்ற வைராக்கியத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் காந்தியாருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் நாட்டுக்கான தனது அர்ப்பணிப்பைத் தெளிவு படுத்துகிறார்.

"எனது தேசப்பற்றாளர்களுக்காக எனது வாழ்க்கை முழுவதையுமே நான் செலவிடத் தயாராக இருக்கிறேன். என்னுடைய அனைத்து நேரமும் எனது நாட்டுக்கும், நாட்டின் மீது பற்று உள்ளவர்களுக்கும் மட்டுமே ஒதுக்க விரும்புகிறேன். இவை இரண்டுக்கும் பிறகுதான் கடவுளுக்கே கூட நேரம் ஒதுக்குகிறேன்" எனும் அவரது வாழ்வுதான் அவர் தரும் செய்தியாகும்.

அது மட்டுமல்ல, அவர் இயற்றிய மெய்யறிவு நூலில் "மறங்களைதல்" எனும் தனியே ஓர் அதிகாரத்தை அமைத்து, அதில் எவற்றை எல்லாம் களைய வேண்டும் என அறிவுறுத்துகிறார். அதில் மிக முக்கியமானதோர் கருத்தைப் பதிவு செய்கிறார்.

"நல்லுயிரை நல்வினையை நற்பொருளைக் காத்தற்குச்

சொல்லியவெல் லாஞ்செயினுந் தோடமிலை - யல்லாமல்

தீயுயிரைத் தீவினையைத் தீப்பொருளைக் காத்தற்காங்

காயவெலாம் பாவ மறி"

நன்மையை விளைவிக்கும் உயிர்களையாவது, நன்மையை விளைவிக்கும் செயல்களையாவது, நன்மையை விளைவிக்கும் பொருள்களையாவது பாதுகாக்கும் பொருட்டுப் பாவச் செயல்கள் செய்தாலும் குற்றம் இல்லை. ஆனால், தீமை விளைவிக்கும் உயிர்களையாவது, தீமை விளைவிக்கும் செயல்களையாவது, தீமை விளைவிக்கும் பொருள்களையாவது பாதுகாக்கும் பொருட்டுச் செய்யப்படும் செயல்கள் எல்லாம் பாவச்செயல்களாகும். இதனை நன்றாக அறிவாயாக! - எனும் வஉசி அவர்களது கருத்து, காந்தியாரிடமிருந்து வேறுபடும் அவரது அணுகுமுறையைப் புலப்படுத்துகிறது. இந்த அணுகுமுறை இலக்கு -- வழிமுறை தொடர்புடையதாகும். இலக்கு, பலருக்கும் நன்மைபயக்கும் என்றால், வழிகளில் சில தவறுகள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது வஉசி அவர்களது முடிவாக இருந்தது. ஆனால், காந்தியாரோ இலக்கு - வழிமுறை இரண்டிலும் புனிதத்தை எதிர்பார்த்தார். இரண்டிற்கும் வரலாற்றில் இடம் உண்டு என்பதுதான் மெய் நடப்பாகும்.

"அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை" எனும் பேராசான் வள்ளுவரது அன்புடைமை அதிகாரக் குறளோடு வஉசி அவர்களது கருத்து இசைந்து செல்வது குறிப்பிடத் தக்கதாகும்.

காந்தியாரோடு பல்வேறு கூறுகளில் வஉசி அவர்கள் வேறுபட்டிருக்கிறார். அரசியல் அணுகுமுறையில் இருவருக்கும் இடையே ஆழமான வேறுபாடு நிலவியது. காரைக்குடிக்கு அருகிலுள்ள சிறாவயல் கிராமத்திலிருந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் ஆசிரமத்திற்கு வ உ சி அவர்கள் வந்தபொழுது, அங்குள்ள இளைஞர்கள் இராட்டையில் நூல் நூற்கிறார்களா எனக் கேட்டறிந்தார். ஆம் எனும் ஜீவாவின் பதிலைக் கேட்டதும், "வாளேந்த வேண்டிய கைகளில் இராட்டை சுற்றச் சொல்கிறாயே" எனத் தெரிவித்து ஜீவாவை வ உ சி அவர்கள் கடிந்து கொண்டார் என்பது வரலாறு.voc ship

(கொழும்பு நகருக்கு வ.உசி. அவர்கள் விட்ட பயணிகள் கப்பல்)

சுயராஜ்யக் கோட்பாட்டில் தீவிரப் பற்றுக் கொண்ட வஉசி அவர்களால், காந்தியாரின் சாத்வீகக் கருத்துக்களுடன் இசைந்து போக முடியவில்லை. நேதாஜிக்கு முன்பே காந்தியாரின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்தவர் அவர். காந்தியாரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த பொழுது கூட, வஉசி அவர்கள் தனது நிலைபாட்டில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

அரசியலில் திலகரின் வழி நின்று தீவிரமாகக் களமாடினாலும், சமூகம் குறித்த திலகரின் கருத்துக்களை வஉசி அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

எடுத்துக்காட்டாக, பார்ப்பனர் அல்லாத ஏனைய பிற்பட்ட சாதிகளை மிகவும் இழிவாகக் கருதியவர் திலகர். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதைத் திலகர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எண்ணை எடுக்கும் செட்டியார்களும், புகையிலைக் கடைக்கார்களும், சலவையாளர்களும், அவரைப் போன்ற ஏனையோரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டுமென்று ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதைத் தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று திலகர் கூறினார். தமது அபிப்பிராயத்தில் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்வதுதான் அவர்களது கடமையே தவிர, சட்டங்களை இயற்றும் அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் விழையக் கூடாது" எனச் சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திலகர் பேசியதாக அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுவது கருதத்தக்கது.

இந்திய சமூகத்தில் சாதி குறித்த ஒருவரின் கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்துத்தான் அவரை மதிப்பீடு செய்ய முடியும். தமிழகத்தில் பிள்ளைமார் சமூகம், உயர்சாதியாகக் கருதப்படுகிறது. அந்தச் சமூகத்தில் பிறந்த வஉசி அவர்கள், சாதி வேறுபாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவராக விளங்கினார். சாதிகளை வகைப்படுத்தும் பொழுது பார்ப்பனர் எனவும், பிற சாதிகள் அனைத்தையும் "தாழ்த்தும் சாதிகள் " எனவும் சுட்டுகிறார்.

மேலும் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விருதுநகர் இராமையா தேசிகர் எனும் கண்ணிழந்தவரைத் தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருந்தார் வஉசி அவர்கள். அவரது முதல் மனைவியான வள்ளியம்மை தன் கையால் தேசிகருக்கு மிகுந்த அன்புடன் உணவு ஊட்டுவதைக் கண்டு ஊரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் வஉசி அவர்களைச் சாதி விலக்கம் செய்யத் துணிந்தனர். ஆனால், வஉசி அவர்கள் இந்த எதிர்ப்புகளை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அதேபோல், தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சகஜானந்தர் என்பவரை வ உ சி அவர்கள் சென்னையில் தம் வீட்டிற்குக் கூட்டிச் சென்று உணவு கொடுத்துப் பராமரித்து வந்தார். அவருக்குத் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களைக் கற்பித்ததோடு, சென்னையை விட்டு ஒட்டபிடாரத்திற்குச் சென்ற போதும் சகஜானந்தரை உடன் அழைத்துச் சென்றார். தாம் கலந்து கொண்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவரையும் அழைத்துச் சென்றார்.

வஉசி வாழ்ந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட செயல்கள் வியக்கத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், சிறையில் இருந்த பொழுது, "பார்ப்பான் அல்லது பாண்டி வேளாளன் உணவு சமைத்தால்தான் உண்பேன்" எனத் தாம் கூறியதாக, வஉசி அவர்களே சுயசரிதையில் குறிப்பிடுகிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப் படுகிறது. இது மிச்சேல் எனும் சிறை அதிகாரிக்கும் வஉசிக்கும் நடைபெற்ற உரிமைப் போராட்டம் குறித்ததாக நாம் காண முடியும். ஏனெனில்,

"மதகுல வேற்றுமை மனத்திலும் கொள்ளேன்" என்று அதே சுயசரிதையில் அவர் பதிவு செய்வதையும் ஒப்பு நோக்கிக் காண வேண்டும்.

மேலும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த இராமையா தேசிகர் மற்றும் சகஜானந்தர் ஆகியோரைத் தனது வீட்டிலேயே வைத்து வஉசி அவர்கள் பராமரித்த செயலும் இத்தோடு இணைத்துக் காணப்பட வேண்டும். சாதி ஒழிப்பு பற்றி வெறுமனே பேச்சில் முழங்காமல், செயலில் வாழ்ந்து காட்டியவர் வஉசி அவர்கள்.

மேலும் திலகர் மற்றும் காந்தி போன்றோர் பகவத் கீதைக்கு உரை எழுதிய பொழுதும், வஉசி அவர்கள் சாதிக் கட்டமைப்பை உயர்த்திப் பிடிக்கும் கீதைக்கு ஒருக்காலும் உரை எழுதவில்லை. மாறாக,

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்" - போன்ற சமத்துவ விழுமியங்களை வலியுறுத்தும் வள்ளுவரின் திருக்குறளுக்கு உரை எழுதினார்.

தவிரவும், 1928-ல் செட்டிநாட்டுக்குச் சென்று ஆற்றிய சொற்பொழிவுகளில் பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை அவர் பதிவு செய்துள்ளார். அவற்றில் சுயமரியாதை இயக்கத்தின் செல்வாக்குத் தெளிவாகக் காணப் படுகிறது. "பிறப்பினால் உயர்வு தாழ்வு நமது நாட்டு வழக்கமன்று. ஆரியர் நூல்கள் தமிழ் நூல்களில் கலந்த பின்னரே பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற கோட்பாடு வந்தது. தமிழ்நாட்டு நூல்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கூறப்படவில்லை. புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் உண்டெனக் காணப்படவில்லை" எனத் தெளிவு படுத்துகிறார்.

மேலும், 1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாநில அரசியல் மாநாட்டில் பங்கேற்ற வஉசி அவர்கள், அரசு வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனும்.தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அதுமட்டுமின்றி 1927 - ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மூன்றாவது அரசியல் மாநாட்டில், பார்ப்பனர் அல்லாதோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து மிக விரிவாக அவர் உரையாற்றியதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாதி குறித்து முற்போக்கான கொள்கையைக் கொண்டிருந்தது போலவே, மதம் குறித்தும் வஉசி அவர்கள் நல்லிணக்கக் கண்ணோட்டம் உடையவராக இருந்தார். குறிப்பாக மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு அவர் எழுதிய உரையைக் குறிப்பிட வேண்டும். அதன் உரைப்பாயிரத்தில் வஉசி அவர்கள், " இவ்வுரையில் ஏனைய உரைகளில் காணப்படும் பல மதக் கோட்பாடுகளும், அவற்றின் கண்டனங்களும் காணப்படா. அவை காணப்படாமைக்குக் காரணம், மக்கள் பல்வேறு பெயர்களோடும், வடிவுகளோடும் காணப்படினும், அவர்களெல்லாம் மக்கள் சாதியினர் ஆவது போல, மதங்கள் பல்வேறு பெயர்களோடும், கொள்கைகளோடும் காணப்படினும் அவைகளெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே இறைவனைப் பற்றிய பேசுகின்றன என்று யான் கருதுகின்றமையே " எனக் குறிப்பிடுகிறார்.

அதைத் தொடர்ந்து அவர் சுட்டிக்காட்டும் கருத்துக்கள் சமகாலப் பொருத்தப்பாடு மிக்கவையாகும். "மத வேற்றுமை காண்பவர்களும், பேசுபவர்களும், "யான்" "எனது" என்னும் மதவெறி பிடித்த மாக்களே என்றும், நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலைமையில், மத வேற்றுமைகளையோ, சாதி வேற்றுமைகளையோ, வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும், பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களே என்றும் யான் கருதுகின்றேன்" என்ற அவரது கருத்து, மதவெறியால் நாட்டைத் துண்டாட நினைப்பவர்களுக்குச் சரியான பாடமாகும்.

அது மட்டுமல்ல, இறை நம்பிக்கையும் சைவ சமய சித்தாந்தங்களில் நல்ல புலமையும் கொண்டிருந்த வஉசி அவர்கள், தனது அரசியல் வாழ்வில் மதத்தைக் கலக்கவில்லை. சமயம் என்பது தனி மனிதனின் தொடர்புடையது என்பதில் அவர் தெளிவாக இருந்து வந்தார். இந்தக் கருத்தில் அவர் காந்தியாருடன் வேறுபட்ட போதும், தமது கருத்தில் உறுதியாக இருந்து வந்துள்ளார். இறுதிவரையிலும் அதில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை.

சுதேசாபிமானம், சுதேச ஸ்டீமர் விக்ஞாபனம் ஆகியவையே இதுவரையில் கிடைத்துள்ள வ உ சி அவர்களின் அரசியல் கட்டுரைகளில்.தனித்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.

வ உ சி அவர்களின் முதல் அரசியல் கட்டுரையான "சுதேசாபிமானம்" பகுதியில், "சுதேசத்தார் ஒன்று சேர்வதற்கும், ஒற்றுமையாக இருப்பதற்கும் முக்கியத் தடைகள் ஜாதிய அபிமானம், மதாபிமானங்களே! உலகத்தில் தாழ்ந்த நிலைமையை அடைந்த ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்தையும் கவனிப்போமாயின், சுதேசத்தார் ஜாதி பேதம் / மத பேதம் ஏற்பட்டுச் சுதேச ஒற்றுமையையும் பேதப்படுத்தி, சுதேச நிலைமையையும் பேதப்படுத்தினதாகத் தெரியவரும் " எனத் தெளிவு படுத்துகிறார்.

இவை தவிர, பல்வேறு மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் வஉசி அவர்கள் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "சிரார்த்தம் என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்படும் அரிசி, காய்கறி முதலியன பிதுர்களுக்குப் போய் சேரும் என்று கூறுவது பொய்யாகும். இது அப்படி போய் சேர்வது உண்மையானால், பிதுர்கள் தங்கள் பிள்ளைகள் மூலம் வாங்கப் பிரியப்படுவார்களே அன்றி, பிறர் மூலம் வாங்கப் பிரியப்பட மாட்டார்கள். தென்புலத்தார் என்பதற்கு ஏன் பிதுர்கள் என்று பொருள் கூற வேண்டும்? வள்ளுவர் அவ்வாறு கூறினாரா? தென் -- அழகிய / குலத்தார் -- அறிஞர்கள் அதாவது ஞானிகள் என்றே பொருள்படுகிறது. தென்புலத்தார் கடன் ஆற்ற வேண்டும் என்றால், ஞானிகள் விட்டுப்போன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதே பொருளாகும்.

மனுநீதி கண்ட சோழனைப் பற்றிக் கூறும் பொழுது, இப்பொழுது இருக்கும் மனுஸ்மிருதியை நடத்திக் காட்டியமைக்காகவே, மனுநீதி கண்ட சோழன் என்று பெயர் வந்தது என்று பொருள்படும்படியே சேக்கிழார் கூறினார் என்று கூறினார்கள். அவர் அப்பொருட்படி கூறியிருப்பாராயின், அவர் மனுஸ்மிருதியைப் படிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கன்றுக் குட்டியைக் கொன்றதற்காக, கொன்ற மனிதனையே கொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டினால், மனுஸ்மிருதியில் இதுவரையில் நாங்கள் பார்த்துள்ள கொடுமைகளோடு இதனையும் சேர்த்துச் சொல்கிறோம். எந்த நூலானாலும் குற்றம் இருக்குமானால், அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்குக் கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைக் கொண்டு ஆராய்வோம் கடவுளே எழுதினார் என்று கூறப்படும் நூலினும் பிழை இருக்குமானால், அதனையும் தள்ளவேண்டியதுதான்” எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.

மேலும், பிதுர்கடன் செய்தல் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்தார். "தந்தை தாய் இறந்து போனால், பிணத்தைச் சுட்டுவிட்டு ஏழைகளுக்குச் சாப்பாடு போடலாம். சபிண்டி, திதி முதலிய செய்ய வேண்டும் என்று சொன்னால், ஐயா அது எங்கள் அப்பனுக்குக் போகாது. நாங்கள் இப்பொழுது விழித்துக் கொண்டோம். இனி ஏமாற்ற முடியாது என்று கூறி விடுங்கள்" என அறிவுறுத்துகிறார்.

வ உ சி அவர்கள் காலம் கடந்து சிந்தித்தவர். பெண்கள் குறித்த அவரது பார்வை இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றன. மனித குல வரலாற்றில் ஆண் - பெண்ணிற்கு இடையே தோன்றிய பாகுபாடுதான் முதன்மையான பிரிவினையாகும். புராதனப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர்த்து, ஏனைய சமுதாயப் படிநிலைகளில் பெண்களுக்கான உரிமைகளும், அவர்களது தலைமைப் பாத்திரமும் மறுக்கப்பட்டே வந்துள்ளது. `குடும்பத்தில் ஆண் பூர்ஷ்வா வர்க்கமாகவும், பெண் பாட்டாளி வர்க்கமாகவும் இருக்கின்றனர்" என்று ஏங்கெல்சு இது பற்றிக் குறிப்பிடுகிறார்.

எனவே இத்தகைய பாகுபாட்டைக் களைவதற்காகப் பெண்களுக்கு உரிய கல்வியை அளிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அவ்வகையில் வஉசி அவர்களது முன்னெடுப்புகள் போற்றத்தக்கதாக உள்ளன.

"நம் நாட்டில் பெண் மக்களைச் சமைக்கும் இயந்திரமாகச் செய்துவிட்டனர். மேலும் அவர்களைப் பிள்ளை பெறும் எந்திரமாகவும் அனைவருமே செய்து விட்டோம். நம்மைப் போல் பெண்களுக்கும் சம உரிமை இருத்தல் வேண்டும். எல்லா விஜயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் .செய்தல் அவசியமாகும். ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக என்று பார்க்கின், இல்லை. ஏன்? அவர்கட்க்குக் கல்வி இல்லாமையே! எனவே பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்" என அவர் 1928 -ல் பரிந்துரைத்தார்.

அந்தக் கால கட்டத்தில் கல்வி கற்றிருந்த பெண்களின் விழுக்காடு மிகமிகக் குறைவாக இருந்தது என்பதை அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

1921 -- 1.8%, 1931 - 2.9%, எனும் பரிதாப நிலையில்தான் இந்தியப்பெண்களின் கல்வி விழுக்காடு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மக்கள் தலைவராக விளங்கிய வ உ சி போன்றவர்கள் பெண்கல்வி குறித்து அந்தக் காலகட்டத்திலேயே விழிப்புணர்வு ஊட்டியது பாராட்டத் தக்கதாகும்.

அது மட்டுமல்லாமல், கணவரின் எச்சில் இலையில் மனைவி உண்ணும் வழக்கத்தைக் கடுமையாகக் கண்டித்தார் அவர். "எச்சில் இலையை நாய்கள் அன்றோ தின்னும்?" எனக் குறிப்பிட்டுவிட்டு, "எச்சில் இலையில் மனைவி சாப்பிடாவிட்டால், 'புருசன் இலையில் சாப்பிடாத தேவடியாள்' என்று சொல்லுகின்றனர். எனக்குக் கல்யாணம் ஆனது முதல் எனது எச்சில் இலையில் உண்ணக்கூடாது என்று என் மனைவிக்கு உத்தரவிட்டு விட்டேன். பெண்களுக்கு சமசுதந்தரம் கொடுக்க வேண்டும்" எனத் தனது செயல் மூலம் அவர் சமத்துவத்தை நிலை நாட்டினார்.

பெண்களை மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றியவர் வஉசி அவர்கள். தனது மனைவி வள்ளியம்மை குறித்து ஓர் இலக்கியப் படைப்பையே முதன் முதலில் வெளியிட்டவர் அவர்.

"உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த செயிர் இலா மனத்தள்; தெய்வமே அணையள்" எனத் தனது துணைவியாரை மிகுந்த மதிப்புடன் கொண்டாடினார்.

மேலும் பால்ய விவாகத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்தார் அவர். இதனால் விதவைகள் பெருகி விட்டனர். பால்ய விவாகத்தினால் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கவில்லை. அப்பிள்ளைகளால் குடும்பத்திற்கும், தேசத்திற்கும் தீங்கே உண்டாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். ( குமரன் இதழ் -- மார்ச்சு 15 / 1928 )

மெய்யறம் இல்வாழ்வியலில் உயிர் துணை கொள்ளல் எனும் அதிகாரத்தில் "துணையிரந்தாரை மணப்பது புண்ணியம்" எனக் குறிப்பிடும் வஉசி அவர்கள், உடன்கட்டை ஏறுதலின் கொடுமை குறித்தும், விதவைத் திருமண ஆதரவு குறித்தும் பதிவிடுகிறார். ஆனால் அவருடன் தோளோடு தோள் நின்று அரசியல் போராட்டம் நிகழ்த்திய சுப்பிரமணிய சிவா இதற்கு மறுப்பு தெரிவித்தது குறிக்கத்தக்கது

"இல் வாழ்வியலில் உயிர்த்துணை கொள்ளல் எனும் அதிகாரத்தில் 'துணை இழந்தாரை மணப்பது புண்ணியம்' என்று பிள்ளை அவர்கள் எழுதியிருக்கின்றனர். இதனால் இவர் விதவா விவாகம் செய்யலாம் என்ற கொள்கையைப் பின்பற்றுபவர் என்று தெரிகிறது. விவாகம் செய்யலாம் என்று மாத்திரம் அன்று; புண்ணியம் என்றும் கூறியிருக்கின்றனர். ஆதலால் நமது தேச நன்மைக்கு விதவா விவாகம் அவசியம் என்பது இவர் கருத்துப் போலும்! நாம் இவ்வபிப்பிராயத்திற்கு முற்றிலும் மாறுபடுகின்றோம்" (ஞானபாநு , செப்டம்பர் 1914 ) எனத் தனது மறுப்பைத் தெரிவிக்கிறார். இப்படிச் சகதோழரே எதிர்த்தாலும், மகளிருக்கு ஆதரவான தன் நிலைபாட்டில் வஉசி அவர்கள் உறுதியாக நின்றார்.

இத்தருணத்தில், 22/08/1926 குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய "விதவைகள் நிலைமை" கட்டுரையை ஒப்பு நேரக்கிப் பார்க்க வேண்டும். அதில் அக்காலத்திலிருந்த விதவைகளின் கொடிய துன்பங்களை விரிவாகக் குறிப்பிடும் தந்தை பெரியார் அவர்கள்,

" இப்போது நமது நாட்டில் விதவைகள் மணம் செய்து கொள்ள கூடாது என்றிருக்கும் வழக்கம், உடன்கட்டை ஏறுவதை விட மிகக் கொடியதாய் இருக்கின்றது. உடன்கட்டை ஏறுவது ஒரு நாள் துன்பம், விதவையாய் வாழ்வதோ வாழ்நாள் முழுவதும் தாங்க முடியாத சித்திரவதைக்கு ஒப்பான துன்பமாக இருந்து வருகிறது ............ இந்து சமயத்தார் என்று கூறப்படுபவர்கள், இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்து வருவதைப் பார்த்துக்கொண்டு வருவது பெரிதும் வருந்துவதற்குரிய செயலாகும். சுருங்கக்கூறின், இது ஒருவிதச் சமுதாயத் தற்கொலையே ஆகும்" எனக் குறிப்பட்டதோடு, "உலகில் மனித வர்க்கத்தினருக்குள் குடியிருக்கும் அடிமைத்தன்மை ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் அழிய வேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாம். இதற்கு விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும்" எனத் தந்தை பெரியார் பரிந்துரைக்கிறார்.

மேலும் " 1921 ஆம் வருஜத்திய ஜன சங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில் அய்யகோ! என் நெஞ்சம் துடிக்கின்றது" எனக் குறிப்பிட்டு விட்டு, 1 வயதுள்ள விதவைகள், 1 முதல் 2 வயதுள்ள விதவைகள் / 2 முதல் 3 வயதுள்ள விதவைகள் எனத் தொடங்கி,

25 முதல் 30 வயதுள்ள விதவைகள் வரையிலும் உள்ள விதவைகளின் எண்ணிக்கையைத் தனித்தனியே குறிப்பிட்டு விட்டு, இறுதியில் மொத்தமுள்ள விதவைகளின் எண்ணிக்கை 26 இலட்சத்திற்கும் அதிகம் என்பதைத் தந்தை பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.

இவ்வளவு கொடூரமான சூழ்நிலையை மாற்றுவதற்கு வஉசி அவர்கள், தனது சமகாலத்திய தலைவரான தந்தை பெரியாரைப் போலவே மிகுந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்பது கருதத்தக்கது.

அரசியல், சமூகம் போன்ற துறைகளில் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டிருந்ததைப் போலவே, மொழி குறித்தும் தனித்துவமான கருத்துக்களை வஉசி அவர்கள் கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் வடமொழி குறித்த பெருமிதம் பொதுவாக மேலோங்கி இருந்தது. ஆனால், வஉசி அவர்கள் வடமொழியைக் காட்டிலும் தமிழ் உயர்ந்தது எனும் கருத்தில் உறுதியாக இருந்தார்.

"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்

ஓரியலே கற்றாலும் ஓதாராங் - கீரடியில்

நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல்ஒன்றங்

கேற்படநாம் கண்டதுண்டோ இன்று"

எனும் பாடலில், திருக்குறளைப் போன்றதொரு சிறந்த நூல் வடமொழியில் உண்டோ என்று வினவுகிறார். திருக்குறளைப் பெற்றதால், ஆரியத்தினும் தமிழ் உயர்ந்த மொழியே எனச் சாற்றுகிறார்.

"ஆரியரும் செந்தமிழும் ஆராயின் செந்தமிழில்

ஆரியநன் நூலெல்லாம் ஆகியுள - சீரியநம்

செந்தமிழில் இன்றுமுள சீர்சான்ற நூல்களுக்கோ

அந்தமிலை காண்மின் அடுத்து"

எனும் பாடலில் தமிழ் மொழியில் தொடர்ந்து நூல்கள் முடிவில்லாமல் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலை வடமொழியில் இல்லை என எடுத்துக்காட்டித் தமிழின் சிறப்பை வெளிப்படுத்துகிறார்.

அதேபோல் தமிழ் மொழியில் சில எழுத்துக்கள் குறைவாக உள்ளன என்றும், அக்குறையைச் சரிசெய்யப் பிறமொழி எழுத்துக்களோ, பிற சில குறியீடுகளோ தமிழில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் சிலர் கூறிவந்தனர். வஉசி அவர்களின் மிக நெருங்கிய நண்பராகிய பாரதியும் இத்தகைய கருத்தினை வெளிப்படுத்தி வந்தார். அதாவது பிற மொழிகளின் மனிதப் பெயர், நகரப் பெயர் முதலியவற்றில் சிலவற்றை அந்த மொழியைச் சார்ந்தவர்கள் உச்சரிக்கும்

சப்தத்தில் நாம் உச்சரிக்குமாறு செய்யத் தக்க சில எழுத்துக்கள் நமது தமிழ் மொழியில் இல்லை என்பது பாரதியின் கருத்து. ஆனால், நமது தமிழ்ச் சொற்களான பழனி, கிழவி, மன்றம், கன்று போன்ற சொற்களைத் தமிழ் மொழியின் சப்தத்தில் பிறமொழியினர் உச்சரிக்கின்றனரா என வஉசி அவர்கள் வினவுகிறார். ழ, ற, ன போன்ற தமிழ் எழுத்துக்களையாவது, அவற்றின் ஒலிகளைக் குறிக்குங் குறிகளையாவது பிற மொழிகளில் சேர்ப்பதற்கு பிறமொழியினர் ஆயத்தமாக உள்ளனரா எனவும் கேட்கிறார். பிறமொழியாளர் அப்படித் தயாராக இல்லாத பொழுது தமிழர்கள் மட்டும் ஏன் பிறமொழிக் கலப்பை ஏற்க வேண்டும் என்பது அவரது வினா.

தமிழ் எழுத்துக்களில் குறை உள்ளது எனக் கூறுவோர், குறிப்பாக சமசுகிருத ஆதரவாளர்கள், தமிழ் எழுத்துக்களையாவது, தமிழ்க்குறிகளையாவது சமசுகிருதத்தில் ஏற்றுத் திருத்தம் செய்யத் தயாராக இல்லாமல், தமிழ் மொழியைக் குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்பது வஉசி அவர்களது வாதம்.

புதிய அறிவியல் சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் பொழுது, பொருள் புரிவதற்காக அச்சொல்லின் பக்கத்தில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம் என்பது வஉசி அவர்களின் பரிந்துரை. ஒவ்வொரு. மொழியிலும் பிற மொழிச்சொற்களை வகைதொகை இன்றிச் சேர்த்துக் கொண்டே போவது ஏற்கத்தக்கதல்ல!

பார்லிமென்ட், கவர்னர் போன்ற சொற்களை மொழி மாற்றம் செய்யலாம் என அப்பொழுதே அவர் முன்மொழிந்து உள்ளார். ( இன்று நாடாளுமன்றம் / ஆளுநர் ஆகிய சொற்கள் பேச்சு வழக்கிலேயே வந்து விட்டதைப் பார்க்கிறோம் )

மேலும் இது குறித்து வஉசி அவர்கள் கூறும் மற்றொரு கருத்தும், இங்கு கருதத்தக்கது. " யான் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஒரு சிலவே கற்றுள்ளேன். அவ்வாறு இருந்தும், யான் அறிந்துள்ள எந்தப் பாஜையின் எந்த மொழியையும் நம் தமிழ் மக்களில் எவரும் எளிதில் அறியுமாறு (சமஸ்கிருத சொற்களின் கலப்பே இல்லாத ) தனித்தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கத்தக்க திறமையை உடையேன் என்றால், என்னினும் அதிகமாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்றுள்ளவர்கள் அவ்வாறு செய்யத் தக்க திறமையை உடையவர்களாய் இருப்பார்கள் என்பதை யான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை"

இவ்வாறு மொழிக்கலப்பு இல்லாமல், எளிய தனித்தமிழில் எழுதுவது இயலக் கூடிய ஒன்றே எனத் தனது உயிர் நண்பரான பாரதிக்கு மறுப்புத் தெரிவித்தது, வஉசி அவர்களின் மொழிப் பற்றினையும், நேர்மையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

"தனித்தமிழ் இயக்க வரலாற்றைப் பொதுவாக நான்கு நிலைகளாகப் பகுப்பர் தனித்தமிழ் இயக்க ஆய்வாளர்கள்.( இரா. இளங்குமரன்) முதன் முதலில் தனித்தமிழ் பற்றிச் சிந்தித்த பரிதிமாற்கலைஞர் (1903) பாம்பன் சுவாமிகள் (1906) விருதை சிவஞான யோகிகள் (1908) மாகறல் கார்த்திகேயர் (1913) ஆகியோர் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் முதல் நிலையினவாகவும், சிவம், வ உ சி இவர்கள் ஆற்றிய பணிகள் இரண்டாம் நிலையினவாகவும், மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் தனித்த ­சிறப்பு வாய்ந்த -மூன்றாம் நிலையினதாகவும், தேவநேயப் பாவாணரின் பணிகள் நான்காம் நிலையினதாகவும் கணிக்கப்படுகின்றன" எனவும், "தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைப் பரவலாக விதைத்தவர் என்ற வகையில் சிவமும், தனித்தமிழில் எழுத முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்த வகையில் வ.உ.சி.யும் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் மறக்க முடியாதவர்களாகின்றனர்" எனவும் பேராசிரியர் மா.ரா.அரசு அவர்கள் சுட்டிக்காட்டுவது கருத்திற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

அதேபோல், திருக்குறளைப் பரப்பப் பாடுபட்டவர்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர் வ உ சி அவர்கள். கோவை சிறையில் தம்மைச் சந்திக்க வந்த இருவரிடம், " தமிழர்கள் எல்லோரும் திருக்குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்தில்லாத தமிழர் முற்றும் துறந்த முனிவரே ஆயினும், என்னைப் பெற்ற தந்தையே ஆயினும், யான் பெற்ற மக்களே ஆயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதும் இல்லை, நேசிப்பதும் இல்லை" என்று கூறினார். இக்கூற்று 1910-ல் கர்மயோகி என்ற பத்திரிகையில் மார்ச்சு இதழில் வெளியாகி உள்ளது.

மொழித்தளத்தில் மட்டுமல்லாது சமூகத்தில் பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளிலும் வஉசி அவர்கள் தனது பங்களிப்புச் செய்துள்ளார்.

கோவையில் 1921-ல் மே நாள் பேரணியை என். எஸ். இராமசாமி ஐயங்காருடன் இணைந்து வ உ சி அவர்கள் நடத்திக் காட்டினார். தவிரவும், 1921 -ல் மலபார் மாப்பிள்ளை முசுலிம்கள் ( மாப்ளாஸ் காக்காமார் ) எழுச்சியை ஆதரித்து, மத வேற்றுமை பாராமல் கோவையில் வஉசி அவர்கள் உரையாற்றினார். அதனால் வெள்ளையர் அரசாங்கம் அவர் மீது வழக்குத் தொடுத்தது. அதையும் அவர் எதிர்கொண்டார்.

விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு வஉசி அவர்கள் தமிழைப் பயன்படுத்தினார். அதுவரையில் தமிழகம் அதிகம் அறிந்திராத மேடைப்பேச்சு என்பதை மக்களுக்கு முறையாக அறிமுகம் செய்தவர் அவர். மக்களை ஒருங்கிணைத்து அவர்களைச் சிந்திக்கப் பழக்கியவர் அவர். பொது மக்கள்கருத்து என்ற ஒன்றை அரசியல் சார்ந்த நிலையில் உருவாக்கிய அரிய சாதனையை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்த்திக் காட்டியவர். அதற்கு மேடைப்பேச்சு கருவியாகியது. மேடைப்பேச்சு என்பது ஒரு கலையாக, ஒரு தனித்துறையாக, ஆற்றல்மிக்க படைக்கலனாகப் பின்னாளில் தழைத்தோங்கப் புதுப்பாதை வகுத்தவர்.

வஉசி அவர்கள் தனது சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான மிகச் சிறந்த உத்தியாக அரசியல் மேடைகளைப் பயன்படுத்தினார். அவரது சொற்பொழிவுகள், அவரது சிந்தனையின் திறப்புக்களாக அமைந்தன. அதனாலயே " பேச்சுக்குச் சிதம்பரம்" எனச் சுத்தானந்த பாரதி பாராட்டினார். திரு. பிள்ளை அவர்களின் பேச்சு, இரத்தத் துடிப்பை அல்ல, எலும்புகளையும் துடிக்கச் செய்யும்" எனத் தமிழறிஞர் கி.ஆ.பெ..விசுவநாதன் அவர்கள் குறிப்பிட்டார். வஉசி அவர்களது பேச்சைக் கேட்கப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதை பி.ஸ்ரீ. / வையாபுரி பிள்ளை / பொ.திருகூடசுந்தரம் போன்ற பலரும் பதிவு செய்துள்ளனர்.

" வறுமையினும், வியாதியினும் சகிக்கொணாக்

கொடியது அடிமைத் தனமே" எனச் சுட்டிக்காட்டி, மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியதோடு, வெள்ளையர்களை எதிர்க்க முடியுமா எனும் தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த மக்களிடம், நாட்டுப்பற்று எனும் கனலை மூட்டிய தீப்பறவையாகத் திகழ்ந்தவர் வஉசி அவர்கள்.

"அயல்நாட்டவர்களால் நடத்தப்படும் ஒரு நிர்வாகம் சுதேசிகளின் பயன் கருதிச் செயல்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. நீண்ட காலத்திற்கு அரசாங்கம் ஆங்கிலேயர்களின் கரங்களில் இருந்தால் இந்நாடு கட்டாயமாகப் பாதிக்கப்படும் ............ இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கிறது. அதன் உண்மையான வளங்களைப் புதுப்பிப்பதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. அவை சுதேசியம், அந்நியப் பொருள்கள் புறக்கணிப்பு மற்றும் தொழிற்சாலை ஆகியன" என வஉசி அவர்கள் பேசிய பகுதியைக் கருத்தில் கொண்டு, அவர் மீது 124 A மற்றும் 153A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இத்தகைய "கலக" வழக்குகளுக்காக மொத்தம் 927 சாட்சிகள் சேர்க்கப் பட்டிருந்தனர். சென்னை மாகாணத்தில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு வழக்கில் அதிக எண்ணிக்கையிலான சாட்சியங்கள் சேர்க்கப்பட்டது இதுவே ஆகும்.

ஆளும் வர்க்கத்திற்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பது அவர் மீது பாய்ச்சப்பட்ட வழக்குகளும், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளுமே சான்றாக விளங்குகின்றன.

ஆனால், இதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல், தமிழ் மண்ணுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளைப் பற்றியும் அவர் சிந்தித்துக் கொண்டே இருந்தார். தமிழ்ச் சித்த மருத்துவமுறையை மேம்படுத்த வேண்டியதன் தேவை பற்றியும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவ வேண்டியதன் அவசியம் பற்றியும் காலத்தை மீறிச் சிந்தித்தவராக அவர் ஓடிக் கொண்டிருந்தார். உடல் - உள்ளம் ஆகியவற்றைப் பேணி ஆளுமை மிக்க மனிதனை உருவாக்க வேண்டியதன் தேவை பற்றியும் அவர் கருத்துக்களை முன்வைத்தார்; கனவுகளை வெளிப் படுத்தினார்.

வஉசி அவர்கள் "செயலே சிறந்த சொல்" என வாழ்ந்தவர். தனது வாழ்வே தான் அளிக்கும் செய்தி என மெய்ப்பித்தவர். அவர் தொடாத துறைகளே இல்லை எனலாம். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, இலக்கியம், மொழியாக்கம் என அவர் ஈடுபட்ட துறைகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்தவர். தேசிய விடுதலை அவரது இலக்காக இருந்தாலும், தமிழ் - தமிழ்நாடு

-தமிழர் எனத் தனது வாழ்வைச் செழுமைப் படுத்திக் கொண்டவர். அதனாலேயே ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள், "வஉசி அவர்கள் தமிழ்த் தேசியத்தில் காலூன்றிக் கொண்டுதான் இந்திய தேசியத்தைப் பார்த்தார்" எனக் கணிக்கிறார்.

1917 தொடங்கி பார்ப்பனர் அல்லாதார் நலன் சார்ந்த சமூக நீதி அரசியலை அவர் இறுதிக்காலம் வரை பற்றி நின்றார் என்பதை அவரது இறுதி விண்ணப்பமே நமக்குத் தெளிவாக்குகிறது. " பார்ப்பனர் அல்லாத சகோதரர்களே! ஜாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாட்டு வேற்றுமை முதலியவற்றை எல்லாம் விடுத்து, நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பார்ப்பனர் அல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும் நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக!" ( குடியரசு இதழ் 17/05/1936 ) என இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

சமத்துவமும், சமூக நீதியும் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில் வஉசி அவர்களது வாழ்வு நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக மிளிர்கிறது.

பார்வை நூல்கள்

(1)         தமிழ்நாட்டில் தேசியம், சுதேசியம் -துணைவேந்தர் நா. இராஜேந்திரன் கிளியோ வெளியீடு.

(2)         இந்திய விடுதலைப் போரில் வ உ சி - என்.திரவியம் - விஜயா பதிப்பகம்.

(3)         காந்தி கணக்கு, அனிதா கு கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம்.

(4)         வஉசி ஒரு பன்முகப் பார்வை, முனைவர் எஸ். கண்ணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

(5)         வஉசி பன்னூல் திரட்டு, வீ.அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.

(6)         வஉசி - வாழ்வும் பணியும் - ஆ.சிவசுப்பிரமணியன் அகல்யா வெளியீடு.

(7)         அரசியல் பெருஞ்சொல் - வ.உ.சிதம்பரனார் யாப்பு வெளியீடு.

(8)         வ உ சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள் - மா.ரா.அரசுஆசிரியர், மா.ரா. அரசு நினைவு அறக்கட்டளை.

(9)         சிதம்பர வேங்கை - கதிர் நம்பி, யாப்பு வெளியீடு

(10)       கப்பலோட்டிய கதை, குருசாமி மயில்வாகனன், நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்

(11)       தமிழ் பெரியார் வஉசி - ஆ. அறிவழகன் பரிசல் புத்தக நிலையம்.

(12)       வ.உ.சிதம்பரனார் மா.ரா. அரசு சாகித்திய அகாதெமி

(13)       தமிழ் தந்த வ.உ.சி. முனைவர் தி. லீலாவதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

(14)       கப்பலோட்டிய தமிழன் வ.உ, சிதம்பரம் என்.வி. கலைமணி

(15)       சுடர் - வ.உ.சி. மலர் தில்லித் தமிழ்ச் சங்கம்.

(16)       வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கைச் சித்திரம் எம்.கிருஷ்ணசாமி அய்யர் மெட்ராஸ் ஹரிஹர அச்சகம்

(17)       கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் முல்லை முத்தையா முல்லை பதிப்பகம்

(18)       பெண் ஏன் அடிமையானாள்? தந்தை பெரியார் நன்செய் பிரசுரம்

(19)       குடும்பம் - அரசு - தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம் பிரடெரிக் ஏங்கல்சு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

(20)       Census 2011. India 2016.

மற்றும்

பண்டிதர் அ.கி.நாயுடு, முத்தமிழ்ச்செல்வர் கி.ஆ.பெ. விசுவநாதம், தவத்திரு குன்றக்குடி அடிகளார், நாரண - துரைக்கண்ணன், பரலி சு. நெல்லையப்பர் பி.ஸ்ரீ. ஸோமாஸ், பொ. திருகூடசுந்தரம், மு.சி.வீரபாகு, வஉசி, ஆறுமுகம் ஆகியோரது கட்டுரைகள்.

- கண. குறிஞ்சி

Pin It