இந்திய விடுதலைப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரனார் மட்டுமே; பிரிட்டிஷாருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்தவர். காரணம் அவர் தொடங்கிய சுதேசிக் கப்பல்: அதன் நோக்கம் வணிகம் அல்ல; விடுதலை உணர்வு; அந்நிய எதிர்ப்பு மக்களை அணி திரட்டுதல்.

இந்திய விடுதலை இயக்கத்தின் தொடக்க காலத் தலைவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை. 1872-1936-இல் தனித்துவமான பல போராட்டங்களை முன்னெடுத்தவர் அவர்!

கப்பலில் வந்து, கடல் ஆதிக்கம் செய்து இந்தியர்களை அடிமைப்படுத்தி வணிகம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷாரின் ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக ஒரு சுதேசிக் கப்பல் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவரின் பெருங்கனவு. அதை நோக்கிய பணிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்தார்.

அன்றைய இந்திய கப்பல் கம்பெனிகள்:

அப்போது தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்குத் தினமும் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன.

சில இந்தியர்களும் கப்பல் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தனர். 1884-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஜானகி நாத், உள்நாட்டு நதிப் போக்குவரத்து நாவாய் சங்கத்தைத் தொடங்கினார். அவருக்கு சரோஜினி, பாக்யலட்சுமி, ஸ்வதேசி, பாரத், லார்ட் ரிப்பன் எனும் ஐந்து கப்பல்கள் சொந்தமாக இயங்கின.

1897 இல் தோன்றிய கிழக்கு வங்க நதிப்போக்குவரத்து கப்பல் கம்பெனி 1906 முதல் 1908 வரை சிறப்பாக நடந்தது.

1909 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தனுஷ்கோடி ராசு என்ற இந்திய கிருத்துவத் தனவந்தர் கப்பல் விட்டார்.voc 423ஆதங்குடி செட்டியார் குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவிற்கும் இடையில் “ந.மு கம்பெனி” என்ற பெயரில் சரக்குக் கப்பல் கம்பெனி நடத்தினர். இதேபோன்று நாகப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையில் ‘சி.வ. கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் சி.வ. நல்ல பெருமாள் பிள்ளை கப்பல் ஒன்றும் ஓடியது.

இந்தக் கப்பல் கம்பெனிகளுக்கு பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி தொடர்ந்து பல தொந்தரவுகளைக் கொடுத்து வந்தது. தங்கள் கம்பெனியின் படகுகளைக் கொண்டு அவற்றின் மீது மோதவிட்டு, பல நஷ்டங்களை ஏற்படுத்தியது. இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு ஒடுக்கியது. இதனால் இந்தக் கம்பெனிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டன.

இந்தக் கப்பல் கம்பெனிகளின் முதன்மையான நோக்கம் என்பது பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியை எதிர்ப்பது என்பதல்ல; வணிகம். வணிகப் போட்டியாக கப்பல் கம்பெனிகள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இவைகளை பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி ஒடுக்கியது. இந்தப் பின்னணியில்தான் வ.உ.சியின் சுதேசி கப்பல் என்ற சிந்தனை வலுப்பெற்றது.

‘நமது சுதேசம் க்ஷேமத்தையடைந்து முன்னாளின் மேலான நிலைமைக்கு வருவதற்கு சகல தொழில்களிலும் வியாபாரங்களிலும் மிக்க லாபத்தைக் கொடுப்பதான கப்பல் நடத்தும் தொழிலை நாம் கைக்கொள்வதே முக்கிய சாதனமாகும்’ என்று வ.உ.சி எழுதினார்.

1906 அக்டோபர் 6 அன்று விவேகபானு இதழில் வ.உ.சி எழுதினார் “நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொண்டதற்கு ஏதுவாக இருந்ததும், நமது சுதேசத்து பொருட்களை எல்லாம் அந்நிய நாட்டார் கொண்டு போவதற்கு ஏதுவாக இருந்ததும், நமக்கு மிக்க லாபத்தை தரக்கூடிய கைத்தொழில் வியாபாரங்களை எல்லாம் அந்நிய நாடுகளுக்கு கொண்டு போவதற்கு ஏதுவாக இருந்ததும், அந்நிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாகக் கைக்கொண்டிருந்த கப்பல் தொழிலை நம்மிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது ஒன்றே ஆதலால், நாம் அதிசீக்கிரமாகவும் அத்தியாவசியமாகவும் கைக் கொள்ளத்தக்கதும் கைக் கொள்ள வேண்டுவதும் ஆன தொழில் கப்பல் நடத்துவது மட்டுமே என்பது நம் எல்லோருக்கும் தெளிவாய் தெரிந்ததே...”

“இந்தியா” 01.09.1906 இதழில் பாரதியார் ‘ஓர் புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’ என்று தலைப்பிட்டு வ.உ.சி. கப்பல் கம்பெனி பங்கு விவரங்களை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளான அக்டோபர் 16-ஆம் நாள் 1906 ஆம் ஆண்டு ‘சுதேசி நாவாய் சங்கம்’ என்கிற சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இந்தியக் கம்பெனிச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க மூலதனம் 10 இலட்சம் ரூபாய். பங்கு ஒன்றிற்கு ரூ. 25 வீதம் 40 ஆயிரம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

சுதேசாபிமான சீலர்களே!

நமது சுதேசத் தாயானவள் பூர்வகாலந் தொடங்கி விலையுயர்ந்த நவரத்தினங்களையும், தங்கம் முதலிய லோகங்களையும் சகல விளைபொருட்களையும், கைத்தொழில்களையும், வியாபாரங்களையும் உடையவளாய், மற்ற தேசங்களினும் மேன்மையும் செல்வமும் மிக்க நிறைந்து, நீடித்த காலம் வாழ்ந்திருந்து பின்னர் அந்நிய நாட்டார் பிரவேசித்த காரணத்தால், சகல கைத்தொழில்களையும் வியாபாரங்களையும் இழந்து மிக்க வறுமையுற்றுப் பசியால் வருந்தி இறந்து கஷ்டப்படுவதைக் கண்ணுற்ற சர்வ இரக்ஷகராகிய கடவுளானவர் சென்ற 1905ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 முதல் நம் சுதேசத்தாயின் மீது கருணை கூர்ந்து சுதேசக் கிளர்ச்சியை உண்டாக்கி நாம் நீடித்த நாளாக இழந்திருந்த ஒற்றுமையையும் ஊக்கத்தையும் கைத்தொழில்களையும் வியாபாரங்களையும் நம்மைக் கைக்கொள்ளும்படி செய்து நன்மை புரிந்து வருகின்றதை நாமெல்லோரும் அறிந்திருக்கின்றோம்.

நம் சுதேசம் க்ஷேமத்தையடைந்து முன்னாளின் மேலான நிலைமைக்கு வருவதற்கு சகல தொழில்களிலும் வியாபாரங்களிலும் மிக்க லாபத்தைக் கொடுப்பதான கப்பல்கள் நடத்தும் தொழிலை நாம் கைக்கொள்வதே முக்கிய சாதனமாகும். தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் கப்பல்கள் நடத்துவதற்கு இரண்டு ஸ்டீமர்களும் இரண்டு ஸ்டீம் லாஞ்சுகளும் போதுமானவை; அவைகளை நாம் சொந்தமாக வாங்கி வேலை நடத்துவதற்கு ஐந்து லட்ச ரூபாய் மூலதனம் போதுமானது.

அவ்வைந்து லட்ச ரூபாய் மூலதனத்துடன் கப்பல் நடாத்துந் தொழிலில் சகல செலவும் நீக்கி வருஷம் 1க்கு 10 லட்ச லாபம் கிடைக்கத்தக்கதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய ரூபா இலாபத்தைக் கொடுக்கத்தக்க தொழிலாவது வியாபாரமாவது வேறு கிடையாது. இத்தகைய தொழிலைச் சென்ற பல வருஷங்களாக அந்நிய நாட்டார்கள் கைப்பற்றிக் கொண்டு அதிற்கிடைக்கும் லாபத்தில் ஒரு சிறிதேனும் நம்மையடைய விடாமற் செய்து நம் தேசத்தையும் முக்கியமாக நம் தென்னாட்டையும் மிக்க வறுமைக்குள்படுத்தி விட்டார்கள்.

சகோதரர்களே! இரண்டு ஸ்டீமர்களும் இரண்டு லாஞ்சுகளும் வாங்கி வேலை நடத்துவதற்கு வேண்டுமைந்து லட்ச ரூபாய் நம்மிடமில்லையா? நமக்குக் கப்பல்கள் நடாத்துந் திறமையில்லையா? நம் முன்னோர் கப்பல்கள் நடாத்துவதில் மற்ற நாட்டாருக்குப் பின்னடைந்து நின்றவரா? கப்பல்களில் ஏற்றுமதி, இறக்குமதியா குஞ் சரக்குகள் நம்முடையவையன்றி வேறுண்டா? கப்பல்களில் பிரயாணமாகும் பிரயாணிகளில் ஏகதேசம் ஒன்று இரண்டு தவிர மற்றவர்கள் நம்மையன்றி வேறுளரா? ஒரு விதத்திலும் குறைவில்லாத நாம் தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் மாத்திரம் அன்று; ஆசியா, ஐரோப்பா முதலிய பல கண்டங்களிலுமுள்ள துறைமுகங்களுக்கெல்லாம் கப்பல்கள் நடாத்தும் செல்வமும் திறமையும் பூண்டுள்ளோம்.

நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொண்டதற் கேதுவா யிருந்ததும் நம் சுதேசத்துப் பொருள்களையெல்லாம் அந்நிய நாட்டார் கொண்டு போவதற்கேதுவாயிருந்ததும் நமக்கு மிக்க லாபத்தைத் தரக்கூடிய கைத்தொழிலில் வியாபாரங்களையெல்லாம் அந்நிய நாடுகளுக்குக் கொண்டு போவதற்கேதுவாயிருந்ததும் அந்நிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாகக் கைக்கொண்டிருந்த கப்பல் தொழிலை நம்மிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதொன்றே யாதலால் நாம் அதி சீக்கிரமாகவும் அத்தியாவசியமாகவும் கைக்கொள்ளத் தக்கதும் கைக்கொள்ள வேண்டுவதுமான தொழில் கப்பல்கள் நடாத்துவதேயாமென்பது நம்மெல்லோருக்கும் பரிஷ்காரமாகத் தெரிந்ததே.

நமது சுதேசம் மற்ற தேசங்களைப் பார்க்கிலும் மேலான நிலைமைக்கு வருவதற்கு நாம் இவ்வுலகின் கண்ணுள்ள துறைமுகங்களுக்கெல்லாம் நமது சுதேசக் கப்பல்கள் போக்குவரவாயிருக்கும்படி செய்ய வேண்டியதவசியமாயிருக்கின்றது.

ஆனாலும் நாம் பல வருஷங்களாக இழந்துவிட்ட தொழில்களையெல்லாம் ஒவ்வொன்றாக மெள்ள மெள்ளக் கைக்கொள்ள வேண்டுமேயன்றி எல்லாவற்றையும் ஒருங்கே ஒரே காலத்தில் கைக்கொள்ள முடியாது. அதனால் தற்சமயம் தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் மற்றும் முக்கியமான துறைமுகங்களுக்கும் கப்பல்கள் நடாத்தி நாம் லாபமடையும் பொருட்டுத் தூத்துக்குடியில் (10,00,000) பத்து லட்சம் ரூபா மூலதனத்துடன் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி ஸ்தாபிக்கப் பெற்று மாங்குசீட்டன் என்னும் ஸ்டீமரை வாடகைக்கமர்த்தி அது நடைபெற்று வருகின்றது; சொந்த ஸ்டீமர்கள் சமீப காலத்தில் வந்துவிடும். இதில் ஏழைகள் முதல் பெரும் பணக்காரர் வரையுள்ள சகல சுதேச சகோதரர்களும் பங்காளிகளாகச் சேர்ந்து லாபம் அடையும் பொருட்டுப் பங்கு 1க்கு ரூபாய் 25 வீதம் 40,000 பங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், ஒவ்வொரு சுதேசாபிமானியும் இக்கம்பெனியில் பங்காளியாகி லாபத்தையடைந்து நமது சுதேசத்தை மேன்மையான நிலைமைக்குக் கொண்டு வரும்படி பிரார்த்திக்கிறேன். (விவேகபாநு, நவம்பர்-1909)

சுதேசிக் கப்பல் நிர்வாகம்:

சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை நடத்துவதற்கு இயக்குநர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. நிறுவனத் தலைவராக பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் நியமிக்கப்பட்டார். நான்காம் தமிழ்ச் சங்கம் என்றழைக்கப்படும் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவியவர் இவர். சேலம் சி. விஜயராகவாச்சாரியார் சட்ட ஆலோசகராக இருந்தார். கந்தசாமி கவிராயர், பம்பாய் வணிகர் கே.ஜெ. முகமது பக்கீர் சேட் ஆகியோர் பெரும் பங்குகளை வாங்கி உதவினர்.

இந்த நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாக கப்பல் கட்டும் தொழிலை பயிற்றுவிப்பது. குறிப்பாக மாணாக்கர்களுக்கு கப்பல் கட்டும் தொழிலை முறைப்படி முறையான கல்வியாக போதிப்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று Maritime University-யே கடல்சார் அறிவுப் புலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்துப் பார்க்கும்போது வ.உ.சியின் தொலைநோக்குச் சிந்தனையை உணரலாம்.

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி (லிமிட்டெட்), தூத்துக்குடி

1.            இந்தக் கம்பெனியானது 1882ம் ஷரத்து “இந்தியன் கம்பெனி ஆக்டு'ப்படி 1906 அக்டோபர் மீ 16 தேதியில் செய்யப் பெற்றது.

2.            ரிஜிஸ்டர் இந்தக் கம்பெனிக்கு மூலதனம் ரூ.10,00,000. இம் மூலதனம் பங்கு 1க்கு ரூ.25 வீதம் 40,000 பங்குகளாக இந்தியா, இலங்கை முதலிய ஆசியாக் கண்டத்துத் தேசத்தார்களிடமிருந்து சேர்க்கப்படும். மூலதனம் வேண்டும்போது அதிகரிக்கப்படும். பங்காளிகள் அவரவர்கள் பங்குத் தொகை மட்டில் உத்தரவாதிகள்.

3.            இக்கம்பெனியின் உத்தியோகஸ்தர்கள்:

அக்கிராசனர்

               ஸ்ரீமான். பொ.பாண்டித்துரைச்சாமித் தேவர் அவர்கள், பாலவநத்தம் ஜமீன்தார், இராமநாதபுரம், மதுரை.

டயரெக்டர்கள்

1.            மகா-ள ஸ்ரீ பி.வெங்கிட்டராமாநுஜலு நாயுடுகாரு, பேங்கர், தூத்துக்குடி

2.            சி.விஜயராகவாச்சாரியாரவர்கள் பி.ஏ., வக்கீல், சேலம்

3.            ஏ.சுந்தர சாஸ்திரியாரவர்கள், பி.ஏ.பி.எல்., திருநெல்வேலி பாலம்

4.            என்.ஏ.வி.சோமசுந்தரம் பிள்ளையவர்கள், பி.ஏ.பி.எல்., வண்ணார்பேட்டை, திருநெல்வேலி பாலம்

5.            எம்.டீ. தேவதாஸ் பிள்ளையவர்கள். பி.ஏ.பி.எல்., பாளையங்கோட்டை

6.            டி.எஸ்.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், சேர்மேன், சிவ தேவஸ்தானம் கமிட்டி, திருநெல்வேலி

7.            மகாளஸ்ரீ சி.சு.வ.கிருஷ்ண பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி.

8.            அ.மு.ம. அருணாசலம் பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி.

9.            அண்ணாசாமி ஐயரவர்கள், பிளீடர், தூத்துக்குடி

10.         சி.த.ஆ.ஆறுமுகம் பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி

11.         அ.சு.வே. வேலாயுதம் பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி

12.         வ.அ.ஆ.ஆதிநாராயணஞ் செட்டியாரவர்கள், வியாபாரம், தூத்துக்குடி

13.         வ.அ.வெ.சு. வெங்கிடாசலஞ் செட்டியாரவர்கள், வியாபாரம், தூத்துக்குடி

14.         ந.சு.தெய்வநாயகம் பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி

15.         ஏ.சி.வ.திருச்சிற்றம்பலம் செட்டியாரவர்கள், வியாபாரம், தூத்துக்குடி

16.         ஏ.வி.ஆர்.ஏ. அடைக்கப்பச் செட்டியாரவர்கள், வியாபாரம், கொழும்பு

17.         ஏ.எம்.சைய்யத் இப்ராகிம் அவர்கள், வியாபாரம், கொழும்பு

18.         கி.சோலைமலைத் தேவரவர்கள், வியாபாரம், வைத்தீஸ்வரன்கோயில்

19.         திரு. நாராயண பிள்ளையவர்கள், கைவிழாஞ்சேரி, சீர்காழி

20.         ரி.சிதம்பரநாத முதலியாரவர்கள், கைவிழாஞ்சேரி, சீர்காழி

21           வி.ஜி.ரி.முத்துசாமி செட்டியாரவர்கள், சீர்காழி

22.         டி.எஸ்.குப்புசாமி பிள்ளையவர்கள், தாடாளன் கோவில், சீர்காழி

23.         D.அனுமந்த செட்டியாரவர்கள், சோமவார்பேட்டை, குடகு

24.         எஸ். இராமசாமி பிள்ளையவர்கள், கன்னப்பாடி (ரூவன்வாலா)

25          A. அசனுசைன் இராவுத்தரவர்கள், திண்டுக்கல்

26.         சீனி அசனுசை இராவுத்தரவர்கள், இராமனாதபுரம்

27.         A. சோமசுந்தரம் அவர்கள், எம்.ஏ., கூடலூர்

28.         W. ஸ்ரீநிவாச அய்யங்காரவர்கள், சென்னபட்டனம்

29.         அண்ணான் திருமலை அய்யரவர்கள், சேலம்

30.         பிட்டா இராமசாமி அய்யரவர்கள், சேலம்

31.         A. அருணாசலம் செட்டியாரவர்கள், சேலம்

செக்ரெட்டேரிகள்

எஸ்.டி.கிருஷ்ண அய்யங்காரவர்கள், பி.ஏ.பி.எல்., தூத்துக்குடி, கௌரவ காரியதரிசி வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள், தூத்துக்குடி, துணைக்காரியதரிசி.

ஆடிட்டர்கள்

பி.கே.இராமய்யரவர்கள், பி.ஏ.பி.எல்., கௌரவ ஆடிட்டர், திருநெல்வேலி பாலம்.

4. கம்பேனியின் ரிஜிஸ்டரான ஆபீஸ் தற்காலம் தூத்துக்குடி பீச்சு ரோடு 4ம் நிர் கட்டிடத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.

5. இக்கம்பேனி ஏற்படுத்தியதின் முக்கிய நோக்கங்கள்:

               தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மற்றும் சுதேசிய ஸ்டீமர்கள் நடைபெறாத துறைமுகங்கட்கும் பிரயாணத்தையும் வியாபாரத்தையும் சௌகரியப்படுத்தவும் சகாயப் படுத்தவும் தக்க ஸ்டீமர்கள் நடைபெறும்படி செய்தல், இந்தியர்களையும் இலங்கையர்களையும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியார்களையும் கப்பல் நடாத்தும் தொழிலில் பழக்குவித்து அதன்மூலம் வரும் லாபத்தையடையும்படி செய்து, இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியார்களுக்கும் கப்பல் நடாத்துந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ்செய்யும் தொழிலையுஞ் செய்து காட்டிக் கற்பித்தல், இந்திய இலங்கை மாணவர்க்கும் மற்றும் ஆசியாக் கண்டத்து மாணவர்க்கும் கப்பலோட்டுந்தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையும் சாஸ்திர சம்பந்தமாகக் கற்பிக்கும் கலாசாலைகள் ஏற்படுத்தல், கப்பல் நடாத்துந்தொழிலிலும் வியாபார முறையிலும் இந்தியர்கள் இலங்கையர்கள் முதலிய ஆசியாக் கண்டவாசிகளுக்குள் ஐக்கிய பாவனையையுண்டுபண்ணி ஒற்றுமையாக உழைக்கச் செய்தல், பற்பல வியாபார ஸ்தலங்களிலுள்ள வியாபாரங்கட்கடுத்த கொள்வன கொடுப்பன தெரிந்து கொள்வதற்காக இந்தியா இலங்கை முதலிய ஆசியாக் கண்ட தேசத்தவர்களை ஏஜெண்டுகளாக நியமித்தல், ஸ்டீமர்கள், ஸ்டீம் லாஞ்சுகள், படகுகள் முதலியன நிர்மாணஞ் செய்வதற்கும் அவைகளைச் செப்பனிடுவதற்கும் கத்தப்படுத்துவதற்கும், துறைகளேற்படுத்தல்; கம்பெனியார் தீர்மானிக்கும் சுதேசியக் கைத் தொழில்களையும் வியாபாரங்களையும் நடத்துதல் முதலியனவாம்.

6.            தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மற்றும் இந்திய துறைமுகங்கட்கும் பிரயாணமும் வியாபாரமும் அபிவிருத்தியான நிலைமையிலிருப்பதால் கம்பெனியின் செலவும் ரிசர்வ் பண்டுக்கு வைத்துக் கொள்ளும் தொகையும் நீக்கி பெரியதோர் ஈவு கிடைக்குமாறு கணக்கிடப்பட்டிருக்கிறது.

7.            100 பங்கு எடுக்கிற பங்காளிகள் டயரெக்டர்களாவதற்கு பாத்தியதையுடையவர்கள்; ஆனால் டயரெக்டர்கள் வருஷத்துக்கொரு தடவை பங்காளிகளின் மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்படுவார்கள். ஆர்டினேரி மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்படுவார்கள்.

8.            எடுக்கப்படும் பங்குகளின் மொத்தத் தொகையில் ஐந்திலொரு பங்குத்தொகை முன் பணமாகச் செலுத்தப்பட வேண்டும். பாக்கிப் பங்குத் தொகை கம்பேனியார் வேண்டுங் காலங்களில் செலுத்தப்பட வேண்டும்.

9.            கம்பேனியின் நன்மைக்காகவும், லாபத்துக்காகவும் பங்காளிகள், கம்பேனியின் ஸ்டீமர்களிலேயே பிரயாணமும், ஏற்றுமதி, இறக்குமதியும் செய்யவேண்டும்.

10.         கம்பேனியின் பங்குகளை மற்ற சொத்துக்களைப் போல் அடமானம் கிரயஞ் செய்யலாம்; ஆனால் பணம் ஒரு பங்காளிக்கும் கம்பேனியிலிருந்து வாபஸ் கொடுக்கப்பட மாட்டாது.

11.         கம்பேனிக்குக் கிடைக்கும் லாபத்தொகையில் கம்பேனிக்கு ரிசர்வ் பண்டாக வைத்துக் கொண்டது போக மீதத் தொகையைப் பங்காளிகளுக்கு அவர்கள் பங்கு வீதாசாரப்படி பகுந்து கொடுக்கப்படும்.

12.         கம்பேனியின் விதிகளடங்கிய புத்தகமும், மிமோரண்டமும் அப்ளிக்கேஷன் பாரங்களும் தூத்துக்குடி கம்பேனி ஆபீசிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். விதிகளடங்கிய புத்தகம் மிமோரண்டம் இவைகளின் கிரயம் ரூ.0.80

13.         சகல மணியாடர்களும் கரஸ்பாண்டன்ஸ்களும், அப்ளிக்கேஷன்களும் தூத்துக்குடி யிலிருக்கும் கம்பேனியில் செக்ரட்டேரி அல்லது அசிஸ்டெண்டு செக்ரட்டேரியர்களுக்கு அனுப்பவேண்டும்.

14.         சுமார் 25,000 பங்குகள் வரை இதுவரை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்னும் அப்ளிக்கேஷன் விரைவாக வந்து கொண்டேயிருக்கின்றன. தேசாபிமானமுள்ள இந்தியா, இலங்கை முதலிய ஆசியா கண்டத்துத் தேச கனவான்கள் கம்பேனியில் அதிகப் பங்குகள் எடுத்துதவிபுரிய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

எஸ்.டி.கிருஷ்ணய்யங்கார், கௌரவ காரியதரிசி, தூத்துக்குடி, 24-09-1907.

குத்தகைக்கு கப்பல்:

சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு என்று சொந்தக் கப்பல் ஏதுமில்லை. வாங்கவும் இயலவில்லை. அதனால் ‘ஷாலைன் ஸ்டீமர்ஸ்’ என்ற கம்பெனியிடமிருந்து கப்பல்களைக் குத்தகைக்கு வாங்கி ஓட்டினார்கள். பிரிட்டிஷாருக்கு இது பிடிக்கவில்லை. பல இடையூறுகள் செய்தனர். ஷாலைன் ஸ்டீமர் கம்பெனியின் உரிமையாளர் எஸ்ஸாஜி பாஜ்பாய் என்பவரை பிரிட்டிஷ் நிறுவனம் மிரட்டிப் பணியவைத்துவிட்டது. குத்தகைக்கு கொடுக்கப்பட்ட கப்பல்களை ஷாலைன் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது. சொந்தமாகக் கப்பல் அல்லாமல் வெள்ளையர்களின் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து வணிகம் நடத்திடமுடியாது என்பதனை வ.உ.சி உணர்ந்தார். புதிய கப்பல் வாங்கிடப் பணம் திரட்டினார்.

சொந்தக் கப்பல் வாங்க நிதி திரட்டுதல்

தூத்துக்குடி பகுதி வணிகர்கள் முடிந்த அளவுக்கு சுதேசிக் கப்பல் கம்பெனிக்குப் பண உதவிகளைச் செய்தார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை. தமிழகம் முழுவதும் அலைந்து வ.உ.சி நிதி திரட்டினார். தேனி மாவட்டம் கோம்பையில் வாழ்ந்த உ.ம.சே. முகைதீன் பிள்ளை சாகிப், இவர் வ.உ.சி, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார், மகாகவி பாரதியார் முதலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் நண்பர். அவர் தேனி வட்டாரத்தில் நிதி திரட்டிக் கொடுத்தார்.

பம்பாய், கல்கத்தா உள்ளிட்ட மிகப் பெரிய நகரங்களுக்குச் சென்று சிதம்பரனார் பணம் திரட்டினார்.

வ.உ.சி சுதேசிக் கம்பெனிக்குப் பணம் திரட்டச் சென்றபோது ‘மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் தான் வருவேன். இல்லையென்றால் அங்கேயே கடலில் விழுந்து உயிர்விடுவேன்’ என்று சபதம் செய்துவிட்டு வடநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

வ.உ.சி பம்பாய் சென்றபோது, அவரது ஒரே மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இருந்தார். மனைவி மீனாட்சி கர்ப்பிணியாக இருந்தார். ‘இவர்களை இறைவன் பார்த்ததுக் கொள்வான்’ என்று வ.உ.சி கூறியபடி தன் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

இரண்டு கப்பல்கள்:

பல போராட்டங்களுக்குப் பின்னர் வ.உ.சி இரண்டு கப்பல்களை வாங்கினார். எஸ். எஸ் காலியா என்ற கப்பல் மே 16 அன்றும், எஸ். எஸ். லாவோ என்ற கப்பல் ஜுன் 11 அன்றும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன. ‘லாவோ’ என்ற கப்பல் வ.உ.சியின் நண்பர் வேதமூர்த்தி என்பவரின் உதவியுடன் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்டது. இரண்டும் நீராவி இயந்திரம் பொருத்தப்பட்டது. கப்பலின் முகப்பில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்ட கொடியைக் கட்டிப் பறக்கவிட்டார். இரண்டு கப்பல்களும் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணம் செய்தன.

இந்த இரண்டு கப்பல்களிலும் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தன.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா மட்டுமே வ.உ.சியின் சுதேசிக் கப்பலில் பயணக் கட்டணம். ஆங்கிலேயக் கம்பனியோ 4 ரூபாய் கட்டணம் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்குத் தனிக் கட்டணம்!

இந்த இரண்டு கப்பல்களின் வருகையால் மகிழ்ச்சி அடைந்த பாரதியார் தாம் நடத்தி வந்த ‘இந்தியா’ இதழின் (26, மே 1927) முகப்பில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு ‘வெகு காலமாய் புத்திரப் பேறின்றி, அருந்தவம் செய்துவந்த பெண்ணொருத்தி ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால் எத்தனை அளவற்ற ஆனந்தத்தை அடைவாளோ அத்தனை ஆனந்தத்தை நமது பொதுமாதாவாகிய பாரததேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாரென்பது திண்ணமே’ என்று குறிப்பும் எழுதினார். வ.உ.சிக்கும் அவருக்கு உதவியவர்களுக்கும் பாராட்டுத் தெரி­வித்திருந்தார்.

தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே அமைந்த இந்தக் கப்பல் சேவை வணிகம் அல்ல; எதிர்ப்புக்குரல்: போராட்ட முனைப்பாகவே கருதப்பட்டது. இதனால் வ.உ.சியின் ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அப்போதிருந்த திருநெல்வேலி ஆட்சியர் பிரிட்டிஷாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்தப் பகுதியில் குறிப்பாக வ.உ.சி கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிய பின்பு, மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்வு மேலோங்கியது என்று தெரிவித்துள்ளார்.

வ.உ.சியின் கப்பல் போக்குவரத்து நிறுவனம் இந்தியரால் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாக அமைந்ததும், இதற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்ததும்தான், பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியது!

பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் பெரும் பாதிப்பு அடைந்தது. முதலில் வ.உ.சிக்கு அழுத்தமும் தொந்தரவும் கொடுத்தனர். வ.உ.சிக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், சுதேசி கப்பல் கம்பெனியை மூடிவிடும்படியும் ஆசை காட்டினர். வ.உ.சி தமது கொள்கையில் உறுதியாக இருந்தார்.

கட்டணக் குறைப்பு

பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி பயணக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தது. வ.உ.சியும் கட்டணத்தைக் குறைத்தார். பின்னர் மீண்டும் பிரிட்டிஷார் கட்டணத்தை பாதியாகக் குறைத்தனர். கடைசியில் இலவசப் பயணம் என்று அறிவித்தனர். அத்துடன் இலவசப் பயணம் செய்பவர்களுக்கு ‘ஆளுக்கு ஒரு குடையும் இலவசம்’ என்றனர். அத்துடன் சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு பல தொந்தரவுகளைக் கொடுத்தனர். சுதேசிக் கப்பல் ஊழியர்களை ஆசைவார்த்தை காட்டியும், அடக்குமுறை­யினாலும் கட்டுப்படுத்தினர்.

வ.உ.சி மனம் தளராமல் இதை எதிர்த்துப் போராடினார். ‘சுதேசிக் கப்பலின் வெற்றி, உங்கள் வெற்றி. உங்களின் வெற்றி நம் நாட்டின் வெற்றி, வெள்ளையனிடம் ஏமாந்து விடாதீர்கள். சுதேசிக் கப்பல் இல்லாவிட்டால் மீண்டும் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கத் தயங்க மாட்டார்கள்’ என்றார். தேசப் பற்று மிக்கவர்கள் சுதேசிக் கப்பலை ஆதரித்தனர்.

பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயே அரசு பல வழிகளிலும் உதவி செய்தது. ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு இரகசியக் கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் பலவிதமான தொல்லைகளைத் தொடர்ந்து வ.உ.சிக்கு ஏற்படுத்தினர். சுதேசிக் கப்பல், பிரிட்டிஷ் கப்பலோடு மோத வந்தது என்று நீதிமன்றத்தில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி தன்னுடைய பேச்சாற்றலால் வாதாடி அந்த வழக்கிலும் வெற்றி பெற்றார்.

ஆங்கிலேய அரசு, சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் ரூபாய் 40,000 நஷ்டம் ஏற்படச் செய்தனர். வ.உ.சி யின் சுதேசிக் கம்பெனியின் கூட்டாளிகளில் சிலர் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைப்பட்டு, விலை போய்விட்டனர். நாளுக்கு நாள் கடன் அதிகரிப்பு, ஊழியர்கள் செய்த ஊழல் சுதேசிக் கப்பலைத் தொடர்ந்து இயங்கமுடியாத நிலைக்குத் தள்ளியது!

இந்த நிலையில் கம்பெனியைக் காப்பாற்ற வேண்டுமானால் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியாவது கம்பெனியிடம் கொடுக்கவேண்டும் என்று இந்தியா பத்திரிகையில் பாரதி இவ்வாறு எழுதுகிறார் “கங்கை வெள்ளம் வேண்டுமென்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் பகீரதன் தலை மீது ஒரு சிறிய தூற்றல் உதிர்ந்தது போலச் சென்ற 10 தினங்களில் நமக்து சுதேசிக் கப்பல் தரும நிதிக்குக் கீழே குறிப்பிடப் பட்டிருக்கும் அதி சொற்ப தொகை மட்டும் சேர்ந்திருக்கிறது. ஆனால், இது பெரும்பாலும் புதுச்சேரியிலே மட்டும் சேர்ந்தது. அரையணாவும் காலணாவுமாக வசூலிக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் இன்னும் கொடுப்பதாக பல நண்பர்கள் வாக்களித்திருக்கிறார்கள். புதுச்சேரியைப் போல இத்தனை சொற்பத் தொகையேனும், தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொரு பட்டணத்திலும் கிராமத்திலும் வருமானால், நமது நோக்கம் 10 தினங்களில் கைகூடிவிடும். ஆரம்பத்தில் தூற்றல்களாக இருந்த போதிலும், பகீரதன் கொண்டிருந்த தெய்வ பக்தியால் அவனுக்குக் கங்காப் பிரவாஹம் வந்தே தீர்ந்தது. சுதேசி கப்பல் கம்பெனியார் பாரத நாட்டுப் பொது ஜனங்களிடம் அழியாத பக்தி பூண்டிருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணமும் நிறைவேறியே தீரும்” (இந்தியா பத்திரிக்கையில் பாரதி).

இந்த நேரத்தில் பிபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாட ஆங்கிலேயே அரசு தடைவிதித்து இருந்தது. இதனை மீறி 09.03.1908 ஆம் நாள் தூத்துக்குடியில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் வ.உ.சி பேசினார். இதற்காக 12.03.1908 சிதம்பரனார் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். வ.உ.சியின் கைது மக்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வ.உ.சி கைதுக்கு எதிராக தூத்துக்குடியில் ‘கோரல் நூற்பாலை’ மற்றும் ‘பெஸ்ட் அண்ட் கம்பெனி’ தொழிலாளர்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுவே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம். இந்த வழக்கில் வ.உ.சிக்கு 40-ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நாட்டையே கொதிப்படையச் செய்தது. அதன் பின் மேல் முறையீட்டில் 10-ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

வ.உ.சி உடல்நலிவுடன் சேர்ந்து மனமும் நலிவுற்றது. சுதேசிக் கப்பல் ஓராண்டு புள்ளிவிவரப்படி லாவோ கப்பல்; 115 பயணங்களில் 29,773 பேர் பயணித்தனர்; காலியா கப்பல் மேற்கொண்ட 22 பயணங்களில் 2,150 பேர் பயணித்ததாகவும் தெரிகிறது. இது பிரிட்டிஷாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை பிரிட்டிஷார் கையில் எடுத்தனர். இதனால் சுதேசிக் கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர். பிரிட்டிஷாரின் அடக்குமுறைக்கு அடிபணிந்து விட்டனர். வ.உ.சி சிறையில் இருந்தபோது நிலைமையைச் சமாளிக்க இயலாமல் இவர்கள் இரண்டு கப்பல்களையும் விற்றுவிட்டனர். இதில் எஸ்.எஸ் காலியா கப்பலை வெள்ளையருக்கே விற்றுவிட்டனர். இதனை அறிந்து பெரிதும் வேதனைப்பட்டார் வ.உ.சி.

1912-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தபோது சிதம்பரனாரின் வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது. இதனால் அவரால் வழக்கறிஞர் தொழிலைச் செய்ய முடியவில்லை. சுதேசிக் கப்பல், தொழிற்சங்கப் பணிகளுக்காக சொத்துகளையும், பொருள்களையும் இழந்திருந்தார். வறுமையின் பிடியில் சிக்கியிருந்தார். பின்னர் ஈ.எச். வாலேஸ் என்ற ஆங்கில அதிகாரி வழக்கறிஞர் உரிமத்தைத் திரும்பத் தந்தார். இதன் நன்றியாகத் தான் தன்னுடைய கடைசி மகனுக்கு (வாலேஸ்வரன்) என்று பெயர் வைத்தார். 1924-க்குப் பிறகு கோவில்பட்டி, தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1912-இல் விடுதலையான பின்பு கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கினார். மனச்சோர்வைப் போக்க முழுவதுமாக தன்னை இலக்கியத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்..

- பாரதிபாலன், பேராசிரியர் மற்றும் இயக்குநர், தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை.

Pin It