“வேகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம்” என்பதாக ஒரு பழமொழி யுண்டு. அது போலவே இன்று பிரிட்டிஷ் அரசாங்கமும், இந்திய தேசீயமும் நடைபெற்று வருகின்றன. ஏனென்று கேட்பதற்கு ஆளில்லை. இரு கூட்ட மும் சேர்ந்து பாடுபட்டுழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் சூட்சியை அறியத்தக்க புத்தி இந்திய மக்களுக்கு இல்லை. ஆனால் சீர்திருத்தத்தைப் பற்றியும், சுதந்திரத்தைப்பற்றியும், சுயராஜ்யத்தைப் பற்றியும் பேச்சுக்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மாத்திரம் குறைவில்லை. பொருளாதாரத் துறையைப்பற்றி நீலிக்கண்ணீர் விடுவதிலும், சுதேசி பிரசாரம் செய்வதிலும் மதுபானத்தைப் பற்றி மிக்கக் கவலைப்பட்டவர்கள் போல் நடித்து காங்கிரஸ் ஒரு புறம் பகிஷ்காரமும், மறியலும் அரசாங்கம் ஒரு புறம் பிரசாரமும் செய்வதாக செய்யும் ஆர்ப்பாட்டங்களிலும் குறை வில்லை.

Periyar 264அதே சமயத்தில் “பொருளாதார நெருக்கடியை சரிப்படுத்த” சர்க்காரார் புதிய புதிய வரி போடுவதிலும் காங்கிரஸ் மக்களுக்கு அதிக செலவை உண்டுபண்ண கதர்த்தொழிலை விர்த்தி செய்வதிலும் குறை வில்லை. இந்த இரண்டு காரியங்களிலும் தேசத்தில் பொருளாதாரக் கஷ்ட மும், அடிமைத்தன்மையும், அறியாமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றதேயொழிய வேறில்லை.

               ஆனால் இந்தியாவிலுள்ள இந்திய மக்கள் நிலைமையோ- இவைகளுக்கு காரணம் என்ன? இக்கஷ்டங்களிலிருந்து எப்படி விடுதலை பெறுவது? என்கின்ற உணர்ச்சியே சிறிதுமின்றி, தெய்வத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு, காந்தி ஜயந்தி பண்டிகை கொண்டாடுகின்ற வேலையில் முனைந்து நிற்க பிரசாரம் செய்யப்படுகின்றார்கள். இந்த முயற்சிகளானது இந்தியாவில் 20, 30 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்ததாகக் காணப்படும் நிலைமையிலேயே மக்களை இறுத்தி வைக்கும் முயற்சியாக காணப்படு வதல்லாமல் மற்றபடி அதில் வேறு எவ்வித பரிகாரமோ, விடுதலையோ முற்போக்கோ இருப்பதாகக் காணமுடியவில்லை.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது என்றால் அது யாருக்கு ஏற்பட்டிருக்கின்றது? எதனால் ஏற்பட்டது? என்கின்றதான இரண்டு விஷயத்தையும் கவனித்து யாருக்கு எவ்வித சௌகரியம் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பதைக் கவனிக்க வேண்டியது நீதியையும் பொறுப்பையும் உணர்ந்த - நல்லெண்ணமுடைய ஒரு அரசாங் கத்தின் கடமையாகும்.

இன்றைய நிலைமையில் நம் தலையில் சுமத்தப்பட்டுள்ள அரசாங் கமோ சிறிதாவது நியாயத்தையும், பொறுப்பையும் லட்சியம் செய்யாமல் ‘வேகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம்’ என்கின்ற பழமொழிப்படி ஜனங் களுக்கு அவர்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக இன்னமும் அதிகமானப் பொருளாதாரக் கஷ்டத்தைக் கொடுக்கும் மாதிரியில் வரியை அதிகமாக உயர்த்துகின்ற வேலையையே பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்குச் செய்யப்படும் வேலை என்று சொல்லிக் கொண்டு அந்தப் படியே செய்து வருகின்றது.

ஆகவே, அரசாங்கத்தார் இப்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி இருக்கின்றது என்று நினைத்திருப்பதெல்லாம் அரசாங்க உத்தியோகஸ்தர் களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் இருப்பதைத்தான் பொருளாதார நெருக்கடி என்று கருதி இருக்கின்றார்களேயொழிய, குடி ஜனங்கள் வரி கொடுக்க முடியாமல், வாழ முடியாமல் இருக்கின்ற நிலை மையை ஒரு நாளும் பொருளாதார நெருக்கடி என்று கருதுவதாய்த் தெரிய வில்லை. சர்க்காரார் உத்தியோகஸ்தர்களுக்குச் சாதாரணமாய் 20 வருஷத் திற்கு முன் இருந்த சம்பளங்கள் இன்று அநேக விஷயங்களில் ஒன்றுக்கு ஒன்றரை, இரண்டு ஆகவும், சிலருக்கு ஒன்றுக்கு மூன்றாகவும் ஏற்பட்டிருக் கின்றன. சம்பளங்கள் மாத்திரமல்லாமல் உத்தியோகஸ்தர்களின் எண்ணிக் கையும் ஒன்றுக்கு இரண்டாய், மூன்றாய் சில உத்தியோகங்கள் நான்கு பங்கதிகமாகவும் அதிகப்படுத்தப்பட்டு விட்டன. உதாரணமாக, ஒரு போலீசுகாரனுக்கு மாதம் 7 ரூபாய் முதல் 8 ரூபாய், ஒரு ஏட்டுக்கு 14 முதல் 25 ரூபாய், ஒரு இன்ஸ்பெக்டருக்கு 70 முதல் 150 ரூபாய் இருந்ததானது, இப்போது போலீஸ் காரனுக்கு 18 முதல் 22 ரூபாயும்,ஒரு ஏட்டுக்கு 25 முதல் 35 ரூபாயும், மத்தி யில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் அதிகமாகி 60 முதல் 175 ரூபாயும், இன்ஸ்பெக்டருக்கு 175 முதல் 300 ரூபாய் வரையும் ஏற்படுத்தப்பட்டு போலீசுகாரர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டு விட்ட தென்றால் சாதாரணமாக இது 20 வருஷத்திற்கு முன் இருந்த நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் எவ்வளவு பங்கு உயர்ந்திருக் கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள். இது கீழ்தர்ஜா நிலைமைக்கு உதாரணம் கூறப் பட்டது.

இனி மேல் தர்ஜா நிலைமை என்பதைப் பற்றி கவனிப்போமானால் சென்னை அரசாங்க நிர்வாகசபை 5300 ரூபாய் சம்பளமுள்ள இரண்டு அங்கத்தினர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்ததானது இப்போது 5300 சம்பள முள்ள ஏழு அங்கத்தினர்களால் நிர்வகிக்கப்படுகின்றது என்றால் எவ்வளவு விகிதாச்சாரம் அதிகமாக மக்கள் மீது அரசாங்க பளுவு சுமத்தப்பட்டிருக் கின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். இனி நீதி வழங்கும் இலாகா நிலைமையையும் சற்று கவனித்தோமேயானால் 3000 ரூபாய் சம்பளமுள்ள 5 ஹைகோர்ட்டு ஜட்ஜிகளால் நடைபெற்றுவந்த நீதி நிர்வாகம் இன்று 4000ரூ. சம்பளமுள்ள 15 ஜட்ஜிகளால் ஹைகோர்ட்டு நீதி நடைபெற்று வருகின்றது. இந்த விகிதாச்சாரத்தை அனுசரித்தே இந்திய இராணுவச் செலவும் 22 கோடி ரூபாயில் இருந்தது 60 கோடி வரை உயர்த்தப்பட வேண்டிய அளவுக்கு ஏறிவிட்டது. இந்தக் காரியங்கள் அவ்வளவும் தேசீயத்தின் பேராலும், நல்ல அரசாக்ஷியின் பேராலும் உயர்த்தப்பட்டதேயொழிய வேறில்லை என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, தயவு செய்து மேலே படியுங்கள். ஆகவே, நல்ல அரசாக்ஷியும், தேசீயமும் மக்களின் நன்மைக்காக என்றே ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு இந்த நாட்டுக்கு இன்று இந்த நிலைமை யைக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் இந்த அளவுக்கு தலைகனத்து, சிறிதும் ஈவு இரக்க மில்லாமல் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்படியானதாக ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திய தேசீயம் என்கின்ற ஒரு பெரிய பித்தலாட்டமான சாதனமேயாகும்.

இந்தப் பித்தலாட்டமான தேசீயம் இவ்வளவு அட்டூழியங்களைச் செய்ய அனுகூலமாயிருந்ததற்குக் காரணமெல்லாம் நமது இந்திய மக்களின் முட்டாள்தனமும், வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் விற்கத் தயாராய் இருந்த மானமற்றத் தனமுமேயாகும். இதை இன்னமும் விவரித்துச் சொல்லவேண்டுமென்பதாக நமது ‘குடி அரசு’ வாசகர்கள் ஆசைப்படமாட்டார்கள் என்றே கருதுகின்றோம். ஆனாலும் இரண்டொரு வருக்காவது இரண்டொரு விஷயங்களாவது விளங்க வேண்டி இருக்கு மானால் நமது மாகாணத்தின் தேசீயத்தைப் பற்றி மட்டும் சிறிது ஜாடை காட்டி விட்டு பிறகு மேலே போகலாம் என்று கருதுகின்றோம்.

அதாவது இந்திய தேசீய காங்கிரசுக்கு நமது மாகாணத்தில் மாத்திரம் தலைவரானவர்கள், காரியதரிசி ஆனவர்கள் ஆகியவர்களைப் பற்றியும் , அவர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நலனைப் பற்றியும், அவர்களது நாணயம், தேசபக்தி, தேசிய கொள்கை ஆகியவைகளைப் பற்றியும் சற்று யோசித்துப் பாருங்கள்.

திருவாளர்கள் சர்.சி. சங்கரநாயர் முதல் சர்.மணி அய்யர், எஸ். சீனிவாச அய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.பி. ராமசாமி அய்யர், எ.ரங்கசாமி அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்கள் ஆவார்கள். இன்றைய தினமும் இந்த மாதிரி ஆட்களுடைய யோக்கியதை சற்று வெளியாகி விட்டதால் இதே கூட்டத்தில் உள்ள ஆட்களே சற்று வேறு வேஷம் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். அதாவது சிலபேர் “வெள்ளை வேஷ்டி கட்டிக் கொண்டு பிச்சைக்குப் போனால் லக்ஷியம் செய்ய மாட்டார்கள்” என்று கருதி “காவிவேஷ்டி கட்டிக் கொண்டு பிச்சைக்குப் போவது” போல் சந்நியாசி, துறவி என்கின்ற பேரால் அதாவது வக்கீல் உத்தியோகம் செய்வதை விட்டு விட்டவர்கள் என்கின்ற பெயரால் அதே தேசீயத்தை அதே முறையில் அதே கூட்டத்தார்களே இன்றும் நடத்துகின்றார்களேயொழிய வேறு எந்த விதத்திலும் நாணயமுடையவர் களோ, யோக்கியமும், நல்ல எண்ணமும் உடையவர்களோ இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லிவிட முடியுமா? உதாரணமாக, திரு. காந்திக்கு திரு. ஏ. இரங்கசாமி அய்யங்கார் அரசியல் காரியதரிசி யாகவும், திரு. சி. இராஜகோபாலாச்சாரியார் சமுதாய காரியதரிசியாகவும் இருக்கிறார்கள் என்பதும், திரு. எஸ்.சத்தியமூர்த்தி தான் கான்பரன்ஸ் தலைவராகவும் இருக்கிறார் என்பதுமே போதுமானதாகும்.

மற்ற மாகாணக்காரர்களின் யோக்கியதை தமிழ்நாட்டு தேசீயவாதி களை விட உயர்ந்திருக்கும் என்று கருதி நாம் அவர்களைப் பற்றி எழுதாமல் விட்டு விட்டதாக யாரும் கருத வேண்டியதில்லை. தேசீயம் என்கின்ற அச்சில் எந்த மாகாணத்து மக்களை உருக்கி ஊற்றினாலும் ஒரே மாதிரி உருவந்தான் தோன்றும். இந்த மாகாணத்தில் அதற்கென்றே முன்னணியில் நிற்க ஒரு தனி ஜாதியே ஏற்பட்டு விட்டதால், அது சற்று வேறு மாதிரியாக காணப்பட இடமுண்டாகின்றது என்றாலும் எங்கும் பொதுவில் வக்கீல் கூட்டம் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த மாதிரியான தேசீயமானது (வக்கீல் கூட்டமானது) எப்படிப் பட்ட அரசாங்கத்துடன் தேசீய வியாபாரம் செய்ய ஆசைப்பட்டதென்று பார்ப்போமேயானால், வக்கீல் கூட்டத்தின் மனப்பான்மையின் தத்துவத் திற்குச் சிறிதும் பின் வாங்காததான (வியாபாரத் கூட்டத்தினரான) வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தில் முட்ட ஆரம்பித்தது. இரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று இளைக்காததான தந்திரமும், சூக்ஷியுமுடை யதாததால் இரண்டும் முட்டிக்கொள்ளும் போது இந்திய மூடப்பாமர ஜனங் கள் மத்தியில் சிக்கி, கச கச வென்று நசுங்க வேண்டியவர்களாகி விட்டார்கள். மேற்கண்ட இந்த இரு வர்க்கத்தினர்களின் சுயநல வியாபாரமே தான் இன்றும் ‘நல்ல ஆட்சி’யின் பேராலும், ‘தேசீயத்தின்’ பேராலும் நடக் கின்றது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். வாசகர்களே! இது மாத்திர மல்லாமல், இன்று சீமையில் நடக்கும் வட்டமேஜை மகாநாடு என்பதும் சர்க்காரும் (வெள்ளைக்காரரும்) தேசீயமும் (வக்கீல்களும்) சேர்ந்தது. இந்திய மக்களை ஆலையில் கொடுத்து நசுக்கிப்பிழியும் படியான தன்மை பொருந்திய அளவு கொடுமை கொண்ட ஒரு சதியாலோசனை என்பதை விட மற்றபடி அதற்கு வேறு ஏதாவது பெயர் கொடுக்க முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

               இந்தியாவின் முப்பத்தைந்து கோடி ஜனங்களுக்கும் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு சீமைக்குச் சென்றிருக்கும் திரு. காந்தி அவர்கள் தன் தலையில் சுமந்து கொண்டு போயிருக்கும் சுயராஜ்யத் திட்டம் வருணாச்சிரமக் கொள்கையும், முதலாளி ஆதிக்கக் கொள்கையும் கொண்ட தான ஒரு பெரிய மூட்டையா? அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

அவர் விஷயம் அப்படியிருக்க, மற்ற பிரதிநிதிகளின் யோக்கி யதைகள் தான் என்ன என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். ஏழை மக்களுக்கும், பாடுபட்டு உழைத்துவிட்டு பட்டினி கிடக்கும் மக்களுக்கும் பிரதிநிதியாக யாராவது போயிருக்கின்றார்களா? என்பதை சற்று நடு நிலை மையில் நல்ல புத்தியோடிருந்து யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

ஒரு சமயம் திரு. காந்தி அவர்கள் தன்னை அடிக்கடி தான் “இந்தியாவில் பாடுபட்டு உழைத்து பட்டினி கிடக்கும் கிராமத்து ஏழை மக்களின் பிரதிநிதி” என்று சொல்லிக்கொள்ளுகின்றாரே என்று கருதி அவரை ஏழை மக்களின் உண்மையான பிரதிநிதி என்று கருதியிருப்பீர் களேயானால் நீங்கள் ஒரு முட்டாள்களேயாவீர்கள் என்று நாம் சொல்லு வதற்காக யாரும் அவசரப்பட்டு மனவருத்தமடைய கூடாதென்று கேட்டுக் கொள்ளுகிறோம். ஏனெனில், திரு. காந்தியவர்கள் தன்னை எந்த விதத்தில் ஏழை மக்களின் பிரதிநிதி-கிராமவாசிகள் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கவனித்தால் இதன் உண்மை விளங்கிவிடும்.

அதாவது “ஏழை மக்கள் கிராமத்தில் ஆடுமாடு மேய்த்து, நெய், பால், மோர் விற்றும், செருப்புத் தைத்தும் வாழ வேண்டியது. அவர்களது கையில் காசு சேரும் படியான வேலை எதுவும் செய்யக்கூடாது. மற்றும் பம்பாய் மில் முதலாளிகளைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. அவர் களைப்போல் பணக்காரர்கள் ஆவதற்கு எண்ணவும் கூடாது” என்பதான கொள்கையுடன் தான் கிராமத்து ஏழை மக்களின் பிரதிநிதி என்று அவரே ஒரு தடவைக்கு மேலாகவே சொல்லி இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

அதாவது, வருணாச்சிரமக் கொள்கைபடி மக்கள் இருக்க வேண்டிய அளவுக்கு சுயராஜ்யம் கொண்டுவரப் போயிருக்கும் பிரதிநிதியேயாவார்.

               மற்றபடி, வட்டமேஜை மகாநாட்டின் பார்ப்பனரல்லாதார் பிரதிநிதி களான திருவாளர்கள் இராமசாமி முதலியார், பன்னீர் செல்வம் முதலியவர் களின் யோக்கியதையையும் நாம் வெளியில் சொல்லித்தான் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தென்பதில்லை. ஏனெனில், திரு.இராமசாமி முதலியார் ஜஸ்டிஸ் கட்சி என்னும் ஒரு தேசீயக் கட்சிப் பிரதிநிதியாவார். ஆதலால், ஜஸ்டிஸ் கட்சியின் தேசீயக் கொள்கை என்ன என்று தெரிந்தவர் களுக்கு திரு.முதலியாரின் பிரதிநிதித்துவத்தை பற்றி தெரிவிக்க வேண்டிய தில்லை. திரு.பன்னீர் செல்வம் அவர்களோ இந்திய கிருஸ்துவர் பிரதிநிதி ஆவார். அவருடைய மத சமுதாயக் கொள்கைகள் தெரிந்தவர்களுக்கு அவரது பிரதிநிதித்துவத்தைப் பற்றியும் நாம் தெரிவிக்க வேண்டியதில்லை.

மற்றும் சென்னை மாகாண பார்ப்பனப் பிரதிநிதிகளுக்காக தலையங் கத்தை வளர்க்க மனமில்லாததால் விட்டு விட்டோம்.

பெண்கள் சார்பாகவோ, திருமதி.ராதாபாய் சுப்பராயன் அம்மாள் நமது பிரதிநிதியாவார். அந்தம்மாள் ஒரு ஜெமீன்தாரணியாவார். பெண்களுக்கு எல்லா பிரதிநிதித்துவமும், மந்திரி வேலை வரை பதவியும் கிடைக்க வேண்டுமென்பதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் வஞ்சகமில் லாமல் வாதாடுவார்கள். ஆனால், புருஷனிடம் அடியும் உதையும் பட்டுக் கொண்டு, தற்கொலை பண்ணிக்கொள்ளவும் சௌகரியம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களைப் பற்றிய கதை அந்த அம்மையாருக்கு சிறிதுமே தெரியாது. ஆகவே, அந்தம்மாளிடம் பெண்களுக்கு முக்கியமாக எவ்வித விடுதலை வேண்டுமோ அந்தக் காரியம் மாத்திரம் எதிர்பார்க்க முடியாது. இவை இப்படி இருக்க, மற்றபடி வட்டமேஜை மகாநாட்டில் நமது சர்க்காரார் பிரதிநிதித்துவம் எவ்வளவு யோக்கியதை உடையது என்று பார்த்தால் ஒரு வரியில் முடிவு கண்டு விடலாம். அதாவது ‘இந்தியாவை இந்துசமஸ்தான மன்னர்களும், இந்திய வக்கீல்களும், வியாபாரிகளும் சேர்ந்து ஆட்சி புரிய வேண்டியதாகும்’ என்கின்ற கொள்கையே தான் சர்க்காராருடைய கொள்கையாகும். மற்றபடி நமது மாகாண தீண்டாதவர்கள் பிரதிநிதித் துவத்தைப் பற்றி பேசுவதென்றாலோ நமது பிரதிநிதியாய் சென்றிருப்பவர் தங்களுக்கு என்ன வேண்டும்? என்பதையே சரியாய் உணராதவர்கள் ஆவார்களா என்பது சந்தேகம்.

ஆகவே, இப்படிப்பட்ட வட்ட மேஜை மகாநாட்டை மேலே சொன்ன படி 35 கோடி மக்களை வதைத்து தாங்கள் வாழ நினைத்திருக்கும் பலவித சுயநல எண்ணங்களைக் கொண்ட ஒரு சிறு கூட்டத்தாரின் சதியாலோசனை மகாநாடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் என்று மறுபடியும் கேட்கின்றோம். சுதந்திரம், சுயராஜ்யம், பொருளாதாரக் கஷ்டம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கும் இந்த காலத்திலேயே அதுவும் அக் கூச்சல்களுக்கு மத்தியிலேயே இந்தியாவில் ‘பொருளதார நெருக்கடியை குறைக்க’ என்று புதிய வரி போடுவதினுடையவும், அடக்கு முறை சட்டங்கள் ஏற்படுத்துவதினுடையவும் கொடுமையை நினைத்தால் யாருக்கு தான் வயிறு பற்றி எரியாது? அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லுவதானால், தேசீயம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லுவதானால் மக்களுக்கு ஒரு அரசாங்கமோ, தேசீயமோ அடியோடு வேண்டியதில்லை என்கின்றதான நிலைமையே மேலென்று சொல்லுவோம். தேசம் தன்னரசு நாடாகி, எங்கு பார்த்தாலும் கலகமும் கொள்ளையும் நடக்கும் நிலைமை வந்தாலும் இந்திய மக்கள் இன்று அரசாங்கத்தாலும், தேசீயத்தாலும் கஷ்டப்படுகின்ற இம்சையில் இருந்து 100- க்கு 50 பங்கு மேலாகவே குறைவாகத் தான் கஷ்டப்படுவார்களேயொழிய, இதைவிட ஒரு சிறு கடுகளவும் அதிகமாய்க் கஷ்டபட முடியாதென்று தைரியமாய்ச் சொல்லுவோம்.

               அப்படி ஏதாவது, யாராவது அந்த சமயம் இன்றைய நிலை மையை விட சற்று அதிகமாகக் கஷ்டப்பட கூடியதாகும் என்று சொல்லக் கூடுமானால், அப்படிக் கஷ்டப்படும் கூட்டம் வெகு சிறிய கூட்டமாகவும், அதுவும் இன்று மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்தி, சோம்பேறியாய் வாழும் பார்ப்பன-வக்கீல்-உத்தியோகம் ஆகிய கூட்டமும், பாட்டிற்குத் தகுந்த கூலிகூட கொடுக்காமல் ஏழைகளை ஏமாற்றி வாழும் முதலாளி, ஜமீன்தாரர் கூட்டமும் தான் சின்னா பின்னப்படுமே தவிர, மற்றபடி 100-க்கு 90 பேர் கொண்ட ஏழை மக்களுக்கு ஒரு கஷ்டமுமே வந்து விடாது.

ஆகவே, இவற்றிலிருந்து அரசாங்கமும், தேசீயமும் சோம்பேரிகளையும், செல்வவான்களையும் காப்பாற்றுவதற்கேற்பட்டதேயொழிய ஒரு நாளும் ஏழை மக்களைக் காப்பாற்ற ஏற்பட்டதல்ல என்றே உரக்கக் கூறுவோம்.

ஏழை மக்கள் கூப்பாடு வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே தான், அதாவது எப்படி அடித்தாலும் அழுகக் கூடாது என்பதற்காக மேலும் மேலும் அடிப்பது போலவே இன்று இந்திய சட்டசபையில் பத்திரிகைச் சட்டம் கொண்டு வந்தாய் விட்டது. இச்சட்டம் கொண்டு வரப் பட்டதற்கும், அமுலில் வரப் போவதற்கும் திரு.காந்தியும், தேசீயமுமே நூற்றிற்கு 51 பாகத்திற்கு மேலாகவே பொறுப்பாளியாவர் களென்று சொல்லுவோம்.

அடித்தவனை தண்டிக்கவோ, கொலை செய்தவனை கொலை செய் யவோ கூடாதென்று நாம் எப்பொழுதும் சொல்லவரவில்லை. ஏனெனில், தண்டனையடைய தயாராயிருப்பவன் தான் பெரிதும் அடிக்க வருவான். சாகத் துணிந்தவன் தான் மற்றவனைக் கொல்ல வருவான். ஆகையால் அதில் தப்பித்துக் கொள்ள ஆசைப்படுபவர்களை விட்டுவிடும்படி நாம் சொல்ல வரவில்லை. அதற்காக ஒரு மனிதன் தனது அபிப்பிராயத்தைக்கூட வெளியில் எடுத்துச் சொல்லக் கூடாது என்று சட்டம் செய்வதானால் இது எப்படி நாகரீகமான சுயேச்சைக்கு இடமளிப்பதான ஆட்சி என்று சொல்ல முடியும்?

ஒவ்வொரு ‘தேசீயப்பத்திரிகையும்’ ஒவ்வொரு ‘தேசீயவாதியும்’ அனேகமாய் இவ்விஷயத்தில் வழவழவென்றே பேசி சர்க்காருக்கு தைரியத்தையும் ஆக்கத்தையும் அளித்துவிட்டார்கள். ‘நான் ஓயாமல் அழுகிறேன். நீ நோகாமல் அடி’யென்பது போலவே நடந்து கொண்டி ருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பேசினார்களேயல்லாமல் வேறில்லை. அதாவது ‘ஒரு சட்டம் வேண்டியது தான்..ஆனால்’ என்று தான் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்து இருக் கிறார்கள். கொலை செய்தவனைத் தண்டிக்க ஏற்கனவே சட்டம் இருக்கின்றது. கொலைக்குத் தூண்டியவனையும் தண்டிக்க ஏற்கனவே சட்டம் இருக்கின்றது. அப்படியிருக்க, அடியோடு பத்திரிகை சுதந்திரத் தையே அழிக்கத்தக்க சட்டம் எதற்காக செய்யப்பட வேண்டும்? என்பது நமக்கு விளங்கவில்லை. என்ன குறைந்தாலும் இந்தியா தேசத்தில் நாள் 1 க்கு நூற்றுக்கணக்கான கொலைகளுக்குக் குறையாமல் மனிதனை மனிதன் வெட்டிக்கொண்டோ, குத்திக் கொண்டோ, சுட்டுக்கொண்டோ தான் கொலைகள் நடைபெறுகின்றன. இதற்காக உலகத்தில் கத்தி இல்லாமல் போய்விட்டதா? துப்பாக்கி இல்லாமல் போய்விட்டதா? கைகள் இல்லாமல் போய் விட்டதா? என்று கேட்கின்றோம். கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, துவேஷப்பட்டு குத்துவதும், வெட்டுவதும், சுடுவதும் கோழைத்தனமென் பதையும், முட்டாள்தனம் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். அதற்காக மக்களுக்கு உண்மை விளங்காமலும், விஷயஞானமேற்படா மலும் இருக்கும்படி செய்வதா? என்பது தான் நமது கேள்வி.

ஆகவே, இந்த சமயத்தில், அதாவது இந்தியாவுக்கு ‘சுதந்திரம்’ வழங்கப்போகும் சமயத்தில், பொருளாதாரக் குறை நீங்கப் போகும் சமயத்தில், அதுவும் ‘அஹிம்சா தர்மமூர்த்தியாகிய மகாத்மா காந்தி’ உலகத்தை அஹிம்சா தர்மத்தில் திருப்பி அஹிம்சையின் மூலமே ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் ஏழைகளுக்கு வேண்டிய “சுதந்திரம் வாங்கிவர சீமைக்குப் போயிருக்கும்” சமயத்தில், கதரின் மூலம் மணிக்கு ஒரு தம்படி வரும்படியான “பொருளாதாரக் கஷ்டத்தை நீக்க” விருக்கும் சமயத்தில் இதுவரையில்லாத புதிய வரி உயர்வும், இதுவரையில்லாத புதிய அடக்குமுறை சட்டமும் ஏற்படுவது என்றால், இந்த தேசீயத்திலும், இந்த சர்க்காரிலும் ஏதாவது நாணையமோ, யோக்கியமோ இருக்கமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். எனவே, ஜனங்களின் முட்டாள்தனத்தால் தேசீயம் இவ்வளவு அயோக்கியத்தனமாய் நடைபெறுவதும், தேசீயத்தின் அயோக்கியத்தனத்தால் அரசாங்கம் இவ்வளவு அக்கிரமமாகவும், கொடுமையாகவும் நடைபெற வேண்டியதானதுமான காரியங்களை நிiiத்துப்பார்த்தால் இவை நமக்கு அதிசயமாய்த் தோன்றவில்லை.

ஏனெனில், மக்களின் முட்டாள்தனம் நீங்கும் போதுதான் இந்தக் கொடுமையும், அக்கிரமமும் எல்லாம் சரிபட முடியும். அதுவரை யார் என்ன பாடுபட்டாலும் ஒரு காரியமும் சாத்தியப்பட மாட்டாது. இப்படியே தான் மேலும் மேலும் நடந்து கொண்டே இருக்கும்.

ஆதலால் இன்று மக்களின் முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கை யையும் ஒழிக்கும் வேலை தான் தேசீய வேலையாகவும், நல்ல அரசாட்சி ஏற்படுத்தும் வேலையாகவும் கொள்ள வேண்டியதாகும் என்பதை பொது ஜனங்களுக்கும், தேசாபிமானிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதினோம்.

(குடி அரசு - தலையங்கம் - 04.10.1931)

Pin It