காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 - 92)

வாருங்கள் தோழர்களே நாம் மீண்டும் “டைம் மெஷினில்” பயணிக்கவேண்டியுள்ளது. வரலாற்றில் முன்னும் பின்னும் பயணிக்காமல் உண்மை நிலையை ஆய்ந்தறிவது அவ்வளவு சுலபமல்ல என்பதால், நாம் முன்பு நினைத்ததுபோல் இல்லாமல் இந்திய சுதந்திர முழு வரலாற்றையும் ஓரளவு புரிந்துகொண்டாலொழிய இந்த இரண்டு நூற்றாண்டு வரலாறு புரியாமலே போய்விடுமோ என்கிற அச்சத்தின்பால் எழுந்ததுதான் எனது இந்த டைம் மெஷின் யுக்தி என்க.

இன்றைய இந்திய துணைக்கண்டம் என்றழைக்கப்படும் இந்திய ஒன்றியத்தில் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்களில் தெற்கில் தொடங்கிய முதல் விடுதலை போராளிகளான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளே. ஆனால் அவர்களுக்கு எல்லாம் உந்து சக்தியாக திகழ்ந்தவர் மைசூரை ஆண்டுகொண்டிருந்த திப்புசுல்தான் ஆவார். இன்னும் சொல்லப்போனால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு சவாலாக இருந்தவர் திப்பு. இதனால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கமுடியுமா என்கிற ஐயத்தையும் உருவாக்கியவர் திருவாளர் திப்பு என்றால் மிகையல்ல.

தனது 32ஆவது வயதில் அரசுரிமையை பெற்றிருந்த திப்பு, டிசம்பர் 1784இல் மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் தன்னுடன் இணைந்து போரிட்ட பிரஞ்சுப் படைகளுடன் போரைத் தொடர்ந்தார். ஆனால் திப்புவின் ஆசையை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் அன்றைய பிரஞ்சு அதிகாரத்தின் உச்சியில் இருந்த 16ஆம் லூயி; எனவே திப்புவுக்கு போரைத் தொடரமுடியாமல் பாதியிலேயே நிறுத்தவேண்டியதாயிற்று. அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது லூயி பிரிட்டனுடன் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம் என்பதே. ஆனாலும் சுமார் நான்காயிரத்திற்கும் மேலான ஆங்கிலச் சிப்பாய்கள் திப்புவால் சிறை பிடிக்கப்பட்டு பின்பு அவர்களின் தளபதி உள்பட விடுதலை செய்யப்பட்டார்கள். இது பிரிட்டனுக்கு பெருத்த அவமானமாக பதிவானது.

இதன் விளைவாக 1790 -20இல் மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் திப்புவிற்கும் அன்றைய பிரிட்டிஷ் ஜெனரல் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ்-க்கும் நடைபெற்றது. இதை ஒரு துரோகபோர் என்றுகூட சொல்லலாம். இந்த போருக்கு அடிப்படைக்காரணமே ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னர்தான். அதுமட்டுமன்றி திப்புவுக்கு எதிராக திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர். அவர்களை அனைவரையும் எதிர்கொண்ட திப்பு மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. பின்னாளில் ஆங்கிலேய அதிகாரி மன்றோ “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” குறிப்பிடுகிறார். எனினும் திப்புவின் தோல்வியால் ஆங்கிலேயருடன் சேர்ந்து உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

இதில்

  1. திப்புசுல்தான் தன் ஆட்சியில் பாதியை வெள்ளையருக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும்
  2. மூன்று கோடியே முப்பது இலட்ச ரூபாயை இழப்பீட்டுத்தொகையாக தரவேண்டும்
  3. இந்த தொகை முழுவதும் செலுத்தி முடிக்கும்வரை திப்புவின் தன் இரண்டு மகன்களையும் வெள்ளையர்களிடம் பிணைக்கைதிகளாக ஒப்படைக்கவேண்டும். இதில் தன்னுடைய ஒரு மகனுக்கு 14 வயது மற்றவனுக்கோ எட்டு வயது என்பது குறிப்பிடத்தக்கது.

திப்பு சுல்தான் கண்ணீருடன் ஒப்புக்கொண்டு தனது இரண்டு மகன்களையும் பிப்ரவரி 23 ஆம் தேதியன்று கார்ன்வாலிஸின் பாசறைக்கு அனுப்பிவைத்தான். இதை கார்ன்வாலிஸின் தரப்பு பெரிய வெற்றி விழாவாகக் கொண்டாடியதுடன் திப்புவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகள் மராத்தியருக்கும் நிஜாமுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டன. போரில் ஈடுபட்ட மன அழுத்தத்தின் காரணமாக கார்ன்வாலிஸின் உடல் நலம் வெகுவாக குன்றியிருந்தநிலையில்; 1793இல் தனது கவர்னர் ஜெனரல் பதவியை ஷர் ஜான் ஷோரிடம் ஒப்படைத்துவிட்டு இங்கிலாந்திற்குப் புறப்பட்டுவிட்டார். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்!

இதற்கு முக்கிய காரணமாக ஓரளவு ஞாயமாகச் செயல்பட்டவர் ஷர் ஜான் ஷோர். போர்குணமற்ற அவரிடம் நல்ல நிதி நிர்வாகமே இருந்தது. திப்புசுல்தான் ஹைதராபாத் நிஜாமிடம் போர்த்தெடுத்தபொழுது ஷர் ஜான் ஷோர் நடுநிலை வகித்தார். அதாவது பாதிப்பு மராத்தியரையோ நிஜாமையோத் தாக்கினால் ஆங்கிலேயர்கள் அவருக்கு உதவவேண்டும் என்பது உடன்படிக்கை; ஆனால் சமயம் பார்த்து மராத்தியர் திப்புவுடன் சேர்ந்துகொண்டதால் அந்த உடன்படிக்கை செல்லாது என்று ஷர் ஜான் ஷோர் தன்னுடையப் படைகளை அனுப்ப மறுத்துவிட்டார். இதுவே திப்புவின் மறுவெற்றிக்கு காரணமாக அமைந்தது எனலாம். 1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் தன்னிறைவு பெறவேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

அதாவது எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.....

எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக; 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள், திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரைத் தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர் என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார்; அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம். அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்படாத சூழலில்; “போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு இது அவரது மேன்மையைக் காட்டுகிறது.

1857 வட இந்திய சுதந்திரப் போர்!

“மனித குல வரலாற்றில் பழி வாங்குதல் என ஒன்று இருக்கிறது இங்கே பழிவாங்குவதற்கான கருவிகளை உருவாக்குபவன் வன்முறைக்கு இலக்கானவன் அல்ல, அந்த வன்முறையை ஏவியவன்தான் (தனக்கெதிரான) அந்தக் கருவியையேத் தயார் செய்கிறான். இதுதான் வரலாற்றுப் பழிவாங்குதலின் விதி. பிரிட்டிஷாரால் சித்திரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து தொடங்கவில்லை இந்தியாவின் கலகம்; அவர்களால் சோறும் துணியும் தந்து சீராட்டி வளர்க்கப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது என்கிறார் கார்ல் மார்க்ஸ், செப்,4,1857.

தொழிற்புரட்சி தோற்றுவித்த நவீன எந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளைக் காட்டிலும் இந்தியக் கைத்தறி தரமானதாகவும் மலிவானதாகவும் இருக்கவே, இந்தியாவின் துணி ஏற்றுமதியை 1820இல் முற்றிலுமாகத் தடை செய்தது கும்பினியாட்சி. பிரிட்டனின் துணிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. உலகப் புகழ் பெற்ற இந்தியாவின் கைவினைஞர்களும் நெசவாளர்களும் பிழைக்க வழியற்று விவசாயத்தை நோக்கித் தள்ளப்பட்டனர்.

இதன் விளைவாக 1770 முதல் 1857 வரை தோன்றிய 12 பெரும் பஞ்சங்கள் லட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்டன. ஒரு வேளைச் சோற்றை வயிறார உண்பது என்றால் என்ன வென்றே 50% விவசாயிகளுக்குத் தெரியாது என்று அன்றைய நிலைமையை வருணித்தான் ஒரு ஆங்கில அதிகாரி. அபினியும் அவுரியும் பயிரிடச் சொல்லி விவசாயிகளையும் பழங்குடி மக்களையும் கட்டாயப்படுத்தியதன் மூலம் உணவு உற்பத்தியை மேலும் அழித்தது ஆங்கில ஆட்சி.

ஜமீன்தார்களுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும், அவர்களை ஏவிவிட்ட கும்பினியாட்சிக்கும் எதிராக விவசாயிகளின் கலகங்கள் வெடித்தெழுந்தன. அவையனைத்தும் கொடூரமாக நசுக்கப்பட்டன. வரவிருக்கும் எழுச்சிக்குக் கட்டியம் கூறுவது போல 1855இல் எழுந்தது சந்தால் பழங்குடி மக்களின் ஆயுதப்போராட்டம். வங்காளத்திலும் பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயரின் நிர்வாகத்திலிருந்தே இரண்டு ஆண்டுகள் விடுவிக்குமளவு போர்க்குணத்துடன் நடைபெற்ற அந்தப் போராட்டம் ஒரு ஆயுதமேந்திய மக்கள் எழுச்சியின் வலிமையை நிரூபித்துக் காட்டியது. எனினும் சமூகமனத்தையும் தட்டியெழுப்பும் வல்லமை அந்த எழுச்சிக்கு இல்லை. எனவே அத்தகையதொரு கிளர்ச்சிக் காக நாடு காத்திருந்தது.

பிரபுக்குலத்தையே இழிவாக நடத்திய ஆங்கிலேய ஆட்சி, சிப்பாய்களை அற்பப் புழுக்களைப் போல நடத்தியது. “”நீக்ரோ என்றும் பன்றி என்றும்தான் சிப்பாய்களை அழைக்கிறார்கள் அதிகாரிகள். ஹைதரைப் போன்ற இராணுவ மேதையாக இருந்தாலும் அவன் எந்தக் காலத்திலும் ஒரு கீழ்நிலை ஆங்கிலேயச் சிப்பாயின் ஊதியத்தை எட்டவே முடியாது. 30 ஆண்டுகள் விசுவாசமாகச் சேவை புரிந்திருந்தாலும் நேற்று வந்திறங்கிய ஒரு ஆங்கிலேய விடலைப் பையனின் கிறுக்குத்தனமான உத்தரவுகளிலிருந்து அவன் தப்ப முடியாது” என்று சிப்பாய்களின் அன்றைய நிலைமையைப் பதிவு செய்திருக்கிறார்கள் ஆங்கில வரலாற்றாசிரியர்கள்.

1824இல் பரக்பூரின் இந்துச் சிப்பாய்கள் கடல் மார்க்கமாக பர்மா செல்ல மறுத்தபோது அந்தப் படைப்பிரிவே கலைக்கப்பட்டு அனைவரும் பீரங்கி வாயில் வைத்துப் பிளந்தெறியப்பட்டார்கள். ஆப்கன் போரின் போது தாங்கள் கேவலமாக நடத்தப்பட்டதை எதிர்த்த ஒரு இந்துச் சிப்பாயும் முசுலிம் சிப்பாயும் ஒன்றாக நிற்கவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பாரக்பூரின் இளம் சிப்பாய் மங்கள் பாண்டே மேலதிகாரியைத் தாக்கிய குற்றத்துக்காக மார்ச் 1857இல் தூக்கிலிடப்பட்டான். இவைகளினால் ஒரு பெரும் கிளர்ச்சி வெடிப்பதற்குத் தயாராக இருந்தது; துப்பாக்கியின் குதிரையை அழுத்தியவுடனே சீறிப்பாய்வதற்குத் தோதான கொழுப்பு தடவிய தோட்டாவை வழங்கியதன் மூலம் கலகத் துப்பாக்கியின் குதிரையைத் தானே தட்டிவிட்டது பிரிட்டிஷ் அரசு. ஆம், அது கலகத்தின் தோற்றுவாய் அல்ல, ஒரு தூண்டுதல் !

சென்னை மாகாணத்திலிருந்து பைசாபாத் சென்று மக்கள் மத்தியில் ஆயுதப்புரட்சியைப் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி, 1857இலேயே பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்கொண்டு தோற்கடித்தவர் மவுல்வி அகமதுல்லா. சிப்பாய்ப் புரட்சி அவரை மாபெரும் தலைவராக்கியது. பிரிட்டிஷ் ஆட்சியால் சொத்து பறிக்கப்பட்ட ஜமீன்தாரான குன்வர்சிங்கின் (வயது 80) எழுச்சிக்குத் தலைமை வகித்து களத்திலேயே வீர மரணமடைந்த அவரைப் பற்றிப் பல தாலாட்டுகள், கதைப்பாடல்கள். குன்வர் சிங் இன்னமும் மக்களின் நாவில் பாட்டாய் நடக்கிறான்.

இதற்கிடையில், பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை’ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்’ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை’ என்று வாலை ஆட்டியது. இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர’ இந்தியா”. இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம் ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி.

“வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்கு கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான விதை’ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் ‘காலியோ’, ‘லாவோ’ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின. கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பித்தன. தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது. கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.

ஆம்

வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாகும். இந்த ஆலையில் 10 வயது சிறுவர் சிறுமியர்கள் கடுமையாகத் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலியும் மிகக் குறைவு. வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் இந்த கொடுமைகளுக்கு எதிராக முடிவு கட்டவேண்டிகை கோர்த்தனர். பொதுவாக முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இதில் இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

இதனால் வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை விதிக்கிறான் நீதிபதி பின்ஹே! அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறைக் காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்கு கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.

காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமையை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்குமாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள். கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது. பின்னாளில் இது காந்திக்கணக்கு என்ற நையாண்டியாகவும் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறச்செய்துவிட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. காங்கிரசில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வ.உ.சி, அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1925ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது; 19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத்தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்’ என்று பெரியாரை பெருமையுடன் குறிப் பிட்டுப் பேசுகிறார் பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார் (ஆதாரம்: குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “”இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார். 1928இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார், சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.!!

1857 புரட்சி மற்றும் 1857ன் முதல் சுதந்திரப் போராட்டம் இந்திய கலகம், மகத்தான இந்திய கலகம், சிப்பாய் கலகம், சிப்பாய் புரட்சி, 1857 புரட்சி என்றெல்லாம் பல பெயரிட்டு அழைக்கப்படும் இந்த போர் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் வேண்டி; பாரதத்தலைமைக்கும் மக்களுக்கும் இது இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக மலர்ந்தது. 1857ஆம் ஆண்டு போரை, வெறும் சிப்பாய்க் கலகம் என்றும், சிப்பாய் புரட்சி என்றும் புரட்டுப் பேசத் தூண்டுகிறது; இந்த துரோகப் பட்டியலில் அந்நியர், நம்மவர் என்று கொடுமதி கொண்ட கொடுமதியாளர்களும், தாய்ப்பாசம் அற்ற புல்லர்களும், மண் பற்று அற்ற நன்றி கொன்றவர்களும், பிறரை வதைத்து, கொடுமைப்படுத்தி, கசக்கிப் பிழிந்து அவர் கண்ணீரில் பிழைப்பு நடத்தும் ஆங்கிலேயத் தனம் நிரம்பிய சுதேசிகள், ஆங்கிலேயர்கள் என பல வகைப்பட்டோர் அடக்கம். வரலாற்றின் மறைக்கப்பட்ட, கண்ணுக்கு மறுக்கப்பட்ட படலங்களைப் புரட்டிப் பார்த்தால், சுதேசிகளும், விதேசிகளும் அன்று தொட்டு இன்று வரை செய்து வரும் பச்சை துரோகங்களும், போடும் வேஷங்களும், பற்றி நினைக்க வைத்தத்தின் விளைவாக; ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் புரட்சிகள் வெடித்தன. அதற்கு அச்சாரமாக 1857 சனவரி மாதமே இராணுவ தளங்களில் புரட்சிக்கான வெளிப்பாடு தெரியத் தொடங்கியது. அது முழு வீச்சில் மே மாதம் வெடித்து ஓய்ந்த போது, இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்து, 1858 முதல் பிரிட்டிஷ் சர்க்காரின் அடக்குமுறை, அடிமைத்தன ஆட்சி உருவெடுத்தது. சில சமஸ்தானங்கள் பெயரளவுக்கு தன்னாட்சி பெற்றிருந்தாலும், இந்திய துணைக்கண்டம் பிரிட்டனின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் விரிவாக்கம்

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி 1757இல் ராபர்ட் க்ளைவ் தலைமையில் நடந்த பிளாஸிப் போருக்குப் பின்னர், வங்காளத்தில் சிவில் உரிமை பெற்றது. பின்னர் 1764ஆம் ஆண்டு பக்ஸர் போருக்குப் பிறகு முழு ஆட்சி செய்யும் உரிமை பெற்று, அதை கையகப்படுத்தியது. இதன் பிறகு அவர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டார்கள். 1845இல் கம்பெனி கொடூரமான போரை நிகழ்த்தி, சிந்து மாகாணத்தைக் கைப்பற்றியது; 1848இல் 2வது ஆங்கிலேய சீக்கியப் போர் நடைபெற்று கம்பெனி பஞ்சாபையும் கைப்பற்றியது; 1853இல் மராட்டியர்களின் தலைவர் நானா சாஹேபின் விருதுகள் பறிக்கப்பட்டு அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. 1854இல், பெரார் கம்பெனி சொத்தாகியது 1856இல் அவத் ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது..

மறைக்கப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து பேசுவோம்...

- ஆய்வு தொடரும்