ருஷ்ய-ஜெர்மனிய வரலாற்றாளரும் தத்துவவாதியுமான ஃபெதோர் ஸ்டெபுன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு எழுதினார்: ‘உலகப்போருக்கு நீண்ட காலத்திற்குமுன்,1 அரசியல் உணர்வுள்ள மக்கள் அனைவரும் எரிமலையின்மீது வாழ்வது போலத்தான் வாழ்ந்தனர்.’ போருக்கு முந்தைய பத்தாண்டில், எரிமலைகள் கொதிக்க ஆரம்பித்து விட்டன. ரஷ்யாவில் 1905ல் புரட்சி வெடித்தது. மெக்ஸிகோவில் 1910ல் புரட்சி தொடங்கியது. சீனாவில் பேரரசாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த சீனப்புரட்சி இதற்கு அடுத்த ஆண்டு நடந்தது. அயர்லாந்தில், 1912ல் அறிமுகமான ஹோம் ரூல் மசோதா நாட்டை சுதந்திரத்திற்கு அருகில் நகர்த்தியது; பத்தாண்டிற்குப் பின்னர்தான் அதை அடைய முடிந்தது. இந்த ஆண்டுகளில் பிரிட்டிஷார் வங்காள மாகாணத்தைப் பிரிக்க முயன்றனர். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்குப் பெரும் சீர்குலைவைக் கொண்டு வந்த இயக்கம் தோன்றுவதற்கு இச்செயல் வழிவகுத்தது. 1857ல் நடந்த கிளர்ச்சியைக் காட்டிலும், பொருளாதாரம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் அதிகம் சேதத்தை ராஜ்ஜியத்திற்கு தந்தது.

நிர்வாகம் செய்ய முடியவில்லை என்ற அடிப்படையில் வைஸ்ராய் ஜார்ஜ் நாதனியல் கர்ஸான் மிகப் பெரிய மாகாணமான வங்காளத்தை 1905ல் இரண்டாகப் பிரித்தார். ஆனால், அதற்கு ஓர் அரசியல் நோக்கமும் இருந்தது. கல்கத்தாவின் ஹிந்து அறிவுஜீவிகளின் அரசியல் மிகைச்செயல்பாடுகள் பிரிட்டிஷாரை உறுத்தின. மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசித்த மாவட்டங்களை இவர்களின் செல்வாக்கிலிருந்து விலக்கி வைக்க அவர்கள் விரும்பினர். கர்ஸானின் உள்துறைச் செயலரும், இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் சிற்பியுமான ஹெர்பெர்ட் ரிஸ்லீ இவ்வாறு கூறுகிறார்: ‘ஒன்றுபட்ட வங்காளம்2 ஒரு பெரும் சக்தி; பிளவுபட்ட வங்காளம் அனைத்துத் திசைகளிலும் இழுக்கப்படும்.’ அரசாங்கத்திடம் மேலதிகப் பிரதிநிதித்துவம் கேட்டுக்கொண்டிருந்த, சர்ச்சைகளால் நிரம்பியிருந்த காங்கிரஸ் கட்சியை, இந்தப் பிரிவினை மேலும் பலவீனப்படுத்தும் என்று அவர்கள் நம்பினர்.

பிரிட்டிஷார் முடக்க நினைத்த கோரிக்கைகளை விஞ்சியதாகப் பிரிவினைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இருந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில், வங்காளப் புரட்சிக்காரர்கள் கவர்னர் பயணித்த ரயிலை வெடிவைத்துத் தகர்க்க முயன்றனர். பின்னர், அவரைச் சுட்டுக் கொல்லவும் முயன்றனர். மிகக் கடுமையாக நடந்து கொள்ளும் நீதிபதி ஒருவரின்மீது குண்டு வீசப்பட்டது; ஆனால் அவர் தப்பிவிட்டார்; மாறாக, பாரிஸ்டர் ஒருவரின் மனைவியும் மகளும் இறந்து போயினர். புரட்சிக்காரர்களின் தாக்குதல் உத்திகளில் துல்லியம் போதவில்லை எனினும் அவர்களுக்கு ஆதரவாளர்கள் குறைவாக இல்லை. வங்காளத்திற்கு வெளியிலும் தீவிரவாதம் பரவத் தொடங்கியது. அகமதாபாத்தில் புதிய வைஸ்ராய் மிண்டோ பிரபு மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் உயிர் தப்பிவிட்டார். பஞ்சாபில் புரட்சிகர இயக்கம் ஒன்று தோன்றியது; அதன் பாசறைகள் அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்கின. இலண்டனில், தெற்கு கென்சிங்டனின் இம்பீரியல் நிறுவன வளாகத்தில் புரட்சிகர இளைஞன் ஒருவன் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரைக் கொலைசெய்தான். பேரரசின் சொந்த மண்ணிலேயே இப்படி ஒரு படுகொலை! அதன் வரலாற்றில் அரிதான நிகழ்வு. பிரிட்டிஷ் மக்கள் அதிர்ச்சியும் திகிலுமடைந்தனர்.voc with his second wife meenakshi

(வ உ சி அவர்களுடன் அவரது இரண்டாவது மனைவி மீனாட்சி அம்மையார் அவர்கள்)

பிரிட்டன் செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகளிலிருந்து, இந்த வன்முறைப் போராட்டங்கள் விடுதலை எழுச்சியின் சிறிய பகுதிதான் என்று முடிவு செய்வது கடினமாக இருந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரத்தை வென்றெடுத்து, இந்தியாவின் உற்பத்திச் சக்திகளை மீண்டும் கைப்பற்றி, வெளியேறிக் கொண்டிருந்த பொருளாதார, பண்பாட்டுச் செல்வத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. மிதவாத காங்கிரஸ் உறுப்பினர்கள்மீது இந்தியர்கள் பலரும் நம்பிக்கை இழந்திருந்தனர். படித்த, உயர்ஜாதி மனிதர்களின் அமைப்பாக அந்த இயக்கம் இருந்தது; பெருந்தன்மையுடனும், அவர்கள் கூறும் கொள்கைகளுக்கு உண்மையாகவும் பிரிட்டிஷார் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர். இதற்கு நேர்மாறாக இந்தியாவின் புதிய தலைவர்கள் பிரிட்டிஷ் பொருட்களைப் பகிஷ்கரிக்க அறைகூவல் விடுத்தனர்; இந்தியர்கள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்; இலாபம் ஈட்டமுடியாத நிலையைக் காலனியத்திற்கு ஏற்படுத்திவிட்டால், பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறி விடுவர் என்று வாதிட்டனர். ஜாம்செட் டாடாவின் பம்பாய் பருத்தி ஆலையின் முழக்கமாக ’சுதேசி’ அல்லது ‘சுய-தயாரிப்பு’ என்பது இருந்தது; விரைந்து பரவிய அரசியல் நடவடிக்கையின் பெயராக அது மாறியது. 1905க்கும் 1908க்கும் இடைப்பட்ட காலத்தில் இறக்குமதி 20 சதவீதம் சரிந்தது.

விடுதலைக்கான இந்த ஆரம்பகாலப் போராட்டத்தின் தென்னிந்தியப் போர்முனையாக, இன்றைய தமிழ்நாட்டின் தூத்துக்குடி இருந்தது. இந்நகரில்தான், நெஞ்சுரம் மிக்க இளைஞரான வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பல்களைக் கொண்டு சுதேசிக் கனவைத் துரத்திக்கொண்டிருந்தார். பேரரசின் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரபலமான நிறுவனத்தை அவர் எதிர்த்து நின்றார்; வரலாற்றில் தென்னிந்தியர்கள் ஆதிக்கம் செய்த கடலின் கட்டுப்பாட்டை மீண்டும் தன்வசமாக்க முயன்றார். நீராவிக் கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். சுதேசி இயக்கத்தின் பெரும் நடைமுறை வெற்றிகளில் ஒன்றாகக் குறுகிய காலத்திற்கு அது இருந்தது; ஒட்டுமொத்தக் கிளர்ச்சியின் அடையாளமாகவும் விளங்கியது. அவரது ஆதரவாளர்கள் அவரை ‘சுதேசி பிள்ளை’ என்றழைத்தனர். அவரது தேசப்பற்றிற்காக நாடு முழுவதும் அவர் கொண்டாடப்பட்டார். ஆனால், பிள்ளையின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வு குறுகிய காலம் மட்டுமே நீடித்தது; சுதேசி இயக்கம் போலவே, இறுதியில் சரியத் தொடங்கியது.

1905ம் ஆண்டைத் தொடர்ந்த ஆண்டுகளின் இந்திய வரலாற்றைப் படிக்கையில், சுதந்திர இந்தியா விரைந்து உருவாகியிருக்கலாம் என்ற உணர்வு தோன்றக்கூடும். எனினும், ரஷ்யா அல்லது சீனா அல்லது மெக்ஸிகோவைப் போலன்றி, இந்திய எரிமலையின் வாய் மூடப்பட்டுவிட்டது; மேலும் ஒரு நாற்பதாண்டுகளுக்கு விடுதலையைப் பெற முடியவில்லை. சுதந்திர இந்தியாவை நோக்கிய அந்த நெடிய பாதையில் சிதறிக் கிடந்த சில தோல்விகளில் ஒன்றாகப் பிள்ளையும் இருந்தார். அந்தக் கதைகளில் பல இப்போது மறக்கப்பட்டுவிட்டன. ஆனால், மீண்டும் நினைவுகூரப்பட வேண்டிய அளவுக்கு இவர் பெறுமதியானவர். குறிப்பாக, சுதேசி இயக்கம் இறுதியாக சந்தித்த ஏமாற்றத்தை அந்த நினைவுகூரல் வெளிப்படுத்துகிறது.

சுதேசி இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பல காரணிகள் இருந்தன: பல வேறுபாடுகளுடன் கூடிய இந்தியப் பண்பாடு; இயக்கத்திற்குள் மோதல்கள்; குறைந்த கூலிக்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீதான அக்கறையிலிருந்து விலகி நின்றது ஆகியன. அத்துடன், ’இந்திய லெனின்’ ஒருவர் இங்கு இல்லாமலிருந்தது. ஆனால், சாதிப் படிநிலை போன்று, இந்தியச் சமூகத்தின் ஆபத்தான பெரும் பிளவுகள், விடுதலையை எட்டாத தூரத்தில் தள்ளிவைக்க உதவின. அந்த இடைவெளியை நிரப்பும் செயலில் ஈடுபட்ட, பெரும்பாலான தலைவர்களைக் காட்டிலும் பிள்ளை ஏறத்தாழ அதைச் சாதித்துவிட்டார் என்று சொல்லலாம். ஆனால், இயக்கத்தின் தோல்வியை உறுதிப்படுத்திய மற்றொரு அம்சமான பிரிட்டிஷாரின் அடக்குமுறையை அவர் எதிர்கொள்ளத் தொடங்கி விட்டார்:

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் தென்னிந்தியா தேசிய அரசியலுக்கு எதிராக இருந்தது என்பது பிரிட்டிஷாரின் பார்வை. வரலாற்றாசிரியர் டேவிட் வாஷ்ப்ரூக் இவ்வாறு எழுதினார்: ‘1895ம் ஆண்டிற்கும் 1916க்கும் இடைப்பட்ட காலத்தில்3 மெட்ராசின் வீதிகளில் பிரிட்டிஷாரை எதிர்க்கும் நாய் அரிதாக ஒன்றுகூட குரைக்கவில்லை’. ஆனால், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்த தூத்துக்குடி தென்னிந்தியாவின் விதிவிலக்கு.

அந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிள்ளை தூத்துக்குடியில் குடியேறினார். அந்நகரம், முத்துக்குளிக்கும் தொழிலின் மையமாக, முக்கியத் துறைமுகமாகச் செழித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து முப்பது கி.மீ உள்நாட்டிலிருந்த ஊரில் 1872ல் அவர் பிறந்தார்; தூத்துக்குடியில் வழக்குரைஞராகப் பணிபுரிய வந்திருந்தார். பணக்கார, நிலவுடைமை, பிராமணரல்லாத வேளாளர் சாதியைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தில் பலர் வழக்கறிஞர்களாக இருந்தனர். ஆங்கிலேய நிர்வாகத்தின் கீழிருந்த நீதிமன்றங்களில் பணிபுரிந்தனர்; போட்டியாளர்களாகவும் சில நேரங்களில் சந்தித்துக் கொள்வார்கள். ஒருமுறை பணக்காரர் ஒருவருக்கு எதிராக இளைஞரான பிள்ளை ஏழை ஒருவருக்காக வாதாடினார்; எதிர்த்தரப்பு வழக்குரைஞரை வாதத்தால் மகிழ்ச்சியுடன் தோற்கடித்தார்: அது அவரது தந்தை. எனினும் அவர் அமைதியற்றவராகத்தான் இருந்தார்.

இந்தியாவில் தீவிரவாதம் நோக்கிச் சென்ற பாதை பெரும்பாலும் மதத்தின் ஊடாகவே சென்றது. தனது இருபதுகளில் இருந்த பிள்ளை, தமிழ்ச் சைவ நெறிமுறைகள் கற்பிப்பதை மையமாகக் கொண்டு செயலாற்றிய அமைப்புகளில் சுறுசுறுப்பாக இயங்கினார். இந்தச் ’சைவ சபைகள்’, மூலம் அரசியல் சார்ந்து சுறுசுறுப்புடன் இயங்கிய எழுத்தாளர்களுடனும் அறிவுஜீவிகளுடனும் பிள்ளைக்குத் தொடர்பு கிடைத்தது. தனது அரசியல் குரு இவர்தான் என்று அவர் விரைவில் அறிவிக்கப்போகிற மனிதரின் பணிகளுடன் பிள்ளையை அவர்கள் இணைத்தனர்; புகழ்பெற்ற மகாராஷ்டிர தீவிரவாதியும் மதப்பிரச்சாரகருமான பால கங்காதர திலகர் அவர். திலகரின் எழுத்துகள், ‘இந்தியா என் தேசம் என்று என்னை உணரவைத்தன.4 பிரிட்டிஷார் தவறான வழியில் அதைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்; தேசத்தை அவர்களிடமிருந்து திரும்பக் கைப்பற்றவேண்டும்’ என்று பின்னாளில் அவர் கூறினார்.

வங்காளப் பிரிவினைக்குப்பின் லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியின் தீவிரவாதக் குழுவின் தலைவராகத் திலகர் எழுச்சிப் பெற்றார். இந்த மூவரும், லால், பால் (Bal), பால் (Pal) என்று அழைக்கப்பட்டனர்; இவர்கள் சுதேசி முழக்கத்தைக் கையிலெடுத்தனர். பின்னர் அதை, ஒரு ஹிந்துத் தேசமாக இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமையைக் காப்பதற்கு பிரிட்டிஷாருக்கு எதிரான புனிதப் போராக மறுவரையறை செய்தனர். இந்தப் போராட்டத்தின் அரசியல் இலக்கு, சுயராஜ்ஜியம், அதாவது சுய-ஆட்சி. இதை அடைவதற்கு, பணிந்துபோகும் அரசியலமைப்பு சார்ந்த வழிமுறைகளைக் காங்கிரஸ் கட்சி கைவிடவேண்டும்; நேரடி நடவடிக்கையில், தேவையெனில் வன்முறைப் போராட்டங்களிலும் ஈடுபட வேண்டும் என்று வாதிட்டனர். திலகரின் சிந்தனைகளுடன், பிள்ளை தன்னைத் தீவிரமாகப் பிணைத்துக் கொண்டிருந்தார். வங்காளத்தைப் போன்ற எதிர்ப்புகள் பிரதிபலிக்கத் தொடங்கிய ஒற்றை நகரமாகத் தென்னிந்தியாவின் தொலைதூரத்திலிருந்த தூத்துக்குடி மாறியது.

பிரிட்டிஷ் புலனாய்வுத் துறை கோப்புகளில், 1905க்கு முந்தைய பிள்ளை குறித்த சில ஆவணங்கள் காணக்கிடக்கின்றன: அரசியல் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டது; குறுகிய காலம் நடத்திய சமூக சீர்திருத்தம் குறித்த மாத வெளியீடு போன்றவை. ஆனால், வங்காளப் பிரிவினைக்குப் பின்னர், காலனியத்தின் கோப்புகள் விரைந்து பெரிதாகின. ஏனெனில் அவரும், மிதவாதிகள் அல்லாத ஏனைய தேசியவாதிகளும் இந்தத் துறைமுக மாவட்டத்தில் விரைந்து செயலாற்றினர். டிசம்பர் 1906ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரசின் ஆண்டுக் கூடுகைக்கு முன்னதாகவே சுதேசித் திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துவிட்டனர். வெளிநாட்டில் தயாரான பொருட்களையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் பகிஷ்கரிப்பது என்ற கொள்கை முடிவு அது. கல்கத்தாவில் இருப்பதுபோல், சுதேசி வர்த்தக நிலையங்களும், சுதேசி உடற்பயிற்சிக் கூடங்களும் தூத்துக்குடி நகரிலும் தோன்றின.

காந்திய அரசியலுடன் இப்போது தொடர்புப்படுத்தப்படும் போராட்ட உத்திகள் பலவற்றை அன்றைக்குச் சுதேசிகள் பயன்படுத்தினர்: அதாவது அமைதியான முறையில் கீழ்ப்படியாமையும் ஒத்துழையாமையும். சற்று விலகி நின்று பார்க்கையில் சிரமமற்றவையாக இந்த உத்திகள் தோன்றினாலும், நடைமுறையில் கடினமானவை; மிரட்டும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று மட்டும் ஆதரவாளர்களைப் பிள்ளை கேட்கவில்லை; அத்துடன் பள்ளிகளையும் நீதிமன்றங்களையும் புறக்கணிக்கச் சொன்னார். அவர்களிடம் பிள்ளை புனித நதி ஒன்றில் மூழ்கி எழுந்து, இறைவி காளியின் பெயரால் சபதம் ஏற்று, புறக்கணிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்படி கூறினார். கொடுத்த வாக்கை மீறினால், ‘விலக்கி வைக்கப்படுவார்கள்’5 என்று அமைதியாக அவர்களை மிரட்டுவார்.

தூத்துக்குடி போன்ற இடத்தில் பிள்ளை நடத்திய இயக்கம் பெருமளவிற்கு வங்காளத்தின் விடுதலை போராட்டத்தைப் பிரதிபலித்தது. 1906ல், வங்காளப் பிரிவினைக்கும் சற்று முன்னதாக, ரஷ்யக் கப்பற்படையை டுஜிமா என்ற இடத்தில் ஜப்பானியர்கள் தோற்கடித்தனர். அதனால் தூண்டப்பட்ட பிள்ளை அதன் பின்னர் பலரையும் போல், கப்பல்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே கோரமண்டலக் கடற்கரை இந்தியக் கப்பல் போக்குவரத்தின் முனையமாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமது துறைமுகங்களிலிருந்து பாய்மரக் கலங்களை இந்தியர்கள் இயக்கினர். ஆனால், 1870களிலிருந்து, இந்தியர்களின் முக்கியமான கடல்வழிகளைப் பிரிட்டானிய நீராவிக்கப்பல்கள் திறமையுடன் கைப்பற்றிக்கொண்டன. பிரிட்டிஷ் இந்திய நீராவிக் கப்பல் போக்குவரத்து கம்பெனியின் மூலமாகப் பருத்தியையும் ஏனைய சரக்குகளையும் தவிர்த்து, ஆண்டிற்கு ஓர் இலட்சம் பேர் பயணம் செய்தனர். இது தூத்துக்குடியிலிருந்து மட்டும். இவர்களில் பெரும்பாலோர், தமிழ்த் தொழிலாளர்கள்; சிலோன், தென்னாப்பிரிக்கா, மலாயா நாடுகளுக்குக் கடினமான உடலுழைப்பை அளிக்கச் சென்றவர்கள்.

அந்தக் கம்பெனி ’B.I.’ என்று அழைக்கப்பட்டது; 1906ல் காலனியக் கப்பல் போக்குவரத்தில் அது ஒரு ’கோலியாத்’; நூற்றிற்கும் மேற்பட்ட கப்பல்கள் அதனிடம் இருந்தன. ஷேம்ஸ் லைல் மெக்கே என்பவர் அதை நடத்தி வந்தார். அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான நபர் அவர்; அத்துடன், ஒருமுறை அவருக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் வைஸ்ராய் பதவி அளிப்பது பற்றிச் சிந்திக்கும் அளவுக்கு இந்தியாவில் அரசியல் அதிகாரம் பெற்றவராக இருந்தார். தூத்துக்குடியின் தேசியவாதப் போராட்டங்களால் அவரும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் வெறுத்துப் போயினர். தங்களுக்கு இணக்கமான மனிதர்கள் இருக்கும் இடமொன்றில் புதிய துறைமுகம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஏற்கனவே அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அவர் எதிர்கொள்ள வேண்டிய பெருநிறுவன-அரசாங்கக் கூட்டமைப்பின் பரிமாணத்தை சந்தேகமறப் பிள்ளை உணர்ந்திருந்தார். எனினும், மெக்கே நிறுவனச் செயல்பாடுகளுக்குப் போட்டியாக ஓர் அணியைத் திரட்ட அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. பிரிட்டிஷ் புலனாய்வு அறிக்கைகள் இதைக் கூறுகின்றன. 1906 ஏப்ரலில் உள்ளூர் வியாபாரிகளைச் சந்தித்து இதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார். ஆறுமாதங்களுக்குப்பின், கூட்டு-பங்கு நிறுவனம் ஒன்று தோன்றியது. ஒரு பங்கு இருபத்தைந்து ரூபாய் என்ற அளவில் 40,000 பங்குகளை விற்றுப் பத்து இலட்சம் ரூபாய் திரட்டுவது அவரது திட்டம். பரந்த அளவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஒப்பீட்டளவில் குறிக்கப்பட்ட குறைந்த விலை இது. ஆனால், ஒரேயரு நிபந்தனை: பங்குகள் ‘இந்தியர்கள், சிலோன் மற்றும் கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசம் மட்டுமே6 இருக்கவேண்டும்’. கல்கத்தாவிலும் பம்பாயிலும் இருந்த செயல்பாட்டாளர்கள் உற்சாகத்துடன் இதை வரவேற்றனர். சிலோனிலும் நிதி திரட்டப்பட்டது. எனினும், உள்ளூரில் ஆதரவாளர்களைக் கண்டுபிடிப்பதுதான் மிகச் சிரமமான பணியாக இருந்தது.

பிரிட்டிஷ் அறிக்கை ஒன்று இப்படிக் கூறுகிறது: பிள்ளையிடம் அவர்கள் பார்த்த குறிப்பிட்டுச் சொல்லமுடியாத ‘சில பழக்கவழக்கங்கள்’7 காரணமாக உள்ளூர் வியாபாரிகள் அதில் பங்குபெறத் தயங்கினர். ஆகவே பிள்ளையும் அவரைச் சேர்ந்தவர்களும் வீடு வீடாகச் சென்று இத்தகைய சந்தேகங்களை போக்குவதற்கு முயன்றனர். அவரது ஆசான் திலகர் விரும்பியதுபோல், பிள்ளையிடம் ஹிந்துப் பேரினவாத அணுகுமுறை இல்லை. துறைமுகத்தில் இஸ்லாமிய, கிறித்துவ வியாபாரிகள் ஹிந்துக்களுடன் இணைந்து வேலைசெய்தனர். குறைந்த கட்டணத்தில், நம்பிக்கையான கப்பல்போக்குவரத்தின் மீது அவர்கள் மதிப்புக் கொண்டிருந்தனர். அவர்களும் பங்குகள் வாங்க வேண்டும் என்று வ.உ.சி. விரும்பினார். சிலர் வாங்கவும் செய்தனர். அடுத்தமாதம், தூத்துக்குடியிலிருந்து முதல் நீராவிக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கியது.

சுதேசி நீராவிக் கப்பல் போக்குவரத்து நிறுவனம் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. நாடு முழுவதும் தேசியவாதிகள் இதைக் கொண்டாடினர். பிரிட்டிஷார் எரிச்சலடைந்தனர். தென்னிந்தியாவின் முன்னணி நாளிதழ் ’தி ஹிந்து’ பிள்ளையின் நிறுவனத்திற்கும் B. I.-க்கும் இடையில் நடந்த தீவிரமான போட்டி குறித்து டிசம்பர் மாதத்தில் இப்படி எழுதியது: ‘இரண்டு நிறுவனங்களும் தினந்தோறும் பயணக் கட்டணத்தைக்8 குறைத்துக் கொண்டிருக்கின்றன’. பிரிட்டிஷ் நிறுவனம் பயணிகளுக்கு இலவசக் குடை போன்றவற்றை அளித்தது. இந்தியர்களைக் குழப்பிப் பயணச்சீட்டு வாங்க வைக்கும் நோக்கில் ’சுதேசி’ என்ற அறிவிப்புப் பலகையையும் தொங்க விட்டது. பிரிட்டிஷாருக்குச் சொந்தமான தென்னிந்திய இரயில்வேயுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. துறைமுகத்திற்கு வரும் பயணிகள் இறங்கும்போதே, அவர்களை நெருங்கிப் பேசி, இணங்கவைக்க, பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் பயணச்சீட்டு விற்கும் அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தடையை மீறும் சுதேசி நிறுவனத்தின் அதிகாரி கைது செய்யப்படுவார். மெட்ராஸ் கவர்னரின் உத்தரவின்படி, உள்ளூர் பிரிட்டிஷ் நிர்வாகம், அச்சுறுத்தும் செயல்களிலும் விரைந்து இறங்கியது. சுதேசிக் கப்பலில் பயணிப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சுங்கச் சோதனை அனுமதி வழங்குவதைத் தாமதப்படுத்தியது.

பிள்ளை, எதற்கும் அஞ்சாமல் செயலாற்றினார். குத்தகைக்கு எடுத்திருந்த முதல் கப்பலைத் திரும்பக் கொடுத்துவிட்டு, சீரமைக்கப்பட்ட இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார். பயன்பாட்டிலிருந்த அந்தச் சிறிய பிரிட்டிஷ் கப்பல்களைக் காட்டிலும் மேம்பட்ட வசதிகள் கொண்டவை. அந்தக் கப்பல்கள் பிரிட்டனிலிருந்தும் பிரான்சிலிருந்தும் 1907ம் ஆண்டு ஏப்ரலிலும், ஜூனிலும் துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தன. அவற்றில் நாற்பத்திரண்டு முதல் வகுப்புப் பயணிகள், இருபத்து நான்கு இரண்டாம் வகுப்புப் பயணிகள், இதர பயணிகள் 1300 பேர் பயணிக்க முடியும்; 4000 சாக்குப் பைகள் சரக்கு ஏற்ற முடியும். ஆனால், பிரிட்டிஷாரை மிகவும் உறுத்தியது அந்தக் கப்பல்களின் வண்ணங்களும், பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்கள் கொண்ட ’சுதேசிக் கொடியும்’. கொடியின் மையத்தில் ’வந்தேமாதரம்’ என்று எழுதப்பட்டிருந்தது. வந்தேமாதரம் என்ற வங்காளக் கவிதையிலிருந்து எடுக்கப்பட்ட தேசிய முழக்கம் அது. பிரிட்டிஷார் இந்த முழக்கத்தையும், ஒட்டுமொத்தத் தொழில் முயற்சியையும் தேசத்துரோகமாகக் கருதினர்.

சுதேசி இயக்கத்தின் தடங்கள் இந்தியா முழுவதும் பரவத்தொடங்கின; பிரிட்டிஷ் நிர்வாகிகள் எதிர்வினையாற்றவும், இயக்கத்தை நசுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கினர். 1906க்கும் 1907ன் கோடைக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒன்பது செய்தித்தாள்கள் மீது பிரிட்டிஷார் வழக்குப் பதிந்தனர். சுதேசித் தலைவர்கள் பலரையும் விசாரணை ஏதுமின்றி நாடு கடத்தினர். ஆனால், இயக்கத்தின் வீச்சை இதனால் அணைக்கமுடியவில்லை. எனவே, நவம்பர் 1907ல் தேசத்துரோகத்திற்கு எதிராகப் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அந்தச் சட்டம் இருபதுபேருக்குமேல் கூடுவதைத் தடைசெய்தது. சட்ட விரோதமானவை என்று கருதப்பட்ட கூட்டங்கள் மீது இது பிரயோகிக்கப்பட்டது. தலமட்டத்தில் பிள்ளை நடத்திய இயக்கங்கள் மீதும் இச்சட்டம் பாய்ந்தது. சுதேசி இயக்கத்தின் முக்கியமான போராளிகளை இச்சட்டம் சிறைக்கு அனுப்பியது.

ஏறத்தாழ இந்த நேரத்தில்தான் தனது ஆசான் திலகரை, காங்கிரசின் ஆண்டுக் கூடுகை ஒன்றில் பிள்ளை சந்தித்தார். சூரத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை வெடித்தது; ஒருவரையருவர் தூற்றிக் கொள்வதும் செருப்பு வீச்சுமாக அந்தக் கூட்டம் கட்சிப்பிளவில் சென்று முடிந்தது. திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் இதில் வெற்றிபெற்றனர்; தென்னிந்தியாவின் அதிகாரப்பூர்வப் பொறுப்பு பிள்ளைக்கு அளிக்கப்பட்டது.

தலமட்டத்தில் தலைவராக ஆவதற்குமுன்னதாகவே, பிள்ளை, மேல்தட்டு மனிதர்கள் நிறைந்திருந்த தேசிய காங்கிரசின் நாயகன் ஆகியிருந்தார். பொதுமக்கள் அவரது உரை நீதிமன்றத்தில் பேசுவதுபோல் இருப்பதாகக் கருதினர். அலைந்து திரிந்து நிதி சேகரிப்பதிலும், சுதேசி இயக்கத்திற்கு அணி சேர்ப்பதிலும் அவருடன் இப்போது வேறொருவரும் சேர்ந்துகொண்டார்; சுப்பிரமணிய சிவா. வறுமையில் வாடிய அவர், மெட்ராசில் சைவ சமயப் பேச்சாளராக இருந்தவர்; அரசியல் செயல்பாட்டாளர்; கவர்ந்திழுக்கும் பேச்சு வன்மை கொண்டவர். 1908 வாக்கில் அவர்கள் இருவரும் இணைந்து பேசிய பொதுக்கூட்டங்களைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். தலமட்டத்தில் உண்மையான அரசியல் சக்தியாகப் பிள்ளை வளர்ந்துகொண்டிருந்தார். கல்கத்தாவின் புரட்சிகர அச்சு ஊடகங்கள், மற்றொரு இந்திய வழக்குரைஞரான மோகன்தாஸ் காந்தி வழிநடத்திய ட்ரான்ஸ்வால் போராட்டத்துடன் இவரது செயல்பாடுகளை ஒப்பிட்டு எழுதின.

இந்தியாவை அடிமைப்படுத்தவே, ஒன்றாக இருந்த தேசத்தை ’இழிந்த பாவிகளான’9 பிரிட்டிஷ்காரர்கள் துண்டாடினர் என்பது பிள்ளையின் கருத்து. பிரிட்டிஷாரின் வருகைக்குமுன் மதஞ்சார்ந்த, சாதி சார்ந்த பிரிவுகள் இந்தியாவிலிருந்தன; எனினும் பொது இலக்கான சுயராஜ்ஜியத்தை அடைவதற்காக அவற்றை ஒதுக்கிவைக்க வேண்டும் என்றார் அவர். துறைமுகப் பகுதியில் மதப்பிரிவினைகளைக் காட்டிலும் இணக்கம் ஏற்படுத்த முடியாத வகையில் சாதிப் பிரிவினைகள் தீவிரமாக இருந்தன. தென்னிந்தியாவில் மதஞ்சார்ந்த விஜயங்களைப் பின்பற்றுவது ஆழமாக வேரோடியிருந்தது; பிராமணர்களின் ஆதிக்கம் கணிசமாக இருந்தது. பிள்ளையின் காலத்தில், பத்துப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் ஏழு பேர் பிராமணர்கள்; மெட்ராஸ் மாகாண நிர்வாகத்தின் பெரும்பாலான உயர் பொறுப்புகளில் அவர்கள் இருந்தனர். பிள்ளையின் சாதியினர், பிராமணர்கள் இல்லையெனினும், மாவட்ட நிர்வாகத்தின் முக்கியமான சக்தியாக இருந்தனர். திலகர் போன்ற பிராமணர்களும், பிள்ளை போன்ற வெள்ளாளர்களும் ஆதிக்கம் செலுத்தும் உயர்-சாதி இயக்கத்தின் மீது கீழ்நிலைச் சாதிகளைச் சார்ந்த தமிழர்களுக்குச் சந்தேகம் இருந்தது. அவர்கள் வாழும் சமூகத்தின் படிநிலையைத்தான் இந்த இயக்கமும் பிரதிபலிக்கும் என்று அவர்கள் நம்பினர்.

இந்த விஜயத்தில், மிகக்கூர்மையான எதிர்ப்பைக் கீழ்நிலைச் சாதியினரான நாடார்களிடமிருந்து அவர் எதிர்கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சியில் அந்த இனத்தவர் மேலே வந்துகொண்டிருந்தனர்; புதிய இந்தியர்களின் ஆட்சி, பனைமரம் ஏறுதல், கள் இறக்குதல் போன்ற பழைய வேலைகளையே அவர்களைத் திரும்பவும் செய்யவைத்துவிடுமோ என்று அச்சப்பட்டனர். பிரிட்டிஷ் கோப்பு ஒன்றின் பதிவு இவ்வாறு கூறுகிறது; கூட்டமொன்றில் பிள்ளை பேசும்போது நாடார் ஒருவர் அவரை நேரடியாகக் குற்றம் சாட்டினார்; ‘சுயராஜ்ஜியம் கிடைத்துவிட்டால், நீங்கள் எங்களை உங்களுக்குக் குற்றேவல்10 செய்ய வைத்து விடுவீர்கள்.’ திலகருடன் அமர்ந்து உணவருந்த முடியாத அளவுக்கு மிகவும் தாழ்ந்த சாதியினனாகத் தன்னை அவர் நினைத்து விடுவாரோ என்று ஒருகாலத்தில் பிள்ளை கவலைப்பட்டவர். அத்தகையவர், இந்த இயக்கத்தின் நலனிற்குப் பங்களிக்காத சாதியினரைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டியதாகத் தோன்றுகிறது. அந்தக் காலத்து அரசியல் கிளர்ச்சியாளர்கள் பலரையும் போலவே, மனதளவில் சமூகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார்.

(வ.உ.சி. அவர்கள் சாதிகளை மறுத்தவர். இராமையா தேசிகர், சாமி சகஜானந்தர் ஆகிய பட்டியலினத்தவர்களை தனது வீட்டில் வைத்துப் பேணியவர். இதுகுறித்து விரிவான தகவல்கள் வஉசி அவர்களது வரலாற்றிலேயே உள்ளது. (இடது ஆசிரியர்))

வேறொரு சமயத்தில், ‘சங்கம் என்பதன் பொருள், நாம் அனைவரும் ஒன்றாக உணவருந்துவது11, கட்டித் தழுவிக் கொள்வது என்பதல்ல’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.’ சுயராஜ்ஜியம் அடைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இத்தகைய விஜயங்கள் நடைபெறக் கூடும்’.

ஏழைகளை, குறிப்பாக விவசாயிகளை அக்கறையின்மையுடன், அலட்சியத்துடன் பார்க்கும் சாதி மற்றும் வர்க்கம் சார்ந்த விஜயங்கள் தேசிய அளவில் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்தன. வங்காளத்தைச் சுற்றியிருந்த சில மாகாணங்களில் மட்டுமே இயக்கம் பரவியிருந்தது. கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் மட்டுமே இயக்கத்தின் மையங்கள் செயல்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தின் தூத்துக்குடி நகரில் பரந்து விரிந்த இயக்கத்தைப் பிள்ளை கட்டமைப்பதற்குத் தொழிலாளர்களின் பணி நிலைமைகள் மீது சிவம் காட்டிய ஆழ்ந்த அக்கறை உதவியது.

கோரல் மில் என்ற பிரபலமான பருத்தி ஆலையில் பல சாதிகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்தனர்; இவர்கள் இருவரும் 1908ல் தொழிலாளர்களது பிரச்சனைகளைக் கையிலெடுத்தனர். B.I. நிறுவனத்தை நடத்திய அதே பிரிட்டிஷ் ஏஜென்சிக்கு இந்த ஆலையும் சொந்தம் என்பது தற்செயலானதல்ல. ரஷ்யாவில் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களின் தாக்கங்கள் குறித்து மிக நெருக்கமாகச் சிவம் கவனித்து வந்தார்; ‘புரட்சிகள், உலகத்திற்கு எப்போதும் நன்மையே12 கொணர்பவை.’ என்றார் அவர். இந்தியர்களின் ஊதியம் சிறிதளவு உயர்ந்தாலும், அது இந்தியாவை பிரிட்டிஷார் விரும்பாத நாடாக்கிவிடும் என்று அவர் வாதிட்டார் . உரிய நிவாரணம் கிடைக்கும் வரை விட்டுக்கொடுக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி சிவமும் பிள்ளையும் ஆலைத் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்தியாவில் மிகவும் தொடக்கத்தில் நடந்த வெற்றிகரமான போராட்டங்களில் ஒன்று அது. வேலைநிறுத்தம் தொடங்கிய சில நாட்களிலேயே, பேச்சுவார்த்தை மூலம் பிள்ளை தீர்வு ஒன்றை எட்டினார். உழைக்கும் வர்க்கத்தினரிடம் இந்தச் செய்தி பரவியது; அவரது புகழை அதிகரிக்கச் செய்தது. ஓரளவுக்கு அவரது விதியையும் இது முடிவு செய்தது எனலாம். தொழிலாளர்களின் ஒரு போராட்டம், மேலும் பல போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று பிரிட்டிஷார் அஞ்சினர். வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த ஒரு வாரத்தில், ’எலி-பூனை’ விளையாட்டை அவர்கள் நிறுத்தினர்; பிள்ளையின் மீதும், சிவத்தின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சாட்டினர்.

இதற்கான நேரடியான காரணம் ஓர் ஊர்வலம்; வங்காளத்தின் முன்னணித் தீவிரவாதியான பிபின் சந்திர பால் கல்கத்தா சிறையிலிருந்து விடுதலையானதைக் கொண்டாட இருவரும் ஏற்பாடு செய்த ஊர்வலம். ஊர்வலத்திற்கு வருபவர்கள், ஆயுதம் எதையும், ஏன் கைத்தடியையும் வீட்டிலேயே வைத்துவிட்டு வரும்படி பிள்ளை அறிவுறுத்தியிருந்தார் என்கிறது போலிஸாரின் பதிவு; ‘ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால்13 பாதிக்கப்பட்டவர்களாக நாம்தான் இருக்கவேண்டும்; தாக்கியவர்களாக இருக்கக் கூடாது’ என்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. எனினும், நியாயமான கருத்துகளைக் கொண்ட அவரது அறிக்கைகளை சட்டவிரோதமானவை என்று போலீசார் அறிவித்தனர். அதுமட்டுமின்றி, சிவத்தின் தேசத்துரோக நடவடிக்கைகளுக்குத் துணையாக இருந்தார் என்றும் பிள்ளை மீது குற்றம் சாட்டினர்.

கைது நடவடிக்கைகளால் பிரிட்டிசார் பயந்த வன்முறைகள் நகரெங்கும் வெடித்தன. எதிர்ப்புப் போராட்டங்கள் உடனடியாக எழுந்தன. தூத்துக்குடி நகராட்சி அலுவலகமும், நீதிமன்றமும், போலீஸ் தலைமையகமும் கொளுத்தப்பட்டன. அச்சத்தின் வசப்பட்ட ஐரோப்பியர்கள் படுகொலைகளை எதிர்பார்த்தனர். துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்றில் அவர்கள் தஞ்சமடைந்தனர். ஆசிரியர் ஒருவர் கூறியதாக, பெண்கள் பள்ளியன்றின் முதல்வர் பின்னர் இவ்வாறு எழுதினார்: ’இன்றிரவு ஏற்றப்பட்ட தீப்பந்தம் கன்னியாகுமரியிலிருந்து கல்கத்தாவரை பரவப்போகிறது.14 ஆங்கிலேயர்களை எதுவும் காப்பாற்றாது.’ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அச்சத்தின் வயப்பட்ட நிலையில் பிரிட்டிஷார் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தனர். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் கடுமை பிரிட்டிஷாரது கொண்டாட்டத்தின் காரணமாகியது; பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலரை வெட்கப்படவும் வைத்தது.

இந்தியா முழுவதும் அவருக்கு வழக்கு நிதி திரட்டப்பட்டது. தென்னாப்பிரிக்கத் தமிழர்களும் நிதியளித்தனர்; இறுதியில், அவரது தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டது என்ற பொதுமக்களின் உணர்வை முற்றிலும் அது குறைக்கவில்லை. 1911ல், பிள்ளைக்கு ஆதரவாக இயங்கிய இளைஞன் ஒருவன், பிள்ளையின் கைதுக்குக் காரணமானவர் என்று கருதப்பட்ட மாவட்டத்தின் பிரிட்டிஷ் கலெக்டரைச் சுட்டுக்கொன்றான். தென்னிந்தியக் காலனிய வரலாற்றில் இந்த ஒன்று மட்டுமே அரசியல் படுகொலை. பிள்ளையின் இயக்கத்திற்கும், இந்திய அளவிலான பரந்துபட்ட எதிர்ப்பிற்கும் எழுதப்பட்ட இறுதி வரிகள் அவை. அந்த ஆண்டின் தொடக்கத்தில் கர்ஸானின் வங்கப்பிரிவினை இரத்துச் செய்யப்பட்டது. தலமட்டங்களில் உருவான தீவிரவாதத்தின் இழைகள், உண்மையான தேசிய இயக்கமாக ஒன்றிணைந்து உருவாகத் தவறின. தேசிய அளவிலான போராட்டத்தின் எழுச்சி, இப்போதைக்கு முடிந்து போனது.

இன்றைக்கு, ’சுய-உருவாக்கம்’ என்பது வரம்பிற்குட்பட்டது என்பதை நினைவுபடுத்தும் இடங்களில் ஒன்றாகத் தூத்துக்குடி இருக்கிறது; பொதுமக்களது நலன்-இழப்பில் இலாபம் சம்பாதிப்பது காலனிய சக்திகளுக்கு மட்டுமே உரியதல்ல என்பதையும் அது நினைவூட்டுகிறது. வீசும் கடல் காற்றையும் மீறி, தமிழ்நாட்டின் மிகவும் மாசுபட்ட இடமாக இந்தத் துறைமுக நகரம் இருக்கிறது. கந்தகம் படிந்த, வெப்பமான, மீன்களைக் கொல்லும் கடல் நீரில், தாமிர உருக்காலைகளிலும் அனல் மின்நிலையங்களிலும் எரிக்கப்படும் நிலக்கரியின் கழிவுகளும், இரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளும் கலக்கின்றன. இங்கு எடுக்கப்படும் உப்பிலும் சாம்பல் தூசு படிந்திருக்கிறது. பிள்ளையைப் பற்றி இந்த நகரில் விசாரித்தால், ஒருகாலத்தில் பிரபலமாக இருந்த தலைவரைப் பற்றி உரையாடுகிறோம் என்பதுபோல் அவர் பெயரைத் தாங்கி நிற்கும் துறைமுகத்திற்குப் போகும் வழியை நமக்குக் காட்டுவார்கள்.

பண்பாட்டு வரலாற்றாசிரியர் ஏ. ஆர் வெங்கடாசலபதி இப்படிக் குறிப்பிடுகிறார்: ’அவரது சாதி மக்களால் மட்டுமின்றி இந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைவராலும் உரிமை கொண்டாடப்படும் சில தேசியவாதிகளில் அல்லது இலக்கிய ஆளுமைகளில் இவரும் ஒருவர்’. ஆனால், பரவலாக விரும்பப்பட்டவராக அவர் இருந்தாலும், அந்தப் பிரியம் ஆழமானதல்ல. சுதேசி இயக்கத்திற்கான அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது வேண்டுகோள்கள் எழுகின்றன; எனினும், பலனேதுமில்லை. இவ்வளவு ஆண்டுகட்குப் பின்னரும், திரளான மக்களின் ஆதரவைப் பெறாதவராக அவர் இருப்பதுபோல் தோன்றுகிறது.

உலகம் முழுவதுமான இருபதாம் நூற்றாண்டு விடுதலை வரலாறு குறித்த கதைகளில், பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானம் போன்றே சிறைச்சாலை தெரிகிறது; நாயகர்கள் உருவாக்கப்படும் இடம் அது: காந்தி, நேரு, ஹோசிமின், கென்யாட்டா, மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா: இவர்களின் கதை ஒவ்வொன்றிலும் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்கள், பின்னோக்கிப் பார்க்கையில் நற்பயனைத்தான் தந்திருக்கின்றன. அவர்களை, அவை தலைவர்களாக வடித்தன. பெரும்பாலும், தனிமனிதர்கள் உடைந்துபோகிற இடமான சிறைச்சாலை அதன்பின் மறக்கப்படுகிறது. மலபாரின் கண்ணனூரில் சிறையிருந்த பிள்ளை, சணல் கயிறு திரிப்பது, செக்கில் எண்ணெய் எடுப்பதென்று கடினமாக வேலை வாங்கப்பட்டார்; கவிதைகள் எழுதி தன்னை அவர் ஆறுதல்படுத்திக்கொண்டார். பிள்ளை எழுதிய வெண்பா ஒன்றை வெங்கடாசலபதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

‘வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்

தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்தமில் வெண்

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெலாம் ஓடுகின்றான்

நாச்சொல்லும் தோலும் நலிந்தே.15

நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப்பின் 1912ல் பிள்ளை கண்ணனூர் சிறையிலிருந்து வெளியில் வரும்போது, அவரை வாழ்த்தி வரவேற்க மக்கள் திரள் காத்திருக்கவில்லை; சுறுசுறுப்பாகச் செயலாற்ற அரசியல் பணி இல்லை; தொடர்வதற்கு வக்கீல் தொழிலும் இல்லை. சிறைத் தண்டனை வழக்குரைஞர் பணியைத் தொடர முடியாமல் செய்துவிட்டது. அவர் சிறையிலிருந்தபோது, கப்பல் நிறுவனமும் தகர்ந்துபோனது. பங்குதாரர்களின் முதலீடு அவருக்கு இழப்பாக அமைந்தது. தனது இயக்கத்திற்கு எதிரானவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்த மனிதர், அவரே விலக்கப்பட்டவராக நின்றிருந்தார். சிறைக்கு வெளியில் சிவம் மட்டுமே இவருக்காகக் காத்திருந்தார். அவரும் சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளிவந்திருந்தார்.

அதிக அளவில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்திருந்தால், இயக்கத்தின் பரவல் மேலும் அதிகரித்திருக்குமோ என்று சுதேசி இயக்கத்தை ஆராயும் வரலாற்றாளர்கள் வியக்கிறார்கள். வெறுமனே, படித்த மேல்வர்க்கத்தினரின் வேட்கைகளைப் பிரதிபலிப்பதாக மட்டும் சுதேசி இயக்கம் இருந்திருக்கவில்லை என்பதை இவை காட்டுகின்றன. ஆனால், அத்தகைய போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நிகழ்ந்தன. 1908-ல் நடந்த பம்பாய் ஜவுளித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து லெனின் ஆராய்ந்து எழுதினார்; எழுத்தாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் ஆதரவாக, இந்திய மக்கள் தெருவிலிறங்கிப் போராடத் தொடங்கி விட்டனர் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆனால், பெரிய அளவில் அவ்வியக்கம் எழுச்சிப் பெறவில்லை; அதற்கு முற்றிலும் அறிவுஜீவிகள் காரணம் என்று சொல்லமுடியாது. 1908ல் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்களை பிரிட்டிஷார் நாடுகடத்தினர்; சிறையிலடைத்தனர்; அதன்பின் பலரும் அரசியலுக்குத் திரும்பவில்லை. சிறையில் அவரைப் பீடித்த தொழுநோயால் அவதியுற்ற சிவம் இறுதியில் இறந்துபோனார். மேலும் இருபதாண்டுகள் பிள்ளை உயிர்வாழ்ந்தார்; பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முயன்றார்; ஆனால், இந்த உலகம் அவர் மீது வெறுப்பைக் காட்டியது. அதன்பின் திரளாக மக்கள் அவரை நோக்கி வரவில்லை.

சுதேசி இயக்கமும், அதிலிருந்து தோன்றலாம் என்று காந்தி அஞ்சிய தீவிரவாதச் செயல்களும், இந்திய அரசியல் குறித்து அவரைத் தீவிரமாக எழுதத் தூண்டின: அவரது தீவிரமான முதல் படைப்பான ’ஹிந்த் சுயராஜ்’ 1909ல் வெளிவந்தது. நூலின் நோக்கங்களில் ஒன்றாக, வன்முறைப் போராட்டங்களிலிருந்து இந்தியர்களைத் திருப்புவது இருந்தது. ஆறு ஆண்டுகட்குப்பின் ஜனவரி 1915ல் அவர் பம்பாயில் வந்திறங்கினார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தேசிய அளவிலான, வன்முறையற்றப் போராட்டத்திற்காக இந்தியர்களை ஒன்றிணைத்தார்; அவர் தொடங்கி சில பத்தாண்டுகளுக்கு நடந்த முனைப்பான, அவ்வியக்கம் இறுதியில் வெற்றி பெற்றது.

1. ‘Long before the World War . . .’: cited in Stephen Kotkin, Stalin, vol. 1: Paradoxes of Power, 1878-1928 (London, 2014), p. 87.
2. ‘Bengal united is a power . . .’: cited in Sumit Sarkar, The Swadeshi Movement in Bengal, 2nd edn (New Delhi, 2010), p. 15.
3. ‘Between 1895 and 1916 . . .’: David Washbrook, The Emergence of Provincial Politics: The Madras Presidency 1880-1920 (Cambridge, 1976), p. 233.
4. ‘made me feel that India . . .’: V. O. Chidambaram Pillai, in S. V.Bapat (ed.), Reminiscences and Anecdotes of Lokamanya Tilak, vol. 3 (Poona, 1928), p. 158.
5. ‘expect to be “shunned”’: Pillai, speech on 7 March 1908; reported in Criminal Investigation Department Madras, ‘History of V. O. Chidambaram Pillai’, G. O. no. 1502 Judicial and Secret (3 October 1911), p. 391.
6. ‘to be held exclusively . . .’: W. H. Coates, The Old ‘Country Trade’ of the East Indies (London, 1911), p. 203.
7. ‘dissolute habits’: CID Madras, ‘History of V.O Chidambaram Pillai’, p. 373.
8. ‘each company lowering its tariff . . .’: from The Hindu, 10 December 1906; cited in R. A. Padmanabhan, V. O. Chidambaram Pillai (New Delhi, 1977), p. 36. 1ST_9780141981437_Incarnations_TXT.indd 446 9/13/16 6:11:05 PM 447 References
9. ‘despicable sinners’: CID Madras, ‘History of V. O. Chidambaram Pillai’, p. 375.
10.‘If you get swaraj . . .’: CID Madras, ‘History of V. O. Chidambaram Pillai’, p. 389.
11. ‘Union does not mean . . .’: CID Madras, ‘History of V. O. Chidambaram Pillai’, pp. 389-90.
12.‘revolutions always brought good . . .’: cited in Sumit Sarkar, Modern India: 1886-1947 (Noida, 2014), p. 112.
13.‘if anything goes wrong . . .’: CID Madras, ‘History of V. O. Chidambaram Pillai’, p. 391.
14.‘The torch is lighted . . .’: Maud Boyton to Mary Ashe; cited in A. R. Venkatachalapathy, ‘In Search of Ashe’, Economic and Political Weekly, vol. XLV, no. 2 (9 January 2010), p. 41.
15.‘Chidambaram, who once bestowed . . .’: translated by A. R. Venkatachalapathy, personal communication, 25 May 2015.

(சென்னை சந்தியா பதிப்பகம் தமிழில் வெளியிட இருக்கும் புகழ் பெற்ற Idea of India நூலின் ஆசிரியர் சுனில் கில்நானி எழுதிய Incarnations நூலில் இந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. மொழியாக்கம் - அக்களூர் இரவி)

Pin It