periyar 350நமது தலைவர் பனக்கால் அரசர் காலமான பிறகு கக்ஷி நிலையைப் பற்றிய உண்மைகளை பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

தலைவர் பட்டத்திற்கு யார் வருவது என்பது பற்றிய யோசனை ஒவ்வொருவர் மனதிலும் ஊசலாடுவது அதிசயமல்ல. சில பிரமுகர்கள் தாங்கள் தலைவராகவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் அதிசயமொன்றுமில்லை. அவரவர்களுக்கு வேண்டிய நண்பர்களை தலைவராக்க முயற்சிப்பதிலும் அதிசயமொன்றுமில்லை. ஆனால் நமக்கு இப்போது அவசரமாய் ஆக வேண்டிய காரியமென்ன வென்றால், “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் நடக்க வேண்டும், ஆங்காங்கு இயக்க பிரசாரங்களும் ஸ்தாபனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பனவே.

தற்காலம் “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” கட்டடத்தின் மீதுள்ள 75000 ரூ. கடன் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு விதத்தில் முடிவு பெற்றாலொழிய அடுத்து வரும் தேர்தலில் நாம் நிலை கொள்ள முடியாது என்பது நிச்சயம். அது மாத்திரமல்லாமல் நமது ஸ்தாபனமும் செல்வாக்கோடு இருக்க முடியாமல் போய்விடும் என்று கூடச் சொல்லுவோம்.

திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் இன்றைய தினம் ஏதாவது செல்வாக்கு இருக்குமானால் அது அவரவர்களிடம் உள்ள பணச் செல்வாக்கே ஒழிய கொள்கை செல்வாக்கென்றோ நாணய செல்வாக்கென்றோ அடியோடு சொல்லிவிட முடியாது. அது போலவே நமது இயக்கமும், கொள்கையின் யோக்கியதையையும் நாணயத்தின் பெருமையையும் மாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் ஆகிவிடாது. ஒற்றுமையும் கட்டுப்பாடும் இருந்தால் நமக்குப் பணம் கிடைப்பது ஒரு அதிசயமல்ல. சென்ற வருஷம் மாத்திரம் கதரின் பேரால் 3 லக்ஷம் அழுதோம். காங்கிரசின் பேரால் பல லக்ஷம் தொலைத்தோம். இன்னமும் சங்கராச்சாரிகளின் கொள்ளையால் ஊரூருக்கு 10, 20 ஆயிரங்கள் பாழாகின்றன. மற்றும் சாவு, சடங்கு, உற்சவம், வேண்டுதலை முதலியவைகளின் பேரால் பல பல லக்ஷம் வீணாகின்றது. எனவே நமது நாட்டில் பணமும், கொடுக்கும் தாராள தன்மையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதற்கான புத்தி மாத்திரம் நம்மவர்களுக்கு இல்லை என்பதைச் சொல்லி ஆக வேண்டியிருப்பதுடன் அதை யாரும் கற்பிக்க முயற்சி செய்யவில்லை என்கின்ற குற்றத்தையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

முதலாவது நமது கக்ஷியில் ஒற்றுமைக்கும் கட்டுப்பாட்டிற்கும் விரோதமாய் உள்ள அபிப்பிராய பேதங்கள் என்ன என்பதை யாராவது சொல்ல முடியுமா? தங்கள் தங்கள் உத்தியோகம் பெறுவது, பதவி பெறுவது, ஆதிக்கம் பெறுவது என்பதினால் ஏற்படும் சொந்த அபிப்பிராய பேதமில்லாமல் பொது கொள்கைகளில் யாருக்கும் அபிப்பிராய பேதம் உண்மையில் இல்லையென்றே சொல்லுவோம்.

ஆதலால் இனி அவ்வித அபிப்பிராய பேதத்தை அடியோடு ஒழித்தாலொழிய கக்ஷி நிலைப்பதோ அல்லது அது பொது ஜனங்களுக்கு உபயோகமாகும் என்பதோ கவலைப்படத் தக்கதாகி விடும். நாம் பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதை அரசியலோடு பொருத்தாமல் இருப்பது குழப்பத்திற்கிடமில்லாததாக இருக்கும் என்று அபிப்பிராயப்படுகின்றோம். ஆனால் உத்தியோகங்கள் பதவிகள் எல்லாம் நமது மக்களின் சுயமரியாதையையும் சமத்துவத்தையும் சம சுதந்தரத்தையும் உத்தேசித்து கூடுமானவரைக் கைப்பற்றத்தக்க திட்டங்களையும் வகுத்துக் கொண்டு அதற்கு சரியான முக்கிய ஸ்தானம் கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் அரசியல் என்பது அர்த்தமற்றதும் பித்தலாட்டமானதும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.

வெள்ளைக்காரர்களை நமது நாட்டை விட்டு ஓட்டுவதாயிருந்தால் அவர்கள் போய் விட்ட பிறகு எல்லாத் தன்மைகளும் மக்கள் யாவருக்கும் பொதுவானதாகயிருக்க வேண்டும். அப்படிக்கில்லாவிட்டால் வெள்ளைகாரர்கள் போன பிறகு இன்னது செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதோ அல்லது வேறு ஒரு கொள்ளைக்காரனோ கொடுமைக்காரனோ சள்ளைக்காரனோ ஆளுவதாயிருந்தால் வெள்ளைக்காரனை நிறுத்தி வைப்பதே மேலானதாகும்.

அன்றியும் வெள்ளைக்காரனிடம் உள்ள உத்தியோகங்களைப் பற்றுவதானாலும், அதுவும் அது போலவே எல்லோரும் சமத்துவமுடனும் சம சந்தர்ப்பத்துடனும் அனுபவிக்க செய்வதானால் மாத்திரம் தான் அதில் நாம் சேர்ந்துழைக்கலாம். அதற்கு மக்களையும் தயார் செய்யலாம். அப்படிக்கில்லாமல் வெள்ளைக்காரனிடமிருந்து பிடுங்கி ஒரு வகுப்பார் மாத்திரம் அனுபவிப்பதாயிருக்குமானால் அதைவிட அவ்வுத்தியோகம் வெள்ளைக்காரனிடத்திலேயே இருந்து விடுவதால் ஒன்றும் மூழ்கிப் போய் விடாது. ஆதலால் இது சமயம் நமது லட்சியம், சுயமரியாதை, சமூக சமத்துவம், சம சுதந்தரம் என்பவைகளையே முக்கியமாய்க் கொண்டு அதற்காகவே ஒவ்வொரு திட்டமும் வகுக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆதலால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் அரசியல் என்பதைக் கொண்டு வந்து புகுத்தாமல் இருக்க வேண்டிக் கொள்ளுகின்றோம். ஏன் இதை எழுதுகின்றோம் என்றால் சிலருக்கு நமது இயக்கத்தில் சேருவதற்கு “மற்றக் கொள்கைகள்” ஒப்புக்கொள்ள முடிவதில்லையாம். அதை விளக்கவும் நமது இயக்க வாலிபர்கள் அரசியல்காரர்கள் என்பவர்களால் ஏமாறாமலிருக்கவுமே இதை எழுதுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.12.1928)

Pin It