சமகாலத்து இந்தியச் சூழலையும் வ.உ.சி. காலத்து இந்தியச் சூழலையும் ஒப்பீடு செய்யும் இத்தலைப்பிலுள்ள சூழல் என்பதானது சமூகம், பொருளாதாரம் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ள துறையான அரசியல் துறையைக் குறிக்கிறது. வ.உ.சியின் காலத்து இந்தியச் சூழலும் சமகால இந்தியச் சூழலும் மிகவும் மாறுபாடானதும் வேறுபாடானதாகவும் இருக்கும் என நாம் கருதுவதற்கான பல வாய்ப்புகளிருந்தபோதும் சில ஒற்றுமைகளும் உள்ளன என்பதைச் சமகால இந்தியச் சூழல் வெளிப்படுத்துகின்றது.

முதலில் பெரியவர் வ.உ.சி காலத்து இந்தியச் சூழல் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைக் காணலாம். பெரியவர் வ.உ.சியின் காலம் என்பது எது?.

வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை எனும் பெயரைக் கொண்ட பெரியவர் வ.உ.சி 1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆந் தேதி பிறந்தார். அவர் மறைந்தது 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆந் தேதியாகும். சுமார் 64 ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் காணவிரும்பிய இந்திய விடுதலையானது அவர் மறைந்து 11 ஆண்டுகள் கழித்துத்தான் இந்தியாவிற்குக் கிடைத்தது. அவருடைய செயல்பாட்டுக் காலத்திற்கும் நம்முடைய சமகாலத்திற்கும் இடையில் சுமார் 116 ஆண்டுகள் கடந்துள்ளன.

பெரியவர் வ.உ.சியின் காலத்து இந்தியச் சூழலானது அப்போதுதான் நவீனகால இந்திய விடுதலை உணர்வானது உருவாகத் தொடங்கியிருந்த காலமாகும். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டான 1905ஆம் ஆண்டின்போது அவர் தீவிரமான அரசியலில் நுழைவதற்குத் தயாராக இருந்த காலமாகும். 1905ஆம் ஆண்டின் சிறப்பு என்ன?voc with first wife

(வ உ சி அவர்களுடன் அவரது முதல் மனைவி வள்ளியம்மாள் அவர்கள்)

1905ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆந் தேதிதான் அப்போதையை பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ஜார்ஜ் கர்ஸன் என்பவர் இந்தியா மாகாணங்களில் ஒன்றாயிருந்த வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கவிருக்கும் பிரிட்டிஷ் அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியம் அப்போதைய பிரிட்டிஷ் அரசிற்கு இருந்தது.

1857ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவத்தில் இருந்த முஸ்லீம் மற்றும் இந்து சிப்பாய்கள் தங்கள் மதவேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போராடினார்கள். சிப்பாய்ப் புரட்சி எனப்படும் அச்சண்டையினால் ஏராளமான உயிர்ச் சேதத்திற்கும் பொருட் சேதத்திற்கும் ஆளான கிழக்கிந்தியக் கம்பெனியானது தன்வசமிருந்த இந்தியாவை 1858ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது. அதுவரையிலும் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியாவாக இருந்த இந்தியா அப்போதிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவாக மாறியது. மாறிய பிரிட்டிஷ் இந்தியாவின் இராணுவத்திற்குள் மீண்டும் ஒரு சிப்பாய்க் கிளர்ச்சி தோன்றி விடக்கூடாது என்பதற்காகப் பலவிதமான நடவடிக்கைகளை இராணுவத்திற்கு வெளியிலும் உள்ளேயும் செய்தது பிரிட்டிஷ் அரசு. இராணுவத்திற்குள்ளே சிப்பாய்களுக்குள் முஸ்லீம், இந்து என்கின்ற மதப்பிரிவுகளின் வேற்றுமை ஒரு பகையாக நிரந்தரமாக இருக்கும் வகையில் திட்டமிட்டு பணிச்சேர்க்கை, பணியிட மாற்றம், பதவி உயர்வு பணிச் சலுகை போன்றவைகளைக் கடைப்பிடித்தது.

இராணுவத்திற்கு வெளியே வங்காளத்தில் வசித்துவந்த முஸ்லீம்களைத் தனியாகவும் இந்துக்களைத் தனியாகவும் பிரிக்கும் பொருட்டு வங்கப் பிரிவினையை அறிவித்தார் கவர்னர் ஜெனரல். ஆனால் பிரிட்டிஷ் அரசின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வங்கப் பிரிவினைத் திட்டமானது இந்தியா முழுவதிலுமிருந்த மக்களிடையே மாபெரும் அரசியல் விடுதலை உணர்ச்சியைத் தோற்றுவித்தது. அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் புடம் போடப்பட்ட இந்தியத் தலைவர்கள் பலர். அவர்களில் பால கங்காதரத் திலகர், லாலா லஷபதி ராய், அரவிந்த கோஷ், விபின் சந்திர பாலர் போன்ற வட இந்தியத் தலைவர்கள் முக்கியமானவர்கள். அதேபோன்று தென்னிந்தியாவில் உருவான தலைவர்களில் முதன்மையானவர் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். சி. சுப்பிரமண்ய பாரதியார், சுப்பிரமண்ய சிவம், ஜி. சுப்பிரமண்ய அய்யர் போன்றோரும் முக்கியமானவர்களாவர்.

1906ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் நாடு முழுதும் அறியப்பட்ட ஒரு தலைவராக இருந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. பின்னாளில் இந்தியாவின் தலைவர்களாக உருவெடுத்த காந்தியடிகள், ஷவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், அம்பேத்கர் போன்றவர்கள் அப்போது அரசியலுக்கு அறிமுகமில்லாதவர்களாக இருந்தனர்.

வ.உ.சியின் காலகட்டமானது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் பங்கு வகித்த ’சுதேசியம்’ எனும் அரசியற் கொள்கையானது புதிதாக அறிமுகமான காலகட்டமாகும்.

1885ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியஸ் ஹியூம் என்பவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் பேரியக்கமானது அப்போது இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. பழைய கட்சி மற்றும் புதிய கட்சி எனும் அவ்விரு பெரும் பிரிவினில் புதிய கட்சிப் பிரிவானது மஹாராஷ்டிராவின் அரசியல் தலைவரான பால கங்காதரத் திலகரின் தலைமையை ஏற்றிருந்தது. அப்புதிய கட்சியின் சென்னை மாகாணப் பிரிவின் பொறுப்பாளராகத் திலகரால் நியமிக்கப்பட்டவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை ஆவார்.

புதிய கட்சி மற்றும் பழைய கட்சி ஆகிய இரு பிரிவினருக்கும் பல ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருந்தன. வேற்றுமைக்கான காரணங்களில் இரு பிரிவினரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததால் காங்கிரஸ் பிளவுபட நேர்ந்ததை யாராலும் தடுக்க முடியவில்லை.

‘சுதேசியம்’ எனும் புதிதாக உருவாகியிருந்த அரசியல் கொள்கையினை இரு பிரிவினரும் ஏற்றுக் கொண்டிருந்த போதும் இரு பிரிவினருக்கும் அடிப்படையான வேறுபாடு ஒன்றிருந்தது.

சுதேசியம் என்பது உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பது என்ற அளவில் மட்டும் பழைய கட்சியினர் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், புதிய கட்சியினரோ உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பது மட்டுமில்லாமல் அன்னியப் பொருட்களைப் புறக்கணிப்பதும் சுதேசியத்திற்குள் அடங்கும் என வாதிட்டனர்.

புதிய கட்சியினரது சுதேசியக் கொள்கையாளராக முழுமையாக வாழ்ந்து காட்டிய ஒரே தலைவர் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளைதான். சுதேசியக் கொள்கையின்படி முழுவதும் சுதேசியப் பொருட்களைப் பயன்படுத்தியதோடு அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பிற்காக தனது குழந்தைகளின் ஆடைகள் உட்பட அனைத்தையும் தீயிட அனுப்பியவர் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவரது முழுமையான சுதேசியப்பற்றுக்கு சாட்சியாக இந்தியா பத்திரிகையில் மகாகவி சுப்பிரமண்ய பாரதி எழுதிய பல கட்டுரைகள் விளங்குகின்றன.

சுதேசியக் கொள்கையைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அதற்காக, சுதேசியப் பண்டகசாலையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அவர் உருவாக்கியதுதான சுதேசியக் கப்பல் கம்பெனி ஆகும். சுதேசியக் கப்பல் கம்பெனி மூலம் அவர் கடும் முயற்சி எடுத்து வாங்கி வந்த கப்பல்களினால் அவரது புகழ் இந்தியாவெங்கும் பரவியிருந்தது. சுதேசக் கப்பல் நிறுவனம் மட்டுமில்லாமல் சுதேச பஞ்சாலை ஒன்றைத் தொடங்கும் திட்டமும் அவரிடமிருந்தது. அவ்வாறு தனக்கொரு திட்டமிருப்பதை அவர் வெளிப்படையாகவே அறிவித்திருந்தார்.

தங்களது ஆட்சியதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எதையும் பிரிட்டிஷ் அரசானது அனுமதிக்கத் தயாராக இல்லை. சென்னை மாகாணத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியில் செயல்பட்ட பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயல்பாடுகள் பிற மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதாலும், பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதேசச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் பஞ்சாலை முதலாளிகள் பிரிட்டிஷ் அரசுடன் சேர்ந்துகொண்டு கூட்டுச் சதி செய்தனர். பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை விலைக்கு வாங்கும் முயற்சியில் தோல்வியடைந்ததால், அவரை முடக்கும் வேலையை முதலாளிகள் பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தனர். அதன்படி பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவத்தையும் அரசை எதிர்த்துப் பேசினார்கள் எனும் அற்பக் காரணத்தைக் கூறிக் கைது செய்து சிறையிலடைத்தார்கள். இக்கைதுக்குப் பிறகு திருநெல்வேலியில் நடந்த நெல்லைக் கிளர்ச்சியானது தமிழகம் மறந்துபோன வீரமிக்க வரலாற்று நிகழ்ச்சியாகும்

1908ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆந் தேதி சிறையிலடைக்கப்பட்ட பெரியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை சுமார் 5 ஆண்டுகள் கழித்து 1912ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆந் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசியல் சூழ்நிலையானது பெருமளவில் மாற்றப்பட்டிருந்தது. மாண்டேகு சீர் திருத்தம் என்ற பெயரில் இந்திய மக்களிடம் பொங்கியிருந்த வீரமிக்க விடுதலை உணர்வைச் சீர்திருத்தச் சலுகைகள் மூலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக வைத்திருந்தது பிரிட்டிஷ் அரசு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என அழைக்கப்பட்ட குஷராத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இந்திய அரசியலின் மையப்புள்ளி ஆக்கப்பட்டார். அவருக்குச் சமமான இந்திய அரசியற் சிந்தனையாளர்கள் காந்தி எனும் விளக்கின் முன்னால் பிரகாசிக்க முடியவில்லை. காந்தியின் சொல்லுக்கு பிரிட்டிஜார் கட்டுப்பட்டதும் பிரிட்டிஜாரின் கோரிக்கைகளைக் காந்தி ஏற்றதுமான காலச்சூழல் கொண்டதாக இந்திய அரசியல் மாறியிருந்தது.

வ.உ.சி சிறை சென்ற 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் காலத்துத் தலைவர்களில் அரவிந்தர், பாரதி போன்ற சிலர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தனர். திலகர் போன்ற சிலர் காந்தியின் தலைமையினை ஏற்றுக் கொண்டனர். சுதேசியம் எனும் கொள்கையானது வலுவற்ற அல்லது வெறும் அடையாளமான கொள்கையாக மாற்றப்பட்டிருந்தது. குறிப்பாகச் சென்னை நகரில் அப்போது நிலவிய அரசியல் சூழல் சுதேசியத்தை முழுவதுமாக மறந்திருந்து பிராமணர், பிராமணரல்லாதார் விவாதத்திற்குள் சிக்கியிருந்தது. அதனால் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை தன்னளவில் சுதேசியவாதியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது அவர் வாழ்நாளிலேயே நடைபெற்ற மிகப்பெரும் மாற்றமாகும்.

இதனால் தமிழ் இலக்கியப் பணிகள் செய்வதில் தனது பிந்தைய வாழ்க்கையைக் கழித்த பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நாடு விடுதலையடைவதைப் பார்க்காமல் சாகிறோமே எனும் பெரும் துயரம் தோய்ந்த மனதுடன் மறைந்தார். இனி இன்றைய சமகால இந்தியச் சூழல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைப் பார்க்கலாம். சமகால இந்தியச் சமூக மற்றும் பொருளாதாரச் சூழலானது சிக்கல்கள் மிகுந்துள்ளதாகப் பல இந்தியப் பொருளாதார மற்றும் அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். திட்டங்களிலும் அறிவிப்புகளிலும் நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டபோதிலும் பெரும்பான்மையான இந்திய மக்கள் வறுமையின் பிடியில் உள்ளதாகவே ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

1990ஆம் ஆண்டு பிற நாடுகளுடன் செய்யப்பட்ட காட் - டங்கல் எனும் ஒப்பந்தமானது இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடுகளைச் சார்ந்த நாடாக மாற்றியுள்ளதாகவும் அவ்வாய்வுகள் குறிப்பிடுகின்றன. நடைமுறையில் இந்தியச் சந்தையில் தினமும் உள்நாட்டுப் பொருட்களைவிட அன்னிய நாட்டுப் பொருட்களே அதிகம் விற்பனைக்கெனக் குவிகின்றன. விற்பனையாகின்றன.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள், பாக்கெட் உணவு வகைகள் உட்பட பிற நுகர்வுப் பொருட்களிலிருந்து முதியோர்கள் பயன்படுத்துகின்ற மருந்துகள் உள்ளிட்ட ஆகப் பெரும்பான்மையானவை பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களாகவே உள்ளன என்பதிலிருந்து இந்தியப் பொருளாதாரம் பன்னாட்டுப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகின்ற நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் பல மேல்நாட்டு பத்திரிகைகளும் தெரிவித்திருக்கின்றன.

நகர்ப்புறக் கட்டுமானங்கள், சாலை வசதிகள், தகவல் தொடர்புகள், இராணுவம், போன்றவற்றில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா இருப்பினும் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, விவசாயம், மருத்துவம், கிராமப்புற மேம்பாடு போன்ற பல அடிப்படையான துறைகளில் இந்தியாவின் சமகாலச் சூழலானது மிகமிகப் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவே ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த இலாபத்தில் இயங்கி வந்த பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுவதன் மூலம் நாம் இதனை நேரடியாகக் காணலாம். இதுதவிர ஒன்றிய அரசின்மீது மாநில அரசுகள் முன்வைக்கும் அதிகமான குற்றச்சாட்டுகளையும் நாம் பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிகிறது.

இவற்றுள் உள்நாட்டு உற்பத்தியானது மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது என்பதையும் காண முடிகிறது. மிகச்சாதாரணமான பொருட்களை உற்பத்தி செய்வதற்குக்கூட அன்னிய நாட்டுக் கம்பெனிகளுடன் கடுமையான போட்டி போட வேண்டியிருக்கிறது. உள்நாட்டுக் குளிர்பானம் மற்றும் பால் உற்பத்தித் துறைகள் மிகுந்த நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாக அத்துறைகளில் பெருமளவில் ஈடுபட்டுள்ள மாநிலங்களில் நடக்கும் மக்களின் போராட்டங்கள் காட்டுகின்றன.

ஆக, பெரியவரின் காலத்து இந்தியச் சூழலானது பல்வேறு விசயங்களில் மாறியிருந்த போதிலும் பெரியவர் வலியுறுத்திய சுதேசியம் எனும் உள்நாட்டு உற்பத்தி ஆதரவு மற்றும் அந்நிய நாட்டுப் பொருட்கள் புறக்கணிப்பு எனும் கொள்கை சமகால இந்தியச் சூழலுக்கு மிகவும் தேவைப்படக்கூடிய தொன்றாகவே இருக்கிறது.

இரு காலச் சூழலையும் ஒப்பிடுகையில் இந்தியத் தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பின் கூற்றின்படி உள்நாட்டு உற்பத்தியை வளர்க்க வேண்டியிருக்கிறது அதற்காகப் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையைப் போன்ற சுதேசியத்திற்காகப் போராடும் தலைவர்களும் அவர்களின் கொள்கைகளும் இன்றும் தேவைப்படுகின்ற நிலையிலேயே இந்தியாவின் சமகாலச் சூழல் உள்ளது எனும் முடிவிற்கு நாம் வருகிறோம்.

குருசாமி மயில்வாகனன்

Pin It