இந்துத்துவ மதவெறி வன்முறையாளர்களின் குதூகலக் குரல்!
'வந்தேமாதரம்' பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளத்துப் பார்ப்பனரால் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2025 நவம்பர் 7 அன்று அதன் 150-ஆவது ஆண்டு விழாவை பார்ப்பனிய சக்திகள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ் சங்கி பரிவாரங்கள் இந்தியா முழுவதும் கொண்டாடி கூகூடலித்தார்கள். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. இஸ்லாமியர்கள் மீது கடூரத் தாக்குதல்களையும், கொலைகளையும் நிகழ்த்தி, இஸ்லாமியர்களை நாட்டை விட்டே வெளியேற்றுவது என்ற ஆர்.எஸ்.எஸ் தத்துவத்தின் முன் வடிவமே பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் புதினம். இவர்கள் இந்திய விடுதலையில் நாட்டம் கொண்டவர்களும் இல்லை; வந்தேமாதரம் என்பது இந்திய விடுதலையைப் போற்றிய பாடலும் இல்லை. இந்தியாவுக்கு விடுதலை பெறுவது என்ற கருத்தியலும் இப்பாடல் எழுதிய காலத்தில் தோன்றியிருக்கவில்லை. இது இந்தியா என்ற நாட்டைப் போற்றி எழுதப்பட்ட பாடலும் இல்லை. வங்காளத்தின் வளத்தையும், இந்துமதப் பெண் தெய்வங்களைப் போற்றியும் பாடப்பட்ட பாடல் அது.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும்படி அழைப்பு விடுத்தவர்கள் அத்தனை பேரும் ஆர்எஸ்எஸ், மற்றும் பாசகவுடன் பரிவாரத் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே. ஆர் எஸ் எஸ் அமைப்பு, அதன் அரசியல் பிரிவான பாசிச பாசக அரசு மூலம் இந்துராஷ்டிரத்தைப் படைத்து விட வேண்டும் என்று ஒவ்வொரு தளத்திலும் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதற்காகவே அனைத்துத் துறைகளையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொண்டு நிரப்பி இருக்கிறது. வந்தேமாதரம் அவர்களுடைய இந்துராஷ்டிரத்தின் தேசிய கீதம்!
வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை ஓராண்டுக் காலத்துக்கு, 2025 நவம்பர் 7 முதல் 2026 நவம்பர் 7 வரை, கொண்டாடும்படி சென்னையில் இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றார்; தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் தேசிய உணர்வின் குறியீடு இப்பாடல் என்றும் குறிப்பிட்டார். வந்தேமாதரம் பாடலை ஒலிப்பவர்களின் மனதில் வலிமைமிகு பாரத மாதாவின் பெருமையை உணர்த்தி ஆற்றலை அளிக்கும் சிறப்பு கொண்டது என்றார்.
வன்முறையாளர்கள் வந்தே மாதரம் பாட அழைக்கிறார்கள்!
அன்றைய "வந்தே மாதரம்" முழக்கத்திற்கும் இன்றைய "பாரதமாதா கீ ஜெ" முழக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளலாம். அன்றும் இன்றும் இது வன்முறை முழக்கம்தான். வந்தேமாதரம் பாடல் விழாவை அரசுத் துறைகளும், தனியார் நிறுவனங்களும், ஒருங்கிணைந்து கொண்டாடும்படி மோடி அழைப்பு விடுத்தார். தமிழக பாசக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் என்பவர் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவை பள்ளி கல்லூரிகளில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சென்ற 1 அக்டோபர் 2025 அன்று ஒன்றிய அமைச்சரவை இந்த கொண்டாட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றிய பிரதேசங்களுக்கும் ஓராண்டு தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட செயல்திட்டம் (Plan of Action) 18 பக்கங்கள் பரிந்துரைகளை வழங்கியது. முதற்கட்டமாக, இப்பாடல் ஒளிபரப்பப்படுவதுடன், அனைத்து மக்கள் பிரிவினரும், பள்ளி - கல்லூரி மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்புடன் இப்பாடல் பாடப்படும்; பரப்பப்படும். "வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பும் பாடப்படும் " என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்குள் இப்பாடலை கொண்டு செலுத்துவதை பாசக அரசு முக்கிய வேலைத் திட்டமாக கருதுகிறது. எதிர்காலத்தில் இந்து ராஷ்டிரத்தைப் படைக்க இந்த தலைமுறையை மூளைச் சலவை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
பாசக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வந்தே மாதரம் பாடலைப் பாட அழைப்பு விடுத்திருக்கிறார். வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை தமிழக அரசு அரசுவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கேட்கிறார். பாசக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை என்று வருத்தப்படுகிறார்.
வந்தேமாதரம் என்ற சொல்லாடல் சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒரு முழக்கமாகப் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் இப்பாடல் முழுமையாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. இப்பாடல் மதச்சார்பற்ற ஒரு நாட்டில் பொது நிகழ்வுகளில் பாடத் தகுந்தது அல்ல.
பாடலை விடுதலை வேட்கையால் பங்கிம் சந்திரர் எழுதினாரா?
பங்கிம் சந்திர சாட்டர்ஜி (சூன் 27 1838 - ஏப்ரல் 8 1894) வந்தே மாதரம் பாடலை 1876 வாக்கில் எழுதினார். அது எழுதப்பட்ட ஆண்டையும் உறுதியாகக் கூற முடியாது. சுதந்திர வேட்கையால் இவர் இதை எழுதவில்லை. அரசுப் பணியில் இருந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி அந்த பணி நெருக்கடியில் இருந்து ஒதுங்கி, ஓய்வாக தன் சொந்த ஊரில் சில நாட்களைக் கழித்து வரலாம் என்று கொல்கத்தாவில் இருந்து சொந்த ஊரான கந்தலாபாதாவுக்கு செல்லும்போது, இரயிலில் கண்ணால் கண்ட காட்சிகளால் ஆர்வம் மேலிட்டு எழுதினார். இதை 1882 - இல் எழுதிய ஆனந்தமடம் என்ற தம் புதினத்தில் சேர்த்தார். ஆனந்தமடம் என்ற புதினம் அவருடைய 'வங்க தரிஷன்' இதழில் தொடராக வெளியிடப்பட்டது.
வந்தே மாதரம் பாடல் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல்!
இதன் முதல் ஆங்கில வெளியீட்டின் தலைப்பு Abbey of Bliss (ஆனந்த கீதம்) என்பதாகும். ஆனந்தமடம் புதினத்தின் முதல் அத்தியாயத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலாக இது வருகிறது. இந்தப் பாடலுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்டம் பிற்காலத்தில் உருவி எடுத்துக் கொண்டது.
கொலை அரசியலை கற்பிக்கும் ஆனந்த மடம் புதினம்!
ஆனந்தமடம் புதினம் 18 - ஆம் நூற்றாண்டில், வங்காளத்தில் நவாபுகளின் ஆட்சிக் காலத்தில் நடந்த 'சன்னியாசிகள் புரட்சி' என்பதை அடிப்படையாகக் கொண்டது. 1771 இல் வங்காளத்தில் பஞ்சம ஏற்பட்டது. அப்போது திருவாரியாக மக்கள் வாழ வழி தேடி வாழிடத்தை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் சன்னியாசிகள் கூட்டமாகச் சென்று வீடுகளை சூறையாடினார்கள், சன்னியாசிகள் கொள்ளை அடித்தால் அதன் பெயர் புரட்சி. அப்படித்தான் மதவாதிகள் கருதுகிறார்கள்.
ஆனந்த மடம் கதை இப்படிப் பேசுகிறது: பட்சிங்கா என்ற கிராமத்தில் மகேந்திரன் என்பவரும் அவர் மனைவி கல்யாணி என்பவரும் உணவு இன்றி தவித்து, வாழ வழி தேடி நகரை நோக்கிச் செல்கிறார்கள். வழியில் மனித இறைச்சி சாப்பிடுகிற காட்டுவாசிகளால் விரட்டப்படுகிறார்கள். இதனால், அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். கல்யாணி குழந்தையுடன் காட்டுக்குள் ஓடி மயக்கம் ஆகிவிடுகிறாள். இந்து மதத் துறவி சத்தியானந்தா என்பவர் அவளைக் காப்பாற்றி பராமரிக்கிறார். அவர் இதர துறவிகளுடன் இணைந்து வங்காளத்தை முஸ்லிம்களிடம் இருந்து விடுவிப்பதற்காக வன்முறைப் போராட்டங்களை கையில் எடுக்கிறார். அவருடன் மகேந்திரன் வந்து சேர்கிறார். சத்தியானந்தாவின் சீடர் பவானந்தா. அவர் இளைஞர்களைத் திரட்டுகிறார். சத்தியானந்தா அரசுக்கு எதிரானவர் என்று கைது செய்யப்படுகிறார், அதன் பிறகு பவானந்தா அனைவரையும் வழி நடத்துகிறார். மடத்தின் தலைவரான பவானந்தா மூன்று சிலைகளை மகேந்திரனுக்குக் காட்டுகிறார். செகத்தாத்ரி, காளி, துர்க்கா என்ற அந்த தெய்வங்களின் வடிவில் பாரதமாதா இருப்பதாக இந்த புதினத்தில் வருகிறது. ( பாரதம் என்பது வர்ணாசிரம தர்மம் செழிக்கின்ற, பார்ப்பனர்கள் ஆதிக்கம் மேலோங்கி நிற்கின்ற புண்ணிய பூமி; அதை படைத்து விடுவதுதான் அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனர்களின் இலக்கு.) ஆனந்தமடம் புதினத்தில் துறவிகள் ஒரு செங்கல் கோட்டையைக் கட்டுகிறார்கள். அதுவே அவர்கள் தலைமையிடம். அவர்கள் அரசு படைகளுடன் மோதுகிறார்கள். ஆயுதப் பயிற்சி குறைவாக இருப்பதால் தோற்றுப் போகிறார்கள். திரட்டப்பட்ட துறவிகள் வங்காள நவாபுக்கு எதிராகவும், ஆங்கிலேயப் படைக்கு எதிராகவும் போரிடுகிறார்கள். இறுதியில் ஆங்கிலேயப் படை வீழ்ச்சி அடைகிறது. இஸ்லாமியர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்படுகிறார்கள்; சன்னியாசிகள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
இக்கதை இஸ்லாமியர்கள் மீதான கொலைத் திட்டத்தை கருவாகக் கொண்டிருக்கிறது. சத்தியானந்தாவின் சீடன் பவானந்தா என்ற இளைஞன் இளைஞர்களை திரட்டி முஸ்லிம் ஆட்சியை எதிர்க்கிறான். இக்கதையில் வரும் ஒரு கதை மாந்தரான மகேந்திரனை தன்னுடன் சேர அழைக்கிறான். இதில் "நம் மதம் அழிந்தது; வர்ணாசிரமத் தர்மம் அழிந்தது; உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது!" என்கிறான். இந்து மதத்தைக் காப்பாற்ற முஸ்லிம்களை விரட்ட வேண்டும் என்கிறான். அவன் 7 கோடி தொண்டைகள் முழங்கும் போது, 14 கோடி கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரதமாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்கிறான். அந்த வந்தே மாதரம் பாடல் இப்படித்தான் பேசுகிறது. பவானந்தா மகேந்திரனை ஆனந்த மடத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே விஷ்ணுவின் மடியில் ஒரு தேவி படுத்திருக்கிறாள். "அவள்தான் நம் பாரதமாதா! நாம் பாரதமாதாவின் புத்திரர்கள்! செகதாத்ரி ஒளிமயமான காட்சி தரும் சிலை. ஆதியிலே பாரதமாதா இப்படித்தான் இருந்தாள். இப்போது எப்படி இருக்கிறாள்? இரண்டாவதாக காட்சியளிப்பது நிர்வாணமாக காட்சியளிக்கும் கருங்காளி சிலை. அதைக் காட்டி பாரதமாதா இழிவான நிலையை அடைந்து விட்டதாகக் கூறுகிறான். மூன்றாவது காட்சி, 10 கரங்களை உடைய துர்க்கா தேவியின் சிலையைக் காட்டுகிறான். " நமது எதிரிகளான முஸ்லிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால், நமது அன்னை பாரத தேவி இந்த கண்கொள்ளா காட்சியதைத் தருவாள்! " லட்சுமி, சரஸ்வதி விக்கிரகங்களைக் காட்டி, 10 கரங்கள் உடைய துர்க்காவே, தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே, கல்வித் தாயான சரஸ்வதியே போற்றி! என்று பூசாரி போற்றுகிறான். இதைப் பார்த்த பிறகு, பவானந்தாவுடன் மகேந்திரன் சேர்கிறான். படை திரட்டப்படுகிறது. சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக சபதம் எடுக்கிறார்கள். பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்கள்.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி இப்படி விவரிக்கிறார்: "சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா?" என இளைஞர்களை திரட்டிச் சென்று, முஸ்லிம் கிராமங்களுக்கு தீ இடுகிறார்கள். முஸ்லிம்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கதறி ஓடுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. கொள்ளையிடப்படும் பொருட்களைப் பகிர்ந்திட்டு விஷ்ணு பக்தர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறார்கள். இவ்வாறு சூறையாடப்படும் பொருள் கிடைப்பதால், பலர் இவர்களுடைய படையில் சேர்கிறார்கள். ஆனந்தமடம் புதினத்தின் எட்டாம் அத்தியாயத்தில் ஒரு கிராம கொள்ளை பற்றி வருகிறது. திடீரென ஒரு முழக்கம், "முஸ்லிம்களைக் கொல்லு! கொல்லு!" என்று. அதைத்தொடர்ந்து வந்தேமாதரம் என்ற பாடல் வீறிட்டுக் கிளம்புகிறது. அதைத்தொடர்ந்து ஒரு குரல் கேட்கிறது: "சகோதரர்களே! மசூதிகளை எல்லாம் தரைமட்டமாக்கி, அந்த இடத்திலேயே ராதா மாதவர் ஆலயத்தைக் கட்டும் நாள் விரைவில் வரும்!" உணர்ச்சி வசப்பட்டு, இந்து மதவாதத்தில் மூழ்கிய இளைஞர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்யவும், மசூதிகளை உடைக்கவும் உறுதி கொள்ளக்கூடிய அந்த உத்வேகத்தை இந்த புதினம் அளிக்கிறது. இன்றைய ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு முன்னோடியாக ஆனந்த மடம் திகழ்கிறது.
ஆனந்தமடம் நாடகத்தின் இறுதியில் "இப்போது நமக்கு எதிரிகள் யாரும் இல்லை. ஆங்கிலேயர்கள் நமது நண்பர்கள்! அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கி இருக்கிறார்கள்!" என்று பேசுகிறார் சத்தியானந்தா.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆங்கிலேய அரசின் கீழ், துணை மாவட்ட ஆட்சியராக, மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். அவர் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிர்ப்பாளர் அல்ல. ஆங்கிலேயர்கள் இந்தியாவை பொருளாதார ரீதியாக சுரண்டியதாகவும் அவர் கருதவில்லை. ஆனந்தமடம் புதினத்தின் கடைசி வரிகள்:
"The Sanatan virtue could only be restored under the rule of English man as king. They have become successful by eliminating Muslim rule. So the Sanatan should not wage war against them, and now should allow the English reign continue"
("சனாதன தர்மம் ஓர் ஆங்கிலேயன் அரசனாக இருக்கும் போதுதான் மீண்டும் நிலை நிறுத்த முடியும். ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களின் ஆட்சியை வெற்றிகரமாக வேரறுத்து இருக்கிறார்கள், ஆகவே சனாதனிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் தொடுக்கக் கூடாது. இப்போது ஆங்கிலேய ஆட்சி தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்.")
துறவிகளின் தலைமைத் தலைவர் ஆங்கிலேயர்கள் நமது கூட்டாளிகள் என்றும் அவர்கள் எதிர்த்து எந்த சக்தியும் வெற்றி கொள்ள முடியாது என்றும் கூறுகிறார். இது பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆங்கிலேய ஆதரவு நிலைப்பாட்டைக் காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்று நம்புகிறார். உண்மை இப்படி இருக்க, வந்தே மாதரம் பாடல் சுதந்திரப் போராட்டத்திற்காக எழுதப்பட்டது என்று பித்தலாட்டம் செய்கிறார்கள்.
ஆனந்தமடம் புதினம் ஆங்கிலேயர்களுக்கு எதிரானது அல்ல. அது அவர்களிடமிருந்து இந்திய விடுதலையும் கோரவில்லை. இஸ்லாமியர்களைக் கொன்று அழிப்பது மட்டுமே அது வலியுறுத்திய செய்தி. அதன் இலக்கு வர்ணாசிரமம் செழிக்கும் ஓர் இந்துராஷ்டிரத்தை படைத்து விட வேண்டும் என்பதே. இஸ்லாமியர்களைக் கொல்வதன் மூலம் "பூமியை தூய்மை செய்ய வேண்டும் " என்று பேசுகிறது (purification of the earth from their presence). ஆகவே மனசாட்சியை விற்றவர்கள் மட்டுமே இந்தப் பாடலை ஏற்க முடியும்; மதவெறி வன்மம் மிக்கவர்கள் மட்டுமே இந்தப் பாடலைப் பாட முடியும்.
முஸ்லிம்களை அழிக்க ஆங்கிலேயர்களோடு கூட்டணி வைத்தவர்கள் இவர்கள்!
வங்காளத்தில் சனாதனத்தைப் பாதுகாக்க முஸ்லிம் நவாபுகளை எதிர்த்து ஆங்கிலேயர்களோடு இந்து மன்னர்கள் இணைந்து நின்றதற்கான சான்றுகளை வரலாற்றில் காட்ட முடியும். கொல்கத்தா மக்களவை வேட்பாளர் ராஜமாதா அம்ரிதா ராய் இக்கருத்தை வலுப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். 1757 ஆம் ஆண்டு பிளாசி போரில் நவாப் சிராஜ்-உத்-தெளலாவை எதிர்த்து, "இந்து மதத்தைக் காக்க", ஆங்கிலேயருக்கு ஆதரவாக வங்காள மன்னர் கிருஷ்ண சந்திர ராய் பங்கேற்றார் என்பதை வங்காள அரசகுடும்பத்தைச் சேர்ந்த இராஷ் மாதா அமிர்தா ராய் பதிவு செய்கிறார். (Pradipta Tapadar, 'Royal Family fought against Siraj-ud-daullah to protect Hinduism : BJP nominee 'Rajmata' Amrita Roy', The Print, 28 March 2024).
பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1882 - இல் ஆனந்தமடம் நூலை முஸ்லிம்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் நோக்கில் எழுதியதற்கு, அக்காலத்தில், நவாபுகளின் ஆட்சியில் தங்கள் மேலாதிக்கம் ஆட்டம் கண்டுவிட்ட சூழலால் எழுந்த சிந்தனை காரணமாக இருக்கலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் வங்காளத்தில் முகலாயர் அதிகாரம் வீழ்ச்சி அடைந்தது. மாமன்னர் ஔரங்கசீப் 1707 இல் இறந்துவிட்டார். அதன் பின்னர் வங்காளத்தில் முகலாயர்கள் முழு அதிகாரம் செலுத்த இயலவில்லை. நவாபுகள் தன்னிச்சையாக அதிகாரம் செலுத்தினர். அதே நேரம் மேற்கு இந்தியாவில் சித்பவன் பார்ப்பனத் தலைமையில் மராட்டியப் படைகள் பேரெழுச்சியில் படையெடுத்து, மத்திய இந்தியாவைக் கைப்பற்றின. ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் வங்காள நவாபுகளுக்கும் மோதல் ஏற்பட்டது. நீண்ட காலமாக முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்த சனாதனவாதிகள் சனாதன தர்மத்தைக் காக்க ஆங்கிலேயர்களுடன் கைகோர்க்க தயாராக இருந்தனர். இந்த அரசியல் மற்றும் சமூகச் சூழல் ஆனந்தமடம் புதினத்தில் பிரதிபலிப்பதாகக் கருதலாம்.
சர் வில்லியம் ஜோன்ஸ் (1746–1794) வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இந்து மற்றும் இசுலாமிய சட்டங்களின் நீதிபதியாக பணியாற்றியவர். இந்தியவியல் மற்றும் சமஸ்கிருதம் மற்றும் ஐரோப்பிய மொழிகளை கற்றறிந்தவர், இந்திய-ஆரிய மொழிகளுக்கும், இந்திய ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை நிலைநாட்டியவர். வங்காளத்தின் கற்றறிந்த வட்டாரத்தில் ஆங்கிலேயர்களுக்கும் இந்தியப் பார்ப்பனர்களுக்குமான ஆரியஉறவு பற்றிய புரிதல், ஆங்கிலேயர்கள் மீதான உளம் சார்ந்த கூடுதல் நெருக்கத்தை பங்கிம் சந்திர சாட்டர்ஜி போன்றவர்களுக்கு உருவாக்கி இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. பார்ப்பனர்களுக்கு முஸ்லிம்கள் தான் எதிரியே ஒழிய, ஆங்கிலேயர்கள் பார்ப்பனர்களுடன் ஆரிய இனத்தொடர்பு கொண்டவர்கள் என்ற சிந்தனை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
வந்தே மாதரம் பாடலைப் பாட பல மாநிலங்களில் எதிர்ப்பு!
வந்தே மாதரம் பாடலைப் பாட பல மாநிலத்தவர்கள் மறுத்திருக்கிறார்கள்.
1937 இல் ஒரிசா சட்டமன்ற பேரவையில் இப்பாடல் பாடப்பட்டது. சில அதிகாரிகள் இதற்கு எழுந்து நிற்கவில்லை; அமர்ந்திருந்தனர். இது பற்றி சட்டமன்றத் தலைவரிடம் சிலர் முறையிட்டனர். அது அவரவர் விருப்பம் என்று சபாநாயகர் கூறிவிட்டார்.
1938 - இல் சென்னை மாகாணத்தில் பிரதமராக இராசகோபாலாச்சாரியார் பொறுப்பேற்றார். சட்டமன்றத் தலைவராக ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டப் பகுதியைச் சேர்ந்த புளுசு சாம்பமூர்த்தி என்பவர் இருந்தபோது, அவையில் வந்தேமாதரம் பாடல் பாடப்பட்டது. இதை எதிர்த்து முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாகக் குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, பிரதமர் இராசகோபாலாச்சாரியார் ஒரு சமாதான நடவடிக்கையைப் பரிந்துரைத்தார். காலை 11.00 மணிக்கு அவை அலுவல் தொடங்குவதற்கு முன்னதாகவே வந்தேமாதரம் பாடலைப் பாடி விடலாம் என்றார். அதுமட்டுமின்றி, வேண்டுமானால் வந்தேமாதரம் பாடலுடன் மற்ற மதப் பாடல்களையும் சேர்த்துப் பாடலாம் என்றார். இதை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. ஆகவே வந்தேமாதரம் பாடல் கைவிடப்பட்டது.
தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக வந்தே மாதரம் பாடலை ஏற்கச் செய்து விட வேண்டும் என்ற முயற்சி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பும் இருந்து கொண்டிருக்கிறது. 1998 - இல், பாசக ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் 'சரஸ்வதி வந்தனா' பாடல் பாடப்பட்டது. இது நாடு முழுவதும் எதிர்ப்பு அலையை உருவாக்கியது.
2006 இல் வந்தே மாதரம் பாடலின் 100 வது ஆண்டு விழாவிற்கு எதிர்ப்பு!
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் வந்தே மாதரம் பாடலுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பகல் 11.00 மணிக்கு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அப்பாடலை விருப்பமுள்ளவர்கள் பாடலாம் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் உத்தரவிட்டார். வந்தே மாதரம் பாடலைப் பாட இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு அரசு பாடலைப் பாடுவதை மாணவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டது. பாசக ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில், பல மாநிலங்களில் மாணவ - மாணவியரை அன்றைய நாள் பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்த்தனர்.
2006- ஆம் ஆண்டு, அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கு வந்தேமாதரம் பாடல் இசைவட்டுகளாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. விருப்பமுள்ளவர்கள் பாடலாம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பாசக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். "வந்தே மாதரம் பாடுவதை ஏன் கட்டாயமாக்கவில்லை?" என்று குரல் எழுப்பினர். பள்ளி கல்லூரிகளில் இப்பாடலைப் பாட வேண்டும் என்று 2006- இல் ஒன்றிய அரசு வலியுறுத்தியதற்கு கடுமையான எதிர்ப்பு பல்வேறு கட்சிகளிடம் எழுந்தது.
தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் ஏ.வி.சி கல்லூரி (தன்னாட்சி) தன் எதிர்ப்பை மிகச் சரியாகப் பதிவு செய்தது. சரியாக 11.00 மணிக்கு ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களும் கல்லூரியை விட்டு வெளியேறினார்கள். கல்லூரியின் இரும்பு வாயிற்கதவுகள் இழுத்து மூடப்பட்டன. இதை ஆசிரியர்களும் கல்லூரி நிர்வாகமும் எதிர்பார்க்கவில்லை. இது இந்துத்துவவாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை அளித்தது. கல்லூரி முதல்வருக்கு மயிலாடுதுறை நகரத்திலிருந்து அரசியல் பிரமுகர்களின் ஆவேசக் குரல்கள் எச்சரிக்கை விடுத்தன. கல்லூரி நிர்வாகத்தில் உள்ள பிற உறுப்பினர்கள் எரிச்சல் அடைந்து முதல்வரிடம் கேள்வி எழுப்பினார்கள். ஏ.வி.சி கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் மீது விசாரணை வந்தது. மாணவர்களின் போராட்டத்தைக் கல்லூரி நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. வந்தேமாதரம் பாடலுக்கு நூறாவது ஆண்டு விழா நடைபெற்ற போது சரியாக பகல் 11 மணிக்குக் கொண்டாட இந்திய ஒன்றிய அரசு அழைப்பு விடுத்த நிலையில், அதே நேரம் சரியாக 11 மணிக்கு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வாயிலை இழுத்து மூடி, ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து, வேலை நிறுத்தம் செய்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் என்பது மிக முக்கியமான செய்தி.
வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது நியாயமற்றது!
நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடலுக்குத் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் எதிர்ப்பைக் காட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சி இப்பாடலை ஏற்றுக் கொண்டது நெருடலான ஒன்றாகும்.
1896 - ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் 12-ஆவது மாநாடு நடைபெற்றபோது, இரவீந்திரநாத் தாகூர் முயற்சியில் வந்தேமாதரம் பாடல் மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாகப் பாடப்பட்டது. அதற்கு இசையமைத்தவர் இரவீந்திரநாத் தாகூர். கொல்கத்தா அமர்வின் தலைவர் ரஹ்மத்துல்லா எம். சயானி. வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் (சரணங்கள்) மட்டுமே ஏற்கப்பட்டது.
1905 - க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்! வங்கப்பிரிவினை வந்தேமாதரம் பாடலைத் தூக்கி நிறுத்தியது!
1905 - ஆம் ஆண்டு வங்காளத்தில் போராட்டக்காரர்களின் பாடலாக இது மாறியது. வங்கத்தின் வளத்தைப் பாடுகிற, துர்க்கை, காளி, லட்சுமி ஆகிய பெண் தெய்வங்களை பாடுகிற இப்பாடல், வங்காளத்தில் போராட்டக்காரர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது. 1905 - ஆம் ஆண்டு வாக்கில் சுதந்திரப் போராட்டம் என்பது கிடையாது. 1885 ஆம் ஆண்டில் உருவான காங்கிரஸ் அமைப்பினர் 1905 வரையிலும் பணிவான விண்ணப்பதாரர்களாகவே (Humble Petitioners) இருந்தார்கள். 1905 - ஆம் ஆண்டு விரிந்து பரந்த பெருமாகாணாமாக இருந்த வங்காளம், நிர்வாக வசதி கருதி அன்றைய வைஸ்ராய் கர்சன் பிரபுவால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வங்காள பெருமாகாணம் 1,89,000 சதுர மைல்களைக் கொண்டது (4,89,510 சதுர கிலோ மீட்டர்கள்), அப்போதே 8 கோடி மக்கள் அதில் வாழ்ந்தார்கள். நிர்வாக வசதிகளைக் கருதி, மேற்குவங்கம் 1,41,580 சதுர மைல்கள் பரப்பளவும், 5.4 கோடி மக்கள் தொகையும் கொண்ட மாகாணமாகவும், கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகியவை ஒரே மாகாணமாக, 1,06,540 சதுர மைல்கள் பரப்பளவும் 3.1 கோடி மக்கள் தொகையும் கொண்ட மாகாணமாகவும் பிரிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையிலும், கிழக்கு வங்கத்தில் இஸ்லாமியர் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர்.
இவ்வாறு, இஸ்லாமியர் அதிகம் உள்ள ஒரு மாகாணம் உருவானதில் ஏற்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாக, வங்காளத்தில், மத அடிப்படையில், இந்துமதவாத தேசிய உணர்வு உருவாக்கம் பெற்றது. மகாராஷ்டிராவிலும் வேறு மாகாணங்களிலும் இருந்த, உயர் சாதி மனநிலையில் வர்ணாசிரம சமூகக் கட்டமைப்பைத் தளர்ச்சியின்றி மீண்டும் நிறுவி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பார்ப்பனர்கள், வங்காள பார்ப்பனர்களின் இந்து மத உணர்வைப் பிரதிபலித்தனர். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இஸ்லாமியர்களின் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். வங்கப் பிரிவினையை ஏற்க மாட்டோம் என்று போராட்டங்கள் தொடர்ந்தன. அதன் பொருள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு மாகாணத்தை அமைக்க விட மாட்டோம் என்பதுதான். 1911 இல் மீண்டும் கிழக்கு வங்கமும், மேற்கு வங்கமும் ஒன்றாக இணைக்கப்பட்டன.
வந்தேமாதரம் பாடலுக்குத் தொடர்ந்த ஆதரவு!
1896 - இல் இரவீந்திரநாத் தாகூர் கல்கத்தா மாநாட்டில் இப்பாடலை இசைக்கச் செய்தார். 1901 - இல் தக்ஷின சரண் சென் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடலைப் பாடினார். லாலா லஜபதிராய் லாகூரில் 'வந்தேமாதரம்' என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். 1905 - இல் ஹீராலால் சென் இந்தியாவின் முதல் அரசியல் திரைப்படத்தை இந்தப் பாடலுடன் நிறைவு செய்தார். 1907 இல், முதன் முதலாக இந்திய நாட்டுக்கொடியை, ஜெர்மனியில் வடிவமைத்து, பார்சி பெண்மணியான பிக his ருஸ்தம் காமா ஏற்றும்போது, அதன் நடுவில் வந்தேமாதரம் என்று எழுதப்பட்டிருந்தது. 1929 இல் ஆர்யா பிரிண்டிங் பிரஸ் (லாகூர்) வெளியிட்ட புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் (சரணங்கள்) அந்நூலின் 11 - ஆம் பக்கத்தில் அச்சிடப்பட்டன.
இந்திய விடுதலைப் போரின் குறியீடாகக் கருதப்பட்ட காந்தியடிகள் இப்பாடலைப் பாடுவதை ஆதரித்தார். 1946 ஜனவரி மாதம், அசாமில் கெளஹாத்தியில் காந்தியடிகள் "ஜெய்ஹிந்த் முழக்கம் வந்தே மாதரத்தை அப்புறப்படுத்தி விடக் கூடாது" என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் தொடக்கக் காலத்தில் இருந்தே வந்தே மாதரம் பாடலைப் பாடி வருவதை நினைவூட்டி காந்தியடிகள் பேசினார். காந்தியடிகள் தம் கடிதங்களின் தலைப்பில் வந்தேமாதரம் எனக் குறிப்பிடத் தொடங்கியிருந்தார்.
1942இல், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற போது மாதங்கினி ஹஸ்ரா (Matangini Hazra) என்ற பெண் தலைவர் ஆங்கிலேயப் படை துப்பாக்கிச் சூடு நடத்திய போது, "வந்தேமாதரம்" என்று முழங்கிக் கொண்டே உயிர் நீத்தார்.
1937- ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இப்பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக ஏற்றது. மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், ஆச்சாரிய தேவா, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அப்படி ஏற்பதை ஆதரித்தனர். ஆனால் அப்பாடலைப் பாட அனைவரும் வற்புறுத்தப்படவில்லை. இப்பாடலை ஏற்பவர்கள் விருப்பம் போலப் பாடலாம் என்றனர். அகில இந்திய முஸ்லிம் லீக் மற்றும் முகமது அலி ஜின்னா போன்றோர் இப்பாடலை எதிர்த்தனர். முதல் இரண்டு பத்திகள் மட்டும் இந்து மத தெய்வங்களோடு தொடர்பு இல்லாமல் இருப்பதால், அதை மட்டும் பாடுவதற்கு காங்கிரஸ் ஒப்புதலளித்தது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய அரசமைப்பு சட்ட அவையின் தலைவராக இருந்தார். அவரே இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார், மதச்சார்பற்ற இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பார்ப்பனிய மந்திரங்கள் முழங்க, சடங்கு ஆச்சாரங்களோடு பதவி ஏற்றார். 1950 ஜனவரி 24ஆம் நாள், ராஜேந்திர பிரசாத் "வந்தே மாதரம்" பாடலும், "ஜன கண மன" பாடலும் சமமாக மதிக்கப்படும் என்றார்; இது உறுப்பினர்களின் மனதை திருப்திப்படுத்தும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார். ஏனென்றால், வந்தேமாதரம் பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக ஆக்கிவிட வேண்டும் என்று வர்ணாசிரம சனாதனிகள் கடுமையாக வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.
1947 ஆகஸ்ட் 15 அன்று, ஆச்சாரியா கிருபாளனியின் மனைவி சுசேதா கிருபாளனி அரசியல் அமைப்புச் சட்ட அவையில் "வந்தே மாதரம்" பாடலைப் பாடினார்.
இவ்வாறு வந்தேமாதரம் என்ற சொல்லாடல் வங்காளத்தின் எல்லையைத் தாண்டி இந்திய அளவில் விடுதலைப் போராட்ட முழக்கமாக மாறியது. ஆனால் அதன் உட்கீற்று உணர்வு இந்து தேசியமாகவும், இஸ்லாமிய எதிர்ப்பாகவும் தொடர்ந்து இருந்து வந்தது. மக்களைப் பொறுத்தவரை வந்தே மாதரம் என்பது உணர்ச்சி மிக்க ஒரு முழக்கம்; அவ்வளவே.
நீதிமன்றம் சென்ற சனாதனிகள்!
இந்திய அரசமைப்புச் சட்டம் தேசிய பாடல் பற்றி எதுவும் சொல்லவில்லை. 2019- ஆம் ஆண்டு, வந்தேமாதரம் பாடலை தேசிய கீதமாக (National Anthem) அல்லது தேசியப் பாடலாக (National Song) ஏற்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 27 ஜூலை 2019.)
2022 நவம்பர் மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் "ஜன கண மன ..." மற்றும் "வந்தேமாதரம்" ஆகிய இரண்டும் ஒரே நிலையில் மதிக்கப்படும் என்று நரேந்திர மோடி அரசு பதிவு செய்தது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7 நவம்பர் 2022).
வந்தே மாதரம் பாடல் பற்றி பெரும்பாலான மக்களுக்கு எதுவும் தெரியாது!
வந்தே மாதரம் பாடல் இந்துமதப் பெண் தெய்வங்களையும், வங்க இயற்கை வளத்தையும் பாடுகிறது; ஆனால், அது இந்து மத தெய்வங்களைப் பாடுகிறதா, அல்லது வங்க நாட்டைக் பாடுகிறதா என்று எளிய மக்கள் புரிந்து கொள்ளவில்லை; புரிந்து கொள்ள முயன்றதும் இல்லை. இது ஒரு வசதியை இந்துத்துவவாதிகளுக்கு தருகிறது. இப்பாடலைப் பற்றி, மக்களுக்கு ஒரு குருட்டுப் புரிதல் மட்டுமே உள்ளது. இதை தேச பக்திப் பாடலாகக் கருதுகிறார்கள். இந்து மதப் பெண் தெய்வங்களைப் பாடுவதையும், இப்பாடல் இடம் பெற்றுள்ள ஆனந்தமடம் புதினம் இஸ்லாமியர்களை படுகொலை செய்வதை வலியுறுத்துவதையும், சாமானிய மக்கள் இப்போதும் அறிந்திருக்கவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பள்ளிகளிலும் மற்றும் அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில், 2017 ஜூலை மாதம் 25- ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மற்றும் தொழிலகங்களிலும் வாரம் ஒரு முறை ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவும், இசைக்கவும் கட்டாயமாக்கியது. மேலும், அரசு அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் மாதம் ஒரு முறை இப்பாடல் பாடப்பட வேண்டும் என்றும் கூறியது.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் லக்ஷ்மண் கோக்கலே (Hemant Lakshman Gokhale) ஆவார். இந்த உத்தரவின் காரணமாக, தமிழக அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அரசு அலுவலகங்களிலும், தொழிலகங்களில் வாரம் ஒருமுறை “வந்தே மாதரம்” பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கும் விதிகளில் மாற்றங்களைச் செய்தது. அரசுக்குக் கீழ் உள்ள பல துறைகள் இதனைப் பின்பற்றிப் பாடலைப் பாடும் திட்டங்களை அளித்தது. ஆனாலும் வந்தேமாதரம் பாடல் தமிழ்நாட்டு மக்களிடையே வேர் பிடிக்கவில்லை.
மதவெறிப் பாடலைப் பாட தமிழ்நாடு அரசும் ஒத்துழைக்கிறது!
தமிழ்நாடு அரசு வந்தே மாதரம் பாடலின் 150- ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை பள்ளி, கல்லூரிகளில் மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் நடத்த நடவடிக்கை எடுத்து உள்ளது. தமிழக அரசு மக்களைக் குடும்பத்துடன் இந்த விழாவைக் கொண்டாட ஊக்குவித்து, அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டலை வழங்கி உள்ளது. பாடலை வாரம் ஒருமுறை பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பாட வலியுறுத்தப்பட்டு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாதம் ஒரு முறை பாடுவதற்கான சுற்றறிக்கையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வந்தே மாதரம் பாடலுக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு!
வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் பிரச்சனை வெடித்தது. பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜ் புரோகித் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகளில் வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார். ஆனால் எம். ஐ. எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் யாராவது தன் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், வந்தேமாதரம் பாட மாட்டேன் என்று அறிவித்தார். சமாஜ்வாதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அபு அசீம் அஸ்மி நாட்டை விட்டு தான் வெளியேற்றப்பட்டாலும் வந்தேமாதரம் பாடலைப் பாட மாட்டேன் என்று கூறினார். மீரட், மொராதாபாத், வாரணாசி, கோரக்பூர் ஆகிய நகராட்சி மன்றக் கூட்டங்களில் வந்தேமாதரம் கட்டாயமாக பாடப்பட வேண்டும் என்று விதிமுறை செய்யப்பட்டது. ஆனால் இதைக் கண்டித்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
2025 ஆகஸ்ட் 16ஆம் நாள் மகாராஷ்டிரா நாக்பூரில் 40 ஆயிரம் சங்கிகள் ஒன்று கூடி வந்தே மாதரம் பாடினார்கள். இதை கின்னஸ் சாதனை என்றனர்.
2006 ஆம் ஆண்டு வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவுக்கு முன்னதாக இஸ்லாமிய மதப் பள்ளி தாருல் உலூம் வந்தேமாதரம் பாடல் இஸ்லாமுக்கு விரோதமானது என்று ஃபத்வா வெளியிட்டது.
2013 பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஃபிகூர் ரஹ்மான் வந்தே மாதரம் பாடப்பட்டபோது மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்த எதிர்ப்பு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. 1909 இல் முஸ்லிம் லீக் இப்பாடலை கடுமையாக எதிர்த்தது. அமிர்தசரஸ் முஸ்லிம் லீகின் இரண்டாவது தேசிய அமர்வில் பேசிய கட்சியின் தலைவர் சையத் அலி இமாம் வந்தே மாதரத்தை ஒரு "குழுவாதக் குரல்" என்று விவரித்தார். 1938 மார்ச் 1 அன்று லாகூரில் இருந்து வெளியிடப்பட்ட தி நியூ டைம்ஸில் ஒரு கட்டுரையில் முகமது அலி ஜின்னா தம் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கோரிக்கை! "ஜன கண மன” பாடலுக்கு இணையான தகுதி வந்தேமாதரம் பாடலுக்கு வேண்டுமாம்!
ஆர்.எஸ்.எஸ்- காரர்களும், பிற சங்கபரிவார் அமைப்புகளும் வந்தே மாதரம் பாடலுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதும், மற்றும் 'ஜன கண மன' பாடலுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமின்றி, வழக்கு மன்றங்களிலும் வாதாடுகிறார்கள் என்றால், அவர்களுடைய நோக்கம் என்ன? ஜன கண மன ... எனத் தொடங்கும் தேசிய கீதத்தைவிட அவர்களுக்கு வந்தேமாதரம் பாடலே முக்கியமானது. அது விடுதலைப் போராட்ட பாடல் என்பதால் அதை அவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால், அவர்கள் இந்திய விடுதலைக்குப் போராடியவர்களும் இல்லை; அவர்கள் நாட்டுப்பற்று உள்ளவர்களும் இல்லை; இந்திய நாட்டின் பல்வேறு மொழியின, பல் சமூக மக்களைச் சமமாக மதிக்கக் கூடியவர்களும் இல்லை. அப்படியென்றால் அவர்களுடைய நோக்கம்தான் என்ன? அவர்களுடைய நோக்கம், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சற்றே தளர்ச்சியுற்ற சனாதனத்தை, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தக்கூடிய வர்ணாசிரம தர்மத்தை, மீண்டும் தளர்ச்சியின்றி நிலைநிறுத்துவதுதான். அதற்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையரை அழித்தொழிக்க வேண்டும். அதைத்தான் அவர்களுடைய குருவான எம்.எஸ். கோல்வால்கரும் சொன்னார்; சாவர்க்கரும் கூறினார்; அதைத்தான் இப்போது ஆர்எஸ்எஸ்- காரர்களும் கூறி வருகிறார்கள். ஆகவே, அவர்களுடைய இன்றைய ஆர்எஸ்எஸ் சிந்தனைகளுக்கும், RSS - இன் செயல்திட்டங்களுக்கும் முன்னோடியாக விளங்கியது ஆனந்த மடம் என்ற புதினமும், அதில் வரும் வந்தேமாதரமும்தான்.
மோடியின் அறிவிப்பு அரசியல் சட்ட அவையின் முடிவுக்கு எதிரானது!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி "வந்தேமாதரம் பாடல் முழுவதுமாக நிகழ்ச்சிகளில் பாடப்படும்" என்று அறிவித்திருக்கிறார். இது 1950 - இல் அரசியல் அமைப்புச் சட்ட அவை எடுத்த முடிவுக்கு எதிரானது. வந்தேமாதரம் மூலப் பாடலில் ஆறு பத்திகள் உள்ளன. அவற்றைப்பாடுவதற்கு அனுமதி இல்லை. இப்பாடலை முழுவதுமாக தடை செய்ய கோரிக்கை எழுந்தது. அடிப்படையில் இந்துத்துவவாதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இப்பாடலை பாட அனுமதிக்கலாம் என்பதற்கு முட்டாள்தனமான ஒரு விளக்கத்தைக் கொடுத்தார். அதில் வரக்கூடிய துர்க்கா என்ற சொல் எந்த சிலையையும் குறிக்கவில்லை என்றும், ஆனால் அது தாய் நாட்டிற்கு மற்றொரு பெயர் என்றும் குறிப்பிட்டார். வந்தேமாதரம் பாடல் உருவ வழிபாட்டை வலியுறுத்த வில்லை என்றார். கல்வியறிவற்ற தற்குறி கூட இந்த விளக்கத்தை ஏற்க முடியாது.
1937 - இல் காங்கிரஸ் செயற்குழு முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாட பரிந்துரை செய்தது. 1937 அக்டோபர் 26 ஆம் தேதி ஜவஹர்லால் நேருவுக்கு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பரிந்துரைக் கடிதத்திலும் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாட பரிந்துரைக்கப்பட்டது. அந்த இரண்டு பத்திகள் மட்டுமே தேசியப் பாடல் (National Song) என ஏற்கப்பட்டது. அதுவே இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதைத்தான் அறிவிப்பும் செய்தார். ஆனால் இன்று இந்திய பண்பாட்டுத்துறை வந்தேமாதரம் முழுப் பாடலையும் பாடும்படி அறிவுறுத்துகிறது. இது இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த தலைவர்களின் கருத்துக்கும் இந்திய அரசியல் சட்டத்திற்கும் எதிரானது.
வந்தேமாதரத்தை மக்கள் ஏற்கும் வகையில் மொழி பெயர்த்த பாரதியார்!
பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடலை பாரதியார் இரு முறை மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். அவருடைய பாடலிலும் இந்து பெண் தெய்வங்களின் பெயர்கள் - பார்வதி, கமலை, வெண்மலர் தேவி (கலைமகள்), ஆலயம் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலை தேவி, அறிவினை அருளும் வாணி, உள்ளிட்டவை வருகின்றன. 7 கோடி மக்கள், 14 கோடி கைகள் என பங்கிம் சந்திர சாட்டர்ஜி பாடுகிறார். பாரதியார் "30 கோடி வாய் நின்னிசை முழங்கவும், 60 கோடி தோள் உயர்ந்துனக் காற்றவும்..." என்று பாடுகிறார். வந்தே மாதரம் பாடலை இந்தியா முழுமைக்குமானதாக மாற்றும் முயற்சி பாரதியாரிடம் இருந்தது. சமூக சமத்துவம் பேசிக்கொண்டே சனாதனத்தையும் ஆதரிக்கும் போக்கு பாரதியாரிடம் இருந்தது. அவரைப் போன்றவர்கள் வந்தே மாதரம் பாடலைப் போற்றுவதில் நமக்கு வியப்பில்லை.
திராவிட இயக்கம் எதிர்த்த வந்தேமாதரம் பாடல்! தமிழ்நாட்டுக் கவிஞர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்!
திராவிட இயக்கம் சனாதனத்தை போற்றும் ஆனந்தமடம் புதினத்தையும், வந்தே மாதரம் பாடலையும், பாரதமாதாக் கருத்தியலையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறது. திராவிட இயக்கத்தவர்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய வேறு சிலர் வந்தேமாதரம் பாடலை ஏற்றிப் போற்றி, அதை மக்கள் ஏற்கும்படி செய்யக்கூடிய போக்கு கண்டனத்துக்குரியது.
வால்மீகி எழுதிய இராமாயணத்தில் குடிகாரனாகவும், பெண் பித்தனாகவும் வருகிற இராமனை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். காந்தியாரே இராமாயணத்தில் வரும் ராமன் என் ராமன் அல்ல என்று கூறிவிட்டார். ஆனால், தமிழ் மக்கள் ஏற்கும் வகையில், இராமனின் பண்புகளை மாற்றி அமைத்து, ஆரியத்தின் அடையாளமாகிய இராமனை ஏற்கச் செய்த கம்பரின் செயல் தமிழினத்தை வீழ்த்தியது. தமிழில் இராமாயணத்தை எழுதிய கம்பரின் செயல் தமிழர்களை ஆரியத்துக்கு அடிமையாக்கியது. அதனாலேயே திராவிட இயக்கம் கம்பரை சாடியது.
அதேபோல ஆரியத்தின் சனாதன வர்ணாச்சிரம வெறியை தமிழ் மக்கள் உணராத வகையில், தமிழ் கவிஞர்கள் வந்தே மாதரம் பாட்டை தமிழர்களும் ஏற்கும் வகையில் பொருள் மாற்றி எழுதி, மக்கள் மயமாக்கி வருவது மன்னிக்க முடியாத குற்றச் செயல் ஆகும். 1997 இல் கவிஞர் வைரமுத்து ஆனந்தமடத்தின் ஆரிய நச்சுப்பல் தெரியாதபடி மறைத்து, வந்தேமாதரம் பாடலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கும் வகையில் எழுதி இருக்கிறார். அதற்கு மனம் கவரும் வகையில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். வந்தே மாதரம் என்றால் "தாயை வணங்குகிறேன்" என்றுதான் பொருள். அந்தத் தாய் காளி, துர்கா, இலட்சுமி, சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்கள். ஆனால், கவிஞர் வைரமுத்து வந்தே மாதரம் என்பதை "தாய் மண்ணே வணக்கம்!" என்று மொழிமாற்றம் செய்து தருகிறார். வந்தே மாதரம் என்பதற்கு "தாய் மண்ணே வணக்கம் " என்று கூறுவது சரியான மொழிபெயர்ப்பா?
மேலும், வந்தேமாதரம் பாடல் இந்தியாவைக் குறிப்பதாக காட்டும் வகையில், ‘அந்த பக்கம் இந்தப் பக்கம் கடல்களை கொடுத்தாய்’ என்கிறார். “வந்தே மாதரம்.. வந்தே மாதரம்.. பாரதம் எங்களின் சுவாசமே.. தாய் மண்ணே வணக்கம்..” என்கிறார்.
பாரதம் எப்படி நம் சுவாசமாக இருக்க முடியும்? இந்துத்துவவாதிகளுக்கும், இந்துராஷ்டிரத்தைப் படைக்க வெறி கொண்டலைபவர்களுக்கும் "பாரதம்" படைப்பதே இலக்கு. பார்ப்பனிய மேலாண்மை நிலவும் ஆரிய புண்ணிய பூமி தான் பாரதம். அதை எதிர்த்துதான் தமிழ்நாட்டில் கடந்த கால அரசியல் நடந்தது. அதை எதிர்த்து முறியடிப்பது தான் நம் அரசியலாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே இலட்சங்களில், கோடிகளில் புரளும் ஒரு கவிஞர் ‘பாரதம் எங்களின் சுவாசமே’ என்கிறார்; ஆரியத்துக்கு அனுமார் வேலை பார்க்கிறார். இவர்களிடமிருந்து தான் தமிழ்நாட்டின் இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.
வந்தேமாதரம் என்பது வெற்றுச் சொல்லாடல் அல்ல! அது ஆரியத்தின் இந்துராஷ்டிர வேலைத்திட்டம்!
வந்தேமாதரம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது; அனைத்து சிறுபான்மை சமயத்தவர்களுக்கும் எதிரானது; அது வர்ணாச்சிரமத்திற்கு ஆதரவானது; ஆகவே சூத்திர பஞ்சமர்களுக்கு எதிரானது. அது பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தக்கூடியது. ஆகவே, அது சமத்துவத்துக்கும், ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. அந்தச் சொல்லாடலை புறக்கணிப்பதன் மூலம் அந்தக் கருத்தியலையே நாம் புறக்கணிக்கிறோம்.
ஆட்சிப் பீடத்தில் ஆரியம் அமர்ந்து கொண்டு வந்தேமாதரம் பாடச் சொல்லுகிறது. நீதிமன்றத்தில் ஆரியம் நீதிபதியாக வந்து அமர்ந்து கொண்டு வந்தேமாதரம் பாட உத்தரவிடுகிறது. தமிழகத்திற்கு எதிரான, தமிழினத்திற்கு எதிரான இந்த சதிச் செயலை அம்பலப்படுத்தி, வந்தேமாதரத்தை முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் கூறுவதுபோல பாரதம் நமக்கு சுவாசமாக இருக்க முடியாது. பாரதத்தில் நாம் என்றென்றும் சூத்திரர்கள், பஞ்சமர்கள் தான். இறையாண்மைத் தமிழ்த்தேசத்தை நோக்கி நாம் பயணிக்க, வந்தேமாதர பசனைகளை அம்பலப்படுத்த வேண்டும்.
நம் முழக்கம் ‘வந்தே மாதரம்’ அல்ல; நம் முழக்கம் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்பதுதான்.
- பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்