காஞ்சியில் 500 ஆண்டுகால பல்லவர் ஆட்சியும், சோழர் பகுதியில் 300 ஆண்டுகால பல்லவர் ஆட்சியும் பார்ப்பனியம் தமிழகத்தில் மிகமிக வலிமையாக காலூன்ற வழி வகுத்தது. காஞ்சியை 500 ஆண்டுகாலம் பல்லவர் ஆண்டது என்பது கிரந்த எழுத்தை உருவாக்கவும், பண்டைய காலம் முதல் பல்வேறு துறைகளில் தமிழில் தோன்றிய நூல்களை சமற்கிருதத்துக்கு மொழிமாற்றம் செய்யவும் வழிவகுத்தது. சோழர் பகுதி முழுவதும் 300 வருடங்களாக பார்ப்பனர்கள் நிலபுலன்களோடும் செல்வாக்கோடும், அரச அதிகாரத்தோடும் இருந்துள்ளனர். பல்லவர் காலத்தில் நிறைய கோயில்கள் கட்டப்பட்டன. புதிதாக கட்டப்பட்ட கோயில்களில் சமற்கிருத வழிபாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. சில பண்டைய கோயில்களிலும் சமற்கிருத வழிபாடு புகுத்தப்பட்டது. வேதச் சாத்திரக் கல்வி முறைக்கான கல்லூரிகளும் நிறைய தோற்றுவிக்கப்பட்டு அவைகளுக்கு நிறைய மானியங்கள் வழங்கப்பட்டன. அவைகளில் பார்ப்பன மாணவர்களுக்கு இலவசமாகப் பாடங்கள் நடத்தப்பட்டன. இப்படியாகப் பலவகைகளிலும் வைதீக பார்ப்பனியம் பல்லவர் காலத்தில் சோழர் பகுதியில் வலுவாக வேரூன்றி இருந்தது. 500 முதல் 300 வருட காலமாக பலவிதங்களிலும் வைதீக பார்ப்பனியம் வலுவாக வேரூன்றி இருந்த பண்டைய சோழர் பகுதியைத்தான் பல்லவர்களிடமிருந்து பிற்காலச் சோழர்கள் கைப்பற்றுகின்றனர். அதன் காரணமாக பல்லவர் காலத்தில் இருந்த மரபு வழியான நடைமுறைகள் பல தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தன. இந்தப் பின்புலத்தில்தான் பிற்காலச் சோழப் பேரரசு காலத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பழையாரையைத் தலைநகராகக் கொண்டு சிற்றரசராக ஆண்டு வந்தனர். கி.பி. 850ல் விசயாலயச் சோழன் (கி.பி.848-881) தஞ்சையைக் கைப்பற்றி அதனைத் தலைநகராக ஆக்கிய காலம் முதல் பிற்காலச் சோழப்பேரரசு தொடங்குகிறது எனலாம். அவனுக்குப்பின் வந்த முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) தொண்டை மண்டலத்தையும் கொங்குமண்டலத்தையும் கைப்பற்றி சோழப் பேரரசை விரிவாக்குகிறான். அதன்பின் வந்த முதலாம் இராசராச சோழன் (கி.பி.985-1012) பிற்காலச் சோழர்களில் மிகப்புகழ் பெற்றவன். இவனது ஆட்சிக் காலமும் இவனது மகன் முதலாம் இராசேந்திரன் (கி.பி.1012-1044) ஆட்சிக் காலமும் சோழநாடு கடல்கடந்து பரவி பெரும் பேரரசாக ஆகிய காலம். தமிழகம் முழுவதும் இலங்கையும் கீழைச்சாளுக்கியமும் இவர்களது ஆட்சிப் பகுதிகளாக இருந்தன. பெரும் கடற்படையைக் கொண்டு இந்தியாவில் கங்கை வரையிலும் இருந்த நாடுகளை வென்றவனாகவும், தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பேரரசாக இருந்த சிரிவிசயப் பேரரசை வென்றவனாகவும் முதலாம் இராசேந்திர சோழன் வரலாற்றில் குறிக்கப்படுகிறான். இன்றைய பர்மா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளை தனது பெரும்கடற்படை கொண்டு வென்ற பெரும் பேரரசன் இவனாவான். முதலாம் இராசராச சோழனுக்குப் பிந்தைய 100 ஆண்டுகள் சோழ மரபினரது பொற்கால ஆண்டுகள் எனக் கூறுகிறார் நீலகண்ட சாத்திரி (1).

இவர்களுக்குப்பிறகு வந்த சோழ அரசர்களில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120) தனது ஆட்சியிலும் அதற்குப் பின்னரும் 100 ஆண்டுகாலம் அமைதி நிலவ வழிவகுத்தவன் என்கிறார் நீலகண்ட சாத்திரி (2). கி.பி. 850 முதல் கி.பி. 1150 வரையான ஆட்சிக்காலம் என்பது சோழர்கள் தொடர்ந்து வலிமையோடிருந்து வந்த காலம். ஆனால் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1218) காலத்திற்குப் பிறகு அதாவது 2018 க்குப்பின் சோழர்களின் வீழ்ச்சிக் காலம் தொடங்குகிறது எனலாம். கிட்டத்தட்ட கி.பி. 1280ல் சோழ அரசு இல்லாது போய்விடுகிறது. பிற்காலப் பாண்டியப்பேரரசு கி.பி. 1220 முதல் வலிமை பெற்ற பேரரசாக ஆகிவிடுகிறது.

பல்லவர் காலத்தில் சாதியம்:

சோழர் காலச் சமூகம் கிட்டத்தட்ட 500 முதல் 300 ஆண்டுகாலம் பல்லவரால் ஆளப்பட்டது எனவும் அக்காலகட்டத்தில் வைதீக பார்ப்பனியம் சோழர் பகுதியில் வலுவாக வேரூன்றி இருந்தது எனவும் பார்த்தோம். பல்லவர் காலத்தில் சாதியத்தையும், சமற்கிருதமயமாக்களையும் சோழர் பகுதியில் திணிப்பதற்கு வைதீக பார்ப்பனியம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. சமற்கிருதமயமாக்கும் முயற்சியில் அது ஓரளவு வெற்றி பெற்றது எனலாம். ஆனால் தமிழ் வழி மரபும், பக்தி இயக்கமும், பொருள்முதல்வாதச் சிந்தனையும், சமண, பௌத்த மதங்களும், வலங்கை இடங்கைச் சாதிய அமைப்புகளும் வருணாசிரம சாதியத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. ஆகவே பல்லவர் காலச் சமூகத்தில் வைதீக பார்ப்பனியத்தால் வைதீகச் சிந்தனைகளை ஓரளவு மக்களிடம் கொண்டுபோக முடிந்ததே ஒழிய அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. ஆனால் பல்லவர் காலத்தில் பார்ப்பனர்கள் நிலபுலங்களும் செல்வ வளங்களும் கொண்டவர்களாக சமூக அங்கீகாரமும் செல்வாக்கும் உடையவர்களாக ஓரளவு அரசியல் அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

சோழர்களும் சமயமும் (கி.பி.850-1070):

சோழர் ஆட்சியில் எம்மதமும் சம்மதம் என்ற மனப்பான்மை இருந்ததாகச் சொல்ல வந்த நீலகண்ட சாத்திரி, அரசர்கள் பிற ‘சமயங்களுக்கும் தங்கள் சமயத்திற்குச் சமமான மதிப்புக்கொடுத்து அவற்றிற்கும் எல்லா வகையிலும் ஆதரவு காட்டினார்கள். முன்னேற்றக் கருத்துக்கள் கொண்ட இராசராசனை இந்த மனப்பான்மைக்குச் சான்றாகக் காட்டலாம். அவன் தஞ்சையில் கட்டிய சிவன் கோயிலின் அலங்காரத்தில் வைணவம், பௌத்தம் ஆகிய சமயக் கோட்பாடுகளை விளக்கும் கருத்துக்களையும் பிரதிபலிக்கச்செய்து, எம்மதமும் சம்மதம் என்ற அவனுடைய கொள்கையை நிலைநாட்டினான். இப்போது தாராசுரம் என வழங்கும் இராசராசபுரத்தில் இராசராசனுடைய அக்காள் குந்தவை பெருமாளுக்கு ஒரு கோவிலும், சிவனுக்கு ஒரு கோவிலும், ஜீனருக்கு (சமணத் கடவுள்) ஒரு கோவிலும் என மூன்று கோவில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இந்த மூன்று தேவாலாயங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை ஒரு கல்வெட்டு ஒருசேரக் கூறுகிறது’ (3). எனக் கூறுகிறார். ‘இராசராசன் ஆனைமங்கலம் எனும் கிராமத்தைச் சூளாமணி விகாரம் என்னும் பௌத்தப் பள்ளிக்கு தானமாகக்கொடுத்த செய்தி, லெய்டன் பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது’ (4). ஆகவே இராசராசன் சைவ, வைணவ, சமண, பௌத்த மதங்களுக்குச் சமமான ஆதரவு தந்து எம்மதமும் சம்மதம் என்ற ஒரு முற்போக்குக் கருத்தைக் கொண்டவனாக இருந்துள்ளான் எனத் தெரிகிறது. இராசராசனை முற்போக்குச் சிந்தனையுடையவன் என்றே நீல கண்ட சாத்திரி கூறுகிறார் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாடு ஊர் அமைப்புகள்:

சோழர் ஆட்சிப்பிரிவுகளில் நாடு எனும் பிரிவு தலையானது. இவை சங்ககாலம் முதல் இருந்து வருகின்றன. இந்நாட்டுப் பிரிவுகள் காலம் தோறும் வகைப்படுத்தப்பட்டன. இராசராசன் காலத்திற்கு முன்பு, சோழ மண்டலம் 56 நாடுகளாக இருந்தது. அதன்பின் இராசராசன் காலத்தில் மட்டும் புதிதாக 49 நாடுகள் உருவாக்கப்பட்டன. சோழராட்சியின் முடிவில் கிட்டத்தட்ட 140 நாடுகள் இருந்தன (5). நாட்டை நிருவாகம் செய்தவர் நாட்டார். இவர்கள் ஒரு குழுவாக இருந்து செயல்பட்டனர். ஒரு நாட்டின் கீழ் உள்ள பார்ப்பனரல்லாத ஊர்களின் தலைவர்கள் சேர்ந்த குழுவே நாட்டார் என நீலகண்ட சாத்திரி கருதுகிறார். ஆனால் வேளாண்வகை ஊர்களின் தலைவர்கள் அடங்கிய குழுவே நாட்டார் என்று எ. சுப்பராயலு உறுதிப்படுத்துகிறார் (6). இருவருமே நாட்டார் குழுவில் பார்ப்பனர் இருக்க மாட்டார்கள் எனவும் வேளாண்வகைத் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள் எனவும் உறுதிப்படுத்துகிறார்கள். ஆகவே சோழ நாட்டின் முக்கிய ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றான நாட்டார் குழுவில் பார்ப்பனர்கள் இருக்கமாட்டார்கள் என்பது மிக முக்கியச் செய்தி. ஆனால் தேவையான போது இவர்களோடு பிரமதேயக் கிழவர்களும் கொடையளிக்கப்பட்ட ஊர்களின் தலைவர்களும் இணைந்து செயலாற்றியுள்ளனர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டார் ஆட்சியின் முக்கியத்துவம்:

நாட்டாட்சி, நாட்டு விநியோகம் போன்ற வகையில் வருவாய் வசூலித்தலையும் இவர்கள் செய்துள்ளனர். நாட்டாட்சி நிர்வாகத்தில் பார்ப்பனர்கள் இருக்கவில்லை என்பதற்கு, இந்த வரி வசூலைச் செய்யும் ‘வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும்பாலும் “வேளார்” என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தனர். இத்துறையில் பார்ப்பன அதிகாரிகள் யாரும் செயற்படவில்லை’. ஆனால் இந்த நாட்டார் ஆட்சிக்குழுவின் அதிகாரிகளோடு பட்டர் என்ற பார்ப்பன நடுவிருக்கை அலுவலர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களது பணித் தகவல்கள் தரப்படவில்லை என ‘தமிழ் நாட்டு வரலாறு நூல்’ கூறுகிறது (7). இந்த நாட்டார்கள் கோவில் நிர்வாகத்தோடு இணைந்து கோயிற் சொத்துக்களை நிர்வகிக்கும் நடைமுறைகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆதலால் இவர்கள் நாட்டார் ஆட்சிக்குழுக்களுக்கு முடிவுகள் எடுப்பதில் உதவியாளர்களாக இருந்திருக்கலாம். பேரரசுக்கும் நாட்டாருக்கும் இடையிலான தொடர்புகள் ஓரளவு வகைப்படுத்தப் பட்டிருந்தன. நிலக்கொடை தொடர்பான அனைத்து அரசாணைகளும் நாட்டார்க்கே முதலில் இடப்பட்டன. இவர்களே நில எல்லைப் பிரச்சினைகளை முடிவு செய்தனர். நாட்டார் மற்றும் உடன் கூட்டத்தாரின் முடிவைக் கேட்ட பின்னரே பல்லவராயன் இரண்டாம் இராசாதிராசனைச் சோழ அரியணையில் அமர்த்தினர் (8). அந்தளவு நாட்டாரின் செல்வாக்கு சோழர் ஆட்சியில் மிகமுக்கியப் பங்கு வகித்தது. நாட்டார் அவைகள் பொதுக் கல்விக்கான பொறுப்பையும் ஏற்றுச் செயல்படுத்தின. சங்ககாலம் முதல் தமிழகத்தில் இருந்த பொதுக்கல்வி என்பது நாட்டார் அவையின் மூலம் ஊர்களிலும் நகரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தன. சோழர் காலத்திலும் நாட்டார் அவைகளே ஊர்களிலும், நகரங்களிலும் பொதுக்கல்வியைச் செயல்படுத்தின.

ஊர்கள்:

ஆட்சி முறையின் அடித்தளத்தில் ஊர்கள் இருந்தன. ஊர்கள் மூன்று வகைகளாக இருந்தன. 1. வெள்ளான் வகை ஊர்கள். 2. பிரமதேய ஊர்கள், 3. வணிக நகரங்கள் ஆகியன அவை. இவை தவிர தனித்தியங்கும் ஊர்களும் இருந்தன (9). சோழப் பேரரசில் மிகுதியான எண்ணிக்கையில் காணப்படுவது வேளாண்வகை ஊர்களே. ஆனால் இவை பற்றிக் குறைந்த அளவு கல்வெட்டுச் சான்றுகளே உள்ளன. இவ்வூர்களை நிர்வாகம் செய்யும் அமைப்பு ‘ஊரார்’ எனப்பட்டது. ஊர் நடவடிக்கைகள் அனைத்தும் ஊரார் மேற்பார்வையில் நடைபெற்றன. நில எல்லைகளை அறுதி செய்தலும், வரி தண்டலும், கோயில் சொத்துக்களை மேற்பார்வையிடுவதும் இவர்கள் பணிகள். ஊர்ப்பணிகளைச் செய்ய கணக்கர் போன்ற அலுவலர்களும், பல்வேறு கீழ்மட்டப் பணியாளர்களும் இருந்தனர். இந்த வேளாண்வகை ஊர்களின் தலைவர்களே நாட்டார் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இதில் பிரமதேய ஊர்களின் தலைவர்கள் இடம்பெறவில்லை. பிரமதேய ஊர்கள் என்பன மிகக்குறைவாகவே இருந்தன. ஆனால் இந்த பிரமதேய ஊர் சபைகளின் நிர்வாகம் குறித்து உத்திரமேரூர், திருப்பாற்கடல், சேங்கனூர் போன்ற ஊர்களின் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தலைவர், உறுப்பினர்களுக்கான தகுதிகள் குறித்தும், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் குறித்தும், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பஞ்சவாரவாரியம். பொன்வாரியம், கழனிவாரியம், கணக்கவாரியம், கலிங்குவாரியம், தடிவழிவாரியம், போன்ற பல்வேறு வாரியங்கள் குறித்தும் அவைகளின் பணிகள் குறித்தும் இக்கல்வெட்டுகள் தகவல்கள் தந்துள்ளன. அந்த வாரியங்கள் சிலவற்றில் பார்ப்பனர்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை. சான்றாக பொன்வாரியத்தில் இருந்த 9 உறுப்பினர்களும் வணிகக்குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் கூட பார்ப்பனர் இல்லை (10). பார்ப்பன சபைகளின் வாரியங்களில் கூட பார்ப்பனர்கள் இருக்கவில்லை என்பது இங்கு கவனத்துக்குரியது. வேளாண்வகை ஊர்களிலும் இது போன்ற வாரியங்கள் இருந்தன எனக் கருதலாம்.

நகராட்சிகள்:

வணிகர்கள் பெருமளவில் வாழும் ஊர்கள் நகரம் எனப்பட்டது. அவர்கள் தனி நிர்வாகக் குழுக்களை அமைத்து நிருவாகம் செய்தனர். நகரத்திற்குள் வணிகக் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், கடைவீதிகளை அமைத்தல், வரித்தண்டல் செய்தல் போன்ற பல பணிகளை அவர்கள் நிருவாகம் செய்தனர் (11). சோழர் காலத்தில் இருந்த நகராட்சிகளின் பல்வேறு பணிகளை உரோம் கால ‘கால்’ நகரத்தோடு ஒப்பிடும் நீலகண்ட சாத்திரி, ‘சுருங்கக்கூறின் நகரமும் அதன் ஆதிக்கமும் ஒரு தனி நாட்டின் செல்வாக்கிற்கு ஒத்திருந்தது…….. நகரத்தின் எல்லாச் சட்டங்களும் மத்திய அரசின் சார்பில் நிர்வாகம் செய்த மாநில ஆளுநரிடம் ஒப்புதல் பெற்றன. ஆனால் நாம் உணர வேண்டியவை இரண்டு. ஒன்று நகரில் மத்திய அரசின் அதிகாரி நிரந்தரமாக எப்பொழுதும் நிறுத்தப்படவில்லை, இரண்டாவதாக நகர வாழ்க்கையும் அமைப்பும் தன்னிறைவு பெற்றிருந்தது. தன்னாட்சிப் பொறுப்பேற்ற ஆட்சி மன்றம், நீதிபதிகள், காவல்துறை, கருவூலம், மாவடை மரவடைகளான நகராட்சி சொத்துக்கள், பள்ளிகள், சமயக் குருமார்கள், புரோகிதர்கள், எல்லாம் நகர அமைப்பில் ஒருங்கே அமைந்திருந்தன. இவற்றுள் எவையும் நகருக்கு வெளியே இல்லை. நீதிபதிகள், பேராசிரியர்கள், குருமார்கள், எல்லாருமே நகரவாசிகள். நகரம் நிச்சயமாக சுதந்திர நாடாக இல்லை. ஆனால் அது ஒரு நாடாக இயங்கியது என்பதை மறுக்க முடியாது’ எனக் கூறுகிறார் (12). அந்த அளவு நகரங்கள் சுதந்திரமாக இயங்கின.

சோழர் கால நாட்டார், நகர, ஊர் நிர்வாகம்:

சோழர் ஆட்சிப்பிரிவுகளில் நாடு எனும் பிரிவு தலையானது எனச் சொல்லப் பட்டுள்ளது. நாடுகளின் கீழ் வேளாண் வகை ஊர்களும், பிரமதேய ஊர்களும் நகராட்சிகளும் இருந்துள்ளன. ஊர்களில் பெரும்பாலானவை (80%) வேளாண்வகை ஊர்களாகவே இருந்துள்ளன. பிரமதேய ஊர்கள் மிகச் சிறிய அளவில்தான் (20%) இருந்துள்ளன. இவைபோக நகராட்சிகள் இருந்துள்ளன. இந்த நகராட்சிகள் ஓரளவு தன்னாட்சி கொண்டவைகளாக சுதந்திரமாக இயங்குபவைகளாக இருந்து வந்துள்ளன. இவைகளில் பார்ப்பன ஆதிக்கம் என்பது சிறிதளவும் இருக்கவில்லை. அதுபோன்றே பெரும்பாலானவைகளாக இருந்த வேளாண் வகை ஊர்களும் பார்ப்பனர்களோ, அவர்களது ஆதிக்கமோ இல்லாத ஊர்களாக இருந்துள்ளன என அறிய முடிகிறது. பிரமதேய ஊர்கள் மட்டுமே பார்ப்பன ஆதிக்கம் உள்ள ஊர்களாக இருந்துள்ளன. இவைகளுக்கு மேலாக இருந்த நாடுகளின் நாட்டார் ஆட்சியில் பார்ப்பனப் பிரதிநிதிகள் யாரும் இருக்கவில்லை என நீலகண்ட சாத்திரியும், சுப்பராயலும் உறுதி செய்துள்ளனர். ஆகவே சோழர் ஆட்சியின் மிக முக்கிய நிர்வாகப் பிரிவான நாட்டார் ஆட்சியின் நிர்வாகத்திலும் பார்ப்பனர்கள் இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. இத்தரவுகள் சோழர்கால நாட்டார், நகர, ஊர் நிர்வாகத்தில் பார்ப்பனர்களோ அவர்களது ஆதிக்கமோ இருக்கவில்லை என்பதை உறுதி செய்கின்றன. மிகச்சிறிய அளவில் இருந்த பிரம்மதேய ஊர்களில் மட்டுமே அவர்களது ஆதிக்கம் இருந்துள்ளது.

கல்வியும் பார்ப்பனியச் சிந்தனையும்:

நாட்டாரவை, ஊரவைகளின் மூலம் பொதுக்கல்வி என்பது கிராமங்களில் பொதுமன்றங்களின் மூலமும் திண்ணைப் பள்ளிக்கூடங்களின் மூலமும் செயல்படுத்தப்பட்டன. பரம்பரை பரம்பரையாகக் கற்பிக்கும் தொழில் செய்துவந்த ஆசிரியர்கள் அங்கே கல்வி கற்பித்தனர். அவர்கள் வாத்தி, உபாத்தியாயர் என்று அழைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் ஓதுவிப்பராகவும் பணி புரிந்துள்ளனர் என்பதையும் ஆசிரியர் அளித்த கொடை குறித்த செய்தியும் கல்வெட்டில் உள்ளன. ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட கொடை ‘ஆசாரிய போகம், எனக் கூறப்பட்டது (13). களப்பிரர்களால் ஏற்பட்ட பேரழிவிற்குப்பிறகு காஞ்சிபுரம் கல்வி, அறிவியல் ஆகியவற்றின் மையமாக இருந்தது. கி.பி. 4 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட சமற்கிருதமயமாக்கல், தமிழ், பிராகிருதம், பாலி ஆகிய பண்டைய மொழிகளை ஒழித்து அனைத்தையும் சமற்கிருதமயமாக மாற்றியமைத்தன. ஆகவே தத்துவம், அறிவியல், கலை ஆகிய அனைத்தும் குறித்த மேற்கல்வி என்பது சமற்கிருதத்தில்தான் வழங்கப்பட்டது. தமிழில் இருந்து அனைத்தையும் களவாடிக்கொண்ட சமற்கிருதம் ஒரு அறிவியல் மொழியாக, கலை, இலக்கிய மொழியாக ஆகியிருந்தது. சமற்கிருதத்தில்தான் அறிவியல் நூல்கள் அன்று இருந்தன, ஆகவே மேற்கல்விக்குத் தகுதி பெற்ற மொழி சமற்கிருதம்தான் என்ற பார்ப்பனியக் கருத்து பல்லவர் கால 500 வருட கால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் உருவாகி இருந்தது. ஆகவே காஞ்சிபுரத்தில் சமற்கிருதம் சார்ந்த கல்லூரிகள் பல இயங்கி வந்தன. அவற்றில் மேற்கல்வி என்பது சமற்கிருதமயமான வேதம் சார்ந்த நூல்களைக்கொண்ட தத்துவம், அறிவியல், வானவியல், மருத்துவம், கட்டடக்கலை. சிற்பக்கலை போன்ற பல பிரிவுகள் இருந்தன.

21ஆம் நூற்றாண்டிலும் அறிவியலை ஆங்கிலத்தில்தான் வழங்க முடியும் என்ற பண்டைய பார்ப்பனியச் சிந்தனை போன்ற ஒரு தவறான சிந்தனையின் அடிப்படையில் அனைத்துக் கல்லூரிகளும் இன்றும்கூட ஆங்கில வழிக் கல்வியில் இயங்கி வருவது போலவே அன்று நிலப்பிரப்புத்துவச் சிந்தனை கோலோச்சிய காலத்தில் அனைத்து மேற்கல்வி நிலையங்களும் சமற்கிருதத்தில் இயங்கி வந்தன. இக்கல்லூரிகளுக்கு அரசர்கள் நிறைய நிதிகளை வழங்கினர். இன்று ஆங்கிலவழிக் கல்லூரிகளுக்கு மிக அதிக நிதி ஒதுக்குவது போலத்தான் அன்றும் சமற்கிருதக் கல்லூரிகளுக்கு அதிக நிதி வழங்கப்பட்டது. அரசர்கள் தமிழை வளர்க்க நிதி ஒதுக்கவில்லை, சமற்கிருதத்துக்குத்தான் அதிக நிதி ஒதுக்கினர் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இன்று மட்டும் என்ன நடக்கிறது? இன்றும் தமிழ் மொழிக்கு நிதி வழங்குவதில்லை. ஆங்கிலக் கல்லூரிகளுக்குத்தான் மிக அதிக அளவிலான நிதி வழங்கப்படுகிறது. தமிழுக்கு நிதி ஒதுக்காது ஆங்கிலக் கல்லூரிகளுக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்றுதான் எதிர்கால வரலாறு கூறும். இன்று அரசுப்பள்ளிகளில் கூட ஆங்கில மொழிக்கல்விதான் இருக்கிறது. இன்றும் ஆங்கிலத்தில்தான் அறிவியலை வழங்க முடியும் என்று கருதுகிற பகுத்தறிவற்ற பார்ப்பனியச் சிந்தனையாளர்கள் இருக்கும் பொழுது அன்று சமற்கிருதத்தில்தான் அறிவியலை வழங்க முடியும் என்ற பார்ப்பனியச் சிந்தனை கோலோச்சி இருந்தது என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல.

சோழர்காலத் தமிழும் கலையும்::

6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் பக்திப்பாடல்கள் கோயில்களில் ஓதப்பட்டு வந்துள்ளன. பார்ப்பனியச் செல்வாக்கால் இடையே அவை பல இடங்களில் நிறுத்தப்பட்டதோடு அச்சுவடிகளில் பெரும்பகுதி காணாமல் போயின. இராசராசன் தேவாரத் திருவாசகப் பதிகங்களையும் அதைப்பாடுவதற்கேற்ற இசைப்பண்களையும் மீட்டெடுத்து தமிழின் பக்திப்பாடல்களை கோயில்களில் தமிழிசையோடு ஓதுமாறு செய்தான். வைணவக் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சியும் திருவாய்மொழியும் பாடப்பட்டன. ஓதுவார்களுக்கு ‘திருப்பதியக்காணி’ வழங்கப்பட்டது. அவன் கட்டிய கோயில்களில் தமிழ் முறையிலான வழிபாட்டைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினான். பக்திப் பாடல்கள் என்பன சில விடயங்களில் வேத பார்ப்பனியத்துக்கும், சாதியத்துக்கும் எதிராக இருந்தன என்பதால்தான் அவைகளை ஓதுவது நிறுத்தப்பட்டு சுவடிகளும் மறைத்து வைக்கப்பட்டன. திருமந்திரம் முழுமையாக வேதப் பார்ப்பனியத்துக்கும் சாதியத்துக்கும் எதிரான சிந்தனைகளைக் கொண்ட பாடல்களை உடையவை. இந்த ஓதுவாரும் அவர்களின் பாடலுக்கு ஏற்ற இசைகளைப்பாடிய மோளக்காரர்களும் தான் பண்டைய தமிழிசையைப் பாதுகாக்கக் காரணமானவார்கள். இசையும் நடிப்பும் இணைந்த தமிழ்க் கூத்துகள் கோயில்களில் நிகழ்த்தப்பட்டன. நாட்டியத்தைப் பயிற்றுவிக்கும் நட்டுவனார்களுக்கு நட்டுவக்காணி கொடை வழங்கப்பட்டது. இப்படிப் பலவிதங்களிலும் சோழர்கள் தமிழை வளர்த்து வந்தனர்.

திருப்பதியம் விண்ணப்பிக்கும் மரபு இராசராசன் காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவந்த போதும் நம்பியாண்ட நம்பிகளால் தேவாரத் திருப்பதிகங்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பின்னர் இம்மரபு பெருவழக்காயிற்று.. இராசராசன் காலத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணரது மரபில் வந்த பெண்ணால் திருப்பதிகங்களுக்கு பண் வகுக்கப்பட்ட பின்னர் திருப்பதிகங்களை முறைப்படி விண்ணப்பித்தல் என்பதில் ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டது. இராசராசன் காலத்திற்கு முன்பே தேவாரம் விண்ணப்பிக்கப்பட்டதை பல கோயில் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. ஆனால் இராசராசன் காலத்தில் பெரும்பாலான பெருங்கோவில்களில் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தேவாரம் ஓதுவார்களின் தலைவனாகவோ, தேவாரம் ஓதுவதை மேற்பார்வையிடவோ ‘தேவாரநாயகம்’ என்ற தனி அதிகாரி முதலாம் இராசேந்திரன் காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். தேவாரம் விண்ணப்பிப்பது என்பது ஒரு குழுவாகவே நடந்துள்ளது. சான்றாக தஞ்சை பெரிய கோவிலில் 48 பேர்களும், தாராசுரத்துக் கோவில்களில் 108 பேர்களும் தேவாரம் விண்ணப்பித்துள்ளனர். திருப்பதியம் விண்ணப்பிப்பதற்கு சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அது செம்மையாக நடைபெற வழிவகுக்கப்பட்டது என்பதை தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதற்கு அன்று வழங்கப்பட்ட ஊதியம் அவர்களை மேலும் மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது.

இராசராசன் காலம் முதல் தொடங்கப்பட்ட சோழர்கால மெய்க்கீர்த்திகள் அனைத்தும் புதிய இலக்கிய வகையாக தமிழிசையோடு பாடப்படுபவனாக உருவாக்கப்பட்டன. பெரும்புலவர்கள், சிறந்த இசைப்பாணர்கள், நாடகக் கலைஞர்கள், குயிலுவர்கள் போன்ற இரவலர்களின் வறுமையைப் போக்கியவன் என 2ஆம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தி கூறுகிறது. சோழர் காலத்தில் காளம், வங்கியம், சங்கு, சேகண்டிகை, குடமுழா, கரடிகை, திமிலை, தண்ணுமை, செண்டை, வீணை, உடுக்கை, துடி, தாளம், பாடவியம், மெராவியம், பூகரகம் போன்ற பல இசைக்கருவிகள் கோவில்களில் தமிழிசை பாட பயன்படுத்தப்பட்டன. இத்தரவுகள் சோழர்கள் தமிழிசையை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டனர் என்பதைத் தெரிவிக்கின்றன (14).

தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. 850-1270 வரையான சோழர் காலத்தில் ஏராளமான இலக்கியங்களும் இலக்கண நூல்களும் தோன்றின. தமிழுக்கு அழியாப் புகழ் தேடித்தந்த பெரும்புலவர் பலர் தோன்றினர். சிற்றிலக்கியங்கள் செழித்த வளர்ந்த காலமும் இதுதான். பரணி, உலா, பிள்ளைத்தமழ், அந்தாதி, கோவை முதலியன தரத்தாலும் எண்ணிக்கையாலும் தமிழை வளப்படுத்தின. தமிழ்க் காப்பியங்களில் 15க்கும் மேற்பட்டவை சோழர் காலத்தைச் சேர்ந்தவை. இவற்றில் பல அழிந்து போயின. சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வளையாபதி, பாரதம், சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, இராசராச விசயம், இராசராசேசுவர நாடகம், வீரணுக்கன் விசயம், குலோத்துங்க சரிதை, கல்லாடம், பெரிய புராணம், கந்த புராணம், உத்தர ராமாயணம், நளவெண்பா, யசோதா காவியம், திருவிளையாடற் புராணம் என்பன இக்காலகட்டத்தில் வெளிவந்த ஒரு சில சிறந்த நூல்கள். இவை போக பல சமய நூல்களும் இலக்கண நூல்களும் உரையாசிரியரின் நூல்களும் இக்காலத்தில் வெளிவந்தன. சைவத்திருமுறைகளும் நாலாயிரத் திவ்விய பிரபந்தமும் கலிங்கத்துப்பரணியும், நன்னூலும், யாப்பருங்கலக் காரிகையும் தண்டியலங்காரமும், வீரசோழியமும், பஞ்சமரபும், சேந்தன் திவாகரமும், பிங்கலந்தையும் இக்காலத்தில் வெளிவந்தன.

கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, படிமக்கலை, ஆடற்கலை, இசைக்கலை ஆகியன மிகப்பெரிய அளவில் இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றிருந்தன. தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு எழுதி, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடாக வெளிவந்த சோழப்பெருவேந்தர் காலம் (கி.பி. 900-1300) என்ற நூல், இக்கலைகள் குறித்து 417 முதல் 766 வரை 350 பக்கங்களில் விரிவாக எடுத்துரைத்துள்ளது. இக்காலகட்ட தமிழ் இலக்கியங்கள் குறித்து 343-416 வரையான பக்கங்களில் விரிவாக எடுத்துரைக்கிறது. ஆகவே பிற்காலச் சோழர் காலம் என்பது தமிழ் இலக்கியத்துக்கும் அதன் பண்பாடு, கலை முதலியனவற்றுக்குமான ஒரு மிகச்சிறந்த காலகட்டம் (15).

தெற்காசிய வணிக மொழியாகத் தமிழ்:

பிற்காலச் சோழர்காலத்திற்கு முன்பே பல்லவர் காலத்தில் தமிழ் அறிவியல்மொழி என்ற தகுதியை இழந்து போயிருந்தது. அதனால்தான் கல்லூரிகள் அனைத்தும் சமற்கிருதத்தில் இயங்கி வந்தன. ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் தமிழ் ஒரு இலக்கிய மொழியாக இருந்ததோடு தெற்காசியப் பிராந்தியம் முழுவதற்குமான வணிக மொழியாகவும் தமிழ் இருந்து வந்துள்ளது. அதனை கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும் கடற்படையோடு பாரசீகம் வரை வந்த ஒரு சீனத்தளபதி இலங்கையில் வெட்டிய ஒரு கல்வெட்டில் தமிழ், சீனம் பாரசீகம், ஆகிய மூன்று மொழிகளைப் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்கிறது (16). இக்கல்வெட்டு பாரசீகம் முதல் சீனம் வரையிலான ஆசியாவின் கடல் பகுதி முழுமைக்குமான வணிகப் பிராந்தியத்தை பிரதிநிதிப்படுத்துகிற கல்வெட்டாக இருந்த போதிலும் அதில் தெற்காசியப் பகுதி முழுமைக்குமான மொழியாகத் தமிழ் மொழி ஒன்றை மட்டுமே அது கணக்கில் கொண்டுள்ளது. அதில் சமற்கிருதமோ, பிற மொழிகளோ இடம்பெறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சமற்கிருதம் இந்தியா முழுமையிலும் இருந்த நாடுகளின் ஆட்சி மொழியாக, தத்துவார்த்த அறிவியல் கல்வி மொழியாக இருந்த போதிலும் அது சோழர் காலத்தில் வணிக மொழியாக ஆசிய நாடுகளால் அங்கீகரிக்கப் படவில்லை என்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. ஆகவே அன்று பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் தமிழைத்தான் தங்களது வெளிநாட்டு வணிகத்தின் மொழியாகக் கொண்டிருந்தனர் என்பதை இக்கல்வெட்டு உறுதிசெய்கிறது. ஆனால் அதன்பின் வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தமிழ் வணிக மொழி என்ற தகுதியை இழந்து போனது.

சோழர்காலச் சமூகம்:

சோழர் காலத்தில் பல்வேறு சமூகப்பிரிவுகள் இருந்தன. பார்ப்பனர், வேளாளர், வணிகர், நானாதேசிகள், மணிக்கிராமத்தார், நகரத்தார், வளஞ்சியர், பறையர், புலையர், மன்றாடிகள், கைகோளர், முதலிகள், அகம்படி முதலிகள், முத்தரையர், பள்ளிகள், இரதகாரர்கள், கம்மாளர்கள், தச்சர், கல்தச்சர், தட்டார், கொல்லர், குயவர், வண்ணார், சாலியர், தைப்பன், வைத்தியர், ஆசிரியர், ஓதுவார், வாணியர், நாவிதர், உவச்சர், பாணர், கூத்தர், மள்ளர், கோயிற்பிள்ளைகள் எனப் பல பிரிவுகள் இருந்தனர் (17).

பார்ப்பனர்கள் சமூகத்தின் உயர் நிலையில் இருந்ததாகக் கருதப்பட்ட போதிலும் கோயில் நிலங்களை அபகரித்துக் கொண்டதற்காகவும், கோயில் வழிபாட்டிற்கென ஒதுக்கப்பட்ட தானியங்களைக் களவாடியதற்காகவும், ஆண்டவனின் ஆபரணங்களைத் திருடியதற்காகவும், செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்தாத காரணத்திற்காகவும் பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட்ட செய்தியைப் பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தண்டத்தொகையைச் செலுத்தாது ஓடிவிட்ட பார்ப்பனரின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும், கோயில் நிலங்களை அபகரித்துக்கொண்ட சிவப் பார்ப்பனர்களுக்கு 74 கழஞ்சு பொற்காசுகள் தண்டமாக விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட்டன. தங்க, வெள்ளி ஆபரணங்களையும், வெண்கலக் கலன்களையும் திருடியதையும் இதற்கு முன் இதுபோன்று மூன்றுமுறை திருடியதையும் கண்டறிந்து தண்டனை வழங்கப்பட்டது.

தனது காணி நிலத்துக்குச் செலுத்த வேண்டிய இறையைச் செலுத்தத் தவறியதால் அந்நிலம் மகாசபையால் விற்கப்பட்டது. கோயிலில் இருந்த அம்மன் ஆபரணங்களை திருடிய பார்ப்பனன் ஒருவனுக்கு தண்டனையாக அவனுக்குத் தரப்பட்டிருந்த நிலத்தையும், அதில் உள்ள வீட்டு மனையையும், அவனுடைய அடிமைகளையும் கோயிலுக்கு தேவதானமாக கொடுத்துள்ளான். சிவத்துரோகம், இராசத்துரோகம் போன்ற கொடிய குற்றங்களைச் செய்த இரண்டு சிவப்பார்ப்பனர்களுக்கு கோயில் மகேசுவரரும், ஊரவரும் தண்டனை தந்துள்ளனர். இவைபோன்ற பார்ப்பனர்களின் குற்றங்களைத் தடுக்க கோயில் நிர்வாகத்தில் இருந்த பஞ்சார்யர், தேவகன்மிகள், மகேசுவரர், திருக்காரியம் செய்வோர் போன்றவர்களுக்கு பார்ப்பனர்களின் குற்றங்களுக்கு உரிய தண்டனை அளிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது (18). பொதுவாக வேளாளர்கள் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் அவர்களில் சிலர் வரி கட்ட முடியாமல் குடிபெயர்ந்து போன நிலைகளும், வாழ்க்கையை நடத்த முடியாத நிலையில் தன்னையும் தன் குடும்பத்தையும் கோயிலுக்கு அடிமைகளாக விற்றுக் கொண்ட வேளாளர் குறித்த செய்திகளும் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன (19).

பறையர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களது தறி பறைத்தறி என அழைக்கப்பட்டது. பறையர்கள் சொந்தமாக சாகுபடி செய்ய பறைத்துடமை எனப்படும் இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டன. பஞ்சாயத்து வாரியப் பெருமக்களை திருடர்களின் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றியபோது இறந்துபோன வள்ளுவப் பறையனின் மகன் ஒருவனுக்கு காளிப்பட்டி என்ற கிராமத்தை மானியமாக வழங்கிய செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது. பூவன்பறையன் என்பவன் தனது உடல் உழைப்பின் மூலம் கால்வாய் ஒன்றை வெட்டி தரிசு நிலத்துக்கு நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தந்ததற்காக அவனது சேவையைப் பாராட்டி அரசன் அவனுக்கு ‘அரையன் அனுக்கன்’ என்ற உயர் பட்டத்தை வழங்கினான் என ஒரு கல்வெட்டு கூறுகிறது. அவனால் நஞ்சையாக மாற்றப்பட்ட நிலம் பறையன் வாசக்கால் என அழைக்கப்பட்டது.

பறையர் சமூகத்தில் முதன்மையாக மதிக்கப்பட்டவர்கள் பறைமுதலிகள் என அழைக்கப்பட்டனர். கிராமப் பரிபாலனம் செய்துவந்த சபைகளில் அவர்கள் இடம்பெற்றனர். கிராமத்துச்சபை ஒன்றில் பறை முதலிகளும், சக்கிலி முதலிகளும், கைக்கோலி முதலிகளும், வெள்ளாள முதலிகளும் இடம்பெற்றனர் எனச் சோழர்காலக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பறையரில் பலர் படிப்பறிவும் எழுததறிவும் பெற்றிருந்தனர். புதுச்சேரி பகுதிகளில் கிடைத்த சில கல்வெட்டுகளின் மூல ஆவணங்களில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். பறையருள் சிலர் அரசு ஊழியர்களாகவும், ஐநூறு வீரர் அடங்கிய படைப்பிரிவின் தளபதிகளாகவும், மல்லரது நாவாய்ப் படையின் மீகாமன்களாகவும் இருந்துள்ளனர். ஆகவே பறையர்களும் உயர் நிலையில் இருந்துள்ளனர் என அறிய முடிகிறது (20).

பண்டமாற்று பொருளாதாரத்திலிருந்த பல்லவர் காலச் சமுதாயமானது, இடைக்காலச் சோழர் ஆட்சியில் பணப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டு வேகமாகவும், குறிப்பிடத்தக்க வகையிலும் வளர்ச்சியடைந்தது எனக் கூறுகிறார் எசு. செயசீல இசுடீபன் (21). சோழர்காலச் சமூகத்தின் இந்த வளர்ச்சிக்கான அடிப்படையை உருவாக்கியன் இராசராச சோழன். ஆகவே சோழர்காலச் சமூகமானது பொருளாதார அடிப்படையில் பல்லவர் காலத்தை விட மிகவும் வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. இந்த வளர்ச்சியானது மலைக்குடிகள், பழங்குடிகள், நந்தமான்கள், பள்ளிகள், கைவினைஞர்கள், வணிகர்கள் போன்றவர்களையும் இன்னபிற கீழ் நிலையில் இருந்தவர்களையும் மேல் நிலைக்குக் கொண்டுவந்தது. அதே சோழர் காலச் சமூகத்தில் பார்ப்பனர்கள் அவர்களின் குற்றச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்றே வேளாளர்கள் வரி கட்ட இயலாமல் குடிபெயர்ந்ததோடு, வாழமுடியாமல் அடிமைகளாக விற்றுக் கொண்டுள்ளனர்.

அதேசமயம் பறையர்கள் கல்வியறிவு கொண்டவர்களாகவும் கிராம நிர்வாகத்தில் இடம் பெற்றவர்களாகவும், படைத்தளபதிகளாகவும், கப்பலின் மீகாமன்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். சோழர் காலச்சமூகம் குறித்து எசு. செயசீல இசுடீபன், ‘சோழர் காலத்தில் பொதுவாகவே பிறப்பின் அடிப்படையில் பரம்பரையான சமூகம் மற்றும் சமயச் சடங்குகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. ஆகவே பிறப்பின் மூலம் சாதிகள் இருக்கவில்லை….. சோழர்கள் காலத்திற்குப்பிறகு மக்கள் மனதில் சாதி உறுதியாகவும் பெரிய அளவிலும் குடியேறியது’ எனக் கூறுகிறார் (22). ஆகவே பெருவேந்தர்காலச் சோழர் சமூகத்தில் சாதிய வேறுபாடு இருக்கவில்லை.

சோழர் காலத்தில் அடிமைகள்:

சோழர் காலத்தில் அடிமைகள் இருந்தனர் என்பதைப் பல்வேறு கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. கொடிய பஞ்சம் தோன்றிய போது தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதகாப்பதற்காக பலர் தங்களை கோயில்களுக்கும் மடங்களுக்கும் தனிப்பட்ட செல்வந்தர்களுக்கும் அடிமைகளாக விற்றுக் கொண்டனர். கே.கே. பிள்ளை கோயில்களுக்கும் மடங்களுக்கும் தான் தம்மை விற்றுக் கொண்டனரே அன்றி தனிப்பட்டவர்களின் அடிமையாக இருந்ததற்குச் சான்றுகள் இல்லை எனக் கூறுகிறார். ஆனால் தனிப்பட்டவர்களிடமும் ஆண்களும் பெண்களும் அடிமைகளாக இருந்தனர் என்பதற்கும் அவர்கள் கோயில்களுக்குத் தானமாக அளிக்கப்பட்டனர் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இம்முறை களப்பிரர், பல்லவர் காலத்திலிருந்து நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். நந்திவர்ம மங்கலத்து நடுவனான சந்திரசேகரன், தன்னுடைய அடிமைப் பெண்கள் மூவரை திருக்கற்றளிப் பரமேச்சுரம் கோயிலுக்குத் திருப்பதிகம் பாடுவதற்கும் தொண்டூழியம் செய்வதற்கும் தானமாக அளித்துள்ளான். அவன் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு முன் வாங்கியிருந்தான் என அவ்வூர்க் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் இராசாதிராசன் காலக் கல்வெட்டு ஒன்று பெண் ஒருத்தி தன் அடிமைகளில் நான்கு பெண்களை திருவாலங்காட்டுக் கோயிலுக்குத் தேவரடியார்கள் பணி செய்ய 700 காசுகளுக்கு விற்றாள் என்கிறது. இரண்டாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் ஆகியவர்களின் ஆட்சிக்காலத்தில் கோயில்களுக்கு விலைக்கு வாங்கப்பட்டவர்களும், தானமாகக் கிடைத்தவர்களும் என நூற்றுக்கணக்கான ஆண், பெண் அடிமைகளின் பெயர்கள் கொறுக்கையில் உள்ள மூன்றாம் இராசராசனின் கல்வெட்டு ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளன (23).

சோழப்பெருவேந்தர் காலத்தில் அடிமைமுறை நடைமுறையில் இருந்தது என்பதற்கு நிறையச் சான்றுகள் கிடைத்துள்ளன. அன்று சாதி வேறுபாடுகள் இருக்கவில்லை. வகுப்புகளும் தொழில்குழுக்களும் குடிப்பெயர்களும் மட்டுமே இருந்தன. ஆனால் அடிமை முறை இருந்துள்ளது.

பார்வை:

1. சோழர்கள், கே.ஏ. நீலகண்ட சாத்திரி, தமிழில் கே.வி. இராமன், NCBH, புத்தகம் – 1, பக்: 229

2 புத்தகம் – 1, பக்: 223

3. புத்தகம் – 2, பக்: 842

4. புத்தகம் – 2, பக்: 626

5. தமிழ் நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர் காலம், முதல் தொகுதி, தமிழ் நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, 1998, பக்: 411

6. பக்: 428

7. பக்: 424

8. பக்: 428

9. பக்: 412

10. பக்: 429-433

11. பக்: 434

12. சோழர்கள், கே.ஏ. நீலகண்ட சாத்திரி, தமிழில் கே.வி. இராமன், NCBH, புத்தகம் – 2, பக்: 683

13. தமிழ் நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர் காலம், இரண்டாம் தொகுதி, தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, 1998, பக்: 76

14. பக்: 683-742

15. பக்: 343 – 766

16. ஆழி செந்தில்நாதனின் கட்டுரை, தமிழ் இந்து பத்திரிக்கை, நாள்: 5.7.2016.

17. தமிழ் நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர் காலம், இரண்டாம் தொகுதி, தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, 1998, பக்: 23-85

18. தமிழ் நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர் காலம், இரண்டாம் தொகுதி, தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, 1998, பக்: 18-22

19. பக்: 26

20. பக்: 34-36

21. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மை நிலையும், சாதியும் (கி.பி. 600-1565), எசு.செயசீல இசுடீபன், தமிழில் கி. இளங்கோவன், NCBH, பக்: 144.

22. பக்: 37, 38

23. தமிழ்நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர் காலம், 2ஆம் தொகுதி, தமிழ் நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, 1998, பக்: 119-128

- கணியன் பாலன்