காஞ்சி காமகோடி பீடத்தின் 71 - வது பீடாதிபதியாக டுட்டு சத்ய வெங்கட சூர்யா சுப்ரமணிய கணேச சர்மா திராவிட் நியமனம் என்ற செய்தி 26.04.2025 அன்று வெளியானது. அவர் அவ்வாறே நியமனமும் செய்யப்பட்டிருக்கிறார். இந்துத்துவ பார்ப்பனத் தலைவர்களும், வேத, சாஸ்திரர்களும், பாஜக அரசியல்வாதிகளும், இந்துராஷ்டிரக் கனவு காணுபவர்களும் அங்கே குவிந்தார்கள். திராவிட கட்சிகளின் தலைமைகள் அவ்விடத்திற்குச் செல்லவில்லை. பார்ப்பனிய நலம் காப்பதில் காஞ்சிபுரம் சங்கரமடம் கடந்த ஒரு நூற்றாண்டாக குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது. தமிழர்களின் நலம் காப்பதில் பெரியார் இயக்கம் எப்படி முக்கியமானதோ, அதுபோல பார்ப்பனர்கள் நலம் காப்பதில் காஞ்சி சங்கராச்சாரியார் பீடம் முக்கியமானது.
தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்கள் இதையொட்டி ஒரு கருத்துப் பதிவு வெளியிட்டார். அதில் புது சங்கராச்சாரியார் கணேச சர்மா திராவிட் "திராவிடர் ", ஆந்திர தெலுங்குப் பகுதியைச் சேர்ந்தவர், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் என்று கூறியதுடன், "ஈவேரா, கருணாநிதி சூட்சமம் புரிகிறதா, தமிழர்களே?" என்று ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார். அதாவது திராவிடம் என்று பேசுகிறவர்கள் தெலுங்கர்கள் நலனுக்கானவர்கள் என்று சொல்லுகிறார். காஞ்சி சங்கரமடத்து புதிய பீடாதிபதியின் 'திராவிட்' என்ற பெயரொட்டிற்கும், திராவிட இயக்கம் நடத்திய பெரியார் - கருணாநிதி பேசிய திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?
காஞ்சி சந்தரமடத்தின் புதிய சங்கராச்சாரியார் தெலுங்கர், அவர் பெயரில் 'திராவிட்' என்ற பின்னொட்டு இருக்கிறது. பெரியார் -கருணாநிதி ஆகியோர் திராவிட இயக்கத்தவர்கள், ஆகவே அவர்கள் தெலுங்கருக்கு ஆதரவானவர்கள் என்று பொருள்படும் வகையில் குறிப்பிட்டு, பெரியார் - கருணாநிதி ஆகியோர் தமிழர்களுக்கு அந்நியர்கள் என்று காட்ட முற்படுகிறார். அது மட்டுமல்லாமல், "கர்நாடகத்திலிருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் குடியேறிய கன்னட தெலுங்கர்களின் வாரிசுகள் தமிழ்நாட்டில் முதல் தரக் குடிமக்களாக ஊக்கம் பெற வேண்டும். இதுதான் ஈவேரா - கருணாநிதியின் சூழ்ச்சி" என்கிறார். இதுதான் 'திராவிடத்தை வலியுறுத்தும் தலைவர்களின் இனச் சூழ்ச்சி' என்கிறார். என்ன இன சூழ்ச்சி ? தமிழர் ஒருவர் சங்கர மடத்துக்குத் தலைவராவதைத் தடுத்து, திராவிட் என்ற பின்னொட்டு கொண்ட ஒரு தெலுங்கரை பெரியாரும், கருணாநிதியும்தான் சங்கர மடத்தின் பீடாதிபதி ஆக்கிவிட்டார்களா? காஞ்சி சங்கரமடத்தின் புதிய மடாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் இந்த தலைவர்களுக்கும் என்ன தொடர்பு? பெரியாரையும் திராவிட இயக்கங்களையும் தாக்குவதற்கு எந்த ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை விட்டுவிடக்கூடாது என்ற வெறுப்புணர்வுதான் இதில் வெளிப்படுகிறது. காஞ்சி சங்கரமடத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பெரியார் இயக்கங்கள் ஏதாவது பங்கு வகித்தனவா? புதிய சங்கராச்சாரியாரை வாழ்த்தி வரவேற்றார்களா? பெரியார் இயக்கம் எப்போதுமே சங்கர மடத்தையும் ஏனைய மதவாதிகளையும் எதிர்ப்பதைத்தானே தங்கள் முதல் வேலையாக வைத்திருக்கிறார்கள். தொடர்பற்ற இரண்டு விஷயங்களை தொடர்புபடுத்திப் பேசி பெரியாரை தமிழர்களுக்கு அன்னியராக சித்தரிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம்?
ஐயா மணியரசன் அவர்களின் அரசியல் குழப்பமானதாகவே இருந்து வருகிறது. ஒரு நேரம் தேசிய இன உருவாக்கத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் காட்டுகிறார். இங்கு வாழும். 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த தெலுங்கு, கன்னட மக்களை தமிழ்த் தேசியஇன மக்களாக ஏற்பதாகவும் கூறுகிறார். பிறிதொரு முறை அவர்கள் அந்நியர்கள் என்றும் பேசுகிறார். ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் இருக்கும் தெலுங்கு கன்னட மக்களுக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கு, கன்னட மக்களாக அடையாளப்படுத்தப் படுகிறவர்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
ஆந்திர கர்நாடக மாநிலங்களில் உள்ள தெலுங்கு கன்னடர்கள் தங்கள் தாய் மொழியில் எழுத முடியும், பேச முடியும். அவர்களுடைய வாழ்வியல் மொழியை தெலுங்கும் கன்னடமும் தான். ஆனால் இங்குள்ள தெலுங்கு கன்னட மொழியினராக அடையாளப்படுத்தப்படுகிற மக்கள் வீட்டில் சிறிதளவு தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசுவார்கள். ஆனால் அதில் எழுதவோ படிக்கவோ முடியாது, தெலுங்கு - கன்னட மொழிகளை ஓரளவு வீட்டில் மட்டும் பேசுகிறவர்களின் எண்ணிக்கைகூட இப்போது குறைந்து விட்டது. அவற்றை எழுதும் அளவிற்கு மொழி அறிவு இந்த தலைமுறைக்கு இல்லை, சொந்த மொழிகளை இழந்து தமிழையே வாழ்வியல் மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் தமிழ்த் தேசியஇன உருவாக்கத்தின் நிகழ்வுப் போக்கு. சொந்த மொழியை இழந்து வரும் மக்களை ( கன்னட தெலுங்கர்களை) திரும்பத் திரும்ப வசைபாடி, அவர்களை உளவியல் ரீதியாகவே தனி பிரித்து வைத்து, அவர்களை அந்நியப்படுத்திவிடக்கூடிய வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெயருக்கு பின்னால் சாதி ஒட்டுகள் இருக்கும் வரை, தெலுங்கு -கன்னட மக்கள், தங்கள் சொந்த மொழியையே முற்றிலுமாக இழந்தாலும்கூட, சாதி அடையாளங்கள் காரணமாக அந்நியர்களாகவேதான் அடையாளப்படுத்தப்படுவார்கள்.
தமிழ்த் தேசியஇன உருவாக்கத்திற்கு சாதியொழிப்பு அவசியமானது. தமிழ் தேச விடுதலைப் போருக்கு தமிழர் ஓர்மையை வென்றெடுப்பது உடனடித் தேவை. இந்நிலையில் சாதிகளின் தொகுப்பே தமிழ்த் தேசிய இனம் என்று பேசுவதும், தமிழ்த் தேசிய இனமாக ஒருங்கிணைய வேண்டிய, தமிழையே வாழ்வியல் மொழியாக ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் பிற மொழி மக்களை அந்நியர்களாகக் கருதி வேற்றுமையை வளர்த்தெடுப்பதும் தமிழ்த் தேசியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும்.
பெரியார் 'திராவிடர்' என்ற பெயரை இன அடையாளமாக ஏற்கக் கூறியது ஏன்?
பெரியார் "தன்மானம் உள்ளவர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் " என்று கூறினார் என்று ஐயா மணியரசன் குறை கூறுகிறார். அதில் என்ன தவறு? சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை களத்திற்கு வருமுன் இங்கு அனைத்து சாதி மக்களுக்கும் கிடைத்த மதிப்பு, மரியாதை என்ன என்பது எல்லோரும் அறிந்ததுதானே. பார்ப்பனியத்தை எதிர்த்தும், ஆரிய பார்ப்பனர்களை எதிர்த்தும், சாதிய இழிவுகளை, ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் பெரும் போராட்டத்தை தொடங்கிய காலத்தில் நீதிக் கட்சியினர் மற்றும் பெரியார் ஆகியோர் "திராவிடர் " என்ற அடையாளத்தை முன்னிறுத்தினர். "நீ ஆரியர், நாங்கள் திராவிடர்கள். நாம் வெவ்வேறு இனம்; எங்கள் மீது நீ மேலாளுகை செலுத்த முடியாது " என்பதுதான் அவர்கள் முன்வைத்த செய்தி. ஆரிய - பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்ப்பதன் அடையாளமாகவும், மனித சுயமரியாதையை நிலை நிறுத்துவதற்கான உத்தியாகவும், தங்களை "திராவிடர் " என்று அடையாளப்படுத்திக் கொள்ளும்படி பெரியார் கூறினார். திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளக் கூறியது பெரியாரின் தவறு என்பது குறை பார்வை. திராவிடர் என்ற அடையாளத்தையும், திராவிடம் என்ற கருத்தியலையும் உயர்த்திப்பிடித்த திராவிட இயக்கம் பார்ப்பனியத்தின் பல்லைப் பிடுங்கியது. பார்ப்பனர்கள் மட்டுமே அதுவரை அனுபவித்து வந்த வேலை - கல்வி வாய்ப்புகளைப் பிடுங்கி அனைத்து சமூகங்களுக்கும் பங்கு வைத்தது. பார்ப்பன ஏகபோகத்தை ஒழித்துக் கட்டியது.
திராவிடர் என்ற அடையாளமே தவறு என்று கருதுவதும், திராவிடர் என்றாலே தெலுங்கர்கள் என்று கருதுவதும், அடிப்படையிலேயே தவறானதும் கோளாறானதும் ஆகும். திராவிடம் என்பது தமிழ்மொழியைக் குறிக்கும் இன்னொரு சொல்லாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கிறது. திராவிடம் என்பது தெலுங்கை குறிக்கும் சொல்லாக ஒருபோதும் இருந்ததில்லை. திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களைக் குறிக்கும் மாற்றுச் சொல்லாக ஒரு காலத்திலும் இருந்ததில்லை. (தென்னாட்டில் வெவ்வேறு மொழிகள் விளங்கும் நிலப்பரப்பில் பரவிய ஆரியப் பார்ப்பனரைக் குறிக்கும் சொல்லாக திராவிடர் என்ற சொல் வடநாட்டு சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. )
ஆதிதிராவிடர் மற்றும் திராவிடர் என்ற அடையாளங்கள்:
"ஆரியர் அல்லாத இனத்தவர் " என்ற பொருளிலேயே திராவிடர் என்ற சொல் அரசியல் களத்துக்கு வந்தது. அயோத்திதாச பண்டிதர் 1891 - இல் திராவிட மகாஜன சபையைத் தொடங்கினார். 1885-ல் ஒரு திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. 19 - ஆம் நூற்றாண்டின் இறுதியில்,
ஆதிதிராவிடர் என்ற பெயரை ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாகவே, ஆரிய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றை மையப்படுத்தி, சென்னை மாகாணத்தில் தமிழர் - மலையாளிகள் - தெலுங்கர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, 'பார்ப்பனர் அல்லாதார்' என்ற அடையாளத்தோடு, திராவிட இயக்கத்திற்கு ஒரு தொடக்கத்தைக் கொடுத்தனர். அவர்கள் திராவிட இயக்கம் கட்டும் காலத்திற்கு முன்பே, திராவிடர் என்போர் "ஆரியர் அல்லாதவர்", "பார்ப்பனர் அல்லாதவர்", சமஸ்கிருதத்திலிருந்து பிறவாத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து நிலை பெற்று விட்டிருந்தது.
1856- இல், இராபர்ட் கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கண ஆய்வு வெளியான பிறகு, மொழியியலாளர்களாலும், இனவியலாளர்களாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், சமூக- அரசியல் ஆளுமைகளாலும், திராவிடர் என்போர் மண்ணின் மைந்தர்கள் என்றும், ஆரிய - பார்ப்பனர் அல்லாதவர்கள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. திராவிட இயக்கம் என்பது அதுவரை நிலவிய பார்ப்பன ஏகபோகத்தை எதிர்த்தும், சமூகக் கொடுமைகள், மேல் சாதி தனி உரிமைகள் ஆகியவற்றை எதிர்த்தும் எழுந்தது. 1920 முதல் சமூக நீதியை நிலைநிறுத்த சமராடியது. அதன் பலன்களைத்தான் இன்று தென்னிந்திய மாநில மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள், அனுபவிக்கிறார்கள். இன்றும் பார்ப்பனியத்தை தலையில் சுமக்கும் வட இந்திய மாநிலங்களை விட, திராவிட கருத்தியலை ஏற்ற தமிழகம் முன்னணியில்தான் இருக்கிறது.
திராவிடம் என்ற கருத்தியல் பார்ப்பனியத்துக்கு எதிரானது என்ற கருத்து 19 -ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பிறகு மெல்ல வேரூன்றியது. "திராவிட நல் திருநாடு" பற்றிப் பாடிய மனோன்மணியம் சுந்தரனார் ஆரியத்தை சாடியிருக்கிறார். இன்று திராவிடம் என்ற கருத்தியல் பார்ப்பனியத்துக்கு எதிரானது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். 2015 நவம்பர் மாதம், இந்திய நாடாளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவருமாகிய மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் "நாங்கள் திராவிடர்கள்; நீங்கள் ஆரியர்கள்; நீங்கள் தான் வெளியில் இருந்து வந்தவர்கள் " என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நோக்கி முழங்கினார். 19 ,ஆம் நூற்றாண்டின் இறுதியில், அயோத்திதாச பண்டிதரும் தன்னை திராவிடராக உணர்ந்தார். இப்போது 21-ஆம் நூற்றாண்டில் மல்லிகார்ஜுன கார்கேயும் தம்மை திராவிடராக உணர்கிறார். இவர்கள் சமூக விடுதலையைப் போற்றுகிற தலைவர்கள். இவர்கள் அனைவருமே தங்களை திராவிடராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். 1885 ஆம் ஆண்டு ரெவெரெண்ட் ஜான் ரெத்தினம் மற்றும் அயோத்திதாச பண்டிதர் ஆகியோர் இணைந்து திராவிடர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1922 - இல் எம்.சி ராஜா சென்னை சட்டமன்றத்தில், இனி ஒடுக்கப்பட்ட சாதி மக்களை ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றச் செய்தார்.
திராவிட அடையாளத்தாலும், அரசியலாலும் தமிழ் மக்கள் சமூக நீதியைப் பெற்றார்கள். தமிழ் மக்கள் தலையின் மீது திராவிடத்தை சுமத்திவிட்டதாக ஐயா மணியரசன் குறிப்பிடுகிறார். அதுவரை தூக்கிச் சுமந்த பார்ப்பனியத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, தமிழ் மக்கள் மீது சுயமரியாதை என்பதையும், சமூக நீதி என்பதையும் தூக்கிச் சுமக்க வைத்த வேலையைத்தான் திராவிட இயக்கம் செய்தது.
தமிழ் இலக்கியங்கள் தமிழ் மக்களை "திராவிடர் " என்று குறிப்பிடவில்லை என்பது உண்மை. அப்படி குறிப்பிட வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் 19- ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பார்ப்பனிய எதிர்ப்புப் போரில் பார்ப்பனர் -அல்லாதார் தங்களை திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். தென்னிந்திய மொழிகளை ஒரு குடும்பம் என்று ஆய்வாளர்கள் அறிவித்த போதும், அம் மொழிகளை பேசுகிற மக்கள் ஒரு பண்பாட்டு இனத்தவர் என்று உணர்ந்த போதும் இவர்களை அடையாளப்படுத்த ஒரு சொல் தேவைப்பட்டது தேவையை திராவிடர் என்ற சொல் நிறைவு செய்தது.
தென்னாட்டு மக்களை சமஸ்கிருத இலக்கியங்கள் தமிழர்கள் என்று குறிப்பிடவில்லை. திராவிடர்கள் என்று சமஸ்கிருத இலக்கியங்கள் குறிப்பிடுவது தமிழர்கள் உள்ளிட்டு எந்த பார்ப்பனர்கள் அல்லாதவரையும் அல்ல. ஒட்டுமொத்த தென்னாட்டு மக்களையா, அல்லது தென்னாடு வந்தேறிய ஆரியப் பார்ப்பனப் பிரிவினரையா என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன. தென்னக மக்களை அல்லது தமிழ் மக்களை திராவிடர் என்ற சொல் குறிப்பிடுவதாக மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் குறிப்பிடுகிறார். 1856-இல் வெளியான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில், இராபர்ட் கால்டுவெல் திராவிடர் என்ற சொல் ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களையும் குறிப்பதாக தம் கருத்தைப் பதிவு செய்கிறார். தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களை அல்லது தமிழர்களை அசுரர் என்றும் பைசாசங்கள் என்றும்தான் வட இந்திய இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இங்குள்ள மக்களை குறிப்பிட்ட மன்னர்களின் குடிப் பெயராலோ, நிலப் பகுதியின் பெயராலோ, அல்லது தாம் வாழும் இடம், நகரம் அல்லது ஊர் பெயராலோ, அல்லது சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, அல்லது பல்வேறு சாதியினர்களாக, ஊர்காரர்களாக, சேரியினராகவே தமிழ் மக்கள் குறிக்கப்பட்டார்கள்.
திராவிடர்கள் என்று சமஸ்கிருத இலக்கியங்கள் பேசும் தென்னகப் பார்ப்பனர்கள்
சமஸ்கிருத இலக்கியங்கள் தென்னாட்டில் குடியேறிய பார்ப்பனர்களை திராவிடர்கள் என்று குறித்திருக்கின்றன. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரத்தின் வரலாற்றைப் பேசும் ராஜதரங்கிணி என்ற நூல் பஞ்ச கௌடர், பஞ்ச திராவிடர் பற்றி குறிப்பிடுகிறது.
"விந்திய மலைக்குத் தெற்கே கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர் என்னும் ஐந்து திராவிடர்களும் (பஞ்ச திராவிடம்).
விந்திய மலைக்கு வடக்கில் ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து கௌடர்களும் (பஞ்ச கௌடம்) வசித்து வந்தனர்" என்று குறிப்பிடுகிறது.
தமிழ், தமிழம் ஆகிய தமிழ் சொற்களின் சமஸ்கிருத வடிவமே திராவிடம் என்ற சொல் . தென்னிந்திய நிலப்பரப்பைக் குறிக்க திராவிடம் என்ற சொல் வடவர்களால் பயன்படுத்தப்பட்டது. தமிழ் மொழியைத் திராவிடம் என்று ஆரியர்களும் பிற்காலத்தில் தமிழ் மேதாவிகளும் கூட அழைத்தார்கள். திராவிடம் என்ற
தென்னிந்திய நிலப்பகுதிக்கு வந்தேறிய ஆரியர்களை, வட இந்தியாவில் இருந்த ஆரியக் குடியினர் “திராவிடர்” என (தென்புலம் குடியேறியோர் என்ற பொருளில்) சமஸ்கிருத இலக்கியங்களில் குறித்தனர்.
பழைய சொல்
புதிய பொருள்
வரலாற்றின் புதிய போக்கு
அதே திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தி, தென்னிந்திய மக்களை ஒட்டுமொத்தமாக திராவிடர்கள் என்று அழைக்கும் போக்கு 19 -ஆம் நூற்றாண்டில் எழுந்தது.
திராவிடர் என்ற பழைய சொல்லுக்கு, புதிய பொருளை வழங்கியவர் பிஷப் இராபர்ட் கால்டுவெல். 1856-ஆம் ஆண்டு இராபர்ட் கால்டுவெல்லின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” தென்னிந்திய மொழிகளை ஒரு குடும்பம் என்று அடையாளப்படுத்தி, திராவிட மொழிகள் என்ற பெயரை வழங்கியது; திராவிட மொழிக் குடும்பத்து மொழிகளைப் பேசிய தென்னிந்திய மக்களுக்கு “திராவிடர்” என்ற இனப் பெயரைச் சூட்டியது.
நம் முன் உள்ள கேள்வி!
ஆரிய பார்ப்பனர் சூட்டிக்கொண்ட திராவிட் என்ற சாதி பின்னொட்டுக்கும், பார்ப்பனர் -அல்லாதார் முன்னிறுத்திய திராவிடர் என்ற குறியீட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இன்றைய தென்னிந்திய மொழி வழி மாநிலப் பகுதிகளில் குடியேறியதால் பஞ்ச திராவிடர் என்று பெயர் பெற்றார்களா? அல்லது வேறு காரணங்கள் இருந்தனவா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். வேறு காரணம் இருந்தது என்பது தான் விடை.
ஹேமாத்ரி - யின் சதுர் வர்க சிந்தாமணி (13ம் நூற்றாண்டு) பஞ்ச திராவிடராக, திராவிட (தமிழகம் கேரளம்) ,தைலங்க , கர்நாடக, மத்திய தேச (மகாராஷ்டிரா) பிராமணர்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் மகாராஷ்டிரப் பகுதி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஒன்றைப் பேசும் பகுதி அல்ல. ஆனால் அது ஆரிய இலக்கியவாதிகளால் பஞ்ச திராவிடப் பகுதிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டது. அது ஏன்?
மராட்டியர் காலத்திய நிர்வாக ஆவணங்கள் 'கைஃபியத்துகள்' எனப்படும். அவை பஞ்ச திராவிடர் பற்றி குறிப்பிடுகின்றன. ஆந்திர பூர்வ தேசாஸ்தா, திராவிட தேசாஸ்தா, கர்நாடக பிராமணா, தேசாஸ்தா (மகாராஷ்டிரா) என்று நான்கு பிரிவுகளைக் குறிப்பிடுகின்றன. இதில் ஐந்து பிரிவினர் இல்லை. இதில் கூர்ஜரம் எனப்படும் குஜராத் விலக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கௌட பிராமணா பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டு விலக்கப்பட்டுள்ளது.
கெளட திராவிட பிராமணர்கள்:
எதன் அடிப்படையில் இவ்வாறு கௌட பிரமணர், திராவிட பிராமணர் என்று பிரிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வட இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் கௌட பிராமணர்கள்; தென்னிந்தியப் பகுதிக்கு வந்தவர்கள் எல்லாம் திராவிட பிராமணர்கள் என்று கருதுவது தவறு. ஏனென்றால் மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற வட இந்தியப் பகுதிகளும் கூட பஞ்ச திராவிடப் பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வெவ்வேறு சடங்கு முறைகளும் ஆச்சாரங்களும் பின்பற்றப்பட்டது.தான் காரணம்.
திராவிட சம்பிரதாயத்தைக் கடைபிடித்த பார்ப்பனர்கள்:
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் பல்லவர் ஆட்சி நிறுவப்பட்டவுடன்(கி.பி.400) பெருவாரியாக வட இந்திய ஆரியக் குடியினர் தென்னிந்தியாவுக்குள் புகுந்து பல்லவத் தலைநகரான காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பரவினர். இவ்வாறு தென்னிந்தியாவுக்கு வந்தேறிய ஆரியக் குடிகளை வட ஆரியர் தம் இலக்கியங்களில் குறிப்பிட நேரும்போது “திராவிடர்” என்று அடையாளப்படுத்தினர். தென்னிந்தியா திராவிடம் என்று வடமொழியாளர்களால் குறிக்கப்பட்டது. பார்ப்பனியமும், சமஸ் கிருதமும், வேதக் கல்வியும் செழித்த பல்லவ திராவிட தேசத்தில், புதிய வகை பார்ப்பனிய சடங்கு முறை வளர்த்தெடுக்கப்பட்டது.
அவர்கள் கைக்கொண்ட புதியவகை கடுஞ்சடங்கு முறைக்கு “திராவிட சம்பிரதாயம்” என்று பெயர். இச்சம்பிரதாயத்தைக் கைக்கொண்ட பார்ப்பனர்கள் “திராவிடர்” என அறியப்பட்டனர்.
திராவிடம் (தமிழகம் -கேரளம் உள்ளிட்டு), ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கூர்ஜரம்(குஜராத்) ஆகிய ஐந்து பகுதிகளில் திராவிட சம்பிரதாயத்தைக் கைக் கொண்ட பிராமணர்கள் பரவினர். இந்த கடும் ஆச்சார, சடங்கு முறையைக் கைக்கொண்டவர்கள் திராவிடர் என்றும் இதில் விற்பன்னர்கள் திராவிட் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். ஐந்து பிரதேசங்களில் பரவி வாழ்ந்த இவர்கள் “பஞ்ச திராவிடர்” என சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பழைய சொல்லுக்கு புதிய பொருள் உருவானது குறித்து என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா:
திராவிடர்கள் என்ற சொல் நீண்டகாலமாக ஆரியர்களின் தென்கிளையைக் குறிக்கும் சொல்லாக விளங்கி வந்த நிலையில்தான், கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அச் சொல்லை தென்னிந்திய மொழிகளைப் பேசும் மக்களுக்குச் சூட்டியது.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தனது 15 - வது பதிப்பில்(1947) இந்த புதிய வரலாற்றுப் போக்கைப் பதிவு செய்கிறது:
“திராவிடர்” என்ற பெயர் இந்திய வழக்கில் பார்ப்பனர்களின் தென்னகப் பிரிவை மட்டுமே குறிக்கும் பெயர் ஆகும். ஆனால், “திராவிடர்” என்ற சொல், “துரதிர்ஷ்ட வசமாக” (Unfortunately) இந்தியாவில் விந்திய மலைகளுக்குத் தெற்கேயும், இலங்கையின் வடக்குப் பாதிப் பகுதியிலும் வாழும் மண்ணின் மக்களுக்கு (Indigenous peoples) பயன்படுத்தப்படுகிறது. அது (திரவிடம் என்ற சொல்) இப்பகுதிகளின் மொழிகளைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்”
திராவிட என்ற சொல் எப்படி வந்தேறிய பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என்ற நிலையிலிருந்து மாற்றம் பெற்று, மண்ணின் மைந்தர்களான தென்னிந்திய மக்களைக் குறிக்கும் சொல்லாக மாறியது என்பதை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பதிவு செய்திருக்கிறது. மேலும் “திரவிடியன்” என்ற சொல் ஓர் இனத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவதாகக் கூறி, தென்னிந்திய மக்களின் உடற்கூறு, பண்பாடு ஆகியவற்றை விவரிக்கிறது.
இவ்வாறு திராவிடர் என்ற பழைய சொல் புதிய பொருளைப் பெற்றது. இப்புதிய பயன்பாட்டின்படி திராவிடர் என்ற சொல் மண்ணின் மக்களைக் குறிக்கிறது என்பதை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பதிவு செய்திருக்கிறது.
போராட்டக் களத்திற்கு வந்த திராவிடர் என்ற சொல்
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், . “மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக்குச் சூத்திரப்பட்டம் கட்டி, ஆரியப் பார்ப்பனர்கள் அவர்களை இழிநிலைக்குத் தள்ளினர்” என்ற கால்டுவெல்லின் கருத்து சமூக உணர்வாளர்களைப் பற்றிக்கொண்டது. அயோத்திதாசப் பண்டிதர் “திராவிடர்” என்ற சொல்லை இன உரிமை, சமூக விடுதலை பேசப் பயன்படுத்தினர்.
1901-அம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, தென்னிந்திய மக்களை“திராவிடர்” என்று இனப்பெயராகப் பதிவு செய்தார்
அன்றைய கணக்கெடுப்பு ஆணையாளரான சர் ஹெர்பர்ட் ரிஸ்லி. இதன் பிறகு “திராவிடர்” என்ற சொல் அதிக அளவில் பயன்படத் தொடங்கியது.
மொழியியல், மாந்தவியல், தொல்லியல் ஆகிய துறைகள் 19- ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றன. இன்று பல மொழியினங்கள் உள்ளன. பல மொழி இனப் பிரதேசங்களாகப் பிரிவதற்கு முன் இருந்த தென்னிந்தியா பற்றிய ஆய்வுகளுக்கு ஒரு “கூட்டுச் சொல்” ஆய்வாளர்களுக்குத் தேவைப்பட்டது. கால்டுவெல் வழங்கிய “திராவிடர்” என்ற சொல் ஆய்வாளர்களுக்கு வசதியாக(convenience) இருந்தது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என ஆய்வுகள் தொடங்கின. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை அச்சொல் அவர்கள் தேவையை நிறைவு செய்தது.
19 ஆம் நூற்றாண்டிலிருந்து திராவிடர் என்ற சொல் ஒரு சிறுபான்மை பிராமணப் பிரிவினரைக் குறிக்காமல், தென்னிந்திய மொழிக் குடும்பத்தையும், அம்மொழிகளைப் பேசும் மொழிஇனத்தவர்களையும் குறிக்கும் பொதுச் சொல்லாகக் கையாளப்பட்டது.
தொடரும் திராவிட் சாதிய பின்னொட்டுகள்
இம்மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும், வேத சாஸ்திர சடங்குகளில் விற்பன்னர்களாக இருந்த பார்ப்பனர்களில் ஒரு சிறு பிரிவினர் மட்டும் தொடர்ந்து திராவிடர் அல்லது திராவிட் என்ற சொல்லை பின்னோட்டாகப் பயன்படுத்தி வந்தனர்; இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள்தான் மட்டைப்பந்து வீச்சாளர் ராகுல் திராவிட், வேத சாஸ்திரி மணி திராவிட், காஞ்சி மடத்தின் புதிய பீடாதிபதி கணேச சர்மா திராவிட் போன்றோர். இவர்கள் தனியே 'திராவிட மேட்ரிமனி' வேறு வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை - பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து தங்கள் பிரிவுக்குள் திருமணம் செய்கிறார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி "திராவிட்" என்ற சொல் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்:
"ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுதும் கௌட தேசம்; அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்று இருந்தது. கௌட தேசத்தில் வசித்த கௌடர்களை மேலும் பிரதேச ரீதியில் ஐந்தாகப் பிரித்தார்கள். அப்படியே திராவிடத்தில் வசித்தவர்களையும் ஐந்தாகப் பிரித்திருக்கிறது. இவர்களைப் பஞ்ச கௌடர், பஞ்ச த்ராவிடர் என்பார்கள்.
"ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே குறிப்பிடுவார்கள். மஹாராஷ்டிரத்தில் இப்போது பலருக்கு "டிலாங்" என்று (இயற்) பெயருக்குப் பின்னால் வருகிறதைப் பார்க்கிறோம். இவர்களுடைய முன்னோர்கள் தெலுங்கு தேசத்திலிருந்து மஹாராஷ்டிராவிற்குப் போய் அங்கேயே ‘ஸெட்டில்’ ஆகிவிட்டார்கள். ‘தெலுங்கு’ என்பதன் திரிபுதான் ‘டிலாங்’. இதேமாதிரி காசி முதலான அநேக உத்தரதேச ஸ்தலங்களில் இருக்கிற சில பிராம்மணர்களுக்கு த்ரவிட் என்று வம்சப் பெயர் இருக்கிறது. ஆதிகாலத்தில் தமிழ் தேசத்திலிருந்து அங்கே போய் குடியேறினவர்களின் வம்சத்தில் வந்தவர்களே இந்த ‘த்ரவிட்’கள். இப்படி ‘திராவிடர்’ என்று பெயர் கொண்ட வடக்கத்தியார் எல்லாரும் பிராம்மணர்களே என்பதைக் கவனிக்க வேண்டும். ரேஸ் தியரிப்படி பிராம்மணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் வாஸ்தவத்திலோ இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் ‘த்ரவிட்’ அடைமொழி இருக்கிறது. இதிலிருந்தே ‘திராவிட’ என்பது பிரதேசத்தைக் குறிப்பதேயன்றி இனத்தைக் குறிக்கவேயில்லை என்று தெரிகிறதல்லவா?"
என்று குறிப்பிடுகிறார்.
தெலுங்கு பகுதியிலிருந்து வந்தவர்கள் டிலாங் என்று அறியப்பட்டார்கள் என்பதும், தமிழ் பகுதியில் இருந்து வந்த பிராமணர்கள் திராவிடர்கள் என்று அறியப்பட்டார்கள் என்பதும் காஞ்சி சங்கராச்சாரியார் குறிப்பிடும் கூடுதல் செய்தி. மேலும், திராவிடர் என்பது இடத்தின் பெயரால் வந்ததேயொழிய, திராவிடர் என்ற இனம் (Race) கிடையாது என்பதும் காஞ்சி சங்கராச்சாரியாரின் பார்வை.
தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து சென்ற பார்ப்பனர்களுக்கு திராவிட் என்ற சொல் பின்னொட்டாக விளங்குகிறது என்று காஞ்சி சங்கராச்சாரியார் தெளிவு படுத்துகிறார்.
திராவிடர் என்ற அடையாள ஏற்பிற்கு பெரியார் கூறிய காரணம் :
1945-இல் பெரியார் திராவிடர் என்ற இன அடையாளத்தை நாம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி இவ்வாறு பேசினார்:
"ஆரியத்தை உதறித் தள்ளிடுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதாகும். இன்றைய இழிவிலிருந்து முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையில் இருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும்."
பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தைத் தகர்த்து, அனைத்து சாதி மக்களுக்கும் உரிமைகளைப் பெற்றுத் தர, திராவிடம் என்ற கருத்தியலையே கருவியாகக் கொண்டு பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் களமாடினார்கள் என்ற ஒரு வரலாற்றுப் போக்கை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பொருளை (meaning) கடந்த காலத்தில் கொண்டிருந்த ஒரு சொல், வேறொரு பொருளில் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதைத்தான் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா 1947 -இல் சுட்டிக்காட்டியது.
பெரியாரின் கருத்தியல் தன்மானத்தை மீட்டது!
பெரியாரை தமிழ் சமூகத்துக்கு எதிரானவர் என்றும், தெலுங்க - கன்னடர்களின் முதன்மை நிலைக்குப் பாடுபட்டவர் என்றும் பேசுவது பொய்யானது மற்றும் அது ஓர் அவதூறு என்பதை மக்கள் அறிவார்கள். பெரியாரின் பணிகளை பட்டியலிட வேண்டிய தேவையில்லை. 1920 -களில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்தது ? இப்போது என்னவாக இருக்கிறது? என்று ஒப்பிட்டுப் பார்த்தால், பெரியாருடைய கருத்தியல் மற்றும் திராவிட இயக்கம் சாதித்தது என்ன என்பது புரியும். சாலையில் நடக்கவோ, பொதுக் கிணறு - குளங்களைப் பயன்படுத்தவோ உரிமை அற்றுக் கிடந்த அடித்தட்டு மக்களுக்கு சாலைகளையும், பொதுக் குளங்களையும், பொதுப் போக்குவரத்தையும், பள்ளிகளையும் பொதுப் பயன்பாட்டுக்குத் திறந்து விட்டது நீதிக் கட்சி.
1926 முதல் 1929 வரை பல்வேறு கோயில் நுழைவுகளை சுயமரியாதைக்காரர்கள் அதிரடியாக முன்னெடுத்தனர். அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழையலாம் என்பதை காஞ்சி சங்கராச்சாரியார் அன்று ஏற்க மறுத்தார். கோயிலுக்குள் இவர்களை விட்டால் எல்லாம் கெட்டுப் போகும் என்பது அவர் பார்வை. ஆனால் இன்று கோயில் கதவுகள் ஒடுக்கப்பட்ட அனைத்து சாதி மக்களுக்கும் திறக்கப்பட்டுள்ளன. கருவறைகளும், சன்னதிகளும் ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சாதி வெறியர்களின் வன்முறைகள் இன்றளவும் தொடர்கின்றன. பெரியார் இன்றளவும் தேவைப்படுகிறார்.
1940 - இல் தமிழ் எழுதப் படிக்க தெரிந்தோர் 7%. இது வள்ளுவர் பிறந்த பூமி தான், ஔவையார் வாழ்ந்த பூமி தான், வள்ளலார் சன்மார்க்கம் பேசிய பூமிதான். ஆனால் இங்கு சமூக நிலை என்னவாக இருந்தது ? கல்வி, அறிவு நிலை என்னவாக இருந்தது? இன்று மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழக ஆண்களில் 86.81 விழுக்காட்டினரும், பெண்களில் 73.86 விழுக்காட்டினரும் படிப்பறிவு பெற்றுள்ளனர்.
சமூகநீதி, சாதி வேறுபாடுகளைக் களைதல், தமிழ்மொழி, பண்பாட்டு மேம்பாடு, ஏழை எளியவர் நலம், ஒடுக்கப்பட்டோர் நலம், கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு போன்ற தளங்களில் சாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய ஒன்றிய அரசு "டாப் 100 கல்லூரிகள் " பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. கடந்த காலத்தில் தொடர்ந்து பிரச்சாரங்கள் மூலமும், பல்வேறு வழிமுறைகளாலும், தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் மிகப்பெரிய சிந்தனை மாற்றம் ஏற்பட்டது. சமூக சிந்தனை ஜனநாயகப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆணவப் படுகொலைகளும், சாதிவெறித் தாக்குதல்களும் இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
இன்றைய இந்திய அரசியல் சட்டத்திற்குள் சாதியை ஒழித்து விட முடியாது; சாதி ஏற்றத்தாழ்வுகளை களைய முயற்சிக்கலாம். சாதியற்ற சமூகம் நோக்கி நாம் செல்ல வேண்டி இருக்கிறது.
பெரியார் இயக்கம் சமூகத்தை சிந்தனை அளவில் புரட்டிப் போட்டது என்பதை அனைவருமே ஏற்க வேண்டும். அதுவரை தன் சுயஅடையாளமாக பின்னொட்டாக இருந்த சாதிப் பெயர்கள் கழற்றி வீசப்பட்டன. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை (1989), கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33% என்று பெண்ணுரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. திராவிட அரசியலை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு பெற்று வரும் தொடர் வளர்ச்சியையும், மானுட மேம்பாட்டு குறியீடுகளையும் மறைப்பது சரி அன்று. இங்கு ஒரு சமூகப் பண்பாட்டுப் புரட்சி நடந்திருக்கிறது. வட இந்தியவில் இன்றளவும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் சுதந்திரமாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் நிலை வேறு. இதற்கு உடனே, "இந்த மண்ணில் தான் வள்ளுவர் பிறந்தார், அவ்வையார் நடந்தார் " என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இதே தமிழ்நாட்டில் எந்தெந்த சாதிகள் எவ்வளவு தூரத்தில் நின்றார்கள், எப்படி, எந்தெந்த விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றின் பக்கங்கள் பதிவு செய்துள்ளன. இன்றைய தமிழ்நாட்டில் அத்தகைய நிலை கிடையாது. இதே தமிழ்நாட்டில் சென்னை மவுண்ட் ரோடு மற்றும் ஜார்ஜ் டவுன் உணவு விடுதிகளில் "பஞ்சமர்கள், நாய்கள், குஷ்டரோகிகள் உள்ளே நுழைய கூடாது, என்ற போர்டு தொங்கியது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் நிலவிய நிலமை குறித்து வயது முதிர்ந்த தோழர் ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார்: திருவிடைமருதூரில் சானார்கள் உள்ளே நுழைய கூடாது என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தது என்கிறார். பார்ப்பனத் தெருவில் ஒரு நாடார் பையன் நுழைந்ததற்காக அவனை தலைகீழாகக் கட்டி தன் தாத்தா அடித்ததாக ஒரு பிராமணர் காணொளியில் பெருமை பேசுகிறார். இதுதான் அன்றைய நிலைமை. இன்று, மிகப்பெரிய மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம்.
1914 இல் சென்னை பல்கலைக்கழக பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளில் (650 பேரில்) பிராமணர்கள் 452 பேர் ; பார்ப்பனர் அல்லாதவர்கள் 12 பேர், பிறர் 74 பேர். இன்றுள்ள நிலைமை என்ன?
தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 46.9% ஆக உள்ளது. பட்டதாரிகளின் எண்ணிக்கை இந்திய சராசரியை விட இரண்டு மடங்கு ஆகும். காமராசர் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசமாகத் தரப்பட்டது; அடுத்து வந்த திராவிட ஆட்சி காலத்தில் கல்லூரிக் கல்வியும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பாராட்டுவதற்கு மனம் இல்லாவிட்டாலும், சேற்றை வாரி இறைக்காமல் இருக்கலாம் அல்லவா?
பெரியார் மீதும் திராவிட கருத்தியல் மீதும் காழ்ப்புணர்வு ஏன்?
பெரியார் மீதும் திராவிட கருத்தியல் மீதும் சமீப காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் இருக்கிறது. ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டு சரியாக நூறு ஆண்டுகள் ஆகின்றன. நூறு ஆண்டுகள் நிறைவுறும்போது இந்துராஷ்டிரத்தைப் படைத்து விட வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் அனைத்து தளங்களிலும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெரியாரையும் திராவிட கருத்தியலையும் தகர்த்தாலொழிய இந்துராஷ்டிர வரம்புக்குள் தமிழ்நாட்டைக் கொண்டுவர முடியாது. இதனால்தான் சங்கிகள் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கடுமையாகத் தாக்கி வருகிறார்கள். மக்களை பெரியாருக்கும் திராவிட கருத்தியலுக்கும் எதிராகத் திருப்பி விட வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். இந்துத்துவ அமைப்புகளிடமிருந்தும் வடநாட்டு பெருமுதலாளிகளிடம் இருந்தும் பணத்தை தமிழ்நாட்டில் வாரி இறைக்கிறார்கள். மேலும், கடந்த காலத்தில் சாதி பட்டத்தை துறந்து, சாதி அடையாளம் மறைக்கப்பட்டதால் தங்களுடைய சுயபெருமையும் அடையாளமும் மறைந்து போனதாக இங்கே பலர் அலறித் துடிக்கிறார்கள். அவர்களெல்லாம் சாதிகளை, சாதி அடையாளத்தை, சாதி உணர்வை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். அவர்கள் பெரியாருக்கு எதிராக போர் தொடுக்கிறார்கள்.
"ஆண்ட சாதிகள் " என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறவர்கள், தங்களுடைய பெரிய சாம்ராஜ்யம் சரிந்து போனதாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைக் கடித்துக் குதறுகிறார்கள். பெரியார் மீதும் திராவிட இயக்கம் மீதும் காழ்ப்புணர்வு காட்டுகிறவர்கள், மதவெறியர்களாகவும், சாதி வெறியர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் 'சாதியற்ற இறையாண்மை தமிழ்த் தேசம்' நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிர்த்திசையில் இங்கே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதிகளே தமிழர்களின் அடையாளம் என்கிறார்கள். சாதிகளின் தொகுப்பே தமிழினம் என்ற கருத்தைப் பலர் முன் வைக்கிறார்கள். பின்னோக்கிய பயணத்தை அவர்கள் கைக்கொள்ளுகிறார்கள். இந்நிலையில், திராவிடம் என்ற கருத்தியலால் தமிழ்நாடே குட்டிச்சுவராகப் போய்விட்டது என்றும், தமிழர்கள் எல்லா உரிமைகளையும் இழந்து விட்டார்கள் என்றும் கூப்பாடு போடுவது பொய்யானது, தவறானது, திட்டமிடப்பட்ட நாச வேலைக்கு ஒப்பானது.
இங்கு எல்லோரும் எப்போதும் தமிழர்களாகத்தான் வாழ்கிறோம். பார்ப்பன எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்று வரும்போது, களத்தில் நிற்பவர்கள் மட்டும் "நாங்கள் திராவிடர்கள் " என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்போது, திராவிடர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கு கேரளர்கள், கன்னடர்கள்,தெலுங்கர்கள் உள்ளிட்டு பல்வேறு மாநில ஒடுக்கப்பட்ட மக்களிடமும் வளர்ந்து வருக்கிறது. நாங்கள் திராவிடர்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே மார் தட்டுகிறார்.
இந்நிலையில், 'திராவிட்' என்ற பின்னொட்டுடன் ஒருவர் சங்கராச்சாரியார் பதவி ஏற்றதும், அதையே காரணம் காட்டி திராவிடர்கள் என்பவர்கள் அனைவரும் அந்நியர்கள் என்றும், தெலுங்கர்கள் என்றும், "தெலுங்கு கன்னடர்களை வாழ வைப்பதற்காக வந்த பெயரே திராவிடர்கள் " என்றும் பிரச்சாரம் செய்வது நேர்மையான செயல் அன்று. நாம் பேசுவதும் எழுதுவதும் அடுத்த தலைமுறைக்குப் பாடமாக, வழிகாட்டுதலாக அமைய வேண்டுமேயொழிய, மதவாதிகளுக்கும் சாதி வெறியர்களுக்கும் அரண் செய்வதாக அமைந்து விடக்கூடாது.
புரிந்துகொள்ள வேண்டிய செய்தி இதுதான்!
சங்கராச்சாரியாரின் பின்னொட்டாக இருக்கும் 'திராவிட்' என்பது தென்னிந்திய பகுதியைச் சேர்ந்த வேத விற்பன்னர்களுக்கு உரிய பின்னொட்டு. அது அவர்கள் குடியேறி வாழ்ந்த இடத்தைக் குறிக்கிறதேயொழிய, இனத்தைக் குறிப்பது அல்ல.
ஆனால் திராவிட இயக்கம் முன்னிறுத்தும் 'திராவிடர்' என்ற அடையாளம் இனம் சார்ந்தது; ஆரியத்தில் இருந்தும், பார்ப்பனர்களில் இருந்தும் மாறுபட்ட பண்பாட்டு இனமரபினர் என்பதை அடையாளப்படுத்தக் கூடியது. அது பார்ப்பன ஏகபோகத்தை ஒழித்துக் கட்டியது; இன்றளவும் பார்ப்பன- பனியா மேலாதிக்கத்தை எதிர்ப்பது.
இடைக்காலத்தில் தோன்றிய திராவிட் என்ற பார்ப்பனப் பின்னொட்டுக்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்முதல் ஒடுக்கப்பட்ட,, பிற்படுத்தப்பட்ட மக்களால் முன்னிறுத்தப்பட்டு வரும் 'திராவிடர்' என்ற அடையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. "திராவிட் " என்பதற்கும் "திராவிடர், என்பதற்கும் உள்ள வேறுபாடு "முட்டை"க்கும், "முட்டைகோசு"க்கும் உள்ள வேறுபாடுதான். புதியவர்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தோன்றும். ஆனால் வரலாற்று அறிவும், சமூக விடுதலை உணர்வும் கொண்டவர்களுக்கு இரண்டும் வெவ்வேறானவை என்பது மட்டுமல்ல, நேர் எதிரானவை என்பதும் புரியும்.
*****
(2009 - 2010 ஆகிய ஆண்டுகளில், ஐயா மணியரசன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்தி வரும் 'தமிழர் கண்ணோட்டம்' இதழில் கட்டுரையாளர் பேராசிரியர் த.செயராமன் தொடர்ச்சியாக எழுதி வந்த 'ஆரியர் - திராவிடர் - தமிழர்' என்ற மாந்தவியல் அடிப்படையிலான கட்டுரைத் தொடர் 19 -ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலுமான காலகட்டத்திற்கு, வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளை முன்னிறுத்தி எழுதப்பட்டது.
இத்தொடர்கட்டுரையில் பார்ப்பனர்களின் பின்னொட்டாக இருக்கும் 'திராவிட்' பற்றியும், தென்னிந்தியாவிற்கு வந்த ஆரியப் பார்ப்பனர்களை 'திராவிடர்' என்று சமஸ்கிருத இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பற்றியும் விரிவாக நான் எழுதியிருந்தேன் (த.செயராமன்). ஆரிய இலக்கியங்கள் மட்டுமே ஆரியர்களின் தென்னிந்திய ஆரியப் பார்ப்பன சொந்தங்களை 'திராவிடர்' என்று குறிப்பிடுகின்றன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திராவிடர் என்ற என்ற சொல் மொழியியல், மாந்தவியல், வரலாற்றாளர்கள் மற்றும் பிற அறிஞர்களால் தென்னிந்தியாவின் மண்ணின் மக்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், மண்ணின் மக்களைக் குறிக்கும் சொல்லாக ஏற்கப்பட்ட திராவிடர் என்ற சொல்லை ஆரியத்திற்கு எதிரான சொல்லாகக் களத்தில் நிறுத்தி பார்ப்பனியத்தை எதிர்த்து சமூகப் போராட்ட இயக்கங்கள் தோன்றின. இதுதான் வரலாறு.
ஆனால், கட்டுரை தொடர் நிறைவு செய்யப்படாமல் 21 கட்டுரைகளுடன் நிறுத்தப்பட்டது. 1856 -இல் இராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணக்கத்திற்குப் பிறகு நிகழ்ந்த பண்பாட்டுப் புரட்சி, வரலாறு, பண்பாட்டுவியல் ஆய்வுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் அடிப்படையில், தென்னக மாந்தவியல் நோக்கில் தொடர்ந்து எழுதப்பட வேண்டும். முழுத் தொகுப்பு விரைவில் வெளிவரும்.)
- பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.