சென்னையில் மார்க்ஸ் சிலை அமைக்கப்பட வேண்டும் என மார்க்ஸிய அமைப்புகளும், இரண்டு பொதுவுடைமைக் கட்சிகள், முற்போக்குச் சக்திகள் எனப் பலரும் தமிழக அரசிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் 2025 ஏப்ரல் 2 அன்று சட்டமன்றப் பேரவை 110 விதியின் கீழ் காரல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்படும் எனச் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 2026 பிப்ரவரி 6 அன்று சென்னை கன்னிமாரா நூலக வாயிலில் மார்க்ஸ் சிலையைத் தமிழக முதலமைச்சரே திறந்து வைத்தார். முதலில் நந்தனம் கல்லூரி வளாகத்தில் திறக்கப்படுவதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, மிகப்பொருத்தமாக கன்னிமாரா நூலகம் மற்றும் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பிறந்த ஊரான டிரையர் நகரில் உள்ள (இந்நகரில் மார்க்ஸ் 17 ஆண்டுகள் வாழ்ந்தார்) மார்க்ஸ் சிலையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, சென்னையிலுள்ள சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மார்க்ஸின் 200-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2018 மே 5-ஆம் நாளன்று டிரையர் நகரில் திறக்கப்பட்டது. சீன மக்கள் குடியரசு இச்சிலையை நன்கொடையாக வழங்கியது. இச்சிலையைச் சீனச் சிற்பி வூ வைஷான் (Wu Weishan) உருவாக்கினார். பீடத்துடன் சேர்த்து 18 அடி உயரம் கொண்ட இச்சிலை 2.3 டன் எடை கொண்டது. டிரையர், பெர்லின், பாரிஸ், இலண்டன், ஹம்பர்க் ஆகிய இடங்களோடு மார்க்ஸ் அதிகத் தொடர்பில் இருந்ததை நினைவூட்டும் வண்ணம் சிலையின் பீடம் ஐந்து முனைகளைக் கொண்டதாக அங்கு அமைந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மார்க்ஸ் சிலை, மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் மிக எழுச்சியுடன் நிறுவப்பட்ட மார்க்ஸ் சிலை, அவற்றை விடச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.
சென்னையின் சிலையைச் செதுக்கியவர் சிற்பி என். எஸ். கார்த்திகேயன் ஆவார். சென்னைக்கு அருகே மலையம்பாக்கம் கிராமத்தைச் சார்ந்த அவர் இதுவரை ஏறக்குறைய 44 ஆயிரம் சிலைகளை வடிவமைத்திருக்கிறார். ‘எனது 34 ஆண்டுக் கால அனுபவத்தில் முழு சுதந்திரத்துடனும், மன நிறைவுடனும், ஈடுபாட்டுடனும் செய்த சிலை என்றால், அது காரல் மார்க்ஸ் சிலைதான்’ என்கிறார் அவர். ‘மார்க்ஸின் மனைவி குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது இரத்தம் வந்தது என்று படித்த போது என் கண்கள் குளமாகி விட்டன’ எனக் கூறும் சிற்பி கார்த்திகேயன், ‘நம்மால் ஒரு வீட்டில் உள்ளவர்களையே மாற்ற முடியவில்லை. ஆனால் காரல் மார்க்ஸ் எத்தனை странах புரட்சியை ஏற்படுத்தினார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எத்தகைய வழிகாட்டினார் என்பதை நினைக்கும் போது அவர் சாதாரணமானவர் அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே முழுமனதுடனும், கவனத்துடனும் மக்களுக்காகவே வாழ்ந்த போராளியின் சிலையை வடிவமைத்தேன்’ என நெகிழ்ச்சியுடன் தனது நேர்காணலில் குறிப்பிட்டார்.
வழவழப்பான (Smooth) பினிஷிங் இல்லாமல், இம்பாஸ்டோ (Impasto) நுட்பத்தைப் பயன்படுத்தி, களிமண்ணில் வேலை செய்து, தழும்புகள் அப்படியே வெண்கலத்தில் வார்க்கப்பட்டது. ‘இத்தகைய சிலை எனது நீண்டநாள் கனவு’ எனக் கூறும் அவர், ‘உயிரோட்டமான மார்க்ஸ் சிலையை அமைத்ததிலிருந்து எனக்குள்ளும் என்னை அறியாமல் மார்க்ஸ் கொள்கைகள் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டன’ எனத் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
தமிழகத்தைப் போலவே, இரஷியா, சீனா, இங்கிலாந்து, வெனிசூலா, உக்ரைன், செக் குடியரசு, பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, துருக்கி, எத்தியோப்பியா, லித்துவேனியா, பெலாரஸ் என உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மார்க்ஸ் சிலை பரவலாக அமைந்துள்ளது.
இப்படி உலகெங்கும் உள்ள மக்கள் மார்க்ஸைக் கொண்டாடும் பொழுது, தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ‘மார்க்ஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? அவர் எப்போதாவது இங்கு வந்துள்ளாரா?’ எனக் கேள்வி எழுப்புகிறார். இது சங்கிகளுக்குண்டான அறியாமையின் வெளிப்பாடானதே அன்றி, வேறல்ல!
1999 ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் கடந்த 1000 ஆண்டுகளில் அதாவது கடந்த பத்து நூற்றாண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர் யார் என்று நடத்திய கருத்துக்கணிப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைக் காரல் மார்க்ஸ் பெற்றார் என எழுதியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரிய செய்திகளை அறியாதவர்கள் மார்க்ஸ் எனும் சூரியன் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், உண்மையின் மறுபக்கம் தெளிவானது.
காரல் மார்க்ஸ் பத்திரிகைக் கட்டுரைகளில் மட்டுமல்ல, வரலாற்றுக் குறிப்புகளிலும்கூட இந்தியாவைப் பற்றிக் கற்பல செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா குறித்து மார்க்ஸ் எழுதிய குறிப்புகள், ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அது தமிழிலும் வெளிவந்து பல காலமாகி விட்டது.
1853 முதல் 1858 வரை ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ எனும் பத்திரிகையில் இந்தியா குறித்துக் காரல் மார்க்ஸ் 33 கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் முகலாயர் ஆட்சி குறித்தும் கிழக்கிந்தியக் கம்பெனியின் சுரண்டல் குறித்தும் சிறப்பாகக் கவனும் குறித்தும் அவற்றில் எழுதியுள்ளார். கடலூர்க் கோட்டையைக் கைப்பற்றுவதற்காகப் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நடைபெற்ற போர் குறித்து விரிவாக எழுதியுள்ளார். தமிழகத்தின் பாண்டிய மன்னன் மற்றும் சேர மன்னன் குறித்தும் பதிவு செய்துள்ளார். தெற்கத்துப் பகுதியில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா ஆகிய ஐந்து மொழிகள் பேசப்பட்டதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பிரித்தானிய அரசின் சித்திரவதை ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து மார்க்ஸ் எழுதிய குறிப்பில், தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி விவரித்துள்ளார். மயிலாடுதுறையில் உள்ள விவசாயிகள் வரி கொடுக்காத காரணத்திற்காகச் சித்திரவதை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மார்க்ஸ் சுட்டிக் காட்டிப் பிரித்தானிய வாலரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார். தவிரவும், தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய இரயத்துவாரி முறையின் செயல்பாடு பற்றியும் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார்.
இப்படி 170 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மிகுந்த கரிசனம் காட்டிய காரல் மார்க்ஸின் பொருத்தப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பச் சங்கிகளுக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை.
மேலும் மார்க்ஸ் தமிழ்நாட்டிலுள்ளவர்களால் மட்டுமல்ல, மனிதகுலம் முழுமையுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் போற்றிக் கொண்டாடப்படுகிறார். ‘கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பொதுவுடைமை அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தவுடன், மார்க்ஸின் கதை இதோடு முடிந்துவிட்டது. அவர் செத்துவிட்டார். இலண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள், பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டுவிட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை, அவரது சிந்தனைகளை இனி படிக்கவே வேண்டாம்’ எனச் சிலர் பரப்புரை செய்தனர். ஆனால் முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை குறித்து மார்க்ஸ் பகுப்பாய்வு செய்து சொன்னது இன்றைய முதலாளித்துவ நெருக்கடிகளைப் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவியாக உள்ளது என முதலாளித்துவவாதிகளே மார்க்ஸ் பற்றிப் பாராட்டுக் கட்டுரை எழுதுகிறார்கள்.
தனது கோட்பாட்டிற்காக ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் என ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மார்க்ஸ் நாடு கடத்தப்பட்டு, இறுதியில் நாடற்றவராக இங்கிலாந்தில் அவர் மறைந்தார்.
காரல் மார்க்ஸ் மறைந்ததை முன்னிட்டு 1883 மார்ச் 17 அன்று இலண்டன் ஹைஜேட் சுடுகாட்டில் மார்க்ஸின் இணைபிரியாத் தோழர் பிரடரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரை, மார்க்ஸின் ஒப்பற்ற பங்களிப்புக் குறித்து விரிவாகப் பேசுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இரங்கல் உரையின் சில தெரிப்புகள்:
"மார்ச் 14 ஆம் நாளன்று (1883) பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்முடன் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
நாங்கள் மார்க்சைப் பார்க்கத் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம். அந்த மேதையின் மரணம், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணம் மிக்க பாட்டாளி வர்க்கத்திற்கும், வரலாற்று அறிவியலுக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மகத்தான மனிதருடைய பிரிவினால் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நாம் விரைவில் உணர்வோம்.
இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்தது போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்............ மார்க்ஸ் இன்றைய முதலாளிய உற்பத்தி முறை மற்றும் அந்த உற்பத்தி முறை தோற்றுவித்துள்ள முதலாளியச் சமூகத்தினுடைய இயக்கத்தின் குறிப்பான விதியையும் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பைக்கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சனையின் மீது ஒளியைப் பாய்ச்சியது. அப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளீட்டாளர்கள், சோசலிச விமர்சகர்கள் ஆகிய இருசாராரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.
ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அவற்றில் ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால்கூட, அந்த மனிதர் மிகுந்த நல்வாய்ப்பைப் பெற்றவர் ஆவார். ஆனால் தன்னுடைய ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும், மார்க்ஸ் பல துறைகளை ஆராய்ந்தார். ஒரு துறையில் கூட மேம்போக்கான ஆராய்ச்சியை அவர் மேற்கொள்ளவில்லை - கணிதத்தின் கூடத் தனித்துவமான கண்டுபிடிப்புகளைச் செய்தார். அத்தகைய அறிவியல் மனிதர் அவர். ஆனால் இது அவருடைய சாதனைகளில் அரை பங்கு கூட இல்லை.
மார்க்ஸ் அறிவியலை இயக்காற்றல் உடைய புரட்சிகரமான சக்தியாகக் கண்டார் ........ மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சிக்காரர். ஏதாவது ஒரு வழியில் முதலாளியச் சமூகத்தை மற்றும் அது உருவாக்கி இருக்கின்ற அரசு நிறுவனங்களை ஒழிப்பதற்கும், நலிவுப் பாட்டாளி வர்க்கத்தின் தேவையை உணரும்படி செய்த முதல் நபர் அவரே.
விடுதலைக்குப் பங்களிப்பது அவருடைய மெய்யான வாழ்க்கைப் பணியாகும். போராட்டமே அவருக்கு உயிர். அவரைப் போல் எப்பொழுதும் உணர்ச்சிகரமாக, உறுதியாக, வெற்றிகரமாகப் போராடுவதற்கு எவராலும் முடியாது ......... பல்வேறு இதழ்களிலும், போர்க்குணம் மிக்க வெளியீடுகளிலும், பாரிசு, பிரசல்ஸ், மற்றும் லண்டன் நிறுவனங்களிலும் அவருடைய பணி தொடர்ந்தது. இறுதியாக, எல்லாவற்றிற்கும் சிகரமாக, சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை அவர் நிறுவினார். வேறு ஒன்றையும் செய்யாது இருந்தால் கூட, இந்தச் சாதனையைப் பற்றி மட்டுமே உறுதியாக அவர் பெருமை அடைய முடியும்.
மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். சர்வாதிகார அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய இரண்டுமே அவரைத் தம்முடைய நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர் - அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதிதீவிர ஜனநாயகவாதிகளோ - மார்க்ஸ் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் அவர் ஒட்டடையைப் போல ஒதுக்கித் தள்ளினார். அவற்றைப் புறக்கணித்தார். இன்றியமையாத தேவை ஏற்பட்டால் மட்டுமே அவற்றுக்குப் பதில் அளித்தார்.
சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் எல்லாப் பகுதிகளிலும் இலட்சக்கணக்கான புரட்சிகரத் தொழிலாளர்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவராக, அவர் மரணம் அடைந்தபொழுது அவர்கள் கண்ணீர் சொரிந்தனர். அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அனேகமாக ஒரு தனிப்பட்ட பகைவர் கூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்" எனும் எங்கெல்ஸின் உரை காலத்தால் அழியாத கல்வெட்டாகும்.
இயங்கியல் பொருள்முதல் வாதம், வரலாற்றுப் பொருள்முதல் வாதம், உபரி மதிப்புக் கோட்பாடு, வர்க்கப் போராட்டம் போன்ற அவரது கோட்பாடுகள் இன்றும் பொருத்தப்பாடு மிக்கவையாக உள்ளன.
‘ஒரு தத்துவம், மக்களைக் கவ்விப் பிடித்தால், அது ஒரு பௌதிக சக்தியாக மாறிவிடும்’ எனும் மார்க்சின் வைரவரிகளுக்கு அவரது தத்துவமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ரஷியா, சீனா, வியட்நாம், கியூபா, இலத்தீன் அமெரிக்க நாடுகள் என அவரது தத்துவ வெளிச்சத்தில் பல்வேறு நாடுகள் விடுதலை பெற்றன. தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அவரது தத்துவம் ஆயுதமாகத் திகழ்கிறது.
"தத்துவம் இல்லாத நடைமுறை, குருடு; நடைமுறை இல்லாத தத்துவம், நொண்டி" எனும் அவரது வழிகாட்டுதல், எந்த ஒரு இனத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.
‘புத்தகங்களை விழுங்குவதற்காகப் படைக்கப்பட்ட இயந்திரம் நான்’ எனத் தன்னைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுவது வழக்கம். அதைப்போல பிரித்தானிய நூலகத்தில் பல ஆண்டுகள் நாள்தோறும் 12 மணி நேரம் செலவழித்து அவர் அரிதின் முயன்று சேகரித்த அறிவு இன்று மானுட விடுதலைக்கான சாவியாகத் திகழ்கிறது.
இலண்டனில் அவர் வாழ்ந்த பொழுது பன்னிரெண்டு காயால் உடைகளைக் கூட அடமானம் வைத்திருந்ததால், வாட்டும் கடுங்குளிரில் வெளியே செல்ல முடியாமல் வீட்டினுள்ளேயே பல நாட்கள் முடங்கிக் கிடந்தார். இத்தனைத் துன்பங்கள், அதிகார அடக்குமுறை வாட்டினாலும், சமரசமற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய சேவை ஒப்பற்றது.
'மக்களுக்காக உழைப்பதே மகத்தான செயல் என்பதை மார்க்ஸ் மனதில் தைக்கும் வண்ணம் வலியுறுத்தி வந்தார். ‘மனித குலத்தின் பெரும்பான்மைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையைச் செய்வது என நாம் தீர்மானித்துக் கொண்டால், எவ்வளவு பெரிய சுமைகளும் நம்மைச் சோர்வடையச் செய்து விடாது. காரணம், அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள் ஆகும். நமக்குக் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியோ எல்லையற்றது. நமது மகிழ்ச்சி கோடானகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும். எப்பொழுதும் அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் சூடான கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்.’ என்ற மார்க்சின் வைரவரிகள் என்றும் நமக்கு உந்துசக்தியாகத் திகழும்.
எனவே நாம் ஓய்வெடுக்கவோ, சோர்வடையவோ நேரமில்லை. கம்யூனிசம் பூதம் ஒழிந்தது என ஆதிக்கச் சக்திகள் கொண்டாடும் பொழுதெல்லாம், அவர்கள் நடுங்கும்படி தன்னைப் புதுப்பித்துக் கொண்டு மார்க்சியம் வெல்லற்கரிய சக்தியாக மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுகிறது.
நெருக்கடிகளால் ஏற்படும் விளைவுகளுடன் போராடாமல், அந்த விளைவுகளுக்கான காரணத்தைப் போராடி அழிக்க வேண்டும் என மார்க்சியம் நமக்குக் கற்றுத் தருகிறது. நமது முயற்சிகளில் பின்னடைவுகள் நேரும் பொழுதெல்லாம், சாம்பலிலிருந்து பீறிட்டெழும் பீனிக்ஸ் பறவை போல, நமக்கு உத்வேகம் தருவது, மார்க்சியமே!
‘சக்திக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம்’ எனும் சோசலிசக் கட்டுமானத்தைக் கடந்து, ‘சக்திக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்’ எனும் உன்னதமான கம்யூனிச அறத்தை மார்க்ஸ் நமக்குக் கற்பித்தார்.
‘உலக நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களே, ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழக்கப் போவது, அடிமைச் சங்கிலிகளைத் தவிர, வேறு எதுவுமில்லை. ஆனால் பெறப்போவதோ ஒரு பொன்னுலகம்’ என மார்க்ஸ் நமது காதோடு என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார். தோழமையோடு நம்மை வழிநடத்துவார்.
புரட்சியின் பேருருவாக மார்க்ஸ் காலத்தை வென்று நிற்பார். அப்பொழுது சங்கிலிகளுக்கும், சனாதனிகளுக்கும் மார்க்சின் பொருத்தப்பாட்டை வரலாறு உணர்த்தும்.
- கண.குறிஞ்சி