கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி, கொண்டையம்பாளையம் ஊராட்சி குறும்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட காளிங்கராயன் குளக்கரையில் கிழக்குப் பகுதியில் கன்னிமார் கோயிலின் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று 2.5அடி நீளமுள்ள துண்டுக் கல்வெட்டில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. நித்யானந்தபாரதி, புவனேந்திரன், விஜய்பாபு, செல்வராஜ், காமாட்சி ஆகியோர் கொண்ட குழு இரண்டு வாரங்களுக்கு முன்பு குளம் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது இதனைக் கண்டறிந்துள்ளனர்.

archaeology 600படிக்க முடியாத சூழலில் கல்வெட்டியல் பட்டயப்படிப்பு பயிலும் கணபதி தமிழ்ச்சங்கம் நித்தியானந்த பாரதி இவைபற்றித் தகவல் தெரிவிக்க அவ்விடத்திற்குச் சென்று ஆராய்ந்தபோது, 1000 ஆண்டுப் பழமைவாய்ந்த விக்கிரமசோழனாகிய கொங்குச் சோழனுடைய வட்டெழுத்துக் கல்வெட்டு என்று தெரியவந்தது. அக்கல்வெட்டில் வாசகம் எழுதப்பட்டிருப்பது குறித்து, உடனே காளிங்கராயன் குளப்பாதுகாப்புக் குழுவினர் உதவியுடன், இக்கல்வெட்டு வாசகத்தைத் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர் இராஜகோபால் அவர்களுடன் படிக்கப்பட்டது. கோவை பி.எஸ்.ஜி பேராசிரியர் டாக்டர் இரவி அவர்கள் அவ்வட்டெழுத்துக் கல்வெட்டைப் படித்து ஆராய்ந்து பல வரலாற்று உண்மைத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவை வருமாறு:-

கல்வெட்டு வாசகம்:

இரண்டரை அடி நீளமுடைய குமுதம் என்று சொல்லக்கூடிய உடைந்த கல்தூணில், நான்கு வரிகளில் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டறியமுடிந்தது. இதன் தொடர்ச்சிப் பகுதி நமக்குக் கிடைக்கவில்லை. அதனைத் தேடும்பணியில் இக்குழு ஈடுபட்டு வருகிறது.

கிடைத்த கல்வெட்டு வாசகம் பின்வருமாறு:-

ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்க ஸ்ரீவிக்கிரமசோழன்வடபரி...

சாரநாட்டுக் கலையம்புத்தூரி....

ஆ கைக்கொண்டு பாலமுது படிக்கும்....

சந்திராதித்தவற்சேவகவும்...

என்று உள்ளது.

இக்கல்வெட்டுத் துண்டு கிடைத்த இடத்தில் இப்போது ஏழு கன்னிமார் கோயில் உள்ளது. இக்கல்தூண் கல்வெட்டு கட்டுமானக் கோயிலில் அமைக்கப்பட்ட குமுதப் பகுதியில் எழுதப்பட்ட கல்வெட்டாகும். நன்கு கட்டமைக்கப்பட்ட கட்டுமானக்கோயிலில் இத்துண்டுக் கல்வெட்டு குமுதப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு காளிங்கராயன் குளத்தின் கிழக்குக்கரையில் இக்கோயில் இருந்திருக்கிறது. தண்ணீர் நிரம்பி இக்குளக்கரை உடைந்தபோது மழை வெள்ளத்தில் அக்கட்டுமானக்கோயில் சிதிலமடைந்துபோக எஞ்சியுள்ள இத்துண்டுக் கல்வெட்டு மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. மற்றபகுதி காணாமல் போய்விட்டது. சிதிலமடைந்த இக்கற்களைக் கொண்டே இப்போது இருக்கிற கன்னிமார் கோயிலைக் கட்டி இருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டு கூறும் செய்தி :

கோக்கலிமூர்க்க விக்கிரம சோழன் வடபரிசார நாட்டிற்குட்பட்ட கவையம்புத்தூரில், (இப்போதைய கோவில்பாளையம்) வழிபாட்டில் சிறப்பாக இருந்த (இப்போது அழிந்துவிட்ட) கோயில், இறைவனுக்குச் சந்திரசூரியன் உள்ள வரைக்கும் பூசை வழியாகப் படைக்கப்படும் பாலமுதமாகிய நைவேத்தியங்கள் செய்து கொடுக்கும் இறைக் கொடைபற்றிய செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

வரலாற்றுச் செய்தி:

ஊர்ப்பெருமை:

காளிங்கராயன் குளக்கரையில் கிடைக்கப்பெற்ற இவ்வட்டெழுத்துக் கல்வெட்டு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

காளிங்கராயன் கிழக்குக்குளக்கரையில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டு உள்ள இடத்தில் இருந்து 3கி.மீ கிழக்கே கோவில்பாளையம் என்ற ஊர் உள்ளது. இவ்வூர், பண்டைய வரலாற்றுச்சிறப்புப் பெற்றது. கௌசிகா நதிக்கரையில் உள்ள இவ்வூர் கௌசிகா நதிப்பண்பாட்டை வெளிப்படுத்தும் வரலாற்றுச்சிறப்புமிக்க சாம்பல் மேட்டுப்பகுதியில் பல தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வூரின் வரலாற்றுப் பெருமையைப் பேசும் கோட்டைமேட்டுப் பகுதியிலும் மேற்பரப்பாய்வுப் பணியைச் செய்து பண்டைய வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங்களை முன்பு கண்டறிந்துள்ளோம். இதன் மூலம் இரும்புக்காலம் மற்றும் மட்கலப் பண்பாட்டுக்கால மக்கள் நெசவு மற்றும் கல்மணித் தொழிலில் மேம்பட்டு இருந்ததை ஆய்வு செய்து உறுதி செய்திருக்கிறோம்.

கல்வெட்டு குறிப்பிடும் கவையம்புத்தூர், 2000 ஆண்டுப் பழமை உடைய ஊர் என்பதைக் கடந்த நான்கைந்து ஆண்டு கால எங்களது ஆய்விலே வெளிப்படுத்தி வந்திருக்கிறோம்.

காளிங்கராயன் குளம் 150 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இக்குளப்பகுதி நீர்மேலாண்மையின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. வரலாற்றுக்காலத்திலும் இடைக்காலத்திலும் இப்பகுதியில் உள்ள குளங்களுக்கு வற்றாத ஜீவநதியாக ஓடிய கௌசிகா நதி இப்பகுதி வேளாண் விவசாயத்திற்கு வித்திட்டது எனலாம்.

இப்படி வரலாற்றுச்சிறப்புமிக்க இவ்வூரைக் கல்வெட்டுகள் ‘கவையம்புத்தூர்’ என அழைத்திருப்பதை இக்கல்வெட்டும் உறுதி செய்திருக்கிறது. புத்தூர் என்பது புதிய ஊர் என்ற அடிப்படையில் இடைக்காலத்தில் இவ்வூர் உருவாக்கம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

நாட்டுப்பெருமை:

இவ்வூர் இடைக்காலத்தில் வடபரிசார நாட்டுப்பகுதியில் இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

மூன்று பெரும்பகுதியாக இக்காலத்தில் கொங்குநாடு பிரிக்கப்பட்டிருந்தது.

வடகொங்கு

தென்கொங்கு

வீரசோழ வளநாடு

வடகொங்குப்பகுதி இடைக்காலத்தில் 20 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. நாடு என்பது விவசாயப் பகுதியைக் குறிப்பதாகும். அதில் ஒன்றுதான் வடபரிசார நாடு. கொங்குநாட்டுப் பிரிவுகளில் இதுவே மிகப் பெரியதாக இருந்த பகுதி.

‘வடபரிசார நாடு’ நொய்யல் ஆற்றின் வடக்கே இருப்பதால் இப்பெயர் திசையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகக் காணலாம்.

‘வடபரிசார நாடு’ என்ற பெயரைக்கூறும் முதல் கல்வெட்டு என்ற பெருமையையும் இக்கல்வெட்டு பெறுகிறது.

கொங்குநாட்டில் உள்நாட்டுப்பிரிவுகள் கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் தான் உருவாகியிருக்கிறது. இதற்கு முன் உள்நாட்டுப்பிரிவுகள் இல்லை.

அரசியல் சிறப்பு:

கொங்குச்சோழர் ஆட்சி :

கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.14ஆம் நூற்றாண்டு வரை கொங்குப்பகுதியில் கொங்குச் சோழர் ஆட்சி குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சிறப்புடையதாகத் திகழ்ந்தது. இக்காலத்தில் கொங்குச் சோழர்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்தனர். கி.பி.942 முதல் கி.பி.1305 வரை 350 ஆண்டுகால ஆட்சி கொங்குச் சோழர்களது ஆட்சியாகத் திகழ்ந்தது. சோழன் என்ற அடைமொழியுடன் இவர்கள் இப்பகுதியில் ஆட்சி செய்தனர்; அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் கணிசமான பங்களிப்புக்குக் காரணமானவர்களாக இவர்கள் விளங்கினர். போராட்டம், படையெடுப்பு, வெற்றி, தோல்வி நிறைந்ததாகவும் அரசியல் வாழ்க்கை நிலையற்றதாகவும் இப்பகுதி இருந்தது.

அரசின் சிறப்பு:

கல்வெட்டில் குறிப்பிடப்படும் கலிமூர்க்க விக்கிரமசோழன் 42 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறான். இவரது காலம்

கி.பி.1004-05 முதல் 1047 வரையாகும். இவரது தந்தை வீரசோழக்கலிமூர்க்கன் ஆவார். இவர், கி.பி.980 முதல் கி.பி.1004 வரை 24 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

இவ்வாறாகத் தந்தைக்குப்பின் மகன் என்ற முறையில் அதாவது பாட்டன், தந்தை, மகன் என்று அடுத்தடுத்த மூன்று தலைமுறை உறவுகளை இவர்களது அரசியலில் காணமுடிகிறது.

விக்கிரமசோழனது கல்வெட்டு வடபரிசார நாட்டுப் பகுதிகளாகிய அன்னூர், திங்களூர் அடுத்துத் தற்போது கோவில் பாளையத்திலும் கிடைத்திருப்பது இப்பகுதியின் சிறப்பிற்குச் சான்றாக அமைகிறது.

கொங்குச்சோழர்கள் கோனாட்டு இருக்குவேளிர் மரபினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்குச் சோழர் ஆட்சியை உருவாக்கியவர் வீரசோழன் ஆவார். இவரே கொங்குச் சோழர்களில் முதல் ஆட்சியாளராகக் கருதப்படுகின்றார். இவரது பேரன்தான் கலிமூர்க்க விக்கிரமசோழன். ‘கலிமூர்க்கன்’ என்ற பெயர் தந்தையைக் குறிக்கிறது. விக்கிரமசோழன் என்ற பெயர் கல்வெட்டில் உள்ள பெயர்.

கலிமூர்க்கன் என்ற பெயர் இரண்டு மன்னர்களின் பெயர்களுடன் சேர்த்துக் கூறப்படுகிறது. அதாவது தன்பெயருக்கு முன் தந்தையின் பெயரைக் குறிப்பிடும் மரபு இருந்திருப்பதை அறியமுடிகிறது. ஆகவே தான்  வீரசோழக் கலிமூர்க்கன், கலிமூர்க்கன் விக்கிரமசோழன்  என்ற இரண்டு பெயர்கள் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. கல்வெட்டில் உள்ள கலிமூர்க்கன் தந்தையின் பெயராகும் விக்கிரமச்சோழன் பெயர் இக்கல்வெட்டில் முழுமையும் கிடைக்கப் பெறவில்லை ‘வி’ மட்டுமே உள்ளது. எனவே கலிமூர்க்கனை விக்கிரம சோழனின் தந்தையாகப் பார்க்க முடிகிறது.

கலிமூர்க்கன் என்ற பெயர் கலியைக் கடிந்தவன் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ‘கலி’ என்பது கலியுகம், கொடுமை, தர்ம அழிவு என்பதைக் குறிக்கும். அதாவது கலிமூர்க்கன் என்ற இப்பெயர் துன்பம் மிக்க கலிகாலத்தை அழித்தவன் என்பதாக அமைகிறது.

கோயில் கொடை:

இடைக்காலத்தில் கோயில் கட்டியதோடு வழிபாடு குறைவின்றி நடைபெறுவதற்குக் கொடை கொடுக்கப்பட்டது.

விழாக்காலங்களில் சிறப்பு வழிபாட்டின்போது அடியார்களுக்கும் தவசிகளுக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

‘கல்வெட்டில் ‘ஆ’ கைக் கொண்டு பாலமுது படிக்கும்’ என்று சொல்லப்பட்டிருப்பது பசுக்கள் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டிருப்பதோடு அவற்றின் வழி பெறப்படும் பாலமுது பூசை வழியாகப் படைக்கப்படும் நைவேத்தியங்களைக் குறிக்கிறது. அப்பமுது, அவலமுது, இளநீரமுது, தண்ணீரமுது, பிட்டமுது போல இக்கல்வெட்டில் இறைக் கொடையாகப் படையல் சோறு என்ற பொருளில் பாலமுது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முடிவு:

இவ்வாறு காளிங்கராயன் குளக்கல்வெட்டு கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகும். வடபரிசார நாட்டில் கிடைக்கப் பெற்ற வட்டெழுத்தில் இறுதிக்காலக் கல்வெட்டாக இக்கல்வெட்டைக் கருதலாம். இதற்குப் பிறகு இப்பகுதியில் வட்டெழுத்து வழக்கில் இல்லை எனக் கருத முடிகிறது. கொங்குப் பகுதியில் வட்டெழுத்துக் கல்வெட்டு அருகிலேயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

வட கொங்கு நாட்டின் உட்பிரிவுகள் உள்ள 20 நாடுகளில் வடபரிசார நாடு ஒன்று. இதனை இக்கல்வெட்டு குறிக்கப்படுகிறது. இதில் வடபரிசார நாடு பெரிய நிலப்பரப்பைக் கொண்டதோடு நொய்யலின் வடக்கில் அமைந்த பகுதி என்ற அளவில் திசைப்பெயராக அமைகிறது.

இப்போது வழக்கில் உள்ள கோவில்பாளையம் என்ற ஊர் இக்கல்வெட்டில் கவையன் புத்தூராகக் குறிக்கப் பெறுகிறது. இடைக்காலக் கல்வெட்டுகளிலும் இப்பெயரே காணப்படுகிறது.

கோக்கலிமூர்க்க விக்கிரம சோழன் வடபரிசார நாட்டை கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்திருப்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. அத்துடன் இம்மன்னனின் தந்தை வீரசோழக் கலிமூர்க்கனாகவும் இவரது பாட்டனார் கொங்குச் சோழர் ஆட்சியை உருவாக்கிய முதலாவது வீரசோழனாகவும் பார்க்க முடிகிறது.

இறைக்கொடையைப் பற்றிக் கூறும் இக்கல்வெட்டு ‘ஆ’ க்களைக் கொடையாகப் பெற்று அதன்வழி பெறும் பாலமுது படையலைப் பற்றிப் பேசியிருக்கிறது.

கொங்குச் சோழர்கள் இருக்குவேளிர் வழி வந்தவர்கள் என்பதும், வடகொங்கில் அமைந்த வடபரிசார நாட்டை ஆண்டவர்கள் என்பதும் பெறப்படுகிறது.

மங்களம் உண்டாகுக என்ற பொருளில் ஸ்வஸ்திஸ்ரீ என்ற இக்கல்வெட்டுத் தொடங்கி சந்திரன் சூரியன் இருக்கும்வரை இறைக்கொடையைப் பின்பற்றுவதற்குச் சந்திராதித்தவற் சேவகவும் என்று கல்வெட்டு முடியும் பகுதியாகக் கிடைக்கப்பெற்றது, என்றாலும் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மற்றொரு துண்டுக்கல்வெட்டும் கிடைக்கப்பெற்றால் மேலும் முழுமையான வரலாற்றை (ஆட்சி ஆண்டு, இறைதெய்வம்) அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருந்திருக்கும்.

Pin It