வேளாண் நாகரிகம் தோன்றிய காலம் முதல் வேளாண்மை சிறந்து விளங்கும் நிலப்பரப்பு காவிரிப் படுகை. காவிரிப்படுகைக்கு இணையான பெரிய, விரிந்து பரந்த வேறு ஒரு வண்டல்மண் சமவெளி ஆசியாவிலேயே இல்லை. தமிழகத்தின் உணவுத் தேவையில் 60 விழுக்காட்டை நிறைவு செய்து வந்த பகுதி இது. அதனாலேயே காவிரிப்படுகையைத் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும், தமிழகத்தின் உணவுக்கலம் என்றும் அழைக்கிறார்கள். தமிழகத்தின் உணவுத் தேவையில் 34 விழுக்காடு மட்டுமே காவிரிப் படுகையில் இருந்து இப்போது கிடைக்கிறது. 1968 முதல் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெறுவது பிரச்சினையாகியது. 1974&க்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு முழுவதுமாகக் காவிரி நீர் மறுக்கப்பட்டது. இதனாலேயே காவி- ரிப் படுகையில் 28 இலட்சம் ஏக்கர் விளைநிலம் என்பது 15 இலட்சமாகக் குறைந்துவிட்டது. காவிரிப்படுகையில் 80 விழுக்காடு மக்கள் விவசாயத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் . ஆனால், காவிரிப்படுகை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் - எரிவாயு எடுப்பு, நிலக்கரிச் சுரங்கம் போன்ற நாசகாரத் திட்டங்களால் விழுங்கப்படுகிறது. விவசாயம் அழிக்கப்படுகிறது. வேளாண் தொழிலாளர்கள் படுகையை விட்டுப் பிழைப்புத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
கார்ப்பரேட்டுகளுக்குக் கையளிக்கவே பல்வேறு பெயர்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்
1956 இல், முழுவதும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் "A பிரிவு " தொழிலாகப் பெட்ரோலியத் தொழில் வரையறுக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி எனப்படும் எண்ணெய் - இயற்கை எரிவாயு ஆணையம் என்ற நிறுவனம் எண்ணெய் எடுக்கவும், பெட்ரோலியப் பொருட்களை விற்கவும் உருவாக்கப்பட்டது. 1984 முதல் தமிழ்நாட்டில் ஏராளமான எண்ணெய்க் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தத் தொடங்கியது ஓஎன்ஜிசி. 1991 -இல் இந்தியா வெளிநாடுகளில் வாங்கி இருந்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறியது. இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் ஆணையமாக (Commision) இருந்த ஓஎன்ஜிசி ஒரு பொதுத்துறை லிமிடெட் கம்பெனியாக (Corporation) மாற்றி அமைக்கப்பட்டது.
இந்தியாவின் எண்ணெய்ச் சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவது மற்றும் சந்தை பொருளாதாரம் எனப்படும் பொருளாதாரச் "சீர்திருத்தத்தை" ஏற்பது என்ற உறுதியை இந்தியாவிடம் பெற்றுக் கொண்டு பன்னாட்டு நிதியம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது. இவ்வாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறக்கப்பட்டது. 1997 - இல் பெட்ரோலியம் ஆய்வு உரிமம் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. புதிய ஆய்வு உரிமம் வழங்கு கொள்கை (New Exploration Licensing Policy - NELP) என்பது இந்திய அரசால் 1997&98 ஆம் ஆண்டுகளில், ஆய்விலும் உற்பத்தியிலும் அரசோடு தனியார் முதலாளிகளும் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது. பொதுச் சொத்தை தனியார்மயமாக்கும் உத்தி இதில் ஒளிந்து கொண்டிருந்தது. இதைச் செயல்படுத்துவதற்காகவே ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு, தனியாருக்குக் கதவைத் திறந்து விட்டு எண்ணெய் தொழிலில் தாராளமயத்தைக் கொண்டு வந்தது. 1998 முதல் 2012 வரை 9 சுற்று எண்ணெய் - எரிவாயு பிளாக்குகள் ஏலம் விடப்பட்டன.
2016 மார்ச் மாதம் புதிய ஆய்வு உரிமம் வழங்கும் கொள்கை (HELP) கைவிடப்பட்டு ஹைட்ரோகார்பன் ஆய்வு உரிமம் வழங்கும் கொள்கை (Hydrocarbon Exploration Licenceing Policy.-HELP) கொண்டு வரப்பட்டது. எண்ணெய் - எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் எண்ணெய் - எரிவாயு ஆகியவை அனைத்துக்கும் ஒரே லைசென்ஸ் பெற்றுக் கொண்டு, வரைமுறையற்ற வகையில் ஹைட்ரோகார்பன்களை எடுக்கும் உரிமம் வழங்கப்பட்டது. வழக்கமான முறையில் எடுக்கப்படும் எண்ணெய் - எரிவாயு (Conventional hydrocarbons), வழக்கமற்ற புதிய தொழில்நுட்ப முறையில் அதாவது நீரில் விரிசல் (hydraulic fracturing) என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பூமிக்குள் கணிப்பாறையை அல்லது நிலக்கரிப் பாறையை நொறுக்கி எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன்கள் (Unconventional hydrocarbons) வரை அனைத்தையும் ஒரே உரிமத்தை மட்டும் (single licence) பெற்றுக்கொண்டு எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் 2016 - இல் திறந்தநிலை எண்ணெய் வயல்கள் உரிமம் வழங்கும் திட்டம் (Open Acreages Licencing Programme) சேர்க்கப்பட்டது. இதன்படி ஆண்டு முழுவதுமே, எப்பொழுது வேண்டுமானாலும், கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு இசைவான நிலப்பரப்பைக் குறிப்பிட்டு எண்ணெய் எரிவாயு எடுக்க உரிமம் பெற்றுக் கொள்ளலாம். தனியாருடன் ஒப்பந்தம் முன்பு இருந்தது போல "உற்பத்திப் பகிர்வு " ஒப்பந்தமாக இல்லாமல், "வருவாய்ப் பகிர்வு " ஒப்பந்தமாக மாற்றப்பட்டது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகவும் வசதியான ஒப்பந்தமாகும். இதில் முதலீடு செலவினங்கள் ஆகியவற்றைக் கழித்து விட்டு, மீதியுள்ள இலாபத்தை அரசும் எண்ணெய் நிறுவனமும் பகிர்வார்கள்.
இதைத் தொடர்ந்து "அடையாளம் காணப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள்" (Discovered Small Fields Awards - BSF) என்ற உரிமம் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறைந்த வரி விதிப்பு, வரிவிதிப்பு தவிர்ப்பு, எந்த நாட்டிலும் எந்த நிறுவனத்துக்கும் விற்றுக் கொள்ளவும், விலை நிர்ணயம் செய்யவும் கம்பெனிகளுக்குச் சுதந்திரம் - போன்ற பல சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. முன்னமே கண்டுபிடிக்கப்பட்ட வளமான எண்ணெய் வயல்கள் சிறிய அளவில் பிரிக்கப்பட்டு தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இது. இது 2016 - இல் இந்திய அரசால் ஏற்பளிக்கப்பட்டது.
1959 முதல் காவிரிப் படுகையில் 105 கிணறுகளை அமைத்து 21 கிணறுகளில் அதிக அளவில் எண்ணெய் எடுத்து வந்தது. காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி 1984 முதல் அதிக கிணறுகளை அமைத்து எண்ணெய் எடுக்கத் தொடங்கியது. நரிமணம், நன்னிலம், அடியக்கமங்கலம், நெடுஞ்சேரி, திருவாரூர் மற்றும் தமிழ்நாட்டின் கடற்பகுதி ஆகியவற்றில் கிணறுகள் அமைக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டது.
ஓஎன்ஜிசிக்கு எத்தனை எண்ணெய்க் கிணறுகள்?
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கே தெரியவில்லை!
காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி 710 எண்ணெய் - எரிவாயு கிணறுகளை அமைத்திருப்பதாகக் கூறுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், இராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி 710 கிணறுகளை அமைத்துள்ளதாகவும், அவற்றில் 183 செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால் தன்னிடம் ஓஎன்ஜிசியின் பதிவான கிணறுகள் 219 என்றும், அதில் 71 மட்டுமே செயல்படுவதாகவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. அந்த 71 கிணறுகளுக்கும் செயல்படுவதற்கான அனுமதி கிடையாது என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கிறது. ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் குறித்த முழுவிபரம் தமிழ்நாடு அரசிடமும் இல்லை.
பாலாற்றுப் படுகையில் ஓஎன்ஜிசி
2013 ஆம் ஆண்டு பாலாற்றுப் படுகையில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான வேலை தொடங்கப்பட்டது. புதிய தேடுதல் உரிமைக் கொள்கை (NELP) -இன்படி பாலாற்றுப் படுகையில் தேடுதல் வட்டங்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. இந்த வட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கியது.
கடலுக்குள் காலடி எடுத்து வைத்த பெட்ரோலிய நிறுவனங்கள்
2014&-இல் தனியார் நிறுவனங்களும் பல இடங்களில் கிணறுகளை அமைத்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அதன் கூட்டாளி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆகியவை வங்காள விரிகுடாவில் ரூபாய் 800 கோடியை எண்ணெய் ஆய்வுக்கு முதலீடு செய்தன. புதுச்சேரிக்கும் காரைக்காலுக்கும் இடையே, கரையிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பிளாக் அமைந்துள்ளது. இந்த ஆழ்கடல் பிளாக்கின் பரப்பு 10,655 சதுர கிலோமீட்டர் ஆகும். 2016 -இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ்க்குக் கூடுதலாகத் தமிழ்நாட்டுக் கடற் பகுதியில் 800 கோடி செலவில் எட்டு கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
நிலக்கரிப் படுகை மீத்தேன் திட்டம்
2010 ஜூலை 29 இல் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்குத் தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் "மன்னார்குடி பிளாக்" என்ற நிலக்கரிப் படுகைப் பகுதியில் நிலக்கரி மீத்தேன் (Coal Bed Methane) எடுக்கும் திட்டத்தை 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்படுத்த இந்திய அரசு உரிமம் வழங்கியது. இதைத் தொடர்ந்து, , 2011 இல் தமிழக அரசு அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவி செய்வதாகக் கூறியது. இத்திட்டத்தின்படி 150 முதல் 450 மீட்டர் ஆழம்வரை 50 மீத்தேன் கிணறுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 2012 செப்டம்பர் மாதம், இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இத்திட்டத்திற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதியையும் வழங்கியது. ஆனால் இத்திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கினார்கள். 2013 &- இல் மக்களுடைய எதிர்ப்புக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை நிறுத்தி வைத்தது. ஒரு வல்லுனர் குழுவை இதுகுறித்து ஆய்வு செய்ய அமைத்தது. இந்த வல்லுனர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 8.10 .2015 அன்று தமிழ்நாடு அரசு ஓர் அரசாணையை வெளியிட்டு, தமிழ்நாட்டில் நிலக்கரிப்படுகை மீத்தேன் எடுக்க இந்த அரசு அனுமதி வழங்காது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2016 நவம்பர் 10-ஆம் நாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இத்திட்டம் திரும்ப பெறப்பட்டதாக அறிவித்தார். இவ்வாறு தமிழ்நாட்டின் மீது திணிக்கப்பட்ட மீத்தேன் திட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
2015 - வல்லுநர் குழு அறிக்கை கூறியது என்ன?
தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுனர் குழு இவ்வாறு குறிப்பிடுகிறது:
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் என்ற அமைப்பு இப்பகுதியில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் எடுப்பதால் நில அமைப்பியல் மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் நிலத்தட்டுகளின் இடப்பெயர்வு ஆகியவை நிகழும் என்று எச்சரிக்கை செய்கிறது. மிகப்பெரும் அளவிலான நிலத்தடி நீர் வெளியேற்றம் நீர்மட்டத்தை வெகு ஆழத்திற்குக் கொண்டு செல்லும். எழில் மிக்க பசுமை மாறா விவசாய நிலங்கள், ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்நிலைகள் பாதிப்படையும். அடியில் செல்லும் குழாய்களால் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிப்படைவதோடு, தற்போது இருக்கும் அழகான இயற்கையான அமைப்பினையும் மாற்றப்படக்கூடும். விஷவாயு வெளியேற்றம், வளிமண்டல வெப்பநிலை மாற்றம், மழை அளவு குறைதல் ஆகியவை நிகழும். மீத்தேன் வாயு எடுக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிணறுகளை தூர்க்கவோ அல்லது மீண்டும் பயன்படுத்துவோ முடியாது. (தமிழ்நாடு (தொழில்) எம்.எம்.ஏ. (1) துறை, நாள் 8.10.2015, அரசாணை TN 186.).
2010 - இல் நிலக்கரிப் படுகை மீத்தேன் திட்டம் அறிவிக்கப்பட்டது போலவே, 2013 -இல் நிலக்கரிப் படுகைக்கும் கீழே இருக்கக்கூடிய களிப்பாறை அல்லது வண்டல் பாறை எனப்படும் ஷேல் பாறையில் மீத்தேன் எடுக்கும் உரிமத்தை இந்திய ஒன்றிய அரசு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கியது.
ஷேல் எரிவாயு என்ற சொல் "அது மீத்தேன் இல்லையோ" என்ற மயக்கத்தைப் பாமர மக்களிடம் உருவாக்கியது. அது மட்டுமின்றி, தான் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்ற போர்வையில், களிப்பாறை மீத்தேன் எடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஓஎன்ஜிசி முயற்சிகளைச் செய்தது. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களால் இம்முயற்சி முறியடிக்கப்பட்டது.
நாசக்காரத் திட்ட அபாயத்தின் முகங்கள்
கடந்த 50 ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில், எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றிய புரிதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தொடக்கத்தில் நடத்தும் "சீஸ்மிக் சர்வே " எனப்படும் நில அதிர்வுச் சோதனை நிலத்தடி நீரை அதல பாதாளத்திற்குத் தள்ளிவிடும். இச்சோதனையால் நீர் தடம் மாறும்; நிலஅடுக்குச் சேதம் அடையும். இதனால் வேளாண்மைக்கான ஆழ்துளைக் கிணறுகள் செயலற்றுப் போகும். எண்ணெய் கிணறுத் துரப்பணத்தால் வெளியாகும் கழிவுகள் ஆபத்தானவை (hazardous wastes) என்று அரசு ஆவணங்களே குறிப்பிடுகின்றன. நிலத்தடியில் துருப்பிடித்து, சேதமடைந்து மற்றும் அரித்துப்போன எண்ணெய் கிணறு - எரிவாயுக் குழாய்களிலிருந்து கச்சா எண்ணெய்க் கசிந்து நீரில் கலந்து கொண்டே இருக்கின்றன.
ஓ.என்.ஜி.சி. காவிரிப்படுகையில் அமைத்துள்ள 700 எண்ணெய்க் கிணறுகளில் 500க்கு மேல் கைவிடப்பட்டுள்ளன. இவை முறையாக மூடப்படவில்லை. இவை காவிரிப் படுகையை நாசம் செய்யும் வேலையை ஓசைப்படாமல் செய்து கொண்டிருக்கின்றன. எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க் கலவையில் 10 விழுக்காடு எண்ணெய்யும், 90 விழுக்காடு அபாயகரமான தனிமங்கள் கரைந்துள்ள நீரும் இருக்கும். எண்ணெய்யை பிரித்து எடுத்த பிறகு இந்த நீர் (produced water) முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் அல்லது சுத்திகரித்து விட்டதாகக் கூறிக்கொண்டு, மீண்டும் பழைய எண்ணெய்க் குழாய்கள் மூலம் பூமிக்குள் செலுத்துகிறார்கள். இது நிலத்தடி நீர் தொகுப்பில் கலந்து, நிலத்தடிநீரை எதற்குமே பயன்படுத்த முடியாதபடி இரசாயனமயமாக்கிக் கொண்டிருக்கிறது. பழைய எண்ணெய் கிணறுகளில் உற்பத்தியைத் தூண்டுவதற்காக உள்ளே செலுத்தப்பட்டு மீண்டும் வெளியேற்றப்படும் திரவம் (flow back fluid) ஆகியவற்றுடன் ஏராளமான உலோகங்களும், கதிர்வீச்சுத் தனிமங்களும் வெளியாகும். இவை அந்தப் பகுதியை மக்கள் நடமாட முடியாத அபாயகரப் பகுதியாக மாற்றும்.
2012 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் எச்சரிக்கை அமைப்பு இத்தகைய எண்ணெய் எரிவாயுத் திட்டங்களால் உயிர் பன்மை சூழல் அழியும்; நீர் ஆதாரம் பாழாகும்; எண்ணெய்க் குழாய்களின் உள் வெடிப்பால் அடி நிலம் நொறுங்கும் என்று எச்சரித்துள்ளது. இவை அனைத்தும் காவிரிப் படுகையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைத்தாலும் அந்த இடங்களிலும் இவை நிகழும்.
2017 நவம்பர் 26 ஆம் நாள், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மின்மோட்டார் நீர் குழாயில் துர்நாற்றத்துடன் எண்ணெய் கலந்து வரத் தொடங்கியது. இதை ஆய்வுக்குப் பிடித்துத் சென்ற அதிகாரிகள் அதன் பிறகு வரவே இல்லை. இதுபோல் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண்மைக்கான ஆழ்துளைக் கிணற்றில் நீருடன் கச்சா எண்ணெய் கலந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாகப் பாழாகிக் கொண்டிருப்பதற்குச் சான்றுகளாகும்.
அடையாளம் காணப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் திட்டம் (DSF)
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க ஜிம் லேபரட்டரிஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு 15 பிப்ரவரி 2017 - அன்று, இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. பிப்ரவரி 16ஆம் நாள் முதல் மக்கள் போராடத் தொடங்கினார்கள். இது இந்தியாவில் 36 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அடையாளம் காணப்பட்ட சிறிய வயல்கள் (Discovered Small Fields - DSA) எனப்படும் திட்டத்தின் கீழ், அனைத்து வகை ஹைட்ரோகார்பன்களையும் 15 ஆண்டுகளுக்கு எடுப்பதற்குத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியாகும். நெடுவாசல் மக்கள் கடுமையாகப் போராடினார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆதரவாகப் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் போராட்டத்தின் வெப்பத்தைத் தாங்க முடியாத ஜெம் லேபரட்டரி லிமிடெட் நிறுவனம் நெடுவாசலுக்குப் பதில் வேறு இடத்தை இந்திய அரசிடம் கோரியது.
கதிராமங்கலம்: பழைய திட்டங்களை எதிர்த்து எழுந்த போராட்டங்கள்
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தைச் சுற்றிலும் 29 இடங்களில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் பாதிப்பு. உடல்நலம் பாதிப்பு ஆகியவற்றைக் கதிராமங்கலம் மக்கள் உணரத் தொடங்கினர். 2017 மே 19-ஆம் நாள் ஒரு மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது. ஓஎன்ஜிசியின் கனரக எந்திரங்கள் அதிரடியாக மக்களால் வெளியேற்றப்பட்டன. ஆனால் ஜூன் 2 -ஆம் நாள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரையும் ஆறு மாவட்டங்களில் இருந்து உயர் காவல் அதிகாரிகளையும் நள்ளிரவே கொண்டு வந்து கதிராமங்கலத்தில் குவித்து வைத்துக்கொண்டு ஏராளமானவர்களைக் கைது செய்து, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் கதிராமங்கலம் மக்கள் எனப் பத்து பேரைச் சிறையில் அடைத்து விட்டு, கிணறைப் புதுப்பிக்கும் வேலைகளை ஓஎன்ஜிசி நடத்திக் கொண்டது.
மீண்டும் ஜூன் 30 அன்று, ஓஎன்ஜிசி இன் மற்றொரு கிணற்றிலிருந்து செல்லும் எண்ணெய்க் குழாய் உடைந்து பெரும் அளவில் கச்சா எண்ணெய் வெளியேறிய நிலையில், கீழ்மட்ட அதிகாரிகளை நம்ப முடியாது என்று கருதிய மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும் என்று வலியுறுத்திப் போராடினார்கள். இறுதிவரை மாவட்ட ஆட்சியர் வரவில்லை. ஆனால் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 10 பேர் கடும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டனர். கதிராமங்கலத்தின் கோரிக்கை ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டும், காவிரிப் படுகையை விட்டும் வெளியேற வேண்டும் என்பதுதான்.
2017 ஆம் ஆண்டு மக்களுடைய கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், மயிலாடுதுறை மாவட்டம் மாதானம் முதல் இராமநாதபுரம் பெரியபட்டிணம் வரை, எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படும் என்று ஓஎன்ஜிசி அறிவித்தது. மேலும் பெட்ரோலியச் சுரங்க உரிமப்படி 35 ஆய்வுத் கிணறுகளை ஓஎன்ஜிசி அமைக்கத் திட்டமிட்டது. தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்தப் பெருமுதலாளிய நிறுவனங்களுடனும், பொதுத்துறை நிறுவனங்களுடனும், 2018 அக்டோபர் 1 அன்று இந்திய ஒன்றிய அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்தியா முழுவதும் 55 புதிய ஹைட்ரோகார்பன் மண்டலங்கள் ஏலம் விடப்பட்டதில், 41 ஹைட்ரோ கார்பன் மண்டலங்களை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியது. தமிழகத்தில் ஏலம் விடப்பட்ட மூன்று மண்டலங்களின் பரப்பளவு 5094 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் 731 சதுர கிலோமீட்டர் பரப்பில் நிலப் பகுதியில் உள்ள ஒரு மண்டலத்தை ஓ.என்.ஜி.சி கைப்பற்றியது. ஆழமற்ற கடற்பகுதி மற்றும் நிலப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மண்டலங்களை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியது, இதில் ஒரு மண்டலம் 2,574 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், மற்றொன்று 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டவை.
தமிழ்நாட்டில் நிலப்பகுதியிலும் ஆழமற்ற கடற்பகுதியிலும், ஆழமான கடற்பகுதியிலும், ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா லிமிடெட், வேதாந்தா நிறுவனம் ஆகியவை உரிமங்களை பெற்றுள்ளன. இதுவரை இந்திய ஒன்றிய அரசு இதுவரை 9 ஏலங்களை நடத்தியுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால், அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தால், இரசாயன கலவையால், உருவாக்கப்படும் கழிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால், பல நாடுகள் இத்திட்டத்தையே கைவிட்டு விட்டன. மக்கள் வாழ்விடத்- திலிருந்து 60 கிலோ மீட்டருக்கு குறையாமல் அப்பால் உள்ள தொலைதூரப் பகுதியில் எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் எடுக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் வரைமுறை இல்லாமல், விளைநிலங்களில், நீர்நிலைகளுக்கு அருகில், மக்கள் வாழ்விடங்களில், எண்ணெய் - எரிவாயுக்கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
அழிவுத் திட்டத்தை அள்ளிச் சுமப்பதுதான் வளர்ச்சியா?
ஹைட்ரோகார்பன்கள் எடுப்பு என்பது வளர்ச்சியா? வேலை வாய்ப்புத் தருமா? என்று விவாதிப்பதே அறிவுக்குப் புறமானது. விளை நிலங்களைப் பாழ்படுத்தி ஹைட்ரோ கார்பன் எடுப்பு என்பதே நிராகரிக்கப்பட வேண்டிய திட்டம். எந்த இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தாலும் அந்த இடம் நச்சுப் பொருட்களால் மரணபூமியாக மாறும். ஆகவேதான் உலகில் பல நாடுகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையே கைவிட்டிருக்கின்றன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற கோரிக்கை!
இனச்சார்பு கொண்ட இந்திய அரசு இத்தகைய நாசகாரத் திட்டங்களை வன்மத்துடன் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதைத் தன் இலக்காகவே கொண்டிருக்கிறது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு காவிரிப்படுகையைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், காவிரிப்படுகை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக " அறிவிக்கப்பட வேண்டும் என்ற சொற் கோவையை உருவாக்கம் செய்து, அக்கருத்தை மக்களிடம் எடுத்துச் சென்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகள், மக்கள் சந்திப்புகள், காவி- ரிப்படுகைப் பாதுகாப்புப் பயணங்கள், பொதுக்கூட்டங்கள், ஒரு கோடி கையெழுத்து இயக்கம், ஆவணப்படம், குறுநூல்கள், விரிவான நூல்கள், இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள் மூலம் காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு,, இக்கருத்தை மக்கள்மயம் ஆக்கியது. இக்கருத்தைப் பல்வேறு அமைப்புகளும் ஏற்றன; அரசியல் கட்சிகளும் ஏற்றுத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறி- வித்தன. இதன் விளைவாகத் தமிழ்நாடு அரசு 20.02.2020 அன்று, தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் - 2020- ஐ இயற்றி அரசாணையாக வெளியிட்டது.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தில் இரண்டு முக்கியப் போதாமைகள் இருக்கின்றன. அவை, (1)காவிரிப்படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் கொண்டு வரப்படவில்லை.
( 2 ) அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை இச்சட்டம் தடை செய்தது. இதுவரை காவிரிப்படுகையைப் பாழாக்கிய பழைய திட்டங்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
இந்த இரண்டு குறைபாடுகளும் உடனடியாக நீக்கப்படுவது அவசியம் ஆகும்.
தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களும், கடலூர் மாவட்டத்தில் 5 வட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வட்டங்களும் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக, கடலூர் மாவட்டம் முழுவதும், அரியலூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகியவையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
தொடரும் பழைய திட்டங்கள்! தொடரும் அபாயங்கள்!
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல மேம்பாட்டுச் சட்டம் -2020, பழைய எண்ணெய் -எரிவாயுத் திட்டங்கள் தொடர்வதைத் தடை செய்யவில்லை என்பதை நல்வாய்ப்பாக ஓஎன்ஜிசி கருதுகிறது. பழைய கிணறுகளில் மராமத்து செய்வதாகக் கூறிக்கொண்டு, மிகப்பெரும் விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை வெறும் பராமரிப்பு வேலைகள் அல்ல. இப்போது முன்னெடுக்கப்படும் மராமத்துப் புதிய வேலைகள், விரிவாக்கம், நவீன மயமாக்கம் (expansion and modernisation) ஆகியவற்றை உள்ளடக்கியது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் புதிய அனுமதியை (Consent to Establish & Consent to Operate) பெறாத நிலையில் இவ்வேலைகள் சட்டவிரோதமானவை.
கச்சா எண்ணெய்க் கிணறுகளும் குழாய்களும் 15 ஆண்டுகளில் அரிமானத்திற்கு உள்ளாகும். இவை நிலத்தடியில் சிதைவுற்று, அரித்துப் போய், இரவும் பகலுமாகக் கசிவுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. பல பகுதிகளில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்து விவசாயத்திற்கான ஆழ்துளைக் கிணறுகள் வழியே கச்சா எண்ணெய் கலந்த நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. சில ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள, கடல் நீரை விடவும் உப்புத்தன்மையுள்ள நீர், எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைப்புச் செயல்பாடுகளால், உப்பு நீருக்கும் நன்னீருக்கும் இடையில் இருக்கும் பாறைத் தடுப்புகள் உடைக்கப்பட்டு விட்டதால், நிலத்தடி உப்பு நீர் நன்னீர் தொகுப்பில் கலந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் நிலத்தடி நீரை முற்றிலுமாக நாம் பயன்படுத்த முடியாமல் போகும்.
நிலம் கெட்டது, நீர் கெட்டது, எண்ணெய்க் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்களின் உடல்நலம் கெட்டது. தோல் நோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை, மருந்தே இல்லாத நோய்கள் எனப் பல பாதிப்புகளை இப்போது உணர்கிறோம். கடந்த காலத்தில் எந்த எண்ணெய்க் கிணறுகள் நம் நிலத்தையும் நீரையும் பாழாக்கியதோ, அவை இன்றுவரை தொடர்ந்து பாழாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, வேளாண் மண்டலத்தில் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்!
பழைய கிணறுகளுக்குள் பக்கவாட்டுக் கிணறுகளை ஓஎன்ஜிசி அமைக்கிறது பழைய எண்ணெய் கிணறுகளின் உள்ளே, 1500 மீட்டர் ஆழத்தில் தொடங்கி, பக்கவாட்டில் சாய்வாக "சைடு ட்ராக்கிங்" (Side Tracking) என்ற பெயரில் புதிதாக குழாய்களை அமைத்து, 3000 மீட்டர் ஆழத்திற்கு கிணறுகளை அமைத்து ஷேல் என்ற களிப்பாறை வரை குழாய்களைச் செலுத்தி எண்ணெய் - எரிவாயு எடுக்கும் திட்டம் ஓ.என்.ஜி.சி.க்கு இருக்கிறது. அபாயகர இரசாயனங்களைப் பயன்படுத்தும் "நவீன தொழில்நுட்பம்" இல்லாமல் இதைச் செய்ய முடியாது!
இந்தத் தொழில்நுட்ப முறை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று. 2021 - இல் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் அனுமதி கோரி ஓஎன்ஜிசி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பித்தது. இவ்விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் மறுக்கப்பட்டன. இராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அறிக்கப்பட்ட விண்ணப்பமும் கிடப்பில் கிடக்கிறது.
படுகையில் நிகழ்ந்த பாதிப்புகள் பற்றிய ஆய்வு அறிக்கை - 2022 எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களால் காவிரிப்படுகை அடைந்த பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய 2021ல் தமிழ்நாடு அரசு நியமித்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் நிபுணர் குழு 2022 &- இல் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து விட்டது. சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையைத் தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடவில்லை. காவிரிப் படுகையையும் தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் பாதுகாக்க, பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழுவின் ஆய்வறிக்கையை வெளியிடுவது சரியான செயல்பாட்டின் தொடக்கப் புள்ளியாக அமையும்.
- காவிரிப்படுகை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளையும் அழிவிலிருந்து காக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் குறிவைக்கும் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் 'ஹைட்ரோகார்பன் தடை மண்டலங்கள்' என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
குமரிமுனைக்குத் தெற்கே ஆழ்கடலில் நாசகாரத் திட்டம்!
குமரிமுனைக்குத் தென்மேற்கே Wadge Bank என்று சொல்லப்படும் பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஆழ்கடற் பகுதியில் 3 பிளாக்குகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கவும், சென்னைக்கு அருகே ஆழ்கடலில் ஒரு பிளாக்கில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கவும் இந்திய ஒன்றிய அரசு ஓ.என்.ஜி.சி, வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இது கடற்பரப்பின் சுற்றுச்சூழலையும், நுண்ணிய உயிரினங்கள், மீன் வகைகள், ஆமைகள், கடல்வாழ் பாலூட்டிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், இருப்புக்கும் நிரந்தரமான முடிவு ஏற்படக்கூடிய நிலை உருவாகும். ஒட்டுமொத்த குமரி மாவட்டமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிக மீன்வளம் மிக்க ஒரு தமிழகக் கடற் பகுதியை இலாப வெறி கொண்ட பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு நாசகாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு அளிக்கிறது.
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரையிலும், மேலும் இராமநாதபுரம் வரையிலும் ஏராளமான எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்படுவதால், இவை கடலுக்குள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலநடுக்கங்களால் கடல் கொந்தளிப்பு, சுனாமி ஆகியவை உருவாக்கப்படும். ஆகவே தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதி, குறிப்பாகத் தமிழகத்தில் காவிரிப் படுகைப் பகுதி மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் தாக்குதலுக்கு உள்ளாக இருக்கிறது. இன்றைக்கு விவசாயப் பகுதியாக விளங்கக்கூடிய நிலப்பரப்பும், மக்களுடைய குடியிருப்புகளான ஊர்களும் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் விரைவில் ஏற்படக்கூடிய சூழல் நிலவுகிறது.
கடலுக்குள் எண்ணெய் கிணறுகள்! காணாமல் போகும் மீன்கள்!
கடற் பகுதியில் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகளால் கடற் பரப்பு முழுவதும் இரசாயனக் கலவைகள் சிந்தியும், கச்சா எண்ணெய் கலந்தும், கழிவுகள் கடல் நீரில் கொட்டப்பட்டும் மிகப்பெரும் சூழல் பாதிப்பு ஏற்பட இருக்கிறது.
கடற்பகுதியில் எண்ணெய் வளத்தை மதிப்பீடு செய்ய நடத்தப்படும் "சீஸ்மிக் ஆய்வு" கடல் வாழ் உயிரினங்களை ஒழித்துக் கட்டும். இதில் இடைவிடாமல் வெடிபொருட்கள் வெடிக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களின் நுண்ணுணர்வு உறுப்புகள் சிதைவுற்று, மீன் இனம் அழிந்து போகும். மீன்கள், கடற்பசு, ஆமைகள் அழிந்து போகும் அல்லது இடம்பெயர்ந்து வேறு இடம் சென்று விடும். மீன்வளப்பெருக்கத்திற்கான இடமாக இருக்கும் சதுப்பு நிலக்காடுகள் காணாமல் போக இருக்கின்றன. தமிழ்நாட்டின் மீன்வளத்தையும், கடல்தொழிலையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் காக்க, நிலப்பகுதியில் மட்டுமின்றி, கடற்பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவேண்டும்.
புவி வெப்பமயமாதல் என்ற புதிய பிரச்சனை
தென்கொரியாவில் இன்சியான் நகரில் கடந்த 2018 அக்டோபர் மாதம் கூடிய அனைத்து நாட்டுப் பருவநிலை ஆய்வுக்குழு (Inter-governmental Panel on Climate Change - IPCC) சில எச்சரிக்கைகளை விடுத்தது. புவி வெப்பமயமாதல் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் நிகழ இருக்கும் பேரழிவைத் தடுக்கவே முடியாது. 2015 டிசம்பரில் பாரிஸில் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாநாடு புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ்க்கு கீழே இருக்கச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தது. இப்போது உள்ளபடி, புவி சராசரி வெப்ப உயர்வு 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு ஏற்பட்டால் எவ்வளவு பேரழிவுகள் ஏற்படும் என்பதைத் தெளிவு படுத்தியது. 2050- க்குள் 1.5 டிகிரி செல்சியஸை புவி வெப்பநிலை தொட்டுவிடும். அப்போது அண்டார்டிகா பனி மலைகள் பாதியளவு உருகிக் கடல் மட்டம் 3 அடி உயரத்தைத் தாண்டும். காவிரிப் படுகை கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் அளவு மட்டுமே உயரம் உள்ளது. கடல் மட்டம் ஓரடி உயர்ந்தால் கூட மாலத்தீவு, இந்தோனேஷியா தீவுக் கூட்டங்கள் கடலில் மூழ்கி விடும். தமிழ்நாட்டின் கடல் நகரங்கள் கடலில் மூழ்கும்.
காவிரிப்படுகை கடலில் மூழ்கும் அபாயம்!
புவிவெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றன. 2100 - இல் உலக அளவிலும் இந்தியாவிலும் பல கடற்கரையோர நகரங்கள் கடலில் மூழ்கப் போகின்றன. 2060 இல் சென்னை நிலப்பரப்பில் 114 சதுர கிலோமீட்டர் கடலில் மூழ்கும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சிச் செய்தியை வெளியிட்டுள்ளனர். காவிரிப்படுகை என்ன ஆகும்? காவிரிப் படுகையிலும் எண்ணெய் -எரிவாயு பெருமளவு நீருடன் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், நிலத்தின் கீழே ஏற்படும் வெற்றிடத்தைச்சரி செய்ய நிலம் கீழ்நோக்கித் தாழ்கிறது. காவிரிப் படுகையில் 75% நிலப்பரப்பு நிலம் தாழ்ந்து கடலுள் மூழ்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India,19 July 2023) ஆங்கில இதழ் தெரிவிக்கிறது.
இதுபோன்றே ஆந்திராவில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகைப் பகுதிகள் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களால் 3 அடி முதல் 6 அடி வரை நிலப் பகுதிகள் தாழ்ந்து போயிருக்கின்றன. இது மிகப்பெரும் கவலையை அப்பகுதிச் சூழலியலாளர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. ஜி கிருஷ்ணராவ் என்ற ஆந்திர பிரதேசப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூகோளவியலாளர், கிருஷ்ணா - கோதாவரிப் படுகையின் உயரம் தாழ்ந்து போவது குறித்து ஆய்வு செய்தார். ஜி. கிருஷ்ணராவ் கிழக்குக் கோதாவரிப் பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி வரை நிலப்பகுதி உள்வாங்கி இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார் (The Hindu, 23 July 2017). இதை ஆய்வு செய்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள படுகை ஆய்வுகள் நிறுவனம் (Delta Studies Institute) தெளிவாகக் காணக்கூடிய அளவில் நிலத்தில் மாற்றங்கள் (noticeable land changes) இருப்பதாக அறிக்கை அளித்தது. கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் என்ன நிகழ்ந்திருக்கிறதோ அது காவிரிப் படுகையிலும் நிகழ்ந்திருக்கிறது.
சான்றாக, மயிலாடுதுறை உள்ளிட்ட பழைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் 165 கிலோமீட்டர் தூரம் உள்ள கடற்கரையின் நிலவியலை ஆய்வு செய்து, அதன் புவியியல் அமைப்பு குறித்து, அது ஒரு "தாழ்வான கடற்கரை மண்டலம்" (the low elevation coastal zone) என்றும், சில பகுதிகள் கடல் மட்டத்தை விடவும் தாழ்வாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் (Times of India, 19 July 2023). காவிரிப் படுகையில் பல கிராமங்கள் கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கின்றன என்பதை அறியப் பலருக்கும் வியப்பாக இருக்கும். சில பகுதிகள் மட்டும் 5 மீட்டர் உயரத்தில் இருக்கின்றன.
காவிரிப் படுகையில் 75% நிலப்பரப்பு நிலம் தாழ்ந்து கடலுள் மூழ்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழ் (19 ஜூலை 2023) ஓர் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கிறது ("submergence due to land subsidence", Times of India, 19 July 2023). அது மட்டுமின்றி, படுகையின் பல இடங்கள் கடல் மட்ட அளவிற்கே, சமமாக இருக்கின்றன (0 m level).
இந்நிலையில் நம் முன் உள்ள கேள்வி இதுதான். கடல் மட்டத்தை விட அதிக உயரத்தில் இல்லாத காவிரிப்படுகையில், மேலும் நிலம் உள் வாங்கினால், அதே நேரம் கடல் மட்டமும் உயர்ந்து வந்தால், காவிரிப் படுகை என்னவாகும்? காவிரிப் படுகையின் பெரும்பகுதி கடலுக்குள் போய்விடும் என்பதை எவராவது நமக்கு உணர்த்த வேண்டுமா? இப்படி ஓர் அபாயம் இருக்கிறது என்பதை இன்னமும் நாம் உணரவில்லை.
காவிரிப்படுகையின் அழிவு இரண்டு பங்கு வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம், காவிரிப் படுகையின் நிலப்பரப்பு மேலும் மேலும் கீழ்நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கிறது; அதே நேரம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. காவிரிப்படுகையின் பெரும் பகுதி கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் அல்லது மூன்று அடி உயரத்திலேயே இருக்கிறது. இது தொடர்ந்தால், காவிரிப்படுகையை நாம் காப்பாற்ற முடியாது. கடலோர மீனவ கிராமங்களையும் நகரங்களையும் பறி கொடுக்க வேண்டி நேரும்.
தேவையான உடனடி நடவடிக்கை
புவி வெப்பமயமாதல் காரணமாகக் காலநிலை மாற்றம் ஏற்பட்டுக் கடல் மட்டம் உயர்ந்து உலகின் பல பாகங்கள் கடலுள் மறைந்து போகும் அபாயம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே புதிய வெப்பமயமாதலைக் குறைக்க, நிலக்கரி, ஹைட்ரோகார்பன்கள், மீத்தேன் உள்ளிட்ட புதைப்படிம எரிபொருட்களைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று உலக அளவில் கருதப்படுகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக உயிர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் பாதிக்கப்படும். ஆகவே உலகைக் காக்க செயல் திட்டம் வகுக்கப்படுகிறது. விலங்குகளும், தாவரங்களும் அழிவதில் இருந்து பாதுகாக்கப்படவும், நோய்களைத் தடுத்து நிறுத்தவும், மக்களை இடப் பெயர்விலிருந்து தடுப்பதற்காகவும், பருவ நிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
2015 -ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தியா உள்பட 200 நாடுகள் இதில் கையெழுத்திட்டன. பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது என்பதை அனைத்து நாடுகளும் இலக்காக ஏற்றன. அவற்றை எப்படிக் குறைக்க இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாடும் தேசிய அளவில் திட்டம் வகுத்து, அந்த விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவும் கூட ஒரு திட்டத்தை வகுத்து 2022 ஆகஸ்டில் சமர்ப்பித்தது.
2023 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கு எதிரான நாடுகளின் 28-வது மாநாடு (COP28) துபாயிலும், 2022 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கு எதிரான 27-வது மாநாடு (COP27) எகிப்திலும் நடைபெற்றன.இத்தகைய மாநாடுகள் 2010 முதல் நடைபெற்று வருகின்றன (Conference of the Parties (COP) to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC).)
2022 - & இல், காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில், இந்தியா மூன்று வாக்குறுதிகளை வழங்கியது.
(1) கார்பன் உமிழ்வை 2030க்குள் 45% குறைக்க வேண்டும், (2) 2030 & க்குள் புதைப்படிவ எரிபொருள் பயன்பாட்டை நிறுத்திவிட்டு, மாற்று எரிசக்தி மூலம் 50% மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.
(3) கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் கட்டுப்படுத்துதல். 2.5 முதல் 3 பில்லியன் டன் வரை கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் வகையில் காடுகளை வளர்ப்பது.
இந்த மூன்று வாக்குறுதிகளை இந்தியா எந்த அளவு நிறைவேற்றி இருக்கிறது என்பது கேள்விக்குறி. காலநிலை மாற்ற மாநாடு 2021 கிளாஸ்கோவில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்தியா 2030க்குள் 'நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை' அடைவது என்ற இலக்கை அறிவித்தது. நிகர பூஜ்ஜியம் என்பது என்ன? பசுமை இல்ல வாயு உமிழ்வும், அது உறிஞ்சிக்கொள்ளப்படும் அளவும் சமமாக இருக்க வேண்டும். அதுவே நிகர பூஜ்ய உமிழ்வு என்பது.
நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கு 2030- ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே உரிய மாற்றங்களைச் செய்யும் என்றும், ஆண்டுதோறும் இரயில்வே 60 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அது போன்று 2030-க்குள் புதைபடிவ எரிபொருள் (நிலக்கரி, பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்டவை) அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50% மின்சாரம் உற்பத்தி செய்வது என்பதும் இலக்காக அறிவிக்கப்பட்டது.
ஆனால், உண்மை நிலை இதற்கு எதிரானது. ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் உற்பத்தி மற்றும் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது சமீபத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில் 60% எரிபொருள் நிலக்கரிப் பயன்பாட்டின் மூலம் இயங்கக் கூடியவை. 2016 இல்தான் மோடி அரசு ஏராளமான ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஹைட்ரோ கார்பன் திட்ட ஏலங்களை நடத்தியது. ஆகவே, 2015 பாரிஸ் மாநாடு நிர்ணயித்த இலக்கு நோக்கி இந்தியா நகரவே இல்லை. நாம் வாழும் நிலப்பரப்பும் இந்த உலகமும் பத்திரமாக இருக்க வேண்டுமானால் புவி வெப்பமயமாதலை ஊக்குவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். அடுத்த தலைமுறைகள் தொடர்ந்து இம்மண்ணில் வாழ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடுவது நம் கடமை.
- பேராசிரியர் த.செயராமன்