உலகத்தார் எதிலும் நடுநிலைமையைத்தான் விரும்புகிறார்கள்!
எழுதப் படிக்கக்கூடத் தெரியாமலிருந்தால் “தற்குறி - கைநாட்டு - கீரல் பேர்வழி” என்கிறார்கள்! பலபட்டங்கள் பெற்று, மேலும் படித்துக் கொண்டேயிருப்பவனைப் பார்த்து “இது ஒரு புஸ்தகப்பூச்சி” என்கிறார்கள்!
துரும்பாக மெலிந்திருப்பவனை நோக்கி, இவன் “ஒரு முருங்கைக் காய்” என்கிறார்கள்! அதிகமாக உப்பியிருப்பவனைப் பார்த்து, இது “டபுள் டிக்கட்; நீச்சல் டயர்; சுரைக்காய் பலூன்,” என்கிறார்கள்!
கந்தல் துணியணிந்து பரட்டைத் தலையுடன் இருப்பவளை நோக்கி, பிசாசு என்பது பொய்; இதுதான் அது,” என்கிறார்கள். இவளுக்கு நேர் மாறாக இருக்கின்ற ஒரு பெண்ணை நோக்கி, “இதோ சினிமா ஸ்டார்! அருமையான மேக் அப்,” என்கிறார்கள்!
பெண்ணாசையே இல்லாதவனை நோக்கி, “பேடி!” என்று கிண்டல் செய்கிறார்கள்! நேர் மாறான எல்லையிலிருப்பவனைக் கண்டால் “இதோ, கிருஷ்ணபரமாத்மா! பொலி காளை!” என்று திட்டுகிறார்கள்!
பரம ஏழையைப் பார்த்து, “இதோ அன்னக்காவடி!” என்கிறார்கள். அதிகச் செல்வம் படைத்தவனை நோக்கி, “இதோ பண மூட்டை! ஊர்க் கொள்ளை! பாட்டாளி இரத்தங் குடித்த மூட்டைப் பூச்சி!” என்கிறார்கள்!
யாருடனும் பேசாமல் மவுனமாயிருப்பவனை நோக்கி, “இது சோளக் கொல்லைப் பொம்மை! பேசா மடந்தை! சுத்த மடச் சாம்பிராணி!” என்கிறார்கள்! சதாபேசுகிறவனைப் பார்த்தாலோ, இவன் நச்சுவாயன்! பெரிய டமாரம்! லொட லொட்டை!” என்கிறார்கள்!
சாதுவாயிருந்தால், “இவன் மண்டு! பெரிய அப்பாவி! ஏமாந்த சோணகிரி!” என்கிறார்கள்! அளவுக்கு மீறிய கெட்டிக்காரனாயிருந்தாலோ, “இவன் மகாவஞ்சகன்; சிரித்துக்கொண்டே கழுத்தை யறுத்துவிடுவான்! அடுத்துக் கெடுப்பதில் அசகாய சூரன்!” என்கிறார்கள்!
“போதும், உன் உதாரணங்கள் - இவைகளெல்லாம் எதற்காகப் பீடிகை?” - என்று நீங்கள் கேட்பதுபோல் தோன்றுகிறபடியால் உதாரணங் களை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
எதிலும் நடுநிலைமையைத்தான் (வயா மீடியா - via media - என்று இங்கிலீஷில் சொல்வதுண்டு) மக்கள் விரும்புகிறார்கள். ஆதலால்தான் அரசியலில்கூட பலர் அங்கு தலையும் இங்கு வாலுமாக (அரசியல் நடு நிலைமை!) க்காட்டி வருகிறார்கள்!
பேசும் சினிமா வந்தபிறகு தமிழ் நாட்டில் நாடகக் கலையே அழிந்து போய்விடுமோ என்று சந்தேகித்தேன். வருந்தினேன். அப்படி அழிந்து போகக் கூடாதே என்பதற்காக இரணியன் வேஷம் கூடப் போட்டு இரண்டு தடவை நடித்துப்பார்த்தேன்!
(அன்றிருந்த வெள்ளையர் சர்க்காருக்கு இரணியன் நாடகத்தைத் தடை செய்யும் பிரஜா உரிமை உணர்ச்சி இல்லை என்பது ஈண்டுக் குறிப்பிடற் பாலது!)
இன்று தமிழ் நாட்டில் நாடகக்கலை நல்ல வளர்ச்சியடைந்திருக்கிறது! மகிழ்ச்சி தரக் கூடியதுதான்! பாராட்ட வேண்டியதுதான்! இதன் கடல் அளவு சேவையில் கடுகளவு எனக்குமுண்டு, மாஜி நடிகன் என்பதனால்! எவ்வளவு சினிமாப் படங்கள் வந்தாலும் இனித் தமிழ் நாடகம் சாகாது என்று உறுதி!
ஆனால்! இதிலும் எல்லை மீறுகின்ற கட்டம் வந்து விட்டது. உயர் தரமான பேச்சாளர் பகலில் பேசினால் ஆயிரம் பேர் வருகிறார்கள்!
அவரே இரவில் பவுடர் தடவிக்கொண்டு, நாடகமேடையில் நடித்தால் பத்தாயிரம் பேர் வருகிறார்கள். நாடகப் பாத்திரத்தை விடப் பல மடங்கு அருமையான கருத்துகளை வாரிக் கொட்டுகிறார், இவரே பகலில்! ஆனால் தமிழ் நாட்டு ரசிகர்கள் வருவதில்லை. சிறப்பாகப் பெண்கள் தலைகாட்டுவதேயில்லை. ரசிகர்களல்லவா? வெறும் பேச்சைக் கேட்பதற்கு எப்படி வருவார்கள்?
தமிழ் நாடே நாடகமேடையாகிவிட்டது! “நாடகமே உலகம்” என்பதும் நினைவிருக்கட்டும்! ஏன்? பலருக்கு வாழ்க்கையே அப்படித்தானிருக்கிறது!
ஸ்டாலினும், மாசே துங்கும், ட்ரூமனும் தமிழ் நாட்டில் ஒரு மேடையில் பேசுகிறார்கள் என்றால் அவ்வளவு கூட்டம் வராது. இவர்கள் மூவரும் நாடகத்தில் நடிக்கிறார்கள் என்றால் மகா மகக் கூட்டம் அப்படியே திரண்டுவரும்!
அந்தக் காலத்தில் ஒரு பெசண்டோ, ஒரு சரோஜினியோ பேசுகிறார்கள் என்றால், கடல்போல வருவார்கள், பேச்சைக் கேட்க! ஆனால் இன்று அவர்கள் மட்டும் இருந்தால், பவுடர் பூசிக்கொண்டு நாடக மேடை மீது வந்தால்தான் தமிழ் மக்கள் மதிப்பார்கள்!
இவ்வளவு கலா உணர்ச்சி வளர்ந்திருப்பது பற்றி எந்த நாட்டாரும் தமிழ் நாட்டைக் கண்டு பொறாமைப்பட வேண்டியதுதான்!
“அய்யய்யோ! பசி தாங்க முடியவில்லையே! மயக்கமாயிருக்கிறதே ஏதாவது கொஞ்சம் போடேன்!” - என்று கணவன் துடிப்பானேயானால், அவன் மனைவி என்ன கூறுவாள், தெரியுமோ?
“நல்லா நடிக்கிறீங்களே! அய்யே! அரிதாரம் பூசாமலே இப்படி நடிக்கிறீங்களே!”-
என்றுதான் கூறுவாள்! உயிரே போய்விட்டால் கூட, தன் கணவன் பிணம்போல் நடிக்கிறான் என்று கூறிவிட்டு, நாடகம் பார்க்கப் போய்விடுவாள்!
நடிப்புக் கலா உணர்ச்சி இமயமலை உச்சிக்குப்போய் விட்டது, நம் தம் செந்தமிழ் நாட்டில்! நடு நிலைமைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம்வேண்டாம்! முத்தமிழ் வளர்ச்சியில் ஒரு தமிழ் முற்றிப் போய்விட்டது! இனிமேல் பழுக்க வேண்டியதுதான் பாக்கி!
- குத்தூசி குருசாமி (27-4-51)
நன்றி: வாலாசா வல்லவன்