kuthoosi guru“ஏனப்பா, இப்படி ஊரார் பொல்லாப்பைத் தேடிக் கொள்கிறாய்? எல்லோருக்கும் நல்லவன் என்று பெயர் எடுக்கக் கூடாதா? உன் தலையெழுத்து ஏனப்பா இப்படிக் கோணலாயிருக்கிறது?” - என்று என் மீது பரிவும் பாசமும் கொண்ட ஒரு பெரியவர் என்னை நோக்கிக் கேட்டார்.

“நான் செய்கின்ற தப்பென்ன? சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்”, என்று கூறினேன். “யார் மீதும் குற்றஞ் சொல்லாதே! எவரையும் கண்டிக்காதே! உலகம் பலவிதமாய்த்தானிருக்கும்! ஊர் ஓட ஒக்க ஓடு! ஊரார் போற்றுகிறவர்களை நீயும் போற்று! கெட்டவன் என்ற பெயர் எடுக்காதே!”

“உண்மையைச் சொன்னால் அது கூடவா தப்பு?”

“ஆமாம்! அதுகூடத் தப்புத்தான். அல்ல; அல்ல! அதுதான் பெரிய தப்பு. சீதையின் கற்பில் இராமனே சந்தேகப் பட்டிருக்கலாம். ஆனாலும் சீதை கற்புக்கரசி என்று ஊரார் சொன்னால், அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

துரௌபதையைப் போலத் தன் தாயோ, மனைவியோ, மகளோ இருக்க வேண்டுமென்று எந்தப் பக்தனும் விரும்ப மாட்டான். இருந்தாலும் அவளையும் கற்புக்கரசி என்று ஊரார் சொன்னால் நீயும் அப்படியே சொல்லிவிட்டுப் போயேன்! உனக்கென்ன நஷ்டம்?”

“அப்படியா? எனக்கு நஷ்டந்தான். அதாவது, என் வீரத்துக்கு நஷ்டம் அறிவுக்கு நஷ்டம்! கோழைகளும் அறிவை அடகு வைத்தவர்களும் வேண்டுமானால் எல்லோருக்கும் நல்லவர்களாக நடக்கட்டும்! என்னால் முடியாது. எனக்கு அவசியமில்லை. சாகத்துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டும்!,” -என்று பதில் கூறினேன்!

“இது உருப்படாது! இதுக்கு நல்ல சுழி கிடையாது. எல்லோரும் இந்தக் காலத்தில் பண மரத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் போது, இது என்னென்னமோ உளறிக் கொண்டிருக்கு!” - என்று தம் பக்கத்திலிருந்த வரைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கூறிவிட்டுப் போய்விட்டார், பெரியவ! இந்தியன் பாங்கியில் 12 டைரக்டர்கள் இருக்கின்றனர். இவர்களில் இரண்டு பேர்தாம் பார்ப்பனர். எட்டுப்பேர் செட்டியார்.

இந்தப் பாங்கியின் செக்ரட்டரி கோபால அய்யர். டெபுடி செக்ரடரி பார்த்தசாரதி அய்யங்கார்! இந்தப் பாங்கிக்கு இருக்கின்ற நூற்றுக் கணக்கான கிளைகளிலும் தலைமை நிலையத்திலும் 100க்கு 99 3/4 பேர் அக்கிரகார வாசிகள்!

இந்தப் பாங்கியின் சூத்திரதாரிகள் தான் பச்சையப்பன் கல்லூரிகளுக்கும் சூத்திரதாரிகள். அங்கும் பார்ப்பன பிரின்ஸ்பால்கள்!

கம்யூனல் ஜீ. ஓ. வாவது கத்தரிக்காயாவது! இதையெல்லாம் கூறினால்தான் பெரியவர் எடுத்துக் காட்டிய “ஊர்ப் பொல்லாப்பு” வருகிறது!

பெரியவர் சொல்வதிலும் கொஞ்சங் கொஞ்சம் நியாயமிருக்கத்தான் செய்கிறது. உலகில் எப்படியாவது காலந்தள்ள விரும்புகிறவன், எல்லோருக்கும் நல்லவனாகத் தான் இருக்க வேண்டும். உலகத்தில் உண்மையைக் கூறி கயமையைக் கண்டிக்கிறவன் உடையார்பாளையம் வேலாயுதம் அல்லது தாலமுத்து - நடராசன் கதிக்குத்தான் ஆளாகவேண்டும்!

பணம் நிறைய வைத்திருக்கிறவன் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்தாலும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மிதமிஞ்சிய விளம்பரம் பெற்றவன் எவ்வளவு இனத்துரோகம், நாட்டுத் துரோகம் செய்தாலும் பரவாயில்லையாம்! ஆனால் என்னைப் போன்றவன் ஒரு சிறு தவறு செய்து விட்டாலோ?...

தவறு கிடக்கட்டும்! நல்ல காரியமே செய்யட்டுமே! பணமூட்டைகள் இந்த ஏழையின் தலையிலே விழுந்து நசுக்கி விடும்! ஆனால், எதற்கும் துணிந்து நின்றால்-? ஆம்! அந்தப் பண்புதான் நம் இளைஞர்களுக்குத் தேவை! மானத்தை விற்ற விலங்கு (சுக) வாழ்வு அல்ல! வீரத்தைப் பெற்ற மனித வாழ்வு! அதுதான் தேவை! அதிகமாகத் தேவை! அவசரமாகத் தேவை!

- குத்தூசி குருசாமி (28-4-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It