kuthoosi gurusamy 300லண்டனில் சில பெண்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு தங்களுக்குத் தரப்படுகின்ற குறைந்த ரேஷன் இறைச்சித் துண்டுடன் பார்லிமெண்டுக்குச் சென்று கூச்சலிட்டார்கள்! ஆண் அரசியல் தலைவர்களின் அரசியல் போதை தெளிவதற்காக!

அவர்கள்தாம் பெண்கள்!

இங்கேயும் இருக்கிறார்களே, நமது பெண்கள்!

ஒரு செட்,- சதா சோப், முகபவுடர், சகிதமாகக் காட்சியளிக்கிறது!

ஒரு செட், - சதா கோவில், குளம், கதா காலட்சேபம், க்ஷத்திர யாத்திரை!

ஒரு செட், திடீர் திடீரென்று பேய்பிடித்து ஆடுதல், ஒப்பாரி சொல்லி ஏ. ஆர். பி. சங்கு மாதிரி பயங்கரக் கூச்சலிடுதல்!

ஒரு செட், ஆனந்தவிகடன் - கல்கி - நாவல் முதலிய உயர்தர அறிவு நூல்களைப் படித்து முன்னேறுதல்!

ஒரு செட், அடுத்த சினிமாப்படம் என்னவென்று கவனித்துக் கொண்டேயிருந்து, ஒவ்வொரு சினிமாவையும் 7-8 தடவை பார்த்து படக்கலை வளர்ச்சிக்கு உதவி செய்து, உடற்கலையைக் குறைத்துக் கொள்ளுதல்!

ஒரு செட், யார் எக்கேடுகெட்டால் என்னவென்று கருதி, கட்டிலை விட்டால் கார், காரைவிட்டால் கட்டில், -என்று நிம்மதியான மதுரை மீனாட்சியம்மன் வாழ்வு நடத்துதல்!

ஒரு செட், சங்கீதம், சினிமா, நாடகம், பரதநாட்டியம் முதலிய அரும் பெருங்கலைகளை வளர்ப்பதாகக் கூறி, சர்க்காரின் ‘தடைச் சட்டங்களை’ மறைமுகமாக மீறிக் கொண்டிருத்தல்!

இந்த விதமாகப் பலவிதமான மாதர் ‘செட்’கள் -இருக்கின்றன, நம் தென்நாட்டில்!

சமையல் வேலை;
பிள்ளை பெறுதல்;
அலங்கார ஆடையணிதல்;
அணிகளைப் பூணுதல்!

- தென்னாட்டுப் பெண்களில் 100க்கு 99 3/4 மேற்படி ஆக்க வேலைகளில் ஈடுபட்டுக் கிடக்கின்றனர்!

வீரப் பெண்களைப் பார்க்க வேண்டுமானால் மேல்நாட்டுப் பத்திரிகைகளை வாங்கிப் படம் பார்த்தால்தான்! அல்லது பழைய புராணம், சரித்திரம், கதை - இவைகளை எடுத்து வைத்துக் கொண்டு அழுதால்தான்!

இன்ன பெண் இன்ன கிளர்ச்சியில் முன்னணியில் நிற்கிறாள்! அடாடா! இந்த மாதிரிச் செய்தியைப் படிக்கவே ஆசையாயிருக்கிறது!

மிகச் சொத்தையான வேலை, மேடைப்பேச்சு என்பது! காரியவாதியான ஸ்டாலின் 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேசுகிறார்! நம் நாட்டுப் பெருந் தலைவர்களைப் பாருங்கள்! மூச்சு விடாத பேச்சு! தொலையட்டும்! இந்தச் சொத்தையான வேலைக்கே தென்னாட்டில் பெண்கள் அகப்பட வில்லையே? சலித்து எடுத்தால் ஒரு டஜன் தேறுமா? சந்தேகந்தான்!

ஆனால் கோவில் திருவிழாவையும் சினிமாக் கொட்டகையையும் பாருங்கள்! ஆயிரக்கணக்கில்! நூற்றுக்கணக்கில்! அத்தனையும் அன்னி பெசண்ட்கள்! ஜோன் ஆஃப் ஆர்க்குகள்! விக்டோரியாக்கள்! ஜான்சி ராணிகள்! மாடம் க்யூரிகள்! மங்கம்மாள்கள்!

நம் சமூகத்திலுள்ள இவ்வளவு கஷ்டத்திலும் நம் நாட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்? கப்! சிப்! “வீரர்களாகிய ஆண் சிங்கக் குட்டிகள், நீங்கள் என்ன செய்து கிழித்து விட்டீர்கள், எங்களைக் கிண்டல் செய்வதற்கு?” - என்று பெண்கள் திருப்பிக் கேட்கலாம்!

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களைப் பற்றி மேலே எழுதியதை மறந்து விடுங்கள்!

வாருங்கள்! ஆண் சிங்கங்கள், பெண் புலிகள் - எல்லோரும் சினிமாவுக்குப் போகலாம்!

- குத்தூசி குருசாமி (24-4-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It