"பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவது வெறும் கவர்ச்சிகரமான விளையாட்டாக இருக்கக்கூடாது, அறிவியல் கண்ணோட்டத்தோடு புரிந்துகொண்ட அறிவாக இருக்க வேண்டும். இல்லையேல், முன்பு பகுத்தறிவுவாதிகளாய் நெஞ்சு நிமிர்த்திய பலர், இப்போது அதிதீவிர ஆன்மீகவாதிகளாய்ப் பணிந்துவிட்டது போன்ற எதிர்மறை விளைவுதான் ஏற்படும்." -இவ்வாறு 'கோடாங்கிக் கோனார் கதை' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

அறிவியல் கண்ணோட்டத்தோடு கூடிய பகுத்தறிவுச் சிந்தனை என்றால் என்ன? முன்பு பகுத்தறிவாளர்களாக இருந்தவர்கள் மட்டும்தான் பிற்காலத்தில ஆன்மீகவாதிகளாய் மாறினார்களா? பொதுவுடைமைவாதிகளில் யாருமே அப்படி மாறியதில்லையா? அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடிய பகுத்தறிவைக் கொள்கையாகக் கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் அதை மக்களிடையே பரவலாக்குவதற்குச் செய்தது என்ன? அதில் அவர்கள் எந்த அளவுக்கு வெற்றிபெற்றார்கள்?

-இத்தகைய சில கேள்விகளை அக்கட்டுரை எழுப்பியிருக்கிறது. விடை தேட வழிவகுக்கிற வினாக்கள் என்றுமே வரவேற்கத்தக்கவை.

அறிவியல் கண்ணோட்டம் என்பதை இரண்டு கோணங்களில் கையாளலாம். ஒன்று - ஒரு தனி மனிதராக அறிவியல் கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை அணுகுவது; இரண்டு - ஒரு இயக்கமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் சமுதாயத்தை அணுகுவது.

மதப் பற்றுள்ள தனி மனிதரைப் பொறுத்தவரையில் - அவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவரானாலும் - இறை நம்பிக்கையும் வழிபாட்டு முறைகளும் அவராகத் தேடித் திரட்டி ஏற்றுக்கொண்டவை அல்ல; "சின்னஞ்சிறு வயதில் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக" என்று அன்பாகவோ, "கடவுள் கண்ணைக் குத்திடுவாரு" என்று அச்சுறுத்தியோ ஏற்றப்பட்ட நம்பிக்கைகளே அவை. சொந்த வாழ்க்கையில், குடும்பத்தில் நிகழும் நல்லது-கெட்டதுகளோடு இணைத்து வளர்க்கப்பட்ட சிந்தனைகள் அவை.

தேர்வுக்குப் பாடத்தை விழுந்து விழுந்து மனப்பாடம் செய்து (புரிந்து அல்ல) தயாராவார்கள். தேர்வு நாள் வந்ததும் போகிற வழியில் அவரவர் சமயம் சார்ந்த ஆலயத்தின் முன்பாக நின்று தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற அருளுமாறு வேண்டிக்கொண்டு போவார்கள். இறைவனே விடைத்தாள் திருத்துநர் உடலில் புகுந்து இந்த வேண்டுதலை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்குமானால் மனப்பாடம் செய்திருக்க வேண்டியதில்லை. படித்ததில் நம்பிக்கை இருக்குமானால் இறைவனைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை.

தொழில் முன்னேற்றம், அலுவலகத்தில் பதவி உயர்வு என்று எல்லா விவகாரங்களிலும் இந்த இரட்டை வாழ்க்கைதான் அநாத்திகவாதிகளுக்கு, பாவம். அரசியலில் கூட, மக்களிடையே பிரச்சாரம் செய்துவிட்டு (பணம், அடியாட்கள் என்று இறக்கிவிட்டும்...), கோவில் கோவிலாய் சிறப்புப் பூசை நடத்துவதைப் பார்க்கிறோம். (இதிலே சிலர் வெளிப்படையாகவே இதையெல்லாம் செய்ய, சிலர் திரைமறைவில் இருந்துகொண்டு தொண்டர்களின் மூலமாகச் செய்ய வைப்பார்கள்.)

இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்கிறவர்கள் ஒரு கவர்ச்சியாக அரை குறைப் பகுத்தறிவைத் தழுவினால் என்ன ஆகும்? மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மட்டும் சாடுகிறவர்கள் இருக்கிறார்கள். "அந்த மதத்தின் கடவுள், இந்த மதத்தின் ஆண்டவன் என்பதில் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட  ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புகிறேன். அந்த சக்திதான் இறைவன்," என்பதாகக் கூறுகிற பகுதிப் பகுத்தறிவாளர்களும் இருக்கிறார்கள்.

முன்பு படித்த ஒரு சுவையான தகவல்: பழங்கால கிரேக்கத்தில் ஒரு பகுதி மக்களின் நம்பிக்கைப்படி 144 கடவுள்கள் உண்டாம். அவர்களது வழிபாட்டுத் தலங்களில் 145 சிறு கோவில்கள் இருக்குமாம். 145வது கோவில் எதற்கு? நமக்குத் தெரியாமல் இன்னொரு கடவுள் இருந்து, அவர் கோபித்துக்கொண்டுவிட்டால் என்னாவது? அதனால் தெரியாத கடவுளுக்காக எதற்கும் இருக்கட்டும் என ஒரு கோவில்!

"மதங்களிலும் சடங்குகளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அனைத்தையும் இயக்குகிற சக்தி இருக்கக்கூடும். அதுதான் கடவுள்," என்பதாக, எதற்கும் இருக்கட்டும் என ஒரு கும்பிடு போட்டு வைப்பவர்கள் அந்த 145வது கடவுளுக்குக் கோவில் வைத்தவர்களைப் போன்றவர்கள்தான்.

பேரண்டப் பெருவெடிப்பு, அணுத்துகள்களின் அவதரிப்பு, அணுக்களின் ஈர்ப்பு, நட்சத்திர மண்டலங்களின் பிறப்பு... இப்படியான அறிவியல் புரிதலோடு இவர்கள் வரலாற்றைப் புரிந்துகொள்வதில்லை. புவிக்கோளில் உயிர்களின் தோற்றம், மனித சமுதாய மாற்றம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்வதில்லை.

மற்றவர்களை விட மாறுபட்டவர்களாய்க் காட்டிக்கொள்வதற்காகத் தங்களை நாத்திகவாதியாய் சித்தரிப்பவர்களாகப் பலர் இருக்கிறார்கள்.

என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் கடவுள் நம்பிக்கையோ, மதப்பற்றோ, குடும்பச் சடங்குகளில் ஈடுபாடோ இல்லாதவன். ஆனால் எங்காவது புறப்படும்போது சிறு தடங்கல் ஏற்பட்டால் புறப்பாட்டை நிறுத்திக்கொள்வான், அல்லது தள்ளிப்போடுவான்! "அது ஒரு விதமான எச்சரிக்கை" என்பான்!

இன்னொரு பகுத்தறிவு நண்பன், ஒரு இடத்திற்குப் புறப்படும்போது ஐந்தடி தொலைவுக்கு நடந்து, பின்னால் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்து மறுபடியும் புறப்படுவான்! அப்படிச் செய்யாவிட்டால் போகிற வேலை சரியாக நடப்பதில்லை என்பான்!

இவர்களே இப்படி என்றால், இறை நம்பிக்கையிலிருந்து விடுபட முடியாதவர்கள், பகுத்தறிவுச் சிந்தனைகளோடு அறிமுகமே இல்லாதவர்கள், கடவுளை வணங்க மறுப்பது ஒழுக்கக்கேடு என்பது போன்ற மிரட்டல் போதனைகளில் வளர்க்கப்பட்டவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்கள்தான் மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையினர். இவர்களிடையேயிருந்துதான் மிகச் சிறுபான்மையினராக பகுத்தறிவாளர்கள் வருகிறார்கள்.

அப்படி வருகிறவர்கள், அறிவியல் உண்மைகளை உள்வாங்கிக்கொள்ளாவிட்டால் என்ன ஆகும்? அறிவியல் உண்மைகள் என்கிறபோது உலகமும் உயிர்களும் எப்படித் தோன்றின என்ற உண்மைகளை மட்டுமல்ல, சக மனிதர்கள் ஏன் கடவுள் நம்பிக்கையில் சிக்கியிருக்கிறார்கள் என்ற சமூகவியல் உண்மைகளையும் சேர்த்தேதான் சொல்கிறேன். சமுதாய வரலாற்றில் நிகழ்ந்த வர்க்க/வர்ணக் கட்டமைப்புகள், அதையொட்டி ஊட்டப்பட்ட இறை நம்பிக்கைகள், உருவாக்கப்பட்ட சடங்குகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதும் ஒரு இன்றியமையாத் தேவை.

அந்தப் புரிதல் இல்லை என்றால், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்பது போன்ற பரிகாசங்கள்தான் மேலோங்கும். அறிவின் அரவணைப்பிற்குள் வந்தவர்கள் அப்படி வரமுடியாமல் போனவர்களை முட்டாள்கள் என்று சொல்வதிலே என்ன அறிவுடைமை இருக்கிறது? அல்லது என்ன பரிவுடைமை இருக்கிறது? "நாங்க முட்டாளாவே இருந்துட்டுப்போறோம், நீங்க அறிவாளியா நல்லா இருங்க," என்று அவர்கள் வெறுத்து ஒதுங்கவே வழிவகுக்கும். அதுதானே தமிழகத்தில் நடந்தது? (இதைச் சொல்வதால், தமிழகத்தில் பெரியார் மேற்கொண்ட இயக்கத்தின் விளைந்த பலன்களை நான் மறுப்பதாகாது. உணவகங்களின் பெயர்களின் பெயர்கள் மட்டுமல்லாமல் மனிதர்களின் பெயர்களுக்குப் பின்னாலும் ஒட்டப்பட்ட சாதி வால்கள் வெட்டப்பட்டது, சமூக நீதிக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது, பெண்ணுரிமைக் குரல் வலுப்பெற்றது ஆகியன போன்ற ஆக்கப்பூர்வ மாற்றங்களின் மீது எனக்கு முழு மரியாதை உண்டு.) அறிவியல் அடிப்படையில் அண்டத்தின் உண்மைகளையும் ஆண்டவன் பற்றிய புனைவுகளையும் புரிந்துகொள்ளத் தவறுகிறபோது என்ன நடக்கும்? மதங்களுக்காக இயற்றப்பட்ட புராணக் கதைகளின் அபத்தங்கள், ஆபாசங்கள், பாகுபாடுகள் ஆகியவற்றை மட்டும் சாடுகிற  ஒரு இளவயதுக் கவர்ச்சியாக, மாறுபட்டவராய்க் காட்டிக்கொள்கிற முயற்சியாக மட்டும் அது சுருங்கிவிடும்.

இவ்வாறு சுருங்கிக்கொண்ட ஒருவரது வாழ்வில் ஏதேனும் சோக நிகழ்வுகள் ஏற்படுகிறபோது, ஏதேனும் வீழ்ச்சியைச் சந்திக்கிறபோது, தனிப்பட்ட தவறுகளால் சரிவடைய நேரிடுகிறபோது (வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பு என்ற ஞானமின்றி) "நீ இறைவனை நிந்தித்ததால்தான் இந்த நிலைமை" என்று உற்றார் உறவினர்கள் சொல்வார்கள். அப்படிச் சொல்லக்கூடிய நாலு பேர் எப்போதும் வருவார்கள். அதைக் கேட்டு மனதில், "ஒரு வேளை இவர்கள் சொல்வதுதான் சரியோ" என்ற ஐயம் முளைவிடும். படிப்படியாக அவர் முன்பு நாத்திகராக இருந்ததற்கு நேர்மாறான முழு அநாத்திகவாதியாக ஆன்மீகக் கடலில் நீந்துகிறவராக மாறிப்போவார். இல்லையேல், முதலில் குறிப்பிட்ட பகுதிநேரப் பகுத்தறிவாளராக வலம் வருவார்.

மார்க்சிய இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியிருந்த ஒரு தோழருக்கும் கூட இப்படி நிகழ்ந்ததுண்டு. மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் முன் நின்றவர் அவர். ஒரு கடுமையான நோயில் சிக்கி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் மருத்துவ மனையிலும் வீட்டிலுமாகக் கிடக்க நேர்ந்தது அவருக்கு. வேலையை விட வேண்டியதாயிற்று. அதனால் பொருளாதார பலத்திலும் பலத்த அடி விழுந்தது. அப்போது அந்த நாலு பேர் அடிக்கடி வந்துபோனார்கள்.

ஒரு வழியாக உடல் தேறியபோது, "விதி என்ற ஒன்று இருக்கவே செய்கிறது," என்று சொல்லத் தொடங்கினார். பின்னாட்களில், "கோள்களின் நிலைக்கும் மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் தொடர்பிருக்கிறது," என்றார். நாட்களின் ஓட்டத்தில் ஜாதக வல்லுநர் என்று பெயர்பெற்றார். கோவில் விழாக்களில் முன்னின்றார். இறுதியில் இயக்கத்திலிருந்து ஒதுங்கிப் போனார்.

ஒரு முழுமையான பகுத்தறிவுவாதியாக இருப்பதும் முற்போக்கான இயக்கங்களில் பங்கேற்பதும் அறிவியல் புரிதலுடன் இருந்தாக வேண்டும் என்ற தேவையைத்தான் இத்தகு நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களை உதாரணம் காட்டி "ஒவ்வொரு நாத்திகவாதியும் தவறை உணர்ந்து திருந்துவார்" என்று அநாத்திகவாதிகள் கதாகாலட்சேபம் செய்வதற்குத் தோதாகிறது.

தனிப்பட்ட முறையில் ஒருவர் இவ்வாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டாக வேண்டும் என்கிறபோது, மக்களிடையே இக்கருத்துகளைக் கொண்டு செல்கிறவர்களுக்குப் பல மடங்கு அக்கறையும் பக்குவமும் பரிவும் அறிவியல் பார்வையும் தேவை.

அப்படிப்பட்ட ஒரு அறிவியல் பார்வைதான், இறை நம்பிக்கை உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் வளர்வதற்குக் காரணமான அடிப்படைகளை மாற்றியாக வேண்டும் என்பது. மார்க்சிய இயக்கம் இதைத்தான் முன்னிலைப்படுத்துகிறது.

இதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது? தொடர்ந்து விவாதிப்போம்... 

-அ. குமரேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It