எங்கெல்லாம் எப்போதெல்லாம் அதிகார ஆதிக்க சக்திகள் தங்களின் கோரமுகத்தை பல்லிளித்து வெளிக்காட்டியதோ அங்கெல்லாம் அப்போதைக்கு அப்போது தனது கோபாவேசத்தை தன் எழுத்து களால் சமூகப்போர்ப்பரணி பாடியவர் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள்.
பிறழாத தமிழ்ப்பற்றும் தீராத விடுதலை உணர்வுத் தாகமும், சாதிமத சனாதனங்களுக் கெதிரான கோபமும், எளிய மனிதர்கள் மீதான பிரியமும் நேசமும், பெண்ணுரிமைப் போற்றுதலும் கொண்டதான தம் வாழ்வின் எந்தத் தருணத்திலும் தன்னை எவ்வித சமரசத்திற்கு உட்படுத்திக் கொள்ளாத பண்பு அவருடையது. ஒடுக்கப் பட்டோருக்காக உரத்து ஒலித்த அவரது குரல் 1-12-2016 அன்று 73வது வயதில் இயற்கையை நோக்கித் திரும்பி விட்டது.
அறுபதுகளில் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த திராவிட இயக்கப் போராட்டங் களில் நாட்டங்கொண்டு தனது அரசியல் வாழ்க் கையைத் தொடங்கிய தோழர் இன்குலாப் மொழிப் போராட்ட உணர்வெழுச்சி அலையில் தன்னை முழுவதுமாக உட்படுத்திக்கொண்டவர். கல்லூரியில் பணியாற்றத் தொடங்கிய பிறகும் தனது அரசியல் கோட்பாடுகளிலிருந்து சற்றும் விலகாமல் மார்க்சியப் பாதையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அதிகார வர்க்கத்திற்கெதிராகவும் தனது ஆழ்ந்த செயல்பாடுகளை எழுத்தாலும் பேச்சாலும் இட்டு நிரப்பிய களப்போராளியாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டவர். தன்னுடைய மத அடை யாளங்களைத் துறந்து சாதி மதப் பண்புகளுக் கெதிரானவராக தன்னை வரித்துக்கொண்டு செயல்பட்டவர்.
திராவிட ஈழத்தமிழர் போராட்டங்களில் பன்னெடுங்காலமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வந்த தோழர் இன்குலாப். ஈழ இறுதிப்போரான முள்ளிவாய்க்கால் சண்டையின் போது தமிழ்நாடு அரசு மெத்தனமாக நடந்து கொண்டதைக் கண்டிக்கும் விதமாக அவருக்கு 2006ம் ஆண்டு தமிழக அரசு வழங்கியிருந்த ‘கலைமாமணி’ விருதைத் திருப்பித் தருவதாக அறிவித்து தனது எதிர்ப்புணர்வைப் பதிவு செய்தார்.
கூலி உயர்வு கேட்டுப் போராடிய தோழர்கள் 44 பேரை வெண்மணியில் ஒரு குடிசையில் வைத்து சாதியாதிக்கமும் நிலவுடைமைத் திமிரும்கொண்ட ஆதிக்கச்சக்தியினர் தீயிட்டுக் கொளுத்திய நிகழ்வு அவரது உள்ளத்தில் நீங்காத நினைவாய் உறைந் திருந்தது. பின்னாளில் வெண்மணியில் எரிக்கப் பட்ட தோழர்களைத் தீண்டிய அந்தத் தீயின் கங்குகளையே சொற்களாக்கியதுபோல் இன்குலாப் தீட்டிய வரிகளைக் கேட்டவர்களின் நரம்பு மண்டலமே தெறித்துப் புடைக்கின்ற வகையில் பதிவு செய்தவர் தோழர் இன்குலாப். தமிழ்ச் சமூகத்தில் தலித் மக்கள் எழுச்சியடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது பாடல் வரிகளை மறைந்த ‘மக்கள் பாடகர்’ தோழர் கே.ஏ.குணசேகரன் தன் ஆவேசக்குரலில் பாடி தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தார். தலித் இயக்கங்களின் வீரியமிக்க வளர்ச்சியில் இன்குலாப்பின் இப்பாடல் வலிமைமிக்கதொரு பங்காற்றியது என்பதை மறுக்கவியலாது.
‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணெய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க - டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப்போல அவனப்போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா’
வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் தீவிர மாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த இன்குலாப் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பை மீராவின் அன்னம் பதிப்பகம் 1981ம் ஆண்டு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அவரது பல கவிதை நூல்கள் வெளிவந்து தமிழ்ச்சமூகத்தில் மேலதிக கவனத்தைப் பெறலாயின.
வறட்டுத்தனமான அரசியல் கவிதைகளாக அல்லாமல் கவித்துவத்தோடும் தனித்துவத்தோடும் அழகியல் தன்மையோடு அமைந்தவை அவரது கவிதைகள். பிற அரசியல் கவிஞர்களுக்கும் அவருக்குமுள்ள இந்த வித்தியாசமே அவரது கவிதைகளுக்கும் அவருக்குமான சிறப்பாகும். அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்க் கவிதை வானில் ஒளிவீசும் செஞ்சுடராக அவர் தனித்து விளங்கினார் என்பது காலத்தின் பெரு மிதங்களில் ஒன்று.
90களின் காலக்கட்டத்தில் கவிதைகளோடு சேர்த்து நாடகத் துறையிலும் ஆர்வம் செலுத்தினர் தோழர் இன்குலாப். நாடகத் துறையில் செயலாற்றிக் கொண்டிருந்த தோழர் மங்கை மற்றும் சிலருடன் இணைந்து கவிதா நிகழ்த்துக்கலைகளில் தீவிரமாகப் பங்காற்றினார்.
தமிழ்ச் சூழலில் கவிதா நாடக நிகழ்த்துக் கலையின் முன்னோடி இன்குலாப் அவர்களே ஆவார். அவரது கவிதா நாடகங்கள் தமிழில் ஏராளமான உன்னதங்களோடு நிகழ்த்தப்பட்டு அளப்பரிய கவனத்தைப் பெற்றது. கவிதா நாடகத் துறையில் அவரது செழுமையானப் பங்களிப்பு பல்வேறு சாதனைகளைக் கொண்டதாகும்.
‘இலக்கியம் என்பது ஒரு கலை, அதனால் கலைத்தரத்தில் மேம்பட்டதாக இலக்கியம் இருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செய்கிற இலக்கி யங்கள் தான் சமூகத்துக்கு அதனுடைய இலக்கியச் சுவை உணர்வை வளர்ப்பதிலும் மனித உணர்வு களை மேம்படுத்துவதிலும் உதவும்’ என்பதில் அழுத்தமான பற்றுதல் கொண்டிருந்த தோழர் இன்குலாப் அதில் எள்முனையளவும் பிசகாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தநிலையில் சென்ற மாதம் தன் முடிவில்லா யாத்திரையைத் தொடர்ந் திட்டார். அவரைப் புதைக்கவோ எரிக்கவோ அல்லாமல் அவரது விருப்பப்படி தோழர்களால் அவரது உடலம் அரசு மருத்துவமனைக்கு உவந் தளிக்கப்பட்டது. காலமெல்லாம் தமிழ்ச் சமூகத் துக்காகக் குரலெழுப்பியவரின் உடற்சதையும் தன் பங்களிப்பைத் தரவல்லவொன்றுதானே1
தன் வாழ்நாளெல்லாம் எளிய மனிதர்களுக் காகவும் சமூகநீதிக்காகவும் மானுட விடுதலைக்காகவும் ஓங்கி ஒலித்த அவரது குரல் எத்துனை காலமானாலும் தமிழ்நிலத்தில் ஒலித்துக்கொண்டே யிருக்குமென்பதை யாரால்தான் மறுக்கவியலும்?