periyar and kundrakudi adikalar on stage"நான் தேவிடியாள் மகனாய் இருக்கக்கூடாது. உன் ஆட்சியிலே உன் சட்டத்திலே அப்படித்தான் இருக்கும் என்றால் உன் ஆட்சியை மாற்ற உன் சட்டத்தை நெருப்பு வைத்துக் கொளுத்துவேன்"

சென்னை தியாகராய நகரில் சிந்தனையாளன் மன்றம் சார்பில் 19.12.1973 அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் அனல் தெறிக்கும் சில வரிகள் இவை. இந்த உரைதான் அவர் வாழ்நாளின் இறுதிச் சொற்பொழிவாக, மரண சாசனமாக மாறிப்போனது.

பெரியாரின் இந்த இறுதிச் சொற்பொழிவைக் கேட்பதும் வாசிப்பதும் நம்முள் பல வகையான உணர்வுகளை கடத்தும். கருவறைக்குள் இருக்கும் தெய்வங்களை இழுத்து முச்சந்தியில் நிறுத்தி, தோல் உரித்து காட்டிப் பரிகாசம் செய்வார்.

ஆரியர்களை வெளியேறச் சொல்லி ஆவேசமாய் பேசிக்கொண்டிருக்கையில் , விரைப்பை வீக்கம் கொடுக்கும் உயிர் வருத்தும் வலியை 'அம்மா, அம்மா, அம்மா' எனக் கதறி ஆற்றுப்படுத்தி, 'மரியாதையா போ ரகள வேண்டாம், நீ இல்லனா எங்களுக்கு என்ன நட்டம்?' என பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துவார்.

தமிழர்கள் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருப்பார்கள் என நம்பிக்கை ஊட்டுவார். ஆனால், தனது இத்தனை ஆண்டு பொது வாழ்வுக்குப் பின்னரும் நூற்றுக்கு 97 பேராக இருக்கும் இந்த திராவிட இனம், ஐந்தாம் சாதியாக, நாலாம் சாதியாக, பார்ப்பானுக்கு வேசி மகனாக, மான உணர்வு அற்று வாழ்வதையும்,  சட்டம் அதனை அனுமதிப்பதையும் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையின் வெளிப்பாடாகவே அந்த உரை அமைந்திருக்கும்.

சட்டப்படி இன்றும் சூத்திரர்களே...

அந்தக் கிழவன் இறந்து 48 ஆண்டுகள் ஆகிறது, இன்றும் நாம் சாஸ்திரப்படி, சட்டப்படி சூத்திரனாக தான் இருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையை ஒழித்ததாகச் சொல்கிறது. ஆனால் சாதியைக் கடைபிடிக்க அது எந்தத் தடையும் விதிக்கவில்லை.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியலமைப்புச் சட்ட விதி 14. அதே சட்டம் தான் மதங்களின் உள்விவகாரங்களில் அரசு தலையிடாது அதற்கு சுதந்திரமும் அளித்துள்ளது. அப்படியானால் சாதி இந்து மதத்தின் உள் விவகாரம்,  அதற்கு எந்தத் தடையும் இல்லை.

சாதி இருக்கும் வரை பார்ப்பான் இருப்பான், பார்ப்பனன் என்று ஒருவன் இருக்கும் வரை நாம் எல்லாம் சூத்திரர்கள் ஆகத்தான் இருக்க முடியும். சட்டமே நம் மீது சாதி இழிவை திணிப்பதை எதிர்க்கவே அரசியலமைப்புச் சட்டத்தில் சில விதிகளை கொளுத்தும் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார். தனது இறுதி சொற்பொழிவுகளிலும் அச் சட்டங்களுக்கு எதிரான கிளர்ச்சிக்கே அவர் மக்களை அழைத்தார்.

செயல்களத்தின் பரப்பை சுருக்கி பார்க்கிறோமா?

பெரியார் தன் வாழ்நாளில் முன்னெடுத்த ஒவ்வொரு போராட்டமும், அரசியல் நடவடிக்கைகளும், கட்டிய இயக்கங்களும் சாதியக் கட்டமைப்பை ஏதோ ஒரு வகையில் தகர்க்கும் நோக்கத்தையே கொண்டதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பெரியாரை ஏற்றுக்கொண்டவர்களும் கூட தங்களுக்கு வசதியான ஓரிரு கோணங்களிலிருந்து பெரியாரை பார்த்துவிட்டு அதுதான் பெரியாரின் முழுமையும் என்கிறார்கள்.

தமிழ்த்தேசிய சார்புடையவர்கள் தனித் தமிழ்நாடுதான் பெரியாரின் லட்சியம் என்கிறார்கள். வறட்டு நாத்திகம் பேசும் பலர் கடவுள் எதிர்ப்பு தான் பெரியார் என்கிறார்கள். சிலருக்கு இட ஒதுக்கீடு மூலம் அதிகாரக் கட்டமைப்பில் பிரதிநிதித்துவம் பெறுவது வரை தான் பெரியார் தேவைப்படுகிறார். சிலரது பெரியாரியம் இங்கு திமுக ஆதரவுடன் முடிந்து போகிறது.

மேல் சொல்லப்பட்ட அனைத்தையுமே பெரியார் ஒரு கட்டத்தில் செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெரியார் இதுபோன்ற காலத்திற்கேற்ப சில போராட்ட வடிவங்களை, கோரிக்கைகளை, கட்சி ஆதரவு நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலமாக காலமெல்லாம் பார்ப்பனியம் நிலைபெற்று இருக்கிற பண்பாட்டு அடித்தளத்திற்கு எதிரான செயல்பாடுகளையே கட்டமைத்தார்.

தங்களது சார்புநிலைகளின் அடிப்படையில் மட்டுமே பெரியாரை புரிந்து கொள்ள நினைப்பவர்கள் அவரது செயல்களத்தின் பரப்பை மிகவும் சுருக்கி புரிந்து கொள்கிறார்கள்.

தனித்தமிழ்நாடே சர்வரோக நிவாரணி என்று கூறியவராக பெரியாரைச் சித்தரிப்பவர்கள், பெரியார் தனது கடைசி பேச்சில் கூட தமிழர்களாகிய நாம் கிளர்ச்சி செய்வதன் மூலம் இந்தியா முழுக்க இருக்க சூத்திர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம், அவர்களுக்கு நம்முடைய செய்தி சென்று சேராமல் இருக்கிறது என்று கரிசனப்பட்டதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

பெரியாரின் திமுக ஆதரவை முதன்மைப் படுத்துபவர்கள், அவர் தேர்தல் காலங்களில் ஒரு கட்சியை ஆதரித்து பரப்புரை செய்தார், ஆனால் அதற்காக என்றைக்குமே அத்தோடு தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது இல்லை, தான் ஆதரிக்கும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சாதி ஒழிப்புக்கான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து அவர்களுக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

பெரியாரை வெறும் வறட்டு நாத்திகவாதியாக மட்டும் புரிந்து கொள்பவர்கள், அவர் 'இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து' என்றது, அம்பேத்கரின் மதமாற்ற நடவடிக்கைகளை முழுமனதாக ஆதரித்தது, ஆகிய அவரது நிலைப்பாடுகளுக்கு, சாதி இழிவில் இருந்து விடுபட விரும்பி அதேசமயம் கடவுள் மதம் என்ற பிடிப்பு தேவைப்படும் எளிய மக்களுக்கு வழிகாட்டுவதே அடிப்படையாக அமைந்தது என்பதை ஆராய மறுக்கிறார்கள்.

நாம் எங்கு வந்து நிற்கிறோம்..

இன்று எவனாவது ஒரு சங்கி 'பெரியாரிஸ்டுகள் இந்து கடவுள்களை எதிர்க்கும் அளவிற்கு மற்ற மத கடவுள்களை எதிர்ப்பது இல்லையே ஏன்?' என்று அரைவேக்காட்டுத் தனமாக கேள்வி கேட்டால், நாமோ 'பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னால் எந்தக் கடவுளும் இல்லை என்பதுதான் பொருள்' என மிக சவுகரியமான பதிலைச் சொல்லி அவனை ஆசுவாசப்படுத்தும் நிலைமைக்கு வந்திருக்கிறோம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கூட்டங்களில் பேசிய விஷயங்களை இன்றைக்குப் பெரும்பாலும் கருத்தரங்குகளில் மட்டும் தான் பேச முடிகிறது என்ற முகத்தில் அறையும் நிஜத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெரியார் வாழ்ந்த போது தமிழ்ச் சமூக வெளியில் அவ்வப்போது வீசி வந்த வெடிகுண்டுகளை பற்றி இன்றைக்கு நாம் பெருமையாக பேசுகிறோமே தவிர, நம்மால் ஒரு சமூக அதிர்வை உருவாக்க முடியவில்லை.

இங்கு இந்துத்துவத்தை பேசி ஓட்டு வாங்குபவர்கள் கட்டுத்தொகை மீட்கத் தேவையான வாக்களிப்பைக் கூட தாண்டுவதில்லை என்று நாம் பெருமை பேசுகிறோம். ஆனால் அன்றைக்கு பெரியார் எனும் பெருங்கிழவன் உந்தித் தள்ளிய விசையினால்தான் இன்று தமிழ்நாட்டின் வண்டி முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய நாம் பெரியாருக்கு பின்பு ஒன்றுமே செய்யவில்லையா என்ற கேள்வி பலருக்கு எழலாம். நாம் அந்த வண்டி முன்னே செல்வதற்கு ஒத்தாசை செய்கிறோமே ஒழிய, இடையில் போடப்படும் முட்டுக் கட்டைகளை கொஞ்சம் நகர்த்தி வைக்கிறோமே தவிர, உந்தித் தள்ளும் விசையாக அது மாறவில்லை.

இந்துத்துவ சக்திகள் இன்று ஆக்ரோஷமாக முன் நகர்கிறார்கள் என்றால் அவர்கள் இந்து ராஷ்டிரம் அமைப்பதே ஒற்றை இலட்சியம் என்ற புள்ளியில் இணைந்திருக்கிறார்கள். அதனால் கால சூழலுக்கு ஏற்றவாறு அவரவர் தனது நிலைப்பாடுகளை முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டு ஒத்திசைவுடன் செயல்படுகிறார்கள்.

அவர்களின் சித்தாந்தத்தை அழித்தொழிக்க வேண்டுமானால் சனாதன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்ற ஒற்றை இலட்சியத்திற்காக, நமது சார்பு நிலைகளை முதன்மைப்படுத்தி சிந்திக்கும் தளத்திலிருந்து நகர்ந்து, கால சூழலுக்கு ஏற்றவாறு பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளை, வியூகங்களை தொடர்ந்து ஓரணியில் நின்று செயல்படுத்த வேண்டும்.

இறுதி முழக்கம் சொல்லும் செய்தி..

பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கியபோது கூட்டங்களில் காலித்தனம் செய்தவர்கள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ சகித்துக்கொள்ளும் நிலைமைக்கு வந்து இருந்தார்கள். ஏனென்றால் சாதி ஒழிப்பு,  சமூக நீதி என்பதை ஒட்டுமொத்த சமூகத்தின் பொது விவாதமாக அவர் மாற்றியிருந்தார்.

இன்று நாம் இங்கு தான் துவண்டு போய் இருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் இளைஞர்களில் ஒரு சாரார் 'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?' என இயல்பாக சாதி என்னும் முதன்மைச் சிக்கலை புறக்கணிக்கிறார்கள். மற்றொரு தரப்பு இளைஞர்கள் சுய சாதி பெருமிதத்தை பிறப்புரிமையாக கருதுகிறார்கள்.

தலித்துகளை எதிரிகளாகச் சித்தரித்து, பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒருங்கிணைக்கிறார்கள். இவர்களுக்கு சாதி ஒழிப்பு என்பது அவசியமற்ற வேலையாகப் போய்விட்டது. இவ்வாறு சாதி தனது இருப்பை, வெற்றியோடு இருவகையில் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில்  மீண்டும் காத்திரமான சாதி ஒழிப்பு குறித்த சமூக உரையாடல் உருவாக வேண்டியது அவசியம். நாம் துவங்க வேண்டிய இடம் இதுதான் என்பதே பெரியாரின் இறுதி முழக்கம் நினைவூட்டும் முதன்மைச் செய்தி.

- குண சந்திரசேகரன்

Pin It