kuthuoosi gurusamy“சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றினாலும் மாற்றும்; பிராமணன் தன் ஜாதி வெறியை மாற்றிக் கொள்ள மாட்டான்”, என்றார் காலஞ் சென்ற நீதிக்கட்சித் தலைவர்! வைரம் பாய்ந்த அநுபவத்தின் மீது தான் அவர் இப்படிக் கூறியிருக்க வேண்டும்!

எனக்கு எத்தனையோ பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள். உங்களிலும் பல பேருக்கு இருப்பார்கள். நாம் எவ்வளவு தான் நாய் மாதிரி நன்றியுடன் பழகினாலும் அவர்கள் என்னவோ, பூனை மாதிரித்தான் பழகுகிறார்கள்! பாவம், ஏதாவது பரம்பரை நோயாக இருக்குமோ என்னவோ, தெரியவில்லை! ‘பென்சிலின்’ மாதிரி, நம் நாட்டு பிராமணர்களின் இந்தத் தீராத நோயைத் தீர்ப்பதற்கு, வெளிநாட்டார் ஏதாவதொரு இஞ்செக்ஷன்! மருந்து கண்டுபிடிப்பதானால் திராவிடர் கழகத்தார் ஒரு லட்ச ரூபாய் உண்டியல் பிச்சை எடுத்தே கொடுத்து விடக் கூடத் தயாராயிருக்கிறார்கள்!

பெரிய உத்தியோகத்திலிருக்கும் ஒரு நல்ல பிராமண நண்பர் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கமிட்டிக் கூட்டத்தில் சந்தித்தோம். கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்தார்.

“என்ன மிஸ்டர், நம் நாட்டரைப் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசினீர்களே! எந்த நாட்டிலேதான் மூட நம்பிக்கைகள் இல்லை? இராகு காலத்தைப் பற்றி இவ்வளவு கடுமையாகக் கூறினீர்களே!” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது! ஏனென்றால் இவர் ஒரு பரிபூர்ண பகுத்தறிவுவாதி! பூணூல் இல்லாதவர். ஜாதி- மதம் கடந்தவர்! நல்ல படிப்பாளி! அதோடு பரந்த நோக்கங் கொண்டவர்!

முதுகில் கத்தியால் குத்தப்பட்ட ஜூலியஸ் சீசர் ப்ரூட்டசைப் பார்த்துக் கேட்டது போல், “நீங்கள் கூடவா நான் பேசியதைக் கண்டிப்பது?” என்று பெருமூச்சு விட்டுக் கேட்டேன். அவரிடம் நான் வேறெதுவும் பேசமுடியவில்லை. அவ்வளவு ஆசையும் மதிப்பும் அவரிடம் எனக்குண்டு, உடனே நீதிக்கட்சித் தலைவர் சொன்னது என் காதில் ஒலித்தது! மறக்கமுடியாத மூல மந்திரம், அது! சந்தேகமில்லை!

சர். சி. பி. ராமசாமி அய்யர் (இவரே அய்யர் என்றால், என் பேனா கூட அய்யர் தான்!) ட்ரூமெனுக்குப் பதிலாக அமெரிக்கத் தலைவராகி விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்? பதவியேற்று மறு நிமிஷமே, முதல் பேச்சிலேயே சம்ஸ்கிருதத்தின் பெருமை பற்றிப் பேசுவார்! பகவத் கீதையின் தத்துவத்தை விளக்குவார்! ட்ரூமனோ, அட்லியோ பைபிளைப் பற்றியாவது ஏசுநாதரைப் பற்றியாவது பேசுவதுண்டா? இல்லவே இல்லை அந்த வேலை மத குருமார்களுடையது என்பது அவர்கள் முடிவு! ஆனால் நம் மந்திரிகளையும் கவர்னர்களையும், மாஜி கவர்னர் -ஜெனரலையும், குடியாட்சித் தலைவரையும் பாருங்கள்? அடாடா! சதா கடவுள் பஜனை! அல்லது புராண- இதிகாச காலட்சேபம்!

நம் ஆச்சாரியார் இருக்கிறாரே! அவரை ஸ்டாலினுடைய இடத்தில் (கனவில் கூட காணமுடியாது என்றாலும்) ஒரு மாதத்துக்கு ஆக்டிங்காக உட்கார வைத்துப் பாருங்கள்! உட்காரும் போதே, ஸ்ரீராமச்சந்திரா, நமோ, நாராயணா!” என்று சொல்லிக் கொண்டு தான் உட்காருவார்! பக்கத்திலிருக்கிற ரஷ்ய மெய்காப்பாளர், “என்ன சொன்னீர்களய்யா?” என்று கேட்பார்! உடனே தொடங்கிவிடுவார், தம் வேலையை! அதாவது இராமாயண பிரசாரத்தை! ரஷ்யாவில் வயிற்றிலிருக்கும் குழந்தை தவிர மற்றெல்லோர் காதிலும் ‘ராமா! ராமா! கிருஷ்ணா! கிருஷ்ணா! -என்று முழங்குவார்!

ஏன் இவர்கள் மட்டும் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்கலாம்! ஒரு ராமசாமி முதலியாரோ, ஒரு ஷண்முகமோ, வெளிநாடுகளில் தமிழைப் பற்றியோ குறளைப் பற்றியோ பேசுகிறார்களா? இல்லவே இல்லை! இவர்கள் மொழிப்பற்று இப்படி! ஆனால் அக்ரகாரத் தலைவர்கள் மட்டும் தங்கள் மொழி, தங்களை உயர்த்திய அவதாரங்கள்-கடவுள்கள்-புராணங்கள் இவைகளை மறப்பதே யில்லையே அது ஏன்?

அது தான் அவர்கள் இனத்தின் சக்தி! அதாவது நம்மைப் பொறுத்த மட்டில் தீர்க்கமுடியாத நோய்!

தியாகி அண்ணாமலைப் பிள்ளைக்கு (அவருடைய ஏழ்மையைப் போக்குவதற்காக) ஒரு பண முடிப்புக் கொடுக்கப்பட்டது, வேலூரில்! அதற்கு ஆச்சாரியார் ஒரு ஆசிச் செய்தி அனுப்பியிருந்தாராம். வெறும் செய்தி மட்டுமல்ல! சர். சி. பி.க்கோ மற்றொரு பூணூல் தலைவருக்கோ ஆசியனுப்பினால் வெறும் செய்தியனுப்புவார்! ஆனால் நம்மளவராகிய அண்ணாமலைப் பிள்ளைக்கு வெறும் செய்தியை அனுப்பலாமா? கொஞ்சம் துளசி இலையையும் அனுப்பியிருந்தாராம்! பண முடிப்புடன் அதையும் சேர்த்துக் கொடுக்குமாறு எழுதியிருந்தாராம்!

“நிதியின் சக்தி எவ்வளவிருந்தாலும் துளசியின் பெருமை அதைவிட அதிகமல்லவா? ஆகையால் அதையே என் அன்புக்கு அடையாளமாக வைத்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” - இது ஆச்சாரியார் கடிதத்தின் பகுதி!

நிதியை விடத் துளசியின் பெருமை அதிகமாம்!

“நீ கொடுக்கும் பணம், பழம், தேங்காய் இவைகளை விட, இதோ இந்த விபூதியின் பெருமை அதிகம்” என்று கூறி, நம் தலையில் சாம்பலைக் கொட்டி, “நீயும் உன் புத்தியும் சாம்பலாய்ப் போக!” என்று கூறாமற் கூறுகிறாரே, அர்ச்சகர்!

அந்த ஆசாமிக்கும் ஆச்சாரியார் அவர்களுக்கும் மனப்பான்மையில் கடுகளவு வேற்றுமையவாது உண்டா? நீங்களே சொல்லுங்கள்!

அர்ச்சகர் இனத்தாரின் கையில் ஆட்சியை ஒப்பித்தால் என்னவாகும்? நீங்களே யோசித்துப் பாருங்கள்! குரோதத்துக்காகக் கூறவில்லை! கண்ணெதிரே காண்பதை வைத்தே சொல்கிறேன்.

வெளி நாட்டார் படையெடத்தால், ஆச்சாரியாரும் அவர் இனத்தாரும் துளசியைத் துவிவிட்டு, இராமாயண காலட்சேபம் பண்ணிக் கொண்டிருப்பார்களா, மாட்டார்களா? நீங்களே சொல்லுங்கள்!

குத்தூசி குருசாமி (29-5-50)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It