(பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம்.)

உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல் நாட்டு மக்களும், சீனா, ஜப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறை கண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் - தென்னாட்டுத் திராவிட மக்கள் - கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலைதாழ்ந்து கிடக்கின்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு, அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழிகண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழன் சிறப்பு கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் 'திருக்குறள்' என்னும் பொது அறம் விளக்கும் நூல் வடிவு பெறக்கண்டு, பண்பாட்டின் உயர் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று உலகு கண்டு, தென்னகத்தின் கிழக்கிலும், மேற்கிலும் - அலை கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளின் துறை முகங்களில் தமிழர்தம் வணிகக்கலங்களின் கொடிகள் பறக்கக் கண்டு, இணையின்றி வாழ்ந்த இனந்தான், படிப்படியாய்ச் சரிந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தும் திறன் இழந்து பரிதவித்து நிற்கின்றது இடைக்காலம் முதலாக.

k anbazhaganவைதிக சூழ்ச்சி : உலகியல் தெளிந்து, இழைப்பினில் வாரா உறுதிகள் இல்லை என்னும் முடிவுடன், உழவினைப் போற்றி, வேளாண்மை வழிப்பட்ட நாகரிகம் வளர்த்து, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் பொது நோக்குடன் சமய நெறி - மதவழிகள் - பற்றிய எண்ணங்களில் பிணை யுண்டு தம்மை இழந்துவிடாது, முயற்சியுடையாராய், நாடு காக்கும் ஆற்றல் மறவராய் வாழ்ந்த மக்கள் தாம், பின்னர் வைதிக மறையவர் மன்னர் அவையைத் தமது களமாகக் கொண்டு, செல்வாக்குப் பெற்ற கால கட்டத்தில் அவர் தம் செல்வாக்குக்கு ஆட்பட்டு மெல்ல மெல்ல வைதிகத்தின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டவராயினர். வைதிகம் செல்வாக்கு பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் பரப்பப்பட்ட, சமண புத்த மதங்களின் கோட்பாடுகள் கற்றவர்களின் சிந்தனைக்கு ஒரு வகையில் விருந்தாகி, மற்றவர்களால் ஓரளவே பின்பற்றப்பட்டன. சில கொள்கைகள் பொதுவில் பரவலாக இடம்பெற்றன எனினும், மக்கள் குடும்பம் குடும்பமாக ஒரு மதச்சார்புடையவராகும் நிலை அன்று இல்லை. 'மதம்' இன்றேல் மனித வாழ்வு இல்லை - என்னும் நிலை அந் நாளில் இல்லை.

மேலும், சமணமும், பவுத்தமும் வைதிகரின் வேதங்களையும் அவற்றில் பேசப்படும் தெய்வங்களையும் யாகங்களையும் மறுப்பவை. சமய வழிகாட்டிகளையே தெய்வமாகப் போற்றுவதன்றித் தனியாக ‘ஒரு கடவுள்’ உண்டென்று ஏற்றுப்போற்ற உடன்படாதவை. ஆயினும், அந்த மதங்கள் மூலம் - பாவம் புண்ணியம், நிலையாமை, பிறவிகள், முற்பிறப்பு, பிற்பிறப்பு, கருமம், தலைவிதி முதலான கருத்துகள் மக்களிடையே பரவலாக இடம் பெறலாயின. எனினும், மதம் - அதற்கெனப் புறப்பட்ட துறவிகளுடைய கவலையாக இருந்ததன்றி, மக்களின் அன்றாட வாழ்வைக் குலைக்கவில்லை எனலாம்.

அக் காலத்தில் மக்கள் குறிப்பிட்ட ஒரு சமயம் - மதம் என்று போற்றிப் பின்பற்றும் நிலை இல்லையாயினும், பல காலமாக நிலவி வந்த மரபுடன் ஒட்டிய பலப்பல தெய்வங்களை வழிபட்டதுடன், பலி முதலான பல சடங்குகளையும் செய்துவந்தனர். குல தெய்வம் - குடும்பத் தெய்வம் - ஊர்க்காவல் தெய்வம் - முதலான பலவும் நடுகல் வழிபாட்டி லிருந்து கிளைத்துப் பெயர் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட மக்களைத்தான் வைதிகம் வளைத்தது. வேத வழியினரான ஆரியர்கள் மும்மூர்த்தி முதலாக இந்திரன், எமன், வருணன், அக்கினி முதலான பல தெய்வ வழி பாட்டின வாயினும், ‘கடவுள்’ என்னும் பொதுப்பெயர் குறிக்கக்கூட அறியாதவராயினும், தமது தெய்வங்கள் எல்லாம் ஆற்றல் மிக்கவை என்றும், அவர்களுக்குள்ளும் மும்மூர்த்திகளே மூலவர் என்றும் பரப்பத் தொடங்கிய காலத்தில், அதை மறுக்குமளவுக்கு மக்களுக்குத் தெளி வில்லை. “எங்கள் சாமி - பெரியசாமி எல்லா சாமிக்கும் எசமான் சாமி” என்னும் எண்ணத்தைப் பரப்பினர்.

நெடுங்காலமாகச் சிவனை (லிங்கத்தை) வழிபட்டு வந்த மரபினர் - சிவன் ஒன்றே தெய்வம் - என்னும் கொள்கை வழிபட்டவராயினும் வேத வைதீக ருத்திரனும் - சிவனும் ஒன்றென எண்ணுமாறு கற்பனைக் கதைகள் வளர்ந்ததால் சிவத்தின் தனித்தன்மை காப்பாற்றப்படவில்லை.

தனித்தன்மைகள் மறைந்தன :  பல காலமாகக் கண்ணனை வழிபட்டு வந்தோர் அவனே திருமால் என்று போற்றினும் - கண்ணனே - கிருஷ்ணன் என்றும், திருமால் என்றதே விஷ்ணு என்றும் - புராணங்களைப் பெருக்கியதால் - கண்ணன் வழிபாடும் தனித் தன்மையை இழந்தது.

அதேபோன்று , குறிஞ்சி நிலத்து வேட்டுவத் தலைவன் முருகன் - சுப்பிரமணியனாகவும், கார்த்திகேயனாகவும் - கதைகளால் பிணைக்கப் பட்டதால் - தென்னாட்டு முருகன் தனித் தன்மையையும் மறைந்தது. மேலும் பழந்தமிழ் மக்கள் வழிபட்ட தெய்வங்கள் பலவற்றைக் குறித்தும் (அவைகள் முன்னர் வாழ்ந்து மறைந்த தமிழரின் முன்னோர் என்பது மறைக்கப்பட்டு) புராணப் பின்னணி உருவாக்கப்பட்டன. கற்பனையான தல புராணங்கள் வரையப்பட்டு, வழிபடும் தெய்வங்களின் பெயர்களும், ஊர்ப்பெயர்களுங்கூட வடமொழிப் பெயர்களாகத் திருத்தப்பட்டன.

தமிழ் மக்களிடம் ஊறி இருந்த - தெய்வ நம்பிக்கையே இவை பற்றிய உண்மைகளைத் தெளியும் அறிவை இழக்கச் செய்தது. மக்கள் தெய்வங்களை நம்பினர். தெய்வப் பெயர்களும், செய்திகளும் திரிபடைந்தாலும் அவற்றையும் நம்பினர். தெய்வங்களின் பெயரால் அவதாரம் என்றும், அற்புதம் என்றும், அதனை நம்பாவிடில் பாவம் என்றும் பேசிய சூதினையும் நம்பினர். இவைகளின் மூலம், வேதம், வேதமொழி, சமஸ்கிருதம், அது தேவ பாஷை, அது பூதேவர்க்கே சொந்தம் என்பதையும் நம்பினர். அந்த வடமொழியில் உள்ளது யாவுமே ‘மந்திரம்’, அவை ஆற்றல்மிக்கவை, ஆண்டவனை அழைக்க வல்லவை, அது படிக்கவும் கேட்கவும் கூடாதது; கேட்டால் நரகம் சேருவர் என்பதையும் நம்பினர். “வேதங்களுக்குத் தெய்வங்கள் கட்டுப்பட்டவை, வேதங்கள் பிராமணருக்கு கட்டுப்பட்டவை” என்பதை நம்பத் தலைப்பட்ட மக்களுக்கு, பிராமணர்கள் - பூ தேவர் ஆயினர். பூ தேவர்கள் கண்கண்ட தெய்வமாக, தெய்வங்களிலும் மேம்பட்டவராக எண்ணப்பட்டதுடன், பூ தேவர் அல்லாதாரின் வழிபாட்டுக்கும் உரியராயினர்.

ஓரினம் மற்றொரு இனத்தை அடிமை கொண்ட வரலாறுகளிலே கூட இதைப் போன்ற சூழ்ச்சி வேறு எங்கும் நிகழவில்லை.

கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பால் பல்வேறு கால கட்டங்களில் வடிவு கொண்ட குலப் பெயர்களால் தனித்தனி பிரிவாக வாழ்ந்த மக்களை - மனுநீதி தர்மத்தின்படி நாட்டப்பட்ட வருணா சிரமத்தின் சாதிப்பிரிவுக்கு உரியவராக நம்பச் செய்தனர். அதன் பயனாக, வேறு வேறு பிரிவாக இருந்த மக்கள் அனைவரும் ‘பிராமணருக்கு’த் தொண்டு செய்ய பிறப்பிக்கப்பட்ட 'சூத்திரர்' என்ற எண்ணத்திற்கு ஆட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்களிடையே தாழ்நிலையில் இருந்த உழைப்பாளிகளான ஆதி திராவிடர்களை, தீண்டப்படாதவர்கள் பஞ்சமர்கள் எனவும் வகைப்படுத்தினர்.

பிராமணர்களுக்குச் சூத்திரர்களும் தீண்டப் படாதவர்களே! சூத்திரர்களுக்கும் தீண்டப்படா தவர்கள் பஞ்சமர்! வடநாட்டில் - ஆரியக் கலாச்சார ஆதிக்கம் வளர்ச்சியுற்ற துவக்க காலத்தில் வடிவு கொண்ட பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திரர் எனும் நால்வகை சாதி முறையும் - அதன் உயர்வு தாழ்வும் தென்னகத்தில் அதே போன்று இடம்பெறவில்லை இங்கே ஆரிய மத குருமார் வடிவம் கொண்ட பிராமணர்கள் பெற்ற செல்வாக்கின் பயனாக நாட்டு மக்கள் அனைவரையும் சூத்திரர் என பறைசாற்றியது.

ஆரியர் திராவிடர் உறவின் விளைவு : பிராமணியச் செல்வாக்கு முதலில் பல்லவர் ஆட்சியிலும் - பின்னர் இடைக்காலச் சோழர் ஆட்சியிலும் - வேரூன்றி ஏராளமான சதுர்வேதி மங்கலச் சாசனக் கட்டளைகளுடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தலாயிற்று. அதன் தொடர் விளைவாக - குறுநில மன்னர், நிலவுடமையாளர், செல்வர், வணிகர் முதலானோர் பிராமணியத்தை ஏற்கும் நிலை வளர்ந்து, வருணாசிரமக் கேடு கால் கொண்டு, மற்ற மக்கள் (உழைப்பாளிகளும் உழவர்களும்) அதனை விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அதன் சூதான விளைவை அறியாமலே அதனை ஏற்கும் நிலை ஏற்பட்டது.

மக்களின் தெய்வ நம்பிக்கையை ஏதுவாகக் கொண்டு - அந்த மக்களின் தெய்வங்களின் வரலாற்றையே திரித்து, பெயரையும், வழிபாட்டு முறையையும் மாற்றி, தாமே அர்ச்சகருமாகி, மதகுருமார்களுமாகி, அந்த மக்களின் தன்னிகரற்ற மொழியையும் தாழ்த்தி ஒதுக்கி இழிவுப்படுத்தி, தமது இன மொழியான வடமொழியை உயர்வாகக் கற்பித்து, ஆதிக்க மொழியாக்கி, மற்ற மக்களையும் இழிப்பிறவிகளே என்று நம்ப வைத்து, தெய்வ பக்தியில் தம்மை மறந்த தன் இனம் அறியாத ஏமாளிக் கூட்டமாக ஆக்கி, ஒருவகை அடிமை மனப்பான்மையில் ஊறியவர்களாக மாற்றிவிட்ட வரலாறு தான், ஆரிய - திராவிடக் கலாச்சார உறவு கிடைத்த வரலாறு ஆகும்

வரலாற்று அடிப்படையில் - ஒரு தனி இனமாக, தனி நாட்டுக்குரியவராக, தனி ஆட்சி நடத்துபவராக, தனிமொழி, கலை, நாகரீகம், இலக்கியம், இலக்கணம், வாழ்க்கை நெறி (அறம்) கொண்டவராக, வேற்று இன மொழி, மத ஆதிக்கத்திற்கு இடமில்லாமலே 1500 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த தமிழ் மக்கள் தாம், இன்று தமிழ் மொழி வழிபட்ட அடையாளம் ஒன்றைத் தவிர வேறு அடையாளங்களை வெளிப்படையாகக் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளனர். மக்களின் தெய்வ நம்பிக்கையை மூலமாகக் கொண்டு, வைதீக மத தெய்வ வழிபாட்டை வடமொழி மூலம் புரோகிதர் நடத்தும் நிலையை உருவாக்கினர்.

(தொடரும்)

- பேராசிரியர் க.அன்பழகன்