ஈஜிப்ட் பார்லிமெண்டில் ஒரு புது மசோதா கொண்டு வரப் போகிறார்களாம், அந்த நாட்டு வைதீகக் குடுக்கைகள்! அந்த மசோதாவின் படி முஸ்லிம் பெண்கள்,-
(1) குறைந்த கையுள்ள ரவிக்கையோ தாழ்ந்த கழுத்துள்ள ரவிக்கையோ அணியக் கூடாது.
(2) பாவாடைகள் கணுக்காலைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
(3) தங்கள் கணவன்மார்களுடன் கைகோத்துக் கொண்டு வெளியில் உலவக்கூடாது.
- பார்த்தீர்களா, எகிப்து நாட்டு முஸ்லிம் வைதீகர்களின் வெறிக் குணத்தை? முஸ்லிம் அக்கிரகார வெறிபோலும்! தொப்பி போட்ட அய்யர்கள் இவர்கள்! பூணூலில்லாத புரோகிதர்கள்!
பேகம் ஷா நவாஸ், பேகம் அமிருதீன், திருமதி அஸாஃப் அலி-போன்ற முஸ்லிம் பெண் திலகங்கள் உதிக்கவேண்டிய ஒரு சமுதாயத்திற்கு முட்டுக்கட்டை போடப் பார்க்கின்றன, சில தட்டுக் கெட்டதுகள்!
கணவனை இழந்த காரிகையை ஈமத் தீயில் போட்டு விட வேண்டும். கைம்பெண்கள் தலைமயிரைச் சிரைத்து, வெள்ளைத் துணியினால் முக்காடு போட வேண்டும்.
ஒருவன் மூன்று நான்கு பெண்களைக்கூட மணஞ் செய்து கொள்ளலாம்.
பெண் ருதுவானவுடன் வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டும்.
பெண் பிறந்தது முதல் சாகிறவரையில் ஏதாவதொரு ஆணுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும்.
பெண் முகமூடி போட்டிருக்க வேண்டும்; எந்த ஆணும் பார்க்கும் படியாக இருக்கக்கூடாது.
பெண் நீண்ட கூந்தலுடனிருப்பதே அழகு.
பெண் தாராளமாக ஆடியோடித் திரியாதபடி உயர்ந்த குதியுள்ள பூட்ஸ் அணிய வேண்டும்; 12, 14, 16 முழமுள்ள புடவை அணிய வேண்டும்; உறுப்புக்கள் வெளியே தெரியாமல் அணிகளை அணிய வேண்டும்.
ஆண் விளையாடுகின்ற விளையாட்டுக்களையெல்லாம் பெண் விளையாடக் கூடாது.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைகளே பெண்களின் பண்புகள்.
ஆண் எப்படியிருந்தாலும், பெண் கற்புநிலை தவறாமலிருக்க வேண்டும்.
..... இவைகளையெல்லாம் எழுதி வைத்தார்களே, அந்த மகானுபவர்களுடைய கூட்டுத் தோழர்கள் தான் ஈஜிப்ட் பார்லிமெண்டில் புது மசோதா கொண்டு வரப் போகின்ற பிரகஸ்பதிகள்!
எகிப்து பார்லிமெண்ட் நிறைய பேகம் அமிருதீன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தங்கள் ஆண்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற நினைப்பும் அவர்களுக்கு வருவதாக வைத்துக் கொள்வோம்!
அப்போது அவர்கள் மசோதா எப்படியிருக்கும்?
முஸ்லிம் ஆண்கள்-
(1) க்ராப் வைத்துக் கொள்ளக் கூடாது; தாடியுடன் தானிருக்க வேண்டும்.
(2) வெள்ளையரைப்போல் உடை உடுத்தக்கூடாது.
(3) ரயில் வண்டி, மோட்டார் கார், ஆகாய விமானம் முதலியவைகளில் ஏறக்கூடாது; ஒட்டகத்தில் ஏறித்தான் பிரயாணஞ் செய்ய வேண்டும்.
(4) காலில் சலங்கை கட்டிக்கொள்ள வேண்டும்; முகத்தில் மூடி போட்டுக்கூட வெளியே செல்லக்கூடாது.
(5) ஒரு பெண் நான்கு ஆண்களை மணஞ்செய்து கொள்ளலாம்; ஆனால் ஆண் மட்டும் மற்றொரு பெண்ணைக் கண்ணாலும் பார்க்கக் கூடாது.
(6) படிக்கவே கூடாது; மசூதி தொழுகைக்கும் வரக் கூடாது.
..... இம்மாதிரி விதிகளும் இன்னும் பிற விதிகளும் சேர்ந்த மசோதாவைக் கொண்டு வருவார்கள்! பேகம்கள் - பீபீகள் கையில் பேனாவைக் கொடுத்துப் பார்த்தால் அல்லவோ தெரியும்? பேனா மட்டுமா? கமால் பாட்சா செய்ததைப்போல் துப்பாக்கியைக் கொடுத்துப் பாருங்கள்.
மசோதா கொண்டு வருகிற பேர்வழிகள் உடனே “அண்டர் கிரவுண்ட்” போய்விட மாட்டார்களா? சுத்த தென்னை மட்டைகள்! உலகம் போகிற போக்குத் தெரியாமல் இன்னமும் பழைய ஆமைப் புத்தியிலேயே இருக்குதுகள்! மசோதாவாம் மசோதா! சுத்த சோதா!
ஆண்பிள்ளை சிங்கக் குட்டியாயிருந்தால் சம உரிமை கொடுத்துவிட்டு, வரிந்து கட்டி ‘கோதா’வில் நின்று பார்க்கணும்! இது என்ன, சோதாத்தனம்! பீபீ கையிலே துப்பாக்கியைக் கொடுத்து தானும் துப்பாக்கியை ஏந்தி எதிர் எதிராய் “நிண்டு” பார்த்தாலல்லவோ தெரியும்?
- குத்தூசி குருசாமி (30-5-50)
நன்றி: வாலாசா வல்லவன்