‘பெரியாரும் - மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (2)
குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.
• காங்கிரசிலிருந்து கொண்டே பொதுவுடைமை பேசினார், பெரியார்.
• நீதிக் கட்சியை ஆதரித்த பெரியார், அதில் தலைவர்களாக இருந்த ஜமீன்தார்களையும் மிட்டா மிராசுதாரர்களையும் கடுமையாக எதிர்த்தார்.
• தீண்டப்படாத மக்களுக்கு ‘தனிக் கிணறு’ திறக்கக் கூடாது; பொதுக் கிணற்றில் நீர் எடுக்கப் போராட வேண்டும் என்றார்.
• பார்ப்பனரல்லாதாரில் 2 சதவீதம் பேர் மட்டுமே படிக்கத் தெரிந்த காலத்தில் ‘ரிவோல்ட்’ என்ற புரட்சி ஆங்கில இதழை சோவியத் புரட்சி நடந்த நவம். 7ஆம் தேதியை தேர்வு செய்து தொடங்கினார்.
எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி - தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் - பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி - மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
பின்னர் ஓரிடத்தில் சீனாவைப் பற்றி பேசுகிற போது, ‘சீனர்களின் கதி’ என்ற தலைப்பில் பேசுகிறார். “என்று முதலாளிகளின் ஏதேச்சாதிகாரம் உலகினின்றும் ஒழியுமோ, அன்றே உலகத்திற்கு விடுதலை, அன்றுதான் ஏழைகள் புத்துயிர் பெற்று இன்புறுவார்கள்” என்று. 1925ஆம் ஆண்டு ஆகஸ்டில் பேசிய பேச்சு இது. அப்பொழுதெல்லாம் காங்கிரசில் தான் இருக்கிறார். ஆனால், மனம் ஒப்புக் கொள்ளாமல் காங்கிரசில் தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இது அந்த காலகட்டம். தொடர்ச்சியாக நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
“பணக்காரன் என்பதே, தேசத்தையும் ஏழைகளையும் குடியானவர் களையும் தொழிலாளர்களையும் கெடுத்துதான் பணம் சம்பாதித்தவர்கள் என்பதுதான் சத்தியம்”. இதுவும் 1925ஆம் ஆண்டு பேசிய பேச்சு தான். இதையெல்லாம் அவர் காங்கிரசில் இருக்கும் போதே பேசுகிறார். அந்த கட்சியில் நாம் இருக்கின்றோமே என்கிற மன உறுத்தல் அவருக்கு இருந்தது.
இன்னொரு பக்கம், உழைக்கும் மக்களுக்கு அரசு நிர்வாகத்தில் பங்கு கொடுக்கிற, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதை, கொள்கையளவில் கூட ஏற்க மறுக்கிறார்களே, நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நீ ஆட்சியிலில்லை, அப்பொழுது இருந்தது நீதிக்கட்சி ஆட்சி. கொள்கையை ஏற்றுக் கொள் . ஒரு வேளை நீங்கள் ஆட்சிக்கு வந்தால், நடைமுறை படுத்துவோம் என்று உறுதி கொள்ளுங்கள் என்றால் கூட, காங்கிரஸ் ஒத்துக் கொள்ளாத கால கட்டம் அது. இதிலிருந்து அவர் வெளியே வருகிறார். அதை விரிவாக பேசவேண்டியது இல்லை.
இந்திய தொழிலாளர்களைப் பற்றி எப்போது அவர் கருத்து மேலும் அழுத்தமாக வெளிப்படுகிறது என்றால் 1927ஆம் ஆண்டு கோவையில் ஒரு வேலை நிறுத்தம் நடக்கிறது. 1927ஆம் ஆண்டு கோயமுத்தூ ரில் ஜவுளித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். பெரியாருடைய நண்பர், சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்தான், இரத்தின சபாபதி முதலியார்.
அவர் பெயரால்தான் ஆர்.எஸ்.புரம், கோவையில் அமைந்து இருக்கிறது. அவருடைய தலைமையில் தான் அது நடக்கிறது. அந்த போராட்டத்தில் பெரியார் பேசிய பேச்சு குறித்து சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த சமயத்தில் காங்கிரசை விட்டு வெளியே வந்து, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி விட்டார். 1925ஆம் ஆண்டு கடைசியில் இயக்கம் தொடங்கியாயிற்று. 1927ஆம் ஆண்டு பேசுகிறார்.
“பிறவியினாலேயே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனீயத்தையும் அதன் ஆதிக்கத்தையும் வேரோடு அழிக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானதோ, அது போலவே பண முடையவன் உயர்ந்தவன் என்கிற தத்துவத்தையும் பணக்கார ஆதிக்கத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது என்பதும் அவ்வளவு முக்கியமானது என்பதே நம் அபிப்பிராயம்”.
இதை வேலை நிறுத்தத்தில் பெரியார் பேசுகிறார். இப்பொழுது சிக்கல் எனக்கு என்னவென்றால். இரண்டையும் என்னால் செய்ய முடியாது, சக்தி குறைவு, அவ்வளவு செய்ய சக்தி குறைவு. அப்படி சொல்லிவிட்டு,
“அதை விட இதற்கு என்ன அவசரம் என்று பார்க்க வேண்டியிருக்கிறதே அல்லாமல், தவிரவும் பிறவியில் உயர்வு என்கிற கொடுமை ஒழிந்தவுடன், பணத்தால் உயர்வு என்கிற கொடுமை ஒழிக்கும் வேலை தான், பொது நல சேவையாக ஏற்பட வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். அது தான் இயற்கையானதும் ஆகும்.
ஆகவே இந்த இரண்டு காரியமும் முடிந்த பிறகு தான், சர்க்காரின் கொடுமையும் ஆதிக் கமும் தானாகவே ஒழிந்து விடும். முன் சொன்ன இரண்டையும் வைத்துக் கொண்டு, சர்க்கார் ஆதிக்கத்தை ஒழிப்பது என்பது, உயர்ந்த ஜாதியான் என்பவன் இன்னும் உயர் வதற்கும், பணக்காரன் என்பவன் இன்னும் கொஞ்சம் பணக்காரனாவதற்கு உபயோகப் படுவதோடு, உயர்ந்த ஜாதியான் என்பவன் ஜாதித் திமிரோடு பணத்திமிரும் அடையவும், பணக்காரன் என்பவனுக்கு பணத்திமிரோடு ஜாதித் திமிரும் அமையவும் காரணமாகிவிடும்”.
அப்படி இரண்டையும் ஒழிக்க வேண்டிய தேவை இருக்கிறது; என் சக்திக்கு இது ஒன்றை செய்துக் கொண்டிருக்கிறேன். இது தான் அவருடைய பார்வையாக பெரியார் சொல்லுகிறார். “நமது நாட்டில் கிளர்ச்சி, வெகு சீக்கிரத்தில் உண்மையான தொழிலாளர்கள் கிளர்ச்சி ஏற்படப் போகிறது என்பதை, முதலாளிமார்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அந்த உரையில் பெரியார் பேசுகிறார். அப்போது அவர் என்ன கருத்தை கொண்டிருக்கிறார் என்பதற்காகச் சொல்லுகிறேன்.
சுயமரியாதை இயக்கம் என்பது முற்றும் முழுதாக ஜாதி ஒழிப்பும் பெண்ணுரிமையையும் பேசிக் கொண்டிருந்தாலும், அவர் இந்த கருத்தை உரையாடியவராகவே இருந்துக் கொண்டே இருக்கிறார்.
அதனால் ஈர்க்கப்பட்டுதான் பலபேர் அவரோடு இணைகிறார்கள், ஜீவானந்தம் போன்றவர்களெல்லாம். சிராவயல் என்கிற இடத்தில் ஜீவா ஒரு ஆசிரமம் நடத்திக் கொண்டிருக்கிறார், காந்தி ஆசிரமம். பெரியாரை காந்தி ஆசிரமத்திற்கு அழைக்கிறார் அவர்.
காந்தி ஆசிரமத்தில் ஒரு வாசகசாலை ஒன்றைத் தொடங்கிறார்கள். ஒரு கிணறு ஒன்று, காந்தி கிணறு என்று, அதை வெட்டி வைத்திருக்கிறார்கள். அப்போது காங்கிரஸ் அரிஜன நிதி என்று ஒன்றை சேர்த்து வைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பு பகுதியில், அவர்களுக்கு என்று தனியாக ஒரு கோவில் கட்டுவது, தனியாக கிணறு வெட்டித் தருவது என்பதெல்லாம் காங்கிரசார் செய்து கொண்டிருந்தார்கள். பெரியார் சொல்கிறார்.
வாசகசாலை வேண்டுமென்றால் திறந்து வைக்கிறேன். ஏனென்றால் அது எல்லோருக்கும் படிப்பதற்காக பயன்படும். அந்த கிணற்றை நான் திறந்து வைக்க வருந்துகிறேன் என்று சொல்லுகிறார். பொதுக் கிணற்றில் நீர் எடுக்க போராட வேண்டுமே தவிர, தனிக் கிணறு வெட்டிக் கொடுப்பது என்பது, நிரந்தர வேலி போட்டு அவர்களை வேறு பக்கமாக நிறுத்தி வைப்பதாக ஆகிவிடும்.
எனவே கேட்டுக் கொள்கிறேன் - மக்களிடம் பேசுகிறார் - நீங்கள் தாகத்தால் செத்துப் போவதாக இருந்தாலும், தனிக் கிணற்றில் நீர் எடுக்காதீர், பொதுக் கிணற்றில் நீர் எடுக்கப் போராடுவோம் என்று அவர் சொல்லுகிறார். அது தான் அவர் சொல்லுகிறார். அந்த கிணறு எதற்கு, நான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது எனக்கு
ரூ. 48,000 பணம் அரிஜன நிதியில் இருந்து அனுப்பி வைத்தார்கள். 1920-களில் அப்பொழுது ரூ. 48,000 என்பது பெரிய தொகை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனிக் கிணறு வெட்டித் தரச் சொன்னார்கள். அந்தப் பணத்தை நான் அப்பொழுது அப்படியே திருப்பி அனுப்பினேன். வேறு நிதிக்கு செலவு செய்கிறேன் என்று சொன்னதற்கு, ஏற்றுக் கொள்ளவில்லை.
நான் தனிக் கிணறு வெட்ட முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினேன் என்று சொல்கிறார். ஆங்கிலேயன் கூட போராடுகிற உன்னால், இங்கு இருக்கிற ஆதிக்க ஜாதியினரிடம் போராட முடியாதா, என்று காங்கிரசுக்கு கேள்வி வைக்கிறார், பெரியார்.
அந்த காலகட்டத்திற்கு அப்புறம் தான், பெரியாரின் உரையை கேட்டுத் தான் ஜீவா பெரியாரோடு சேருகிறார். அதற்கப்புறம் அந்த குழப்பம், அது இப்போது தேவையில்லை என்றாலும் சொல்கிறேன். அதற்கு அடுத்ததாக தோழர்களே, 1928ஆம் ஆண்டு, இந்த கருத்துகளை பரப்புவதற்கு ஒரு ஆங்கில பத்திரிக்கை ஒன்றைத் தொடங்குகிறார் பெரியார். இரண்டு காரணங்களைச் சொல்கிறார்.
ஒன்று, சென்னை மாகாணத்தில் மட்டும், அதுவும் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டும் தான், நாம் பேசுகிற கொள்கைகளெல்லாம் எழுத்தாகப் போய் எல்லோருக்கும் சேருகிறது. இது பிற மாநிலங்களில் வசிக்கிறவர்களுக்கும், அதை விட குறிப்பாக நம்மை ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலேயருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்திலும் ஒரு பத்திரிக்கை தொடங்குகிறேன் என்று சொல்கிறார்.
அப்பொழுது எழுத, படிக்கத் தெரிந்த மக்கள் ஏழு சதவிகிதம் தான். அதில் மூன்று பேர் பார்ப்பானாக போய்விட்டான், ஒன்றரை சதவிகிதம் உயர்சாதிக் காரனாகப் போய் விட்டான். நம்மவர்கள் படித்தவர்கள் ஒன்றரை அல்லது இரண்டு சதவிகிதம் தான். ஆங்கில ஏடு எங்கே வாங்கப் போகிறார்கள்? இருந்தாலும் தொடங்கினார்.
அந்த ஏட்டுக்கு அவர் வைத்த பெயர் ரிவோல்ட் ‘Revolt’. புரட்சி என்ற பெயரை வைக்கிறார். புரட்சி என்ற பெயர் வைத்தது மட்டு மல்ல, அதை நவம்பர் 7ஆம் தேதி, 1928இல், ரஷிய புரட்சி நாளில் தான் அந்த ஏட்டை அவர் தொடங்கினார்.
அடுத்த ஆண்டும் அதில் எழுதுகிறார். கடந்த ஆண்டு உலகையே குலுக்கிய ரஷிய புரட்சி நாளில் நம் ஏட்டை தொடங்கினோம், இன்றோடு ஓராண்டு முடிந்து விட்டது என்று தலையங்கம் எழுதுகிறார். எனவே, இந்த சிந்தனை ஓட்டம் அவருக்கு 1928இல் வந்து விடுகிறது.
இப்படி தொடர்ச்சியாக இருந்த அவருடைய சில செய்திகளை நான் சொல்ல வேண்டும். ஒரு சில மாநாடுகளை பெரியார் நடத்தத் துவங்குகிறார். ஒன்று, ஜமீன்தார் அல்லாதவர்கள் மாநாடு, லேவா தேவி செய்யாதவர்கள் மாநாடு, இப்படி யெல்லாம் அல்லாதவர்கள் மாநாடுகள் நிறைய நடத்துகிறார், பெரியார்.
ஏனென்றால், அதில் இருப்பவர்களை கூப்பிட்டு, இதற்காக ஏன் நீங்கள் போராடக்கூடாது என்று கேட்பதுதான் நோக்கம். ஜமீன்தார் அல்லாதவர்கள் மாநாடு எங்கு நடக்கிறது என்றால், சேலத்தில் தான் நடக்கிறது. அந்த மாநாட்டில் அவர் சொல்கிறார், இந்த மாவட்டத்தில் தான், மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் ஜமீன்தார்களுக்கு சொந்தமாக இருக்கிறது.
“செல்வவான்கள் ஏழைகளின் வாக்கை ஓட்டுகளை விலைக்கு வாங்கித் தாங்களே ஆட்சியாளர்களாக வந்து விடக் கூடும். இதற்கு உதாரணம் வேண்டுமானால், சென்னை அரசாங்க நிர்வாகத்தையும் சென்னை மாகாண ஸ்தலஸ்தாபன நிர்வாகத்தையும் பார்த்தால் நன்றாக விளங்கும். சென்னை மாகாண முதல் மந்திரி ஒரு ஜமீன்தார்”. அப்பொழுது, பொப்பிலி ராஜா இருக்கிறார். அவரை ஆதரிக்கிறார் பெரியார். மறந்து விடக்கூடாது.
நீதிக்கட்சியை பெரியார் ஆதரிக்கிறார். நீதிக்கட்சி முதலமைச்சர் பற்றி தான் அவர் பேசுகிறார். “சென்னை மாகாண முதல் மந்திரி ஒரு ஜமீன்தார். சென்னை நகர ஸ்தல ஸ்தாபனச் சபை தலைவர், அதாவது நகராட்சி தலைவர், ஒரு லேவாதேவிக்காரர்”. ராஜா சர் முத்தையா செட்டியார் இருக்கிறார். இவரும் நீதிக் கட்சிகாரர், பெரியாருடைய ஆதரவாளர். ஆனாலும் சொல்லுகிறார், எப்படியடா இவர்களெல்லாம் வந்தார்கள் ஆட்சிக்கு.
“அவன் ஜமீன்தார் காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டான், இவன் லேவாதேவிக்காரன் காசு கொடுத்து ஓட்டு வாங்கி வந்திருக்கிறான். என்ன இவர்களுக்கு தனித் தகுதி இருக்கிறது, என்பதுவும், பிரத்தியக்ஷ உண்மையாகும்.
வேறு ஜில்லாக்களிலும் இது போலவே பெரிய முதலாளியோ, பெரிய லேவாதேவிக்காரரோ அல்லது ஜமீன் தாரரோ தான் தலைவராக இருக்கிறார்கள். இவர்கள் அந்த பதவியை அடைந்ததற்கு காரணம் எல்லாம், அவர்களின் பணக் கொழுப்பு விசேஷமே ஒழிய, புத்திக் கொழுப்பு விசேஷமில்லை என்பது எந்த மனிதனுக்கும் தெள்ளென விளங்கும்” என்று சொல்லுகிறார்.
(தொடரும்)
- கொளத்தூர் மணி