மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல; பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றி இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட, எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
அது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ, அவ்வாறு தான் அவரும் மிகவும் உறுதியாகவும், பலமாகவும், லட்சியங்களைக் கடைப்பிடித்தார். என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்...
நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள். ஒன்று பார்ப்பனர்கள்; இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான். மதப்படியும், சாஸ்திரங்கள்படியும், நாம் இரண்டே பிரிவுகள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்காக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.
இப்படிப்பட்ட நாம், இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து, தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஆகையால் பார்ப்பனர்களின் பதவி, அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துதான் எனது கவலை எல்லாம்.
உங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்: ‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல' என்றும்! இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.
பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.
முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை - அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம். அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்!
பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.
(புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையில் நம் மீதான இழிவை விட்டுவிடலாமா?
- விவரங்கள்
- பெரியார்
- பிரிவு: பெரியார்