தமிழர் தொன்மங்களை மீட்போம் என்றும், தமிழர் பண்பாடு - பாரம்பரியங்களைக் காப்போம் என்றும்  தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும், பலகாலமாகப் பேசி வருவதைப் பார்த்திருப்போம். அண்மைக் காலமாக அந்தக்குரல் கொஞ்சம் அதிகமாகி வருகிறது. இவர்கள் காப்பாற்ற முயற்சிப்பதெல்லாம் தமிழர் பண்பாடுகள் அல்ல. முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனப் பண்பாடுகளே.

வடஇந்தியாவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் முன்னணி அமைப்புகளும் கடந்த 20 ஆண்டுகளாக  இந்தத் தொன்மங்களைக் மீட்கும் பணியைத்தான் செய்து வந்தன. வடமாநிலங்களில் உள்ள ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் பழைய தெய்வங்களையும், குலதெய்வங்களையும், கிராம தெய்வங்களையும் தங்களது ஆயுதங்களாகக் கையிலெடுத்ததன.

குலதெய்வக்கோவில்களும், கிராமக்கோவில்களும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பெரும் நிதி உதவியுடன் புனரமைத்தது. ஒவ்வொரு ஜாதியிலும் வாழ்ந்து மறைந்த ஜாதித்தலைவர்களின் சிலைகளையும், சின்னங்களையும் பெரும் பொருட்செலவில் புதுப்பித்து, அவற்றுக்கு விழாக்களை ஏற்படுத்தினர்.  கிராமக் கோவில்களின் பூசாரிகளை அர்ச்சகர் பயிற்சி என்ற பெயரில், தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் வழியே அந்த கிராமங்களையே தன்வசப்படுத்தினர். அந்த அடிப்படையில் நாட்டையே பிடித்தனர்.

வடமாநிலங்களில் மட்டும் அந்த இரகசியத்திட்டம் செயல் பட்டது என முடிவு செய்ய வேண்டாம். இந்த இரகசியத்திட்டம் தமிழ்நாட்டிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரபரப்பும் காட்டாமல், சத்தமில்லாமல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. கிராமக் கோவில்கள், குலதெய்வக்கோவில்களைப் பார்ப்பனக் கட்டுப்பாட்டிலும், ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்திலும் அடங்கத் தொடங்கி பல வருடங்கள் முடிந்துவிட்டன.  இவை யெல்லாம் அரசியல் தளத்தில், பண்பாட்டுத் தளத்தில் அண்மைக் காலமாக நடந்துவரும் மாற்றங்கள்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் -ன் இந்த பண்பாட்டுப் படையெடுப்பு வெற்றிபெற்று வருவதற்கு முக்கியக்காரணம் அந்தத் தெய்வங்களின் வழிபாட்டில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தியிருந்த - இந்து, பார்ப்பனப் பண்பாட்டு அடையாளங்கள்தான்.

கி.பி.4 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தத் தெய்வங்கள் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டுவிட்டன. எல்லாம் முடிந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது போய் அவற்றை மீட்போம், காப்போம் எனப் பேசுவது யாருக்குப் பயன்படும் என்பதை முற்போக்கு அமைப்புகளில் பணியாற்றும் தோழர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக்காலங்களைவிட இப்போது முழுவீச்சில் இந்தப்பணி நடைபெற்று வருகிறது. பிற்படுத்தப் பட்டோர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலும் தனிக்கோவில்களைக் கட்டுவதற்கும், அவற்றுக்குக் குடமுழுக்கு நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறையர்களின் தெய்வமான ‘சாம்பான்’ பார்ப்பனர்களால் ‘சாம்பசிவனாக’ அவதாரம் எடுத்துக் கொண்டே வருகிறார்.

ஊர் - சேரி எனும் இரட்டைவாழ்விட முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ள இக்காலத்தில் அந்த இரட்டை வாழ்விடங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளாக இந்தத் தனிக்கோவில்களும், குலதெய்வ வழிபாடுகளும் முன்னிற்கின்றன.

வேதங்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் புத்தருக்கும் முன்பே பல தலைவர்கள் இந்தியப் பகுதிகளில் வாழ்ந்தார்கள். கபிலர், கணாதர் போன்ற  பரிவிராஜகர்கள் (நாடோடிகள்) பலரையும், அவர்கள் உருவாக்கிய பார்ப்பன எதிர்ப்புத் தத்துவங்களையும் வரலாற்றில் காணலாம். புத்தர் உட்பட அவர்களிடம் இருந்த சின்னச்சின்ன சறுக்கல்கள் பார்ப்பனியம் அவர்களை விழுங்குவதற்குக் காரணமாக இருந்தன.

12 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப்பிறகும், சுல்தான்கள் - முகலாயர்கள் ஆட்சிக் காலத்திலும் பார்ப்பனப் பண்பாட்டு எதிர்ப்புப் புரட்சி கிளம்பியது. நாமதேவர், திருலோச்சன், சத்னா, பேனி, இராமாநந்தர், பீபா, தன்னா, செயின், கபீர், இரவிதாசர், குருநானக், வள்ளலார், இராமாநுஜர் எனப் பலரும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராகவும், இந்து வேத, சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராகவும் தீவிரமானப் பணிகளைச் செய்து வந்தனர். இவர்கள் பின்னால் இலட்சக்கணக்கான மக்களும் இருந்தனர். சில காலங்களில் அரசுகளும் ஒத்துழைப்புக் கொடுத்தன. அப்படி இருந்தும் இவர்களும் பார்ப்பனர்களால் செரிமானம் செய்யப்பட்டனர்.

இந்துமதம் எனும் நிறுவனம் மிகவும் இருக்கமான சாஸ்திர, சம்பிரதாயங்களையும், ஆகம விதிகளையும் மட்டும் நம்பி இயங்கும் நிறுவனம் அல்ல. தேவையான காலங்களில், தேவையான அனைத்து வகையான மாற்றங்களையும் அனுமதித்து, பிறகு முற்றிலும் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை படைத்தது. புத்த மதத்தின் புலால் மறுப்பு போன்ற பல பண்பாடுகளை தனதாக்கியதைப் போன்ற பல சான்றுகளை நாம் அறிந்திருப்போம்.

ஒன்றுக்கொன்று வெட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் இருந்த பல்வேறு சைவ மதப் பிரிவுகளையும், வைணவ மதங்களையும் ஒன்றாக்கி ஒரே இந்து மதமாக்கியது அந்த நிறுவனம்தான். சைவ, வைணவக் கடவுளர்களின் ஒற்றுமையின் அடையாளங் களாகவும், அதன் நீட்சியாகவும் இயங்குபவைதான் குலதெய்வ, நாட்டார் தெய்வ வழிபாடுகள். கதைகளிலும், புராணங்களிலும், வரலாறுகளிலும், தெய்வங்களின் வழிபாட்டு நடைமுறைகளிலும் அதற்கான சான்று ஏராளமாக உள்ளன. அவற்றில் சில சான்றுகளை இந்த இதழில் பதிவு செய்துள்ளோம்.

குலதெய்வங்கள், சிறுதெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவைகளைக் கடுமையாக எதிர்த்து, தோழர் பெரியார் பேசிய, எழுதியவைகளைப் படித்திருந்தாலும், அவற்றை முற்று முழுதாக அப்படியே ஏற்காமல், களத்தில் என்ன நிலை உள்ளது என்பதையும் அறிய விரும்பினோம். களஆய்வுகளை நடத்தினோம். அடித்தட்டு மக்களிடம் படிக்கச் சென்றோம்.

நாங்கள் கற்றதை உங்களுக்கு அப்படியே தருகிறோம். நாட்டார் தெய்வங்களும், சிறு, குலதெய்வங் களும் ஆரிய - இந்து - பார்ப்பனியத்தால் - பார்ப்பனர்களால் உட்செரிக்கப்பட்டு, கிரகிக்கப்பட்டு, விழுங்கப் பட்டு, அழிக்கப்பட்டு, கழிவாக வெளியேற்றப்பட்டவை என்பதை அறிந்து வந்துள்ளோம். இவற்றைக் காப்பாற்ற நினைப்பதும், மீட்க நினைப்பதும் தமிழர்களின் விடுதலைக்கு மிக, மிகக் கடுமையான ஆபத்தை விளைவிக்கும்.

இச்சூழலில், முற்போக்கு அமைப்புகளில் பணியாற்றும் தோழர்கள் பலரது மனநிலையும், கொள்கைச் செயல்பாட்டு நிலையும் இன்னும் கூடுதல் கவலையை அளிக்கின்றது. பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களிடம்கூட இவை குறித்து ஒரு மயக்கநிலை காணப்படுகிறது.

முற்போக்கு அமைப்புகளின் தோழர்கள் பலர் தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவார்கள், தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடுவார்கள், ஏன் ஜாதி ஒழிப்புக்காகவும் களமாடுவார்கள், பன்னாட்டு நிறுவனங்களையும், சர்வதேசச் சக்திகளையும்கூட எதிர்த்து நிற்பார்கள். ஆனால் தன் குழந்தைக்குத் தன் ஜாதியின் குலதெய்வக் கோவிலில் மொட்டை அடித்து, காதுகுத்து விழாவை நடத்துவார்கள்.

தன் பிள்ளைகளுக்கு சொந்த ஜாதியில், குலதெய்வத்தின் அடிப்படையில் திருமண உறவுகளை மேற்கொள்வார்கள். ஜாதி மறுப்புத் திருமணத்தைக்கூடச் செய்து விடுவார்கள். ஆனால், குலதெய்வ வழிபாடுகளைத் தவிர்க்கமாட்டார்கள். குலதெய்வக் கோவிலுக்குக் கொடுக்க வேண்டிய தலக்கட்டு வரியைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். கிடா வெட்டு, நோன்பி போன்ற பெயர்களில் ஜாதிச் சொந்தங்கள் நடத்தும் ஜாதிய விழாக்களுக்குத் தவறாமல் சென்று வருவார்கள். கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களுக்குச் சென்று வருவார்கள் அல்லது நன்கொடையை மட்டும் வழங்குவார்கள்.

இப்படிப்பட்ட புரட்சியாளர்கள் பலருக்கு அண்மைக்காலமாக இந்தத் தொன்மம், செம்மாந்தம், பண்பாடு, பாரம்பரியம் பற்றியெல்லாம் பெரும் அக்கறை உருவாகி வருகிறது. கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தேசியர்கள் எனப்பலரும் இவ்வகைப் புரட்சியாளர்களுக்கு மென்மேலுேம் போதைைைய ஏற்றி வருகிறார்கள். பண்பாட்டு, பாரம்பரிய, தொன்மப் போதைகளிலிருந்து தோழர்களையும், மக்களையும் மீட்கவே இந்த  குலதெய்வ- நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்.

பல்வேறு ஜாதிகளின் குலதெய்வங்களைப் பற்றி அந்தந்தக் குலதெய்வங்களின் பூசாரிகளிடமே நேரடியாகத் தகவல்களைப் பெற்றோம். வழிபடும் மக்களிடமும் அனுபவங்களைக் கேட்டு அறிந்தோம். அவர்களிடம் பெற்ற தகவல்களை அப்படியே அச்சில் ஏற்றியுள்ளோம். அவற்றில் கூறப்பட்டுள்ள கதைகளிலும், புராணங்களிலும், வழிபாட்டு நடைமுறைகளிலும்  நமக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அந்தக் கதைகளும், வழிபாட்டு நடைமுறைகளும் பெரும்பாலும் அனைத்து ஜாதியினரின் வழிபாட்டிலும் உள்ள பல ஒற்றுமைகளை உணர்த்துகின்றன.

  • சிவன், விஷ்ணு, பார்வதி இந்த மூன்று பெருந்தெய்வங்களோடு தொடர்பில்லாத கதைகளே இல்லை.
  • ஜாதியை, ஜாதி முறையை நியாயப்படுத்தி, பலப்படுத்தாத தெய்வங்களே இல்லை.
  • ஆணாதிக்கத்தை வலியுறுத்தாத தெய்வங்களே இல்லை.
  • பார்ப்பனர்களை விலக்கிய வழிபாடுகள் எதுவும் இல்லை. பார்ப்பனிய ஆதிக்கம் அல்லாத தெய்வங்களே இல்லை. இவைதான் நாங்கள் உணர்ந்த ஒற்றுமைகள்.
  • மனுசாஸ்திரத்திலும், வேதங்களிலும் கூறப்பட்டுள்ள ஜாதிமுறையைப் பயிற்றுவிக்கும் களங்களாகவே இந்த வழிபாடுகள் உள்ளன என்பதையும் நேரடியாகக் கண்டோம்.

ஊர்க்கூட்டம் போடுவது, திருவிழாவை முடிவுசெய்வது, சாமி சாட்டுவது, காப்புக் கட்டுவது, பந்தக்கால் நடுவது, தலக்கட்டுவரி, கிராமக்கோவில்வரி வசூலிப்பது, குதிரை எடுப்புக்குக் குதிரைத் தயார் செய்வது, குடைபிடிப்பது, நிறைமரக்கால் தூக்குதல், குதிரை தூக்குவது, தீப்பந்தம் பிடிப்பது, மாற்றுத்துணி ஏற்பாடு, பொங்கல் வைப்பது, படைப்பது, கிடா வெட்டுவது, முளைப்பாரி எடுப்பது, முதல்மரியாதை பெறுவது, பரிவட்டம் கட்டுவது, திருநீர் பெறுவது, மேளம் அடிப்பது, அலங்காலம் செய்வது, ஊரையும், கோவிலையும் சுத்தம் செய்வது, தெய்வத்தைத் தரிசிக்கும் முறை, தரிசிக்கும் இடம், விழாக்களில் கலைநிகழ்ச்சிகளைக் காணும் இடம், விழாவில் செய்யும் வேலைகளுக்குக் கொடுக்கப்படும் சன்மானம் என குலதெய்வ, நாட்டார் தெய்வ வழிபாடுகளின் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு அணுவிலும் ஜாதிமுறைதான் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.

பலஜாதியினர் ஒரே தெய்வத்தைக் கும்பிடும் கோவில்களும் உள்ளன. மதுரை முனியாண்டி, வத்தலக்குண்டு மூங்கிலணைக் காமாட்சி, சிறுவாச்சூர் மதுரகாளி, கோச்சடை சோனைமுத்தையா இப்படிப் பல கோவில்களும் உண்டு. இவற்றிலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வேலை என அந்தந்த ஜாதிக்கு மனுதர்மத்திலும் சமுதாயத்திலும் என்ன நிலை உள்ளதோ, அதேநிலையில், அதே படிநிலையில் வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.

ஒரு மனிதன் பிறக்கும் போது ஜாதி, மத உணர்வுகள் இன்றித்தான் பிறப்பான். வளர்வான். வளரும்போது, அவனுக்கு ஜாதி முறையையும், ஆணாதிக்கத்தையும் ஊட்டி வளர்ப்பதும், பயிற்றுவிப்பதும் இந்தத் தெய்வங்களின் வழிபாடுகள்தான். ஒரு பிற்படுத்தப்பட்டவர் தன்னை உயர்ந்தவன் என்று கருதிக் கொள்வதற்கும், ஒரு தாழ்த்தப்பட்டவர் தன்னை அடிமையாக, சேவகம் செய்பவராகக் கருதிக் கொள்வதற்கும் அடிப்படையான மனநிலையையும் - சிந்தனையையும் விதைப்பவை இந்தத் தெய்வங்களின் வழிபாடுகளே.

இரட்டைக்குவளையை உடைக்க ஒரு பிற்படுத்தப்பட்டவர் மனதளவில் தயாராகி விடுவார். தெருக்களில், அலுவலகங்களில், கல்விநிலையங்களில் நிலவும் தீண்டாமைக்கொடுமைகளை எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்கள் மனதளவில் தயாராகி விடுவார்கள். தாழ்த்தப்பட்டவர்களும் இக்கொடுமைகளை எதிர்த்துக்களமிறங்கும் துணிவுடன் இருக்கிறார்கள்.

ஆனால், இத் தீண்டாமைக் கொடுமைகளையும், தீண்டாமைச் சிந்தனைகளையும் இவற்றுக்கு அடிப்படையான ஜாதியக்கருத்தியலையும் விதைக்கும் இடத்தில் உள்ள - பரப்பும் இடத்தில் உள்ள குலதெய்வ, நாட்டார் தெய்வ, பெருந்தெய்வக் கோவில்களையோ, தெய்வங்களையோ எதிர்க்கவேண்டும் என்ற துணிவு இருதரப்பிலும், யாரிடமும் இல்லை.நச்சு மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சிக்கொண்டே அதன் கிளைகளோடு கோபித்துக்கொண்டு, அவை வளர வளர வெட்டிக் கொண்டிருப்பது அறிவுடையவர்கள் செயல் அல்ல.

பிற்படுத்தப்பட்டவருக்கு ஆதிக்கத் திமிரையும், தாழ்த்தப்பட்டவருக்கு அடிமைத் தன்மையையும் செயல்வழிக்கற்றல் போலப் பயிற்றுவிக்கும் குலதெய்வ - நாட்டார் தெய்வ வழிபாடுகளின் அழிவில் தான் தீண்டாமை ஒழிப்புப்பயணம் தொடங்கும்; தொடங்க முடியும். பார்ப்பனக் கோவில்களின் ஆதிக்கங்களையும், இந்து சாஸ்திர, சம்பிரதாயங்களையும், வேதங்கள் உருவாக்கிய பண்பாடுகளையும் அழித்து, தோழர் பெரியாரின் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்துவதன் வழியேதான் ஜாதி ஒழிப்புப் பயணம் வெல்லும்.

களஆய்வுக்குழு சார்பில்

அதி அசுரன்

களஆய்வுக்குழு

திருப்பூர் வேணி

தாராபுரம் பூங்கொடி

செம்பட்டி தேவகி

ஆத்தூர் விஜயலட்சுமி

பல்லடம் தீபா

பல்லடம் நாராயணமுர்த்தி

பல்லடம் வடிவேல்

பல்லடம் விமல்ராஜ்

பல்லடம் மதன்

அரசூர் அ.ப.சிவா

பெரியகுளம் குமரேசன்

பெரியகுளம் த. இராவணன்

திருப்பூர் சி.இராவணன்

ஒட்டன்சத்திரம் பெரியார்நம்பி

திருப்பூர் பிரசாத்

உடுமலை மலரினியன்

ஆத்தூர் வின்சென்ட்

Pin It