‘லியரி கீத்’ எழுதிய ‘வெஜிட்டேரியன் மித்’ (சைவ உணவு கற்பனைகள்) எனும் நூலில் இந்தக் கேள்வி அழகாக விவாதிக்கப்படுகிறது. லியரி 20 ஆண்டுகள் பால் கூடக் குடிக்காதவராக இருந்தவர் அடிப்படையில் ரேடிகல் பெண்ணியம் மற்றும் சூற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட பெண். மிருகங்களின் வாழ்வுரிமையில் நம்பிக்கை கொண்டவர்.

இத்தகையவர் இன்று மூன்று வேளையும் இயற்கையான அசைவ உணவு உண்ணத் துவங்கியுள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் அசைவ உணவில் தான் மிருகவதை மிகக் குறைவு என்பது.

லியரின் மனமாற்றம் அவர் தோட்டம் ஒன்று பயிரிட ஆரம்பித்ததில் இருந்து துவங்குகிறது. உரம் வாங்கப் போனவர் இருவகை உரங்கள் உண்டு என்பதை அறிந்தார். நைட்ரஜனால் ஆனது உரம்.  அதன்  மூலம் என்னவென்றால், இறந்த மிருகங்களின் இரத்தம், எலும்பிலிருந்து செய்யப்பட்ட இயற்கை உரம். அடுத்தது பெட்ரோலில் தயாரிக்கப்பட்ட செயற்கை நைட்ரஜன், பொட்டாஷியம், பாஸ்பரஸ் உரம் பெட்ரோல் என்பதும் இறந்த டைனசார்களின் மீதம்தான்.  புவி வெப்பமயமாதலின் மூலம் என்பது சைவமா எனக் குழம்பி, கடைசியில் இயற்கை உரத்தைத் தேர்ந்தெடுத்தார் லேரி. அதில் இருந்தவை முழுக்க ஃபாக்டரிகளில் கொல்லப்பட்ட கோழிகளின் இரத்தம், எலும்பு ஆகியவற்றின் மீதங்கள் தான்.

நிலம் இரத்தம் கேட்கிறது என எழுதுகிறார். மிருகங்களுக்கும், மரங்களுக்குமான உறவு அப்படிப்பட்டது. மண்ணில் இருந்து வந்த எலும்பும் சதையும் மீண்டும் மண்ணுக்கே சென்று உரமாகிறது. அந்த உரம் இல்லையெனில் செடிகள் வளர்வது இல்லை. ஃபாக்டரிகளில் கோழிவளர்ப்பை ஒருபுறம் திட்டிக்கொண்டு, மறுபுறம் அவற்றின் மீதத்தை உரமாக்கி வயலில் இடுவது என் மனசாட்சியின் முதல் ஆணியை அடித்தது.

செடிகள் வளரத் துவங்கியதும் அதில் ஸ்லக் எனப்படும் பூச்சிகள் சூழ்ந்தன. லெட்டூஸ் இலைகளை அரித்து உண்டன. அவற்றை மருந்து அடித்துக் கொல்ல மனமில்லாத லேரி விஷமருந்து அடிக்க மனமின்றி டயடோமாக்கஸ் எனும் இயற்கை பூச்சிக் கொல்லியை வாங்கி இட்டார். பூச்சிகள் சுத்தமாக அழிந்தன. அதன்பின் லியரிக்கு ஒரு உண்மை தெரிந்தது. அந்த மருந்து ஸ்லக் பூச்சிகளின் உடலை லட்சக்கணக்கான துண்டுகளாக வெட்டிக் கொல்கிறது என்று. வேறு வழியின்றி இறுதியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து ஒவ்வொரு ஸ்லக் பூச்சியாக பிடித்து பல மைல் தொலைவு சென்று காட்டில் பூச்சிகளை விட்டார். தோட்டத்தில் அடுத்த நாள் மீண்டும் பூச்சிகள் சூழ்ந்தன. வேறு வழியின்றி 25 கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்தார் லியரி. பூச்சிகளை அவை பிடித்து உண்ணும் என்ற கேள்வி எழுகிறது. “பூச்சிகளைக் கொல்ல எனக்கு மனமின்றி கொலையைக் கோழிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்தேன்” என எழுதுகிறார் லியரி.

பெரும்பாலான சைவர்கள் ஒரு பூச்சியின் உயிரை ஒரு பசுமாட்டின் உயிருக்குச் சமமாகக் கருதுவதில்லை என்கிறார். சைவர்களின் உயிர்கள் மீதான கருணை பெரிய அழகான பரிச்சயமான மிருகங்களுடன் நின்றுவிடுகிறது. ஆனால் லியரி அப்படி இருக்க விரும்பவில்லை.

விவசாயத்தை லியரி பின்வருமாறு வர்ணிக்கிறார். “விவசாயம் என்பது உலகின் மிகப்பெரும் இன அழிப்பு”.  ஒரு ஏக்கரில் விவசாயம் செய்வது என்பது அங்கே இருக்கும் அனைத்து உயிர்களையும் பூண்டோடு அழித்துப் பின்னர் தான் செய்யமுடியும்.

மரங்கள், செடிகள், கொடிகள், எலிகள், முயல்கள், மான்கள், பாம்புகள், பூச்சிகள், புழுக்கள் என அந்த நிலத்தில் வளரும் ஒவ்வொரு உயிரும் அழிக்கப்படுகின்றன. அதன்பின் அங்கே பயிர்கள் நடப்படுகின்றன. பயிர்களை உண்ண வரும் பூச்சிகள், பறவைகள் அழிக்கப்படுகின்றன.

அதுபோக விவசாயத்துக்கு ஆறுகளை பெருமளவில் மறித்து அணைகளைக் கட்டி மீன்களை ஏராளமாகக் கொல்கிறோம். உதாரணம் வாஷிங்டன் கவுலி அணைக்கட்டு மட்டும் ஒரு நாளைக்கு 1 லட்சம் ட்ரவுட் மீன்களை கொல்கிறது. ஆற்றுநீரைக் குடிநீருக்கு நம்பியிருக்கும் பல லட்சம் மிருகங்கள் அணைக்கட்டுகளால் கொல்லப்படுகின்றன. மிருகங்களை இன அழிப்பு செய்ததில் முக்கிய பங்கு விவசாயத்துக்கு தான் என்கிறார் லியரி.

வயலில் இருக்கும் ஒரு ஆயிரக்கணக்கான சிறு முயல்கள், எலிகள், மீர்கிட்டுகள், பாம்புகள் இவை அனைத்தும் உயிர்தானே? மூன்று ஏக்கராவில் விவசாயம் செய்தால் 20 பேருக்கு ஒரு வருடம் உணவிட முடியும். ஆனால் அதில் பல்லாயிரம் மிருகங்கள் உயிர் இழக்கும். அந்த மூன்று ஏக்ராவில் ஒரே ஒரு உயிர் மிஞ்சியிருக்காது. அதைவிட அந்த நிலத்தில் புற்களை வளரவிட்டு மாடுகள் அல்லது பன்றிகளை மேயவிட்டு அவற்றை உண்டால் அதுவே சிறந்த ஜீவகாருண்யமுறை என்பது லியரியின் வாதம்.

இந்திய சைவம்

உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தப்பட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கப்பட்டதா, தடுக்கப்பட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும் உண்டு. சீக்கிய மதத்தில் மாமிசம் தடுக்கப்படவில்லை எனினும் குருத்வாராக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவது வழக்கம். ஆக இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்திலும் மாமிசம் ஒன்று தடுக்கப்பட்டதாக அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாக மட்டுமே இருப்பதைக் காணலாம். ஆனால் இத்தகைய சைவ உணவு வழக்கம் மற்ற நாடுகளில் இல்லாத அளவு ஒரு பண்பாட்டுச் சிக்கலை இந்திய சமூகத்தில் உருவாக்கி உள்ளது. அதை ஆராய்வதே கட்டுரையின் நோக்கம்.

மாமிசம் உண்ணும் இந்துக்களும் விசேஷ நாட்கள், பண்டிகைகள், திருவிழா சமயத்தில் மாமிசம் தவிர்ப்பார்கள். எல்லா நாளும் மாமிசம் உண்ணும் இந்துக்களும் கூட கடவுளுக்கு மாமிசம் படைப்பதில்லை.

வால்மீகி இராமயணத்தில் சீதையும், இராமனும், இலக்குவனும் பன்றி மாமிசம் உண்பதாக எழுதப்பட்டு இருப்பினும் இராமர் கோயில்களில் சைவ உணவே பிரசாதமாக படைக்கப்படுகிறது. இராம பக்தர்கள் என்றால் உணவு ரீதியாக சைவர்கள் எனவும் ஆகிவிட்டுருக்கிறது. இதன் விளைவு புரட்டாசி, மார்கழி மாத ஐயப்பன் விரதம் மாதிரி சில காலகட்டங்களில் மாமிச விலை படுத்துவிடும் சூழல் உருவாகி உள்ளது.

இந்துமதம் அசைவம் ஆகாது என ஆக்கிவிட்டதால் உணவகங்கள், பணியிடங்கள், விருந்துகளில் வெஜ், நான் வெஜ் என பிரிந்து முட்டை பரிமாறும் இடங்களையும் கூட தவிர்ப்பது ஒதுக்கி வைப்பது என ஆகியுள்ளது.

இந்திய சைவ வகைகள்

நனி சைவம்: மேலை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது. இம்முறைப்படி பால், முட்டை, தேன், மாமிசம், மீன் அனைத்தும் தவிர்த்து தாவர உணவு மட்டுமே உண்ணும் முறை.

வெஜிட்டேரியன்:  தாவர உணவுடன் பால் சேர்த்துக் கொள்வது.

எக்டேரியன்:  பால், முட்டையும் தாவர உணவுகள் உண்பது.

பெஸ்கட்டேரியன்: தாவர உணவுடன், மீன், பால் சேர்த்துக் கொள்வது. வங்காளம் முழுக்க இவ்வகை வெஜிட்டேரியனை காணலாம்.

பிளெக்சிடேரியன்: வாரம் ஆறு நாள் சைவமாக இருப்பார்கள். ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் மட்டும் மாமிசம் உண்பார்கள்.

இவை தவிர்த்து, சில வகை மாமிசங்களை ஒட்டு மொத்த நாடும் தவிர்க்கும். எ.கா. பன்றிக்கறி, மாட்டுக்கறி முதலானவை மாமிசம் உண்ணும் இந்துக்களும் பெரும்பாலும் ஆட்டுடன் நிறுத்தி விடுவார்கள்.

இத்தகைய குழப்பமான உணவுமுறை இந்து மதத்தை அடிப்படையாக வைத்து ஒரு படிம நிலை சமூகத்தில் உருவானது. சைவர்கள் ஒவ்வொரு பிரிவும் தன்னைவிட தீவிர சைவர்கள், உயர்ந்தவர்கள் எனவும் நாம் அவர்களின் கீழே உள்ளவர்கள் எனவும், இந்து மதம் உருவாக்கி வைத்துவிட்டது.

பசுவதை, பன்றி மாமிசம் என்பது இந்துப் பண்பாட்டில் அடையாள உணவாகிவிட்டது. மதக் கலவரம் உருவாக்க பன்றிக்கறி -மாட்டுக்கறியை மசூதி -கோயில்களின் அருகில் போட்டால் போதும். இப்படியொரு சூழ்நிலையில் தான் இந்திய உணவுமுறை உள்ளது.

ஆனால் பல மதங்கள் கலாச்சாரங்களில் உருவான இந்தியாவில், ஜைனத்தின் தாக்கத்தாலேயே வைணவ பிரிவுகளில் சைவ உணவு கோட்பாடு பரவியது. இந்துக்களும் பன்றிக்கறியை தவிர்க்கக் காரணம், இஸ்லாமின் தாக்கமே எனவும் ஒரு கருத்துண்டு. வால்மீகி இராமயணத்தில் இராமர் பன்றிக்கறியை உண்டதும், கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி மாமிசம் படைத்ததும் வரலாறு என்று இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே உணவுமுறை மாற்றம் நிகழாமல் சமூகத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. உணவை உணவாகப் பார்க்கும் மனநிலை வரவேண்டுமானால் உணவுமுறையை வைத்து உயர்சாதி, தாழ்ந்தசாதி என்று நோக்கும் நம் மனமும் மாறவேண்டும்.

Pin It