karunananthanராகுல சாங்கிருத்தியாயன் இரட்டை வேடம் - ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?

உலக வரலாற்றிலேயே அன்று முதல் இன்று வரை

ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற புதினம் ஆரியர்களை உயர்த்திப் பேசுகிறது. அதை வைத்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் கருணானந்தம். (சென்ற இதழ் தொடர்ச்சி)

‘ரிக் வேத கால ஆரியர்கள்’ என்ற நூலில், அசுரர்களிடத்தில் போர் நடைபெற்றதாக குறிப்பிடப் பட்டுள்ளது. சம்பாரன், விருத்தினன், நமூஷி போன்ற பல அசுர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட் டுள்ளது. அசுரர்கள் எப்படி கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடப்பட் டுள்ளது. நூலின் ஓரிடத்தில், “திவோதஸ் என்ற மன்னன் சம்பாரன் என்ற அசுர  மன்னனுடன் 40 ஆண்டுகால போரில் ஈடுபடுகிறான்.

மிகக் கடுமையாக நடைபெற்ற போரின்  இறுதியில்  அந்த அசுர மன்னனை கொல்வதாக கூறப்பட்டுள்ளது.   வெற்றி பெற முடியாததற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் (அசுரர்கள்) கோட்டையில் வசிப்பதாக கூறப்பட்டது.

‘இந்தக் கோட்டையை நம்மால் தகர்க்க முடியாது இடியினால் தான் தகர்க்க முடியும்’ எனவேதான் இடிக்கு கடவுளான இந்திரனின் ஆசியை அவர்கள் வேண்டுகிறார்கள். அதனால் தான் இந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

எதற்காக இந்திரனுக்கு சிறப்பு ? இந்திரனின் ஆயுதம் ‘வஜ்ராயுதம்'. வஜ்ராயுதம் என்றால் இடி. பிராமணர் களாகிய நாங்கள் கூறினால் இடி இடிக்கும், மின்னல் வரும். அந்த இடியில் கோட்டைகளெல்லாம் நொறுங்கிப் போய்விடும் என்றார்கள். தற்செயலாக நடைபெற்றதைக்கூட தங்களது மந்திரத்தால் நடை பெற்றவை என்று உரிமை கொண்டாடினார்கள்.

இந்த கோட்டைகளைக் கொண்டிருந்த சம்பார னுடன் நடைபெற்ற போரைப் பற்றிக் கூறுகிறபோது, ‘இந்த அசுர மன்னர்களின் படைகளில் (இராட் சஷர்கள்) பெண்களும் வாள் ஏந்தி போரிடுகிறார்கள்’. இங்கே கேள்வி கேட்டவரும் சரி, இராகுல சாங்கிருத்தியாயனும் சரி, பெண்ணடிமைத் தனம் அசுரர்களிடம் இருப்பதாக கவலைப்படு கிறார்கள். பெண்கள் போரில் பங்கெடுத்து மரணமடைந்தனர்; மரணமடைந்தார்கள் என்பதைவிட ஆரிய மன்னர்களால் கொல்லப்பட்டார்கள் என்பதே சரி.

ஆரியர்கள் பெண்களுக்கு கருணை காட்டியதாக ரிக் வேதத்தில் எந்த செய்தியும் கிடையாது. இல்லாத ஒன்றை கற்பனையின் மூலமாக நிலை நிறுத்த விரும்பு கிறார்கள். சம்பாரனது மனைவியை ஆரியர்கள் கொன்ற செய்தியை ரிக் வேதமே குறிப்பிடுகிறது. போரில் பங்கெடுக்கும் அளவிற்கு பெண்கள் இருந்தார்கள் என்றால் அது பெண்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு அல்லவா ? அசுரர்களிடம் பெண்ணடிமைத்தனமும் வேசித் தொழிலும் மட்டுமே இருந்தன என்பது சரியானதா ? உலகிலேயே பழமையான தொழிலாக வேசித் தொழிலை கூறுவார்கள்.

அனைத்து நாகரிகத்திலும் வேசித் தொழில் இருந்தன. ஆனால் அந்த வேசித் தொழிலும் நாடோடி சமூகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தார்கள். ஏறக்குறைய இடம் பெயரக் கூடியவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதிலும் நிறைய கணவர்களுக்கு ஒரே பெண் மனைவியாகக் கூடிய சூழ்நிலைகளும் இருந்தன.

இது பரவாயில்லை என்று நினைக் கிறீர்களா ? இதற்கு வேசித் தொழில் என்று பெயர் இல்லையென்றாலும்கூட பெண்கள் விருப்பமில்லாமல் பல ஆண்களுக்கு இனங்கிபோதல் என்பது எந்தப் பண்பாடு ? அடிமை வணிகம் அசுரர்களிடமிருந்தது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்காக, இல்லவே இல்லை என்று நான் கூற வரவில்லை. ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு அடிமைத்தனம் இருந்தது.

“சில ஆரிய மன்னர்கள் போரில் வென்ற பிறகு, போரில் தோல்வியுற்றவர்களை அடிமைகளாக்கிக் கொண்டார்கள்” என்று ரிக் வேத கால ஆரியர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் இறுதிப் பகுதியான 10 ஆவது மண்டலத்தைத் தவிர வேறு எந்த மண்டலத்திலும் சூத்திரன் கிடையாது.

ஆனால் மற்ற மண்டலங்களில் வேறெப்படி குறிப்பிடப்பட்டுள்ளது ? இராட்சஷன், அசுரன், தஷ்யூ, கிருஷ்ணா , தாசா, யட்ஷா, கிராதா இவ்வாறு நிறைய ஆரியரல்லாத பிரிவுகள் குறிப்பிடப்படுகின்றன.

சூத்திரன் என்ற பிரிவு எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. சூத்திரன் என்ற பெயர் வந்ததே, ரிக் வேத கால இறுதியில் அல்லது முடிந்த பிறகு. இங்கு தொழிற் பிரிவுகளாக இருந்தவர்கள், ஆரியர்கள் இங்கே நிலையானவர் களாக மாறிய பிறகு, ஆரியர்களுக்கு, தொழிற் பிரிவினர் கட்டாயமாக அவர்களது உழைப்பைத் தர வேண்டும்.

அப்படி உழைப்பைக் கொடுத்தவர்கள் இங்கே சூத்திரர்களாக்கப்பட்டார்கள். சூத்திரர்கள் ஆரியர்கள் அல்ல. பிராமணன், சத்ரியன், வைசியன் ஆகிய மூவரும் ஆரியர்களில் வருவார்கள். ஆனால் சூத்திரன் ஆரியன் அல்ல.

ஆரியர்கள் அனைவருமே பிராமணர்கள் அல்ல. பிராமணர்கள் அனைவரும் ஆரியர்களாக இருக்கலாம். பல தொழில்கள் தெரிந்தவர்கள், கட்டாயப்படுத்தி ஆரியர்களுக்கான உழைப்பாளிகளாக மாற்றப்பட்டவர்கள்தான் இந்த நான்காவது வர்ணமான சூத்திர வர்ணம். இந்த தகவலை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ரொமிலா தாப்பர் எழுதிய ‘From Lineage To State’ என்ற நூல் தொன்மை கால ஆரிய வரலாறுகளை கூறுகிறது.

அதில், ஆரியர்களுக்குள் உட்பிரிவுகள் என்பது மூன்று தான். அந்த ஆரிய சமூகம் என்பது ‘விஷ்வம்’ என்று குறிப்பிடப் படுகிறது. ‘வைஷ்ய’ என்பதின் மூலமே ‘விஷ்’ என்ற சொல் தான். விஷ் என்றால் அனைத்து சமூகமும் என்று பொருள். அந்த விஷ் - லிருந்து சிலர் புரோகிதர்களாக மாறுகிறார்கள். அல்லது அந்தத் திறமையைப் பெற்று புரோகித பணியை (யக்ஞங்களை) செய்கிறார்கள். படைகளை பாதுகாப் பதற்காக, ஆட்சி செய்வதற்காக ‘ரஜன்னியர்கள்’ என்ற சத்ரியர்கள் உருவானார்கள்.

இந்த மூன்று பிரிவு தான் ஆரிய பிரிவு. “கோடிக்கணக்கான, இலட்சக் கணக்கான எண்ணிக்கையில் அவர்கள் இங்கே வர வில்லை. சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாழ்ந்தார்கள்.  ஆரம்பகாலத்தில் 5 ஆரிய இனக்குழுக்கள் தான் வலிமை வாய்ந்தவைகளாக இருந்ததாக ரிக் வேதமே கூறுகிறது.

அதில், புரு, துரு, திரிஷ்யா, துருவாசா, யாது ஆகிய குழுக்கள்  தான் இருந்தது. இவர்களில் ஒரு குடியிருப்பென்றால் பத்து குடும்பங்கள் இருக்கும் அவை கூட்டுக்குடும்பம்; ஒரு ஆண் வழித் தலைமையிலான குடும்பம். இந்த பத்துக் குடும்ப அமைப்பு ஒரு கிராமமாக மாறுகிறது. பத்து  கிராமங்கள் சேர்ந்தால் அதற்கு ‘கோபா’ என்று பெயர்.

பத்து கோபாக்கள் சேர்ந்தால் ஒரு ‘இராஷ்டிரம்’ ஆகிறது. பெரும்பாலும் கிராமத் திலேயே அடங்கிவிடுவார்கள். இந்த கிராமத்தின் தலைவன் கிராமைகா, கிராமனி. அங்கே இருந்த அந்த குடும்பங்களுக்கு தலைவன், குலாபா, குலபதி. இது தான் அவர்களின் உள்ளமைப்பு.

இந்த சிறு அமைப்பை மட்டும் வைத்திருந்தவர்கள் சுதந்திரமான ஆட்சியை விரும்பினார்கள் என்று எப்படி கூறுகிறார்கள்? சிறு அமைப்பில் என்ன சுதந்திரம், அடிமைத்தனம்? அவர்களின் பொருளாதாரமே ஆடு மாடு மேய்த்தலை மையமாகக் கொண்டது தான். அது எப்படி உயர்ந்த அமைப்பாகும்? இந்த அமைப்பை மக்களாட்சி என்று ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலில் கூறுகிறார். ஆனால் அவரே எழுதிய வரலாற்று பதிவுகளான 'ரிக் வேத கால ஆரியர்கள்' நூலில் அப்படி குறிப்பிடவில்லை.

மக்களாட்சி என்றால் என்ன ? உதாரணத்திற்கு, இன்றும் மலைகளில் வசிக்கக்கூடிய மக்கள் அவர்களுக்குள் எதாவது பிரச்சனை என்றால் அங்கு வாழக்கூடிய பத்து குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். அதே போல ஆரியர்கள் துவக்க கட்டத்தில் தங்களின் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்வார்கள் ஆனால் காலப்போக்கில் பல பிரிவுகள் உருவாகி ஒரு நாகரிகம் தோன்றிய பிறகு அந்த அமைப்பு பயன்படாது.

ரிக் வேத கால ஆரியர்கள்நூலிலே, சபாஷ், சமிதி என்ற இரண்டு அமைப்புகளை குறிப்பிடுகிறார். அரசனை தேர்ந்தெடுப்பார்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனை இவர்கள் நினைத்தால் விலக்கலாம். அந்த அரசனை அனைத்து மக்களும் தேர்ந்தெடுக்கவில்லை. இவைகளுக்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை, அனுமானம் தான்.

சிறு அமைப்பில் அரசனுக்குப் பெயர் தந்தையாகவும் இருக்கலாம் அல்லது அரசனாகவுமே இருந்திருக்கலாம். சிறிய அமைப்பை வைத்துக்கொண்டு, ஒரு நகர நாகரீகத்தை அதாவது இமயமலை முதல் அரேபிய கடல் வரை இருந்த ஒரு நாகரிகத்துடன் எப்படி ஒப்பிடுகிறீர்கள் ? ஒரு பெரிய பிரிவை ஆள்வதற்கு இந்த அமைப்பு முறையே மாறும். நாடோடிகளாக இருக்கும் தான்தோன்றி களிடம் இந்த அமைப்பு முறையை ஒப்பிடுவதே தவறு.

அசுரர்களை தாழ்வாக பார்ப்பது நியாயம்தானே என்ற வாதம் சரிதானா? அசுரர்களை தோற்கடிப் பதற்கு ஆரியர்கள் பல வழிகளை பயன்படுத்தி னார்கள் என்பது தான் வரலாறு. புராணங்களே இதை வைத்துத்தானே எழுதப்பட்டது. மோகினி அவதாரம் எப்படி வந்தது ? பெண்களை அனுப்பி அசுரர்களை பிரித்தது யார் ? அசுரர்களுக்கும் புரோகிதர்களாக ஆரியர்கள் சென்றார்களே! அனைத்து நாகரிகத்தி லும் புரோகிதம் உண்டு.

உலக வரலாற்றிலேயே அன்று முதல் இன்று வரை ஒரு சிறு சமூகத்திலேயே புரோகிதம் நிலையாக இருப்பது இந்தியாவில் மட்டும் தான். வேறு எந்த நாட்டிலும் கிடையாது, வேறு எந்த மதத்திலும் கிடையாது.  புரோகிதர்கள் வேறு வேறு சமூகங்களில் மாறி மாறி வருவார்கள்.

ஆனால் இங்கே புரோகிதம் ஒரு சிறு பிரிவுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. சுமேரியாவில் நெபுகத் நெசாத் என்ற மன்னர் சமூக ஒழுக்கத்தை கொடுக்கிறார். எகிப்தில் பாரோ சமூக ஒழுக்கத்தை வரையறுக்கிறார். வெளி நாடுகளில் மன்னர்கள் பொது ஒழுக்கங்களை தருகிறார்கள்; ஆனால் இந்தியாவில் மட்டும் தான் புரோகித கும்பல் ஒழுக்கங்களை கற்பிக்கிறது.

ஸ்மிருதிகளை மன்னர்களா இயற்றினார்கள்? ஸ்மிருதிகளை இயற்றியது புரோகிதர்களான பிராமணர்கள். இந்த ஜாதியின் தோற்றத்தைப் பற்றி எந்த திராவிட இலக்கியம் கூறுகிறது? கிடையாது. இன்றைக்கும் ஜாதியை நியாயப்படுத்துவது எந்த மொழி இலக்கியம்? சமஸ்கிருதம் தானே? எனவே ஜாதியை தோற்றுவித்தது திராவிடர்களா? ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. ஒருவன் முனைந்தாலும் அதை மாற்றமுடியாது இதை கூறுவதும், வலியுறுத்துவதும், நியாயப்படுத்துவதும் பிராமணிய இலக்கியங்கள்தான்.

இங்கிருக்கும் அத்தனை ஸ்மிருதிகளையும் கொடுத்தவர்கள் யார் ? அத்தனை ஸ்மிருதிகளுக்கும் ஆதாரம் தான் என்ன ? நான்கு வர்ணம்; அந்த நான்கையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஸ்மிருதிகள். இதில் பிராமண சதிகள் அம்பலப்பட்டுவிடுமே என்று எண்ணி இவற்றை 'கிருஷ்ணன்' என்ற ‘சூத்திர சத்ரியன்’ மூலமாக கூற வைத்தார்கள். கிருஷ்ணன், ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவன் சூத்திரன்.

மதுராபுரி ஆட்சியைக் கைப்பற்றியபோது அவன் சத்ரியன் ஆகின்றான். அந்த சத்ரியன் மூலமாக வர்ணத்தின் நியாயத்தை கூற வைக்கிறார்கள். மகாபாரதம், இராமாயணம் ஆகிய கதைகளின் மூலம் கூற வைத்தார்கள். ஆனால் ஸ்மிருதிகள் என்ற வரையரைகளை கொடுத்தவர்கள் பிராமணர்கள். இவற்றை வலுப்படுத்த தான், புராணங்கள் மற்றும் கீதை, இதிகாசங்களை படைத்தார்கள்.

இன்றைக்கும் திராவிடர்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு ஜாதி முறை தான் காரணம். உருவாக்கியவர்கள் திராவிடர்கள் அல்ல. புகுத்தியவர்கள் பிராமணர்கள். இதை நான் கூறவில்லை, வால்கா முதல் கங்கை வரை நூல் எழுதிய இராகுல சாங்கிருத்தியாயன், ரிக் வேத கால ஆரியர்கள் நூலில் ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார், 235 ஆவது பக்கத்தில், “பிராமணர்கள், இந்த நாட்டில் மக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்ட முடியாதவாறு பல சிறிய சிறிய ஜாதிகளாக பிரித்து வைத்து விட்டார்கள்” இதை அவர், துர்முகன், தர்மகீர்த்தி என்ற பிராமணர்கள் மூலமாகவே, ஜாதியை உருவாக்கியவர்கள் பிராமணர்கள்  என்ற  செய்தியை குறிப்பிடுகிறார்.

பல இடங்களில்  இதுபோல குறிப்பிடுகிறார், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மூலமாகவும் குறிப்பிடுகிறார். ஜாதியை உருவாக்கி யவர்கள் ஆரியர்கள் என்பது பொதுவானது. அதிலும் குறிப்பாக கூறவேண்டுமானால் பிராமணர்கள். சூத்திரர்களின் மலிவான உழைப்பு சத்ரியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. அதனால் பிராமண, சத்ரிய கூட்டுறவு ஏற்பட்டது. ஆனால், இராகுல சாங்கிருத்தியாயன் தனது ‘வால்கா முதல் கங்கை வரை’ கதையில் பழியை சத்ரியன் மேலே சுமத்துகிறார்.

(தொடரும்)

- பேராசிரியர் கருணானந்தம்

Pin It