periyar 450அக்கிராசனாதிபதிகளே! சகோதரர்களே!

இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என்போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில் பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.

அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்தியவர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின் உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனை வருக்கும் ஞாபகமிருக்கலாம்.

அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது வெறும் வேஷத்திலில்லையென்றும், அது மக்களின் நன்மைக்காகவே இருக்க வேண்டுமென்றும், அத்தோடு அது எவருக்கும் நம்பிக்கையில் மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும் ஏற்றதாயிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள்.

இதை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். மற்றும் உலகத்திலுள்ள மதக்காரர்களெல்லாம் இதை ஒப்புக் கொள்ளும்பட்சம் நாட்டில் மத சம்மந்தமான எவ்வித சண்டையும், அபிப்பிராயபேதமும், பிரிவும் பல மதங்களும் ஏற்பட இடமே இருக்காது. தவிர மௌலானா அவர்கள் இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கும், தீண்டாதார் என்பவர்களுக்குமுள்ள பல சுதந்திரங்களையும், இந்து மதத்தில் அவை இல்லாததையும் எடுத்துச் சொன்னார்கள்.

அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதைப் பற்றியே இரு சமூகத்திற்கும் பயன் படுமாறு சில வார்த்தைகள் பின்னால் பொதுவாகச் சொல்லுகிறேன். மதம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஏற்பட்ட கொள்கைகள் என்பதாக எல்லா மத சம்பிரதாயக்காரர்களும் குறிப்பு எழுதி இருக்கிறார்கள்.

டார்வின் தியரி எவுலூஷன் தியரி - என்பவையான மிருகத்திலிருந்து மனிதன் வந்த ஆராய்ச்சி, மாறுதல் முற்போக்கு ஆகிய கொள்கைகளின்படி பார்த்தால் மனிதனுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி இல்லாத காலத்தில் அதாவது மனிதன் எதை எதைக் காண்கின்றானோ, எதை எதை அனுபவிக்கின்றானோ அதன் தத்துவத்தை அறிந்துகொள்ள அறிவில்லாமலிருந்த காலத்திலும் அறிந்தவர்கள் சொல்லுவதை உணர்ந்து கொள்ளப் போதிய ஆற்றலில்லாத காலத்திலும், தோன்றியத் தோற்றங்களைப் பற்றியும் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றியும் திருப்திக்கும், பயத்திற்கும் கட்டுப்பாட்டிற்குமாகப் பல கட்டுக்கதைகள் மூலம் புகுத்தி அவைகளைப் பயத்தின் பேரில் நம்பச் செய்தவைதான் இன்றையக் கடவுள் உணர்ச்சியின் ஆரம்பமும் மதக் கொள்கைகளின் உற்பவமுமாகும்.

அந்த ஆரம்ப முறைதான் ஒரே விதமாய் உலகமெங்கும் பரவியிருந்ததாகுமென் றாலும் பின்னால் உலகம் மாறுதலாக ஆக அனுபவம் முதிர முதிர கொள்கைகளும் உணர்ச்சிகளும் மாற வேண்டியதாயிற்று. அந்த மாறுதல் கொள்கைகள்தான் இன்று நாம் பல மதங்களாகச் சொல்லிக் கொள்ளப்படுபவைகளாகும்.

ஹெட்மாஸ்டர் திரு. இராஜகோபாலைய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக அநாகரீகர்களாகவும், அறிவில்லாதவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து அவ்வப்போது சீர்திருத்தஞ் செய்ய முயற்சித்தவர்கள்தான் மதத் தலைவர்களானார்கள்.

அவர்கள் பொதுவாக அந்தக் காலத்தில் அநேக மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவுடையவர்களாகயிருந்ததாகக் காணப்பட்டதால் அவர்கள் அந்த மக்களால் காலத்திற்கேற்றபடி கடவுள் அவதார மென்றும், கடவுள் புத்திரரென்றும் மற்றும் பலவாறாகக் கருதப்பட்டார்கள்.

அவர்கள் பின்னால் உள்ள ஜனங்களும் தங்களுடைய வழக்கமான மூடத்தனத்தை கொண்டும் மக்கள் மதிக்க வேண்டு மென்கின்ற ஆசையைக் கொண்டும் அப்பெரியார்கள் மீது அமானுஷிகமான கட்டுக் கதைகளைக் கட்டி அநேக “அற்புதங்கள்” செய்தார்கள் என்று பெருமைப்படுத்தி விட்டார்கள்.

அதனால்தான் இப்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதத் தலைவர்களை மனிதத் தன்மைக்கு மேலாகவே மதித்து மனிதசக்திக்கு மீறினதும், அனுபவத்திற்கு ஒவ்வாததுமான குணங்களை ஏற்றிப் போற்றுகின்றார்கள். என்றாலும் காலமாறுபாட்டிற்குத் தகுந்தபடி பழைய கொள்கைகள் மாற மாற புதிய புதிய மதங்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் வரும். ஆனால் இனிமேல் தெய்வீகம் பொருந்தியவர்கள் மாத்திரம் ஏற்படமுடியாது.

மிகப் பழைய காலத்தில் அதாவது இந்து மத காலத்தில் கடவுள்களே நேரில் வருவதாகச் சொன்னார்கள். அதற்கடுத்த கிறிஸ்தவ மத காலத்தில் கடவுள் குமாரர் (பிதாமகன்) வந்ததாகச் சொன்னார்கள். மகமதிய மதக் காலத்தில் கடவுளின் தூதர்கள் வந்ததாகச் சொன்னார்கள். இது மாத்திரமல் லாமல் “இனி தூதர்கள் வரமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.

தெளிவாக இன்னுந் தெரிய வேண்டுமானால் இந்துக்களில் 10 அவதாரங்களுடனும் 12 ஆழ்வார்களுடனும் 4 சமயாச்சாரிகள் உள்பட 64 நாயன்மார்களுடனும் அநேகமாய் அவதாரங்களும், தெய்வீகங்களும் நின்றே விட்டன.

எத்தனையோ தடவை எதிர்பார்த்தும் எத்தனையோ பெயர்களைப் பழையபடி பொது ஜனங்கள், அவதாரமென்று கற்பித்தும் ஒன்றும் சிறிதும் பயன் பெறாமலே போய்விட்டது. அதுபோலவே கடவுளைப் பற்றியே தெரியாதென்று சொன்ன பௌத்த “அவதாரமும்” அத்துடனேயே நின்று விட்டது.

கிறிஸ்துவ மதத்திலும் கிறிஸ்துவுடனும் அவர்கள் சிஷ்யர்களுடனுமே நின்று விட்டது. அவர் மறுபடியும் வருவார் என்று சொல்லி வெகுகாலமா கியும் இப்போது எதிர்பார்ப்பதே பரிகாசத்திற்கிடமாய் விட்டது.

மார்டின் லூதர் முதலியவர்களும் மனிதர்களாகவே பாவிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் தான் கிறிஸ்து மதத்தில் கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்லாம் மார்க்கத்திலும் மகமத் நபி அவர்களோடேயே நபிகள் தோற்றம் நின்று விட்டது.

திரு. மகமது நபி அவர்கள் எல்லாத் தெய்வத்தன்மை பொருந்திய வர்கள் என்பவர்களிலும் பிந்தியவராதலாலும் எல்லோரையும் விட மிக்க பகுத்தறிவும், முன் யோசனையும் அனுபவ ஞானமும் உடையவரான தினாலும் “ இனி உலகில் நபிகள் தோன்றப் போவதே கிடையாது” என்று சொல்லி விட்டார்.

அவர் இரண்டு காரணத்தால் அப்படி சொல்லியிருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகின்றது; அதாவது ஒரு சமயம் மறுபடியும் யாராவது புறப்பட்டு சில ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன்னை தேவ அவதாரமென்றும், தெய்வாம்சம் என்றும் சொல்லி பழைய படி மக்களைப் பாழாக்கி விடாமலும் தனது கொள்கைகளை கெடுத்து விடாமலும் இருக்கட்டும் என்று மிக முன் ஜாக்கிரதையாகச் சொல்லி யிருந்தாலுமிருக்கலாம்.

அல்லது “இனி வரும் காலத்தில் மக்களை அறிவுடையவர்களாக இருப்பார்கள்; இம்மாதிரி ஒருவரை சுலபத்தில் தெய்வத் தன்மை பொருந்தியவர் என்று கருதிவிட இடமிருக்காது” என்று கருதி சொல்லியிருந்தாலுமிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் திரு. மகமது நபி அவர் கள் சொன்னது பலித்துவிட்டதுடன் அவரது கொள்கைக்கு மேலானதொரு கொள்கையை இது வரை வேறு எவரும் கொண்டு வந்து அமுலில் நடத்த வில்லை என்பது மாத்திரம் உறுதி. இதுவரைத் தோன்றிய எல்லா புது மதங்களும் கடைசியாக வந்த திரு. மகமது நபி அவர்களது கொள்கைகளுக்குப் பின் போகிறதேயல்லாமல் முன் போகவில்லை.

கிறிஸ்தவர்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் இந்துக்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டு மானாலும் புதியக் கொள்கைகளை திரு. நபி அவர்களிடம் தான் கடன் வாங்கியாக வேண்டும். அவரது கொள்கைகளுக்கு மேல் மக்கள் நலத்திற் குக் கொள்கைகள் வகுப்பதற்கு இப்போதுள்ள எந்த மதஸ்தருக்கும் தைரிய மில்லையென்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இஸ்லாம் மதக் கொள்கைகளுக்கு மேலாக ஒரு கொள்கை வகுக்க வேண்டுமானால் அது இப்போதைய ருஷிய மதமாகத் தானிருக்க வேண்டும். மற்றபடி அது கூடிய வரையில் மக்களுக்குத் தாராளமாக சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் வீரத்தையும் கொடுத்திருக்கின்றது.

ஆனால் மற்ற மதங்களிலும் அவைகள் இருப்பதாய் சொல்லிக் கொள்ளலாமே தவிர அந்தப்படி கொடுக்கப்படுமாயின் - அமுலுக்கு வருமாயின் அம்மதங்களே மறைந்து போய்விடும்.

இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் கொள்கைகளில் தலைகீழ் வித்தியாசமிருக்கின்றது.

இந்து மதத்திற்கு அகராதிகளில் “மகமதிய மதத்திற்கு விரோதமான மதம்” என்று ஒரு பெயர் இருக்கின்றது. அதன் கொள்கைகள் பெரும்பாலும் இந்து மதக் கொள்கைகளைத் தான் கண்டித்திருக்கின்றன.

இன்றைய தினமும் இந்திய அரசியலில் இந்துக்களுக்கு மகமதியர் அல்லாதார் என்று தான், அதாவது பார்ப்பனீயத்திற்கு எதிரிடையான மக்க ளுக்கு பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இருப்பதுபோலவே மகமதியர் அல்லாதார் என்கின்ற பெயரே ஏற்பட்டிருக்கின்றது.

இந்து மதம் என்பது உலக மக்களின் ஆதி முதல் நிலைமையாகும். அது இதுவரையில் சிறிது கூட திருந்தவில்லை.

எனக்கு முன் பேசிய எட்மாஸ்டர் திரு. ராஜகோபாலய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் அநாகரீகர்களாய் பகுத்தறிவு இல்லாமல் இருந்த காலத்தில் ஏற்பட்ட கொள்கைகள் என்பதுதான் இன்றைய தினம் இந்து மதத்தின் பேறால் அப்படியே இருக்கின்றன. மத்தியில் பலர் பல விஷயங்கள் சொல்லி இருந்தாலும் அவைகள் புத்தக அளவில்தான் இருக்கின்றன.

மற்றபடி கடவுள் விஷயத்தில் பல கோடி கடவுள்களும் - தொட்டதெல்லாம் கடவுளாயும், நினைத்ததெல்லாம் கடவுள்களாயும், தென் பட்டதெல்லாம் கடவுளாயும் இனியும் விளங்குகின்றன. இஸ்லாம் மார்க்கம் சமீப மார்க்கமானதால் அதில் அந்தக் காரியம் மாத்திரம் அதாவது கடவுள் காரியம் வெகு கண்டிப்பாய் இருக்கின்றது.

எப்படியெனில் ஒரு கடவுளுக்கு மேல் நினைத்தால் பாவம் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவனைக் கொன்றால் புண்ணியம் என்கின்றவரை கூடவும் இருப்பதாய் தெரிகின்றது. நிற்க,

இந்துக் கடவுள்கள் உருவத்தை எல்லாம் இஸ்லாமியர்கள் உடைத்து சின்னாபின்னமாக்கப்பட்டதாகவும், ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் குரானையும் வைத்து மதப் பிரசாரம் செய்ததாகவும் சொல்லப் படு கின்றது. அது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம், பொய்யாயிருந்தா லும் இருக்கலாம்.

ஆனாலும் அது உண்மையாயிருந்தால் அந்த கொள்கை கொண்ட மகமதிய அரசாங்கம் இதுவரை இந்தியாவில் இருந்திருக்குமாயின் இன்றைய இந்தியாவின் நிலை எவ்வளவோ மேன்மையாய் இருந்திருக்கும். தீண்டாதார்களாக ஆறு கோடியும் பயங்காளிகளும், கோழைகளும் ஒற்று மையற்றவர்களும் சோம்பேறிகளுமாக இருபது கோடியுமுள்ள மக்கள் இன்று கண்டிப்பாய் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது கல்லு போன்ற உறுதி.

குழவிக் கல்லுக்கு கோடி ரூபாய்

ஒரு பக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் - நாட்டை விட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்தி லிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி, வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு, ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜியத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக் கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இஸ்லாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்தமடைய வில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும் பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.

எல்லா மதமும் மூர்க்கப் பிரசாரமே

சங்கராச்சாரி மதம் பௌத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர்களைக் கழுவேற்றினதும், வைணவ மதம் புத்த விக்கிரகங் களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப்போமானால் அந்தக் காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப் படுபவைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல என்று தோன்றும் ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டதா இல்லையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது.

மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதை தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களை சைவர்கள் கழுவேற்றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களாலேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரசாரம் செய்வதுடன் அதன் பெருமையைக் காட்டிக் கொள்ள வருஷந் தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற் சவங்கள் நடத்திக் காட்டப்படுகின்றன. அக்கோயில்களில் இன்றும் கழு வேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.

அது போலவே வைணவர்களும் புத்த மத விக்கிரகத்தை அழித்த தற்கு ஆதாரமாய் ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத்தை திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெரு மையாகவும் எழுதி புண்ணிய சரித்திரமாகப் பாவித்து தினமும் படிக்கப் பட்டும் வருகின்றன.

இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப்படும் வாள் பிரசாரத்திற்கு சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.

கிறிஸ்து நாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரசாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றன என்பது விளங்கும்.

இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது “நாஸ்திகர்களை நாக்கருக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திர வதை செய்ய வேண்டும், நாட்டை விட்டுத்துறத்த வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கின்றேன்.

மற்றும் இந்து “வேத சாஸ்திரங்களைப் படித்தால் நாக்கருக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும், மனதில் ஏறிவிட்டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன்.

மற்றும் “பெரியோர் வாக்கை புராண இதிகாசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாஸ்திகனாவான். அப்படிப்பட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும்” என்பனவாகிய வெல் லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
ஆகவே உலகில் மதப் பிரசாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே யொழிய அனுபவத்தில் அன்புமயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்தக் காலத்திய வேத மதக்காரர்களுக்கு தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண்டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க்கலாம்.

ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக்கிறார்கள். தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டாமையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றது.

எல்லாருக்குமே அவமானம்

மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திர மல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு அந்த மதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன்.

இந்து மதத்தில் ஒவ்வொருவனும் மற்றவனைக் கீழ் ஜாதியான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள ஆணவத்தை அனுபவிக் கின்றானேயல்லாமல் தான் மற்றொரு ஜாதிக்கு கீழ் ஜாதியாய் இருக்கின்றோமே என்கின்ற இழிவை உணரும் உணர்ச்சியே கிடையாது. பொதுவாக இந்துக்களுக்கே சுய மரியாதை கிடையாது என்று சொல்லுபவர்களுக்கு இந்த ஒரு காரியமே போதுமான ஆதாரமாகும்.

அன்றியும் இந்து என்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் கீழ் ஜாதியாக மதித்து இழிவு படுத்துவதையும் மனித உரிமை தடுக்கப்பட்டி ருப்பதையும் ஈனமான அர்த்தம் கொண்ட சூத்திரன் என்ற பேரால் குறிக்கப் பட்டிருப்பதையும் கண்டு சிறிதும் வெட்கப்படுவதில்லை.

யாராவது ஒருவர் இருவர் வெட்கப்படுவதாய் பாசாங்கு செய்தாலும் காரியத்தில் உதைத்த காலுக்கு முத்தம் வைப்பதுபோல் அந்தப்படி தன்னை இழிவு படுத்துவதற்கு அஸ்திவாரமாகவும், ஆஸ்பதமாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதத்தையும் கடவுளையும் போற்றுகின்றான். காக்கப் பாடுபடுகிறான்.

இப்படிப்பட்ட வர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. எவ்வளவோ அபிலாசைகளையும், பெருமைகளையும், கீர்த்திகளையும் ஆசைப்படுகின்ற மனிதன்தான் ஏன் கீழ் ஜாதியாய் மதிக்கப்படுகிறான். தன்னை ஏன் சமூக வாழ்வில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கின்றான்.

தன்னுடைய சொந்த இழிவையும், கொடுமையையும் நீக்கிக் கொள்ளக் கவலையும் முயற்சியும் ஆற்றலும் இல்லாத மனிதன் மற்றவர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருகிறேன் சுய மரியாதை உண்டாக்கித் தருகிறேன் என்றால் அதில் ஏதாவது நாணயமோ பொருளோ இருக்க முடியுமா? இஸ்லாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப் படலாம், பெறாமைப்படலாம், அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத் திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலானவர்களாகவுமே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் மதக் கொள்கைகளேயாகும். அதாவது சமத்துவமும், சகோதரத்துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்த சுத்தமாய்க் கிடையாது.

ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோ ரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான்.

முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினேகிதர்களையும், இதரர்களையும், குழந்தைகளையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவைச் சாத்துவான். இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கின்றது. ஆகவே மதக் கொள்கைகளின் உயர்வு, தாழ்வு களை பலனில் இருந்து பார்த்தறிகின்றதா? அல்லது நாமே எழுதிவைத்துக் கொண்டதிலிருந்து அறிகின்றதா?

இஸ்லாமிய மதம் மதிக்கப்படுவது போல் இந்து மதம் உலக மக் களால் மதிக்கப்படுகின்றதா? ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது? இந்துக்களில் 100-க்கு 90 பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர், புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில் சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப்படுவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் இந்த யோக்கியதை உள்ள மக்கள் பெரிய விஷயங் களில் ஆசைப்படுவதில் என்ன பிரயோஜனம்? அது போலவே இந்து மதத் தில் இந்துப் பெண்களின் நிலை என்ன என்று பாருங்கள்.

ஒரு “வேசி”க்கு இருக்கும் சுதந்திரமும், சுயமரியாதையும், சுகமும் கூட நமது “பெண் தெய்வங்களுக்கு” இல்லை. சொத்தில்லை, படிப்பு இல்லை, விவாக சுதந்திர மில்லை, விதவை ஆகி விட்டால் மறுமண மில்லை. இதற்கு என்ன பெயர் சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை.

உயிருடன் கட்டையில் வைத்து எரிப்பதை நிறுத்தியதே அவர்களுக்கு பெரிய உபகாரம் செய்ததாய் கருதப்படுகின்றது. ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு பெரிய அபகாரமாய் முடிந்திருக்கிறது. இம்மாதிரி கொள்கைகளுடன் உலக மக்கள் முன்னால் நாமும் நம்மை எப்படி மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும்.

அதில்லாமல் காட்டிமிறாண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா? தவிர இந்த சமயத்தில் இஸ்லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டியிருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றது.

இந்துக் கோயில்களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக்கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் “அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல” என்றும் “சாவகாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறுதல்கள்” என்றும் சொல்லலாம்.

அது போதிய சமாதானமாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக்காரர்களும் “இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோக்ஷம் தேடிக் கொள்ள நாம் யாத்திரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும்” என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீமாவது பட்டினியாகவும் தொழில் இல்லாமலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அதுதான் யோக்கியமான பணக்காரனின் லக்ஷியமாகும். இந்தக் குணங்கள் இல்லாத பணக்காரன் கொள்ளைக்காரனுக்கு சமானமானவனே யாவான்.

தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் “தங்கள் மதம் உயர்ந்த மதம்” என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப்படுகின்ற இழிவு படுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க்கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

தாங்கள் அனுபவிக்கும் சமத்துவ இன்பத்தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப்படுகின்ற மக்கள் யாவரும் அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும்” என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கியமான மனித னுக்கும் தலையாயதாகும். அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களேயாவார்கள்.

ஆகவே சகோதரர்களே! இந்த சமயத்தில் எனக்கு அளித்த சந்தர்ப் பத்தில் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். நீங்கள் தயவு செய்து அவற்றை நன்றாய் யோசித்துத் தங்களுக் குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை தயவுசெய்து தள்ளி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.

குறிப்பு : ஈரோடு முனிசபல் எலிமெண்டரி பாடசாலையில் நடந்த திரு. நபி அவர்கள் பிறந்த நாள் விழாவிலும் சத்தியமங்கலம் விழாவின் தலைவர் முடிவுரையிலும் பேசியது.

(குடி அரசு - சொற்பொழிவு - 24.08.1930)