மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் மூன்று. அவை உணவு, உடை, உறைவிடம் ஆகியனவாகும். இவற்றுள் முதன்மையானதும் முக்கியமானதும் உணவாகும். “உணவு என்பது இயற்கையான நிலவியல் பரப்பில் கிடைக்கிற உயிர்வேதியியல் (Biochemical) பொருள் ஆகும். உலகத்து உயிர்கள் அனைத்தையும் காலவெளியில் தொடர்ந்து உயிர்த்திருக்கவும் இயங்கவும் செய்கின்ற ஒன்று. இந்த உணவு என்பதே கூட ஓர் உயிரியாக/உயிரின் விளை பொருளாக இருக்கின்றது. உயிர்களின் அடிப்படையான இயக்கங்கள் அனைத்தும் ‘உணவினை’ நோக்கியதாகவே இருக்கின்றன.” (ச. பிலவேந்திரன், 2001, தமிழ்ச் சிந்தனை மரபு: நாட்டுப்புறவியல் ஆய்வுகள் : 23).

உணவு என்பது மனிதனின் உயிர்வாழ்வுக்குப் பயன்படுவது மட்டுமின்றி அது அவனது சமூக, பண்பாட்டினைச் சுட்டுவதாகவும் அமைகிறது. “உணவு வாயிலாகவே சமுதாய உணர்ச்சியும் வளர்ந்தது” என்பார் மா. இராசமாணிக்கனார். (1970:497). சைவம், அசைவம், இயற்கை உணவு என அவரவர் விருப்பப்படி உண்ணும் முறை மனித சமூகத்தில் நடைமுறையில் உள்ளது. மனிதனின் உணவும், உணவு முறையும் காலம் மற்றும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மறுபடுகிறது.

beef eating

ஆதி மனிதனின் உணவு இலை, தளைகள், பழங்கள் முதலான இயற்கை சார்ந்தே அமைந்திருந்தது. வேட்டைச் சமூகம் உருவானபோது மனிதன் மான், ஆடு, மாடு முதலான விலங்குகளின் இறைச்சியைப் பதப்படுத்தாமலேயே உண்டு வந்தான். தீயை உண்டாக்கத் தெரிந்தவுடன் உணவைத் தீயில் சுட்டும், பக்குவப்படுத்தியும் உண்ணத் தொடங்கினான். நாகரீக காலத்தில் மனிதன் தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்து கொண்டான். மனிதனின் வாழ்விடத்திற்குத் தக்கவாறு உணவுமுறையும் அமைந்தது.அந்தவகையில் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய சமையல் மற்றும் உணவு முறை மூலம் தங்கள் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

உணவுப் பொருட்களைச் சமைக்கப்பட்டவை (cooked) சமைக்கப்படாத பச்சையானவை (raw) என்ற இரு எதிர்வுகளாகப் பிரிக்கிறார் லெவிஸ்ட்ராஸ். (ச. பிலவேந்திரன், 2001 : 23). உணவு உலகத்து உயிர்களனைத்தும் தொடர்ந்து உயிர்வாழத் தேவையான பொருளாகவும் அமைகிறது. உணவினைத் தேடியோ அல்லது நோக்கியோ உயிர்களின் இயக்கங்கள் இருக்கின்றன. ‘உணவு பிரபஞ்சத்தின் சுழற்சி’ என்கிறது மைத்ரேய உபநிடதம்.

உணவு, உண்ணும் முறை, உணவும் சமூகமும் குறித்து ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளோடு வாய்மொழி வரலாறுகளும் தமிழக மக்களிடையே வழக்கத்தில் உள்ளன. ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றை மறுகட்டமைப்புச் செய்யும் சக்தி கொண்டவையாக வாய்மொழி வரலாறுகள் திகழ்கின்றன.

மக்கள் பயன்பாட்டில் மாட்டுக்கறி எனும் புலால் உணவு:

வேத காலச் சமூகச் சடங்குகளில் மாடுகள் பலியிடப்பட்டதற்கும், உணவாகப் பயன்படுத்தப்பட்டதற்குமான வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகள் ஏராளம் காணக் கிடைக்கின்றன.ரிஷிகள், முனிவர்களின் விருந்துகளில் புலால் உணவு பெரும்பங்கை வகித்ததாக ராகுல சாங்கிருத்தியாயன் எழுதியுள்ளார்.

“விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான ஆர்கியம் அல்லது மதுபர்கம் என்று மிகப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு ஆர்வத்திற்குரிய சடங்கு குறித்துப் பிற்கால வேத நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. விருந்தினர்களைக் கவுரவிக்க பசுக்களைக் கொல்லும் நடைமுறை பண்டைக் காலத்திலிருந்தே இருப்பதாகத் தெரிகிறது. ‘விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள்’ என்ற பொருள் தரும் அதிதினிர் (Athithinir) என்ற சொல் ரிக் வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது. திருமண விழாவின்போது பசு பலிதரப்பட்டது குறித்து ரிக்வேதப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. ஆட்சியாளர்களோ, மரியாதைக்குரியவர்களோ விருந்தினார்களாக வந்தால், மக்கள் காளைகளையோ, பசுவையோ பலிதந்தார்கள் என்று அய்த்தரேய பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது” (III.4. மேற்கோள்: டி.என்.ஜா. 2003: 31)

வேத காலத்தில் மக்கள் மாட்டிறைச்சியை முக்கிய உணவாகவும், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி உண்டு வந்ததையும்; மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவுப் பழக்கங்களில் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும் ‘புனிதப்பசு எனும் கட்டுக்கதை’ என்ற நூல் பதிவு செய்துள்ளது. இசுலாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள் என்பதை மேற்குறித்த நூலின் ஆசிரியர் டி.ஏன். ஜா நிறுவியிருக்கிறார்.

புத்தர் காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம்மக்களிடம் வழக்கத்தில் இருந்து வந்ததைப் பவுத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. வேதத்தில் ஆரியர்கள் விலங்குகளை வெட்டிப் பலியிடப் போய்த்தான் மகாவீரரும் புத்தரும் கொல்லாமையைப் பற்றிப் பேசினர். உயிர்ப்பலி மறுப்பு,வேளாண்மைத் தொழில், கால்நடைப் பொருளாதாரம் ஆகிய அடிப்படைகளை முன்னிறுத்திக் ‘கொல்லாமை’ எனும் நல்லறம் கூறி மக்களிடையே சமண, பவுத்த மதங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. சமண, பௌத்தக் கொள்கைகள் மீது ஈர்ப்புக் கொண்ட ஆதி சங்கரர் அவற்றைத் தமதாக்கிக்கொள்ள முயன்றார். ‘புத்த சமயம் மேலோங்கிய காலத்தில் அதை வென்று ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட, சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரமாகக் கொண்டார். ஷண்முக ஸ்தாபகாசாரியராய், சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்துமதம் என்ற அற்புத விருக்ஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத்திறமையாலும் கல்வி வலிமையினாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்தி வைத்துவிட்டுப் போனார்’ என்று பாரதி தமது உள்ளக்கிடக்கையை கீதைக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது. (மேற்கோள்: தமிழண்ணல் ‘பாரதிப் பாவலன்’ 2009, நூலுக்கு எழுதிய அணிந்துரை, பக். 16-17)

விலங்குகளில், குறிப்பாகப் பசுவைப் பலியிடுவதை எதிர்த்த பௌத்த மதத்திடம் ஆரியர்கள் தாங்கள் இழந்த அதிகாரத்தையும், செல்வாக்கையும் மீட்டெடுக்க முயன்றனர். அதன் விளைவுதான் ஆரியர்கள் மாமிசத்தை விடுத்து சைவத்திற்கு மாறியதன் மர்ம முடிச்சாகும். ‘பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உள்ளிட்ட பிற விலங்குகளின் இறைச்சியை உண்பதைக் கைவிட்டு, சைவ உணவுக்கு மாறிய போதிலும், தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பு மக்கள், பார்ப்பனரால்லாதவர்களில் உழைக்கும் சாதியினர் மற்றும் இசுலாமியர், கிறிஸ்தவர் மாட்டிறைச்சியை உண்டு வந்தனர்’. (க. முகிலன். 2016:16). மனிதகுலம் தோன்றிய காலம் முதலாய் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் பெருமளவில் இருந்து வருகிறது என்பதை இந்திய அரசின் ஆய்வு (SampleRegistrationSystemBaselineSurvey) தெரிவிக்கின்றது.

மாட்டிறைச்சி: உணவு, மருந்து, பண்பாடு

பழங்காலத் தமிழர் உணவு முறைகளில் காய்கறி, பழங்களோடு புலால் உணவும் ஓர் அங்கமாகப் இருந்து வந்தது. வேட்டைச் சமூகத்தின் நீட்சியாக புலால் உண்ணும் பழக்கம் இன்றுவரை எல்லா இனக்குழு மக்களிடத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. புரதமும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்த மாட்டுக்கறி உணவை மிகுதியும் வேலைப்பளு, உடலுழைப்பு கொண்ட மக்களே விரும்பி உண்கின்றனர். மாட்டுக்கறி உடலுக்கேற்ற ஆரோக்கியமான உணவு,குறைந்த செலவில் கிடைக்கும் இறைச்சி என்பதாலும் இவர்கள் இதை நாடுகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், இஸ்லாமியர்கள், தலித்துகள் முதலியோர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். பெரும்பான்மையான இந்திய ஏழை மக்களின் புரதம் மற்றும் ஊட்டச் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மாட்டிறைச்சி பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், மாட்டுக்கறி என்னும் அசைவம் உண்ணும் பழக்கத்தில் பல நிலைகள் நம் சமூகத்தில் கற்பிக்கப்படுகின்றன. அதாவது, ஆடு, மீன், கோழி ஆகிய உணவுகளை உண்பவர்கள் சற்று உயர்தரம் என்றும்;மாட்டுக் கறியை உண்பவர்கள் புலையர்கள், கீழானவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்றும்; பன்றிக்கறி தின்பவர்கள் அவரினும் கீழானவர்கள் என்றும்;பூனைக்கறி, நாய்க்கறி தின்பவர்கள் எல்லோரிலும் இழிவானவர்கள் என்றும் எழுதாத சட்டமாக இன்றும் உள்ளது.

இதில்,பாசி,அழுக்குகளைத் தின்னும்மீனையும்;தானியங்களுடன் எச்சில் மற்றும் நரகலைத் தின்னும் கோழியையும் உண்பது உயர்வானதாகவும், சுத்தமானதாகவும் கருதப்படுகின்றது. சுத்தமான பச்சைப்புல், வைக்கோல், பருத்திக்கொட்டை,புண்ணாக்கு ஆகியவற்றைமட்டுமே உண்டு வாழும் மாடும் மாட்டுக்கறி உணவும் கீழானதாகவும்,அசுத்தமானதாகவும் கருதப்படுகிறது, அதை உண்ணும் மனிதன் கீழானவனாக,இழிவானவனாகக் கருதப்படுகிறான். ‘மாட்டுக்கறி சாப்பிட்டால் மூளை வளராது’ என உழைக்கும் மக்களை ஒதுக்கித்தள்ளும் நிலையும் இந்த அடிப்படையில் உருவானதுதான். அவ்வளவு ஏன்,‘மாட்டுக்கறி தின்றால் பூகம்பம் வரும்’ என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

‘ஜமைக்காவைச் சேர்ந்த ஒட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது பயிற்சியாளர் தினமும் இரண்டு வேளை மாட்டிறைச்சி உண்ணுமாறு அறிவுறுத்தியதால்’தான் ஒலிம்பிக்கில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வெல்ல முடிந்தது. (தினகரன், தில்லி பதிப்பு, 30.08.2016).நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பான்மையோரும், தகவல் தொழில் நுட்பத்தில் உலகை உலுக்கிய 'மைக்ரோசாஃப்ட்’,'ஆப்பிள்’ நிறுவன முதலாளிகளும் மாட்டிறைச்சி உண்ணும் அசைவப் பிரியர்கள்தான். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, நியூட்டன், மார்க்ஸ், அம்பேத்கர், ஸ்டாலின், லெனின், சேகுவேரா, மைக்கேல் ஜாக்சன் முதலான மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்கள்தான். “மாட்டிறைச்சி மனித ஆற்றலின் அறிவின் ரகசியமாகக் கருதப்படுகிறது”. (ஹோராட்டா, அக்டோபர், 2014). மாட்டிறைச்சி மேலைநாட்டு மக்களின் ஆரோக்கியமும், மருந்தும் ஆகும். மாட்டின் தோல்பொருட்கள் பன்முகப் பயன்பாடு கொண்டதாகவும், பொருளாதார ரீதியில் பெரும் வருவாய் ஈட்டும் பொருளாகவும் இருக்கிறது.

இந்தியாவில் மாநில வாரியாக இறைச்சி உண்ணும் சதவிகிதத்தினரை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ (12.06.2016) நாளேடு பதிவு செய்துள்ளது. இப்புள்ளி விபரம் இந்தியாவில் 75-80 சதவீதம் மக்கள் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.(க. முகிலன்.2016:12-13). மேட்டுக்குடி மக்கள் பலர் இந்தியாவுக்கு வெளியே மாட்டுக்கறியை உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு என மாடுகளோடு நேரடித்தொடர்பு கொண்டிருக்கும் மக்கள் அம்மாடுகள் இறந்தவுடன் அவற்றோடு உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொள்வதுடன் அந்நியமாகிப் போகின்றனர். 1980 வரை மாட்டுக்கறி உண்ணாத , மாட்டுக்கறி உணவைக் கண்டாலே மூக்கைப் பொத்திக்கொண்டு காத தூரம் ஓடியவர்கள், மாட்டுக்கறி உண்பவர்களைத் தொட்டால் தீட்டு என்று ஒதுங்கியவர்கள், இப்போது மழை பொய்த்து விவசாயம் நலிந்து பிழைப்புத் தேடி அண்டை மாநிலமான கேரளாவில் தஞ்சமடைந்துள்ளனர். சென்ற இடத்தில் அங்கு இயல்பாகக் கிடைக்கும் மாட்டுக்கறி உணவுக்கு அடிமையாகியுள்ளது கண்கூடு. மாட்டுக்கறியைத் தீண்டாத இவர்கள் இப்போது அதன் வாடிக்கையாளர்களாகியுள்ளனர்.

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எப்போதுமே அசைவப் பிரியர்கள் தான். ஆனால் இப்போது சுமார் 90 சதவீத இந்துக்களும் அசைவத்திற்குக் குறிப்பாகக் கோழிக்கறிக்கு அடிமையாகியுள்ளனர். “ஹைதராபாத் நகரில் தினமும் 2500 மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதாக அந்நகர நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்”. (ஆர்.எஸ். நாராயணன், தினமணி, தில்லிப் பதிப்பு. 17.09.2015). ஆண்டுதோறும் இரண்டு கோடியே பதினேழு லட்சம் பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன என்று அரசின் புள்ளி விபரம் குறிப்பிடுகின்றது. மாட்டுக்கறி வியாபாரிகளில் 95 சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கின்றனர் என்று தில்லி உயர்நீதி மன்ற முன்னாள் தலமை நீதிபதி திரு, ராஜேந்தர் சச்சர் குறிப்பிட்டுள்ளார். (TimesofIndia,DelhiEdition: 21.11.2015). மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 13,14,158 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

குளிர்ப் பிரதேசத்தில் வாழும் மக்கள் கடுங்குளிரைச் சமாளிக்க புரதச்சத்துள்ள மாட்டிறைச்சியை உண்கின்றனர். உறைபனிப் பிரதேசங்களில் கடமையாற்றும் ராணுவ வீரர்களுக்குக் கண்டிப்பாக மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது. கேரளாவில் 72 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்கின்றனர். மலிவான விலையில் கிடைக்கிற புரதச்சத்து நிறைந்த உணவு என்பது இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

மதச் சார்பற்ற மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசுகின்றன. “பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம்”.(வினவு, 21.01. 2014). மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல் ஆகியவற்றுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய மருத்துவ நூல்களான சரக சம்கிதமும் சுஸ்ருதா சம்கிதமும் பரிந்துரைக்கின்றன.

அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்கள் நான்காம் மாதத்திலிருந்து மாட்டுக்கறி உணவை உண்ண மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்படுகிறார்கள். காசநோய் குணமாக மாட்டு ஈரலை வாரத்திற்கு இரண்டுமுறை உணவாகத் தரச்சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ‘கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவது தலித்துகள் தங்கள் உணவுப் பழக்கத்திலிருந்து கண்டுபிடித்த நுட்பமாகும்’. (கோ. ரகுபதி, புதுவிசை, ஏப்-ஜூன், 2008: 12). குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள், வயோதிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் தினத்தோறும் எடுத்துக்கொள்ளும் கால்சிய மாத்திரைகள் மாட்டு எலும்பிலிருந்து செய்யப்படுகின்றன என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. அதிகமான இரும்பு மற்றும் துத்தநாக (Iron&Zinc) சக்தியும், ரத்தத்தின் சிவப்பணுக்களை விருத்தி செய்து நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கும் ‘வைட்டமின் 12’ சக்தியும் மாட்டிறைச்சியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ‘‘இறைச்சி உணவுதான் குரங்கின் மூளை மனித மூளையாக வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வேதியியல் அடித்தளத்தை உடலுக்கு அளித்தது’’ என்கிறார் எங்கெல்ஸ். (வினவு, 25. 06. 2015).

மாட்டிறைச்சியின் மகத்துவம் பற்றிப் பெரியார் இவ்வாறு எடுத்துரைக்கிறார். “மனிதனுக்குக் கிரமமான உணவு மாமிசம் தான். அதை விட்டுவிட்டுப் பழக்கவழக்கத்தை உத்தேசித்துச் சும்மா அதனை ஒதுக்குகிறார்கள். இதனால் மக்கள் பலவீனார்களாகத்தான் ஆகிறார்கள். மக்கள் விவசாயப்பண்ணை வைத்துக் கொண்டு தானியங்களை உற்பத்தி பண்ணுவதுபோல, மாட்டுப்பண்ணைகள் வைத்து, நல்லவண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவைப் பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக்கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மாடு தின்பது பாவமல்ல. அப்படியே பாவம் என்றாலும் கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம்தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துத்தானே வருகிறார்கள். மேல்நாட்டவர் மன உறுதியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணமாகும். நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும் மன உறுதி அற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லாத உணவுமுறை தான் ஆகும்”. (பெரியார், விடுதலை : 13.02. 1964). மேலும், “மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் மூடத்தனமாகும்” என்கிறார். “வடநாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு, அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவுமுறையால்தான்”. (பெரியார், விடுதலை : 03.07.1964). “மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பாகிவிட்டது. ஒரு சிறு கூட்டத்தினாரே மாமிசம் உண்பதில்லை”. (பெரியார், விடுதலை.: 30.05.1968). மொத்தத்தில் மாமிசம் சாப்பிடுவதே அதிக ஜீவகாருண்யம் என்கிறார் பெரியார்.

மருத்துவக் குணம் நிறைந்த, ஊட்டச்சத்துமிக்க மாட்டிறைச்சியை உண்டதால், உண்ணுவதால் எந்தவித உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவோ, தீராத நோய்க்கு ஆட்பட்டுச் செத்து மடிந்ததாகவோ இதுவரை எந்தவித ஆய்வுகளும் தெரிவிக்காத நிலையில் அது அடித்தள மக்கள் உணவாக ஆடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நூறு டிகிரி வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவு (சைவம், அசைவம்) எதுவானாலும் அது அறிவியல் முறைப்படி பாதுகாப்பானதே,விருப்பமுடைய அனைவரும் நம்பி உண்ணத் தகுதியானதே.

ஆக, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, மருந்து, கலாச்சாரம் எனப் பல்வேறு அடிப்படைகளில் மாட்டிறைச்சி உலகம் முழுவதும் முக்கிய உணவாக இருந்து வருகிறது.

மாட்டிறைச்சி அடித்தள மக்கள் உணவான வரலாறு : சில அடிப்படைகள்

மனித வாழ்வுக்கு நன்மை பயக்கும் மாட்டுக்கறியை உண்ணும் ஒடுக்கப்பட்ட உழைக்கும்,அடித்தள மக்களை இழிவானவர்களாகக் கருதும் போக்கு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது. மாடு கொல்லப்படுவதும் மாட்டிறைச்சி உண்பதும் தீண்டத்தகாத சாதிகளுடன் அடையாளம் காட்டப்படுகின்றன. “மாட்டுக்கறியை மிகக் கேவலமான உணவாகவும் அதனை உண்போரைத் தீண்டத்தகாதவர்களாகவும், இழிவானவர்களாகவும் கருதும் ஆதிக்க மனோபாவம் இந்தியாவில் நீடிக்கிறது. தலித்துகளின் மாட்டுக்கறி உண்ணும் வழக்கமே அவர்கள் மீதான தீண்டாமைக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாக” கோ. ரகுபதி கூறுகிறார். (புதுவிசை, ஏப்-ஜூன், 2008: 12). “ஆவுரித்துத் தின்னும் புலையர்” என்று தாழ்த்தப்பட்டோரை இழிவு படுத்துகிறது தேவாரம்.‘புலையன் ஆவுரித்துத் தின்றான்’,‘பாணன் கன்றை உரித்துத் தின்றான்’ என நற்றிணையும் (3-9) நவில்கிறது. “பசு, எருது முதலான பிராணிகளின் மாமிசத்தைப் புசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பதால்தான் புலையர் என்றும் பறையர் என்றும் தீண்டத்தகாதார் என்றும் வழங்கப்படுவதாக மறைமலையடிகள் போன்றோர் எழுதி வைத்துள்ளனர்”. (புலவர். ஜே. ஆனந்தராசன். 2002:31).வேதகாலம் முதல் சமகாலம் வரை பலரும் பசுவுரித்துத் தின்றிருக்கப் புலையர் மீது மட்டும் பழிசுமத்துவது என்ன நியாயம்?.அடித்தள மக்களைச் சனாதனிகளோடு இலக்கியங்களும் சேர்ந்து இழிவு படுத்துகின்றன.மொத்தத்தில் மாடெனும் விலங்கு புனிதப்படுத்தப்படுகிறது. அதைத் தின்பவன் தீட்டுக்குட்படுகிறான்.

beef stall

‘அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், நேர்மையற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், சண்டை போடுபவர்கள், வன்முறையாளர்கள்,பாலியல் குற்றம் புரிபவர்கள்’ (தினகரன், தலையங்கம்,17.11.2012) என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. மத்தியக் கல்வித்திட்டப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி’ என்ற தலைப்பில் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது. “புலால் உண்ணாதவர்களெல்லாம் மேல் சாதி, புலால் உண்ணுகிறவர்களெல்லாம் கீழ் சாதி என்று சமூகம் மக்களை இரண்டாகப் பகுத்து வைத்திருக்கிறது”. (தொ.பரமசிவன். 2014:119) என்ற கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி புத்திசாலியாத்தாண்டா இருக்கான்’ என்று வில்லன் பேசுவதாக ஒரு வசனம் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் இடம் பெறுகிறது. இந்த வசனத்தின்மூலம் ‘மாட்டிறைச்சி சாப்பிடும் தமிழர்களுக்குப் புத்தி கிடையாது’ என்ற கருத்தைமுன்வைக்க முயல்கிறார்வசனகர்த்தா.

மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைக் காட்டிலும் மதிப்புமிக்கது என்று உச்ச நீதி மன்றத்தில் குஜராத் அரசு வாதாடியது. தென்மாவட்ட மாவட்ட ஆதிக்க சாதியினர், மாட்டுக்கறி தின்னும் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களைத் தொட்டுவிட்டாலோதொட்டுவிட நேர்ந்தாலோதீட்டுப்பட்டுவிட்டது எனக்கருதி மாட்டுச் சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தங்கள் தலையில் தெளித்துக் கொண்டார்கள். அதை அவர்கள் ‘சாணிப்பால்’ என்றும் புனிதப்படுத்தினார்கள். தண்ணீரும் மாட்டுச்சாணமும் கலந்த கரைசல் எப்படி ‘சாணிப்பாலாக’ முடியும்?. பசு மூத்திரம் (கோமியம்) இந்துக்களின் சடங்கு முறைகளிலும், பூஜைகளிலும் படைக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்படுகின்றன. புதுமனைப் புகுவிழா சடங்குகளில் ஒன்றாகப் பசுமாட்டைக் கட்டாயப்படுத்தி நடுவீட்டிற்குள் நுழையச் செய்து பூஜை செய்து புனிதப்படுத்தப்படுகிறது. பசுமாடு புது வீட்டிற்குள் சாணியும், மூத்திரமும் கழித்த பின்பே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாட்டின் சாணம் ஊட்டம் நிறைந்த உரமாகிறது. கிராமத்து வீடுகளில் மண்தரை மாட்டுச் சாணி கொண்டு மெழுகப்படுகிறது. நாட்டு மாடுகளின் சாணத்தைப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் திருநீறு உடலிலுள்ள கெட்ட பித்தத்தை எடுத்துவிடும் சக்தி கொண்டதாகக் கருதப்படுகிறது. பசுவின் மூத்திரம் கிருமி நாசினியாக வினையாற்றுவதாக நம்பப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் காலணிகள், கைப்பைகள், இடைவார் (Belt), பணப்பைகள் (MoneyPurse) மாட்டுத்தோலிலிருந்து செய்யப்படுகின்றன. தினமும் நாம் உணவில் பயன்படுத்தும் சீனி எனும் சர்க்கரை மாட்டு எலும்பு கலந்து தயாரிக்கப்படுகிறது. சாதிமத பேதமின்றி எல்லோரும் அணியும் சட்டைகளில் உள்ள தரமான பித்தான்கள் மாட்டுக் கொம்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மாட்டுக் கொழுப்பிலிருந்து உருக்கப்படும் ஊன் எனும் திரவம் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நல்ல கொழுப்பைத் தருவதுடன் உயிர்ச்சத்து நிறைந்ததாகவும் விளங்குகிறது. மாட்டின் உயிர்ச்சத்தை உரிஞ்சுவதிலிருந்து கிடைக்கும் பாலின்றிப் பலருக்குப் பொழுது விடிவதில்லை.

இப்படி,பசுமாடு என்னும் கால்நடை விலங்கும் அதன் எச்சங்களான சிறுநீரும், சாணமும், புனிதமாகப் போற்றப்படும்போது, பசுப்பொருட்கள் வணிக நோக்கில் பன்முக வருவாயை ஈட்டித்தரும்போது பசுமாட்டின் என்புதோல் போர்த்த உடம்பிலிருந்து கிடைக்கும் இறைச்சி மட்டும் ஏன் இகழப்படுகிறது?. பசு எனும் விலங்கு புனிதமென்றால் பசுவின் எலும்பையும் தோலையும் இணைக்கும் தசை எனும் இறைச்சியும் புனிதம் தானே!;அதை உண்ணும் மனிதன் அதவிடப் புனிதமானவனாகத்தானே இருக்க வேண்டும். சிலருக்குப் பசு புனிதமென்றால் பலருக்கு அது உயிர்வாழத் தேவையான உணவுப் பொருள்.

“அது சிறந்தது, அழகானது, எங்களுக்குப் பிடித்தது

 அது நம்ம ஊரு உணவு, சுவையானது

 நெருக்கமானது, நியாயமானது

 விலைமதிப்பற்றது”

என்று மாட்டிறைச்சியின் நன்மைகளைப் பட்டியலிடுகிறது சரத் நளன்கட்டியின் மாட்டிறைச்சிப் பாடல். (இருண்ட காலத்தின் பாடல்கள், ஹோராட்டா, அக்டோபர்,2014.). அடித்தள மக்களின் உணவுப்பண்பாடு அவர்களின் உடலை மட்டும் பேணிக்காப்பதற்காகப் பயன்பட்டிருக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்த சமூகத்தினரையும் உயிரிழப்பிலிருந்து காப்பாற்றும் மருந்தாக இருந்து வருகிறது. பண்பாட்டைப் பறைசாற்றுவதாக அமைகிறது. மொத்தத்தில் மாட்டுக்கறி மனிதனின் அடிப்படை உணவாக, உயிர்காக்கும் மருந்தாக, உயர் பண்பாடாக, ஆரோக்கியத்தின் அடிப்படையாக அமைகிறது என்பது திண்ணம்.

உதவியவை:

  • அகமுடை நம்பி .2009. பாரதிப் பாவலன்: குணம் நாடிக் குற்றமும் நாடி, மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
  • அலாய்சியஸ். ஞான. 1999. அயோதிதாசர் சிந்தனைகள் (அரசியல், சமூகம்),-I பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி.
  • ஆனந்தராசன்.ஜே , 2002. பவுத்தமும் பழந்தமிழ்க் குடிமக்களும், சென்னை : அன்றில் பதிப்பகம்.
  • இராசமாணிக்கனார். மா. 1970. பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பதிப்புத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
  • இராஜேந்திரசோழன். 1997. தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.
  • சாமி. ஆர்.பி. 2009. மனிதன் சுமந்த வருணக் கொடுமைகள், லக்ஷ்மி வில்லா: பெங்களூர்.
  • சீனிவாசன், ப. 2004. தீண்டாமைக்குத் தீயிடு, சிதம்பரம்: மங்கை பதிப்பகம்.
  • பரமசிவன். தொ. 2014. உரைகல், சென்னை: கலப்பை.
  • பிலவேந்திரன், ச. 2001. தமிழ்ச் சிந்தனை மரபு: நாட்டுப்புறவியல் ஆய்வுகள், பெங்களூர்: தன்னனானே பதிப்பகம்.
  • முகிலன்.க. 2016. ‘பசுப்பாதுகாப்பும், இந்துத்துவப் பாசிசமும், மக்களின் அடிப்படை உரிமைகளும்’, சிந்தனையாளன்- மாதஇதழ், ஜூலை-2016, பக். 12-18
  • ரகுபதி. கோ. 2008. ‘தீண்டப்படாதவர்களின் தீண்டப்பட்ட அறிவியல் தொழில் நுட்பம்’, புதுவிசை – காலாண்டிதழ், ஏப்பிரல்-ஜூன், 2008, பக். 8-13, ஓசூர்.
  • ஜா.டி.என். (தமிழில் வெ. கோவிந்தசாமி), 2003. பசுவின் புனிதம் : மறுக்கும் ஆதாரங்கள், கோயமுத்தூர்: புத்தா வெளியீட்டகம்.
  • Carlos, S. 2006. Strategies of understanding caste Hegemony in Tamil, Paper presented in Endowment Lecture, conducted by Department of Modern Indian Languages& Literary Studies, University of Delhi, Delhi.
  • (http://mathimaran.files.wordpress.com/2012)
  • Keetru.com
  • Vinavu.com

- முனைவர் ச.சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, (தில்லிப் பல்கலைக்கழகம்), புது தில்லி-110 021

Pin It