'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான அன்றே பல நண்பர்கள் போன் செய்து, "நீங்கள் அவசியம் படம் பார்க்கவேண்டும், அதுபற்றி எழுதவேண்டும்" என்றார்கள். ஆனால் கடைசிவரை சென்னையில் அப்படத்தைப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. இப்போது திண்டுக்கல்லில் கள்ளக்குறுந்தகடு (?) வழியாகவே பார்க்க நேர்ந்தது.

அப்படம் பற்றி வலைத்தளங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களைத் திட்டமிட்டே படிக்கவில்லை. உயிர்மை இதழில் சாருநிவேதிதாவின் விமர்சனம் மட்டும் படித்திருந்தேன். படத்தை வெகுவாய்ப் பாராட்டியிருந்த சாரு, அப்படத்திலுள்ள தெளிவின்மையைக் குறிப்பிட்டு தனிப்பட்ட உளவியல் அல்லது சமூகச்சிக்கல் ஆகியவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்கெடுத்து விவரித்திருந்தால் சிறப்பாக விருந்திருக்குமென்று கருத்து தெரிவித்திருந்தார். (சாருவின் தேர்வு தனிமனித உளவியல் நெருக்கடி)

கற்றது தமிழ் முன்வைக்கும் அரசியலோடு ஒத்த கருத்துடைய வேறுசில நண்பர்களின் கருத்தோ, 'இத்தகைய அரசியல் நிலைப்பாடு உடையவன் ஒரு சைக்கோவாக கொலைகளைச் செய்யும்போது அதன் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது' என்பதாகவிருந்தது.

திரைப்படம் வந்து பலநாட்களாகி, பல ஊர்களில் தூக்கப்பட்டபிறகு எழுதப்படும் விமர்சனம் என்பதால் விரிவாக எழுத விருப்பமில்லை. ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆவல்...

இதுமாதிரியாக காட்சியமைப்புகளிலும், காட்சி விவரிப்புகளிலும் கவித்துவம் தெறிக்கும் திரைப்படத்தை இதற்குமுன் தமிழில் பார்த்ததில்லை. பிரபாகர் தான் சந்தித்த முதல் சாவாக, தன் நாய் டோனியின் சாவைச் சொல்கிறான். மனிதர்களே மதிக்கப்படாத தமிழ்ச் சினிமாவில் நாய் மதிக்கப்படுவது அபூர்வம்தானே!

தாயின் சதைத் துணுக்குகள் சிதைந்து தெளிக்கும் மரணத்தின் குரூர வாசனை, பால்யவயது காதல் என்றவுடன் 'ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா' என்ற அலுப்பு தோன்றுவதற்குள், இல்லாத புலி இல்லாத பாலைவனம் குறித்துக் காணும் நீண்ட கனவு குறித்த கதையளப்பு கவிதை.

இப்படியாக பிரபாகரின் தன்வரலாற்றுக் கதைமொழிதல் முழுவதுமே கவிதை, கவிதை, கவிதை... போலீசு என்னும் அதிகார நிறுவனத்தைச் சரியாகவே தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.

படத்தின் மய்யமான இரு பிரச்சினைகளுக்கு வருவோம். சாரு மற்றும் நண்பர்கள் சொன்ன பிரச்சினை... கற்றது தமிழ், தான் முன்வைக்க விரும்பிய அரசியல் குறித்துப் பெரிதாய்ச் சமரசம் செய்துகொண்டதாய் எனக்குத் தெரியவில்லை. மேலும் அமெரிக்காவில் படித்துவந்த அனந்தரங்கனிடம் பிரபாகர், ‘அமெரிக்கா போய் வந்தும் இன்னும் நீ நாமம் போடுவதை விடலையா?' என்று கேட்கும் காட்சியிலாகட்டும், பிரபாகர் 'இந்த நாட்டில என்ன நடக்குதுன்னே புரியலை, ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு புரியலாம்' எனச் சொல்லும் காட்சிகளிலும் சரியகவே அரசியலை முன்வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஒரு வசதிக்காக சொல்வதாகவிருந்தால் ஷங்கரின் படங்களுக்கு எதிரான கதையாடல் என்றே 'கற்றது தமிழ்' படத்தைச் சொல்லலாம். குற்றங்கள் புரிந்தபிறகு, தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவைப்பது, அந்த வாக்குமூலம் குறித்து 'மக்கள் கருத்து' என ஷங்கரின் அதே உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்.

ஆனால் சங்கரின் சாகசநாயகன்கள் போல பிரபாகர், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. மேலும் ஷங்கர் படத்தின் 'மக்கள் கருத்துக்கள்' பொதுப்புத்தியைக் கட்டமைக்க விரும்பும் ஒத்துப்பாடல்களாக இருக்கும். ஆனால் கற்றது தமிழ் படத்தில் வரும் 'மக்கள் கருத்துக்களோ' 'வயிற்றெரிச்சலில் பேசறான் சார்' என்று மாற்றுக்கருத்தையும் பதிவுசெய்கிறது.

மேலும் ஒரு தனிமனிதன் சந்திக்க நேர்கிற சிக்கலிலிருந்தே தனக்கான சமூகக்கருத்தை உருவாக்கிக் கொள்கிறான் என்னும் அடிப்படையில் ராமின் கதைசொல்லல் முறை முற்றிலும் சரியானது என்றே நான் கருதுகிறேன். வெறுமனே அரசிய்ல் பிரச்சினையை மட்டும் பேசியிருந்கால் ஒரு பிரச்சாரம் என்பதைத் தாண்டாது தன் கலைத்தன்மையை இழந்திருக்கும், அல்லது சாரு சொல்வதைப் போல வெறுமனே தனிமனித உளவியல் சிக்கல் பற்றி மட்டுமே பேசியிருந்தால் மாதந்தோறும் வெளிவரும் இரண்டு மூன்று தமிழ் சைக்கோ சினிமாவிலொன்றாக 'கற்றது தமிழ்' வந்துபோயிருக்கும்.

இன்னொரு பிரச்சினை, பெண்களின் பனியனிலுள்ள வாக்கியங்கள் குறித்த விமர்சனம், மற்றும் கடற்கரையில் காதலர்களைச் சுட்டுக்கொல்வது ஆகிய இருகாட்சிகள். பிரதியிலிருந்து தனித்து எடுத்துப் பார்த்தால் இரண்டுமே ஆணாதிக்கப் பாசிசம்தான். ஆனால் வருமானம், சமூகப்படிநிலை, நுகர்வுக்கலாச்சாரம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்காலத்திய மணவுறவுகளின் பின்னணியில் பார்த்தால் அக்காட்சிகளுக்கான நியாயங்கள் விளங்கும்.

இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன. நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.

இன்னொருபுறம் சாதிமறுப்புத் திருமணங்களுக்கான விளம்பரங்கள்கூட மாதம் 30000/- ரூபாய் வருமானமுள்ள ஆணை வேண்டி நிற்கின்றன. இங்கு புதியதொரு வர்க்கச்சூழல் உருவாகியுள்ளது. அதிக வருமானம் பெண்களின் சுயச்சார்பான பொருளாதாரச்சார்பு போன்ற சில சாதகமான அம்சங்களை உருவாக்கியிருந்தாலும் மறுபுறத்தில் எந்த சமூகப் பொறுப்புமற்ற சம்பாதிக்கும் ஆண், பெண் பிராணிகளின் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த சூழலின் அடிப்படையிலேயே 'கற்றது தமிழ்' திரைப்படத்தை அணுகமுடியுமென்று கருதுகிறேன்.

ஆனால் கற்றது தமிழ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு படத்தின் 'இருண்மை அல்லது தெளிவின்மை' மட்டுமே காரணமென்று நான் கருதவில்லை.

திண்டுக்கல்லில் இப்படம் குறித்து விசாரித்தபோது பலருக்கும் இப்படம் குறித்து அதிகமும் தெரியவில்லை. வீட்டு வாடகை ஏறுவது, ஸ்பென்சர்பிளாசா, சத்யம் தியேட்டர் குறித்த விவரங்கள் சென்னையைத் தாண்டி தெரியாத அல்லது பாதிக்காத இடங்களில் இப்படத்தின் தீவிரம் சென்னையைத் தவிர பிற பகுதிகளால் இப்போதைக்கு உணரப்படப் போவதில்லை.

மேலும் கணிப்பொறியை அலாவுதீனின் அற்புதவிளக்காய் நினைத்து அதற்குப் பழக்கப்படுத்த தன் குழந்தைகளைப் பயிற்று வரும் பெற்றோர்கள் மற்றும் வருமானம் மற்றும் கேளிக்கையையே நோக்கமாய்க் கொண்ட இளைய தலைமுறையினரும் நிச்சயமாய் இப்படத்தைப் புறக்கணிக்கவே செய்வர். இப்படத்திற்கெதிராக அய்.டி துறையைச் சேர்ந்த நண்பர்கள் குறுஞ்செய்திகளின் மூலமாக ஒரு பெரிய பிரச்சாரமே செய்ததாய் அறிந்தேன். அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க?' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.

ஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப் பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படை வசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.

- சுகுணா திவாகர்

Pin It