"ஜாக்கிரதயாவும் இருந்துக்கோ..... சந்தோசமாவும் இருந்துக்கோ.. நானா சொல்ல மாட்டேன்.. மப்புல உளறினாலும் உளறிடுவேன்..." படம் நெடுக மங்காத்தாவுக்கு முந்திய வெர்சனில் போட்டு வாங்கி இருப்பார் சத்யராஜ்.

இந்த "தகுடு தகுடு" மாதிரி...", "என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டிக்கறயே..." மாதிரி..., "என்னம்மா கண்ணு சவுக்கியமா..." மாதிரி.. இந்த வசனமும் அந்த கால கட்டத்தில் பெரும்பாலும் எல்லாராலும் உச்சரிக்க பட்டது. முதல் வசந்தத்தில் முதன்மை பாத்திரம் வசனம் தான்.- உபயம் கலைமணி.

muthal vasanthamதனக்கு என்ன வருமோ அதையே வடிவமாக்கி அதில் நின்று வெற்றி காண்கிறது ஒவ்வொரு முறையும் சத்யராஜ்- ன் பாத்திரங்கள். அதுவும் மணிவண்ணனோடு கூட்டணி சேர்கையில்... அது ஒரு தீவிர ஐடியாலஜிக்குள் சென்று விடுகிறது. மேம்போக்காக காமெடியாக தெரிந்தாலும்... இருந்தாலும்..... உள்ளே சட்டயர்தனம் சக்கை போடு போடுவதை கொஞ்சம் அரசியல் வாசம் உள்ளோரால் உணர முடியும்.

சுய பகடியில் கோட்டுக்கு அந்த பக்கமே சென்று அவர்களோடே சேர்ந்து அவர்களாகவே மாறி அவர்களையே வாரி விடும் வல்லமை மணிவண்ணனின் எழுத்துக்கு உண்டு. அதன் வடிவத்தில் சத்யராஜ் எனும் மகா நடிகனின் மாறுபட்ட சிரிப்பும்.... நக்கலும் நையாண்டியுமாக இந்த "முதல் வசந்தம்" இன்றும் குங்கும பொட்டுக்காரர் கொள்ளை அடிப்பதை ஆற அமர ரசித்து விட்டு தான் எழுதுகிறேன்.

"சும்மா தொடவும் மாட்டேன்.. தொட்டா விடவும் மாட்டேன்.... புடிச்சேனா புடிச்சது தான்... நான் நினைச்சேன்னா நினைச்சது தான்...." என்று குங்கும பொட்டுக்காரரும் வேட்டைக்காரரும் சேர்ந்து ஆட்டம் போட்டு... அழைத்து வந்த பெண்ணை சாகடித்து விட அதில் இருந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு... என்ன வெங்காய கருத்து வேறுபாடு.. பணம் கொண்ட ஆண்டைகளின் மைனர் குஞ்சுகளின் அட்டூழியம் தான் அவரவர் போக்கை மடை மாற்றி விடுகிறது. அதிலிருந்து விளையாட்டு போக்கிலேயே மாறி மாறி போட்டு தாக்கிக் கொள்கிறார்கள். எவன் எப்ப எதை பண்ணுவான்னே தெரியாது.

இந்த நேரத்தில்தான் பண்ணைக்காரன் பாண்டியன் மீது வேட்டைக்காரர் மகள் ரம்யாவுக்கு காதல். ஏழை பணக்காரன் இடைவெளியை முடிந்தளவு சுலபமாக விளக்க இந்த காதல் எனும் ஆயுதம் தான் சினிமாவில் உதவி இருக்கிறது.

இந்த படத்திலும் கூட... காதலின் நிமித்தம் பெரும்பணக்கார வேட்டைக்காரருக்கு கோபம் வர... திட்டம் போட்டு பாண்டியனை சிறைக்கு அனுப்புகிறார். அதற்கு காதலித்த காதலியே பொய் சாட்சியும் சொல்ல... காதல் துரோகத்தில் இடைவேளை ஆகிறது.

"ஆறும் அது ஆழம் இல்ல... அது சேருங்கடலும் ஆழம் இல்ல.... ஆழம் எது அய்யா... அது பொம்பள மனசு தான்யா..." என்று இடையே கிடைத்த சந்தில் எல்லாம் கச்சேரி நடத்தி விடுகிறார் இசை ராஜ சக்ரவர்த்தி. இந்த பாடல் படமாக்கப்பட்ட விதமும் சரி... அந்த பக்கம்... உண்மைக்கு குரல் கொடுத்ததால் இரண்டு கைகளையும் இழந்த வாகை சந்திர சேகரின் பாவனைகளும் சரி. சமநிலைப்படுத்தி அடுத்த கட்டம் நோக்கி கதையை நகர்த்துகிறது.

காலம் காலமாக குதிரை பணக்கார குறியீடாகவே இருக்கிறது. இதிலும் இரண்டு மனித குதிரைகள் தான் குற்ற பின்னணியில் இருக்கிறார்கள். இரு தனிப்பட்ட மனிதர்களின் வஞ்சம் அந்த ஊரையே இரண்டாக பிரித்து போட்டிருக்கிறது. எப்போதெல்லாம் அவர்கள் மோதிக் கொள்வார்களோ அப்போதெல்லாம் இரண்டு ஊர்களும் மோதிக் கொள்ள வேண்டும் என்பது பணக்கார விதி. பணக்கார விதிகளில் ஊர் நடுவே ஒன்று சுவர். அல்லது ஊரே இரண்டு சுவருக்குள். இடையில் பாண்டியன் ரம்யாவின் காதலில் சிக்குண்டு நிற்கும் குழப்பத்துக்கு விடை என்ன என்பது தான் முதல் வசந்தத்தின் முழுதும்.

மார்க்கண்டேயனி ரம்யா சின்ன வயதிலும் சிலிர்ப்பு. சிவப்பு புடவையில் மனசுக்கேத்த புருஷன் வேண்டும் என்று ஆற்றில் விளக்கு விட்ட பிறகு குற்ற உணர்ச்சியில் சந்திரசேகரை பார்க்கும் பார்வை... பாடலின் முன்னோட்டமாக பொம்பள மனசின் ஆழத்தை உணர்த்தும்.

தனியாக இல்லாமல் இது ஒரு கூட்டு முயற்சி. நக்கலும் நையாண்டியுமாக மக்களை பார்த்து சத்யராஜ் பேசுவதாகட்டும். தங்களுக்குள்ளேயே தாங்கள் செய்யும் மொள்ளமாரித்தனங்களை பேச்சு வாக்கில் சுய விமர்சனம் செய்வதாகட்டும்... மணிவண்ணன் சத்யராஜ் கூட்டு... முதலாளித்துவதையும்... ஆதிக்க மனோ பாவத்தையும் கொத்து புரோட்டா போடுகிறது. நிலபிரபுத்துவ தனியுடமையை ஒரு மாதிரி தொட்டு விட்டு நகரும் கதையின் ஓட்டம்.. பணம் உள்ளவன் எதையும் செய்வான். இல்லாதவன் கை கட்டி தான் நிற்க வேண்டும் என்ற உண்மையை சினிமா கலவையோடு சொல்லி போகிறது.

மாறி மாறி வம்பிழுத்துக் கொண்டு எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாத... பணக்கட்டுகளின் வழியே வாழ்வை நோக்கும் பணக்காரன் பாத்திரத்தில் அந்த ராஜ உடையில் சத்யராஜ் எனும் பிம்பம் இமேஜ் எனும் வட்டத்தை எப்போதோ தாண்டி விட்டது. புகுந்து விளையாடும் இந்த பாத்திரம் வில்லனா நாயகனா என்று புரியாத கோட்டில் கலைமணியின் கதை நகரும் விதம் சொல்லி வைத்து அடித்திருக்கிறார்கள்.

வீட்டு வேலைக்காரியை பேய் என்று நினைத்து பயந்து நடுங்கி அதன் பின் நடக்கும் சம்பவங்கள்... வெச்சு செய்யப்பட்ட சம்பவங்கள். உலக அரசியல் அறிந்த மணிவண்ணனின் திரை வடிவம் காலம் கூட கூட கனத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்திலேயும் ஒவ்வொரு பிரச்சனையை கையாண்ட விதம் சினிமா எனும் கருவியில் இருக்கும் ஆயுதம் அறிந்தவர் என்பதை பறை சாற்றுகிறது.

இல்லையெனில் அமாவாசை போல காலத்துக்குமான பாத்திரத்தை எப்படி உருவாக்கி இருக்க முடியும். 

படம் : முதல் வசந்தம்
மொழி : தமிழ்
வருடம் : 1986
இயக்கம் : மணிவண்ணன்

- கவிஜி

Pin It