‘நியூ’ படத்தின் மூலம் ஏகப்பட்ட பிரச்னைகளையும் கெட்ட பெயரையும் சம்பாதித்த பின்னும் தனது பாதை பாக்யராஜின் பாதைதான் என்பதில் எஸ்.ஜே. சூர்யா தெளிவாக இருப்பதை ‘அன்பே ஆருயிரே’ படம் காட்டுகிறது.
கல்யாணம் ஆகாமல் சேர்ந்து வாழும் தம்பதியருக்கு(?) இடையே சந்தேகத்தின் காரணமாக பிரிவு ஏற்படுகிறது. அவர்களை அவர்களது நினைவுகள் எப்படி சேர்த்து வைக்கிறது என்பதுதான கதை.
இதை படம் ஆரம்பிக்கும் போதே எஸ்.ஜே. சூர்யா திரையில் தோன்றி சொல்லி விடுகிறார். கதையைச் சொன்ன பின்பும் ரசிகர்களை தியேட்டரில் உட்கார வைக்கும் வித்தையை, தனது முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும் எஸ்.ஜே. சூர்யா இடைவேளைவரை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். பத்திரிகை நிருபர் வேலை, எஸ்.ஜே. சூர்யா-நிலா ரொமான்ஸ், இருவருக்கும் இடையே ஏற்படும் பிரிவு என முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அதே நேரத்தில், ‘நம்ம வீட்டிலிருந்து வேற யாரும் வரலையே’ என்ற கேள்வியுடன் தான் படத்தைப் பார்க்க முடிகிறது. காட்சிகளில் அந்தளவிற்கு விரசம், இரட்டை அர்த்த வசனங்கள்.
முதல் பாதி முடியும் போது, பிரிந்து விட்ட இந்த ஜோடியை நினைவுகள் எப்படி சேர்த்து வைக்கிறது என்று ஆவலுடன் இரண்டாம் பாதியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வழவழா காட்சியமைப்பில் விரசமும் சேர்ந்து, பார்வையாளர்கள் நெளிய ஆரம்பித்து விடுகின்றனர். பலர் படம் முடியும் வரை காத்திருக்காமல் எழுந்து போய் விட்டனர். இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா முதன் முறையாக இந்தப் படத்தின் இரண்டாவது பாதியில் தோற்றிருக்கிறார்.
படத்தில் எஸ்.ஜே. சூர்யா பத்திரிகை நிருபராக வருகிறார். ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றம் தனக்கு இல்லாதிருப்பினும் தேர்ந்த கேமிரா கோணங்கள் மூலம் சாதுரியமாக அதை ஈடுகட்டி இருக்கிறார். முதல் பாடலில் நடன அசைவுகளில் இவர் காட்டும் வேகம் ஆச்சர்யப்பட வைக்கிறது.
அறிமுக நாயகியாக வரும் நிலா பல இடங்களில் சிம்ரனை ஞாபகப்படுத்துகிறார். கவர்ச்சி, நடிப்பு இரண்டிலும் குறை வைக்காத நிலா, அடுத்து சரியாக படங்களைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.
படத்தில் சந்தானம் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. டைமிங்கோடு இவர் அடிக்கும் ஜோக்குகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன.
எஸ்.ஜே. சூர்யா படம் என்றால் பாடல் காட்சிகளின் போது தியேட்டர் காண்டீன் பக்கமே ஆளிருக்காது. ஆனால் அதை இந்த படத்தில் தவற விட்டிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் உழைப்பு, முதல் பாடலைத் தவிர மற்ற பாடல்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
நியூ படத்தில் 8 வயது பையன் 28 வயது வாலிபனாக மாறும் காட்சியில் மணிவண்ணன் மூலமாக படம் பார்ப்பவர்களுக்கு எஸ்.ஜே. சூர்யா ஒரு எச்சரிக்கை கொடுப்பார். அதே போன்ற ஒரு எச்சரிக்கையை முதல் பாதி முடியும் போது கொடுத்திருந்தால், இரண்டாம் பாதி கொடுமையிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
அய்யோ ஆபாசம்...!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
‘அன்பே ஆருயிரே’
- விவரங்கள்
- சங்கராச்சாரி
- பிரிவு: திரை விமர்சனம்