ஒடிசலான தேகம். நீண்டு கோதி விட்ட கேசம். நீண்ட செவ்வக முகம். கரகரத்த குரல். கதை நாயகனாக "ஏழாவது மனித"னில் அறிமுகம். "ஒரு ஓடை நதியாகிறது" அடுத்த படம். படங்கள் சரியாக போகவில்லை. நடிப்பும் பெரிதாக இல்லை. ஆடவும் வரவில்லை. "தென்றல் என்னை முத்தமிட்டது...." பாடல் இசைத்தாலும்... நடனம் பார்க்க பாவமாகவே இருந்தது. சினிமாவின் கைப்பிடி நீட்சி பல போது அதுவாகவே செயல்படும். நீங்கள் யாரென்று சினிமாவின் கதைகளே முடிவு செய்யும். இந்த முறை செய்த முடிவில்.....அப்படி இப்படி என்று மெல்ல வில்லனாகி இருந்தார். சினிமா ஆக்கி இருந்தது. சிகரெட் புகையின் நடுவே.... வாயில் சிகரெட்டோடு திரையில் பார்க்கவே பயம் கொள்ளும் கொடூர பாவனைகளோடு.......அந்த நீள் சதுர முகத்தில் வட்டக் கண்ணாடியோடு கையில் துப்பாக்கியைக் கொண்டிருந்த நடிகனை கண்டு மிரண்டாலும்.....சினிமா ரசிகர்கள் ரசிக்கவே ஆரம்பித்திருந்தார்கள்.
அது தான் ரகுவரனின் முரண்.
பேசுவதற்கு முன் ஒரு முறை எதிரே இருப்பவரை பார்த்து முகத்தை மேலும் கீழும் சன்னமாக ஆட்டி விட்டு.... உதட்டை கடிப்பது போல இல்லாமல் மடக்கிப் பிடித்துக் கொள்வது போல செய்து..... கண்கள் உருட்டிப் பார்க்கும் போதே கிளாப் திரையைக் கிழிக்கத் துவங்கும். உடல் மொழியில் வில்லத்தனத்தைக் கொண்டு வந்து அதையும் ரசிக்க வைத்த நடிகன்.
"புரியாத புதிர்" படத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்டு இரவெல்லாம் நகம் கடித்தபடி... "கூல் ட்ரிங்க்ஸ்... ஒண்ணா.... ரெண்டு பேரும்... ஹா.......ய்.. அவன் ஹாய்.. இவளும் ஹாய்..." என்று தனக்குத்தானே பாதி பாதியாக பேசிக் கொண்டு நிற்கும் ரகுவரனைக் கண்டு மிரளாமல் இருக்க முடியாது.
"ஐ நோ.....ஐ நோ .....ஐ நோ...ஐ நோ....ஐ நோ......" என்று ஒரு பக்கம் பேச வேண்டிய வசனத்தை ஒரு வார்த்தையை திருப்பி திருப்பி சொல்லி வில்லத்தனத்தில் புதுமையை புகுத்திய ரகுவரனை தமிழ் சினிமா ஒரு போதும் மறக்க இயலாது. தனது துறையில் இன்னமும் தான் உச்சம் அடையவில்லை என்ற வருத்தம் ரகுவரனுக்கு நிறையவே இருந்திருக்கிறது. அதன் தாக்கம் அவருள் ஒரு வகை மென்சோகத்தை எப்போதும் தக்க வைத்துக் கொண்டே இருந்திருக்கிறது.
"மக்கள் என் பக்கம்" படத்தில்..மாபியா கேங்... சத்யராஜ்க்கு ரைட் ஹேண்டாக கச்சிதம் காட்டியிருப்பார். நிழல் உலக மனிதர்களின் தோற்றத்துக்கு பொருத்தமான உடல் மொழியை கொண்டிருக்கும் ரகுவரன்... நிஜத்தில்.. மிகவும் சாதுவான மனிதன் என்பது தான் யோசித்து சிரிக்கும் அவரின் பனி விழும் சொற்களின் கரகரத்த சோகமும்...
"என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்திலும்...."அஞ்சலி" படத்திலும் ஓர் அப்பாவின் மனதை பிரதிபலிக்கும் பாத்திரங்கள். மிளிரும் அன்பும் பாசமும்... ஊமை வெயிலென அவரின் கண்களில்.... அலைபாய்ந்ததை நாம் அறிவோம். மனநலம் குன்றிய அஞ்சலி பாப்பாவின் தகப்பனாக.... கழுத்து வரைக்கும் மட்டுமே பேச முயலும் வார்த்தைகளையோடு ரேவதி முன் அவர் அழாமல் தீர்த்தது எல்லாம்.. அட்டகாச மெலடி ட்ராமா.
ஆரம்ப காலத்தில் இருந்தே வெரைட்டியில் வெளுத்துக் கொண்டிருந்த ரகுவரனுக்கு தனிப்பட்ட வாழ்வில் அத்தனை ஏற்றம் இல்லை. சினிமாவின் சாபம் நல்ல கலைஞனைப் பிடித்தாட்டும் என்பது ரகுவரனுக்கும் பொருந்தும். தனக்குள் ஓர் இசைக் கலைஞனை சுமந்து கொண்டு திரிந்த ரகுவரன்... தனக்குள் மட்டுமே பெருவெடிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தார். தன்னை மீறி எழ இந்த காலம் அனுமதிக்கவே இல்லை என்பது தான் வருத்தத்தின் மெல்லிசை.
ரஜினிக்கு பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும்....."மார்க் ஆன்டனி"யாக மாஸ் காட்டிய படம் "பாட்சா". ரஜினிக்கு மட்டுமல்ல... ரகுவரனுக்கும் மைல்கல் இந்தப் படம். ரகுவரனின் வாழ்வை பாட்சாவுக்கு முன்.. பாட்சாவுக்குப் பின் என்று பிரிக்கலாம். அதன் பிறகு பெரும் ஹீரோக்களுக்கு வில்லன் என்றால் இவர் தான் முதல் சாய்ஸ்.
"என் தம்பிய ஏன் சுட்ட....." என்று ஒரு சின்னப்பெண் "சூர்ய பார்வை" படத்தில் கேட்பாள். நிறுத்தி நிதானமாக தோளில் இருக்கும் AK47-ஐ கீழே இறக்கி விட்டு...."நான் பயர் பண்ணும் போது உன் தம்பி ஏன் குறுக்க வந்தான்..." என்று அவருக்கே உரித்தான அந்த கரகர குரலில் கேட்டு விட்டு கில்டியாக ஒரு பார்வை பார்த்து பீல் பண்ணும் இடமெல்லாம்... கரணம் தப்பிய மரண இடைவெளி பாவனைகள்.
ரஜினியின் சிறுவயது நண்பனாக "சிவா" படத்தில்... ஒரு கட்டம் வரை தாங்கள் யாரென்று தெரியாமல் மோதிக் கொண்டு..... அதன் பிறகு தாங்கள் யாரென்று தெரிந்து, வில்லன்களோடு நிகழ்த்தும் இறுதி சண்டைக்காட்சி காலத்துக்கும் கேட்கும் வெடிச்சத்தம் நிறைந்தவை. அத்தனை பெரிய கிளைமேக்ஸ் சண்டை தமிழ் சினிமாவில் அரிது.
விசுவோடு அவரின் மூத்த பிள்ளையாக "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் வாழ்ந்திருப்பார். எல்லாவற்றுக்கும் கணக்கு பார்க்கும் மிடில் கிளாஸ் சராசரியாக அவரின் நடிப்பு எதார்த்தத்தை பளிச்சிடும். "ஜானகிதேவி ராமனைத் தேடி இரு விழி வாசல் திறந்திருந்தாள். ராமன் வந்தான்..மயங்கி விட்டாள்.....தன் பெயரைக் கூட மறந்து விட்டாள்" என்று மெய்ம் மறந்து குடும்பத்தின் முன்னே ஒரு ஓரத்தில் லக்ஷிமி நெஞ்சில் சாய்ந்திருக்க ஒரு மிடில்கிளாஸ் மூத்த மகனின் உடல் மொழியோடு நிற்கும் ரகுவரன் என்ற நடிகனுக்கு எந்தக் கோடும் எல்லைக்கோடு இல்லை.
"முகவரி"யில் அஜீத்துக்கு அறிவுரை சொல்லும் இடமாகட்டும்..... "லவ் டுடே"யில்.. விஜய்க்கு அறிவுரை சொல்லும் இடமாகட்டும்... அனுபவங்களில் அன்பை கண்ணாடி தாண்டி தெரியும் கண்களில்.... ஓர் அண்ணனாக அற்புதம் செய்திருப்பார். பெருவாரியாக வில்லனை ரசிக்கத் துவங்கிய கூட்டம் ரகுவரனுக்குப் பின் தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ரகுவரன் தோன்றும் முதல் காட்சிக்கு கைதட்டி ஆரவாரிக்கும் ரசிகர்கள் இன்றும் உண்டு. ரகுவரன் அதை நம்பி ஒரு போதும் அகலக் கால் வைத்ததில்லை. அவருக்கு அவர் உயரம் தெரியும். ஆனால் இன்னமும் இந்த மகா நடிகனுக்கு தீனி போட்டிருக்க வேண்டும்.
"தொட்டாச்சிணுங்கி" படத்தில் மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்று விட, போய் கூட்டிட்டு வான்னு சொல்ற பெரியவங்க கிட்ட "உங்களுக்கு தெரியுது என் பொண்டாட்டி நல்லவன்னு ... எனக்குத் தெரியல ... எனக்குத் தெரியட்டும் .. நான் போய் கூட்டிட்டு வரேன்....." என்று பேசுகையில்... அந்த பாத்திரத்தின் மீதான கோபம் போய் அதிலிருக்கும் நியாயம் கூட மெல்ல வெளிப்படும்.
தாய்ப் பாசம் தனக்குக் கிடைக்கவில்லை என்று தம்பியையே மலை மீதிருந்து தள்ளி விட்டு விட்டு... இறுதிக் காட்சியில்... எல்லா உண்மையும் வெளிவர, தாய்ப்பாசத்துக்கு ஏங்கிய மகனாய் அப்பாவியாய் ஒரு கொலைகாரனின் இருத்தலை இருதலைக் கொள்ளி வாழ்வு உருண்டோட தனக்குத் தானே சாட்சியாய் நிற்கும் ரகுவரனை "உயிரிலே கலந்தது" படம் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். "எங்கடா போன...." என்று தாமதமாக வீட்டுக்கு வரும் மகன் 'கரண்" - இடம் கேட்கையில்....ஒரு தந்தையின் நடுக்கம் பரிதவிப்போடு வெளிப்படும். தான் ஓட்டும் ட்ரைனிலேயே தன் மகன் தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாத அப்பாவாக கூனிக் குறுகி காலத்தின் முன் தன்னையே பிச்சையிட்டுக் கொண்டிருக்கும் ரகுவரனை "துள்ளித் திரிந்த காலம்" படத்தில் சத்தமின்றி ஓடும் ரயிலோடு காணலாம்.
எனக்குத் தெரிந்து கதைநாயகனாக அறிமுகமாகி வில்லனாக உச்சம் தொட்ட நடிகன் இவர் தான் என்று நினைக்கிறேன். வில்லனுக்கு வில்லன். எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னைப் புகுத்தி.. மெருகேற்றி... அற்புதம் அல்லது அதகளம் செய்து விடும் ரகுவரனைத்தான் 49 வயதில் இந்த மரணம் தழுவிக் கொண்டது.
மரணத்துக்குத் தெரியவில்லை ரகுவரன் என்ற மகா நடிகனுக்கு எல்லாம் தெரியும் என்று. அவருக்கு தெரியாத ஏதோ ஒன்றில்..... இந்த மரணம் ஜெயித்திருக்க வேண்டும். அந்த ஏதோ ஒன்று நிம்மதியின்மை என்று கூட சொல்லலாம். நல்ல கலைஞனுக்கு எப்போதும் இந்த வாழ்வு தரும் சாபம் அது.
- கவிஜி