விவசாய பூமி. இடைநிலை மனிதர்கள். கணவனிடம் சண்டையிட்டு பிள்ளைகளோடு அப்பன் வீடு வந்தடைகிறாள் மகள். அவள் காதலித்து ஓடி சென்று வீட்டு மானத்தை வாங்கி விட்டு கல்யாணம் செய்து கொண்டவள். காதலித்து கட்டிக் கொண்டவன் கை விட்டு விட்டான். காதலின் மறுபக்கத்தில் கருந்துளை எப்போதும் இருக்கிறது. கவனமற்றோர் பலியாவர். அவளின் அண்ணனுக்கு கடைசி வரை அவள் மீது இருக்கும் கோபம்.. வன்மமாக மாறுகிறதே தவிர குறைவதேயில்லை. 
Nedunalvaadaiஅந்த விவசாய வீட்டுக்கு ஆலமரமாய் அந்தப் பெண்ணின் அப்பா. கதை நாயகனின் தாத்தா. (பூ ராம்.)
 
அவர் காலம் முழுக்க இந்த வாழ்வின் தீரா சுமையை சுமந்து கொண்டே அலைகிறார். இறுக்கத்தில் செதுக்கப்பட்ட உடல் அது. கறுத்த முகத்தில் வெள்ளை மீசை விசனத்தில் வளர்ந்து நிற்கிறது. அவரோடு மனதளவில் மாறுபட்டு வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று அங்கேயே தங்கி விட்ட பேரன் இளங்கோ ஊர் திரும்ப மறுக்கிறான். அவனுக்காக துக்கம் தோய்ந்த குற்ற உணர்ச்சியோடு தாத்தா காத்திருக்கிறார். அவன் ஊர் திரும்ப மறுக்கும் கோபத்துக்கு பின்னால் ஒரு "அமுதா" இருக்கிறாள். அவளின் நினைவு காதலால் நிறைந்திருக்கிறது. அந்த நிறைத்தல் அவனை எங்கோ ஓரிடத்தில் மறைந்து கொள்ள சொல்லியிருக்கிறது. 
 
அமுதாவின் கால்களில் விழுந்து, "என் பேரனை விட்ரு..... அவன் தலை எடுத்தா தான் இந்த வீடு நிலைக்கும்.. இப்ப அவனுக்கு காதல் கல்யாணமெல்லாம் வேண்டாம்" என்று கூனி குறுகி தடுமாறும் தாத்தாவின் முன்....... நிலைகுலைந்து போகிறாள் அவள். வேறு வழியின்றி அழுது கொண்டே தாத்தாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு.....காதலித்தவனை தாரை வார்த்து விடுகிறாள். பல பெண்களின் காதல் இந்த இடத்தில் தான் இயலாமைக்குள் மாட்டிக் கொள்கிறது. காதலித்தவன் பக்கமும் போக முடியாமல்... வீட்டு பக்கமும் நிற்க முடியாமல் காலத்துக்கும் அந்த காதலின் சாட்சியாய் மட்டும் தனக்கு பிறந்த குழந்தைகளோடு வேஷமிட்டுக் கொண்டே வாழ்ந்து செத்தும் போகிறார்கள். காதலில் பல போது சிறுபிள்ளைகள் பெரியவர்களாகி விடுகிறார்கள். பெரியவர்கள்.... சிறுபிள்ளைகளாகி விடுகிறார்கள். அமுதா வானளவு உயர்ந்து நிற்கிறாள்...
 
ஊரை விட்டே போய் விடலாம் என்று முடிவெடுத்து அமுதாவுக்காக இளங்கோ காத்திருக்கிறான். சொன்ன நேரத்தில் காதலி வரவில்லை என்ற கோபத்தில்... அவன் வெளி நாட்டுக்கு சென்று.......பிறகு படத்தின் இறுதிக் காட்சியில் தாத்தாவின் மரணமும் அதன் நிமித்தமுமாகவே வீடு திரும்புகிறான். ஆதலால் காதலிப்போம் என்பது எத்தனை இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால்... வறுமையும் இருண்மையும் வாட்டும் ஒரு இளைஞனுக்கு காதல் அத்தனை எளிதல்ல. அப்பா இல்லாத வீட்டில் மூத்த மகன்கள் காதலிக்க தகுதி அற்றவர்களாகி போகிறார்கள். கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது. இந்த வறுமைக்குள் காதலின் நிறமும் கூடும். யாருமற்ற இரவில் விசும்பி அழும் காதலை அழ விட்டு வேடிக்கை பார்ப்பதெல்லாம் பெரியோரின் சிறிய செயல்கள். தாத்தா செய்கிறார்.
 
ஒரு காட்சியில்... தாத்தாவிடம் இளங்கோ சொல்வான். 
 
"நான் இதுவரைக்கும் உங்ககிட்ட, அம்மாகிட்ட, தங்கச்சிகிட்டன்னு யார்கிட்டயும் சிரிச்சு கூட பேசினது இல்ல.... என்ன சிரிக்க வெச்சு பார்த்தவ அவ தான் தாத்தா. அவளை விட்ற முடியாது" என்று. சிரிப்பரியா முகத்தோடு அலையும் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவன் காதலால் தான் உயிர்த்தெழுகிறான். வறுமையை வெற்றி பெறுவது மட்டுமா வாழ்வு. பிழையில்லா இளமையை நீரோடையைப் போல கடந்து விடுவதும்தானே...!
 
அவளுக்கும் அவனுக்கும் சிறுவயதில் மாங்காய் பறித்ததில் இருந்தே நட்பு இருக்கிறது. அந்த நட்பு பருவத்தில் முளை விட்டு காதலாய் அரும்புகிறது. அவள் அவன் பின்னால் சுற்று சுற்றி வட்டமிடுகிறாள். பூந்தோட்டம் வட்டமிடும் காவல்காரனாய் அவன் தடுமாறுகிறான். ஒரு கட்டத்தில் எதிர்வினையில் இரண்டும் சேர்ந்தே தீரும் என்று நியதிப்படி அவர்கள் காதலில் கிடைக்கிறார்கள். வயல் வரப்புகளில் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சில தழுவல்கள்.....சில அணைப்புகள். காதலை வெயிலாய் கொட்டும் அந்த விவசாய நிலத்தில் அவர்கள் ஆழமாய் ஊன்றப்படுகிறார்கள்.
 
காதலை வன்மத்தில் பிரிப்பதை விட மிக கொடூரமானது அன்பால் பிரிப்பது. வீட்டு வறுமையை அல்லது வீட்டின் எதிர் காலத்தை காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் கண்டிப்பு அல்லது எச்சரிக்கை அல்லது பாதுகாப்பு என்று தாத்தா பேரனிடம் நடந்து கொள்ளும் விதம்... திக்கென்று திருப்பி போட்ட தத்துவத்தின்பால் நின்று தவம் களையும் இடம். வறுமைக்குள் இருப்பவனுக்கு காதல் வரவே கூடாது என்பதெல்லாம் மலை உச்சி சென்று சேருவது மட்டும் தான் நோக்கம் என்பது போல. அதன் பிறகு அங்கு குத்துக்காலிட்டு அமர்ந்து விடுவது தான் வாழ்வின் மிச்சமாக இருக்கும். எங்கும் அன்பால் ஒருவன் பலியிடப் பட்டுக் கொண்டேயிருக்கிறான்...இங்கே இளங்கோ.
 
ஒவ்வொரு கதாபாத்திரமும்.. செதுக்கி வைத்தாற் போல நடிப்பின் அபார வெளிப்பாட்டில் சாயம் போகா ஒப்பனைகளோடு வெகு நேரத்தியாய் வாழ்ந்திருக்கிறார்கள். அமுதாவின் அண்ணன் இரு தங்கைகளின் அண்ணனுக்கே உண்டான படபடப்பில், மனுஷன் வாழ்ந்திருக்கிறான். வைரமுத்துவின் வரிகள் இதோ இப்போது தான் வயதுக்கு வந்தது போல அத்தனை பளிச் முகத்தோடு.....ஒரு விவசாய பூமியின் வாழ்வை வெயில் தேச துல்லியத்தோடு வாடை காற்றை அள்ளி வீசி சென்றிருக்கிறது. கவிப்பேரரசு தேக்கு மர வார்த்தைகளில் பூத்துக் கொண்டே இருக்கிறார்.  
Nedunalvadai 2இசை யாரென்று கூட தெரியவில்லை. ஆனால்.. நெஞ்சில் ஊடுவுரும் இசை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது நிஜம். ஒருவனை ஒருவன் மிஞ்சும் பரிணாமத்தில் இந்த மானுடம் தேவைகளின் நிமித்தம் தன்னை மெருகேற்றிக் கொண்டேதான் இருக்கும். 
 
நண்பர்கள் சேர்ந்து நண்பனுக்காக எடுத்த படம். நல்ல நண்பர்கள் வாய்த்த பிறகு மாமலையும் ஒரு கடுகாம் எனலாம் இனி.
 
இயக்குனர் செல்வக்கண்ணன் ஒவ்வொரு காட்சியையும் நிஜத்தில் இருந்தே கோர்த்திருக்கிறார். புனைவை விட நிஜம் கடினம். 
 
"பூ" ராம்..... படத்தை தாங்கி பிடிக்கும் பலத்த தோள்களுக்கு சொந்தக்காரர். 
 
அந்த அமுதாவை காலத்துக்கும் காதலிக்கலாம். அவளை காதலிக்காத காதல் காதலின் சாபம். 
 
கிராமத்தில் காத்திருந்த காட்சிகளும்.....கிராமமே காத்திருக்கும் காட்சிகளிலும் ஏராளம். 90 களில் தவித்த கண்களில் காதலும். பசித்த வயிற்றில்... குடும்பமும்.. இரு தலைக் கொல்லியாக கதை நாயகன்..... கனவுக்கும் நினைவுக்கும் இடையே 4000 ரூபாய்க்கு அல்லாடுகிறான். கிராமப் பொருளாதார பின்ணணிக்கு ஒரு நெல் பதம்.
 
"நெடுநல்வாடை" நெடுநாளைக்கு பின்னான ஒரு காதல் படம். அதில் விவசாயக் குடும்பத்தின் வறட்சி இருக்கிறது. வாழாவெட்டி ஒருத்தியின் ஏக்கம் இருக்கிறது. அவளின் பிள்ளைகளின் இனங்காண இயலாத துயரம் இருக்கிறது. தனக்காக எதுவுமே செய்து கொள்ளாத ஒரு தனித்த அப்பனின்.....ஒரு தாத்தாவின் விதைத்தே முளைக்கும் தனிமை இருக்கிறது. அப்பா இல்லாத இறுக்கத்தை சதுரத்தில் முகம் வைத்து அலையும் ஒரு இளைஞனின் சொல்லொணாத் துயரம் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி மிக மெல்லிய கோட்டில் வழி தெரியாமல் காலத்துக்கும் அலைந்து திரியும் அமுதா என்றொருத்தியின் பெருங்காதல் இருக்கிறது. யாருக்கும் தெரியாத காதுக்கும் கேட்காத ஒரு விசும்பல் படம் முழுக்க இருக்கிறது.
 
அமுதாவின் அண்ணனின் காலை உடைக்கும் காட்சியெல்லாம் நிஜ சண்டை. நிஜமான படைப்பாளிகளாக இந்த படத்தில் வேலை செய்த அத்தனை பேரும் இருக்கிறார்கள். தமிழக தென் மாவட்டங்களில் ஒரு கிராமத்தின் வாழ்வை காட்சிப்படுத்தலின் பிரம்மாண்டத்தில் எந்த வித சலனமுமின்றி காட்டியிருக்கும் இந்த செல்வக்கண்ணனை எத்தனை வியந்தாலும் தகும். நாம் தான் இன்னும் 2.0 எடுத்த சங்கரையே பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்...
 
நெல்லை மொழியில்....  நெடு நெல் வாடை....மேகம் தூது விடுகிறது.... இனி....... மே.............ல் மழைக்காலம்...!
 
- கவிஜி
Pin It