ன்றைய குழந்தைகள் விரும்பும் ஹாரிபார்ட்டர் படம் போல, அன்றைய காலத்தில் எனக்குத் தெரிந்த மாய உலக சினிமா என்பது காந்தாராவ் நடித்த படங்கள் தான். 'ஆந்திராவின் எம்ஜிஆர்' என்ற அழைக்கப்பட்ட காந்தாராவின் படங்கள் பெரும்பாலும் எங்கள் புதூர் டெண்ட் கொட்டகைக்கு வந்து விடும்.

சிறுவயதில் டப்பிங் படங்கள் மீது இருந்த ஆர்வமென்பது, மாயஉலகம் மீதான மாயையாய் இருந்தது. விசித்திர மனிதர்கள், பேசும் சிலை, கண்ணாடியில் தெரியும் உருவம், நெருப்பு கக்கும் வாள்,பயமேற்படுத்தும் குகை என ஒரு விசித்திர கற்பனை உலகை தந்தது. அப்படியான படங்கள் நிறையவே அப்போது வந்தது.

மதுரை ஆத்திகுளம் வீரலெட்சுமியும், மூன்றுமாவடி ராஜாவிலும் அப்படியான படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அதில் கதாநாயகன், கதாநாயகி சுத்த தமிழில் தான் பேசுவார்கள். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் ஹெக்கே பிக்கே வசனங்கள் தான் பேசுவார்கள். எம்ஜிஆர் மீதிருந்த ப்ரியத்தின் காரணமாக காந்தாராவ் படங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன்.

தெலுங்கு டப்பிங் படம் என்பதைத் தாண்டி அப்படத்தில் வசனங்கள் நெருக்கமாய் இருந்தது. அப்படியான வசனங்களை எழுதிய ஒருவரைப் பற்றிய பதிவு தான் இது.

டப்பிங் சினிமா என்றவுடன் ஆந்திரா தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 1980ம் ஆண்டுகளில் சிரஞ்சீவி நடித்த பல படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

1990ம் ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகர் படங்களும், அதன் தொடர்ச்சியாக விஜயசாந்தி படங்களும் வந்தன. இப்படங்கள் பல தமிழகத்தில் 100 நாட்களைக் கடந்து ஓடின.

நாகர்ஜீன் நடித்த உதயம் உள்ளிட்ட பல படங்கள் வரிசை கட்டி வந்தன. சலங்கை ஒலி, வாலிபன் என பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இப்படங்களில் பாடல்களும், வசனங்களும் தெலுங்கு வாடையற்றே இருந்தன.

இப்படங்களை தமிழுக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்கள், வசனம் எழுத மிகச்சிறந்த நபர்களையே தேர்வு செய்தனர். 1990ம் ஆண்டுகளுக்குப் பிறகு இப்பணியைத் திறம்படச் செய்தவர் மருதபரணி. அவரே வசனம், பாடல்களைக் கவனித்துக் கொண்டார்.

அதற்கு முன்பு அதாவது கருப்பு, வெள்ளை காலத்தில் இருந்து இப்படியான ஏராளமான மொழிமாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதிய ஒருவர், தமிழில் மிகச்சிறந்த பாடலாசிரியராக பயணித்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்கள் இன்றளவும் தமிழின் மகத்தான சூப்பர் ஹிட்டாக உள்ளன. அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கியுள்ளார்.

யார் தான் அவர்?

1976ம் ஆண்டு கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜாவின் ராஜா'. மிகச்சுமாரான படம். இப்படத்தில் கதாநாயகன் சிவாஜிகணேசன். கதாநாயகி வாணிஸ்ரீ. இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் கற்கண்டு போல சொற்சுவை கொண்டது. அத்தனைப் பாடல்களையும் எழுதியதும் டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதிய அதே நபர் தான்.

இன்றளவும் இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல்கள் காலையில் தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒலிக்கும், ' அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே' என்ற டிஎம்.சௌந்தராஜன் குரலை மறந்து விட முடியுமா?

இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல், இலங்கை வானொலி நிலையத்தில் ராமன் வரிசைப் பாடல்களை ஒலிபரப்பு செய்த போது, நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்தது.

'நாணம் ஒரு புறம் 
ஆசை ஒரு புறம்
கவலை மறு புறம்  
அவள் நிலைமை திரிபுரம்'

என சந்தம் கொட்டும் அந்த பாடல்,' ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான். ராஜாராமன் நினைத்திருந்தான் '. இந்த பாடலை பாடியவர் பி.சுசீலா.

இவ்வளவு அருமையான பாடல்களை எழுதிய அந்த கவிஞர், பாடலாசிரியர் புரட்சிதாசன் தான் குறித்து தான் இன்றைய பதிவு. மொழிச்செழுமை நிறைந்த தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலம் உழைத்த இந்த கலைஞனின் அடையாளம் வெளியே தெரியவே இல்லை என்ற ஆதங்கமே இந்த பதிவு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் படம் வெளியாகும் தேதியை முதலில் அறிவித்து படத்திற்கு பூஜை போட்டவர் என சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பத் தேவரை குறிப்பிடுவார்கள். அவரது சகோதரர் எம்.ஏ.திருமுகம். அதிகம் எம்ஜிஆரை வைத்து படத்தை இயக்கியவர்.

தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படமான 'மர்மயோகி' படத்தின் எடிட்டர் இவர் தான். தமிழ் சினிமாவில் மிருகங்களை வைத்து படம் செய்யும் உத்தியை உருவாக்கி நிறுவனம் இவர்களது தேவர் பிலிம்ஸ் தான்.

இவர் 1956ம் ஆண்டு எம்ஜிஆரை வைத்து 'தாய்க்குப் பின் தாரம்' என்ற மகத்தான வெற்றிப் படத்தை எடுத்தார். இதன் பின் கன்னட நடிகர் உதயகுமார் நடிப்பில் 1960ம் ஆண்டு வெளியான 'யானைப்பாகன்' என்ற படத்தை திருமுகம் இயக்கினார்.

சிவாஜிகணேசன் போன்ற முகத்தோற்றம் கொண்ட  உதயகுமாருக்கு இப்படத்தில் ஜோடி சரோஜாதேவி. இப்படம் பயங்கர பிளாப். ஆனால், கே.வி.மகாதேவன் இசையில் இப்படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. புரட்சிதாசன் எழுதிய இப்பாடல் நாதமணி சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலாவின் குரலில் என்றும் இனிக்கும்.

'செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே.
சீர்காழி பாடிய காதல் பாடல்கள் மிக மிகக்குறைவு. ஆனால், அதில் நிறைவு செய்த பாடல் இது தான். 

இதே படத்தில் பி.லீலா குழுவினரின் பாடிய பாடுபட்ட 'தொழிலாளி பசிக்குதென்றான்' என்ற பாடலையும் புரட்சிதாசன் எழுதியிருந்தார்.

இதற்கு முன்பே சின்னப்பத் தேவர் 1958ம் ஆண்டு உதயகுமார், சரோஜாதேவி நடிப்பில் செங்கோட்டை சிங்கம் என்ற படத்தை எடுத்தார். வி. என். ரெட்டி இயக்கிய படத்திலும் புரட்சிதாசன் பாடல் எழுதியுள்ளார்.

அன்றைய காலத்தில் இசைத்தட்டில் சாதனைப்படைத்த பாடல்களில் ஆர்.பாலசரஸ்வதியின் பாடல்களைக் குறிப்பிடுவார்கள். 1957ம் ஆண்டு 'ஆவதெல்லாம் பெண்ணாலே' படத்தில் அவர் பாடிய இனிய தாலாட்டு பாடல் இன்றளவும் யூடியூப்பில் நீங்கள் கேட்டு மகிழலாம். "வெண்ணிலா ராஜா வேகமாய் நீ வா" என்ற அந்த பாடலை எழுதியது புரட்சிதாசன் தான்.  

1955ம் ஆண்டு சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளியான படம் 'மங்கையர் திலகம்'. வி.தக்சிணாமூர்த்தி இசையில் கமலா பாடிய கண்டு கொண்டேன் பாடலை புரட்சிதாசன் எழுதியிருந்தார்.

1980ம் ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. அப்படி ஒரு படம் 'தராசு'. அவரின் பேவரைட் நடிகையான கே.ஆர்.விஜயா நடித்த படம் 1984ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ராஜகணபதி இயக்கியிருந்தார்.

இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியது புரட்சிதாசன் தான். எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் டிஎம்.சௌந்தராஜனுடன், ராகவேந்தர் என்ற விஜயரமணி பாடிய 'ஆயா கடை மசாலா வடை' பாடலும், வாணி ஜெயராம், விஜயரமணியோடு இணைந்து பாடிய 'நான் தான்யா சிலுக்கு சிலுக்கு' என்ற பாடலும், டிஎம்.சௌந்தராஜன் குரலில் ‘சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல என்ற இனிமையான பாடலும் இப்படத்தில் இடம் பெற்றன.

இப்பதிவின் நோக்கத்திற்கு அடுத்து சுட்டிக்காட்டும் படத்திற்கும் பெரும் பங்கு உண்டு. காரணம், இப்படத்தில் இசைஞானி இசையில் ஒலித்த இனிமையான பாடல்கள். அப்பாடல்கள் அனைத்தையும் எழுதியது புரட்சிதாசன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

அவர் தெலுங்கு டப்பிங் படங்களில் பணியாற்றியதாலோ என்னவோ, 1979ம் ஆண்டு அவருக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்த போது தெலுங்கு பாணியில் தமிழில் 'நான் போட்ட சவால்' படத்தை இயக்கினார்.

அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி தான் ஹீரோ. ஆனால், படத்தின் கதை வழக்கமான பழிவாங்கும் படலமாக இருந்ததால், அட்டர் பிளாப் படம்.

ஆனால், இன்றளவும் புரட்சிதாசன் பெயர் சொல்வதற்கும் அப்படம் தான் காரணமாக இருக்கிறது.

ஏனெனில், அப்படத்தில் மலேசியா வாசுதேவனும், வாணி ஜெயராமும் இணைந்து பாடிய 'சுகம் சுகமே.. தொடத் தொடத்தானே' என்ற இனிய பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வழங்கிய இனிமையை ஒவ்வொரு நாளும் யூடியூப்பில் இப்பாடலைக் கேட்டு மகிழ்கிறேன்.

திருச்சி லோகநாதனின் புதல்வர் டி.எல்.மகாராஜன் பாடிய இனிய பாடல்

'நெஞ்சே உன் ஆசையென்ன
அதை நினைத்தால் ஆகாதெதென்ன'

இப்பாடல் மிக நம்பிக்கையூட்டும் வரிகளைக் கொண்டது. இவ்வளவு அழகான குரல் வளம் கொண்ட பாடகனை தமிழ் திரையுலம் கைவிட்டது தான் மிக வேதனை.

மலேசியா வாசுதேவன் பாடிய 'நாட்டுக்குள்ள சில நரிகள் இருக்குது... ரொம்ப நியாயமான புலிகள் இருக்குது' என்ற பாடல் அவர் பெயருக்குப் பொருத்தமாகவே இருந்தது. இந்த பாடல் அதன் பின் வந்த பல தெலுங்கு மொழிமாற்றுப் படங்களுக்கு அதே டியூனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாணி ஜெயராம் குரலில் 'மயக்கமா' என்ற பாடலும், வாணியும், சைலஜாவும் இணைந்து பாடிய 'சில்லறை தேவை இப்போ தேவை' என்ற பாடலும் இப்படத்தில் இடம் பெற்றன. மொழிகளைக் கடந்து அரை நூற்றாண்டு காலம் திரையுலகில் படைப்பு சாதனை படைந்த புரட்சிதாசன் என்றும் நினைவில் நிலைத்திருப்பார்.  

- ப.கவிதா குமார்

Pin It