கண்ணு ஏங்க... மனசு தேம்ப... அன்பின் பிரிதல் ஆழமானது. கூட இருந்தவங்க இல்லாத வெறுமையை எதை வைத்தும் நிரப்ப முடியாது. அது வெட்கத்தை விட்டு மனமேந்தி நிற்கும்.

இசை மேல் லட்சியம் கொண்டு வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து மாடி வீட்டு குடிசையில் இணைந்திருக்கும் நான்கு இளைஞர்கள். சொந்த பிரச்சனை காரணமாக ஊரை விட்டு ஓடி வந்த ஒரு பெண். இந்த ஐவருக்குமான அன்பும் நட்பும் தான் "புது வசந்தம்" என்ற அந்த கால புதுமை படம். காதலால் நிரம்பி இருந்த சினிமா திரையில்... நட்பின் நிரம்புதலை காட்ட... கண்டிப்பாக அது அன்றைக்கு எடுத்த ரிஸ்க் என்று தான் சொல்ல வேண்டும்.

இசை கொம்பன் இருக்கையில்... S. A ராஜ்குமார் என்ற இனிய இதயம் நம்மை தாலாட்டியது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தூண். படத்தை தூக்கி நிறுத்திய அந்த நான்கு இளைஞர்களுமே திறன் வாய்ந்த நடிகர்கள் தான். முரளியின் குரலும் சாந்தமான முகமும் படத்துக்கு மிகப்பெரிய அஸ்திவாரம். மென் சோகம் நிரம்பிய முகமும் தன் சோகம் நிரம்பிய உடலுமாக எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் தான். அந்த குழுவை லீட் செய்யும் அனுபவம் அவர் சார்ந்த நடிப்பில் அனாயசமாக வெளிப்படும்.pudhu vasanthamபடக் படக்கென பேசும் பாத்திரத்தில் ஆனந்த்பாபு. தனக்கென ஒரு உடல்மொழி... உடைமொழி என்று கிடைத்த பாத்திரத்திலும் நிரம்ப முடியும் என்று நாயகனுக்கு வழி விட்டு துணை நின்ற பக்குவம் மெச்சத்தக்கது.

கௌரியை கெ ளரி என்று படிக்கும் பாத்திரம் சார்லிக்கு. வழக்கம் போல புள்ளி அளவு தான் கிடைக்கிறது என்றாலும் அதனுள் கோலம் போட்டு விடும் வல்லமை வாய்த்த நடிகர். ராஜா எப்போதுமே நல்ல முகம். உயர்ந்த குழந்தை. அவர் நடிக்கவே வேண்டாம். நமக்கு பிடிக்கும்.

இறுதிக் காட்சியில் அவள் வராததால் பாடாமல் தடுமாறும் முரளியும்... பாட சொல்லி கெஞ்சும் ஆனந்த்பாபுவும் கண்கள் கலங்க மாறி மாறி பேசிக்கொள்ளும் போது காணும் நாம் கலங்காமல் இருக்கவே முடியாது. இருவர் கண்களுமே கொஞ்சம் பெரிய கண்கள் தான். பேசும் கண்கள் தான். கண்ணீரும் சேர்ந்து விட்டால் கலங்கடிக்கும் கலை நியாயம்.

இல்லாதவனுக்கு இதயம் ரெம்ப பெருசு. இந்த இல்லாத நால்வரின் இதயத்திலும் அவள் ஒரு இளவரசியாக அமர்ந்திருக்கிறாள். தூய்மையின் வழியே அவர்கள் அவளை சுமக்கிறார்கள். அவளை தப்பாக பேசிய வீதியில் சண்டைக்கு போகும் இடமாகட்டும்.... அவளுக்கு கல்யாணம் என தெரிந்ததும்... "கௌரிக்கு திருமணம் நிச்சயம் ஆச்சு..." என்று வீதியில் ஆடி பாடி சந்தோஷத்தை கொண்டாடுவதாகட்டும்... பேரன்பின் சுடர் அணைவதில்லை.

கௌரியும்... அந்த வீட்டை ஒழுங்கு படுத்தி... அவர்களின் லட்சிய வழியில் ஜோதியாக ஆகிறாள். கௌரியாக சித்தாரா. இந்த பெயரே அப்படி ஒரு அழுத்தம். பிடித்தம். எனக்கு தெரிந்து வீதிக்கு ஒரு சித்ரா இருக்கலாம். விபரம் தெரிந்து சித்தாரா இவர் மட்டும் தான். பக்கத்து வீட்டு பெண்ணின் அழகு. சிரிக்கையில் சிரிக்கும் கண்கள்.. அழுகையில்... அழும். சித்தாராவுக்கு கொடுக்கப்பட்ட குரல் பழக்கப்பட்ட குரல். சீதாவுக்கு... ரூபிணிக்கு... என்று அந்த கால கட்டத்தில் வந்த பெரும்பாலைய படங்களில் ஹீரோயினிக்கு இந்த குரல் தான். இந்த குரல் வழியே நினைவுகள் சிறகடிப்பதை உணர்ந்தேன்.

அப்படி ஒரு தேவ குரல். சித்தாராவுக்கும் பொருந்துகிறது.

"ஆயிரம் திருநாள்...... பூமியில் வரலாம்..." பாடலில் சித்தாராவும் ஆனந்த் பாபுவும் தான் ராட்டினத்தில் அருகருகே அமர்ந்திருப்பார்கள். முரளி இல்லை. அதுவரை கூட... சரி எப்படியும் காதல் வந்து விடும் என்று பார்த்துக் கொண்டிருந்தோருக்கு... அந்த காட்சிக்கு பிறகு இது வேற படம் என்று புரிய ஆரம்பித்திருக்கும்.

"இது முதன் முதலா வரும் பாட்டு.. நீங்க நினைக்கும் தாளம் போட்டு.." என்று பாடல் ஆரம்பிக்கையிலேயே 90 க்கு ஓடி விட்டது மனது. 5 வது படிக்கையில்... பொள்ளாச்சி ATSC திரையரங்கில் பார்த்த படம். வழக்கமான சினிமாவாக இல்லை. வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டிருந்ததை அந்த வயதுக்கான மொழியில் எப்படியோ புரிந்து கொண்டது தான் இப்போது பார்க்கும் போதும் கண்கள் கலங்க செய்கிறது.

அரங்கமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது... "அவ வராம பாடமாட்டேனு" இங்க முரளி இயலாமையில் தவிக்க.... அப்போ கதவோரத்தில் இருந்து அந்த பெண்ணின் குரல்...புது சோலையில் பூத்த நீரோடையாக...

"பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா...
பால் நிலவ கேட்டு..."

கேட்டு..... என்று இழுக்கையிலேயே... ஹோவென கை தட்டி.... குதூகலித்து அப்பாடா என்று நிம்மதி ஆவான் ரசிகன். அதன் பிறகு அவள் முதல் வரிசையில் அமர்ந்திருக்க... மேடையில் கச்சேரி கலை கட்டும்.

"ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம்தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து
பறவை போல வாழ்ந்தோம்
பசி எடுத்தால் பாட்டை உண்டு
திசைகள் தேடி சேர்ந்தோம்

ஒரு தெய்வம் நேரில் வந்து
உறவை சொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று
கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து
வாகை சூடுவோம்"

அவர்கள் வாழ்வை பாட்டில் சொல்ல சொல்ல லட்சிய வேட்கை கொண்டவன் வெற்றிக்கு ஏங்கும் விசனம் நம்மை அறியாமல் நம்மில் பெருக்கெடுக்கும். நம்பிக்கையின் பிடியில் இந்த விடியலையும் சொடுக்கெடுக்கும்.

ரசிகன் மனதில் இருக்கும் எல்லாமும் திரையில் படபடத்தால்... அது வரலாறு கொண்ட பெரும் வெற்றியாகிறது. அப்படி ஒரு கொண்டாட்டம் தான் இந்த படம்.

இந்த படத்தில் மிக முக்கியமாக ஒருவரை பாராட்ட வேண்டும். அது சுரேஷ். அத்தனை சார்மிங்கான ஹீரோ. தன்னை நெகட்டிவ் பாத்திரத்தில் காட்டிக்கொண்டு...இந்த பட குழுவினருக்கு வாழ்க்கை கொடுத்திருப்பார். "வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே" என்று டூயட் இருந்தாலும்.. இறுதியில் வழக்கத்துக்கு மாறான சுரேஷ். ஆனால் அது தான் படத்தின் வெற்றிக்கு இறுதி துணை.

சித்தாரா பேசும் வசனம்... அப்போதே புரட்சி தான். பெண் விடுதலை பற்றியது. பொதுவாகவே விக்கிரமன் படங்களில் வசனம் பிரமாதப் படுத்தும். அதுவும் அடிப்படை வாதங்களுக்கு எதிராக.... பொது சமூகம் கட்டமைத்த மண்ணாங்கட்டி வரையறைக்கு எதிராக... இறுதிக்காட்சியே அந்த வசனம் தான்.

"ஜீசஸ் என்னவோ கான்வென்ட் ஸ்கூல்ல படிச்ச மாதிரி... கிருஷ்ணன் என்னவோ கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்ச மாதிரி இப்டி சண்டை போட்டுக்கறீங்க. இந்த பக்கம் இவர் ஆடு மேச்சார். அந்த பக்கம் அவர் மாடு மேச்சார்...அவ்ளோ தான் " பூவே உனக்காக படத்தில் வரும் இந்த வசனம் ஒரு சோறு பதம்.

புது வசந்தம் "பாலைவனச்சோலை" படத்தின் பாதிப்பு என்றும் சொல்லலாம். ஆனாலும் அதன் நவீன வெர்சனாக இன்று வரை பல ஆண் பெண் நட்பின் சினிமாவுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இயக்குனர் விக்கிரமன் அடுத்தடுத்து "நான் பேச நினைப்பதெல்லாம்.... கோகுலம்" என்று பாடல் தொடர்பான படம் எடுத்து ஹிட் அடித்து.... பிறகு "பூவே உனக்காக.... சூரிய வம்சம்.... வானத்தை போல" என்று சென்று நின்ற இடம் நாம் அறிவோம்.

மென் சோகமும் பெரும் அன்பும் நிறைந்திருக்கும் இவர் படங்களில் வரும் அந்த ஹம்மிங்... ஹையோ... மனதை போட்டு பிழிந்து விடும். இன்றைய அறிவிலி கிட்ஸ் கிண்டல் கேலி செய்தாலும்... அந்த ஹம்மிங்க்கு ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. இருக்கிறது. அதை வைத்தே கண்ணை மூடிக்கொண்டு இது விக்கிரமன் படம் என்று சொல்லி விடலாம். ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் படம் எடுப்பதை நிறுத்தி விட்டார். அது தான்... அவரின் கிளாசிக் படங்களுக்கு அவர் செய்த நியாயம்.

"இது முதன் முதலா வரும் பாட்டு
நீங்க நினைச்சு தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பா....ட்டில் உண்டு
இது முதன் முதலா......."

- கவிஜி

Pin It