ஏனென்று தெரியவில்லை, சினிமாவை அறிந்த வயது முதலே எனக்குப் பிடித்த நடிகர் பாக்யராஜ். சிறுவயதில் “உனக்குப் பிடித்த நடிகர் யார்?” என்று யாராவது கேட்டால், தயக்கமின்றி “பாக்யராஜ்” என்பேன். என்னை ஒரு வித்தியாசமான பிராணியைப் போலப் பார்ப்பார்கள். நானும் அவர்களை ஒரு கணம் விசித்திரமாகப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவேன்.
கல்லூரி வரை அந்தப் பதில் மாறவில்லை. “பிடித்த நடிகை?” என்றால் “ரேவதி” என்பேன். “பெரிய பழம்டா இவன்!” என்று உடனே முத்திரை குத்திவிடுவார்கள்.
வயது வளர வளரத்தான் பாக்யராஜின் படங்களை என்னால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை, குடும்பச் சுமை, வறுமை, சாதிப் பாகுபாடு, மனிதப் பலவீனங்கள் — இத்தனையையும் நகைச்சுவைக்குள்ளே கரைத்துச் சொல்லும் அசாத்திய வல்லமை அவரிடம் இருந்தது.
அதே காலத்தில், உறவினர் ஒருவரின் மூலம் “பாக்யா” இதழும் என் வாழ்க்கைக்குள் நுழைந்தது. அது நின்றுபோன வரை அந்த வாசிப்புப் பழக்கமும் என்னைத் தொடர்ந்தது.
ஆனால், “ஏன் அவரை இவ்வளவு பிடிக்கிறது?” என்ற கேள்விக்கு மட்டும் எனக்குள் இறுதிவரை பதில் கிடைக்கவே இல்லை.
அவரது அரசியல் பயணம் வருத்தமளித்தது. கடைசிக் காலத்தில் வந்த தோல்விப் படங்கள் மனதைப் பிசைந்தன. அவர் இயக்குவதை நிறுத்திய பிறகு, சினிமா பார்ப்பதிலேயே எனக்கிருந்த ஈர்ப்பும் மெல்லக் குறைந்தது. பிற்காலத்தில் அவர் குணச்சித்திர வேடங்களில் தோன்றும்போதெல்லாம் எனக்குள் ஒரு சொல்ல முடியாத சோகம் எழும். ஆனாலும், அவர்மீதான என் பாசம் ஒரு துளிகூடக் குறையவே இல்லை. ஏன் என்று அப்போதும் புரியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், கோவாவில் எடுக்கப்பட்ட அவரது கடைசிக் காணொளியைப் பார்த்தபோதுதான் அந்த ரகசியம் உடைந்தது. தமிழிலும் இந்தியிலும் பல ஜாம்பவான்களை இயக்கிய மகத்தான திரைக்கலைஞர் அவர். ஆனால், அத்தனை பிரபலங்களின் நடுவிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், அமைதியாக, ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அப்போதுதான் எனக்குப் புரிந்தது — நாமும் அப்படிப்பட்டவர்களாகத்தான் உருவாகியிருக்கிறோம்.
- நீதிக்குப் பயந்த சுபாவம் கொண்டவர்களாக…
- மனச்சாட்சிக்குப் பயப்படுபவர்களாக…
- பொய் சொல்லத் தெரியாதவர்களாக…
- பெண்மையை மதிக்கத் தெரிந்தவர்களாக…
- மென்மையை பலவீனமாக அல்ல, மனிதத் தன்மையாக நம்புபவர்களாக…
திரையில் அவர் நடித்த கதாபாத்திரங்களில் நாம் நம்மையே பார்த்திருக்கிறோம். அதனால்தான் இந்த ஈர்ப்பு. பத்து பேரை அடிக்கும் கதாநாயகனை ரசித்திருந்தால், நாமும் அப்படி ஆகியிருக்க முடியாது. ஆனால், பாக்யராஜை ரசித்ததால், அவரைப் போல இயல்பான, நேர்மையான மனிதனாக வாழ வேண்டும் என்ற ஆசை நமக்குள் இயல்பாகவே வேரூன்றியிருக்கிறது.
இந்த உண்மையை நான் உணர்ந்த அதே நாளில் அவரை இழந்து விட்டேன். அதனால்தான் இந்த இரவு தூக்கம் இணைய மறுக்கிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்குப் பிறகு, “ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும்” என்று என் மனதார நினைத்த இன்னொரு மனிதர் இவர் மட்டும்தான். அந்தக் கனவும் இப்போது நனவாகாமல் கனவாகவே முடிந்து விட்டது.
அதற்கெல்லாம் ஒரு பாக்கியம் வேண்டும் போல. நேரில் சந்திக்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்கவில்லை; ஆனால், பாக்யராஜை நேசிக்கும் மனம் கிடைத்ததே — அதுவே எனக்குப் பெரும் பாக்கியம்.
- அ.சீனிவாசன்